மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் வகையிலும், உயர்கல்வியை இந்துத்துவமயமாக்கும் வகையிலும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள யுஜிசி திருத்த வரைவை கண்டித்தும், இதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியும், ஒன்றிய அரசின் அலுவலகமான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை சனவரி 10, 2025 அன்று மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் தோழர்களும் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் தோழர்களும் ஒன்றிய பாஜக அரசின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் ஆற்றிய உரை:
மோடி அரசு தமிழ்நாட்டினுடைய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் உரிமைகள் மீது கை வைத்திருக்கின்றார்கள். இங்குள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பதற்கான உரிமையில் மாநில அரசுக்கு இடம் கிடையாது என்கிற வகையில் மாநில அரசின் உரிமையை மோடி அரசு பறித்திருக்கிறது. துணைவேந்தராக வரக்கூடியவருக்கான கல்வித் தகுதியையும் அனுபவத் தகுதியையும் நீக்கிவிட்டு, தனக்கு விருப்பப்பட்டவர்களை நியமிக்கலாம் என்ற வகையிலே சட்டம் திருத்தப்பட்டு இருக்கிறது. மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் ஆளுநரின் தலையீட்டோடு, அவர்களுக்கு தேவைப்படுபவர்களை அரசியல் நோக்கத்துடன் துணைவேந்தராக நியமிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மிக மோசமாக, மோடி அரசினுடைய இந்துத்துவ கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களிலே, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பட்டங்களை கொடுக்க முடியாது, அப்படிப்பட்ட பட்டங்களை அளித்தால், அது செல்லாது என்று அராஜகமாக தமிழ்நாட்டினுடைய பல்கலைக்கழக கல்லூரிகளின் உரிமைகள் மீது மோடி அரசு கை வைத்திருக்கிறது.
கல்வி என்பது மாநில அரசும் ஒன்றிய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அதிகாரம் கொண்டது. ஒன்றிய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. மாநில அரசுகள் தான் ”கல்லூரிகளை நடத்துகிறது, பல்கலைக்கழகங்களை நடத்துகிறது, மானியம் கொடுக்கிறது, பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது, இட ஒதுக்கீடு முறையை மாநில அரசு தான் நடைமுறைப்படுத்துகிறது”. ஆக மாநிலத்தை சார்ந்த எங்கள் மக்கள் படிப்பதற்காக கட்டப்பட்ட பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளிலே, டெல்லியிலிருந்து ஒருவர் வந்து ‘நான்தான் துணைவேந்தர்’ என்று முடிவெடுத்துக் கொண்டு அதிகாரம் செலுத்த இந்த யுஜிசி திருத்த வரைவு வழி செய்கிறது. மேலும் அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நமக்கு கொடுக்கும் பட்டம் என்பது பட்டமே கிடையாது, இந்த பட்டங்களுக்கெல்லாம் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அராஜகமாக மோடி அரசு சொல்லி இருக்கிறது.
இது மாநில உரிமையை மட்டும் நசுக்குவதாக மட்டும் பார்க்க கூடாது. தமிழர்களின் கல்வி உரிமையை மோடி அரசு பறிக்கிறது. தமிழன் படிக்கக் கூடாது, தமிழர்கள் கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கெளெல்லாம் மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் ஆதிக்கத்தில் எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. வடநாட்டிலிருந்து வரும் ஒருவர் துணைவேந்தராக உட்கார்ந்துக்கொண்டு, மந்திரதந்திரங்கள் மற்றும் வேதம் ஓதுவதை எல்லாம் ஒரு வேலையாக மாற்றுவார்கள். இதையெல்லாம் தமிழ்நாடு அனுமதிக்க முடியாது.
நாம் வரி கட்டுகிறோம், கல்விக் கட்டணம் கட்டுகிறோம், நம் மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் படிக்கின்றார்கள். அவர்களின் தகுதி அடிப்படையிலே பல்வேறு கல்வித் துறைகளிலே படிக்கின்றார்கள். இந்தக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுக்க கூடாது என்று எவ்வாறு டெல்லி அரசு சொல்ல முடியும்? எப்படி டெல்லி அரசுக்கு அதிகாரம் வந்தது? அரசமைப்பு சட்டத்தில் இப்படிப்பட்ட அதிகாரமே இல்லை. டெல்லி அரசாங்கம் இவ்வாறு மசோதா கொண்டு வருவதை எப்படி நாம் பொறுத்துக் கொள்வது?
அடிப்படையிலேயே இன்று படிக்கக்கூடிய மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் இன்று முற்றுகைப் போராட்டத்தை செய்து கொண்டிருக்கிறோம். மாணவர்கள் கல்விக்கட்டணம் கட்டியும், கடன் வாங்கியும் மூன்று வருடம் படிக்கிறார்கள். மூன்று வருடம் முடிந்தபின் டெல்லி அரசு இந்த பட்டம் செல்லாது என்று சொல்லப் போகிறது, பட்டம் செல்லாது எனில் மாணவர்கள் ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழல் இருக்கும். இந்த மாணவர்களுடைய எதிர்காலத்திற்காகத்தான் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மாணவ சமூகம் இதை உணர்ந்து வீதியில் இறங்க வேண்டும். மோடி அரசுக்கு எதிராக, அண்ணாமலைக்கு எதிராக, பாஜக கட்சிக்கு எதிராக களம் இறக்க வேண்டும்.
மோடி அரசு நம் தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. நம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வகுத்த பாடத்திட்டத்தில் நாம் பாடம் படித்து, அதிகாரிகளாக, உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக, அமைச்சராக, ஏன் முதலமைச்சராக கூட ஆகியிருக்கிறோம். இந்தக் கல்வியை மோடி அரசு தடை செய்வதும், மோடி அரசு சொல்கிற இந்து மத சாஸ்திர கல்விக்கொள்கைகளை ஏற்கவில்லை என்றால் மாநில அரசுக்கு மானியம் மறுப்பதும், வரியில் பங்கீடு மறுப்பதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பளம் மறுப்பதும் என அனைத்தையும் தடுத்து நிறுத்துவேன் என மோடி அரசு சொல்லுகிறது.
யுஜிசி திருத்த வரைவில் மிக மோசமான விடயமாக நாம் பார்ப்பது பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இருக்காது என்பதுதான்.
துணைவேந்தர்கள் பதவி பாஜக விருப்பம் போல் நிரப்பப்படும். அந்த நபர்கள் எந்த ஊரிலிருந்து வரவிருக்கின்றார்கள், ஒழுங்காக டிகிரி படித்தார்களா? என்பது நமக்குத் தெரியாது. ஏற்கனவே மோடியின் போலி கல்விச் சான்றிதழ் குறித்த கேள்விக்கு இன்னும் பதிலில்லை. பாஜகவின் முன்னாள் கல்வி அமைச்சரே டிகிரி முடிக்கவில்லை என்ற தகவல் அம்பலமாகிருக்கிறது. இந்த தற்குறி கூட்டம் தான் தமிழர்களின் கல்வியை முடிவெடுக்கிறார்கள். இப்படிப்பட்ட மசோதாவை நாம் எப்படி ஏற்பது? கல்லூரி மாணவர்கள் இதை உணர்ந்து அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றோம். மாணவர் சமூகம் இதற்கு மேலும் அமைதி காக்கக்கூடாது. உங்களுடைய உரிமையை, உங்களுடைய எதிர்கால கல்வியை, உங்களுடைய பெற்றோரின் கனவுகளைத் தகர்க்கின்ற வகையிலே மோடி சர்க்கார் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்.
அண்ணாமலை சீமானுக்கு வக்காலத்து வாங்குவதெல்லாம் பிறகு இருக்கட்டும். யுஜிசி கொண்டு வந்த திருத்த வரைவு குறித்து, பல்கலைக் கழக உரிமையிலே, கல்லூரி உரிமையிலே, தமிழ்நாட்டு மாணவர்கள் உரிமையிலே, மோடி சர்க்கார் கை வைத்திருக்கிறது. அண்ணாமலை இதற்கு பதில் பேசுவாரா? அவர் இங்கே தமிழ்நாட்டிலுள்ள கல்லூரியில் படித்துதானே ஐபிஎஸ் ஆனார். இப்படிப்பட்ட ஒரு மோசமான சட்டத்தை மோடி சர்க்கார் எங்கள் மீது திணித்து இருக்கிறது. இதுவரை ஒரு பிஜேபி நபரும் பதிலளிக்கவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஆகவே நாங்கள் மோடி அரசனுடைய கொள்கையை கண்டித்து, இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திர பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களில் பல்வேறு அமைப்புகளை அழைத்துக்கொண்டு போராட்டத்தை நடத்துவோம். பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றோம். தொடர்ச்சியாக போராட்டங்கள் நடக்கும் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார். பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்:
ஆளுநரின் அகங்காரத்தினாலும் மோடி அரசினுடைய தமிழக விரோதக் கொள்கையாலும், யுஜிசி பிரச்சனை கொளுந்து விட்டு எரிகிறது. இன்று மாணவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இச்சமயத்தில் இந்த பிரச்சினையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக பெரியார் குறித்து மிக கொச்சையாக, பெரியார் சொல்லாததை எல்லாம் சீமான் பொய்யாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் தேசியத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடபும் கிடையாது. அவர் பேசிய எந்த கருத்தும் தமிழ் தேசிய கருத்து இல்லை, சீமானுக்கு தமிழ் தேசியமே என்னவென்று தெரியாது. ஒருவேளை அவருக்கும் தமிழ் தேசியத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் யாரேனும் நம்பினால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆளுநருக்காக சீமான் வேலை செய்து கொண்டிருக்கிறார். தமிழ் தேசியம் என்றால் என்னவென்று மேதகு பிரபாகரன், தோழர். தமிழரசன் ஆவணமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு வரி கூட சீமான் படித்ததில்லை. ஒரு வரியை கூட சீமானால் சொல்ல முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தேசியம் குறித்து எந்த விவாதமும் சீமான் நடத்தவில்லை. அதனால் சீமானை தமிழ் தேசியவாதியாக பார்க்க வேண்டாம். மோடி அரசின் எடுபிடியாகவும், ஆளுநர் அடிமையாகவும் தான் சீமான் செயல்படுகிறார்.
அண்ணாமலையும் சீமானும் வேறு வேறு நபர்கள் அல்ல, இரண்டு கட்சியில் இருக்கும் ஒரே நபர்கள்தான். மிகவும் பொய் சொல்லக் கூடியவர்கள். மோடி அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் எழுச்சியை மடைமாற்ற வேண்டும் என்று இருவரும் செயல்படுகிறார்கள். சீமானுடைய அயோக்கியத்தனமே இதுதான். தமிழ்நாட்டினுடைய கல்வியுரிமை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகள் எழுதி தேர்வானாலும், டிகிரி வாங்கினாலும், அது செல்லுபடியாகாது என்று கூறுகிறது மோடி சர்க்கார். இதனால் தமிழ்நாட்டினுடைய மாணவர்கள் அரசு வேலையிலே சேர முடியாது, அரசு நுழைவுத்தேர்வு எழுத முடியாது, வேலை கிடைக்காது, வெளிநாடு போக முடியாது. இப்படிப்பட்ட நெருக்கடியை மோடி சர்க்கார் கொடுத்திருக்கிறது.
இது குறித்து சீமான் பேசவில்லை, பேசவும் துணிச்சல் இல்லை. அதை புரிந்து கொள்வதற்கான எந்த வேலையும் செய்யவில்லை. யுஜிசி திருத்த மசோதா எதிர்ப்பை மடை மாற்றுவதற்காக, தமிழ்நாட்டிற்கு எதிரான மோடியினுடைய கல்விக் கொள்கையை பாதுகாக்கும் நோக்கில் சீமான் உளறித் திரிகின்றார். சீமானின் மடைமாற்றும் முயற்சிக்கு நாங்கள் ஒருபோதும் இடம் தரப்போவதில்லை. மோடி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என சொல்லிக் கொள்கிறோம்.
சீமானும் அண்ணாமலையும் யுஜிசி பிரச்சினையைத் திசை திருப்புகிறார்கள். யுஜிசி திருத்த மசோதா குறித்து சீமான் என்ன பேசி உள்ளார்? ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளாரா? மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் சீமான் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளார்? எதுவும் நடத்தியது கிடையாது. இந்த கல்விக்கொள்கையில் மோடி அம்பலம் ஆவதை தடுப்பதற்காக, அண்ணாமலையைப் பாதுக்காப்பதற்காகவும், யுஜிசி பிரச்சினையை மடைமாற்றுவதற்காகவும் சீமான் பேசிக்கொண்டிருக்கிறார். மோடியைப் பாதுகாக்கும் விதமாக நடந்துக்கொள்ளும் சீமான் குறித்தும், சீமானின் இழிவான பொய் பிரச்சாரம் குறித்தும், நாளை (சனவரி 11,2025) அன்று ஊடக சந்திப்பை பத்திரிக்கை மன்றத்திலே வைத்திருக்கின்றோம். சீமானுக்குரிய பதிலை நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூற இருக்கின்றோம்.