டெல்லி சட்டம் பிற மாநிலங்களுக்கு வந்தால்?

மாநிலங்களையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் மோடி அரசாங்கத்தின் டெல்லி நிர்வாக அவசர சட்டம்.

இந்திய ஒன்றியத்தை ஆள்பவர்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதை வழக்கமாக்கிக் கொண்டே சுதந்திர நாளையும் கொண்டாடுபவர்கள். எந்த கட்சி இந்தியாவின் ஆட்சியில் இருந்தாலும் இந்நிலை மாறுவதில்லை. மோடி அரசின் ஆட்சியில் இது இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தை மாநகராட்சி அதிகாரம் அளவுக்கே குறைத்துக் கொண்டே செல்கிறது மோடி அரசு. அவ்வகையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசு அவசரமாக ‘டெல்லி நிர்வாகத் திருத்த மசோதாவை ( Delhi Services Bill)’ கொண்டு வந்து டெல்லியின் குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மக்களுக்காக செயலாற்றுபவையே மாநில அரசுகள். மாநில நிர்வாகம் சார்ந்த கொள்கை முடிவுகள், திட்டங்கள், தீர்மானங்கள், சட்ட விதிகள், ஒழுங்குமுறை போன்ற பணிகளை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. மாநிலத்தின் முக்கியமான அதிகாரக் கட்டமைப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளே இருக்கின்றன.

டெல்லியை யூனியன் பிரதேசமாக மாற்றியதால் அதன் குடிமைப் பணி அதிகாரிகளின் நியமனம், கண்காணிப்பு, அதிகாரம் அனைத்தும் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக உள்ள துணை நிலை ஆளுநரிடம் உள்ளது. இதனால் டெல்லி அரசுக்கும் (மாநில அரசு) ஒன்றிய அரசுக்கும் இடையே அதிகாரங்கள் தொடர்பான மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு குடிமைப் பணி அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்தது. இந்த வழக்கில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவற்றைத் தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது எனத் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். மேலும் சனநாயகம், கூட்டாட்சி கொள்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்றும்  நீதிபதிகள் தீர்ப்பினில் கூறினர்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மோடி அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் விதமாக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துவிட்டது. டெல்லி மாநிலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கே (lieutenant governor) உரியது என்ற அவசரச் சட்ட மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத்சா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ‘டெல்லி நிர்வாகத் திருத்த மசோதா’ அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.

மாநில அரசிற்கே குடிமைப்பணி நிர்வாக உரிமை உள்ளது. என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி டெல்லி அரசிடமிருந்து இதனை வலுக்கட்டாயமாக பறித்திருக்கிறது மோடி அரசு. டெல்லி அரசின் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியும், மோடி அரசாங்கம் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை.

‘இச்சட்டம் மாநில உரிமைகள் மற்றும் நலன்களை மிகவும் பாதிக்கும், நான்கு தேர்தல்களிலும் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தோல்வி அடைந்ததால் பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர பாஜக முயல்கிறது, இது இந்தியாவின் சனநாயகத்திற்கு ‘கறுப்பு நாள்’, டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயல் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை, அதனால் பீகாரில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கவில்லை. அதன் பிறகே டெல்லி மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்தது காங்கிரஸ். அதனால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய “இந்தியா (I.N.D.I.A)” கூட்டணியில் இரண்டாம் கட்ட சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கூட்டணி உறுதியானப் பின்னரே இந்த அவசரச் சட்டத்திற்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்திலும் காங்கிரசு பதிவு செய்தது.

அதிமுகவும், அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரசு போன்ற கட்சிகளும் இந்த அவசர சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கட்சிகள் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்லிக்கொண்டு மாநில உரிமைகளை அடகு வைக்கும் வகையிலான இந்த மசோதாவிற்கு ஆதரித்துள்ளனர். ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் மறுப்பு தெரிவித்த உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்றவற்றை, அவர் இறந்ததும் மோடி அரசுக்கு அஞ்சி கையொப்பம் இட்டு தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்தது அதிமுக. அதன் தொடர்ச்சியாக இப்போதும் இந்த உரிமை பறிப்பிற்கு அடிமை சேவகம் செய்து விட்டு வந்திருக்கிறது.

கடந்த 2017-2021 அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் உரிமைகளையும் நிர்வாகத்தையும் அடகு வைத்ததன் பலனாகவே அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றிலிருந்து அதிமுகவினர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை அதிமுக அமைச்சர்களின் ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என். ரவி கையொப்பம் இடாமல் இருப்பதையும், தமிழகத்திற்கு நேர் எதிரான செயல்பாடுகளையும் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

டெல்லியில் கடந்த காலங்களில் 1998ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜகவினால் காலூன்ற முடியவில்லை, மேலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் கூட வெல்ல முடியவில்லை. குடியுரிமைச் சட்டம் குறித்தான வெறுப்புப் பேச்சும், வன்முறைகளும் டெல்லி தேர்தலில் பாஜகவினரை தோல்வி அடைய வைத்தது. பாஜக தோல்வி அடைந்த மாநிலம் எங்கும் பாஜகவிற்கு சார்பான ஆளுநர்களை வைத்து மாநில அரசின் செயல் திட்டங்களை முடக்குகிறது. டெல்லியில் வெற்றி பெற முடியாத பாஜக தங்களுக்கு சார்பான ஆளுநரை டெல்லியில் நியமித்து, தமிழகத்தைப் போலவே மாநிலத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது.

இந்த டெல்லி நிர்வாக அதிகாரப் பறிப்பு மசோதாவை, கடந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணி விதிமுறைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர தாக்கல் செய்யப்பட்ட மசோதாவோடு பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இதில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் விதியின் படி, மாநிலத்தில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி(IAS)களிடம், ஒன்றிய அரசு அழைக்கும் பணியில் செல்ல விருப்பம் உள்ளதா என்பது குறித்து கேட்கப்படும். பின்னர் விருப்பம் உள்ளவர்களின் பரிந்துரைப் பட்டியல் ஒன்றிய அரசிற்கு அளிக்கப்படும். இப்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மாநில அரசின் கருத்து இல்லாமல் இந்த பணி மாறுதல் நடைபெறாது.

ஆனால் ஆட்சிப்பணி விதிமுறைச் சட்டத் திருத்தம் நிகழ், எதேச்சதிகாரமாக யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாநில அரசையும் கேட்காமல் மாற்றுப் பணிக்கு எடுத்துக் கொள்ள ஒன்றிய அரசிற்கு அதிகாரம் கிடைத்து விடும். இந்த சட்டத்தினை பாஜக ஆளாத மாநிலங்கள் அனைத்தும் எதிர்த்தன. மாநில அதிகாரத்தை அபகரித்து மாநிலத்தை மாவட்ட அதிகாரமாக சுருக்கும் மோடி அரசின் நயவஞ்சகத் திட்டம் இதுவென சாடின. அதனால் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னோட்டமாகவே டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி அபகரித்த இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாகப் பார்க்க முடிகிறது.

இந்த புதிய அவசரச் சட்டத்தின் நோக்கம் என்பது டெல்லி அரசு எடுக்கும் முடிவிலிருந்து வேறுபடுவதற்கும், நலத்திட்ட கோப்புகளை திருப்பி அனுப்புவதற்கும், டெல்லி சட்டசபையை ஒத்திவைத்தல், கலைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக முடிவெடுப்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கே இறுதி முடிவு எடுக்க முழு உரிமை உண்டு. இவை தவிர அதிகாரிகள் மீதான விசாரணை மற்றும் இடைநீக்க நடவடிக்கைகள்  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்ல இந்த மசோதா வழிவகுக்கிறது.

அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிற்கும், மக்களுக்கும் சுயமரியாதை, சிந்தனை, கோட்பாடு எதுவும் இருக்கக் கூடாது என்பதனை இச்சட்டத்தின் மூலம் கொண்டு மக்களை அவமதித்திருக்கிறார்கள். இனி அடுத்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றால் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில அரசின் அனுமதி இன்றியே கொண்டு வரப்படும் என்பதற்கு டெல்லி அரசு மீது நிகழ்த்திய இந்த சர்வாதிகாரமே சான்றாக இருக்கிறது

‘மக்கள், நிலம், வரி வருவாய், அதிகாரக் கட்டமைப்பு’ ஆகியவைகள் தான் ஒரு நாட்டை ஆட்சி செய்கிற அரசு என்கிற நிறுவனத்தின் அடிப்படை கூறுகள். அந்த வகையில் இந்திய நிலப்பரப்பில் உள்ள பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களும் தங்களுக்கான நிலப்பரப்புகளில் தங்களுக்கான அரசை நடத்தி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய கூட்டாட்சி தத்துவம் இதுதான்.

ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்து ‘ஒரே நாடு – இந்து நாடு’ என்ற நோக்கத்துடன் பாஜகவினர் மதம்-சாதி-இன ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர். வெறுப்பு பிரச்சாரங்கள் வளர்க்கின்றனர். இந்துத்துவ சங்பரிவார அமைப்புகள் மூலமாக வன்முறைகளை கட்டவிழ்க்கின்றனர். எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை ஏலம் விட்டனர்.  பல மோசடிகளை செய்து ஆட்சியைப் பிடித்தனர். மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றித் துளியும் அக்கறையற்று, தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவே இவ்வளவு அவசரமாக இதனைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

அனைத்து மாநிலத்திற்கும் இதைப் போன்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் மாநில சுயாட்சி என்பதன் அடிப்படையை மட்டும் அல்ல, மாநில அரசையே இயங்க விடாமல் முடக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும். மாநில அரசுகளின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளை இந்தத் திருத்தத்தின் மூலம் மிரட்ட முடியும். மாநில அரசுகளின் அதிகார கட்டமைப்பிற்குள் ஒன்றிய பாஜக அரசின் ஆதரவாளர்களான குடிமைப் பணி அதிகாரிகளை உலாவ விட முடியும் என்பதையே இச்சட்டம் நமக்கு உணர்த்துகிறது.

தனக்கென்று ஒரு அடி நிலம் இல்லாத, தனக்கென்று தனியே மக்கள் இல்லாத, தனக்கென்று தனியே வருவாய் இல்லாத ஒரு அரசுதான் இந்திய ஒன்றிய அரசு. கூட்டாட்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் பெரு நிறுவனங்களின் வியாபார நலனுக்காக தான் இந்தியா என்கிற மாநிலங்களின் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குசராத்தி பனியா மார்வாடி நிறுவனங்களுக்கு ஏதுவாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை வளைப்பதற்கு உருவாக்கப்படும் இந்த சட்டங்களை டெல்லி மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். 

இந்திய ஒன்றிய அரசிற்கு வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, நிதி போன்றவையே அதிகாரம் என்றும், மற்றவையெல்லாம் அந்தந்த இன மக்களுக்கே உரியது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டே அனைத்து மாகாணங்களையும் இணைந்து கூட்டாட்சி உருவானது. ஆனால் இப்போது கல்வி உள்ளிட்ட பலவும் மாநிலத்திலிருந்து ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது இந்த காரணத்தால் வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றில் நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.

இந்த சூழ்நிலையில், டெல்லி அதிகாரப் பறிப்பைப் போன்று அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சட்டம் என்று நிறைவேற்றப்பட்டு விட்டால் தமிழர்கள் அனைத்துத் துறைகளில் இருந்தும் இந்தியப் பார்ப்பனிய அரசால் புறக்கணிக்கப்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே மாநில உரிமை பேசிய தலைவர்கள் வாழ்ந்த தமிழகம் டெல்லிக்குக் குரல் கொடுக்க வேண்டும். பாஜக அரசின் பாசிசத் திட்டங்களைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »