இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் துரோக வரலாறு

அண்மையில் ஆர்எஸ்எஸ்-சின் நூறாவது ஆண்டு விழாவில் ‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-சின் பங்கு’ பற்றியும் ‘ஆர்.எஸ்.எஸ் ஆங்கிலேயரை எதிர்த்ததாகவும்’ வழக்கம்போல் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார் ஒன்றிய பிரதமர் மோடி. ஆனால் 1947 காலகட்டத்தில் காந்திய வழி போராட்டங்களிலும் பங்குபெறாமல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழி போராட்டங்களிலும் பங்குபெறாமல் வெள்ளையர் படைக்கு ஆர்.எஸ்.எஸ் ஆள் சேர்த்துக் கொடுத்ததை வரலாற்றைப் படித்தவர்கள் ஆதாரங்களுடன் கூறி வருகிறார்கள்.

1925இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட காலத்திலேயே அந்த அமைப்பிற்கு பாசிசம், இந்துத்துவ ராச்சியம் போன்ற கொள்கைகளுடன் வெள்ளையருடன் நட்பு பாராட்டுவதும் முக்கிய பணியாக இருந்தது. அன்றைய காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்த பாசிச ஆட்சியுடனும் அதன் சர்வாதிகாரியுடனும் தொடர்பு கொண்ட முதல் ஆர்.எஸ்.எஸ் நபர் பி.எஸ். மூஞ்சே ஆவார். (மூஞ்சேதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரின் வழிகாட்டியாக இருந்தவர்.) ஆர்.எஸ்.எஸ்ஸை வலுப்படுத்தி, அதை நாடு தழுவிய அமைப்பாக விரிவுபடுத்திய மூஞ்சே, நவம்பர் 1930 முதல் ஜனவரி 1931 வரை லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நபர்களில் ஒருவர். (பிற காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணித்தனர்.)

வட்டமேசை மாநாட்டில் இருந்து திரும்பியதும், முசோலினியை சந்திப்பதற்காக இத்தாலி சென்றார் மூஞ்சே. மார்ச் 1931இல், மூஞ்சே பெனிட்டோ முசோலினியையும், பாசிச இளைஞர் அமைப்பான ஓபரா நாசியோனேல் பாலிலாவின் உறுப்பினர்களையும் சந்தித்தார். மேலும் அங்கு அவர் சில முக்கியமான இராணுவப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளின் பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிச தொடர்புகளை ஆய்வறிஞர்கள் சிலர் உறுதிப்படுத்துகின்றனர். இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதை விட பாசிச போதனை முறையை வலியறுத்திய நிறுவனங்களும் அங்கு நடைபெறும் பயிற்சிகளும் மூஞ்சே மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கம்தான் இன்றும் வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முசோலினி & பி.எஸ்.மூஞ்சே

இத்தாலியின் பாசிச வழிகளில் ஆர்எஸ்எஸ்ஸை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் மூஞ்சே. இதைக் குறிப்பிட்டுத்தான் “இத்தாலிக்கு பாசிஸ்டுகள் எப்படி இருக்கிறார்களோ, ஜெர்மனிக்கு நாஜிக்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் எதிர்கால இந்தியாவில் (ஆர்எஸ்எஸ்) சங்கம் இருக்க விரும்புகிறது என்று கூறுவது மிகையாகாது” என்று புலனாய்வுப் பணியகம் தயாரித்த 1933 அறிக்கை குறிப்பிடுகிறது.

இவ்வாறு பாசிசத்தைப் பாடமாக கற்றுக்கொண்டு அதை செயல்முறைப்படுத்தத் துடித்த ஒரு அமைப்பு, இந்திய சுதந்திர போராட்டம் மூலம் வெள்ளையரை எதிர்க்கத் துணியவில்லை. தனது உறுப்பினர்களை ஆங்கிலேயருக்கு ஆதரவாகவே இருக்கும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

தற்போது நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பல நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஹெட்கேவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் “ஹெட்கேவர் சிறைக்கு சென்றது ஒரு ஆர்எஸ்எஸ் தலைவராக அல்ல, மாறாக ஒரு காங்கிரஸ் தொண்டராகவே சிறைக்கு சென்றார்” என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஹெட்கேவர் தனது வாழ்நாளில் இரண்டு முறை (1921 மற்றும் 1931) சிறைக்கு சென்றிருக்கிறார். அவர் முதல் முறை சிறை சென்ற காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பே உருவாகவில்லை என்பதுதான் உண்மை.

ஆர்.எஸ்.எஸ் 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிர் நிலைபாட்டிலேயே ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் செயல்பட்டு வந்திருக்கின்றனர். இதற்கு சான்றாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பிலிருந்த மராத்தி எழுத்தாளர் சி.பி.பிஷிகர் “ஹெட்கேவர் (பிரிட்டிஷ்) அரசாங்கத்தை எதிர்த்து நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை” என்று தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

1981ஆம் ஆண்டு வெளிவந்த எச்.வி. சேஷாத்ரி எழுதிய ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்று நூலின்படி, கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாக உரை நிகழ்த்தியதற்காக ஹெட்கேவர் முதல் முறை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சிறையில் குறிப்பிடத்தக்க இரண்டு சம்பவங்கள் நடந்ததாக ஹெட்கேவரின் சுயசரிதை குறிப்பிடுகிறது. முதலாவதாக, ஹெட்கேவர் தனக்காக வாதாட பெரும் பொருட்செலவில் ஒரு வழக்கறிஞரை நியமித்தார். (போராட்டத்தில் கைது செய்யப்பட்ட யாரும் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காந்தியடியார் கூறியதை வெளிப்படையாக மீறினார் ஹெட்கேவர்.)

இரண்டாவது நிகழ்வாக ஜூலை 12, 1922 அன்று நாக்பூரில் உள்ள அஜானி சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நாளை அவரின் சுயசரிதை  குறிப்பிடுகிறது. ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்த போதிலும் “அவர் சிறைச் சீருடையைக் கழற்றி தனது பழைய துணிகளை அணிய முயன்றபோது, அது மிகவும் இறுக்கமாக இருந்தது. சிறை வாழ்க்கையின் போது அவர் 25 பவுண்டுகள் (11 கிலோகிராம்) எடை அதிகரித்திருந்தார்” என்று அவரின் வாழ்க்கை வரலாறு சொல்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சி வரலாற்றில், சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களில் இவ்வாறு 11 கிலோகிராம்களுக்கு மேல் எடை கூடிய நிகழ்வு வேறு எவருக்கும் நிகழ்ந்ததில்லை. இது எப்படி நடந்தது என்பதற்கான முறையான விளக்கமும் அந்த புத்தகத்திலேயே  வழங்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் சிறைச்சாலை அதிகாரி சர் ஜாதருடன் ஹெட்கேவர் நட்புறவில் இருந்ததாலேயே இத்தகைய நிகழ்வு நடந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தபோதும் ஆர்.எஸ்.எஸ் இதில் பங்குபெறவில்லை. டிசம்பர் 1929இல், லாகூரில் நடந்த காங்கிரஸ் வருடாந்திரக் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி, முழுமையான சுதந்திரத்தை அதன் இலக்காக அறிவித்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ காவி கொடி ஏற்றும் என்று அதன் தலைவர் ஹெட்கேவர் கூறினார்.

ஹெட்கேவர் 1931இல் இரண்டாவது முறை சிறை சென்றதின் பின்னணி குறித்து சி.பி.பிஷிகர் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. இந்தப் புத்தகம் “ஆர்.எஸ்.எஸ் சங்கம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்காது” என்று ஹெட்கேவர் உத்தரவிட்டதாக கூறுகிறது. இருப்பினும், ஹெட்கேவர் காங்கிரஸ் போராட்டக்காரர்களின் குழுக்களை உடைக்கும் நோக்கத்துடன் சிறைக்குச் செல்ல நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்தாவது ஆண்டு விழாவின் போது, ​​”ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியை ‘ஒரு தெய்வீகச் செயல்’ என்று ஹெட்கேவர் விவரித்ததாக 1935 அக்டோபர் 10 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதேபோன்று, ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டபோதும் ‘ஆர்.எஸ்.எஸ் இதிலிருந்து விலகி இருக்கும்’ என்று முடிவு செய்தார் ​ஹெட்கேவர். ஹெட்கேவரைத் தொடர்ந்து தலைவரான கோல்வால்கரும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடவில்லை.

ஒத்துழையாமை போராட்டமும் வெள்ளையனே வெளியேறு போராட்டமும் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்பட்டபோது கோல்வால்கர் இந்த போராட்டங்களைப் பற்றி கூறியது ஆர்.எஸ்.எஸ்-ஆல் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீ குருஜி சமக்ர் தர்ஷன்’ (தொகுதி 4)இல் வெளியாகியுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு கோல்வால்கர் எழுதியது:

“நிச்சயமாக இந்த போராட்டங்களினால் மோசமான விளைவுகள் இருக்கும்….1942க்குப் பிறகு, மக்கள் பெரும்பாலும் சட்டத்தைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்று நினைக்கத் தொடங்கினர்.

…அந்த நேரத்திலும், ஆர்எஸ்எஸ் சங்கத்தின் வழக்கமான பணி தொடர்ந்தது. சங்கம் (போராட்டத்தில்) நேரடியாக எதையும் செய்யாது என்று சபதம் செய்தது. ‘ஆர்எஸ்எஸ் சங்கம் என்பது செயலற்ற நபர்களின் அமைப்பு, அவர்களின் பேச்சுக்கள் பயனற்றவை’ என்று வெளியாட்கள் மட்டுமல்ல, நமது தன்னார்வலர்கள் பலரும் இப்படித்தான் பேசினார்கள்.” என்று எழுதியுள்ளார் கோல்வால்கர்.

இன்றுவரை வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை பற்றி இதுவரை ஒரு ஆவணம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஹெட்கேவரும் கோல்வால்கரும் அனைத்து மதத்தினரும் உள்ளடக்கிய இந்தியா உருவாகும் என்பதாலேயே சுதந்திர போராட்டத்தை எதிர்த்தனர். இந்த காரணத்தினாலேயே சுதந்திரப் போராட்டத்தை ‘பிராந்திய தேசியவாதம்’ என்று கண்டனம் செய்தார் கோல்வால்கர் (ஆதாரம்: Bunch of Thoughts, 1966, ஆர்.எஸ்.எஸ் வெளியீடு).

இவ்வாறு 1925 முதல் 1947 வரையிலான முழு காலகட்டத்திலும், எந்தவொரு சுதந்திர போராட்டத்திலோ அல்லது இயக்கத்திலோ ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னியல்பாகவும் எந்த போராட்டத்தையும் தொடங்கவில்லை. ஒட்டுமொத்தமாக, ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்ததை நாக்பூரின் துணை ஆணையராக இருந்த சி.எம். திரிவேதி என்பவர் ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். (1930–31ல் நாக்பூரின் துணை ஆணையராக இருந்தவர் திரிவேதி)​ 1933 ஜனவரி 26 தேதியிட்டு உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய குறிப்பில், ‘அன்று ஆர்.எஸ்.எஸ்ஸில் சுமார் ஐநூறு உறுப்பினர்கள் இருந்ததாகவும் ஆனால் 1930–31ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து விலகி இருந்தது ஆர்.எஸ்.எஸ்’ என்றும் திரிவேதி சுட்டிக்காட்டினார்.

(Rath, Saroj Kumar, Rashtriya Swayamsevak Sangh: An Archival Analysis of the Controversial Yet Candid Origin (March 27, 2021). Available at SSRN: https://ssrn.com/abstract=3813957 or http://dx.doi.org/10.2139/ssrn.3813957)

ஹெட்கேவர், கோல்வால்கர் போன்று தேசபக்தர் வேடம் பூசப்பட்ட சாவர்க்கரின் ‘ஆங்கிலேய விசுவாசம்’ நாம் அறிந்ததே. கோட்சேவின் வழிகாட்டியும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவ சித்தாந்தத்தை வடிவமைத்தவருமான சாவர்க்கரை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக பாஜக முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் 1910இல் சிறையில் இருந்தபோது ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கு பல கருணை முறையீடுகளைச் செய்ததாலேயே விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். அவர் அனுப்பிய ஒரு கருணை மனுவில், “ஆங்கில அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதாகவும் அவர்கள் விரும்பும் எந்த சேவையையும் செய்ய விரும்புவதாகவும்” அறிவித்தவர் சாவர்க்கர். அந்த அறிவிப்பின்படியே விடுதலையான பிறகு பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்தவர் சாவர்க்கர். இதன் காரணமாகவே வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை வெளிப்படையாக எதிர்த்தார் சாவர்க்கர். “இந்த போராட்டத்திற்கு இந்து மகாசபையினர் எந்தவொரு ஆதரவையும் வழங்க வேண்டாம்” என்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

மேலும் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்திய சாவர்க்கர், தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இளைஞர் கூட்டங்களில் உரையாற்றி ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை பிரிட்டிஷ் ஆயுதப் படையில் சேர்த்தார். சாவர்க்கர் சேர்த்த இந்தப்படைதான் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்களை படுகொலை செய்தது. (சாவர்க்கரின் இந்த வரலாற்றுத் துரோகத்தை தமிழ்நாட்டில் அம்பலப்படுத்தி வாய்ப்புள்ள மேடைகளிலெல்லாம் முழங்கி வருகிறது மே பதினேழு இயக்கம்)

இவ்வாறு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஆங்கிலேயருடன் சேர்ந்து துரோகம் இழைத்த ஒரு அமைப்பிற்குத்தான் ‘தேசபக்தி முலாம்’ பூசிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதன் மூலம் ஒரு இந்துத்துவ அமைப்பிற்கு தேசியவாத வேடம் அணிவித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு அமைப்பு ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் செயலாற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒன்றிய பிரதமர் மோடி முதல் ஆர்.என்.ரவி வரை புகழ்ந்து பேசி மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முயலுகின்றனர். அந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவுக்காக நாணயம் வெளியிடுவதில் தொடங்கி தில்லியின் பள்ளிப்புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் குறித்து இடம் பெறுவது வரை மிக வீரியமாக பரப்புரை செய்கிறது பாஜக. எனவே ‘காந்தியடியாரைக் கொன்றது மட்டுமன்றி, இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும் பங்கு பெறாமல் துரோகம் செய்த அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இன்று சனநாயக அமைப்புகளின் கடமையாக மாறி இருக்கின்றது.

Reference:

  1. https://sabrangindia.in/fact-check-rss-had-no-role-indias-freedom-struggle-0/
  2. https://www.mapsofindia.com/my-india/india/did-rss-contribute-in-the-freedom-struggle
  3. https://janataweekly.org/remembering-those-who-opposed-the-quit-india-movement-and-who-didnt/
  4. https://may17kural.com/wp/prision-turned-savarkar-loyal-to-british-india/
  5. https://may17kural.com/wp/hindutva-rss-backstabbed-netaji-subhash-chandra-bose/
  6. https://sabrangindia.in/investigation/collaborator-savarkar-versus-freedom-fighter-bose/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »