டில்லியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்
நாட்டின் தலைநகரிலேயே பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக இருப்பது நம்மையெல்லாம் தலைகுனிய வைக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் போல் பல மாநிலங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
டெல்லியில் உள்ள சங்கம் விகார் பகுதியில் வசித்து வருபவர் சமித் அகமது. இவரது மகள் 21 வயதான ராபியா சைஃபி. புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவரான ராபியா சைஃபி, நான்கு மாதங்களுக்கு முன்புதான் குடிமையியல் பாதுகாப்பு அதிகாரியாக, லஜ்பத் நகர் ஆட்சியர் அலுவலகத்தில் சேர்ந்துள்ளார்.
தினமும் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சபியா வழக்கமாக மாலை 8 மணிக்குள் வீடு திரும்பிவிடுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி, வேலைக்குச் சென்றவர், மாலை 8 மணியளவில் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு செய்துள்ளார். ஆனால், அதை அவரின் குடும்பத்தார் கவனிக்கவில்லை. பிறகு,ராபியா சைஃபியின் அழைப்பை பார்த்து அவருக்கு அழைத்தப்போது, கைபேசி அடைந்துள்ளது. இதனால், கலக்கமடைந்த பெற்றோர், ராபியா சைஃபி பணியாற்றும் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து சரியான விளக்கம் தரப்படவில்லை. வருகைப் பதிவேட்டைப் பார்க்கவேண்டும் எனக் குடும்பத்தார் கூறியபோதும் அங்கிருந்த காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, இரவு 10 மணி அளவில், ராபியா சைஃபியின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, “ஒரு வழக்கு சம்பந்தமாக, ராபியா சைஃபி உயரதிகாரியுடன் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை” என ஆறுதல் கூறியுள்ளனர். இதனால், நிம்மதியடைந்த ராபியா சைஃபியின் குடும்பத்தினர், அவர் வந்துவிடுவார் எனக் காத்திருந்தனர். ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு காவலர்கள், ராபியா சைஃபியின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். இதை கேட்டதும் அதிர்ச்சி ஏற்பட்டு என்ன செய்வது அறியாமல், ஒன்றும் புரியாமல் இருந்த ராபியா சைஃபிவின் பெற்றோர், பின்னர் கதறித் துடித்து அழுதுள்ளனர். என்ன நடந்தது? ராபியா சைஃபிக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் ராபியா சைஃபிவை அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு மேலும் அதிர்ச்சி, சபியாவின் உடல் முழுமையாக சிதைக்கப்பட்டிருந்தது.
ராபியாவின் அண்ணன் மோனிஸ் சைஃபி வெளியிட்ட காணொளிப் பதிவில், “என் தங்கையின் உடல் 50 வெட்டு காயங்கள் பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன, பெண்ணுறுப்பு மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், கொலை நடந்த அதேநாள் ஹரியான மாநிலத்தில் உள்ள சுர்ஜாகுந்த் காவல் நிலையத்தில் நிஜாமுதீன் எனும் 25 வயது நபர் சரணடைந்து, “நான் ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்தவன். நான்தான் ராபியாவை கொலை செய்தேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். “ராபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம்” எனக் கூறினான். மேலும், “ராபியாவின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால், நான் ராபியாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராபியாவை கொன்று உடலை சுர்ஜாகுந்த் ஆற்றோரம் உள்ள புதர்ப் பகுதியில் வீசிச் சென்றுவிட்டேன்” எனக் கூறியுள்ளான்.
இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள ராபியாவின் குடும்பத்தினர், “போலீஸ் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இது திட்டமிட்ட கொலை. என் மகளை நான்குக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர். திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல. நிஜாமுதீனுக்கும் ராபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் காவல்துறை, அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. இவனுடன் இன்னும் இருவருக்கு ராபியாவின் கொலையில் சம்பந்தம் இருக்கிறது. அவர்கள் ராபியாவுடன் பணியாற்றியவர்கள். இந்த இருவர் குறித்த எங்கள் புகாரை ஏற்க சங்கம் விகார் காவல்துறை மறுத்துவிட்டது. அவர்கள் இப்போது தலைமறைவாகிவிட்டனர். ராபியா வழக்கில் சரணடைந்த குற்றவாளியை ஒரு வாரம்வரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதற்கு காவலர் தரப்பில் உரிய விளக்கம் தரப்படவில்லை” என்றார்.
மேலும் ராபியாவின் அப்பா இதுகுறித்து கூறுகையில், ராபியா அவர்கள் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். “என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படி, அந்த அறைக்கு லஞ்சப் பணமாக தினமும் 4 லட்சம் வரை வருவதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார்” என்கிறார். இதில் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என பேசும் அரசியல் கட்சிகள் யாரும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. என்ன ரகசியம் என்று வெளிப்படுத்தவும் சிபிஐ விசாரணை நடத்தவும், கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், ராபியா சைஃபியின் பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் செய்கின்றனர்.
தலைநகர் டெல்லியை உலுக்கிய நிர்பயா கொலைக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த ராபியாவின் வழக்கு. ஆனால், நிர்பயாவின் வழக்குக்கு கிடைத்த ஆதரவு கொஞ்சம்கூட சபியாவுக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி பெரிய எந்த ஊடகமும் செய்திகள் போடவில்லை. ஏன் இவள் இஸ்லாமிய பெண் என்பதாலா? ஆதிக்க சாதியினருக்கு நடந்த சம்பவம் என்றால் டெல்லி தலைநகர் பற்றி எரியும், போராட்டம் வெடிக்கும், விவாதம் எழும், ஆனால் தலித் பெண்ணோ அல்லது சிறுபான்மை பெண்ணாக இருந்தால் அமைதி காப்பது எதனால்?
பேட்டி பசாவ் பேட்டி பதாவ்’ – பெண் குழந்தைகளைக் காப்போம் என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்தில் இந்த அவலம் நடந்திருக்கிறது. இப்போ எங்கே போனது மோடி/யோகி ஆதித்யநாத்/கெஜ்ரிவால் அரசாங்கம்.
இது போல் பல சம்பவங்கள் அரங்கேறியது அது ஆசிபா, ஆத்ராஸ் மற்றும் உன்னாவ் வழக்குகள் ஏராளம். 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது பெண், கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை துண்டித்த கொடூர செயல் நடந்தது உபி-யில்தான். இதுபோன்ற பெண் குழந்தைகள், சிறுமி மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையும் கொடுமைகளும் தொடர்கதையாக இருப்பது, நிர்பயா வழக்கிலிருந்து அரசு எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வளவு ஏன் ஐஐடியில் கூட ஒரு இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுவரை என்னவென்று தெரியவில்லை. ஏன்னெனில் இந்துத்துவ கோட்பாடுகள் குறித்து வேலை செய்யும் அரசாங்கம் இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஒன்றிய அரசாங்கம் பெண் பிள்ளைகள் கல்வி, ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு முக்கியமல்லாது ராமர் கோயில் கட்டவும், புதிய நாடாளுமன்றம் கட்டவும் நேரம்/பணமும் செலவிடும்.
பெண்கள் மீதான குற்றங்கள் முறையாக விசாரிக்கப்படுவதும் இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தருவதும் இல்லை. குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். இதனாலேயே பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கின்றன. மேலும் இசுலாமிய பெண் என்பதால் இக்கொலை இந்திய ஊடகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை என்பது அவமானத்திற்குரியது. நிர்பயா சட்டம் கொண்டு வந்த பின்பும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, தண்டனையால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பதையே காட்டுகிறது. பெண்களை மதிக்கும் வகையில் சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவது மட்டுமே தீர்வை வழங்க முடியும்.