“ஓபன்ஹெய்மர்” அமெரிக்க அணுகுண்டின் அரசியல்

இரண்டாம் உலகப்போருக்கு பிறகான உலக அதிகாரத்தைக் கைப்பற்றவும், கம்யூனிச வளர்ச்சியைத் தடுக்கவும் பலியிடப்பட்ட ஜப்பானியர்கள்.

oppenheimar movie poster-01

இரண்டாம் உலகப்போரை மையப்படுத்திய திரைப்படங்கள் ஹாலிவுட்டில் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. அப்படி வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலானவற்றை இருவகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகை, அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து பாசிச சக்திகளான இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பானை தாங்களே “அழித்ததாக” சாகசக் கதைகளாகக் கூறுபவை. நேர்மையாகச் சொன்னால் அந்த பெருமை சோவியத்தின் செம்படையினையே சேரும். மற்றொன்று, இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையைப் பற்றியவை.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் என்கிற திரைப்படமும் இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படம் தான். இதையும் சாகச வகைத் திரைப்படம் என்கிற வரையறைக்குள்ளே தான் வைக்கமுடியும். ஆனால், சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ஓபன்ஹெய்மர்மர் அவ்வாறு இல்லாமல் வரலாற்று நிகழ்வுகளை ஓரளவு அரசியல் நேர்மையுடன் அணுகியுள்ளதாகவே தெரிகிறது.

1945 ஆகஸ்டு மாதம் ஜப்பானின் இரு நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் அணுகுண்டுகளை (Atom Bomb) அமெரிக்கா வெடிக்கச் செய்தது. இந்த அணுகுண்டு வெடித்ததில் சுமார் இரண்டு லட்சம் ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். குண்டு வெடித்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்குப் பிறக்கும் குழந்தைகள் ‘அணுக்கதிர்வீச்சு’ (Atomic Radiation) பாதிப்புகளுடன் பிறக்கின்றன. பல கிலோமீட்டர் சுற்றளவு ஊடுருவி இருக்கும் அணுக்கதிர்வீச்சு தலைமுறை தலைமுறையாக அங்கு வாழும் மக்களுக்குப் புற்று நோயை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தத்துவார்த்த இயற்பியலாளர் ராபர்ட் ஓபன்ஹெய்மர்

இப்படி தலைமுறைகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே தான் அமெரிக்கா அணுக்குண்டைப் பிரயோகித்தது. அதுவும் இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளின் வெற்றி உறுதியான நிலையில், போருக்கு பிறகான தனது ஏகாதிபத்திய நலன்களை உறுதி செய்வதற்காக அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி இப்பேர்ப்பட்ட மனித அழிவுக்கு வழி செய்தது.  இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அமைதி காத்துவிட்டு பின்னர் தனது நாட்டில் வளர்ந்திருந்த சோசலிச வேர்களைக் களையெடுக்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றது.

“அணுகுண்டுகளின் தந்தை” என்று வர்ணிக்கப்படும் தத்துவார்த்த இயற்பியலாளர், பிறப்பால் யூதர், ராபர்ட் ஓபன்ஹெய்மரின் ஆராய்ச்சியின் போது நிலவிய அரசியல் சூழல் மற்றும் அவர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“அணுப்பிளவு” கண்டுபிடிப்பு

1930களின் தொடக்க நிலையிலிருந்த “குவாண்டம் இயற்பியல்” (Quantum Physics) கோட்பாடுகள் படி அணுவைப் பிளக்க முடியும் என்கிற அறிவியல் ஆய்வு முடிவுகள் ஆய்விதழ்களில் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

ஜனவரி 6, 1939ல் உலகப் புகழ் பெற்ற தி நேச்சர் ஆஃப் சைன்ஸ் (The Nature of Science) என்கிற அறிவியல் ஆய்விதழில் ஓட்டொ ஹான் (Otto Hahn) என்கிற ஜெர்மானிய வேதியியல் ஆய்வாளர் அணுவைப் பிளப்பது தொடர்பாக எழுதிய ஆய்வுக் கட்டுரை முதல் முறையாக வெளியானது. அடுத்த சில வாரங்களிலே (11 Feb 1939) அவரோடு இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட,1938 ல் நாஜி ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்ட, இயற்பியல் ஆய்வாளர் லிசா மெய்ட்னர் (Lise Meitner) அம்மையார் எழுதிய மற்றொரு ஆய்வுக் கட்டுரை புகழ்பெற்ற நேச்சர் லெட்டர் (Nature Letter) இதழில் வெளியானது.

இந்த கட்டுரையில் முதல் முறையாக “ஃபிஷன் ப்ராசஸ்” (Fission Process), அதாவது (அணு) பிளவு செயல்முறை, என்கிற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. முன்னர் வந்த வேதியியல் ஆய்வு முடிவுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்பியல் ஆய்வு முடிவும் வெளியானது. இதனையடுத்து, உலக அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்த செய்திகளை உள்ளடக்கிய ஒரு மூன்று நிமிட காட்சி திரைப்படத்தில் வரும். பரபரப்பும், ஆர்வமும் கலந்த நிலையில் ஓபன்ஹெய்மர்மர் அந்த செய்தியைப் படிப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எதார்த்தத்தில், அது ஒரு பெரும் பேரழிவின் தொடக்கப் புள்ளி.

அணு அறிவியலில் மட்டுமல்லாமல் உலக அரசியலிலும் இந்த செய்திகள் திருப்புமுனையாகக் காணப்பட்டன. ஏனென்றால், அன்றைய ஜெர்மனி அடால்ப் ஹிட்லரின் கோரப்பிடியிலிருந்தது. உலகப் போர் மூளும் சூழலில் ‘அணுப்பிளவு’ அறிவியலின் பயன்பாடு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; எனவே நாஜிக்கள் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதற்கு முன்னர் நாம் தயாரித்து விட்டால் உலகைக் காப்பாற்றிவிடலாம் என்கிற கருத்து நேசநாடுகள் அறிவியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த விவாதங்களின் ஆழ அகலத்தைப் புரிந்து கொண்ட விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் பிரான்களின் ரூஸ்வெல்டிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். நாஜிக்கள் குறித்த பயத்தில் அணு ஆயுதம் தயாரிப்பதைப் பற்றி அமெரிக்காவிடம் தெரிவித்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இதன் அடிப்படையில் அணு பிளவின் (atomic fission) மூலம் ஆயுதம் ஒன்றை உருவாக்கிட அமெரிக்கா ‘மன்ஹாட்டன் செயல்திட்டம்’ என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்தது. அதற்குத் தலைமை தாங்கி அணு ஆயுதத்தை உருவாக்கியவர் ஓபன்ஹெய்மர்.

ஓபன்ஹெய்மர், ஐன்ஸ்டீன் மற்றும் சமகாலத்திய அறிவியலாளர்கள் அனைவருக்கும் அணு ஆயுதம் எவ்வளவு ஆபத்தானதென்று தெரிந்திருந்தது. முடிவிலியாக நீளும் (infinitely long) அதன் கதிர்வீச்சு இவ்வுலகையே அழித்துவிடும் சக்தி வாய்ந்தது என்பதை அறிந்திருந்தனர். பல சந்தர்ப்பங்களில் அவர்களது உரையாடல்களிலும் அணு ஆயுதத்தைப் பற்றிய பயம் வெளிப்படுகிறது. ஓபன்ஹெய்மரின் சமகாலத்திய அணு அறிவியலாளரான நீல்ஸ் போர் (Niels Bohr) “உலகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக்கூடிய சக்தியை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், உலகம் அதற்குத் தயாராகவில்லை” என்று கூறினார்.

நீல்ஸ் போர், ஐன்ஸ்டீன் மற்றும் பலர் அணு ஆயுத தயாரிப்பில் தாங்கள் நேரடியாக ஈடுபடப்போவதில்லை என விலகிக் கொண்டனர். ஆனால் ஓபன்ஹெய்மர் விலகவில்லை. இருப்பினும் அவர் இருமனதாகவே அணு ஆயுதத்தை உருவாக்கத்தில் ஈடுபட்டதாக இத்திரைப்படம்  கூறுகிறது. நாஜிக்களுக்கு முன்பாக இவ்வாயுதத்தை உருவாக்கினால் மட்டுமே பாசிசத்திலிருந்து உலக மக்களைக் காக்க முடியும் எனவும், இது தனக்கு முன் இருக்கிற வரலாற்றுக் கடமையெனவும் ஓபன்ஹெய்மர் நினைத்தார்.

அணுக்குண்டின் அரசியல்

கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் அணுகுண்டு வெடிக்கும் காட்சிகளை பிரத்யேக கேமரா உதவியுடன் நோலன் உருவாக்கியுள்ளார்.

அமெரிக்கா உலக அழிவைத் தடுக்க நினைக்கவில்லை. திரைப்படத்தில் ஒரு காட்சியில் அணுக் குண்டு வெடித்து பேரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கும். அந்த மனித பேரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கையில் அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் மன்ஹாட்டன் செயல்திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து விவாதிக்க ஓபன்ஹெய்மரை அழைத்திருப்பார். அணு ஆயுத உற்பத்தியை இனி தன்னால் தலைமை தாங்க முடியாது எனவும், இதன் தேவையின்மையைக் கருதி அமெரிக்கா அணு ஆயுத உற்பத்தியைக் கைவிட வேண்டுமெனவும் ஓபன்ஹெய்மர் கூறுவார். அதற்கு ட்ரூமன் ” நீ அணு ஆயுதத்தை தயார் செய்தவன் மட்டுமே, அதனை எய்த பெருமையோ, அதனால் ஏற்பட்ட அழிவிற்கான அவப்பெயரோ உன்னைச் சேராது. அது அமெரிக்காவினுடையது” என்று கூறுவார். இதுவே அணு ஆயுதப் பயன்பாட்டினைப் பற்றிய அமெரிக்காவினுடைய கொள்கை நிலைப்பாடு. ஜப்பானின் அழிவில் அமெரிக்கா பெருமிதம் கொண்டது. மட்டுமல்லாமல், அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்வதில் அதற்கு வேறு திட்டங்களும் இருந்தன. இவ்வாயுதம் உலக ஏகாதிபத்திய போட்டியில் தன்னை முன்னிறுத்தும் என அது கருதியது.

பெரும் தியாகங்களைச் செய்து ஜெர்மனியை வீழ்த்தியது ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து செம்படை. ஜப்பானும் வீழ்ந்துக் கொண்டிருந்தது. ஆனால், போரின் இறுதிக் கட்டத்தில் பாசிச சக்திகளை அழிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இருக்கவில்லை. மாறாக, இரு நாடுகளும் போருக்குப் பிந்தைய உலகை மேலாதிக்கம் செய்வது குறித்து யோசித்துக் கொண்டிருந்தன. மிக முக்கியமாக, கம்யூனிச சோவியத் செம்படையின் வீரம் செறிந்த போர் குணத்தை கண்டு இவ்விரு முதலாளித்துவ நாடுகளும் கலக்கம் அடைந்திருந்தன. காலனிய கால சிக்கல்களால் இங்கிலாந்து நாட்டினால் அமெரிக்காவுடன் போட்டியிட முடியவில்லை. போருக்கு பிந்தைய உலகில் தனது அதிகாரம் வலுவாக இருக்க உலக நாடுகள் தன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று அமெரிக்கா எண்ணியது. ஆகவே, வெற்றி முடிவான போரில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டைகளை வீசியது.

அமெரிக்க கம்யூனிச ஒவ்வாமை

அமெரிக்காவின் பெருமையான அணு ஆயுதத்தை ஓபன்ஹெய்மர் உருவாக்கிக் கொடுத்தவர். ஆனால், பின்னாட்களில் அவர் சோவியத் உளவாளி என முத்திரை குத்தப்படுகிறார். விசாரணை என்கிற பெயரில் அவமதிக்கப்படுகிறார். தனது “அமெரிக்க விசுவாசத்தை” நிரூபிக்கப் பல ஆண்டுகள் அவர் போராட வேண்டியிருந்தது. அவர் சோவியத்தின் உளவாளியா என்பதைக் கண்டறிய நடக்கும் விசாரணைகளும், அதில் நடைபெறும் அரசியலும் இத்திரைப்படத்தின் இடைவெளிக்குப் பிறகு வருகிறது.

இதில் உள்ளீடாகப் பல இடங்களில் சோவியத்தைக் குறித்தும் அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்தும் அமெரிக்க அதிகார வர்க்கம் கொண்டிருந்த அச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது சோவியத்து ரஷ்யா அமெரிக்காவின் நேச நாடாக இருந்தது. அப்படியிருக்க, சோவியத்தைக் கண்டு மேற்குலகு ஏன் பயம் கொண்டது என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகவே உலக அளவில் சோசியலிச சித்தாந்தம் செல்வாக்கினை பெற ஆரம்பித்திருந்தது. 1930களில் சோவியத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதே காலகட்டத்தின் மேற்குலக பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார பெருமந்த நிலை (The Great Depression 1929-1939) முதலாளித்துவ கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் உலக அளவில் சோவியத்தின் “பொருளாதார மாதிரி”யே முதலாளித்துவத்திற்கு மாற்று என அறிஞர்கள் கருதத் தொடங்கினர். அமெரிக்காவில் கலைப்படைப்புகள் இடதுசாரியைத் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகத்தொடங்கின. 1930களை “சிவப்பு பத்தாண்டு” என அமெரிக்க அதிகார வர்க்கம் அழைக்கும் அளவுக்கு இடதுசாரியைத் தத்துவ வளர்ச்சி பெற்றிருந்தது.

உலகப் போர் முதலாளித்துவத்திற்கு முக்கியமான காலமாகப் பார்க்கப்பட்டது. போரின் தேவைக்கென ஏற்பட்ட தொழில் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். போரினால் லாபமடைந்தனர். நாஜி ஹிட்லரின் வளர்ச்சி ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கு பெரும் அழிவைத்தரும் என்று எண்ணி அமெரிக்க முதலாளிகள் ஹிட்லருக்கு உதவி செய்தனர். முதலாளித்துவ அரசுகளாக இருந்த மேற்குலகம் தனது சித்தாந்த எதிரியாகச் சோவியத்தைக் கருதத் தொடங்கிய காலத்தில்; இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய ‘அச்சு நாடுகள்’ மும்முனை பாசிச சக்திகளாகக் கைகோர்த்து மேற்குலக நாடுகள் மீது படையெடுத்தன. இங்கிலாந்து ராணியின் பக்கிங்காம் மாளிகை மீது நாஜிக்களின் குண்டு மழை பொழிந்தது. இந்த சூழலில் அச்சு நாடுகளின் படையெடுப்பை எதிர்கொள்ள இரண்டாம் உலகப் போரில் சோவியத்துடன் சேர்வதைத் தவிர மேற்குலக நாடுகளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

allied leaders stalin roosevelt churchill 06
சோவியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். (1943ல் எடுக்கப்பட்ட படம்)

ஆனால், உலகப் போருக்குப் பிறகு அவர்களுக்குத் தடையாக இருக்கப்போவது இடதுசாரியைத் தத்துவம். தனக்கான எதிரியின் வளர்ச்சியைத் தடுத்து, தனிமைப் படுத்தினால் மட்டுமே தங்கள் ஏகாதிபத்திய கரங்களை வலுப்படுத்த முடியும் என மேற்குலகம் நினைத்தது. முதலாளித்துவம் அதை விரும்பியது.

ஆகையால், இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகள் கூட்டணியில் இருந்து கொண்டே சோவியத் செய்த தியாகத்திற்கான அங்கீகாரம் கிடைக்காதிருக்கவும், போருக்கு பிறகான சர்வதேச அரங்கில் ஏக உரிமைப் போட்டியில் முன்னிற்கவும் அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது. ஆனால் உலகப்போரின் முடிவில் கம்யூனிச இடதுசாரியைத் தத்துவத்தின் செல்வாக்கு வளர்ந்திருந்தது. இதனையடுத்து, மேற்குலகம் சோவியத்தைத் தனிமைப் படுத்தவும் இடதுசாரிகளைக் களையெடுக்கவும் ஆரம்பித்தது. சிந்தனைப்புலத்தில் செயலாற்றியவர்கள், கலைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதன் உடனடி இலக்காகினர்.

1948ல் ‘மார்ஷல் திட்டம்’ என ஒன்றை அமெரிக்கா முன்வைத்தது. உலகப் போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியப் பொருளாதாரத்தைச் சரி செய்யக் கொண்டு வருகிறோமென அமெரிக்கா பிரகடனப்படுத்தியது. ஆனால், சோவியத் ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்த ஐரோப்பிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே அமெரி்க்கா மார்ஷல் திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் தூண்டுதலில் பிரான்சு, இத்தாலி அரசுகள் இடதுசாரியைச் செயல்பாட்டாளர்களை, கம்யூனிஸ்ட்டுகளை அரசு அமைப்புகளிலிருந்து வெளியேற்றியது. 1948ல் இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி கூட்டணி பெறுவதைத் தடுக்க பெருமளவிலான பணத்தைச் செலவு செய்தது. அமெரிக்காவில் டாப்ட் ஹார்ட்லி சட்டம் தொழிற்சங்கங்களை ஒழித்துக் கட்டும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. பிரான்சு மற்றும் இங்கிலாந்தில் இடதுசாரியைத் தொழிற்சங்கங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டன.

mccarthyism 05
1950 களில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் வெளியான கம்யூனிச வெறுப்பு பிரச்சாரம். ஊடகத்துறையில் இருந்து கம்யூனிஸ்டுகளை வெளியேற்றச் சொல்கிறது இந்த செய்தி.

இதன் தொடர்ச்சியாக 1950ல் கம்யூனிச தத்துவத்தை வெறுக்கும் ஜோசப் மெக்கார்த்தி (Joseph McCarthy) அமெரிக்க அரசுத் துறைகளில் 205 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றார். இவர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை ‘மக்கார்த்தியிசம்’ (McCarthyism) எனப்பட்டது. 1950களில் மக்கார்த்தியிசம் சிந்தனை வலுப்பெற்று இடதுசாரியைத் தொடர்புகளைக் கைவிடாத எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஹாலிவுட்டில் பணிபுரிய அன் அமெரிக்கன் ஆக்டிவிட்டீஸ் கமிட்டி (Un-American Activities Committee) என்கிற அமைப்பு தடை விதித்தது. உலகின் மிக உன்னதமான திரைக்கலைஞராக இன்றளவும் போற்றப்படும் சார்லி சாப்ளின் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த சாப்ளின் நாஜி பாசிசத்திற்கு எதிராகவும், உழைக்கும் தொழிலாளர் பிரச்சனைகளையும் தனது படைப்புகளில் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக ஹாலிவுட் முதலாளித்துவ சிந்தனை கொண்டத்துறையாக முற்றிலும் மாற்றப்பட்டது. ஹாலிவுட்டில் கம்யூனிச-சோவியத் வெறுப்பு பிரச்சார திரைப்படங்களும் முதலாளித்துவ சார்பு திரைப்படங்களும் வெளியானதன் பின்னணி இதுவே. இன்றுவரை ஹாலிவுட்டில் இந்நிலையே நீடிக்கிறது.

ஆதாரமற்ற வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமேகூட பலரது வாழ்வைச் சீர்குலைத்தது. ஜூலியஸ் ரோசன்பர்க் மற்றும் ஈதல் ரோசன்பர்க் என்கிற தம்பதியர் அணு ஆயுத ரகசியத்தைச் சோவியத்துக்கு விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் ஒபன்ஹைமர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஓபன்ஹமரின் சகோதரர், முன்னால் காதலி, துணைவியார் எனப் பலரும் இடதுசாரிகளாக இருந்தனர் என்பதால் அவர் சோவியத்து உளவாளியாக இருக்கலாம் எனக் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர், அவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்படும் விதமாகப் படம் முடிகிறது.

அமெரிக்க அனுபவம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் ஓபன்ஹெய்மர்மர் பேசிக்கொள்ளும் முக்கிய காட்சி

திரைப்படத்தில் ஓபன்ஹெய்மருக்கும் ஐன்ஸ்டீனுக்குமான உரையாடல்கள் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இருவருக்குமான உரையாடலின் மூலம் அணு குண்டு வெடிப்பிற்கு முன்னும் பின்னுமான ஓபன்ஹெய்மரின் மனநிலையை இயக்குநர் புரிய வைக்க முயல்கிறார் என்பது தெரிகிறது. ஓபன்ஹெய்மரின் அகவுலக முரண்பாடுகள், தனிமனிதராக அவரது குறைகள் அவரை கதையின் நாயகனாக்குகின்றன. அவர் சோதனைக்கூடங்களை வெறுப்பவராக இருந்தாலும் நாஜிக்களுக்கு எதிரான போரில் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தனது வரலாற்றுக் கடமையாக ஏற்றுக் கொள்கிறார். அணு ஆயுதத்தைத் தயாரிக்கிறார். பின்னர் குற்ற உணர்வுக்குள்ளாகி ஆயுதத்தை அப்பாவி மக்களிடையே பிரயோகித்த அமெரிக்காவை மனதளவில் நொந்துக் கொள்கிறார். ஆனால், கூட்டமொன்றில் பேசும்போது அமெரிக்க மக்களிடையே அன்றிருந்த பெருமித உணர்வையே தானும் வெளிப்படுத்துகிறார்.

ஓபன்ஹெய்மர் சோவியத் உளவாளியாக இருந்தாரா, இல்லையா என்பது அமெரிக்காவிற்குப் பிரச்சனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதே காலகட்டத்தில் சோவியத்தும் பல முன்னணி நாடுகளும் அணு ஆயுதத்தைத் தயார் செய்துவிட்டன. ஆனால், அமெரிக்கா இடதுசாரியைச் சிந்தனை கொண்ட அறிஞர்களை ஆளுமைகளை அச்சுறுத்தி வைத்திருக்க நினைத்தது.  அதைச் செய்தும் காட்டியது. இந்த வரலாற்று நிகழ்வுகளை இத்திரைப்படம் பதிவு செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறது.

அணுகுண்டு வெடிப்பதை நேரில் கண்ட அமெரிக்க மேஜர் ஜெனரல் தாமஸ் எஃப். ஃபாரெல் அப்போதைய ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு ஒரு அறிக்கையை எழுதினார். அதில் “அணுகுண்டு வெடித்து தங்கம், ஊதா, சாம்பல், நீலமெனப் பல நிறங்களை அது உமிழ்ந்தது. அருகிலுள்ள மலைத்தொடரின் ஒவ்வொரு சிகரத்தையும் பிளவுகளையும், முகடுகளையும் தெளிவாகவும் அழகாகவும் அது வெளிச்சப்படுத்திக் காட்டியது. அதை விவரிக்க முடியாது; கற்பனையில் தான் பார்க்க வேண்டும். அந்த அழகைத்தான் கவிஞர்கள் கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்பில் முழுமையாக அவ்வழகைக் காணமுடிவதில்லை” என்று தனது அனுபவத்தை வர்ணிக்கின்றார்.

அணுகுண்டு வெடித்தபோது வெளியான வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ் எனச் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு முன் லட்சக்கணக்கான மனித உடல்கள் அவ்வெப்பத்தில் உருகி அழிந்தன. ஹிரோசிமா, நாகசாக்கி நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஐந்து தலைமுறைகளாகியும் அங்குப் பிறக்கும் பல குழந்தைகள் உடல் ஊனமாகப் பிறக்கின்றன. அக்கொடும் பேரழிவின் ஒரு நொடிப்பொழுதும் இத்திரைப்படத்தில் பதிவாகவில்லை என்பது பெரும் பிழை. ஜெனரல் ஃபாரெல்  வார்த்தையில் சொன்னால் இத்திரைப்படம் ஒரு “அமெரிக்க அனுபவம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »