பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாஜகவினர் முகம் அன்றாட செய்திகளில் அம்பலப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. பாஜகவினரை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் பெண்கள், பெண் சமூக ஆர்வலர்களை மிரட்டவும், அவர்களின் வாயை அடைக்கவும் அவர்களை பாலியல் ரீதியாக அவமானப்படுத்துவதும், பாலியல் வன்முறை மிரட்டல் விடுவதும் என பாஜக பகிரங்கமாக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். பாஜக கட்சி தெருவில் இறங்கி போராடியது. அவர்கள் ஆட்சி அமைக்க அது கூட ஒரு காரணம் எனலாம். ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் பாஜகவினரால் இப்படித் தினம் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆனால் மோடி முதல் நிர்மலா சீதாராமன் வரை அனைவரும் அமைதி காத்து வருகிறார்கள்.

Association of Democratic Reforms (ADR) என்ற அமைப்பின் அறிக்கை பாஜகவின் யோக்கியதையை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை சந்தித்துவரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் பாஜகவில் இருப்பதாக ADR ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 66 பேருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட பாஜக அனுமதி அளித்து, அவர்களுக்கு சீட் வழங்கியதும் அந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக இவர்கள் செய்த வன்முறை செயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவ்வளவு செய்து இருக்கிறார்கள். கடத்தல், வன்புணர்வு, கொலை ஆகியவை இதில் அடக்கம். மேலும் வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என இவர்களின் மீது எண்ணற்ற புகார்கள் குவிந்து கிடக்கின்றன.

தமிழ்நாட்டிலும் அடிமை அதிமுக தயவில் காலூன்றிய பாஜகவினர், தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பாலியல் வழக்கில் சிக்குகிறார்கள். ஏற்கனவே அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் இவர்கள் மதத்தின் பெயரால் ஏற்படுத்தும் கலவரங்கள் மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் என்று அத்தனை குற்றப் பின்னணி உள்ளவர்களின் கூடாரமாக திகழ்கிறது தற்போதைய தமிழ்நாட்டு பாஜக.

பாஜக தலைவர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் உலகளவில் அளவில் இழிபுகழ் பெற்றவர்கள். அரசு பதவியில் பாதுகாப்போடு குற்றங்களைச் செய்யும் அவர்களுக்கு எதிராக புகார் கூறுபவர்கள் காணாமல் ஆக்கபடுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதற்கு உத்தரப்பிரதேசமே சான்று.

இந்துத்துவ காவிகள் அமைக்க துடிக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நமக்கு பல சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தும் மனுநீதியை கொள்கையாக கொண்ட இந்துத்துவ பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது அம்பலமாகி வெகு நாட்களாகி விட்டது.

பாஜகவின் மோசமான ஆட்சிக்கு உத்தரப்பிரதேசமே சாட்சி

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது, மேலும் அங்கு பெண்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பேசப்பட அல்லது தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற பெண்களின் பிரச்னைகள் இந்தியா முழுவதும் உண்டு. ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கையாளும் விதத்தில் மற்ற மாநிலங்களை விட அதிக குரூரமாக மனித தன்மையற்று நடந்து கொள்வதில் முதலிடம் வகிப்பது உத்தரப்பிரதேசம் தான்!

இங்கு பாஜகவினர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சொல்லப்படுவது முதல் முறை அல்ல. உன்னாவ் முதல் பண்டா வழக்கு என பல பாலியல் கொடுமைகளை பாஜகவினர் அரசியல் பலத்தை கொண்டு நீதிக்குப் புறம்பாக அரங்கேற்றியது நாடறிந்த உண்மை.

இங்கு உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017 ஜூன் மாதம் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் குடும்பத்தோடு முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார். ஆனால் எம்எல்ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி கொலை செய்துள்ளனர். இதில் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

இங்கு வேலியே பயிரை மேய்ந்த கதையாக மக்களை காக்கும் பொறுப்பு வகிக்கும் காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை தீக்கிரையாக்குவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களே பாலியல் குற்றவாளிகளாக இருப்பதும் என பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் உச்சமாக திகழ்கிறது உத்தரபிரதேசம்.

உத்தரப்பிரதேசத்தில் பொதுவாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மற்றும் சாதிய அடக்குமுறைகள் தான். இங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளின் பிண்ணனியை வெறும் பாலியல் இச்சைகளின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்க கூடாது என்பதும், இதற்கு மிக முக்கிய அடிப்படை காரணம் மனுநீதியே என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

அதாவது ஒரு ஆண் பெண்ணின் உடல் மீது கொண்டிருக்கும் ஒரு ஆதிக்க உணர்வும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் ஆதிக்க மனநிலையே இத்தகைய குற்றச் செயல்களுக்கு ஆரம்பப்புள்ளி. இதற்கு மிக சிறந்த உதாரணம் ஆண், பெண் பேதமின்றி இங்கு உள்ள அனைவர்களின் மனநிலையும் பெண்களின் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும், தனித்துவத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பெண்களின் பாதுகாப்பு பற்றி மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது மிகவும் கவனிக்கத்தக்கது. அவரது பேச்சில், பாலியல் வன்கொடுமை போன்று பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட அம்மாநில பெண்களை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. மாறாக ஒரு இந்து பெண், முஸ்லீம் ஆண் இருவரும் காதலித்து திருமணம் செய்வதை ‘லவ் ஜிகாத்’ என்று கூறி அதை தடுக்க சட்டம் இயற்றுவதே பெண்களின் பாதுகாப்பு என்று பேசியுள்ளார். உபியில் இதற்கு எதிராக மதமாற்று தடை சட்டம் இயற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்து பெண்கள் காதலுக்காக மதம் மாறுவது ஆபத்து, அது பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்றால், தினந்தினம் நடக்கும் பாலியல் கொடுமைகளும், உயிர் பலிகளையும் என்னவென்று சொல்வது?

இந்த யோகியைத் தான் கடந்த தமிழக தேர்தலின் போது பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைத்து வந்தனர். அவர் வந்து போது கலவர பூமியானது கோவை நகரம். இந்துத்துவ சனாதனத்தை வேரறுக்கும் வேலையை நாம் பார்க்காவிட்டால் தமிழ்நாடும் அவர்கள் கூறியது போல் உத்தரப்பிரதேசமாக மாறும்.

மோடியின் குஜராத் மாடல் லட்சணம்

பாஜகவின் மோடியால் தான் குஜராத் வளர்ச்சி அடைந்தது என போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கி அவரை பிரதமராக மாற்றினார்கள். அங்கு பாஜகவினர் செய்யும் லீலைகளை பற்றி பார்ப்போம்.

1. குஜராத், கட்ச் மாவட்டத்தில் நலியா நகர பாஜக தலைவர் சாந்திலால் சோலங்கி, 24 வயது பெண்ணை மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி, 10 நண்பர்களுடனும் சேர்ந்து தொடர்ந்து அவரை வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் அப் பெண் 3 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இறுதியில் அவர் அளித்த புகாரில் 4 பாஜகவினர் (சாந்திலால் சோலங்கி, கோவிந்த் பரமலானி, அஜித் ராம்வாணி மற்றும் வசந்த் பானுஷாலி) உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

2. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2002ல் அங்கு நடந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

3. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக ஆபாசக் காணொளி ஒன்று 2005ம் ஆண்டு வெளியானது.

4. குஜராத், காந்திநகரை சேர்ந்த பாஜக தலைவர் அசோக் மக்வானா மே 28, 2016 அன்று இண்டிகோ விமானத்தில் 13 வயது சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

5. வதோதராவில் உள்ள பாருல் பல்கலைக்கழகத்தின் தலைவரான ஜெயேஷ் பட்டேல் எனும் பாஜக தலைவர் அந்த பல்கலைக்கழக நர்சிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

6. 2007 முதல் 2012 வரை அப்தாசா எம்எல்ஏவாக இருந்த ஜெயந்தி பானுஷாலி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யக் கோரி சூரத்தில் வசிக்கும் 21 வயது பெண் ஜூலை 10, 2018 அன்று போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து அவர் கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

7. குஜராத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் 2017ம் ஆண்டு குஜராத்தில் நடந்த ஒரு சமூக நிகழ்ச்சியில் ஜபிப் படேல் என்ற பாஜக தலைவரை சந்தித்ததாகவும், அதன் பிறகு ஒரு நாள் டெல்லியில் NGO வணிக நோக்கத்திற்காக உரையாட அடுக்கு மாடி குடியிருப்புக்கு அழைத்து சென்ற படேல் அங்கு அவருக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாக தனது புகாரில் கூறியுள்ளார்.

8. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் திலக்வாடா காவல் நிலையத்தில் 30 வயது ஆதிவாசி பெண், நர்மதா மாவட்ட பாஜக துணை தலைவர் ஹிரன் படேல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது அண்மையில் நடந்த நிகழ்வு.

இந்த பட்டியல் இன்னும் நீள்கிறது.

சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சருக்கு துணை முதல்வர் பதவி

1. பிப்ரவரி 18, 2012 சட்டமன்ற கூட்டத் தொடரின் போது அமைச்சர்கள் லஷ்மண் சவதி மற்றும் சி.சி. பாடீல் ஆகிய இருவரும், கர்நாடக சட்டப் பேரவையில் ஆபாச வீடியோப் படம் பார்த்துக் கொண்டிருந்ததை, தனியார் தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளியிட்டது. மேலும் அவர்களுக்கு அந்த ஆபாசப் படத்தை அனுப்பியது இன்னொரு அமைச்சர் கிருஷ்ணா பாலேமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கைப்பேசியில் ஆபாச படம் பார்த்தத லக்ஷ்மன் சவதி 2019ல்  துணை முதல்வராக அறிவிக்கப் பட்டதும், ஆனால் அப்போது அவர் எம்.எல்.ஏவோ, சட்டமன்ற சபை உறுப்பினரோ இல்லை என்பதே மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

2. அதே ஆண்டு குஜராத்திலும் பாஜக உறுப்பினர்கள் சங்கர் சவுத்ரி, ஜீத்தாபாய் பர்வார் இருவரும் சட்டபேரவையில் ஆபாசப் படம் பார்த்ததை செய்தியாளர்கள் ஊடகங்களில் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளைக் கூட விட்டு வைக்காத பாஜகவினர்

 ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்’ – பெண் குழந்தைகளைக் காப்போம் என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியின் ஆட்சியில், அவர்களின் கட்சியில் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் பேரவலம்.

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அவசரச்சட்டமும் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆனால் சட்டம் அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பாஜகவின் பிரேம் ஆனந்த் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் வழக்கறிஞர் என்பதும், 2006 சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே நகரில் பாஜக சார்பில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமியை சில பாஜக மிருகங்கள் கொடூரமாக கோயிலில் வைத்து கூட்டாக வன்புணர்வு செய்து கொலை செய்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. பாஜக அமைச்சர்கள் சந்திரபிரகாஷ் கங்கா, லால்சிங் இருவரும் தொடர்பாக இந்நிகழ்வுக்கு மறுப்பு தெரிவித்து நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கு பாஜக அரசு பதவி உயர்வு வழங்கியதும், அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதிவு கொடுத்ததும் தான். ஆனால் இதில் வேதனையான விடயம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட அந்த குழந்தைக்கு இன்னும் நீதி கிடைக்காமல் அக்குடும்பம் துயரத்தில் உள்ளது தான்.

சமீபத்தில் கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ் குமார் என்கிற குற்றவாளி இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவினரின் பாலியல் குற்றங்களின் விவரம்

வட மாநிலங்களை போன்றே தற்போது தமிழகத்திலும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், கடந்த அதிமுக அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாஜக தலைவர்களை அதிமுக அரசு காப்பாற்றி வந்ததும், அதே போல் அதிமுக ஆட்கள் செய்த பொள்ளாச்சி போன்ற பாலியல் குற்றங்களை பாஜக அரசு காப்பாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதாரணமாக சில சம்பவங்களை பார்ப்போம்!

1. குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதனை செல்பேசியில் படமாக்கி குற்றவாளியால் மிரட்டப்பட்டு தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவதாகவும் மாணவி அச்சுறுத்தப் பட்டுள்ளார். இதனால் உடலாலும் மனதாலும் பாதித்து, நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அருண்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக பிரமுகர் என்பதால் இவர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக இறந்த மாணவியின் தாயார் தாக்கப்பட்டும் தொடர்ந்து மிரட்டப்பட்டும் வருகிறார். அத்தொகுதி பாஜக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் ஆதரவால் காவல்துறை அவர்களுக்கே ஒத்துழைப்பு தருவதாலும் நியமான விசாரணைக்காக அவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோழிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மகாலிங்கம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுமிகளிடம் தனது செல்போனிலுள்ள ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கடந்த ஜூலை 11ம் தேதி மகாலிங்கத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரைச் சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 7 சிறுமிகளும் 15-07-2021 அன்று வாக்குமூலம் அளித்தனர். சிறுமிகளின் பெற்றோர்களில் இருவரை (பாண்டியராஜ் மற்றும் சத்யராஜ்) சிறையில் உள்ள மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சில கூலிப்படையினர் சேர்ந்து கம்பு மற்றும் கத்தியால் குத்திக் தாக்கியுள்ளனர். காயம்பட்ட இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எச் ராஜாவுடன் லால் சரண்

3. சிவகங்கை நகர பாஜக இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ள லால்சரண் என்ற பாரத்லால், யூடியூபில் நடிக்க வைப்பதாக கூறி சட்ட கல்லூரி மாணவிக்கு மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரை மயக்க நிலையில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்ததுடன், இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால், சமூகவலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

தற்போது இவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் இதுபோல் யூ டியூப்பில் நடிக்க வைப்பதாக கூறி இன்னும் சில பெண்களை ஏமாற்றியுள்ளது அம்பலமாகி உள்ளது.

4. சிவகங்கையை சேர்ந்த 18 வயது நர்ஸிங் மாணவியை அதிக மதிப்பெண்கள் அளிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவரும் குட்மேன்ஸ் நர்ஸிங் கல்லூரி தாளாளருமான சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


5. விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய பாஜக தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன் தன்னை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக அதே கட்சியின் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி சமீபத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி கலிவரதன் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

6. சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்தார். இவர் தனது வீட்டருகே வசிக்கும் தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்தார். ஆந்திர மாநிலம் சித்தூரில் தன் நண்பன் வீட்டில் பதுங்கி இருந்த இவரை தற்போது கைது செய்துள்ளனர்.

7. சென்னை நங்கநல்லூரில் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வரும் 60 வயது மூதாட்டிக்கு, பாஜகவின் மாணவர் அணியில் அகில இந்திய பொறுப்பில் இருக்கும் மருத்துவர் சுப்பையா என்பவர் கார் பார்க்கிங் பிரச்சனையால், பல வழிகளில் தொல்லைகளை கொடுத்து, இதன் உச்சகட்டமாக மூதாட்டியின் வாசல் முன்பு நின்று சிறுநீர் கழிக்கும் கேவலமான செயலை செய்து உள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியதால், சிறுநீர் கழிக்கும் வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா அல்ல, அது போலியான வீடியோ என ஏ.பி.வி.பியிடம் இருந்து விளக்கம் வந்ததும், அதோடு அவர் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சின்ன உதாரணம். இது போன்ற எண்ணற்ற பல சம்பவங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுத நேரம் பத்தாது.

தற்போது கேடி ராகவன் பாலியல் தொடர்பான வீடியோ வெளியானது பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாஜகவில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஒரு விசாரணைக் குழு அமைத்து குற்றசஞ் சாட்டப்படும் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

பாஜகவில் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று கூறிய அவரே மற்றொரு ஆடியோவில் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். இருந்தும் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை. இவரைப் போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் கல்லூரியில், பள்ளிகளில், பொது இடங்களில் என எங்கும் யாரிடமும் உரையாற்ற எந்த தகுதியும் இல்லை. தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவினர் தமிழகத்தில் ஒருபோதும் வளரக் கூடாது.

இந்த சம்பவங்கள் அனைத்திலும் பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார். இதற்கு எல்லாம் மோடி எந்த விதமான அழுத்தமோ, கண்டனமோ தெரிவிப்பதில்லை. அதே சமயத்தில் பாஜக கட்சியினர், இது போன்ற விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட்டுவிட்டு, ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் தண்டனைப் பெற வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

பாஜகவிடமிருந்து மட்டுமல்ல  இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிப்பவர்களிடம் இருந்து பெண்களும், தமிழ்ச் சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும். பெண்களின் பாதுகாப்பு, உரிமை, மரியாதை, கண்ணியம் என அனைத்தும் காக்கப்பட வேண்டுமாயின் இந்துத்துவ பாஜகவினர் விரட்டியடிக்க பட வேண்டும்.

இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறி வரும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக ஆட்சியில் தான் பெண்களின் நிலை இவ்வாறாக உள்ளது. உண்மையில் இந்து ராஜ்ஜியம் அமைந்தால், நம் வீட்டு பெண்களின், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும். ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் பெண்களின் நிலை குறித்து கவலைப்படும் நாம், இந்தியாவில் தாலிபான்கள் போன்று பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் இந்த்துத்துவ பாசிச கும்பலை என்ன செய்யப் போகிறோம்? இந்துத்துவத்தின் வீழ்ச்சியே பெண் விடுதலை என்பதை புரிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை எதிர்க்க துணிவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »