தந்தை பெரியாரும், மேதகு பிரபாகரனும், தங்கள் வாழ்வியலின் இரு பெரும் அடையாளங்களாக தமிழர்கள் கருதுகிறார்கள். அறமும், மறமும் தொடரும் தமிழ் சமூகத்தின் குறியீடுகள் என்றே போற்றுகிறார்கள். இவர்களை நேரெதியாக நிறுத்தி, ‘பெரியாரா, பிரபாகரனா பார்த்து விடலாம்’ என சீமான் சவால் விட்டிருக்கிறார்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழங்கி டெல்லி ஆதிக்கவாதிகளை எதிர்த்து போராட்டங்களை கட்டியமைத்த பெரியாரும், ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் உறுதியுடன் சிங்களப் பேரினவாதிகளை எதிர்த்து களம் கண்ட பிரபாகரனும் தமிழ்த் தேசியப் பேரினத்தின் முகவரிகளாகவே வாழ்ந்த அடையாளங்கள்.
தமிழர்களின் நலனுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கமே, தனி ஈழம் கேட்டுப் போராடிய பிரபாகரனுக்கு துணை புரிய பெரியாரியவாதிகளை தூண்டியது என்பதற்கு போதுமான காரணிகள் இருக்கின்றன.
‘நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்’ என தனது இறுதிப் பேருரையில், மரணத்தின் வாசலில் நின்று கத்திய பெரியாரின் குரலில் தமிழ்த் தேசிய உணர்வை வரித்துக் கொண்ட பெரியாரியவாதிகளே, அக்கனவு மெய்ப்பட, பிரபாகரன் என்னும் இளைஞன் மூட்டிய தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு தோள் கொடுத்தார்கள். கடும் இன்னல்கள் கடந்தும், சிறைவாசம் அனுபவித்தும் விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் புரிந்தார்கள்.
தந்தை பெரியாரும், மேதகு பிரபாகரனும் ஆரிய, சிங்கள ஆதிக்க படையெடுப்புகளினால், தங்களின் பண்பாட்டு அடையாளங்களை இழந்த தமிழினத்தை தட்டி எழுப்பியவர்கள்.
“டெல்லியின் ஆதிக்கவாதிகள் குலைநடுங்கும் போராட்டங்களை நடத்தியவர் பெரியார். இந்தி எதிர்ப்பு போராட்டம், இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம், சட்ட எரிப்பு போராட்டம், வடவர் கடைகள் எதிர்ப்பு போராட்டம்” எனப் பெரியார் முன்னெடுத்தவை அனைத்தும் அன்றைய இந்திய ஆட்சியாளர்களை உலுக்கியது.
சிங்கள இனவெறி ஆதிக்கவாதிகள் சிந்தை கலங்கும் போர்களை நடத்தியவர் பிரபாகரன். இந்திய அமைதிப் படையே தாக்குப் பிடிக்க முடியாத படியான சண்டைகள், இந்திய ராணுவத்தினரையே முற்றுகையிட்டு திணறச் செய்த யாழ்குடாப் போர், ஆனையிறவுப் போர், ஓயாத அலைகள் என சிங்கள இனவெறி ராணுவத்தை விரட்டிய ஈடு இணையற்ற போர்களை வெற்றிகரமாக நடத்தினர் விடுதலைப் புலிகள்.
பெரியார் அமைதியான வழியில் போராடினார் என்பதற்காக, பிரபாகரனின் ஆயுத வழியை அவருடன் இணைத்துப் பார்க்க முடியாது என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் பெரியார், உலகில் ஆதிக்கம் எதிர்க்க, சமத்துவம் தழைக்க நடந்த போர்களை ஆதரித்தவர். அவரின் ரஷ்யப் பயணமும், ரஷ்யாவின் பொதுவுடைமை ஆட்சியைக் குறித்து புகழ்ந்த சொற்களுமே இதற்கு சான்றாக உள்ளது.
‘தற்காலம் உலகில் ரஷ்யாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவற்றின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உணமையாகும்…. ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை’ – என்கிறார் பெரியார். ரஷியப் புரட்சி ஆயுதப் புரட்சியே. அதனையே பெரியார் கிளர்ச்சி எனப் புகழ்கிறார்.
சாதி, மதங்களைக் கடந்து தமிழின உணர்வு தமிழீழத்தில் மேலோங்கி இருந்தது. இளைஞர்களின் இவ்வுணர்ச்சி, ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் சண்டையாக உருவெடுத்தது. பிரபாகரன் அந்த சண்டைக்கு வலுவூட்டினார். ஆதிக்க இனவெறி சிங்களத்துடன் இனி வாழ முடியாது என்கிற நிலையில் போர் நடந்தது. ஆனால் இங்கு சாதி, மத உணர்வும், இந்திய பெருந்தேசிய உணர்வுமே மேலோங்கிக் கிடந்தது. தமிழின உணர்வை ஊட்டுவதே முதன்மை இலக்காக இருந்தது. இங்கு ‘தமிழா இனவுணர்வு கொள்’ எனப் பெரியார் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அந்தந்த மண்ணுக்கேற்ற அரசியலில் இருவரும் சுயநலம் துளியுமற்று, மனித சமத்துவம் நோக்கி அவரவர் வழியில் போராடினார்கள்.
பெரியார், ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய தேச கட்டமைப்பையும், அதன் தமிழர் விரோத போக்கையும், பிரபாகரன், ஒருங்கிணைக்கப்பட்ட சிங்கள தேச கட்டமைப்பையும், அதன் தமிழர் விரோத போக்கையும் முதன்மை எதிரிகள் என அறிவிக்கும் சிந்தனைப் புரிதலில் ஓர்மை கொண்டிருந்தவர்கள். பெரியாரியவாதிகள் பெரியாரையும், மேதகு பிரபாகரனையும் இரு கண்களாக வரித்துக் கொண்டதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
ஒரு தேசிய இனம் மீது வேறொரு தேசிய இனம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கும் தேசிய இனப் போராட்டமாக, சிங்கள தேசிய இனத்தை எதிர்த்து போர் புரிந்தார் மேதகு பிரபாகரன். தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்த இந்தியத்தைப் பற்றியான எந்தப் புரிதலும் அற்ற மக்களிடம் அதுகுறித்து விழிப்பூட்ட இயக்கம் கட்டி பரப்புரை மேற்கொண்டார் பெரியார். இவர்களை ஆயுத வழிப் போராட்டம், அமைதி வழிப் போராட்டம் என்கின்ற அடிப்படையில் பிரித்துப் காண்பது பெரியாரின் கருத்தினையே மறுக்கும் அடிப்படைப் பிழையாகும். அவ்வாறு பார்க்கத் தக்கதாய் தமிழீழ மற்றும் தமிழக மண்ணின், மக்களின் தன்மைகள் இல்லை என்கிற புரிதலே முக்கியமானது.
இந்தியாவில் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் இடையிலான போரே நடந்தது என மானுடவியல் ஆய்வாளர்கள், மொழியியல் வல்லுநர்கள் முதற்கொண்டு அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு வரையான அறிவார்ந்தவர்களின் ஆய்வாக இருக்கும் போது, சீமான், ஐயா. மணியரசன் போன்ற போலித் தமிழ்த்தேசிய திரிபுவாதிகள் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் எதிராகக் கட்டமைத்து ஆரியத்தை தப்பிக்க வைக்கிறார்கள். தமிழ்த் தேசிய அடையாளமான விடுதலைப் புலிகளை, திராவிடத்தின் அடையாளமான பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட பல சான்றுகள் உள்ளன.
“சிங்கள மக்களின் மூதாதையர், கிமு ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்தில் இருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது தொன்மை வாய்ந்த திராவிட குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்கள குடியேற்றம் நிகழ்வதற்கு முந்தைய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிட தமிழ் ராஜ்ஜியங்கள் நிலைபெற்று இருந்ததாக, சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீக குடிகளாக திராவிட தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிபு” – தமிழீழ தேசத்தின் குரலாக ஒலித்த, தமிழர்களின் வரலாற்றுப் பின்புலம் ஆய்ந்தறிந்த ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் கூற்று இது. விடுதலைப் புலிகளே தங்களின் தொன்மை அடையாளமாக திராவிடத்தை கைக்கொள்ளும் போது, அந்த திராவிடத்தை அழிப்பதே முதன்மை இலக்கு என சீமான் கூறுவது, புலிகளையே மறுதலிக்கும் நிலைக்கு செல்வதன் அறிகுறியாகவே பார்க்க முடிகிறது.
ஆதிக்க எதிர்ப்பு, திராவிடத் தொன்மை என்கிற அடித்தளத்தில் பெரியாரும், பிரபாகரனும் சமதளத்தில் நிற்பதோடு, பெரியார் முன்னெடுத்த சீர்திருத்தங்களான சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் எதிர்ப்பு, மூடத்தன எதிர்ப்பு என சீர்திருத்தங்கள் சமத்துவம் நோக்கிய மேல்தளமாக கட்டி எழுப்பப்பட்டன. இவை அனைத்துமே, பெரியாரியவாதிகள் இவர்கள் இருவரையும் கொண்டாடக் காரணமாக அமைந்தன.
தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் இருக்கக் கூடாது, அது சமத்துவ சமூகத்திற்கான எதிரியாக இருக்கிறது என தமிழர்கள் சாதிப் பட்டங்களைத் தூக்கி வீசக் காரணமாக இருந்தவர் பெரியார். தலைவர் பிரபாகரனின் ஈழ தேசத்திலும் சாதியத்தை எள்ளளவும் நுழைய அனுமதிக்கவில்லை. இறுதி மூச்சு வரை சாதியத்தை சாடிய பெரியாரையும், போராளிகளை சாதி அடையாளமே தெரியாத அளவுக்கே வழிநடத்திய பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்துவது தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியன்றி வேறெதுவும் இருக்க முடியாது.
ஆனால் பெரியாரைக் குறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் குரலில் அவதூறுகளைப் பேசும் சீமான்- காமராசர், வ.உ.சி, தீரன் சின்னமலை எனப் பல தலைவர்களின் பெயர்களைக் கூறி, தமிழ்நாடு அவர்களின் மண் தானே தவிர, இது பெரியார் மண்ணல்ல என்று கொதிக்கிறார். சாதியம் கடந்து போராடிய இத்தலைவர்களை இன்று சாதியவாதிகள் கைக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. அந்த சாதியவாதிகளை தனது ஓட்டுகளின் வசம் திருப்புவதற்கு வசதியாக இவர் தூக்கிப் பிடிக்கிறார். இப்படி நினைப்பதற்கு ஏதுவான காரணிகளும் இருக்கின்றன. ஆரம்ப காலகட்டங்களில் அவரின் மேடைகளில் சாதியை விமர்சித்துக் கொண்டிருந்த சீமான், அதன் பிறகு சாதிக்கு ’குடி’ என்ற பெயர் மாற்றினார். ஷிவ் நாடார், ரோஷிணி நாடார் எனப் பெயருக்கு பின்னால் சூட்டியதை குடிகளின் பெயர் என அவர்களைப் பாராட்டிப் பேசினார்.
சாதி ஒழிப்பில் மட்டுமல்ல, மேதகு பிரபாகரனின் பெண்ணியப் பார்வையும், செயல்பாடும் பெண் விடுதலையின் மைல்கல் என்றால், பெரியாரின் பெண்ணியப் பார்வையும் அதற்கு நிகரானது. “தலைவிதி என்றும், கர்ம வினை என்றும், தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழமை என்றும், பண்பாட்டுக் கோலம் என்றும் காலம் காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணிடம் விழித்தெழ வேண்டும்”- மேதகு பிரபாகரனின் பெண் விடுதலை குறித்த தீர்க்கமான சிந்தனை. பொரியாரின் பெண்ணிய சிந்தனை அனைத்துப் பிரச்சனையையும் பெண்களின் இடத்தில் இருந்து சிந்தத்து அணுகுவதாக அமைந்தது.
தமிழினம் போற்றும் திருவள்ளுவரையும், ஒளவையாரையும் கூட பெண்ணியப் பார்வையுடனே விமர்சித்தார் பெரியார். பெண்கள் முன்னேற்றத்தின் தடைகல்லாக இருந்த சாஸ்திர, சம்பிரதாயங்களை, மனுநீதி, வர்ணாசிரமம் என ஒவ்வொன்றையும் நோக்கியும் அவர் எழுப்பிய கேள்விகள், இந்தியப் பார்ப்பனியத்தை இன்று வரை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. அதனைத் தகர்த்துப் பார்க்க முனைந்து தங்களால் இயலாது எனத் தெரிந்தே பார்ப்பனியம், ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகமூடியை தமிழ்த்தேசிய முகமூடி அணிந்த சீமானிடம் கொடுத்தனுப்பி இருக்கின்றன.
நாத்திகம் குறித்த பார்வையிலும் இருவருக்கும் ஒத்த சிந்தனையே இருந்தது. ஒரு நேர்காணலில், ‘ஏதாவது ஒரு பெரும் ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கும் போதும், இது கடவுளின் அருளால் என நீங்கள் நினைத்ததுண்டா’ என்கிற கேள்விக்கு, இயற்கையின் கருணையால் என்றவர் மேதகு. மனிதனை மனிதன் பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, குடிதண்ணீர் எடுக்கக் கூடாது, கோயிலுக்குள் வரக்கூடாது போன்ற பழக்கவழக்கங்களை வைத்துக் கொண்டிருக்கும் இத்தேசத்தை எரிமலை, பூகம்பம், சுனாமியினால் அழிக்காமல் இருக்கிறதே, அதனை சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று எப்படி நினைக்கிறீர்கள்’ எனக் கேட்கிறார் பெரியார். மக்களிடம் பெரியார் கேட்ட இக்கேள்விக்கும், நேர்காணலில் பிரபாகரன் அளித்த அப்பதிலுக்கும் இடையில், அடித்தட்டு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய சமத்துவத்தை நேசிக்கும் மனித நேயமான நாத்திகம் ஊடுருவி நிற்பதை, மாந்தநேயம் நேசித்த பிரபாகரனையும் பெரியாரையும் எதிர எதிராக நிறுத்தும் அயோக்கியர்களை தவிர மற்றவர்கள் அறிவார்கள்.
தமிழினம் தனித்த தேசிய இனமாக தனிநாடு அடைந்து விடக்கூடாது என்பதே, இந்திய பார்ப்பனியம் தமிழீழத்திற்கு அனுப்பி வைத்த அமைதி காப்புப்படை (IPKF) முதற்கொண்டு 2009-ல் புலிகளை அழிக்க ஆயுதம் கொடுத்து துணை புரிந்தது வரைக்குமான காரணமாக இருக்கிறது. இந்திய அமைதி காப்புப் படையில் தளபதியாக இருந்த சுந்தர் ஜி என்பவர், அவரின் உயரதிகாரியிடம், ‘இந்திய அமைதி காப்புப் படை இலங்கைக்கு ஏன் அனுப்பப்பட்டது’ என்று கேட்ட கேள்விக்கு, அந்த உயரதிகாரி, ‘இந்தியப் பார்ப்பனர்கள் தமிழர்களுக்கான தனிநாடு அமைவதை விரும்பவில்லை’ என்று கூறியிருந்ததாக, X தளத்தில் சுந்தர் ஜி பதிவிட்டிருந்ததே, இந்தியப் பார்ப்பனியத்தின் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வு கண்ணோட்டத்தை தெளிவாக விளக்கியது.
விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாக தங்கள் பத்திரிக்கைகளில் கட்டமைக்கும் செய்திகளையே இந்தியப் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளின் லட்சணத்தை பெரியார் தன் காலத்திலேயே தோலுரித்தவர். இந்து நாளிதழில் வரும் செய்திகளுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டாலே, அவையே உண்மையான செய்திகள் ஆகி விடும் என்று விடுதலை பதிப்பாசிரியரிடம் பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியாரைப் பின்பற்றி பார்ப்பன செய்தித்தாள்களை அணுகியிருந்தாலே விடுதலைப் புலிகளைப் பற்றிய தவறான பிம்பம் பலரின் மனதில் எழுந்திருக்காது.
இன்று பெரியார், பார்ப்பன சமூகத்தையே எதிரியாக முன்னிறுத்தி விட்டார் என்று குதிக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள், விடுதலைப் புலிகளை மோசமாக சித்தரிக்கும் போது எந்த கேள்வியும் எழுப்பாமல் கடந்தனர். இன்று பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை முன்னிறுத்துகின்றனர். தத்துவ சிந்தனையின் ஆய்வுப் புலத்தில் வைத்து ஒப்பு நோக்க வேண்டியவர்களை, சுயநல பிழைப்புவாதத்திற்காக எதிரெதிராக பேசுகின்றனர்.
தமிழினத்தில் பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராத நிறுத்த முடியாத அளவிற்கு அவர்களின் சிந்தனைகள் தமிழ் இனத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதையே இந்த செய்திகள் எல்லாம் தமிழர்களுக்கு உணர்த்துகின்றன. இந்த அடையாளங்களை எதிர் எதிராக பார்ப்பவர்கள், ஒன்று இந்திய முதலாளி வகைப்பட்ட பார்ப்பனியத்துடன் கைகோர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மற்றொன்று ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததுடன் நெருங்கிய சீமான் போன்ற போலி தமிழ் தேசியவாதிகளாக இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் இறுதியில் பார்ப்பனியத்தின் வழியிலே சென்றடைகிறார்கள். இவர்களை அடையாளங்கண்டு, இவர்களுக்கு எதிரான அரசியலை கைக்கொள்வதே தந்தை பெரியாரும், மேதகு பிரபாகரனும் முன்னிறுத்திய அரசியல். அதுவே தமிழர்கள் சுயமரியாதை உணர்விற்கும், உரிமைக்கான நகர்விற்கும் முழங்கும் அரசியல்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்த்து முழங்கிய பெரியாரும், ‘தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்’ என செயல்பட்ட பிரபாகரனும் தமிழர்களின் அடையாளங்கள். இவர்களை நேரெதிராக நிறுத்துபவர்கள் பார்ப்பனக் கைகூலிகள் என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டு, அவர்களை நிராகரிப்பதே தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மையானது.