இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர் தெய்வங்கள்

தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.” – தமிழர்களின் சங்ககால சிந்தனை மரபு இத்தகைய குணங்களால் நிறைந்து  இருந்திருக்கிறது, ஆனால் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திய காலம் தொட்டே இவையனைத்தையும் இழந்தார்கள் என்பதே பெரியார் இந்த சொற்றொடர் மூலமாக தெரிவிக்கும் கருத்தாக இருக்கிறது.

தமிழர்களின் அறிவாற்றலை சிதைக்கவே அதிகாரத் தளங்களில் எல்லாம் இந்து என்ற வார்த்தையை பார்ப்பனியம் நிலைநிறுத்தும் வேலையை செய்தது. சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் இருப்பவர்களைக் குறிக்க அயல்நாட்டவரால் பயன்படுத்தப்பட்ட சொல், பார்ப்பனர்களுக்கு தமிழர்களின் மரபை செரிப்பதற்கு பயன்பட்டது. 

திராவிடப் பழங்குடிகளின் மற்றும் தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத பார்ப்பனியத்தின் வைதீக மரபையும் இணைத்து மோசடியாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டதே இந்து மதம்.

பெரியாரியவாதிகளும், முற்போக்காளர்களும் ‘தமிழர்கள் இந்துக்கள் இல்லை’ என்பதை அழுத்திச் சொல்வதற்கு காரணம் தமிழர் மரபை வைதீக மரபு செரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதற்காகவே அல்லாமல் கடவுள் மறுப்புக் கொள்கை முதன்மைக் காரணமல்ல. இன்று தமிழ்நாட்டின் சுமையாக அமர்ந்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி, ‘ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல, ஆசிரியர்கள், வந்தேறிகள் எனப் பெரியார் பொய்யாகப் பரப்பினார்’ என பேசித் திரிவதற்கு வைதீகத்தின் சதி வேலைகளை பெரியார் அம்பலப்படுத்தினார் என்பதன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?  

தமிழர்களின் மரபு, தங்களுக்குள் வாழ்ந்து மறைந்த மனிதர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டு வந்த மரபேயாகும். சங்க இலக்கியம் முதல் அதன் தொடர்ச்சியில் இருந்து வந்த பண்டைய இலக்கியங்கள் மூலம் இதுவே தெளிவாகிறது. ஆனால் வைதீக மரபு வேதங்களையே கடவுளாக கருதுகிறது. இந்த வேதத்தை மையமாக்கி அதிகார மையமாக்கிக் கொண்டது. இந்த வேதமும் எட்டாம் நூற்றாண்டு வரை மையத்தில் இல்லை என்பதை, கடந்த முறை மே 17 இயக்கம் நடத்திய அறிஞர் அவையத்தில், தமிழர்களின் மெய்யியல் மரபைக் குறித்தும், பார்ப்பனர்களின் வைதீக மரபு அதனை செரித்தது குறித்தும் மெய்யியல் ஆய்வாளரான கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் பேசும் போது,

“எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் வேதம் என்பது மையத்தில் இல்லை. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வேதம் என்பது மையத்திற்கு வருகிறது. இதற்கு முன்பாக இந்திய மெய்யியல் மரபைப் பற்றிய பேசிய நூல்கள் என்றால், மணிமேகலையில் இருந்து தொடங்கலாம். மெய்யியல் மரபுகளைப் பற்றி மணிமேகலை, நீலகேசி, சமணர்கள் எழுதிய நூல்கள் எல்லாம் பேசின. அவை  எல்லாவற்றிலுமே அவர்கள் பேசுகின்ற பள்ளிகள் இந்த மாதிரியான வகுப்பில் அமையவில்லை. வேதத்தை ஏற்கிறாயா, மறுக்கிறாயா என்கிற இந்த வகுப்பு நடக்கவே இல்லை. அப்போது என்னவாக இருந்தது என்றால், மெய்யியலைக் குறித்து பேசுகிறவர்கள் யார் யார், என்னென்ன கொள்கைகளைப் பேசுகிறார்கள் என்பதுதான். மெய்யியலைப் பற்றி ஆறு பேர் பேசுகிறார்கள். அந்த ஆறு பேரில் சாங்கியம், மீமாம்சை, நியாயம், வைசேடிகம், சமணம், பௌத்தம் ஆறு பேரைத்தான் மணிமேகலை சொல்கிறது. பிறகு கொஞ்சம் தள்ளி நீலகேசியில் சொல்லும்போது, மீமாம்சை என்பதை வேதவாதம் என்று சொல்லுகிறார்கள். – என விளக்கினார்.

இந்திய மெய்யியல் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களிடம் வேதத்தை மையம் ஆக்க கொண்டு வந்த சூழ்ச்சியைக் குறித்து பேசும் போது, இங்குள்ள மெய்யியலாளர்கள் கேள்விகள் கேட்காமல் கடந்த சூழலைக் குறிப்பிடும் போது,

“மேக்ஸ் முல்லர் தொடங்கி இந்திய மெய்யியலை ஆய்வு செய்த அறிஞர்கள் வரை எல்லாரும் அந்த இந்திய மெய்யியலை எப்படி பார்க்கிறார்கள் என்றால், வேதம்தான் மையம், இந்திய மெய்யியலினுடைய நடுவாந்தரமான நூல் எது என்றால், அது வேதம் என்று பார்க்கப்பட்டது.  அப்படி என்றால் தந்திரம், ஆகமங்கள் போன்ற நூல்களே இங்கு இல்லையா? இந்தியாவில் வேதத்தை தவிர வேறு நூல் மரபே இல்லையா, இங்கு இருந்தவர்கள் எல்லாம் என்ன எழுதப் படிக்க தெரியாத முட்டாள்களா, வேறு எந்த பிரிவு மக்களுக்கும் புத்தகமே கிடையாதா, அவன் புத்தகம் தான் புத்தகமா என்ற கேள்விகளை யாரும் கேட்கவில்லை” – என சாடினார் கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள்.

பிற தேசிய இனங்களின் வழிபாட்டு மரபுகளை அழித்து  ஓர்மையை நோக்கி இந்து மதம் கொண்டு செல்வதன் அடையாளமே, கும்பமேளா, ராமர் கோயில் போன்றவற்றின் அடிப்படையில் நிகழும் விழாக்களாக இருக்கின்றன. வைதீக மரபு உருவாக்கிய கற்பனைக் கடவுளர்களுக்கும், புனைவு கதைகளுக்குமான பெருவிழாக்களில் கோடிக்கணக்கானோர் விழுந்தடித்துக் கொண்டு செல்லும் அளவிற்கான மாய வலை வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்த திராவிடப் பழங்குடிகளின் தெய்வங்கள் பன்மைத்துவம் கொண்டவை, தாய்த்தெய்வ வழிபாட்டைப் பின்பற்றியவை.

கடந்த அறிஞர் அவையத்தில் தமிழும், இசையும் குறித்து ஆய்வறிஞரான நா. மம்மது அவர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டையும், பூசாரிகளாக பெண்களே இருந்ததையும் பற்றிக் குறிப்பிடும் போது,

“தாய் வழிச் சமூகம் பற்றிய நம்முடைய இலக்கியப் பதிவுகள் மிக மிகக் குறைவு. அகவன் மகள், கட்டுவிச்சி, கணி, கணிக் காரிகை, படிமத்தாள், சாலினி, தேவராட்டி, வேலத்தி போன்ற சில சொற்கள் மட்டுமே இலக்கியங்களில் உள்ளன… 30 காதைகள் இருக்கின்றன அதில் வேட்டுவ வரியை மட்டும் படியுங்கள். அதில் தான் நம்முடைய தாய் தெய்வம் பற்றியான அனைத்து செய்திகளும் இருக்கின்றன. ‘தமிழர்களுக்கு கடவுள் கிடையாது, தெய்வங்கள் உண்டு‘ என்று என்னுடைய நண்பர் தொ. பரமசிவன் அவர்கள் அருமையாக சொல்வார். அதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அசாமில் ‘காமாக்கியா’ என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்த அம்மன் கோயிலில் சிகப்புத் துணி ஒன்றை துண்டுத் துண்டாக வெட்டி அந்த கோயில் பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த சிகப்புத் துணியை நம்மில் பலர் ‘தீட்டு துணி’ என்று கூறுவார்கள். தீட்டு என்பது புனிதமற்றது என்று நாம் கருதுகிறோம். ஆனால் அங்கு அது புனிதமாக இருக்கின்றது. இதேபோல் அசாமில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள தெய்வங்கள் அனைத்தும் தாய் தெய்வங்கள் தான். எங்கள் ஊரில் சிவனுக்கும் கோயில் கிடையாது, பெருமாளுக்கும் கோயில் கிடையாது. ஆனால் முப்பிடாதி அம்மன் கோயில், இளங்கப் பார்வதி அம்மன், குலசேகர அம்மன் கோயில், என மூன்று அம்மன் கோயில்கள் இருக்கின்றன. இந்தியா முழுக்க பெரும் தெய்வங்களுக்கு கோயில் குறைவு. தாழ்ச்சமூக வழி பிறந்த எங்களுக்குத் தான் கோயில்கள் அதிகம். அதைத்தான் வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் பாடுகின்றார்” – என தமிழர்களின் வழிபாட்டு மரபு என்பது பெண்களால் எழுப்பப்பட்டது என பல சான்றுகளுடன் விளக்கினார்.

இவ்வாறு அறிஞர் பெருமக்கள் இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர்களின் தெய்வங்களைப் பற்றி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்கினர். இம்முறையும் இரண்டாவது ஆண்டாக மே 17 இயக்கம், மார்ச் 15, 16 -ம் நாட்களில் முன்னெடுக்கும் அறிஞர் அவையத்திற்கான நிகழ்வினில், தமிழர்களின் விழுமியங்களை தேடி தேடி ஆய்வு செய்து தொகுத்த ஆய்வுகளை தமிழ் சமூகத்திற்கு ஒப்படைக்க தமிழறிஞர்கள் காத்திருக்கின்றனர். தமிழினத்தின் சமகால அறிஞர்களை ஒருசேர சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்வினை தவறவிடாது தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது. வாருங்கள்!

நிகழ்வு:

தமிழ்த்தேசியப் பெருவிழா,
16 மார்ச் 2025, மாலை 5 மணி முதல், சைதை தேரடி(சைதை ரயில் நிலையம் அருகில்), சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »