தமிழ்நாட்டையும் துரத்தும் ‘SIR’

தேர்தல் ஆணையத்தின் ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)’ பீகாருக்குள் உருவாக்கிய சர்ச்சைகளே இன்னும் தொடரும் நிலையில், தமிழ்நாட்டிலும் SIR நுழைக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் சுமார் 65 லட்சம் இசுலாமியர், தலித் ஓட்டுக்கள் நீக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் SIR நுழைப்பது இதே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியா அல்லது தமிழ்நாட்டிலுள்ள வட இந்தியர்களின் ஓட்டுக்களையும் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சியா என்கிற பல கேள்விகள் எழும்புவதற்கு SIR காரணமாகியிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி என்பது வழக்கமாக தேர்தல் நெருங்கும் அவசர காலத்தில் நடைபெறும் செயல்முறை அல்ல. அது ‘SSR (Special Summary Revision) – சிறப்பு சுருக்க திருத்தம்’ என அழைக்கப்படும். அதாவது வாக்காளர் பட்டியலில் உள்ள இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்களைக் கண்டறிந்து திருத்தும் பணியாக சுருக்கமாக நடைபெறக் கூடியது. தேர்தல் ஆணையத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் வாக்குச்சாவடி அலுவலர் BLO (Booth level officer) மற்றும் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் BLA (Booth level Agent) ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு இந்த பணிகளில் செயல்படுவார்கள். இவர்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்துதல் பணிகள் மேற்கொள்ளும் முறையே SSR என அழைக்கப்படுகிறது. இவர்களின் துணையுடன், புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம் 6, வாக்காளர் நீக்கத்திற்கு படிவம் 7, முகவரி திருத்தத்திற்கு படிவம் 8,  மாவட்ட அளவிலான கோரிக்கைகளுக்கு படிவம் 9-11B என விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். இந்த சரிபார்ப்பு பணி ஜனவரி 6, 2025 அன்றே SSR முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

ஆனால் SSR (வாக்காளர் சுருக்க திருத்தம்) முறை இப்போது ஏற்றுக் கொள்ளப்படாமல், SIR (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) எனப் புதிதாக அவசரம் அவசரமாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த SIR முறை ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள அனைவருக்கும் படிவங்கள் கொடுக்கப்பட்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளுகிறது. இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் என நீக்க வேண்டிய 1% பேரினை அடையாளங்கண்டு நீக்க வேண்டிய முறையை விடுத்து, ஏற்கெனமும் பல அடையாளங்களை நிரூபித்து பதிவான 99% பேரும் தங்கள் அடையாளங்களை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று மக்களுக்கு அதிக சுமையளிக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

SIR மூலம் ஒவ்வொருவரும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதன்படி வாக்குச் சாவடி அலுவலர் (BLO) வரும் போது ஒவ்வொரு வாக்காளரும் வீட்டில் இருக்க வேண்டும். அவர் மூன்று முறை வருவார் என்றும், அவர் வரும் போது வீட்டிலில்லை என்றால் அந்தப் பெயர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் மாநிலம் தாண்டியும் செல்லும் அடித்தட்டு ஏழை மக்கள், கூலி வேலைக்கு சென்று விடும் மக்கள் தங்கள் வேலையை விடுத்து இந்த கணக்கெடுப்பிற்காக வேலைகளை விட்டு காத்திருப்பது கடினம். அதனால் அவர்களின் வாக்குரிமை நீக்கப்படும் அபாயமே அதிகம் என்னும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

புதிய வாக்காளராக 18 வயது நிரம்பியவர் இணைக்கப்படுவதற்கு பிறப்புச் சான்றிதழ், முகவரி மற்றும் பெற்றோரின் ஆவணங்களும் அவசியம் எனக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான பழங்குடி மக்கள், பிற மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள், நிரந்தர முகவரியற்ற சூழலில் வாழும் விளிம்பு நிலை மக்கள் இந்த ஆவணங்களைக் கொண்டிருப்பது கடினம். மேலும் அவர்கள் ஆவணங்களை வாங்குவதற்கு முயற்சிப்பார்கள் என்றும் கூற இயலாது. 

மேலும் தமிழ்நாட்டின் பருவ மழைக்காலமான நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரையான ஒரு மாத இடைவெளியில் முடிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். படிவம் நிரப்புதல், பதிவெண் இடுதல் என ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் அலுவலர் அதிக நேரம் செலவிடும் போது ஒரு மாத காலம் என்பது போதுமானதாக இருக்காதென்பது அறிந்திருந்தாலும் அவசரமாக இதனைத் திணிப்பது சந்தேகம் எழும்புவதற்கு பெரும் வாய்ப்பாக இருக்கிறது.

இவ்வாறான நெருக்கடிகள் எல்லாவற்றையும் விட பேரபத்தாக, பீகார் SIR -ல்இல்லாத இரண்டு நிரல்கள் (Columns) தமிழ்நாட்டின் SIR-ல் மிகவும் நுட்பமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்து வந்த ஒரு பீகாரிக்கு தன்னுடைய உறவினர் விவரமும், பீகாரின் வாக்காளர் அடையாள எண்ணையும் குறிப்பிட்டாலே போதும், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் அவரும் ஒரு வாக்காளராகி ஓட்டு போடலாம் என்கிற ஆபத்தும் சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல லட்சம் பீகார் தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரிலிருந்து இங்கு வந்த தொழிலாளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வாய்ப்பாக அது உருவாக்கப்பட்டிருக்கிறது எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பீகாரில் பாஜகவிற்கு வாக்களிக்காத மக்கள் குறிப்பாக இசுலாமியர், தலித்களின் ஓட்டுக்கள் சுமார் 65 லட்சம் அளவில் நீக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் பீகாரிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக SIR கொண்டு வரப்படுகிறது என்பதே SIR -ன் பின்னணியாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். பீகார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட இடத்தில் பாஜக வாக்காளர்களை சேர்த்ததாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் வழக்கத்திற்கு மாறான இந்த SIR நடைமுறையால் தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை எடுத்து விட்டு அதற்கு பதிலாக ஒன்றிய அமைச்சர் இடம்பெறுவார் என்ற மாற்றத்தை கொண்டு வந்ததும் சர்ச்சைக்குள்ளானது. பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதற்காக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு எந்திரத்தில் பதியப்பட்ட வாக்கிற்கும், எண்ணப்பட்ட வாக்கிற்கும் இடையில் 5 கோடி வாக்குகள் வித்தியாசம் உள்ளதாக Vote for Democracy அமைப்பு தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு கிடைத்தபாடில்லை. இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின் மீது இருக்கின்றன.

கர்நாடகாவின் மகாதேவபுரா பகுதியில் 11,956 போலியான வாக்குகள், 40,009 தவறான முகவரிகள், ஒரே முகவரியில் 80 பேர், பீகாரில் 65 லட்சம் நீக்கம், 124 வயது வாக்காளர் எனப் பல தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதன் தீர்ப்பே இன்னும் வெளிவராக நிலையில் இதே முறையை தமிழ்நாட்டிலும் கொண்டு வந்திருப்பதை தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், ஜனநாயக ஆற்றல்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மக்களின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. ஆனால் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லும் படியான ஆவணங்கள் கேட்கப்படுகிறது. வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமையை சோதனை செய்யும் சட்டம் என சொல்லப்பட்டு, அனைத்து மக்களையும் சோதித்து ஏழைகளின் குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA), தேசிய வருகைப் பதிவேடு (NRC) ஆகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் அஸ்ஸாமில் 20 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களானார்கள். இது சர்வதேச மனித உரிமை சட்டங்களான UDHRக்கு எதிரானதென உச்சநீதிமன்றத்தில் தலையீடு செய்துள்ளது ஐ.நா மனித உரிமை ஆணையம். இசுலாமியர்கள் மட்டும் இந்த சதியை புரிந்துகொண்டு வீதியிலிறங்கி போராடினார்கள். சிறை சென்றார்கள். டில்லியில் 60 பேர் படுகொலையானார்கள். மே17 இயக்கம் கிட்டத்தட்ட 70 CAA எதிர்ப்பு கூட்டங்களில் பங்கெடுத்து விளக்கிப் பேசியிருக்கிறது. இதனை எதிர்த்துப் போராடியதற்காக உமர் காலித் உள்ளிட்ட JNU மாணவர்கள் ஐந்தாண்டு காலமாக பிணை கூட வழங்கப்படாமல் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்

போலி வாக்காளரை நீக்கும் பணியே SIR என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இசுலாமியர்கள், தலித், ஏழை மக்களின் குடியுரிமையைப் பறிக்கப்பட கொண்டு வரப்படுகிறது என்பதற்கு சம்பத்திய எடுத்துக்காட்டாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது.

CAA-NRCயின் மாறுபட்ட வடிவமாகவே SIR. குடியுரிமை-வாக்குரிமை இரண்டும் பிரிக்க இயலாத அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகளை அரசியல்சாசனத்தின் மூலம் உறுதி செய்தவர் அண்ணல் அம்பேத்கர். இவை உறுதியாகாமல் போயிருந்தால் மக்கள் அடிமைகளாக சுரண்டப்படுவது நடந்திருக்கும். இது விடுதலை போராட்டத்தைவிட தீவிரமான போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாத்திட இயலும்.

SIR எனும் சதித்திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தருவது, தமிழ்த் தேசிய மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். CAA-NRCக்கு ஆதரவு அளித்த அதிமுக, SIRக்கு ஆதரவளிப்பது ஆச்சரியமல்ல. SIRஇல் திருத்தம் வேண்டுமென நடிகர் விஜய் கேட்பதும் பாசாங்குத்தனமானதாக இருக்கிறது. SIR என்பது திமுக சார்ந்ததல்ல. இது குடிமக்களின் அடிப்படை உரிமை சார்ந்தது. இதை எதிர்க்காத எந்த கட்சியும் தமிழினத்திற்கு எதிரான கட்சியே.

மே17 இயக்கம் SIRக்கு எதிரான போராட்டத்தை முன்னகர்த்தும் பணியை செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »