
தூத்துக்குடி அருகில் உள்ள பொட்டலூரணியில் 559 நாட்களாக ‘மீன்கழிவு ஆலைகளை இழுத்துமூட கோரி’ போராட்டம் நடந்துவருகிறது. தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இம்மக்கள் திரள் போராட்டத்தில் நவம்பர் 23, 2025 அன்று பங்கெடுத்து, ஆதரவளித்தார். போராட்டத்தில் சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மே 17 இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் கூறி தனது உரையை தொடங்கினார்.
“தமிழ்நாட்டில் நடந்த நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் பொட்டலூரணி போராட்டமும் இணைந்துள்ளது. பொட்டலூரணி குறித்த இந்தப் போராட்டம் யாருடைய கண்ணிலும் படக்கூடாது என்று அரசு மற்றும் முதலாளிகள் விரும்புகிற போது நாங்கள் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மையப்பகுதியில் இப்போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம். எந்தப் போராட்டத்தை கலைக்க விரும்புகிறார்களோ அந்தப் போராட்டத்தை சென்னையிலேயே நடத்திக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்தப் போராட்டங்களைப் பற்றி செய்திகள் பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ வராது. யாரும் அறிக்கைகள் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் அவை வெளியே தெரியாது. சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இதுகுறித்து பேச மாட்டார்கள். இப்படி பேசாமல் இப்போராட்டத்தை முடக்குகின்ற வேலைகள் நடந்து வருகின்றன. எனவேதான் மே 17 இயக்கத்தின் சார்பாக இந்தப் போராட்டத்தை நாம் சென்னையில் நடத்த வேண்டும் என்று உங்களிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம்.
சென்னையில் உங்கள் போராட்டம் நடத்தப்பட்டால் பல்வேறு ஊடகங்கள், தனிநபர் செயல்பாட்டாளர்கள், மற்றும் அமைப்புகள் சார்பாக உங்கள் போராட்டங்கள் கவனம் பெறும். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அதில் பங்கெடுக்கவும் மே 17 இயக்கம் தயாராக உள்ளது. இந்தப் போராட்டம் இங்கு ஓர் இடத்தில்தான் நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு நகரங்களில் நடத்தலாம். போராட்டத்தின் பிரதிநிதிகள் அங்கு வந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம்.
கூடங்குளம் அணு உலை தொடர்பான இடிந்தகரை போராட்டம் நடந்த பொழுது பல நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் கூட்டுக் குழுவில் நாங்களும் பங்கு எடுத்திருந்தோம். ஏனென்றால் இடிந்தகரையில் மட்டும் அந்தப் போராட்டம் நடந்திருந்தால் அது அங்கேயே முடக்கப்பட்டிருக்கும். எல்லா மக்களாலும் இடிந்தகரைக்கு வந்து விட முடியாது. எனவே இப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாடு முழுவதும் தெரிவிக்க பல்வேறு ஊர்களில் இது குறித்த கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்படித்தான் கூடங்குளம் அணு உலை போராட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சென்றடைந்தது. அதுபோல் பொட்டலூரணி மக்கள் ஊர் முழுவதும் சென்று மக்களை சென்று சந்திக்க முடியும், ஆதரவை திரட்ட முடியும். அப்படியாக உங்கள் போராடும் மக்களின் பிரதிநிதிகள் இந்த செய்தியை சொல்வதற்கு வர வேண்டும். அப்பொழுது தான் இந்த போராட்டம் விரிவடையத் தொடங்கும்.

அதுபோலத்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிகளுக்காக பேரறிவாளரின் தாயார் தமிழ்நாடு எங்கும் பயணப்பட்டு தங்கள் நியாயங்களை எடுத்துரைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் நியாயங்களை இதுபோன்று எடுத்துச் சொல்லிதான் பேரறிவாளன் அவர்களை தூக்கு கயிற்றிலிருந்து காப்பாற்றினார். பெண்கள் பங்கெடுத்த பிறகு வெல்ல முடியாத போராட்டங்கள் என்று எதுவுமே வரலாற்றில் கிடையாது. தமிழ்நாட்டிலே வெற்றி பெற்ற போராட்டங்கள் அனைத்திலுமே பெண்கள் முன்னணியில் இருந்திருக்கிறார்கள்.
நம்முடைய இன்றியமையாத தேவைகளான தண்ணீர், மின்சாரம், சாலை, பேருந்து போன்றவற்றினுடைய தேவை குறித்தான நியாயங்களுக்காக அரசாங்கமோ, அரசு அதிகாரிகளோ வேலை செய்வதில்லை. நாம் போராட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் போராட்டத்தை கலைப்பதற்கு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுவார்கள். வழக்கு போடுவதற்கும், அடக்குமுறை செய்வதற்கும், போராடுபவர்களிடையே அவதூறு பேசி குழப்பம் உருவாக்குவதற்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வதை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கு அரசியல் சாசனத்தில் முழு உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. அமைதி வழியில் ஜனநாயக வழியில் நமது கருத்தை தெரிவிக்க முழு உரிமை நமக்கு இருக்கிறது. இந்த உரிமைகள் இல்லாத காரணத்தினால்தான் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போராட்டங்கள் நடந்தன. ஆங்கிலேய ஆட்சி விரட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் “ஒன்று கூடக் கூடாது, போராடக்கூடாது, உரிமைகளைக் கேட்கக்கூடாது” என்று சொன்னால் விடுதலை கிடைத்து என்ன பயன் என்று நாம் கேட்க வேண்டாமா? பிறகு எதற்காக காவல்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகம், நீதிமன்றம், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் இங்கு தேவைப்படுகிறார்கள்? நமது விடுதலையில் மிகவும் இன்றியமையாதது நம்முடைய கருத்துரிமை, ஒன்று கூடும் உரிமை, மற்றும் போராடும் உரிமை.

என் மீது கூட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. உங்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். போராட்டம் காரணமாக போடப்படுகின்ற எந்த ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் நிற்காது. ஏனென்றால் நாம் போராடுவதால் யாருக்கும் இங்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் கடந்த 70 ஆண்டுகளில் போராடியதற்காக போடப்பட்ட எந்த ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ஜெனிவா ஐ.நா மன்றத்தில் பேசியதற்காக என் மீது நான்கு தேசத்துரோக வழக்குகள் போட்டார்கள். அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாமெல்லாம் ’தேசத் துரோகிகள்’ என்றால் பிறகு யார் ’தேச பக்தர்கள்’ என்று கேட்க வேண்டும். நம் ஊரைப் பற்றி, நம் மண்ணைப் பற்றி, நம் மக்களைப் பற்றி, நம் குழந்தைகளைப் பற்றி நாம் அக்கறைப்படவில்லை என்றால் வேறு யார் அக்கறைப்படுவார்கள்?

“இத்தனை நாள் போராடுகிறோமே! இன்னும் எதுவும் நடக்கவில்லையே!” என்று யாரும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் இத்தனை நாள் போராடுகிறோம் அல்லவா இதுவே மிகப்பெரிய வெற்றி. ஒன்று கூடி போராட்டம் நடத்துவதே பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட, அமைதியான போராட்டங்கள் அதிகம் நடைபெறுவதில்லை. ஆனால் அதை நீங்கள் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நாமும் நம் கோரிக்கையை அமைதியாக சொல்ல முடியும் என்று பிறர் உற்சாகப்படுவதற்கும், நம்பிக்கை கொள்வதற்கும் நீங்கள் காரணமாக அமைகிறீர்கள்.
இந்தப் போராட்டத்திற்காக பல்வேறு ஊர்களில் இருந்து எங்கள் தோழர்களை வரவழைத்து இருக்கிறோம். அவர்களும் இங்கு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் அந்தந்த ஊர்களில் சென்று இந்த போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்வார்கள்.
உங்களை பார்த்து மற்றவர்களுக்கு நம்பிக்கை வருகிறது. எதனால் நம் கோரிக்கை அமைதியாக சொல்ல முடியும், யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது. அதனால் உங்கள் மீது ஏதேனும் வழக்கு போடுவார்கள். அதற்காக கவலைப்படாதீர்கள். வழக்கு பதிந்து சிறையில் போட்டாலும் அவர் குற்றவாளி கிடையாது, அது விசாரணை கைதிதான். அரசாங்கம் வழக்கு நடத்தி நிரூபிக்க வேண்டும் இவன் குற்றவாளி என்று, ஆனால் அதை நிரூபிக்க முடியாது. ஏன்னெனில் நீங்கள் இந்த குற்றத்தை செய்தீர்கள் என சொல்லி காவல்துறை வழக்கு போட்டால் அது நீதிமன்றத்தில் நிற்காது. ஆனால் நம்மிடம் என்ன சொல்வார்கள் எனில், உங்கள் மேல் வழக்கு வந்துவிடும் வேலைக்கு போக முடியாது. அங்கே போக முடியாது இங்கே போக முடியாது என எல்லாம் சொல்லும்.
உங்க கோரிக்கை நியாயமானதா? இல்லையா? நியாயம் எனில் அந்த நியாயத்தை ஒரு நாளும் விட்டு தர முடியாது. ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும், கோரிக்கைகள் வெல்லும் என்பதை நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
எது வெற்றி என பல விடயம் இருக்கிறது. கூடங்குளம் அணு உலை திறந்து விட்டார்களே, போராடி என்ன பயன்? என்று நீங்கள் கேட்கலாம், அங்கு போராடியதால் தான் அங்கு ஒரு அணு உலைக்கு மேல் கட்டப்படவில்லை. போராடாமல் விட்டிருந்தால் அங்கு 10 அணுவுலைகள் கட்டப்பட்டிருக்கும். அதேபோல இங்கும் இந்த மூன்று ஆலைகளை மூட வேண்டும் என்று போராடியதால் அதோடு நிற்கிறது. இல்லாவிடில் ஏழு/எட்டு ஆலைகள் வந்திருக்கும். ஆக இது இன்றுடன் முடியக்கூடியதல்ல. அது நீண்டகால போராட்டம் ஆகலாம். ஆனால் போராடாமல் விட்டால் இன்னும் பல ஆலைகள் கேள்விகள் இல்லாமல் திறக்கப்படும். இதுதான் போராட்டத்தின் பலன்.

ஒரு தோழர் பேசும்போது பேருந்து நிறுத்தம் போராட்டம் சொன்னார், அது ஒரு கவனயீர்ப்புப் போராட்டம். அந்த போராட்டத்திற்கு கைது செய்து சிறையில் அடைப்பதெல்லாம் அயோக்கியத்தனம், அராஜகம், அடக்குமுறையின் உச்சம். நாம் கட்டும் வரிபணத்தில் நடத்தக்கூடிய ஒரு துறைதான் போக்குவரத்துத் துறை. அதில் பணம் கொடுத்துதான் போகிறோம், இலவசமாக போகவில்லை. அதற்கெல்லாம் அடக்குமுறை ஏவி கைது செய்து சிறையில் போட்டார்கள். ஆனால் தோழர் சங்கரநாதனை உட்பட பல தோழர்களுக்கு ஆதரவு, தமிழ்நாடு முழுக்க அதிகமானது. அதற்கு முன்பு வரை வெளியில் தெரியாத போராட்டம், உங்கள் சாலை மறியலால் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த போராட்டமாக மாறிவிட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். சின்ன சின்ன கோரிக்கைகள் நமக்கு வெற்றி பெற்று கொண்டே வருகிறது.
அதே மாதிரி தோழர் பேசும் பொழுது சொன்னார், கடந்த 2024 தேர்தலில் இந்த ஊரில் யாருமே ஓட்டு போடவில்லை என சொன்னார். ஏழு/எட்டு பேர் தவிர ஓட்டு போடவில்லை என. இது மாதிரி ஒற்றுமை உணர்வை நான் எந்த ஊரிலும் பார்க்கவில்லை. போராடுகின்ற மக்களிடம் மட்டும்தான் இந்த ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் மட்டும்தான் இது போன்ற ஒற்றுமை உணர்வோடு எடுத்த முடிவை நடத்தி காட்டுவார்கள். இனி வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல்ல 1000 ஓட்டு 2000 ஓட்டு பெரிய விசியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சட்டமன்ற தேர்தல்ல 50 ஓட்டு கூட வித்தியாசத்தை கொடுக்கும். ஆக உறுதியோடு நில்லுங்கள். ”ஓட்டு வேண்டுமெனில், ஆலையை மூடு”, ”நாங்கள் கேட்கின்ற கோரிக்கை நடத்தி காட்டு”, ”எங்கள் மேலுள்ள வழக்கை ரத்து செய்”, இதையெல்லாம் செய்தால் உனக்கு ஓட்டு போடுவதை பற்றி யோசித்து முடிவெடுப்போம். இல்லை என்றால் கிடையாது என்று நாம் உறுதியாய் உறக்கச் சொல்லுங்கள்.

இதன்பின் கோரிக்கை நிறைவேற்ற, நமது ’வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எல்லாத்தையும் திருப்பி கொடுக்கப்படும் என்று சொன்னாலே அரசாங்கம் பயப்படும்.ஏன்னெனில், ஒரு குடிமக்கள் நான் இந்த நாட்டினுடைய குடிமகனாக இருப்பதற்கான அடையாளத்தை அட்டையை நான் திருப்பி தருகிறேன் என்று சொன்னால் அது அரசாங்கத்திற்குதான் அவமானம்.
அமைதிவழி போராட்டம் தொடர்ச்சியாக நடத்துவது மிக முக்கியமானது. எந்த காலத்திலும் ஆரம்பிக்கும் போது உற்சாகமாக ஆரம்பிப்போம், கோரிக்கை நிறைவேறாவிட்டால் அந்த இட்த்தில் வருத்தம் வரும், ஒரு கோவம் வரும். அதற்கு இடம் கொடுத்து விடார்கள். எல்லா போராட்டமும் நீண்ட காலமாக நடந்த போராட்டங்கள்தான். அது ஏழு தமிழர் விடுதலை 32 ஆண்டு போராட்டம், இடிந்தகரை போராட்டம் 30 ஆண்டு கால போராட்டம், எந்த போராட்டமும் உடனே நடப்பதல்ல, உடனே தீர்வு தருவதுமல்ல. ஆனால் போராடிய பொழுது நமக்குள் ஒற்றுமை இருக்கும். நாமெல்லாம் ஒரே குடும்பம் என்கின்ற எண்ணம் இருக்கும். நமக்குள் எந்த பிளவும் இருக்காது. அதான் மிக முக்கியம். உங்களுடைய சமரசமற்ற தன்மை நிச்சயமாக ஒரு பெரிய வெற்றியை பெற்று தரும்.

மதிப்பிற்குரிய தோழர் சங்கர் நாராயணன் அவர்கள் தமிழ் ஆசிரியர். தமிழ் போராட கற்று தரும். தமிழ் மொழியை போல ஒரு மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு மனிதனை போராளியாக மாற்றுகின்ற மொழி என்று வேறு எதுவும் இல்லை. அவர் மிகுந்த தமிழ் பற்றும், அறிவுச்செல்வமும் கொண்டவர்கள் உங்களுக்கு போராட்ட ஒருங்கிணைப்பாளர்களாக கிடைத்திருக்கிறார்கள். தமிழர் வரலாறு பற்றியும், தமிழர் தொல்லியல் பற்றியும் பல அறிவார்ந்த தகவல்களை அவர்களிடம் காணமுடிகிறது. தமிழ் வரலாற்றை உலகெங்கும் எடுத்துச் செல்கின்ற ஒரு பெரும் முயற்சியை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் இனத்தினுடைய வரலாற்றை நாம் தொடர்ச்சியாகப் போராடிதான் உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் எந்த ஊரில் தோண்டினாலும் தமிழர்களுடைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்கும். தமிழர்களுடைய 5000 ஆண்டு வரலாற்று புதையல்கள் கிடைக்கும். ஆனால் அதற்கான முக்கியத்துவம் நமக்கு கிடைப்பதில்லை. தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்குமான முக்கியத்துவங்கள் நமக்கு கிடைப்பதில்லை. அது குறித்தான ஆவணங்கள் வெளியே வருவதில்லை. எனவே நாமே அதைப்பற்றி கற்று நாமே அதைப் பற்றி ஆவணங்களை வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆய்வுகளையும் நாமே மேற்கொள்ள வேண்டி இருக்கிறோம். அப்படிப்பட்ட போராடக்கூடிய தோழர்கள் உங்களோடு முன்னணியில் இருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அந்த வகையில்தான் இந்தப் போராட்டத்தில் நம்மை தமிழும், தமிழ் உணர்வும் ஒன்று இணைக்கிறது.
நமக்கெல்லாம் பெரும் அடையாளமாக நின்றது ஈழத்தில் நடந்த தமிழீழப் விடுதலைப் போராட்டம். இந்த வாரம் மாவீரர் நாள் வருகிறது. மேதகு பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாள் வருகிறது. தமிழினம் கொண்டாட வேண்டிய மிகப்பெரும் மாவீரன் மேதகு பிரபாகரன். அது போன்ற ஒரு வீரனை கடந்த 1000 ஆண்டுகளில் வரலாற்றில் தமிழன் பார்த்ததில்லை. ஒரு மாபெரும் தேசத்தை கட்டி எழுப்பி, முப்படைகளை உருவாக்கி, 20 சர்வதேச நாடுகளை எதிர்த்து நின்று வீரச்சமர் புரிந்து தம் மக்களுக்காக விடுதலையை வென்றெடுத்த ஒரு மாவீரர் பிறந்த நாளை நாம் எழுச்சியோடு கொண்டாட வேண்டும். அவரது பிறந்தநாளுக்கு அடுத்த நாள் ஆன நவம்பர் 27ஆம் நாள் இப்ப போராட்டத்தில் உயிர் கொடுத்த ஈகியர்களை நினைவு கூறும் எழுச்சியான மாவீரர் நாள் வருகிறது.

ஈழத்துக்கு சென்று வந்துள்ள ஓவியர் புகழேந்தி ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளார். அங்கே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் வாகனத்தின் வேகத்தை மிகவும் குறைத்து விட்டு அதில் ஒலித்துக் கொண்டிருந்த தமிழீழப் பாடலையும் அணைத்துவிட்டு மெதுவாகச் சென்றார்கள். ஏன் என்று கேட்ட பொழுது “இது மாவீரர்கள் துயிலும் இல்லம் என்று அழைக்கப்படும் ஈழப் போரில் உயிரிழந்த ஈகியர்களின் நினைவுச்சின்னம். இங்கு நாங்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் மரியாதை நிமித்தமாக தங்கள் வாகன வேகத்தை குறைத்துக் கொண்டு செல்வார்கள்” என்று கூறியதாக தெரிவித்திருந்தார். இது போன்ற ஒரு போரியல் வீரப் பண்பாட்டை தமிழ்நாட்டில் நாம் கண்டதில்லை, ஆனால் ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
எந்தவித பின்புலமும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய மாவீரர்கள் அவர்கள். நம்மைப் போன்று அருகில் கேரளா, ஆந்திரா போன்ற பிற நிலப்பரப்புகளை கொண்டவர்கள் அல்ல. தமிழ்நாட்டிற்குள் வர முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு மருத்துவ உதவிக்கு கூட கடல் கடந்து 3000 கிலோமீட்டர் தாண்டி இருந்த நிலப்பரப்பிற்குதான் அவர்கள் சென்று வர வேண்டி இருந்தது.
இயக்க போராளி ஒருவர் கூறிய செய்தி என்னவென்றால், ஒரு மூட்டை சிமெண்டாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு தலைவலி மாத்திரையாக இருந்தாலும் சரி அதற்கென்று இரண்டு கரும்புலிகள் பாதுகாப்புக்கு சென்று வர வேண்டி இருக்கும் என்று கூறினார். கரும்புலிகள் என்பவர்கள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, போராட்டத்தை முன் நகர்த்தும் மன உறுதி கொண்டவர்கள். கரும்புலிகள் வருகிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையின் கப்பல் படை பயந்து பின்வாங்கும். அப்படிப்பட்ட மாவீரர்கள் உதவியோடு தான் தங்களுக்கான பொருட்களை அவர்கள் கொண்டு வர வேண்டி இருந்தது. அப்பேர்ப்பட்ட வீர போர் புரிந்த போராளிகளின் இனத்தைச் சார்ந்த நாம் இந்த போராட்டத்தில் ஒரு அடி கூட பின் வைக்காமல் வென்று காட்ட வேண்டும்.
இந்த மாவீரர் நாள் வாரத்தில் போராடிக் கொண்டிருக்கும் உங்களை சந்திப்பதில் தான் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி வருகிறது. நாங்களும் உங்கள் போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொள்கிறோம். உங்கள் போராட்டக் குழுவோடு இணைந்து கொள்கிறோம். வேறு எந்தெந்த நகரங்களுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அங்கு அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். உங்களுடைய போராட்டத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிகளையும், போராடுகின்ற தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மே 17 இயக்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.