அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உச்சநீதிமன்றம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது! கொடியவர்களின் கூடாரமாக திகழும் கோவில்களில் சமூகநீதி மையம்கொள்ளட்டும்! – மே பதினேழு இயக்கம்

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோவில்களில் பயிற்சிபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தடைவிதிக்க மறுத்து 22-08-2023 அன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பு, பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றியுள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்த தீர்ப்பினை பெற சட்டரீதியாக போராடிய தமிழ்நாடு திமுக அரசை மே பதினேழு இயக்கம் வாழ்த்தி பாராட்டுகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி விண்ணப்பங்கள் வரவேற்றார். இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பின்பற்றவில்லை என்று அக்கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, கோவில் ஆகமம் மற்றும் பூசை முறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் அர்ச்சகராக உரிமை உண்டு என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தான் தற்போது உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “யார் வேண்டுமாலும் அர்ச்சகர் ஆகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை.” என்று வழங்கிய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிநீதிபதி தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மீது தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் பல்கிவாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ‘கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, சுப்பிரமணிய குருக்களின் மனுவை 22-08-2023 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழர்கள் கட்டிய கோவில்களில் தமிழர்கள் நுழைய முடியாது, அன்னை தமிழில் அர்ச்சனை இல்லை என்ற நிலை நீடித்துவந்த வேளையில், கோவில் கருவறைக்குள் தமிழர்கள் அனைவரும் சாதி பேதமின்றி சென்று வரவேண்டும் என்ற நிலை ஏற்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையையை தந்தை பெரியார் 1930-களிலேயே வைத்தார். 1970-ம் ஆண்டு தந்தை பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்த போது, அப்போதைய திமுக அரசின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அர்ச்சகர் நியமன மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றம் செல்ல, அன்று தொடங்கிய சட்டப்போராட்டம் இன்று வரை நீடித்துள்ளது.

அர்ச்சகர் நியமன உரிமையை அமல்படுத்த வேண்டி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில், தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு’ குறித்து, “நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம். (விடுதலை 14-10-1973)” என்ற தந்தை பெரியாரின் விண்ணப்பம் இன்று நிறைவேறியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் மூலம், கோவில்களில் நிலவும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தடுக்கப்படும் என்பதோடு, ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் உட்பட கருவறைக்குள் அனுமதி மறுக்கப்பட தமிழர்கள் அனைவரும் சாமியை தொட்டு பூசை செய்ய முடியும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது. பார்ப்பனர்களும் பார்ப்பன கட்டமைப்புக்களும் இதனை அனுமதிக்காது என்பது கடந்த காலத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். எனவே இதனை எச்சரிக்கையோடு அணுகி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றோம். அனைத்திற்கும் முன்னோடியாக உள்ள தமிழ்நாடு, கொடியவர்களின் கூடாரமாக திகழும் கோவில்களில் சமூகநீதி நிலவ முன்னோடியாக மாற வேண்டும். போராடி பெற்ற உரிமையை பேணிகாக்க முயலுவோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
23/08/2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »