திருப்பரங்குன்றம் பிரச்சனையை முன்வைத்து மதக் கலவரம் செய்ய முயற்சிக்கும் இந்துத்துவவாதிகளின் பின்னணி குறித்தும், இப்பிரச்சனையில் அமைதிகாக்கும் தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகள் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ‘சௌத் பீட்’ ஊடகத்திற்கு திசம்பர் 10, 2025 அன்று வழங்கிய நேர்காணல்.
நெறியாளர்: சவுத் பீட் நேயர்களுக்கு வணக்கம். திருப்பரங்குன்றம் குறித்து பல விவாதங்கள், பல பேட்டிகள் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கொடுத்துள்ளார். அவரை இந்த நேர்காணலில் சந்திப்போம்.
நெறியாளரின் கேள்வி: திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. எந்த நீதிபதியால், எந்த தீர்ப்பால் சர்ச்சை ஆனதோ, அதே நீதிபதி விசாரிக்க இருக்கிறார். இதைப் பற்றிய உங்கள் கருத்து?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: அரசியல் சாசனம் என்பது அடிப்படையில் மக்களை பாதுகாப்பதற்கும், மக்களுடைய வளர்ச்சிக்குமாகத்தான் நிற்க வேண்டும். நீதிமன்றம் வேலை செய்யும் பொழுது மக்களுக்கு பாதிப்பு வராத வகையில், மக்களுக்கு பயனுள்ள வகையில்தான் தீர்ப்புகள் அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பு நீதிபதிக்கு இருக்கின்ற காரணத்தால் தான் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்புகள் மக்களுக்கு பயன்படவில்லை, ஒரு நீதிபதி சிந்திக்கவில்லை என்றால், அதை நாம் எதிர்க்க வேண்டிய / கேள்வி கேட்க வேண்டிய ஜனநாயக பொறுப்பாக மாறுகிறது.
ஒரு அதிகாரி/ ஒரு அரசியல்வாதி/ ஒரு மருத்துவர்/ ஒரு வழக்கறிஞர் தவறு செய்ய வாய்ப்புள்ளது போல ஒரு நீதிபதி தவறு செய்ய மாட்டாரா என்ன? ஜனநாயகத்தில் எல்லாருக்கும் ஒரு பொறுப்புக்கூறல் (Accountability) இருக்கிறது. ஒருவர் சரியா? தவறா? என்கிற இடத்திலிருந்து கேள்வி கேட்பதன் மூலமாக, ஒரு அமைப்பை (System) சரி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கேள்வி எழுப்புவதன் மூலமாக தான் ஒரு கட்டமைப்பை திருத்த முடியும், சரி செய்ய முடியும், தவறுகள் வராமல் தடுக்க முடியும்.
நீதிபதி சொல்கின்ற உத்தரவுகளை எல்லாம் (அது என்னவாக இருந்தாலும்) ஏற்க வேண்டும் என்ற இடத்துக்குள் போனால் அது சர்வாதிகாரம். இப்போது நீதிமன்ற சர்வாதிகாரத்துக்குள் நாம் போக முடியாது. நீதிமன்ற ஜனநாயகத்துக்குள் தான் போக முடியும்.
ஒரு நீதிபதி செய்யக்கூடிய தவறுகளைப் பார்த்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் தீர்ப்பை கொடுக்கிறார்கள். அது நடைமுறையானது. ஆனால் அந்த நீதிபதிகள் வெளியில் வந்ததற்கு பிறகு ஒரு கட்சி சார்பாக போகிறார். அந்த நீதிபதிகள் பதவியில் இருக்கும் பொழுது அந்த கட்சி கொள்கை சார்பாக முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக வெளியே வந்திருக்கிறது. அப்போது அந்த பொறுப்புக்கூறலை யார் கேள்வி எழுப்புவது? இதை யார் சரி செய்வது? அரசியல்வாதிகள்/ அதிகார வர்க்கம் தீர்வு தரவில்லை என்றால், மக்கள் யாரிடம் போவார்கள்? நீதிமன்றத்துக்கு போவார்கள். ஆனால் இந்த நீதிமன்றம் அதிகார வர்க்கத்திற்கும்/ அரசியல் கட்சிக்கும் சார்பாக இயங்குகிறார்கள் என்கின்ற நிலை ஒன்று வந்தால், மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் அவநம்பிக்கை வந்துவிடும்.
ஒரு ஜனநாயகத்தினுடைய பொறுப்பு என்பது, ஜனநாயகத்தினுடைய தூண்கள் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு தூண்களில்/ நிறுவனங்களில் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி விவாதிப்பது, அது தவறு கிடையாது.
கேள்வி: இன்றைக்கு வழக்கறிஞர்கள் சென்னையில் மிகப்பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஜிஆர் சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எல்.முருகன் அவர்கள் தமிழக அரசு வழிபாட்டு உரிமையை மறுத்திருக்கிறது என சொல்கிறார். இன்னொரு புறம் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள்- என்னவெனில் ”ஒரு விளக்குதானப்பா, ஒரு நாள் தானே, ஏத்திட்டு போகட்டுமே, இஸ்லாமியர்கள் ஒன்னும் தடுக்கலையே, அரசுதான் இதுல பிரச்சனை பண்ணுது” என்று சொல்வதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இது பக்தர்கள் கோரிக்கை அல்ல, அந்த ஊர் மக்கள் கோரிக்கையும் அல்ல, இது ஒரு தனிப்பட்ட மதவெறி அமைப்பினுடைய வழக்கில் வருகின்ற தீர்ப்பு. இரண்டாவது அங்கு தீபம் ஏற்றப்பட்டதா? எனில் ஏற்றப்பட்டது. காலம் காலமாக எங்கு ஏற்றப்பட்டிருக்கிறதோ, அந்த உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றி இருக்கிறார்கள். எந்த இடத்திலும் வழிபாட்டு உரிமை மீறப்படவில்லை. பிள்ளையார் கோவிலில் ஏற்றியது தவறா? இதை பாரதிய ஜனதா கட்சியும் இந்து முன்னணியும் அல்லது நீதிபதியும் இதுவரை பேசுவதில்லை.
கேள்வி: இந்து மதத்தினுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு என்று சொல்கிறார்களே?
பதில்: எந்தவித மக்கள் பின்னணியும் இல்லாத ஒரு அமைப்பு ஒரு வழக்கு போட்டு இந்த இடத்தில் ஏற்ற வேண்டும் என சொன்னால், உடனே நீதிபதி நேரடியாக மலையேறி சோதனை செய்வதை நடைமுறையில் நாம் பார்த்ததே இல்லை.
காலம் காலமாக வாழும் எளிய மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை இடிக்க வேண்டும் என வழக்கு வருகிறது. அவர் கொடுத்த தீர்ப்பினால் இத்தனை ஆயிரம்/ லட்சம் மக்கள் வீடு இழந்துள்ளனர். அவர்களுக்கு வாக்காளர் அட்டை கிடையாது. வீடு இடிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி எஸ்ஐஆர்-ல் பெயர் சேர்ப்பார்கள்? எல்லா உரிமையும் உண்டு என சொல்லித்தான் அப்புறப்படுத்தினார்கள் ஆனால் தற்போது மக்கள் சிதறிப் போய் நிற்கிறார்கள்.
நாங்கள்(மே 17) எத்தனையோ முறை ஆற்றங்கரைக்கும் அந்த மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற விவாதத்தை எடுத்துப் பேசினோம். ஆற்றங்கரையில் இருக்கக்கூடிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்காரன் வீடு கட்டிட்டு இருக்கிறான். இதெல்லாம் தெரிந்துதான் நீதிபதி தீர்ப்பு கொடுத்தார்.
அப்போது மக்கள் வீடுகளை இடித்தால் வாழ்வாதாரம் இல்லை, வாழ வழியில்லை என கதறினார்கள், அதனால் நீதிபதி என்றாவது ஆக்கிரமிப்பு வீடுகளால் தொல்லையா? அல்லது கண்ணகி நகர் & பெரும்பாக்கத்தில் மாற்று குடியிருப்புக்கு சென்று நீதிபதி பார்வையிட்டுள்ளாரா? இத்தனை ஏழை மக்கள், இத்தனை குழந்தைகளோட படிப்பு நாசமாக போகிறதே!, அதற்கெல்லாம் அக்கறைப்படாத ஒரு நீதிமன்றம், விளக்கு ஏற்றுவதற்கு மட்டும் ஒரு நீதிபதி மலை மேல் ஏறி பார்ப்பார் என்றும், இது வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை, மத உரிமை என பேசினால் எப்படி மதிப்பது?
கேள்வி: அந்த மலைக்கு ஒரு புனிதம் இருக்கிறது. அந்த புனிதத்தை காக்க வேண்டும். ஏற்கனவே ஆடு, கோழி பலியிடுவதை தடுத்துவிட்டார்கள். கறி சாப்பிட கூடாது என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. விளக்கேற்றுவது ஒரு நம்பிக்கை சார்ந்த ஒரு விசயமாக சொல்லப்படுகிறது. அதை ஒரு உத்தரவாக கொடுக்கிறார்களே என்பதைப் பற்றி?
பதில்: முதலில் இந்த ஆடு கோழி பலியிடுவது தவறு என எங்கு சொல்லி இருக்கிறது? அது யாருடைய வழக்கம்? தமிழ்நாட்டில் ஒரு சாதி மட்டும்தான் ஆடு கோழி அசைவத்தை சாப்பிட மாட்டார்கள். மீதி எல்லாருமே சாப்பிடுவார்கள். இத்தனை கோடி மக்களை அசிங்கப்படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது? கோயில் கட்டமைப்பு எடுத்துக்கொள்வோம். கோபுரம் இருக்கிறது. கோபுரத்தை தாண்டி, தேங்காய் உடைக்கிற இடம் இருக்கும். அங்கு தேங்காய் உடைப்பார்கள், கற்பூரம் ஏற்றுவார்கள். பின் கொடிமரம் இருக்கும். பின் கருவறையில் என்ன சாமி இருக்கிறதோ அதனுடைய வாகனம் இருக்கும். துணை தெய்வங்கள் இருக்கும். பிறகு கருவறை இருக்கும்.
முதலில் தேங்காய் உடைக்கிறது எந்த இடம்? அது பலிபீடம். இன்றைக்கும் அந்த இடம் கோவிலில் இருக்கிறது. அங்கு தேங்காய் உடைப்பதற்காக கல்லை வைத்தார்கள். ஆக பலி கொடுக்கப்பட்டிருந்த கோவில்கள் தான் நம்முடைய கோவில்கள்.
அசைவ உணவுதான் வணங்குகின்ற முறை. அது அடிப்படை உணவாக இருந்தது. சர்க்கரைப் பொங்கல், அரிசி உணவு எந்த காலத்தில் வருகிறது? நமக்கு மிக சமீப காலமாகத்தான் அரிசி உணவு அதிகமாக சாப்பிடக்கூடிய வழக்கம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கிறது. அசைவ உணவு அல்லது ஆடுகோழி பலியிடுவது என்பதுதான் நம்முடைய வணங்குதல் முறை. அதனால்தான் பலிபீடம் கோயிலில் இருக்கிறது. இதெல்லாம் ஒழித்துகட்டி விட்டு, சைவம் சாப்பிட்டால்தான் புனிதம் என கட்டமைக்கிறார்கள்.
கேள்வி: நீங்களும் வரலாறு பேசுகின்ற மாதிரி, அவர்களும் சிக்கந்தர் ஆக்கிரமித்து விட்டார், இது வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் ஆதிக்கத்தை நிறுவுவதுதான் என்ற ஒரு வரலாறு சொல்லுவார்கள் அல்லவா?
பதில்: திருப்பரங்குன்ற மலையிலுள்ள முருகன் கோவிலுக்கு பின்புறம் போனால் சமணர் படுகைகள் இருக்கும். தர்கா வழிபாட்டு முறை என்பது இஸ்லாத்தினுடைய ஒரு பிரிவும், தமிழர்களுடைய பண்பாட்டு வழிமுறையும் சேர்ந்த ஒன்றுதான். இறந்து போனவர்களுக்கு நடுகல் நடுவது நம் வழக்கம். உதாரணத்திற்கு மாவீரர் நாள். தாய் மண்ணுக்காக உயிர் கொடுத்தவர்களை நாம் மரியாதை செலுத்தக்கூடிய பண்பு. அந்த பண்பின் அடிப்படையில் தான் தர்கா வழிபாடு. இதில் பெரிய அளவில் இஸ்லாமியர்கள் அல்ல, சாதரண ஏழை எளிய மக்களைத்தான் இன்றும் நாம் காணலாம்.
சிவகங்கை திருப்பத்தூரில் இருக்கக்கூடிய தர்காவுக்கு மருதுபாண்டியர்கள் கொடை கொடுத்திருக்கிறார்கள். 12/ 13ஆம் நூற்றாண்டில் மதுரை வைகை ஆற்றங்கரையில் இருக்கக்கூடிய தர்காவுக்கு பாண்டிய அரசன் 15000 பொன் கொடை கொடுத்திருப்பதாக ஆவணம் இருக்கிறது. நாகூர் தர்காக்கு மினார் கட்டி கொடுத்த வேலையை மராத்தி அரசனான சரபோஜி கொடுத்திருக்கிறார். ஏர்வாடி தர்கா சுற்றிலும் பல்வேறு இடைநிலை சாதிகள் சந்தன கொடையை கொடுப்பார்கள். அந்த சந்தனத்தில் ஒரு பகுதி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகின்ற பழக்கம் உண்டு.
இன்றைக்கும் தர்கா வழிபாட்டு முறை என்பது தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்த ஒரு வாழ்க்கை முறை.
இந்த வாழ்க்கை முறையில் இன்றைக்கு சிக்கந்தர் தர்காவில் பலி கொடுப்பது என்பதோ, வணங்குதல் என்பதோ, வேண்டுதல் என்பதோ, இஸ்லாமியர் அல்லாத சாமானிய மக்கள்தான் செய்கிறார்கள்.
கேள்வி: காஞ்சி சங்கரமடத்துக்கு கீழ் இராவணன் கோட்டம் இருக்கிறது என்ற உங்களின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். அங்கு இராவணன் கோட்டத்தை அமைக்க வேண்டும் என்றும், “எப்படி பாபர் மசூதிக்கு கீழ் இராமர் பிறந்தாரோ, அதுபோல காஞ்சி சங்கர மடத்துக்கு கீழ் இராவணன் பிறந்த இடம்தான்” என சொல்கிறீர்களே! அது சரியான நடைமுறையா? நாமும் ஒரு வன்முறையை கையில் எடுப்பது போல இல்லையா?
பதில்: நாம் வன்முறையாக பேசவே இல்லை. நம் உரிமையைத்தான் கேட்கிறோம். யாருக்கு எதிராக பேசவில்லை. பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய காஞ்சி என்பது நமக்கு புகழ்பெற்ற தளம். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுடைய மெய்யியல் விவாதங்கள்/ தத்துவங்கள் நடந்த ஒரு தளம். அனைத்து சமய நம்பிக்கை கொண்ட சிந்தனையாளர்களும் இருந்த இடம்.
காஞ்சி என்பது வரலாற்றில் முக்கியமான இடம். அது சைவத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது. அது பௌத்தத்துக்கு முக்கியமான இடமாக இருக்கிறது. ஆசிவக நம்பிக்கைகள் அல்லது ஜைன நம்பிக்கைகள் என்று சொல்லக்கூடிய எல்லாருக்குமான ஒரு மையமாக/நகரமாக நம் காஞ்சி வரலாற்றில் பேசப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில்தான் நம் இராவணனுடைய பிறந்த இடத்தை நாம் கண்டறிந்து, அந்த இடத்தை தொல்லியல் ஆய்வு செய்து இராவணனுக்கு ஒரு கோட்டம் கட்ட வேண்டும் என கேட்கிறோம்.
அயோத்தியில் இராமன் பிறந்தார் என கண்டுபிடிக்கும் பொழுது, ஏன் இராவணன் பிறந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாது? ராமன் பிறந்தால் இராவணன் பிறந்திருக்க வேண்டும்.
பதில்: பாபர் மசூதி கீழ்தான் இராமன் பிறந்தார் என சொல்கிறார்களே, நீதிமன்றமும் நம்பிக்கை அடிப்படையில்தானே சொல்கிறது. நாங்களும் நம்பிக்கை அடைப்படையில் பார்க்கிறோம். காஞ்சி மடம் வேறு இடத்தில் வைத்துக்கொள்ளட்டும். காஞ்சி சங்கராச்சாரியர் மடம் வந்து 170 வருடம் தான் ஆகிறது. அது உண்மையாக எங்கு இருந்தது எனில், கும்பகோணமோ/ மயிலாடுதுறையிலோ இருந்தது. அந்த மடத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் மடத்தை வையுங்கள். என்ன ஆகப்போகிறது?,
கேள்வி: சங்கராச்சாரியார் கோயிலை இடிப்பது முறையா?
பதில்: அது சங்கராச்சாரியர் மடம் தானே, கோயில் கிடையாது. அங்கு யாரும் சாமி கும்பிடுவதோ, தேங்காய் உடைப்பதோ, ஆடு பலியிடுவதோ, அந்த சங்கர மடத்தில் கிடையாது. அது தமிழர்களுடைய இடம். காஞ்சியில் இருக்கக்கூடிய ஒரு இராவணன் கோட்டம். அவன் தமிழ் அரசன். அவன் இடம் அங்கிருக்கின்றது என்று நம்புகிறோம். நம்பிக்கை அடிப்படையில் தானே உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் கேட்கிறோம். இது யாருக்கும் எதிரானது அல்ல.
இராமன் பிறந்திருந்தால் இராவணன் பிறந்திருப்பார் அல்லவா, இராவணன் கற்பனை என்றால், ராமன் இராவணனிடம் கற்பனையில் சண்டை போட்டாரா? இல்லை காற்றில் வாள் வீசினாரா? ராமன் கதை உண்மை எனில், இராவணன் கதையும் உண்மையாகத்தானே இருக்க முடியும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் கேட்கிறோம்.
கேள்வி: இராவணன் இலங்கையில் தானே பிறந்தார்?
பதில்: அவர் அங்கு ஆட்சி புரிந்தார். ஆனால் இராமனின் அம்மா பிறந்த இடம் நேபாளம். பிறகு ஏன் அயோத்தி தான் பிறந்த இடம் என சொல்கிறீர்கள். ஒருவேளை, இராவணன் காஞ்சியிலிருந்து போயிருக்கலாம். இதில் என்ன தவறு இருந்த முடியும்? வரலாறு எடுத்துப் படிப்போம்.
கேள்வி: அயோத்தி ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. ஏன் திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன? என எச். ராஜா/ நயினார் நாகேந்திரன் கேட்கிறார்களே?
பதில்: அயோத்தி ஏன் மதுரையாக மாறக்கூடாது? மதுரை கெட்ட வார்த்தையா? தர்காவும் இருக்கிறது, காசிமார் பள்ளிவாசல் இருக்கிறது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது, மதுரை மாதிரி ஏன் அயோத்தி மாறக்கூடாது? அயோத்தியை விட மதுரை வரலாற்று சிறப்புமிக்கது. ”தமிழ் சங்கம் வைத்து வளர்த்த மண், சர்வதேச அளவில் வணிகம் செய்த மண். மதுரை பல கலை/ சிந்தனைகளின் இடம். கண்ணகி நீதி கேட்ட இடம்”. இது போன்று அயோத்திக்கு என்ன வரலாறு இருக்கிறது? அயோத்தி வேண்டுமானாலும் மதுரையாக மாறட்டும். அயோத்திதான் திருந்த வேண்டி இருக்கிறது, மதுரை அல்ல.
மதுரையில் சாமானிய பெண் ஒரு அரசனுக்கு எதிராக நின்று நீதி கேட்க முடிந்தது. சம்புகன் தவம் செய்தான் என்கின்ற காரணத்தினால் தலையை வெட்டினார் இராமன். சம்புகனுடைய வம்சாவளியினர் ராமனிடம் நீதி கேட்க முடியுமா? ஆனால் கண்ணகி நீதி கேட்டார். சீதையை காட்டில் தனியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளியதற்கு இராமனிடம் நீதி கேட்க வேண்டிய தேவை இருக்கிறது, கண்ணகி மாதிரி சீதை அயோத்தியில் நீதி கேட்க முடியுமா?
கண்ணகி கேட்ட கேள்விக்கு தவறு செய்துவிட்டோமே என்று மன்னன் உயிர் துறந்தான், மன்னரோடு அவருடைய துணைவியாரும் உயிர் துறந்தார். அந்த நீதியை காத்த மண் மதுரை. அதனால் அயோத்திதான் மதுரையாக மாற வேண்டுமே ஒழிய, மதுரை அயோத்தியாக மாற வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு யோக்கியதை அயோத்திக்கு கிடையாது.
கேள்வி: குறிப்பாக நீங்கள் முன்வைத்த விமர்சனங்களில் போலி தமிழ் தேசியவாதி சீமான் இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்திலும், ஜிஆர் சாமிநாதன் குறித்து அமைதிகாப்பது ஏன்? விளக்கு ஏற்றும் விசயத்தில் தமிழ்நாடு அரசு இந்துத்துவ அமைப்புகள் வருவதை முன் கூட்டியே கண்காணித்து தடுத்து நிறுத்தி இருக்கணும் என பேசியுள்ளார். உங்களுடைய பதில் என்ன?
பதில்: எல்லா பிரச்சனையும் பேசி சண்டையை போட்டு, அதற்கு எதிராக மல்லு கட்டி முடிந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி, இந்துத்துவ அமைப்புகளை கட்டுப்படுத்தியதற்கு பிறகு, சீமான் வழக்கம் போல ஊடக சந்திப்பில் கம்பு சுற்றுகிறார்.
முப்பாட்டன் முருகன் என சீமான் பேசிய சமயத்தில் எதிர்த்தோம். அரசியலோடு மத நம்பிக்கையை கலக்க கூடாது என எச்சரித்தோம். அப்போது பலர் சரியான வழிமுறை என அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே பேசினார்கள். முருகன் வீரத்தமிழர் முன்னணி எனவும், முதலில் தமிழ் தேசியத்தை பேசினார் என்ற கதை எல்லாம் வழக்கம் போல கதை விட்டார். பொதுவாக முருகனை அரசியலில் சேர்க்கும் பழக்கம் தமிழ்நாட்டுக்குள் கிடையாது. எல்லாருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கும். அல்லது கடவுள் நம்பிக்கை அல்லாதவர்கள் நாத்திகராக இருப்பர். அது அவரவர் விருப்பம் சம்பந்தப்பட்டது.
அரசியல் என்பது வெகுமக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? சமுதாய வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறோம்? என்பதை எல்லாரும் சேர்ந்து பேசுகின்ற விசயம். அந்த இடத்தில் மதம்/ கடவுள் போன்ற தனிப்பட்ட நம்பிக்கைகளை வைப்பதற்காக இல்லை.
தமிழ்நாட்டு வரலாறில் முதல் முறையாக மதத்தை கொண்டு வந்து அரசியலாக உள்ளே வைக்கிறார். மதத்தையும் அரசியலையும் கலக்கக்கூடிய ஒரு பண்பை வளர்க்கிறார் சீமான்.
கேள்வி: பண்பாட்டு ரீதியாக கடவுள் வழிபாட்டிலிருந்து நம்மை வெளியேற்றி விட்டார்கள். அதை திராவிடமும், பெரியாரும் செய்திருக்கிறது, ஆனால் அப்படி கிடையாது. குறிஞ்சி நில தலைவன் முருகன் இருக்கிறான், நாம் எல்லாருமே வழிபட்டிருக்கிறோம், அவர்களெல்லாம் நம் மூதாதையர் என கூறுகிறார். அதாவது நீங்கள் (திரு) ராவணன் மூதாதை என சொல்கிற மாதிரி சீமான் கடவுள் எல்லாமே மூதாதயர்தான் என சொல்கிறாரே?
பதில்: திராவிட இயக்கம் தமிழர்களுடைய திணை வாழ்வியல் முறையை மறுக்கவில்லை. எந்த இடத்திலும் முருகன் சிலையை உடைக்கவில்லை. பெரியார் பிள்ளையார் சிலையை எதிர்த்தார், ராமன் வழிபாடு எதிர்த்தார். இது இரண்டுமே ஆரிய படையெடுப்பாக இருந்தது. பெரியார் முருகனையோ, அம்மனையோ, ஐயனாரையோ கை வைக்கவில்லை. நாட்டார் வழிபாட்டு முறைகளை நிறுத்து என கூறவில்லை. அதெல்லாம் அதிகார மையங்கள் கிடையாது. அதிலெல்லாம் நம் பூசாரிதான் இருக்கிறார்கள். நாட்டார் கோவில்களுடைய பூசாரிகள் மாநாட்டுக்கு தன்னுடைய விடுதலை பத்திரிக்கையில் விளம்பரம் இலவசமாக போட்டார்.
தற்குறி சீமானுக்கு என்ன வரலாறு தெரியும்? பெரியார் வைதீக/ சமஸ்கிருத/ ஆரிய வகைப்பட்ட கடவுள்களை எதிர்த்தார். பார்ப்பனிய ஆதிக்கத்தால் ஏற்பட்ட சுரண்டலை எதிர்த்து சண்டை போட்டார். இது ஏதாவது சீமான் படிச்சிருந்தால் தான் தெரியும்.
கேள்வி: நாம் தமிழர் கூட்டத்தை தற்குறி என சொல்கின்றீர்கள். ஆனால் இன்னொரு பக்கம் தவெக கட்சி விஜய்- திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் ஒன்றிணைத்து ஒரு அரசியல் முன்னெடுக்கிறோம் என்று சொல்கிறவர்கள், திருப்பரங்குன்றத்தில் சீமானை விட பெரும் அமைதி காப்பது ஏன்?
பதில்: அந்த விமர்சனத்துக்கு பிறகு வருவோம். முருகன் அரசியலை கையில் எடுத்த சீமான் கூட்டத்தை ஏன் தற்குறி என சொல்கிறோம் எனில், தவறாக ஒரு அரசியலைப் பேசுவது, பொய்யின் அடிப்படையிலே பரப்புரை செய்வது, பொய்யையே உண்மை என்று நம்ப வைப்பது, தன்னை நம்பி வந்த இளைஞர்களுக்கு தவறான வரலாறு அரசியலையும் கற்று கொடுப்பது- இவற்றை ஒரு வேலையாகவே வைத்திருப்பவர் சீமான்.
அவர் முருகன் அரசியல் குறித்து நேரடியாக விவாதத்தில் எங்காவது வந்திருக்கிறாரா? எங்கேயும் விவாதத்துக்கு வரமாட்டார், அவருக்கு பயம். தமிழ் தேசியம் குறித்தோ, திராவிடம் குறித்தோ, அவர் வைக்கக்கூடிய அத்தனையுமே நாங்கள் நேருக்கு நேர் மேடையில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம். இல்லையெனில் அவர் கட்சியிலிருந்து யாராவது ஒருத்தர் வர சொல்லுங்க, வரமாட்டார்கள். அவ்வளவும் பொய். திராவிட எதிர்ப்பு பேசுவார்கள். ஆனால் ஐயா ஆணைமுத்து, ஐயா தொ. பரமசிவன், ஐயா நெடுஞ்செழியன் போன்ற பெரியாரிஸ்ட்டுகளுக்கு வீரவணக்கம் சுவரொட்டி போடுவார்கள். தமிழ் அறிஞர்கள் என அவர்கள் கூறுவதில் 90% திராவிட இயக்கத்தவர்கள்.
கேள்வி: கடந்த காலங்களில் பெரியாருக்கு நினைவேந்தல் போட்டாரே சீமான்?
பதில்: அது நிலையானது கிடையாது. அப்போது பெரியார் பக்கம் போனால் 10 பைசாவது லாபம் கிடைக்குமா? என எதிர்ப்பாத்திருப்பார். பெரியார் இந்த நாட்டார் பண்பாட்டு மேல் கை வைக்கவில்லை, நாட்டார் பண்பாட்டு முறையில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை பேசலாம். அதற்குள் இருக்கும் மூடப்பழக்கங்களை பேசலாம். அது ஏழை எளிய மக்களை கடவுளின் பெயரால் சுரண்டுகின்ற வேலை. பார்ப்பன ஆதிக்கம் இருக்கக்கூடிய இடத்தில் சாதியாகப் பிரித்து மக்களை சுரண்டும்/ இழிவுபடுத்தும் இடத்தில் தான் பெரியார் சண்டை போடுகிறார். அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆக வேண்டும் என பேசுகிறார். கோயில் நுழைவு போராட்டங்கள் முன்னெடுத்தார்.
இது சுயமரியாதை அடிப்படையில் வருகிறது. இந்த மரியாதையை குறைப்பதற்கான முயற்சியை எவன் செய்தாலும் எதிர்த்து நில், அது சாமியின் பெயரால் சொன்னால் அவனை வேண்டாம் என சொல்லு என்றார் பெரியார்.
அரசியலுக்குள் முருக வழிபாடு கொண்டு வருவது ஆர்எஸ்எஸ் அஜெண்டா. இங்கு இருக்கும் தேசிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட ஊள்ளூர் மொழியோடு தமிழை கலந்து பேசுவார்கள். ஆனால் தமிழ் மொழியில் திட்டமிட்டு சமஸ்கிருத வார்த்தையுடன் தான் பாஜகவினர் பேசுவார்கள். இதை மிக நுணுக்கமாக கவனித்தால் தெரியும். ஆர்எஸ்எஸ்-சின் கருத்துக்களை தமிழ் வயப்படுத்த தெரியவில்லை என்பதால், வடநாட்டு சித்பவன் பார்ப்பனர்களுக்கு முருக வழிபாடு பற்றி தெரியாது, ஐயனாரை பற்றி தெரியாது, பெருமாளை எப்படி வணங்குறோம் என்பது கூட தெரியாது. இங்க இருக்கக்கூடிய இதர வழிபாடு முறைகள் தெரியாது. அவர்களுக்கு மராத்திய பார்ப்பன வழிவகைப்பட்ட இந்துத்துவ முறை மட்டும் தான் தெரியும்.
உண்மையில் ஆர்எஸ்எஸ்காரன் தான் நாத்திகன். ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு வேதம் மட்டும்தான் கடவுளே ஒழிய, பெருமாளோ, சிவனோ, முருகனோ வேறு எந்த கடவுளையும் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை வணங்க மாட்டார்கள். கோவிலுக்குள் போகமாட்டார்கள்.
அவர்களுக்கு தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தமிழர்களுக்கு ஏற்ற வகையில் இந்துத்துவத்தை/ சனாதனத்தை பேசுவதற்கான வழி தெரியவில்லை. அந்த கதவை திறந்துவிட்டது சீமான். அரசியலோடு எப்படி கடவுளையும், மதத்தையும், மத நம்பிக்கையையும் கொண்டு வந்து இணைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்-க்கு வழிகாட்டியது சீமான். வடநாட்டை போல கட்சிக்கு ஒரு சாமி இருக்கிறது என அரசியல் பேசியவர் சீமான். இந்துத்துவ அரசியலை தமிழ் மொழியில் பேசியது சீமான். ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர முடியாமல் நின்றான். ஏனெனில் மேடை பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு செய்திகளை கேட்டு தன்னை அரசியல்படுத்திக் கொண்ட சமூகம் இது.
கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களோ, திராவிட இயக்கத்துக்காரர்களோ- இந்த இரண்டு பேருமே பேசுவார்கள். அதில் திராவிட இயக்கத்துக்காரர்கள் முன்னோடிகள். மிகப்பெரிய அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவர்கள். உலக அரசியலிருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் பேசுபவர்கள். அப்படி பேச்சாற்றல் ஆர்எஸ்எஸ்காரனுக்கு கிடையாது. அவனால் பரப்புரையை செய்ய முடியவில்லை. அந்த பரப்புரை வேலையை செய்தவர் சீமான். ஆர்எஸ்எஸ்க்கான இந்து தமிழ் வகைப்பட்ட ஒரு நுழைவை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் தான் முப்பாட்டன் முருகன் என்ற வேலையை தூக்கிட்டு போனார்.
கட்சிக்காரனிடம் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. மாரியம்மன் கோவில் திருவிழா எல்லா ஊர்களிலும் நடக்கிறது. அதற்கு எல்லா கட்சிக்காரனும் காசு தருவார்கள். எம்எல்ஏ, கவுன்சிலரும் பணம் தருவார்கள். அது திமுக தரும், அதிமுக தரும். அவர்களுக்கு சாமி நம்பிக்கை இல்லையா? அந்த கோயிலின் குடமுழுக்கத்திற்கு பணம் தருகிறார்கள். அவன் நாத்திகரா? இல்லை. அவர்கள் யாராவது மாரியம்மனையோ, ஐயனாரையோ, முருகனையோ பேர் சொல்லி ஓட்டு கேட்டாங்களா? அவர்கள் பக்தியை தனியாக வைத்துக்கொள்கிறார்கள். இதை கட்சிக்குள் கொண்டு வந்து கட்சி கொள்கை திட்டமாக மாற்றுகின்ற வேலையை செய்தவர் சீமான்.
மத/ கடவுள் நம்பிக்கை அரசியலோடு சேர்த்து மேடைகளில் பேசலாம், அமைப்புக்குள் அந்த பண்பாட்டை கொண்டு வரலாம் என்கிற ஒரு வழிமுறையை உருவாக்கி, இது தவறு அல்ல என்று பிஜேபிக்கு வந்த தடையை உடைத்து வழிகாட்டி கொடுத்தது சீமான். அதற்கு பின் எல்.முருகன் ’வேல்’ தூக்கிட்டு ஓடினார், அண்ணாமலை ஓடினார், இந்து முன்னணிக்காரன் ’முருகன் விழா’ நடத்தினார்கள். இதில் திமுகவும் சேர்ந்து ’முருகன் பெருவிழா’ நடத்தியது. அவர்கள் செய்த பெருந்தவறு.
ஆக அரசியலோடு மதத்தை கலக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. மதிய உணவு திட்டம் என்பது ஒரு கொள்கை திட்டம். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றியது. மிகவும் நல்லது. அதேபோல கல்லூரி திறப்பு, மருத்துவமனை திறப்பு, தொழிற்சாலை திறப்பு, பாலம் கட்டுவது, சாலை போடுவது என்பதெல்லாம் ஒரு கொள்கை திட்டம். இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவனவன் சாமி கும்பிட்டால் என்ன? கும்பிடாமல் இருந்தால் என்ன? அது அவன் தனிப்பட்ட விசயம்.
உலகத்தில் ஐரோப்பாவில் இருக்கக்கூடிய இத்தனை அரசியல் கட்சிகள் இயேசுநாதரை தூக்கி ஓட்டு கேட்கிறார்களா? அல்லது ஜப்பானில் புத்தரை தூக்கி ஓட்டு கேட்கிறார்களா? இல்லையே..
ஆக முருகன் கோவிலில் தீபம் ஏற்றனும் என சொல்லி ஒரு நீதிபதியை வைத்து பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்றால், முதலில் வீரத்தமிழர் முன்னணி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கும்பல், பிஜேபிகாரனுக்கு/ வட இந்தியாக்காரனுக்கு/ ஒரு மார்வாடி சேட்டு கம்பெனிக்காரனுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என நின்று சண்டையை போட்டு இருக்கனும். அப்போது அமைதியா இருந்துவிட்டு ஊடக சந்திப்பில் பெரிய சண்டையை போட்டு ஒரு நாடகத்தை நடத்துவார் சீமான்.
அடிப்படையில் ‘நாம் தமிழர் சீமான்’ இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பவர். அவர் பாலஸ்தீனுக்கு என்ன கூட்டம் நடத்தினார்? அவர் மனைவியை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். என்றைக்கு சீமான் பாலஸ்தீனத்திற்கு தனியான பெரிய போராட்டத்தை நடத்தினார்? இவர்கள் பிஜேபிக்கு என்ன சாதகமாக இருக்கிறதோ அந்த சாதகத்தை தான் உள்ளே கொண்டு இருப்பவர்கள். மேடையில் பேச மட்டும்தான் செய்கிறார்கள். செயலில் இல்லை.
ஒரு இனப்படுகொலைக்காக நியாயம் கேட்டு கட்சி நடத்துபவர் கடந்த மூன்று வருடமாக பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நடக்கும்போது எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை, ஆனால் மே பதினேழு இயக்கம் கடந்த 3 ஆண்டுகளில் பல போராட்டம் நடத்தியுள்ளது. அதுதான் நாம் தமிழர் கட்சிக்கும் மே பதினேழு இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடு.
சீமான் முருகன் விழா, தைப்பூசம் என வேல் தூக்கிட்டு விபூதி போட்டு ஆட்டம் ஆடுவதெல்லாம் கோமாளித்தனம். இது பிஜேபிக்காரனுக்காக அரசியல் பண்ணுவதை தவிர வேறு ஒன்றுமே கிடையாது. ஏன் தமிழ் தேசியவாதிகள் எல்லாம் விபூதி போட்டு இருக்கனுமா? அவன் கிறிஸ்டியனாக, முஸ்லிமாக, அல்லது நாத்திகனாக, பௌத்தர்களாக தமிழ் தேசியவாதிகளாக இருக்க கூடாதா? என்ன கதை!
நாம் தமிழர் கட்சிக்கும் பிஜேபிக்காரனுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கடவுள் நம்பிக்கை தனிப்பட்ட விசயம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது. பெரியாரை ஏற்றுக்கொண்ட எத்தனையோ பேர் பக்தர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தவறு கிடையாது.
தற்போது நீதிபதியை எதிர்க்கிறோம். நீதிமன்றமும் நீதிபதியும் ஒரு ஆதிக்க அரசியலை வைக்கிறார்கள். அதை நம் தலையில் திணிக்கும் வேலையாக இருந்தால் எதிர்த்துதான் ஆகனும். நீ (நீதிபதி) கடவுள் கிடையாது. நீதிமன்றம் கோவில் கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதை நீதிமன்றம் செய்யவில்லை என்றால், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு வருகிறது. வெகு மக்கள்தான் நீதிமன்றத்துக்கு அதிகாரத்தை தருகிறார்கள். அரசியல் கட்சிக்கு, சட்டமன்றத்துக்கு அதிகாரத்தை தருகிறார்கள். நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை தருகிறார்கள். இந்த அதிகார வர்க்கம் தான் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு.
மதுரையுடைய ஒற்றுமை, அமைதி மிக முக்கியம். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இதற்காக தான் கட்சி சார்பு இல்லாமல் குரல் கொடுப்போம் என கோரிக்கை வைத்தோம்.
மணியரசன் என்ன சொன்னார்? தமிழில் குடமுழுக்கு செய்யுங்கள் என திமுக அரசை எதிர்த்து நாங்கள் கேட்டோம் என்று. அந்த கோரிக்கை எங்களுக்கும் இருக்கிறது. திமுக மேல் எங்களுக்கும் கடுமையான விமர்சனம் இருக்கிறது. முருக பெருவிழா நடத்தும் பொழுது நாங்கள் கண்டித்தோம். ஆனால் இந்த பிரச்சனையும் அந்த பிரச்சனையும் ஒன்று அல்ல. தமிழ் குடமுழுக்கு அடுத்த வருடம் கூட செய்யலாம். அதனால் எந்த மனிதருக்கும் பாதிப்பு வராது. ஆனால் இன்று திருப்பரங்குன்றத்தை விட்டால் இந்து – இஸ்லாமியர்கள் பிரச்சினையாக மாற்றுவான். இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவான். இஸ்லாமியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடிய பிரச்சனைக்கான வேலையை செய்வான். அதனால்தான் திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என எச். ராஜா வெளிப்படையாக சொல்கிறார்.
இது கோயிலை காப்பாற்ற, தமிழை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான சண்டை அல்ல, இது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான சண்டை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் எத்தனை இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள்! அப்படி ஏதேனும் வந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.
திமுக அரசின் மீது விமர்சனத்தை நாங்கள் பேசி இருக்கிறோம். இந்த திருப்பரங்குன்றம் பிரச்சனை வந்தபோது கூட திமுகவுக்கு ஆதரவாகவும், அதே சமயத்தில் திசம்பர் 3 அன்று மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து, அரசு ஒரு தவறான ஜிஓ உத்தரவை போட்டுள்ளது என்று அதையும் கண்டித்து பேசிவிட்டுதான் வந்தேன். அது வேறு.
இது (திருப்பரங்குன்ற பிரச்சினை) சமூகத்தில் நிரந்தரமாக பிளவை கொண்டு வரும் விசயம். இது கட்சிக்கு அப்பாற்பட்டது. திராவிடத்துக்கு எதிராக பேசும் மணியரசன், தமிழுக்கு எதிராக இருந்த ஆரியத்தை கொண்டு வந்த பிஜேபிக்கு எதிரான செயலில், அதுவும் திருப்பரங்குன்ற பிரச்சனையில் முன் களத்தில் நின்றிருக்க வேண்டும் அல்லவா? தற்போது ஐயா.மணிரசன், சீமான் அவர்களும் அம்பலமாகி இருக்கிறார்கள். இவர்கள் திராவிடத்தை குறை சொல்வதற்காக மட்டும்தான் பேசி இருக்கிறார்களே ஒழிய, ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக சண்டை போடுவதற்கு தற்போது தயாராக இல்லை.
நான் ஒரு விசயத்தை இச்சமயத்தில் நினைவுபடுத்துகிறேன். 2016-ல் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்பதற்காக பெரும் போராட்டம் நடந்த பொழுது, அப்போது தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அந்த கலவரத்தில் உதிரி உதிரிகளாக ரவுடிகள் மக்களை அடிக்கிறார்கள். அப்போது கர்நாடகாவில் இருக்கிறவர்கள் எங்களுக்கு சொன்னது, ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த ரவுடி கும்பல்களுக்கு உணவு கொடுத்து, அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலை நடத்தினார்கள் என்று. அந்த சமயத்தில் கர்நாடகாவில் பல பேருந்துகள் எரிக்கப்பட்டது. (அதற்கு முன்பு கலவரத்தை விட மிக மோசமாக நடந்தது. அதெல்லாம் வெளியில் நிறைய வரவில்லை). ஆர்எஸ்எஸ் வந்து இறங்கி வேலை செய்ததை அங்கிருந்த செயல்பாட்டாளர்கள் சொன்னார்கள்.
அப்போது நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் அலுவலகம் முற்றுகை அறிவித்தோம். எல்லா அமைப்புகளையும் அழைத்தோம். மே 17 இயக்கம் நடத்தும் போராட்டத்தில் பெரியாரிய அமைப்புகள், மார்க்சிய அமைப்புகள், அம்பேத்கரிய அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள் எல்லாருமே பங்கெடுத்தனர், ஆனால் தமிழனுக்காக எனச் சொன்ன பிறகும் கூட ஐயா மணியரசனுடைய அமைப்பு பங்கெடுக்க வரவில்லை என சொல்லி விட்டார்கள். இது வரலாறு.
இவர்களுக்கு ஆர்எஸ்எஸ் மேல் விமர்சனம் கிடையாது என்பதை தவிர வேறு ஒன்றும் கிடையாது. திராவிடத்தை-பெரியாரை எதிர்க்கிறேன் என சொல்லி வீம்பாக சாதாரண விசயங்களுக்கெல்லாம் உடனே பெரியாரை திட்டி பெரிய கட்டுரை எழுதுவார்கள். நரம்பு புடைக்க உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ், பிஜேபி-க்கு பின்வாங்குவார்கள்.
திமுக சரியில்லை என குறை சொல்லுவதன் மூலம் தங்களை யோக்கியனாக காண்பிக்க முயல்கிறார்கள். அதுவல்ல அரசியல். எது சரியோ அதை முன்னெடுத்து நின்று சண்டை போடனும். அதுதான் விசயம். பெரியார் தவறு என பேசும் இவர்கள், பெரியாரை விட அதிகமாக சண்டை போடனும் இல்லையா! இவர்களுக்கு இந்திய அரசு, ஆர்எஸ்எஸ், இந்துத்துவ பார்ப்பனர்களுக்கு எந்த பங்கமும் வராமல் இருக்கக்கூடிய ஒரு கழுதைப்புலி தமிழ் தேசியம்தான் அவங்களுடையது.
கழுதைப்புலி தமிழ்த்தேசியம் என்பது புலியை போல கர்சித்து வேட்டையாடுகின்ற விலங்காகவும் இருக்காது, கழுதையை போல பொதி சுமக்க பயன்படுத்தவும் இருக்காது. தமிழ் தேசியம் பேசுவார்கள்- அது தமிழனுக்கும் பயன்படாது, தமிழுக்கும் பயன்படாது. அது வேறு யாருக்கோ (பாஜக, ஆர்.எஸ்.எஸ்) பயன்படக்கூடிய ஒரு அரசியலாகத்தான் இருக்கும்.
கேள்வி: திருப்பரங்குன்றத்தில் பெரும் அமைதியாக விஜய் இருக்கிறார். இப்படி பேசாமல் எப்படி கடந்து போக முடியும்?
பதில்: அவர்கள் தமிழ்நாட்டினுடைய பல உரிமைகளுக்கு பேச வேண்டியிருக்கிறது. பல உரிமைகள் சார்ந்து விளக்க வேண்டியிருக்கிறது. தவெக கட்சி தமிழ் தேசியம், திராவிடம், பெரியாரை ஏற்றுக்கொள்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி. இதைப்பற்றி உங்கள் கட்சிக்காரர்களுக்கு (தவெக) விளக்குங்கள். வெளிப்படையாக பேசுங்கள். அவர்களை தயார்ப்படுத்துங்கள். இனியும் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
கரூர் விசயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் நின்று, ஒரு தலைவனாக அந்த மக்களை பாதுகாக்க கூடிய வேலைகளை செய்திருக்க வேண்டும் என்ற முதல் விமர்சனம் வைத்தது மே பதினேழு இயக்கம். அங்கு 10,000/15,000 மக்களுடைய செருப்புகள் கிடந்தது, ஆனால் அங்கு அந்த அளவுக்கு தண்ணீர் பாட்டில் கிடையாது என்பதை நாங்கள் அந்த கிராமங்களுக்கு சென்று உண்மையை தேடி கள ஆய்வு செய்து வெளிப்படுத்தினோம். தவெக செய்த தவறுகளை அம்பலப்படுத்தியது மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகளும் களத்தில் நின்று பார்த்தோம். உண்மையை வெளியே கொண்டு வந்தோம். அதுவரைக்கும் போலீஸ் மேல் இருக்கக்கூடிய தவறு மட்டுமே மையப்படுத்தி கொண்டிருந்தால், ஒரு கூட்டத்தை நிர்வாகம் பண்ணக்கூடியவருடைய பொறுப்பு என்கிற கேள்வி இருக்கிறது, ஒரு தலைவனுடைய பொறுப்பு என்ன இருக்கிறது? என்ற இதை எல்லாம் மாறி ஒரு சூழல் வர வேண்டும். நமக்கு பெரிய பிரச்சனை என்னவென்றால் கோட்பாடு பேசுகிறேன் எனச் சொல்லிக்கொண்டு பெரியாரை எதிர்த்து பேசி கொண்டிருப்பவர்களை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறோம்.
முதலில் எதிர்க்க வேண்டியது: கோட்பாடு ரீதியாக பெரியாரை எதிர்ப்பதை ஆர்எஸ்எஸ் செய்கிறது. அதே கொள்கையை சீமான் கொண்டிருக்கிறார். சீமானுக்கு துணையாக மணியரசன் அவர்கள் இதே வேலையை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர்களை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
இவர்கள் தமிழ் தேசியவாதிகள் கிடையாது. இவர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தமிழ் தேசியத்தினுடைய எந்த கோட்பாட்டை பற்றியும் அவர்களால் விளக்கவே முடியாது. ஏனெனில் தமிழ் தேசிய கோட்பாடு அவர்களுக்கு தெரியாது. தேசிய இன உரிமை பற்றி விளக்கமாக பேசத் தெரியாது. அவர்கள் ஒரு விருப்பத்தின் அடிப்படையில் தோன்றுவதெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமான அணுகு முறைகள் கிடையாது. அதைத்தான் முதலில் இன்றைக்கு சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில், தமிழ்த்தேசியம் குறித்து இளைஞர்களுக்கோ அல்லது மக்களுக்கோ தவறான கருத்தை மனதில் பதிய வைக்கக்கூடாது. அந்த உண்மையைத் தெரிந்துக்கொள்ள விரும்பி வருபவனிடம் ஒரு தவறான விசயத்தை கற்றுக்கொடுத்தோம் எனில், அவனை மாற்றவே முடியாது.
இந்த இடத்தில்தான் நான் (திரு) விஜயின் அரசியலுக்கும், நாம் தமிழர் அரசியலுக்கும் வேறுபடுத்திப் பார்க்கின்றேன். அவர்கள் தவெக கட்சி இளைஞர்கள்) எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள். அதை என்றைக்காவது கற்றுக் கொடுத்து விடலாம். நாதக கட்சி இளைஞர்கள் தவறாக கற்று கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை மாற்ற முடியாது. ஒரு ஆர்எஸ்எஸ்காரனை நீங்கள் மாற்ற முடியாது.
கேள்வி: விஜய்யை விட சீமான் ஆபத்தானவரா?
பதில்: தமிழ் தேசியத்திற்கு ஆபத்தாக பார்க்கிறேன். விஜய் ரசிகர்களாக இருக்கிறவர்கள் நாளைக்கு தவெக கட்சியை விட்டு வெளியே வந்தால் அவர்களை நாம் அரசியல் படுத்தலாம். நாதக. திட்டமிட்டு ஒரு தவறான அரசியலை சொல்லி கொடுக்கிறது. இது யாருக்கோ பயன்பட்டு வருகிறது. அதுதான் பெரிய ஆபத்தாக மாறும் என்ற கவலை வருகிறது என்பதை மே 17 இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
விஜய் தொடர்ச்சியாக பேசட்டும், அரசியல் நிலைப்பாடு எடுக்கட்டும். எங்களுக்கு (மே 17) இதுவரைக்கும் அவர் எடுத்த நிலைப்பாட்டில் திருப்தி கிடையாது. விரும்பிய உடனே முதலமைச்சர் ஆவேன் என்பதற்காக மட்டும் அரசியல் செய்யக்கூடாது. தன்னுடைய தொண்டர்களை அரசியல்படுத்தி, அதன் மூலமாக ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் (தவெக) ஆட்சிக்கு வந்தாலும், விஜய் செய்யக்கூடிய திட்டங்கள் மக்களைப் போய் சேர முடியும். மக்களிடமும் மாற்றம் வரும். தவெக தொண்டர்களை அரசியல் படுத்தாமல் விஜயால் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியாது. அதை இன்னொரு சமயம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. மீண்டும் சந்திப்போம். நன்றி!
நெறியாளர்: வேறு ஒரு சமயத்தில் நிச்சயமாக பேசுவோம். நிறைய விசயங்களை பகிர்ந்தீர்கள். நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி!