
தமிழர் கடலைக் கட்டியாண்டவன் தமிழன் என்பது தற்போது எகிப்திலுள்ள பிரமிடுகளை ஆய்வு செய்தவர்கள் மூலம் வலுவாக நிறுவப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்துக்கு சென்ற தமிழ் வணிகர்கள் தங்கள் பெயரை தமிழி எழுத்து மூலமாக பிடுமிடுகளில் எழுதி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நம் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் உலகளாவிய வாணிபத் தொடர்பை உறுதி செய்திருந்தாலும், பிரமிடுகளில் ‘தமிழி’ இருக்கும் செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்தில் குசீர் அல் காதிம், பெரேனிகே போன்ற பகுதிகளில் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) என அழைக்கப்படும் மன்னர்கள் கல்லறைகளில் இந்த தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
இந்த ஆய்வில் ‘சிகை கொற்றன்’ என்னும் பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் எட்டு முறை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 20 தமிழ் பிராமி என்றழைக்கப்படும் தமிழி எழுத்துப் பொறிப்புகள். இவை கி.பி.100 – கிபி 300 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை என இதனை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை நடத்திய கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், பாரிஸில் உள்ள ஃபிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ‘ஷார்லட் ஸ்மிட்’ மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ‘இங்கோ ஸ்ரௌச்’ ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கல்வெட்டுகளில் தமிழி, பிராகிருதம், காந்தாரி (பாகிஸ்தான் வட்டார மொழி) மற்றும் சமஸ்கிருத மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் தமிழி எழுத்துக்களே அதிக பொறிப்புகளைக் கொண்டுள்ளன. 2800 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழி எழுத்து குயவர்கள் மூலமாக எழுதப்பட்ட மண்பாண்டங்களில் இருந்ததும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழி எழுத்துப் பொறிப்பு எகிப்து பிரமிடுகளில் இருப்பதும் தமிழர்களை மகிழச் செய்திடும் அதே வேளையில், மண்பாண்டங்களில் இருப்பதால் மட்டும் அந்த எழுத்தை குயவர்கள் எழுதியிருப்பதாக சொல்ல முடியாது என்று வன்மம் கக்கிய பத்ரி போன்ற பார்ப்பனர்கள், இப்போதும் பிரமிடுகளில், தமிழி மட்டுமல்ல, சமஸ்கிருதமும் இருக்கிறது என்று முந்திக் கொண்டு வருகிறார்கள்.

எகிப்து பிரமிடுகளில் சமஸ்கிருதம் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருப்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனாலும் சமஸ்கிருத மொழி என்பது, பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கலந்து ‘செய்யப்பட்ட மொழி’ என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்று. இதுவரை ஒன்றாம் நூற்றாண்டில் கிடைத்த சமஸ்கிருத கல்வெட்டு தான் இறுதியாக கிடைத்ததாக இருக்கிறது. சமஸ்கிருதத்தில் முதல் தெளிவான கல்வெட்டு, கி.பி. 150இல் குசராத்தின் ஜூனாகட்டில் தான் கிடைத்திருக்கிறது. இது முதல் பெரிய சமஸ்கிருத கல்வெட்டாகக் கருதப்படுகிறது.
ஆனால் தமிழி கல்வெட்டுகள் ஆய்வுகள் முன்னோக்கி செல்லச் செல்ல, அதுவும் காலத்தால் முந்திச் செல்கிறது. பொருந்தல், கீழடி, சிவகளை போன்ற பகுதிகளில் கிடைத்தவை பலவும் கிமு 500 – 700 வரை முன் செல்கின்றன. இவை கிமு 250 ஆண்டுகளுக்கு முந்தைய அசோகர் பிராமியிலிருந்து வந்ததே தமிழ் ப்ராமி என்பதை உடைத்து தமிழி எழுத்தே முதன்மையானது என்பதை நிரூபிக்கும் ஆய்வு முடிவுகளாகும்.

கீழடி பற்றிய 982 பக்க அகழ்வு அறிக்கையில், தெள்ளத் தெளிவாக ஆதாரங்களுடன் தமிழி எழுத்தின் தொன்மை விளக்கப்படுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். இதுவரையிலான இந்திய வரலாற்றையே தலைகீழாக்கும் கீழடி அறிக்கையை வெளிவரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியை இந்திய தொல்லியல் துறை செய்து கொண்டிருக்கிறது. தொல்லியல் ஆய்வறிக்கையை மதிப்பீடு செய்ய முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குழுவை நியமித்தது கீழடி ஆய்வறிக்கைக்கு தான் என்று சுட்டிக்காட்டினார். எந்தத் தொல்லியல் அறிக்கையும் எழுத்துப்பிழை, இலக்கண பிழை, புகைப்பட பிழை, அட்டவணைப் பிழை போன்றவற்றிற்காகவும் மட்டுமே குழுக்கள் அமைக்கப்பட்டனவே தவிர, தொல்லியல் ஆய்வாளர்களின் அறிக்கையை மதிப்பீடு செய்யும் அளவிற்கு எந்த உள்குழுவும் இதுவரை நியமிக்கப்பட்டது இல்லை எனவும் எடுத்துரைத்தார். இந்தக் குழு கீழடி தளத்தையோ, கீழடி தரவுகளையே முழுமையாகப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார் முழுமையாகப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் அந்த மதிப்பீடு அறிக்கை Al (செயற்கை நுண்ணறிவு) உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயந்திரத் தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியத் தொல்லியல் துறை, கீழடி அறிக்கையின் மீது மட்டும் இந்த அளவிற்கான பாகுபாடு காட்டுவது தமிழர்களின் தொன்மை மீதான அச்சமே என்பதே தொல்லியல் மற்றும் தமிழறிஞர்களின் கூற்றாக இருக்கிறது. தமிழர்களின் மூத்த நாகரிகமும், தமிழியின் தொன்மை எந்த சூழ்ச்சியையும் உடைத்து வெளிவரும் என்பதையே கீழடியிலிருந்து, எகிப்து பிரமிடுகளின் தமிழி எழுத்துப் பொறிப்பு வரை உணர்த்துகிறது.

தமிழர்களின் வரலாற்று உண்மைகள் ஆய்வுகளால் கண்டறியும் தமிழ் அறிஞர்கள் தொல்லியல், கல்வெட்டியல், பண்பாடு, வழிபாடு என விரியும் தமிழர்களின் கருத்தியல் தளங்களில் பணியாற்றுவதற்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். தமிழர்களின் வரலாற்றைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனியம் மட்டத்தை, தங்கள் ஆய்வுகளால் எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களின் ஆய்வுகள் மக்கள் தளங்களில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்கிற கடமையின் அடிப்படையிலேயே மே 17 இயக்கம் தமிழ் தேசிய பெருவிழாவை நடத்துகிறது. பல துறை சார்ந்த அறிஞர்களின் அவையமாக ஆண்டுதோறும் கூடுகிறது. இந்த ஆண்டும் மார்ச் 7, 8-ம் நாட்களில் சென்னையில் அறிஞர் அவையம் நடைபெற இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் தங்களின் வரலாற்று உண்மைகளை ஆய்வாளர்கள் மூலமாக அறிந்து கொள்ள மே 17 இயக்கம் அழைக்கிறது.
கீழடி அறிக்கையால் எரிச்சலடையும் இந்திய பார்ப்பனிய அதிகார மட்டமும், தமிழர்களுக்கு எதிராக பேசும் பார்ப்பனர்களும் என்ற கட்டுரை வாசிக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.