தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் நடத்தப்படுகிறது. இதற்கு காரணம் மற்றப்பெண்களைக் காட்டிலும் தலித் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, பெரும்பாலும் முறைசாரா தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் இருக்கின்றனர்.
இந்த முறைசாரா வேலைகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையும் ஒன்றிய அரசிடம் இல்லாததால் இவர்களுக்கான பணி பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கேள்விக்குறியாகவே உள்ளன. இதனால் பாலியல் வன்முறை பற்றியான புகார்களை அவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்வதும் குறைவாகவே உள்ளது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெண்கள் அமைதியாக இருந்து விடுகின்றனர்.
நிலவுடைமையாளர்களால் நடத்தப்படும் பாலியல் வன்முறைகள்
கிராமப்புறங்களில் நிலவுடைமையாளர்களால் சாதிய அடக்குமுறையானது, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறையாக நடத்தப்படுகிறது. ஆந்திராவில், பாலியல் வன்முறை என்பது கொத்தடிமைக் கூலிகளின் வேலைகளில் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்திருந்தன என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
இதன் மிக மோசமான வடிவமே, தெலுங்கானாவில் பின்பற்றப்பட்டுவந்த ’அடி பாபா’ (Adi Bapa) என்கிற நடைமுறை. இதன்படி, திருமணத்துக்குப் பின் தனக்கு கீழ் வேலை செய்யும் வேலையாளின் மனைவியுடனான முதல் இரவு நிலவுடைமையாளருடன் நடக்கும் வழக்கம். அதாவது, வேலையாளுடைய மனைவியின் ‘கன்னித்தன்மை’யினை தன்னுடையதாக்கிக் கொள்வதற்கான உரிமை நிலப்பிரபுவிடம் இருந்திருக்கிறது. “இந்தப் பழக்கம் தற்போது பின்பற்றப்படுவது இல்லை என்றாலும், தனக்கு கீழ் வேலை செய்யும் தலித் பெண்களின் உடலின் மீது தனக்கு உரிமை இருக்கிறது என்ற நிலப்பிரபுக்களின் மனநிலை மறையவில்லை” என்கிறார் க்ளரிண்டா ஸ்டில். (Dalit Women: Honour and Patriarchy in South India. P. 14)
ஹாத்ராசில் நடைபெற்ற வன்கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சாதியான ’தாக்கூ‘ர்’ சாதியினரிடம் தான் உத்திரப்பிரதேசத்தின் 50%ஆன நிலம் இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் அவர்களது மக்கள் தொகை என்பது 7-8% மட்டுமே. Economic & Political Weekly-இல் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, உத்திரப்பிரதேசத்தின் 20% பணக்காரர்கள் தாகூர் சமூகத்தினர் தான்.
இது உத்திரப்பிரதேசத்தின் நிலை மட்டும் கிடையாது. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 71% ஆன தலித் விவசாயக் கூலிகள் வேறொருவருடைய நிலத்தில் தான் வேலை செய்கிறார்கள். விவசாயக் கணக்கெடுப்பின்படி, 58.4% தலித்துகளிடம் எந்தவிதான நிலமும் கிடையாது. குறிப்பாக, தலித்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அரியானா, பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் ஏறத்தாழ 85% தலித்துகளிடம் நிலம் கிடையாது. இந்த நிலவுடைமை சாதிகள் ஒரு கிராமத்தின் சமூக-பொருளாதார-அரசியல் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள்.
மற்ற எல்லாவகையான சாதிய வன்முறைகளை விடவும் பாலியல் வன்முறை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில், பாலியல் வன்முறை அந்தப் பெண்ணின், குடும்பத்தினுடைய, அவரது சாதியினுடைய கௌரவத்தை சிதைப்பதாக பார்க்கப்படுகிறது. அதே வேலையில் அவரது கணவர் மற்றும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் உறவுகள் அந்தப் பெண்ணை பாதுகாக்கத் தவறியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
பார்ப்பனியம் இந்திய சமூகங்களிடையே புகுத்திய புராணம். சாஸ்திரம், வேதங்கள் ஆகியவை பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை கற்பிக்கிறது. பெண்களை தீட்டானவர்களாக, ஆணின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக பார்ப்பனியம் கற்பித்து இருக்கிறது. இதற்கு மனுதர்ம நூல் துணை போனது. இந்நூல் பெண்களை இழிவு படுத்துவதோடு, உணர்வற்ற பொருட்களாக பெண்களை சித்தரிக்கிறது. இந்த சித்தரிப்புகளுக்கு பின்பு பெண் போக பொருளாக, நுகர்வு பொருளாக பார்க்கப்படும் பார்வை விழுந்ததற்கு காரணம்.
நிலப்பிரபுக்களாக இருந்த பண்ணையார்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அடிமையாக நடத்தியதற்கும், தங்கள் பண்ணையில் வேலை செய்த தலித் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கும், மனுவின் விதிகள் அவர்களுக்குள் வேரூன்றப்பட்டதே காரணமாகிறது. ஆணாதிக்கச் சிந்தனையை வளர்த்து விட்ட பார்ப்பனிய சிந்தனையான மனுசாஸ்திரத்தைப் பின்பற்றியதால் தனக்கு கட்டுப்பட்டவளாக, தனது உடைமையாக தன் பண்ணையில் வேலை செய்த பெண்களை பார்த்தனர்.
இந்த தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையின் மூலம், ஆதிக்க சாதி அவர்களது அதிகாரத்தை, தலித் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறது. பெண் விவசாயக் கூலிகள் அந்த நிலங்களில் நின்று வேலை செய்வதையே, அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக நிலப்பிரபுக்கள் பார்க்கிறார்கள்.
“தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை எந்த அளவுக்கு வழக்கமாக்கப்பட்டிருக்கிறது என்றால், உழைக்கும் தலித் பெண்களின் உடலை உயர்சாதி ஆண்கள் அவர்களது உரிமையாகப் பார்க்கிறார்கள்” என்று பல்வேறு ஆய்வுகளைக் குறிப்பிட்டு க்ளரிண்டா ஸ்டில் என்ற ஆய்வாளர் ‘Dalit Women, Rape and the Revitalisation of Patriarchy?’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். பொருளாதார நிலைத்தன்மையினை எட்டாவிட்டாலும், முடிந்த அளவு வெவ்வேறு துறைகளில் இருக்கும் கூலி வேலைகளை நோக்கி தலித்துகள் செல்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
இதன் மூன்றாவது தொடர்ச்சி அடுத்தக் கட்டுரையில் காண்போம்…
இக்கட்டுரையின் முதல் பாகம் (தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை) படிக்க விரும்பும் தோழர்களுக்கு கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
https://may17kural.com/wp/sexual-violence-against-dalit-women-part1/