[மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களது பதிவு]
புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் தராகி சிவராம் ஐரோப்பாவில் உரையாற்றும் போது, “ஆசியக் கண்டத்தில் தனது படைகளை நகர்த்த அமெரிக்காவிற்கு போதுமான துறைமுகங்கள் கிடைக்கவில்லை. ஈராக் போரின் போது அமெரிக்காவின் கடற்படை பனாமாவிலிருந்து 5000 கிமீ தொலைவிற்கு நகர்த்த வேண்டியதாக அமைந்தது. மத்திய ஆசியா, கிழக்காசியா பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்பி போர் செய்ய வேண்டுமென்றால் ஈழத்தின் திரிகோணமலை தேவை.” என்றார். இதனாலேயே ஈழத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ தளங்களை உருவாக்க ஆரம்பித்தால் போட்டி ராணுவ அரசியல் வளர்ந்து பிராந்தியம் ராணுவ மயமாகும் என்பதே அவரது ஆய்வின் முக்கிய பகுதியானது.
ஆசியாவின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஈழம் அவசியம் என்பதை ஆய்வுப்பூர்வமாக முன்வைத்தார். இந்த காணொளியை ஜெர்மனியின் சிங்களப் பத்திரிக்கையாளர்கள் தங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோவை எப்பகுதிகளில் இருந்து பார்த்தார்கள் எனும் விவரத்தை தராகி சிவராம் எடுத்து பார்த்திருக்கிறார். அதன் விவரங்களை முன்வைத்து இதில் பெரும்பான்மை பார்வையாளர்கள் அமெரிக்காவில் இருந்ததை எடுத்துக்காட்டியுள்ளார். இந்த கருத்தரங்கிற்கு பின் இலங்கைக்கு சென்ற சில மாதங்களுக்குள்ளாக படுகொலை செய்யப்பட்டார்.
தமிழினம் கண்ட மிகச்சிறந்த ஊடகவியலாளராக தராகி சிவராமை மட்டுமே சொல்ல இயலும். இராணுவ-சமூக-பொருளாதார-மார்க்சிய சிந்தனையாளராக, ஈழவிடுதலையின் ஆதர்சன சிந்தனையாளராக ஊடகவியலாளராக அவர் மிளிர்ந்தார். அவரது பார்வையை மே17 இயக்கம் தமது பிற்காலத்தில் அறிந்த பொழுது அதை முழுமையாக கவனப்படுத்தியது.
தராகி சிவராமைப் பேசும் தமிழ்நாட்டின் ஊடகவியலாளர்களில் பலர், குறிப்பாக ‘தி இந்து’வில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், தராகியின் சர்வதேச பார்வையையும், ஈழத்தின் அவசியத்தை வலியுறுத்திய வாதத்தையும் கவனமாக தவிர்ப்பார்கள். இல்லையெனில் என்.ராம் ஆணவப்போக்கும், தமிழின-திராவிடர் இயக்க விரோதமும் கொண்ட பார்ப்பனிய சிந்தனையாளர் என இப்பத்திரிக்கையாளர்களே ஏற்றுக்கொண்டதாகிவிடும் அச்சம் அவர்களுக்குண்டு.
எனது பதிவு இதைப் பற்றியதல்ல. தற்போதைய திமுக அரசில் ஒட்டுண்ணிகளாக உறிஞ்சிக்கொண்டிருக்கும் ‘தி இந்து’ ஊடகக் குழுமம் அமெரிக்காவின் தெற்காசிய தலையீட்டையும், சீனாவின் விரிவாதிக்க தலையீட்டையும் விவாதமாக்காமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தினை சுற்றி வட்டமிட்ட வல்லூறுகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருப்பதை மே17 இயக்கம் பலமுறை எச்சரித்திருக்கிறது. இவற்றைப்பற்றிய விவாதங்களை திமுகவின் அறிவுச்சமூகம் உதாசீனப்படுத்துவதற்கான காரணம் அறிந்ததே. இதை வலுவிழக்கச் செய்யும் விதமாக பல்வேறு அவதூறுகளின் வழியே இந்த அரசியல் விவாதம் பெறாமல் திசை திருப்பப்படுவதை போலி புரட்சிக்கும்பல் சங்கிகளைப் போல ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது.
தராகி சிவராம் கொலை ஈழத்திற்கும், தமிழினத்தின் அரசியல் தளத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. புலிகளால் அழிக்கப்பட்ட சிங்களப்பீரங்கி முன் நிற்கும் அப்புகைப்படத்தின் அரசியல் முக்கியமானது. இவற்றையெல்லாம் பேசி இருக்கவேண்டிய போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு கும்பல், விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகளை பரப்புவதை வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்தது. இன்றும் இதே வன்மத்தை மூலதனமாக்கி இந்தியப் பார்ப்பனியத்திடம் அண்டிப்பிழைக்கிறது. தராகி முன்வைத்த கோட்பாடு இன்றய தினத்தில் மீண்டும் நம்மை எழுப்பி இருக்கிறது.
மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணம், அமெரிக்க ராணுவத்தின் நீண்டநாள் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அமெரிக்க கப்பல்படையின் சீரமைப்பு பணிக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தத்தை போட்டிருப்பதை பூவுலகின் நண்பர்கள் அம்பலப்படுத்தி உள்ளார்கள். இந்தக் காட்டுப்பள்ளி துறைமுகத்தினை தனியாருக்கு தாரைவார்ப்பது, விரிவாக்கம் செய்வது ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான போராட்டம் சில ஆண்டுகளுக்கு முன்நடந்தது. அப்போராட்டம் இன்றும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாக இலங்கையில் அமெரிக்கா போட்ட ராணுவ ஒப்பந்தத்தினை கவனிப்பது முக்கியமானது.
2007ம் ஆண்டில் ACSA ஒப்பந்தத்தை இலங்கையுடன் அமெரிக்கா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தமானது திருகோணமலையை அமெரிக்காவின் ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வர இலங்கை ஒத்துக்கொண்ட ஒப்பந்தமாகும். இதன்படி அமெரிக்காவின் கப்பல்படை தனக்கான தாக்குதல் தளமாகவும் போர்காலத்தில் பயன்படுத்த இயலும். இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட அமெரிக்காவின் பிராந்திய அதிகாரியாக இருந்த ராபர்ட்ப்ளேக், ’…இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் வாசலில் நம் ராணுவ நடவடிக்கைகளுக்காக கேந்திரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக பல்வேறு ஆசியாவின் இராணுவ கேந்திர பிராந்தியங்களில் இயங்க (various theater) இயலும்…’ என்பதை தனது இராணுவ-அரசியல் தலைமையகத்திற்கு அனுப்பிய கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறிய அதே ஆண்டில் அமைதி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தவும், பேச்சுவார்த்தையை தலைமை தாங்கவும் என அமைதி செயலகத்தை நடத்திய தமிழ்ச்செல்வன் அலுவலகம் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதுவரை பயன்படுத்தப்படாத யுக்திகள் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியை அமெரிக்காவிற்காக இலங்கை படுகொலை செய்தது.
இச்சமயத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இலங்கையையும், அமெரிக்காவையும் அம்பலப்படுத்தி இருக்க வேண்டிய நார்வே அமைதிக்குழு அமைதி காத்தது. இதன் முக்கியப்பொறுப்பாளரான எரிக் சோல்ஹேம் அமெரிக்காவிற்காக திறம்பட இத்துரோகத்தை செய்தார். இவர் தான் இன்றய திமுக அரசின் சுற்றுப்புறச்சூழல் குழுவின் பொருப்பாளராக செயல்படுபவர். பழவேற்காடு பகுதியில் அமைந்திருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏன் இப்படியான ராணுவ சீரமைப்பு துறைமுகம் வருகிறது எனும் நியாயமான கேள்வியை எழுப்பாமல் கள்ள மெளனம் காக்கிறார். தான் எந்த பணியை செய்ய வந்தாரோ அதை திறம்பட செய்து முடித்திருக்கிறார்.
தேசியத்தலைவர் சொன்னதைப் போல நார்வே அமெரிக்காவின் அமைதிமுகம் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இதைப் பற்றியும் இந்த போலிக்கும்பல் இப்போது பேசாது. ஆனால் சூழலியல் அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட பூவுலகு இந்த செய்தியை அம்பலப்படுத்தி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்த ACSA ஒப்பந்தத்தினை 1976ல் திருகோணமலையில் கைசாத்திட அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே முயற்சி செய்த போது, இது இந்தியாவிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்று இந்திரா காந்தி அம்மையார் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுதப்பயிற்சியை அளித்து தனக்கு சாதகமான சூழலை உருவாக்க முயன்றார். இதனால் இந்த ஒப்பந்தத்தினை அமெரிக்காவால் கையெழுத்திட இயலாத சூழல் எழுந்தது. இப்படியான இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தினை இந்தியாவின் எதிர்ப்பு இல்லாமல் 2007ல் அன்றைய மன்மோகன் அரசு கையெழுத்திட உதவியது.
இதன் காரணமாகவே திரிகோணமலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கருணாவைக் கொண்டு பிளவினை ஏற்படுத்தியது. ஆனால் கருணாவின் பிரிவு சமூக அநீதியால் ஏற்பட்டது என இந்தியாவில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதை சோ-கால்டு முற்போக்காளர்களே திறம்பட செய்தார்கள். அன்றைய கருணா ஆதரவாளர்கள், இன்று அவர் எவ்வகையான சமூகநீதியை செய்துகொண்டிருக்கிறார் எனும் கேள்விகளை எழுப்பாமல் மெளனமாக கடந்து சென்றார்கள்.
இவர்கள் அனைவருமே கூட்டமைப்பாகவே ஈழத்தை நசுக்குவது, புலிகளை அழிப்பது, அமெரிக்காவின் தலையீட்டிற்கு வழி செய்வது, சிங்களப்பேரினவாதத்திற்கு உதவி செய்வது என்பதை செய்து இந்தியாவின் பாதுகாப்பிற்கும் சேர்த்து வேட்டு வைத்தார்கள். புலிகள் அழிக்கப்பட்டதற்கு பின்னால் இன்று வரை புலி எதிர்ப்பு ஒப்பாரியை நடத்திக்கொண்டிருப்பதன் பின்னணி என்பதே இவர்களது ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் என்பதைத் தவிர வேறல்ல.
அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கும் விதமாகவே முள்ளிவாய்க்காலின் இறுதி காலத்தில் தனது படைகளை முள்ளிவாய்க்காலில் தரையிறக்கம் செய்வதாக அமெரிக்காவின் யோசனையை ஈழ அரசு நிராகரித்தது. இவை அனைத்தும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இப்பிராந்திய அமெரிக்காவின் தூதரக செய்தித்தொடர்பு விவரங்களில் அடங்கி உள்ளது. இதை ஆய்வு செய்து மே 17 இயக்கம் 2013ல் அம்பலப்படுத்தியது. இதனாலேயே அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானங்களை மே 17 இயக்கம் நிராகரிக்க கோரிக்கை வைத்து போராட்டத்தை முன்னகர்த்தியது. அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. அந்த வழக்கை இன்றும் எதிர்கொண்டிருக்கிறது.
வழக்கம் போல, இக்காலத்திலும், போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு பூசாரிகள் விடுதலைப்புலி எதிர்ப்பு புராணம் பாடி வந்தனர். இவ்வகையில் தமிழினத்தை எதிரிகளின் கைகளில் ஒப்படைக்க காங்கிரஸ்-பாஜக இரண்டுமே தம்மால் ஆன உதவிகளை செய்தார்கள். வாஜ்பாய் காலத்தில் அம்பந்தோட்டா துறைமுகத்தை இந்தியாவிற்கு கொடுக்க இலங்கை முன்வந்த போது அதை நிராகரித்தார்கள். பின்னர் இந்தியாவின் ஒப்புதலோடு சீனாவிற்கு தாரை வார்த்தார்கள். இதை பாஜக அரசு மிக மகிழ்ச்சியாக செய்தது. பின்னர் தற்போது சீனா கப்பல் வருவதை காரணம் காட்டி அமெரிக்காவின் கப்பல் படைக்கு அனுமதி கொடுத்தார்கள். தற்போது இந்தியாவின் கரைகளிலேயே அமெரிக்காவின் கப்பற்படைக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக இப்படியாக மோடி அரசு பணிந்திருக்கிறது. மிகக்குறிப்பாக தமிழ்நாட்டின் கடற்கரை தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. தேசபக்தர்கள் எனும் சங்கிக்கூட்டம் தமிழ்நாட்டை தாரை வார்த்து தேசபக்தியை நிலைநாட்டி உள்ளார்கள். ஆக இப்பகுதியில் இரண்டு துறைமுகங்களில் அமெரிக்காவின் கப்பற்படை தளம் அமைந்திருக்கிறது எனலாம். இந்த ஒப்பந்தத்திற்காக மோடியை நெருக்கடி கொடுக்கவே ராகுலை அமெரிக்கா பயன்படுத்தியது. ராகுலும், காங்கிரஸும் இந்த ஒப்பந்தம் குறித்து பதில் பேசவோ, கேள்வி எழுப்பவோ இல்லை.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி குறித்தும், இதனூடாக அமெரிக்காவிற்கு வெளியே ஆசியப்பகுதியில் அமெரிக்காவிற்கான ராணுவ தளவாட, ஆயுத உற்பத்தி மையங்கள் இந்தியாவில் உருவாவதற்கான ஒப்பந்தம் நிறைவேறி இருக்கிறது. இதில் முக்கியமானதாக, தமிழ்நாட்டில் ராணுவ உற்பத்தி மையங்கள் – Defense Corridor – உருவாவதை மோடி அரசு அறிவித்திருந்தது. இதை கொங்குப்பகுதியிலிருந்து திருவண்ணாமலை வரையிலான பகுதிகள் உள்ளாக்கப்படலாம். சென்னைக்கு அருகே மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியிலும் இம்மண்டலங்கள் உருவாகலாமெனும் விவரங்கள் கடந்த காலத்தில் பேசப்பட்டிருக்கிறன.
அமெரிக்காவின் எதிர்கால போர்களுக்கான பின்னணி ராணுவ தளங்களாக தமிழினம் வாழும் பகுதியை இலங்கையும், இந்தியாவும் தாரை வார்த்துள்ளன. திருகோணமலையிலிருந்து தமிழ்நாட்டின் கடற்கரை, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி என அனைத்தும் கவனம் பெறும் பகுதியாக இவர்களால் மாற்றப்பட்டுள்ளன. இவற்றோடு ஈழத்தின் நெடுந்தீவு, தமிழ்நாட்டின் கச்சத்தீவு ஆகியனவும் ராணுவ முக்கியத்துவமான பகுதியாகியுள்ளது.
தமிழீழம், தமிழ்நாடு ஆகியன அமெரிக்கா-சீனா ஆகியவற்றின் ராணுவ-வணிக விரிவாக்கத்தின் போட்டிப்பகுதிகளாக மாற்றப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஆரோக்கியமானதல்ல. இதையே மே17 இயக்கம் கடந்த 14 ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது. 2011ம் ஆண்டு மே மாதம் செ.தே.நாயகம் பள்ளியில் இதை விரிவான ஆய்வாக அன்று முன்வைத்தோம். அன்றிருலிருந்து இன்றுவரை பலவேறு தரவுகளை முன்வைத்து நாங்கள் நடத்தி வரும் விவாதத்தின் சாராம்சத்தினை தமிழினம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதே எமது விருப்பம்.
இதைத் தவிர்த்து வாக்குவங்கி அரசியலுக்கான விவாதங்கள் மட்டுமே திட்டமிட்டு முன்னிறுத்தப்படுகின்றன. இதில் ஆளும் வர்க்கங்களின் நலன்கள் பின்னுக்கு இருக்கின்றன. இதை திறம்பட ‘தி இந்து‘ குழும நபர்களும், போலி புரட்சிகர கும்பல்களும் செய்து வருகின்றன. இவற்றை அம்பலப்படுத்தி மே 17 இயக்கம் முன்னகரும்.
தமிழினம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய ஆவணத்தை பூவுலகின் நண்பர்கள் வெளிக்கொண்டு வந்தது வாழ்த்திற்குரியது. இந்த ஆவணம் மே 17 இயக்கத்தின் நீண்டநாள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆவணமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து தமிழின அரசியல் நலன் சார்ந்து விவாதத்தினை மே 17 இயக்கம் முன்னகர்த்தும். திமுக அரசு இக்காலத்திலாவது தமிழ்நாட்டிற்கான இறையாண்மை மிக்க வெளியுறவுக் கொள்கைக்காக ஆவணத்தையும், கொள்கைத் திட்டத்தையும் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இதையே கடந்த காலத்தில் மே 17 இயக்கம் சொல்லி வந்துள்ளது. இக்கோரிக்கையை வலுப்படுத்த மேலும் மே 17 இயக்கம் உழைக்கும்.
ஈழ விடுதலை அரசியலை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டினைச் சுற்றி செயல்படும் அரசியலை புரிந்து கொள்ள இயலாது. விடுதலைப்புலிகளை நிராகரித்துவிட்டு இந்த அரசியலை விளங்கிக்கொள்ளவும் இயலாது. ஈழத்தையும், புலிகளையும் வெறுப்பவர்கள் அனைத்து வகையிலும் தற்குறி அரசியலை பேசுபவர்கள் மட்டுமல்ல, இந்தியப் பார்ப்பனியம், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இயங்குவார்கள் என்பது தவிர்க்க இயலாதது.
நாம் வெல்வோம்.
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்
04/07/2023
ஒப்பந்தம் குறித்த இரு அரசுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள்:
https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/06/22/fact-sheet-republic-of-india-official-state-visit-to-the-united-states/
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849430