1968-ல் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்து மக்களை படுகொலை செய்த போது, அதனை எதிர்த்து அன்று அமெரிக்க மாணவர்கள் போராடிய வரலாறு இன்று திரும்புவதை நாம் காண முடிகிறது. தற்போது இசுரேலிய இனவெறி அரசு பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைக் கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டம் உலகத்தின் பார்வையை ஈர்த்திருக்கிறது.
இசுரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதம் மற்றும் இராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும், காசாவில் இருந்து இசுரேலியப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்கலைகழக மாணவர்கள் பெரும் போராட்டம் முன்னெடுத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இசுரேலுக்கு எதிரான இப்போராட்டமானது, அமெரிக்க அரசின் பல ஒடுக்குமுறைகளை கடந்து நடைபெற்று வருகிறது. இது பாலஸ்தீன மக்களுக்கு சற்று நம்பிக்கை தரக்கூடியதாகவும், அமெரிக்காவின் பைடன் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
இசுரேலில் அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடங்கிய பிறகு, பாலஸ்தீன மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் தரை வழி, வான் வழியாக தடை செய்யப்பட்ட குண்டுகளைப் போட்டு மக்களை கொத்துக்கொத்தாக இசுரேல் கொன்று குவித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை பலி கொண்ட பின்பும் குண்டு வெடிப்பு சத்தமும், மக்களின் அலறல் சத்தமும், குழந்தைகளின் கதறலும் விடாமல் தொடர்கின்றன. இந்தப் போரினால் 36000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 15 ஆயிரம் குழந்தைகளும், 8500 பெண்களும் அடங்குவர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இதில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் கணக்கில் வராததால் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வருகின்றன.
காசா முதல் ரஃபா வரை தேடித் தேடி பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து வருகிறது இஸ்ரேலிய அரசு. இதற்கு அமெரிக்காவிலிருந்து இசுரேலுக்கு ஆயுதங்கள் தங்கு தடையின்றி வருவது தான் காரணமாக இருக்கிறது. பைடன் நிர்வாகம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு, அக்டோபர் 7, 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சுமார் $250 மில்லியன் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. தற்போது மேலும் ஒரு பில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8300 கோடி) அதிகமான இராணுவ உபகரணங்களை அனுப்ப திட்டமிட்டது என கடந்த வாரம் அறிவித்தது. (இராணுவப் பொதி பீரங்கி குண்டுகளுக்கு 700 மில்லியன் டாலர், தந்திரோபாய வாகனங்களுக்கு (tactical vehicles) 500 மில்லியன் டாலர் மற்றும் மோட்டார் குண்டுகளுக்கு 60 மில்லியன் டாலரும் அடங்கும்). இவ்வாறு இசுரேலிய ஆட்சிக்கான ஆதரவை இரட்டிப்பாக்குவதும், ஆயுத ஏற்றுமதியை அதிகப்படுத்துவதுமாக பாலஸ்தீன மக்களைக் கொல்ல அமெரிக்கா உதவுகிறது.
அமெரிக்காவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 17, 2024-ல் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. ”பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதை இசுரேலிய அரசு நிறுத்த வேண்டும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவை மற்றும் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும், இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் ஆதாயம் அடையக் கூடிய நிறுவனங்களில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள், பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்” போன்ற கோரிக்கைகளை அம்மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
முதலில் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள், அங்குள்ள ஹாமில்டன் அரங்கை கைப்பற்றினர். அவர்கள் மேஜைகள், நாற்காலிகள், இரும்பு பொருள்களை நுழைவு வாயிலில் வைத்து காவல்துறையினர் உள்ளே வராதபடி தடுப்புகள் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தைத் தொடங்கிய உடனே நூற்றுக்கணக்கான அளவில் காவல்துறை குவிக்கப்பட்டன.
அமெரிக்காவில் நிறவெறி மற்றும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும், வியட்நாம் போருக்கு எதிராக 1968 காலகட்டங்களில் இந்த அரங்கில் தொடர்ச்சியாக போராடியவர்கள் அமெரிக்க மாணவர்கள். அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரங்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டும் என்பதனால் அமெரிக்காவின பைடன் அரசு, அமெரிக்க மாணவர்களை உடனடியாக ஹாமில்டன் அரங்கிலிருந்து வெளியேற்றவும் போராட்டத்தை கலைக்கவும் காவல்துறையைக் கொண்டு வைத்து அடக்குமுறை ஏவி மாணவர்களை வெளியேற்ற துடித்தது.
எனினும் ஹாமில்டன் அரங்கிலுள்ள கதவுகளை அடைத்துக்கொண்டு, சன்னல்களில் பாலஸ்தீன நாட்டின் கொடிகளை மாணவர்கள் பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் இணையுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். பல வளாகங்களில், அரபு, முஸ்லீம், யூதர், கறுப்பின, பூர்வீக அமெரிக்க மற்றும் வெள்ளை மாணவர்கள், போருக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டில் தங்கள் பாலஸ்தீனிய சகாக்களுடன் தோளோடு தோளாக நிற்கிறார்கள்.
இப்போராட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தது. பலவந்தமாக கைது செய்ததை எதிர்த்த மாணவர்களை துப்பாக்கியால் மிரட்டினர். தரையில் விழச்செய்து கைவிலங்கிட்டு இழுத்துச் சென்றனர். இதில் பலர் காயமடைந்தனர். எனினும் போராட்டங்கள் காட்டுத்தீ போல வேகமெடுத்தன, அதனையடுத்து பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் பரவின.
கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் அமைதி வழியில் கூடாரம் போட்டு போராடிய மாணவர்களின் கூடாரத்தை கிழிப்பதும், அகற்றுவதும், மிரட்டல் தொடுப்பதும், பெண் மாணவர்களின் கைப்பைகளை சோதனையிடுவதும் போன்ற காவல்துறையினர் அத்துமீறல்கள் அதிகரித்தன. இப்போராட்டத்தை கலைக்கும் நோக்கில் காவல்துறை, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான அமைதிப் போராட்டத்தில், இசுரேலுக்கான ஆதரவான போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்து, இரண்டு குழுவையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து வன்முறை ஏற்படுத்தி மாணவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தது.
மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்கக் காவல்துறை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், வர்ஜீனியா பல்கலைக்கழகம், எமர்சன் கல்லூரி, ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கிளர்ச்சி போராட்டங்களால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கரங்கள் நீட்டினர். ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் போராடியதற்காக 13 இளங்கலை மாணவர்களின் படிப்பு தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். ”காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றப்படும் என அமெரிக்கா உறுதியளிக்கும் வரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறப் போவதில்லை” என்று கூறி கல்லூரி வளாகத்திலேயே கூடாரங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் மழை, வெயில், குளிர் என்பதை பார்க்காமல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 125-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்..
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர்கள் 20-க்கும் அதிகமான கூடாரங்களை அமைத்தும், மனித சங்கிலி அமைத்தும் போராட்டம் நடத்தினர். உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என பெர்லின் காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலமாக எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் நகரவில்லை. பெர்லின், முனிச், கொலோன் மற்றும் பிற நகரங்களில் உள்ள பல்கலைக்கழக மைதானங்களில் காவல் துறையின் தொடர் அடக்குமுறைகளின் நடுவேயும் முகாம்களை நிறுவி போராடுகின்றனர். இதுவரை அமெரிக்க கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது மாணவர்கள் கல்வியாளர்கள் என 2,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகெங்கும் ஏகாதிபத்திய அரசுகளை அசைத்துப் பார்த்தவை மாணவர்களின் போராட்டங்களே. 1960-களில் சேகுவேரா, மாவோ, ஹோ சி மின் போன்ற இடதுசாரித் தலைமைகளின் அரசியலால் உந்தப்பட்டு மாணவர்களின் போராட்டம் எழுச்சி பெற்றது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் நடந்த இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டங்கள வியட்நாம் போர் சார்பான அமெரிக்க அரசின் கருத்தை போருக்கு எதிரான மனநிலைக்கு மக்களைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியது.
இந்தியாவில் ஜே.என்.யு பல்கலைக்கழகம் அரசின் அநீதிக்கு எதிரான போராட்டங்களை மாணவர்களிடையே இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் 1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை பாதுகாக்கும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் ஆதிக்கவாதிகளை அசைத்துப் பார்த்தது. ஈழ இனப்படுகொலை நிறுத்தக் கோரிய போராட்டங்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என மாணவர்களின் எழுச்சி அரசுகளை அச்சுறுத்தியது. அரசுக்கு அன்று அளித்த நெருக்கடிகளால் கடுமையான விதிமுறைகளை விதித்து மாணவர்களை ஒன்று கூட இயலாமல் தடுத்து விடுகிறது.
இன்றைய சமூக வலைதள பொழுது போக்குகளில் மாணவர்களின் காலம் வீணாகுமோ என்கிற அச்சத்தின் இடையே ஏகாதிபத்தியங்களின் தலைமையான அமெரிக்காவிலும், ஏனைய வலதுசாரி நாடுகளிலும் இசுரேல் இனவெறி அரசுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, மாணவர்கள் திரண்டிருப்பது ஒரு வெளிச்சக்கீற்றாகவே சர்வதேச சமூக செயல்பாட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. பல்வேறுக்கட்ட போராட்டங்களின் முயற்சியில் இசுரேல் அதிபர் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை தடுக்க, பாலஸ்தீன குழந்தைகளை காக்க, மே பதினேழு இயக்கம் சார்பாக அக்டோபர் 29, 2023 ஞாயிறு மாலை சென்னை எழும்பூரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழர்கள் நாங்கள் பாலஸ்தீன மக்களுடன் நிற்கின்றோம், பாலஸ்தீன தேசத்தை அங்கீகரி, பாலஸ்தீன இனப்படுகொலையை உடனே நிறுத்து உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, பறையிசை முழங்க பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அது குறித்தான இணைப்பு https://www.facebook.com/media/set/?vanity=may17iyakkam&set=a.250378924674077
மாணவர்கள் போராட்டத்தால் உலகத்தில் பல பகுதி மக்கள் விடுதலை காற்றை சுவாசித்துருக்கிறார்கள். அதுபோல அமெரிக்காவில் நடக்கும் பாலஸ்தீன மக்களுக்கான மாணவர் போராட்டம் உலகெங்கும் இருக்கிற இளையதலைமுறையிடம் சென்றுள்ளது. இசுரேலிய இனவெறி அரசுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனி தேசமாக வேண்டும் என்பதே உலகம் எதிர்பார்க்கும் நீதியாக இருக்கிறது. வரும்காலங்களில் பாலஸ்தீன மக்களும் விடுதலை காற்றை சுவாசிக்கும் என்பதை மாணவர்களின் போராட்டம் வெளிப்படுத்துகிறது.
அதேப்போல் ஒன்றரை லட்சம் ஈழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே அதன் கூட்டாளிகளையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற முடியும். அமெரிக்க மாணவர்கள் முன்னெடுத்தப் போராட்டம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது போல, நம் ஈழ உறவுகளுக்கு நீதி கிடைக்க மாணவர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக குரல் எழுப்பி போராடினால், இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கொண்டு வந்து தமிழீழத்தை மீட்போம்.