மதச் சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடத்துவது ஏற்புடையதல்ல! கடவுள்/மத நம்பிக்கையை பரப்புவது இந்து சமய அறநிலையத் துறையின் பணியல்ல! பார்ப்பனரல்லாதோரை அர்ச்சகராக்குவதற்கும், அன்னை தமிழில் வழிபாடு நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024’ பழனியில் இரண்டு நாட்களாக நடைபெற்றுள்ளது. ஆன்மீகத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாட்டை நடத்திய விதமும், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில தீர்மானங்களும், திராவிடத்தின் வழிவந்த – ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும். மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாடு நடத்துவது ஏற்புடையதல்ல. திமுக அரசின் இத்தகைய போக்கை ‘மே பதினேழு இயக்கம்’ கண்டிக்கிறது.
மன்னர்கள் காலத்தில் சமூகத்தின் அதிகார மையமாக விளங்கிய, மக்களின் உழைப்பை செல்வத்தை சுரண்டி கட்டப்பட்ட கோவில்களில் செல்வத்தை குவித்து, அதன் நிர்வாகத்தையும், அதன் மீதான உரிமையையும் பார்ப்பனர்கள் கையில் அளிக்கப்பட்டது. இந்நிலையை மாற்றி, கோவில் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் கையிலிருந்து அனைத்து சாதி-சமூகத்தினர் நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ‘வரவு-செலவு கணக்கு கவனிப்பது, சொத்துக்களை நிர்வகிப்பது, உள்ளிட்ட பொறுப்புகளை மேற்கொள்ள நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்து அறநிலையத்துறை’ என்பது வரலாறு. அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் முறைகேடுகள் நடக்காதவண்ணம் கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதும், கோவில் வருவாயை மேலாண்மை செய்வதுமே இந்தத் துறையின் நோக்கம். மாறாக ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வது ஒரு அரசுத் துறையின் பணியல்ல. அந்த வகையில் தமிழ்நாடு அரசு நடத்திய ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ அரசின் மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமான செயலாகும்.
முருக வழிபாட்டை வளர்த்தெடுப்பதையும், பரப்புவதையும், முருகனடியார்களை ஒருங்கிணைப்பதையும், முருக வழிபாட்டு நெறிமுறைகளை உலகறிய பரப்புவதையும் நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. அறநிலையத் துறையின் பணி இதுவல்ல என்றாலும், தந்தை பெரியாரின் வழிவந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், தந்தை பெரியாரின் திராவிட கொள்கைகளுக்கு எதிரான செயல்பாட்டினை முன்னெடுத்துள்ளது முற்றிலும் முரணானதாகும். ஆரிய பார்ப்பனிய அதிகார மையமா கோவில்களில் சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது வேறு, கடவுளின் பெயரால் ஆன்மீகத்தை வளர்த்தெடுத்து சமூகத்தை பின்னோக்கு இழுத்து செல்வது வேறு என்பதை திமுக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.
மாநாடு ஆரிய பார்ப்பனர்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படாவிட்டாலும், ஆரியப் பார்ப்பனிய அதிகாரத்திலிருந்து தமிழ்க்கடவுள் என்று கருதப்படும் முருகனின் பழனி உள்ளிட்ட கோவில்களை விடுவிக்கும் பொருட்டை இம்மாநாடு உள்ளீடாக கொண்டிருக்கவில்லை. அதேவேளை, அர்ஜூன் சம்பத் போன்ற ஆரிய பார்ப்பனியத்திற்கு நெருக்கமான இந்துத்துவ பயங்கரவாதிகளை அழைத்து அருகில் அமர வைத்துக்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல் பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. மேலும், பழனி கோவில் குறித்த உண்மை வரலாற்றை கூறும் நூலை மாநாட்டு வளாகத்தில் விற்பனை செய்ய தடை செய்ததும், திராவிடர் விடுதலை கழகத் தோழர்களை முன்கூட்டியே கைது செய்ததும் ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
அதேபோல், மாநாட்டு தொடக்க நிகழ்வில் காணொலி வாயிலாக உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், சாதிய பாகுபாடின்றி அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதையும் தமிழ் மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது வரவேற்புக்குரியது. ஆனால், அவற்றை மாநாட்டு தீர்மானங்கள் முன்மொழியாதது ஏமாற்றத்திற்குரியது. மாறாக, தீர்மானம் எண் 8, “கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” மற்றும் தீர்மானம் எண் 12, “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியது கடும் கண்டனத்திற்குரியது.
மதச் சார்பற்ற அரசு ஆன்மீகப் பரப்புரையில் ஈடுபடுவதை விடுத்து அறநிலையத் துறையின் பொறுப்புகளுள் செயல்படுதை உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பழனி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களை ஆரிய பார்ப்பனிய அதிகார கட்டமைப்பிலிருந்து விடுவிக்கவும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கும், தமிழில் வழிபாடு நடத்துவதற்குமான முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு திமுக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இனி வருங்காலங்களில் அறநிலையத்துறை இது போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
28/08/2024