‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’
– மேதகு வே.பிரபாகரன்
சமூகத்தின் சாதிக்கட்டமைப்பில் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட பட்டியலினப் பெண்களுக்கு விடுதலை என்பது கனவல்ல என்பதை நினைவூட்ட வந்தவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவதை தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டு போராடிய இந்தியாவின் முதல் பட்டியலின தமிழ்ப்பெண் அன்னை மீனாம்பாள். தேசிய அளவில் பட்டியலின பெண்களை ஒன்று சேர்த்து அமைப்பாக மாற்றுவதற்கு போராடிய முக்கிய போராளிகளில் அன்னை மீனாம்பாளும் ஒருவர்.
இன்று உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சம உரிமையும் 50% இட ஓதுக்கீடு என சட்டமும் இருக்கிறது. பெண்கள் பொதுவெளியில் நுழைவதற்கு தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உழைத்ததினால் கிடைத்த அறுவடை இது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் ஒரு பட்டியலின பெண் பொதுவெளிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் அன்று பெண்கள் பின்தங்கி இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுடன் தடைகளை தன் கல்வியால் தகர்த்தவர் அன்னை மீனாம்பாள். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை பெண்களுக்கு புரியவைத்து தனது பொது நல சிந்தனையால் அவர்களை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திய பெண் சிங்கம் என்றே அன்னை மீனாம்பாளை சொல்லலாம்.
இவர் அன்றைய மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் ஆதிதிராவிடப் பெண் உறுப்பினர். 1942-ஆம் ஆண்டில் தென்னிந்திய பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் (Schedule Castes Federation) முதல் பட்டியலின பெண் தலைவராகவும் விளங்கியவர்.
25.12.1927-ல் மனுஸ்ம்ரிதியை எரித்து உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர் “தீண்டாமையை ஒழிப்பது என்பது ஆண்களை விட பெண்களின் கையிலேயே உள்ளது” என்றார். அந்த வாக்கியத்திற்கு உயிர் கொடுத்தவர் அன்னை மீனாம்பாள் எனலாம்.
1904-ம் ஆண்டு பர்மாவில் உள்ள ரங்கூன் எனும் இடத்தில் பிறந்த அன்னை மீனாம்பாளின் தந்தை வேலூரை சேர்ந்தவரும் மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்த வாசுதேவப்பிள்ளை. தாய் மீனாட்சி அம்மையார். அன்றைய காலனித்துவ இந்தியாவில் நிலவிய ஆதிக்க சாதி கட்டமைப்பின் ஒடுக்குமுறையில் இருந்து வெளியேற தமிழ்நாட்டில் இருந்து பர்மாவின் இரங்கூனிற்கு குடிபெயர்ந்தது இவர்கள் குடும்பம். இரங்கூனில் வணிகம் செய்த இவர் தந்தை, அங்கு ‘மதுரை பிள்ளை உயர்நிலைப்பள்ளியை’ நிறுவினார். இப்பள்ளியில்தான் மீனாம்பாள் பயின்றார். பின்னர் இரங்கூன் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow of Arts) வகுப்பை 1917-ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை கற்றிருந்தார்.
இவரது தாத்தா பெ.ம. மதுரைப்பிள்ளை புகழ்பெற்ற பட்டியலினத் தலைவர்களில் ஒருவர். அனைவராலும் அறிப்பட்ட நல்ல பண்பாளர். இவரது தந்தை சென்னை மாநகராட்சியின் முதல் பழங்குடியின உறுப்பினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட இயக்கங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் இவரது தந்தை. இதனால் இயக்கங்களையும் போராட்டங்களையும் நன்கு புரிந்துகொண்டவராக வளர்ந்தார் அன்னை மீனாம்பாள்.
தனது 16-வது வயதில் அப்போதைய மெட்ராஸுக்கு வந்த அன்னை மீனாம்பாள், 1918-இல் சிவராஜ் என்ற பட்டியலின இயக்கத் தலைவரை மணந்தார். அந்த காலகட்டத்தில்தான், நீதிகட்சியினால் ஈர்க்கப்பட்ட அன்னை மீனாம்பாள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். மேலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டு பணியாற்றத் தொடங்கினார்.
1928-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சைமன் கமிசன் குழுவை ஆதரித்து பேசியது அரசியலில் அவரது துவக்கபுள்ளியாக இருந்தது. உயர்சாதி இந்துக்கள் அதில் இந்தியாவின் மீதான அக்கறையின்மையே இருப்பதாக கூறி சைமன் கமிசனை நிராகரித்தனர். ஆனால், அதேவேளை அன்னை மீனாம்பாள் பட்டியலின உரிமைகளை மீட்டெடுக்க சைமன் கமிசனை ஆதரித்தார்.
1929-ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மாநாட்டை ஆதரித்து அண்ணல் ஆம்பேத்கரின் பேச்சுக்களை தென்னிந்திய மக்கள் அறியும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை பரப்பினார். அண்ணல் அம்பேத்கரே “எனது அன்பான சகோதரி” என்று அழைத்த பெண் ஆளுமை மீனாம்பாள்.
1937 ஆகஸ்ட் 10-ல் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி பேசியதை தொடர்ந்து தமிழ்நாடெங்கும் தமிழ் பற்றாளர்களால் தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் சென்னை நகரை மையமாகக் கொண்டபோது மறியல், கைது என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றது. அதுவரை குழுவாகப் பேசி முன்னெடுக்கப்பட்ட போராட்டம், மக்கள் திரள் போராட்டமாக மாறியதற்கு அன்னை மீனாம்பாளும் முக்கிய காரணியானார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் 13.11.1938-ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மையார் என பெண் ஆளுமைகள் பங்கேற்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டின் ஒருங்கிணைப்பில் பெரும் பங்காற்றியவர் மீனாம்பாள். சென்னை நகரில் இருந்த பெண்களை சந்தித்து உரையாற்றி மாநாட்டிற்கு ஒன்று திரட்டியதில் அவர் பங்கு முதன்மையாயிருந்தது. இம்மாநாட்டில் கொடி ஏற்றிய பெண் ஆளுமை மீனாம்பாள். முதன் முதலில் அன்னை மீனாம்பாள்தான் அன்று ‘பெரியார்’ எனும் பட்டத்தை தந்தை பெரியாருக்கு வழங்கினார்.
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்த மீனாம்பாள், 23.9.1944-ல் சென்னையில் அக்கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தாக 1945 மே 6-ஆம் நாள் பம்பாயில் கூட்டப்பட்ட அனைத்திந்திய பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் தலைமை வகித்தார்.
பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல் சமூகத்திற்காகவும் அவர்கள் மேம்பாட்டிற்காகவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். அவர்களின் கல்வி, ஒழுக்கம், நம்பிக்கையை மேம்படுத்த ஆவனசெய்தார். தீண்டாமை, சாதிவெறி, ஒடுக்குமுறை இவற்றை எதிர்த்து பெண்கள் போராடி தங்களை விடுவித்துக் கொண்டு வெளிவரவேண்டும் எனவும் அறிவுறித்தினார். அதேபோன்று தானும் அதை உணர்ந்து பின்பற்றி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்தவர் அன்னை மீனாம்பாள். சமூகத்தலைவராக மட்டுமில்லாமல் அன்னை அவர்கள் ஆனரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர், தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்), சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை, பதவிகளை வகித்தார்.
1992 நவம்பர் 30-ஆம் நாள் தனது 87-ஆம் வயதில் இயற்கை எய்தினார் அன்னை மீனாம்பாள். தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பல சாதிய கட்டமைப்பு பின்புலம் கொண்ட அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் பட்டியலின பெண்ணாக இருந்து தமது சமூகத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் அவர். பெண்களுக்கான உரிமையை அவர்களுக்கு புரியவைத்து கல்வி ஒன்றால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்து சமநிலை அடையமுடியும் என்று முழங்கியவர்.
“தந்தை பெரியார் நமக்கு வழிகாட்டுகிறார், பகுத்தறிவின் தந்தையாக இருக்கிறார். எனவே அவருக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்குவோம்” என்று உரைத்தவர் அன்னை மீனாம்பாள். அண்ணலின் சகோதரியாக சமூகநீதிக் கோட்பாட்டை வலியறுத்தியவர். சாதி ஒழிப்பு, இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு என்ற தமிழ்த்தேசியத்தின் உண்மைக்கூறுகளை அன்றே வித்திட்ட அன்னை மீனாம்பாளை நினைவு கூறுவோம்.