சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்

சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்

“கற்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது
எனவே கற்றுக்கொள்
சாதியின் தொடர் சங்கிலி அறு
பார்ப்பனீய வேதங்களைத் தூக்கி எறி”.

கல்வி பெற்றால் சாதியையும், வேதங்களையும் தூக்கி எறியும் அறிவும் வந்து விடும் என்கிற இந்த கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் சாவித்திரி பாய் பூலே.

சாதியக் கொடுமைகள், மூடத்தனங்கள், பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்குத்தனங்கள் மிகுந்திருந்த 19-ம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே முதல் பெண் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, பெண்ணுரிமை செயல்பாட்டாளராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல பரிமாணங்களுக்கு உரியவராய் வாழ்ந்தவர் சாவித்திரி பாய் பூலே. 1831-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் நைகெளன் என்ற சிற்றூரில் பிறந்தார். கணவர் ஜோதிராவ் பூலே. இவரின் 9 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஜோதிராவ் பூலேவுக்கு அப்பொழுது வயது 13. பின்னாளில் அண்ணல் அம்பேத்கரால் “சமூக சீர்திருத்தத்தின் மகாத்மா” என்று போற்றப்பட்டவர் ஜோதிராவ் பூலே. அவரே தனது மனைவி சாவித்திரிபாய் பூலேவிற்கு எழுதவும், படிக்கவும் சொல்லிக் கொடுத்தவர். கல்வியின் முக்கியத்துவத்தை அறிய வைத்தவர்.

பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி கற்பிப்பதை ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்களே ஏற்காத காலகட்டம் அது. அந்த சூழலிலும் 1847-ல் தனது உறவினர் சகனாபாயுடன் சேர்ந்து மகர்வாடா பகுதியில் பள்ளி துவங்கியவர் சாவித்திரி பாய் பூலே. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் எனப் பல வகையிலும் பாதிப்புக்குள்ளான பெண்களும் அங்கு படித்தனர். பெண்களுக்கு கல்வி கொடுப்பதா என்று சாதியவாதிகள் கொதித்தெழுந்து அவரை எச்சரித்தனர். ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதையே இலட்சியமாக கொண்டு ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே சாதிய சமூகம் கொடுத்த அச்சுறுத்தல்களை கண்டு கொள்ளவில்லை. சாதியவாதிகளின் கோபம் அதிகரித்தது. எப்படியாவது அவரைத் தடுத்தாக வேண்டுமென ஆபாசச் சொற்களால் வசை பாடினர். அவற்றையும் அவர் செவிகளில் வாங்கிக் கொள்ளவில்லை. எவருடைய மனதையும் நிலைகுலையச் செய்யும் அருவருப்பான செயல்களையும் செய்யத் துவங்கினர். அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் மறைந்திருந்து அவரின் மேல் கற்கள், சாணி, மற்றும் நாற்றம் தரும் பல வகையான கழிவுகளை வீசினர். மனம் வேதனையடைந்த அவர் கணவர் ஜோதிராவ் பூலேவிடம் முறையிட்டார். கணவர் அதற்குத் தீர்வாக மாற்றுப் புடவை எடுத்துக் கொள். பள்ளிக்கு சென்றதும் மாற்றிக் கொள் என்றார். சாவித்திரிபாய் பூலேவும் தீர்வு கிடைத்து விட்டதாக மாற்றுப் புடவை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியளிக்க தனக்கு நேர்ந்த அவமானத்தையும், ஆதிக்க சமூகம் இழைத்த கொடுமையையும் தாங்கி உறுதியுடன் நின்று ஆசிரியர் பணி தொடர்ந்தவரே சாவித்திரி பாய் பூலே அவர்கள்.

கணவர் பக்கபலமாக இருக்க பள்ளியின் நான்காம் நிலை தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் சேர்ந்து தேர்ச்சியடைந்தார். பெண்கள் முன்னேறவும், சமத்துவம் பெறவும் கல்வியே மூலதனம் என்பதை ஆழமாய் உணர்ந்த சாவித்திரிபாய் பூலேவும், ஜோதிராவ் பூலேவும் இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை 1848-ல் பூனேவில் துவங்கினர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சாவித்திரிபாய் பூலே பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் அவரே. முதலில் 9 பெண்கள் கல்வி கற்க வந்தனர். பின்னர் 48 பெண்கள் வரை சேர்ந்தனர். அப்பொழுதும் ஆதிக்க சாதியினர் விடவில்லை. ஜோதிராவ் குடும்பத்திற்குள் பிளவு வருமளவுக்கு தொல்லைகள் கொடுத்தனர். வீட்டை விட்டு வெளியேறிய இருவருக்கும் பூலேவின் நண்பர் உஸ்மான் மற்றும் அவரின் சகோதரி பாத்திமா அடைக்கலம் கொடுத்தனர். அவர்களின் வீட்டு வளாகத்தையே பள்ளி துவங்கக் கொடுத்தனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களான மகர், மாங்க் சமூகங்கள் கல்வி பயிலவும், பெண்களுக்காகவும் பள்ளி ஆரம்பிக்கும் தொடர் விருப்பம் காரணமாக 1851 – 52 ஆண்டுக்குள் மூன்று பள்ளிகளைத் துவங்கினார்கள். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு பயின்றார்கள். பிரிட்டிஷ் அரசு அளித்த நிதி உதவியுடனும், ஐரோப்பியர்கள் அளித்த நிதி உதவியுடனும் பள்ளிகளை நடத்தினார்கள். அப்போது நிகழ்ந்த அரசியல் சூழல் காரணமாக நிதி உதவிகள் கிடைக்காமல் போக மூன்று பள்ளிகளும் மூடப்பட்டன. கடும் இன்னல்களை சந்தித்தப் பின்பு மீண்டும் பள்ளிகளைத் திறந்தனர். படிப்படியாக 18 பள்ளிகள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் கல்வி பயில துவங்கினர்.

பூலே தம்பதியினர்

இது மட்டுமல்ல விவசாயிகள், தொழிலாளர்கள் கல்வி கற்க 1855-ல் இரவுப் பள்ளியை நடத்தினார். குழந்தைகள் பள்ளிக்கு வர சத்துணவு திட்டமும் கொண்டு வந்தார். பிள்ளைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து விழிப்பூட்டினார். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களுக்காக தங்கும் விடுதிகளும் அமைத்தார். இக்கட்டான சூழ்நிலைகள் சூழ்ந்த போதிலும் சோர்ந்திடாது தொடர்ந்து கல்வி சேவை செய்வதையே அவர் தனது வாழ்நாள் கடமையாகக் கருதினார்.

கல்விப் பணி மட்டுமல்ல சமூகப் பணிகளிலும் பூலே தம்பதியினரின் பங்கு இன்றியமையாதது. சனாதனிகளால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இவர்கள் ஆற்றிய அரும்பணிகள் அளவற்றவை.

ஆதிக்க சாதியினரால் பொதுக் கிணற்றில் நீரெடுக்க மகர், மாங்க் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மறுக்கப்பட்டனர். அவர்களுக்குத் தண்ணீர் வழங்க தங்கள் வீட்டில் கிணற்றினைத் தோண்டியவர்கள் இவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் பூலே இணையர்கள் செய்த சமூக சேவைகள் ஊற்றினைப் போல பெருக்கெடுத்த நிகழ்வுகள்.

1852-ல் ‘மகிளா சேவா மண்டல்’ அமைப்பைத் துவங்கினர். சிறு வயது திருமணங்களைத் தடுக்க, இளம் வயது கைம்பெண்கள் நலம் காக்க, பெண்களுக்கு விழிப்பூணர்வூட்ட இந்த அமைப்பு துவங்கப்பட்டது.

பள்ளியில் பெண் குழந்தைகள்

1853-ல் ‘பால்தீய பிரதிபன்தக் கிரகா’ எனும் அமைப்பைத் துவங்கினர். இளம் வயது கைம்பெண்களுக்கும் மறுமணம் மறுத்த காலகட்டம் அது. இந்தப் பெண்கள் மேட்டுக்குடியைச் சார்ந்த ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்ப்பிணியாவதும், சமூகத்திற்கு பயந்து அந்த குழந்தையை அவர்களே கொன்று விடுவதும் அப்போது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. அதைப் போன்று ஒரு பெண் தன் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதையும் சாவித்திரி பாய் பூலே அறிந்தார். குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைத்தால் கொல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து தொட்டில் குழந்தை திட்டம் போல அப்பொழுதே இந்த அமைப்பை உருவாக்கினார்.

1863-ல் ஏமாற்றப்பட்ட கைம்பெண்களுக்காகவும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காகவும் அனாதை இல்லம் தொடங்கினார். அன்றைய காலகட்டத்தில் கைம்பெண்களுக்கு மொட்டையடிப்பது வழமையாக இருந்தது. அந்தக் கொடுமையை அழித்தொழிக்க தங்கள் பகுதி சுற்றிலுமுள்ள நாவிதர்களைத் திரட்டி போராடி அவர்களே இனி இதனை நாங்கள் செய்ய மாட்டோம் என உறுதி மொழியும் எடுக்க வைத்தார். சனாதனவாதிகளின் கடும் சினத்தையும் எதிர்கொண்டு துணிவுடன் நின்ற அவரின் போராட்டக் குணத்தை அறிபவர்கள் மெய் சிலிர்ப்பதை தவிர்க்க முடியாது.

1873-ல் ‘சத்யஜோதக் சமாஜ்’ என்னும் மறுமலர்ச்சி இயக்கத்தை துவங்கினர். இங்கு புரோகிதம் மறுத்து எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்று மணமக்கள் உறுதிமொழி ஏற்றே திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. சமத்துவம் நேசிப்பவர் எவராயினும் உறுப்பினராகலாம் என்பதை விதியாகக் கொண்டு அந்த அமைப்பு செயல்பட்டது. ஜோதிராவ் பூலே மறைவிற்கு பின் இதன் தலைவரானார் சாவித்திரிபாய் பூலே.

1876-ம் ஆண்டு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் உணவின்றி மாண்டனர். அந்த சமயத்தில் ஊர் ஊராக சென்று நிதி திரட்டி 52 இடங்களில் உறைவிடமும், உணவு முகாமும் அமைத்து அவர்களின் பசிப்பிணி போக்கிய அன்னை இவர்.

சாவித்திரி பாய் பூலேவின் படைப்புகள் முற்போக்கானவை. சனாதன எதிர்ப்பை முன்னிறுத்துபவை. சமத்துவம், சகோதரத்துவம், கல்வி அவசியம், இயற்கை, மனிதம், சமூக நலம் என இவரின் கவிதைகள் பரந்து விரிந்தவை. உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டவை. இவர் தனது கணவருக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. கடிதத்திலும் சமூகப் பிரச்சினைகள் குறித்த பரிமாற்றமே அதிகம் இடம் பிடித்திருக்கும். அந்த அளவிற்கு சமூகத்தின் மீதான நேசிப்பையே தங்கள் மூச்சாக எண்ணி இணையற்ற தம்பதிகளாய் வாழ்ந்த இவர்களுக்கு குழந்தை இல்லை. கைம்பெண்ணான ஒரு பெண்ணின் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர்.

தனது வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் சமயத்திலும் மருமகளாக வரப் போகும் பெண்ணுக்கு மணமகனின் குணம் பற்றிய புரிதல் வர வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முன்பே ஒரு மாத காலம் வீட்டில் தங்க வைத்தார். திருமணத்திற்கு பின்பும் மருமகளை படிக்க வைத்தார். சமூகத்தில் மட்டுமல்ல தனது குடும்பத்திலும் முற்போக்கு கொள்கை மாறாமல் ஒரு புரட்சிப் பெண்மணியாகவே வாழ்ந்திருக்கிறார்

இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை

இவரின் கல்வித் தொண்டிற்காக 1852-ல் பிரிட்டிஷ் அரசு சிறந்த ஆசிரியர் விருது கொடுத்து கவுரவித்தது. 1998-ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டது. புனே பல்கலைக்கழகத்திற்கு இவரின் பெயர் மாற்றப்பட்டது.

இவரின் இறுதிப் பயணமும் சமூக சேவையுடன் தான் முடிந்தது. 1896-97-களில் ‘புபோனிக் பிளேக்’ எனும் கொடுந்தொற்று பரவியது. மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்க பிரிட்டிஷ் அரசு சாதிப் பிரிவினை பார்க்காமல் அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும்படி ஆணையிட்டது. ஆனால் பார்ப்பன மருத்துவர்கள் சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும் மருத்துவம் செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டனர். அந்த சமயத்தில் ஆப்பிரிக்காவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த தனது வளர்ப்பு மகனை வரவழைத்தார் சாவித்திரி பாய் பூலே. பூனேவில் மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டது. அப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனை காப்பாற்ற தூக்கி வந்த இவருக்கும் இந்த நோய் தொற்றியது. சிறுவன் பிழைத்து விட்டான். சாவித்திரிபாய் பூலே மறைந்தார். தனது 1897 ம் ஆண்டு 66-வது வயதில் தனது பணிகளின் பயணத்தை முடித்துக் கொண்டார் சாவித்திரி பாய் பூலே.

ஒன்பது வயது சிறுமியாக மண வாழ்க்கைக்குள் நுழைந்து கணவரிடம் கல்வியறிவு பெற்று சாதியப் படிநிலையின் கீழே அழுத்தி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறவும், வீட்டுப்படியே தாண்டக்கூடாது என அடக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி அளிக்கவும் சாதியக் கொடூரர்கள் இழைத்த கொடுமைகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கல்விக் கூடங்களை நிறுவி கல்விப் பணியை விட்டு விலகாமல் உறுதியுடன் நின்ற இவருடைய பிறந்த நாளே ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்தவாதிகளை வெளியுலகம் அறியா வண்ணம் மறைத்து விடும் பார்ப்பனீய அதிகார மட்டத்தினரின் வஞ்சகத்தால் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் அருந்தொண்டாற்றிய இவரின் சிறப்புகள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாய்ப்பையும் பெற்று ஆட்சி, அதிகார மட்டத்தில் இருந்தவரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதை விட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி ஒளி பாய்ச்சிய அன்னை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »