பல்லாண்டுகளாக சர்வதேச அரசியல் களத்தில் உருட்டப்படும் பகடைக்காயாக மத்திய கிழக்கு நாடுகளின் மையப்பகுதியில் இருக்கும் சிரியா பல்வேறு அரசுகள் ஆடும் சதுரங்கத்தில் தனது அதிபரை இழந்துள்ளது. இது சிரியாவில் 13 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரின் முடிவாக அந்நாட்டின் அதிபர் பஷர் அல்-ஆசாத் தப்பிச் சென்றதைக் குறிக்கிறது.
சிரியாவை கடந்த 24 ஆண்டுகளாக ஆண்டு வந்தது பஷர் அல்-ஆசாத் என்பவராவார். இதற்கு முன்பும் அவரது தந்தையின் ஆட்சியே நிகழ்ந்தது. இவர்களின் ஆட்சியின் கீழ் சிரியா கடந்த 53 ஆண்டுகளை கடந்துள்ளது. 2000-ல் பஷர் அல் ஆசாத் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து 2011-ல் தொடங்கிய உள்நாட்டு போர் 2017-ல் முடிவடைந்ததாகக் கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரஷ்யா, ஈரான் மற்றும் ஈரான் சார்பான ஆயுதக் குழுக்கள் உடன் சேர்ந்து முக்கிய நகரங்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய நிலையில் உள்நாட்டு போர் முடிவடைந்தாக ஆசாத் தனது ஆட்சியை தொடர்ந்தார்.
இந்நிலையில் மத தீவிரவாத ஆயுதக் குழுக்கள், துருக்கிய ஆதரவு போராளிகளுடன் சேர்ந்து கடந்த டிசம்பர் 3, 2024-ல், சிரிய அரசாங்கத்தின் படைகளிடம் இருந்து இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றியதிலிருந்து சிரிய உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்தது. பிறகு ஹமா, ஹோம்ஸ் டெமாஸ்கஸ் என்று அவர்கள் தங்களது தாக்குதலை தொடர்ந்து தற்போது சிரிய அதிபர் வெளியேற்றத்துடன் சிரியாவை கைப்பற்றியுள்ளனர்.
சிரியாவின் உள்நாட்டு போர்
2000-ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு லண்டனில் கண் மருத்துவரான ஆசாத் தன் அண்ணன் கார் விபத்தில் மரணிக்க, அதிபரானார். இவரது ஆட்சி முதலாளித்துவ தாராளமய ஆட்சியாக நடந்தது.
பஷார் அல்- ஆசாத் தன் தந்தையுடன்
பல மனித உரிமைகள் குழுக்கள் அசாத் அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்து கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். சிரிய அரசு கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையால் பெரும் முதலாளிகளே அங்கு வளர்ந்தனர். அதுமட்டுமல்லாது மற்ற அரசுகள் சிரியா மீது தொடுத்த பொருளாதார கொள்கையால் சமூகத்தில் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்தன. பின்தங்கிய பொருளாதாரம், அதிகமான வேலையின்மை, அரசாங்க ஊழல் மற்றும் கடுமையான வறட்சி ஆகியவை அசாத்தின் ஆட்சியின் கீழ் மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கிய பிற பிரச்சனைகள் ஆகும்.
மற்றொரு சமூக பிரச்சனையாக பதட்டமான மத சூழ்நிலை சிரியாவில் தொடர்ந்தது. பெரும்பாலான சிரியர்கள் சுன்னி முஸ்லீம்கள், இருப்பினும் சிரியாவின் அரசாங்கம் ஷியா அலாவைட் பிரிவின் உறுப்பினர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இந்த இரு குழுக்களின் மத்தியில் உள்ள பதட்டங்கள் சிரியா மட்டுமல்லாது மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளிலும் தொடர்வதைக் காணலாம்.
சிரிய உள்நாட்டுப் போருக்கு சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, அரசாங்க ஊழல் மற்றும் கடுமையான வறட்சி எனப் பல காரணங்கள் வழிவகுத்தாலும், அரபு வசந்தம் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு, மோதலுக்கு மிக முக்கியமான தூண்டுதலாக இருந்தது. 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில், எகிப்து, துனிசியா, லிபியா, எகிப்து, ஏமன்-யில் தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார எதிர்ப்புகள் சிரியாவையும் விட்டு வைக்கவில்லை.
2011-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்டு பதாகை எழுதியதற்காக 15 சிரிய பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இதில் ஒரு சிறுவன் கொல்லப்படுகிறான்.
அதைத் தொடர்ந்து கைதான சிறுவர்களை விடுவிக்கக் கோரியும், தங்களின் சுதந்திரத்துக்காகவும் பெரும் போராட்டம் தொடங்கியது. ஆனால் ஆசாத் அரசு சிறுவர்களை விடுவிக்காமல் போராட்டக்காரர்களை கைது செய்தது.
இந்த எதிர்ப்புக்கு அமெரிக்க சனாதிபதி ஒபாமா ஆதரவளிக்க சிரியாவில் நிகழ்ந்த குழப்பங்களை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அமெரிக்கா சிரிய கிளர்ச்சியாளர்கள் துணையுடன் ஜூலை 2011 இல், சுதந்திர சிரிய இராணுவத்தை (FSA) உருவாக்கியது. அதை தொடர்ந்து சிரியாவில் ஒரு உள்நாட்டுப் போர் உண்டானது.
சிரியாவின் உள்நாட்டுப் போர் 2011 முதல் 2017 வரை தீவிரமாக நடந்த நிலையில், 2018-ல் சிரியா மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதை பஷர் அல் ஆசாத், குர்தீஷ் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் என மூன்று குழுக்கள் கட்டுப்படுத்தியது.
பல்வேறு கூறுகளான சிரியாவின் முக்கியக் காரணம் அங்கிருந்த பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ஆகும்.
அல்-ஃபதா அல்-முபின் என்பது சிரிய உள்நாட்டுப் போரில் பங்கேற்கும் சிரிய எதிர்ப்பின் இஸ்லாமிய மற்றும் தேசியவாத பிரிவுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை குழுவாகும்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் Hay’at Tahrir al-Sham இது முகமத் அல் ஜோலனியால் வழி நடத்தப்படுகிறது. ISIS ன் வேர்கள் கொண்ட ஜோலானி அல்-கொய்தாவின் துணை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவை தொடங்கினார். ஆனால் ஜோலானி அல் – கொய்தாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய தேசிய இராணுவம் (SNA), வடக்கு சிரியாவில் துருக்கியின் இராணுவப் பிரிவாக செயல்படுகிறது. இவர்கள் துருக்கி ஆயுதப்படைகளால் ஆயுதம், நிதியுதவி பெற்றவர்கள் மற்றும் அவர்களின் கட்டளையை பின்பற்றுபவர்கள். துருக்கி குர்திஷ் மக்களின் சுயாட்சிக்கு எதிரானது ஆதலால் வடக்கு இட்லிப் மற்றும் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள ரோஜாவாவின் சில பகுதிகளில் செயல்படும் SNA, குர்திஷ் ‘சிரிய ஜனநாயகப் படைகளுடன் (SDF)’ நேரடி மோதலில் உள்ளது.
‘வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகமான AANES’-ன் கீழ் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG) தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) அதிகாரப்பூர்வ இராணுவப் பிரிவாகச் செயல்படுகின்றன. சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) என்பது அமெரிக்க ஆதரவுடைய இனப் போராளிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களாகும். இவர்கள் இங்கு ஆண் பெண் சமத்துவத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இராணுவப் பிரிவாகச் செயல்படுகிறார்கள். இது ஒரு தன்னாட்சி பிரதேசமாக செயல்படுகிறது. இவர்கள் அடிக்கடி துருக்கி ஆதரவுப் படைகளால் குறி வைக்கப்படுகிறார்கள்.
சிரிய சுதந்திர இராணுவம் (SFA) இது அமெரிக்காவின் இராணுவத்தால் பயிற்சி பெற்ற சிரிய எதிர்ப்புப் பிரிவு ஆகும், இது சிரியாவின் ஈராக் மற்றும் ஜோர்டானுடனான எல்லைக்கு அருகில் உள்ள பகுதியையும் மற்றும் சிரிய நாட்டின் கிழக்கு ஹமாவின் ஒரு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது அல்-டான்ஃப் என்ற இடத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சிரியாவின் வீழ்ச்சிக்கு அங்கு நிகழும் மதவாத, இனவாத போர்கள் மட்டும் காரணமில்லை. சிரியாவில் நிகழும் குழப்பங்களுக்கு ஆணிவேராக அமைந்தது சிரியாவின் வழியே செல்லும் எரிவாயு குழாய்களுக்கான திட்டம்
சிரியாவின் எரிவாயு குழாய்கள்
சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு முன், கத்தார் மற்றும் ஈரானால் இரண்டு எரிவாயு குழாய்கள் சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவைக் கொண்டு செல்ல முன்வைக்கப்பட்டது..
கத்தாரின் திட்டங்கள் முதன்முதலில் 2009-இல் முன்வைக்கப்பட்டது மற்றும் பாரசீக வளைகுடாவிலிருந்து சவுதி அரேபியா, ஜோர்டான், சிரியா மற்றும் துருக்கி வழியாக அமைக்கும் திட்டம் கொண்டது அது. ஆனால் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் தனது பிரதேசத்தின் வழியாக குழாய் செல்ல அனுமதி வழங்க மறுத்துவிட்டார். ரஷ்யா தனது சொந்த வியாபாரத்தை பாதுகாப்பதற்காக குழாய்த்திட்டத்தை நிராகரிக்க அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக சிலர் நம்புகின்றனர். இந்த திட்டத்திற்கு அமெரிக்காவும் தனது எதிர்ப்பை பதிவிட்டது. ஏனென்றால் மத்திய ஆசியாவில் தனது அதிகாரத்தை அது நிறுவ நினைத்ததால் அது எதிர்த்தது.
இதன் பிறகு இந்த திட்டத்தை ஈரான் கையிலெடுத்தது. பாரசீக வளைகுடா எரிவாயு வயலின் சிறிய பங்கை வைத்திருக்கும் ஈரான், ஈராக் மற்றும் சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு மத்தியதரைக் கடலுக்கு அடியிலும் அதன் சொந்த போட்டித் திட்டத்தை பதிவு செய்தது. இதற்கு ரஷ்யா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் ஆசாத் இதற்கு ஒப்புக்கொண்டார். 2012-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாமதமானது.
இந்த உள்நாட்டு போருக்கு கத்தார் மற்றும் சவூதி அரேபியா நிதியுதவி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் டிம்பர் சைகாமோர்(Operation Timber Sycamore) போன்ற சிஐஏ திட்டங்களின் கீழ் பில்லியன் டாலர் கணக்கில் ஒபாமா ஆட்சி காலத்தில் கத்தார் மற்றும் சவூதி அரேபியா சேர்நது பஷர் அல்-ஆசாதின் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியது.
கத்தாரின் இந்த எரிவாயு குழாயினால் அதிகம் பயனடையப் போவது துருக்கியே. ஆதலால் தான் இந்த திட்டம் கைகூடாமல் போனதும் HTS-ன் ஆதரவு மற்றும் வேறு தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி, ஆசாத் அங்கீகரித்த குர்திஷ் பிராந்தியதோடு மோதல் என தனது எதிர்ப்பை நிலைநாட்டி வந்தது.
அமெரிக்க இராணுவத்தின் கட்டளை மற்றும் பொதுப் பணியாளர் கல்லூரியின் பயிற்றுவிப்பாளரான மேஜர் ராப் டெய்லர், “ஒரு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பார்வை மூலம் பார்க்க, சிரியாவின் உள்நாட்டு மோதல் ஒரு உள்நாட்டுப் போராக அல்லாமல் பெரிய சர்வதேச வீரர்களின் எரிவாயு குழாய் திட்டங்களின் மூலம் புவிசார் அரசியல் எனும் சதுரங்கப் பலகையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதன் விளைவு” என்று குறிப்பிடுகிறார்.
சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கி 13 ஆண்டுகளில் பல்வேறு உள்நாட்டுப் போர் நிகழந்தது. ஈரான் மற்றும் ரஷ்ய ஆதரவுடன் சிரியா தனது நிலங்களை மீட்டெடுத்தாலும் சில ஊடுருவல்கள் இருந்த வண்ணமே இருந்தன. லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் , சிரிய மற்றும் ஈராக் படைகளுடன் இணைந்து, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உதவினர். ஆசாத் தனது இராணுவத்தை விட ஈரான் மற்றும் ரஷ்யா இராணுவத்தை பெரிதும் நம்பியதாக கூறப்படுகிறது.
சிரியாவின் பிரச்சனையை மிகவும் சுருக்கி உள்நாட்டு பிரச்சனையாக மட்டும் பார்க்க இயலாது. அதன் நட்பு நாடுகளில் நடந்த மாற்றங்களும் அதன் தாக்கங்களுமே சிரியாவின் வீழ்ச்சி.
மத்திய கிழக்கை நாகரிகத்தின் தொட்டில் என்று அழைப்பர். நாகரிகம் மட்டுமல்லாமல் உலகின் கச்சா எண்ணெய் இருப்புகளில் 50% மற்றும் உலகின் இயற்கை எரிவாயு இருப்புகளில் கிட்டத்தட்ட 40% இங்கே உள்ளது. இந்த வளங்களே தற்போது உலகை இயக்குகிறது. ஆதலால் தான் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த இத்தனை போட்டிகள் ஆட்சி கவிழ்ப்புகள் மற்றும் போர்கள்.
ஆதலால் தான் ஈரான் தன்னை பாதுகாத்துக்கொள்ள ஹமாஸ், ஹௌதிஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை ஆயுதங்கள் மற்றும் பயிற்சி கொடுத்தும் ஆதரித்தது. ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிரான அமெரிக்க இராணுவத்தின் சர்வதேசப் பிரச்சாரத்தின் பெயர் ஆபரேஷன் இன்ஹெரண்ட் ரிசால்வ் (OIR) ஆகும். இஸ்லாமிய அரசை “இழிவுபடுத்துவதும் அழிப்பதும்” இதன் குறிக்கோளாகும். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக இராக்கின் சதாம் ஹூசைன் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து லிபியாவின் கடாபியும் கொல்லப்பட்டார். சதாம் ஹூசைனின் இறப்பிற்கு பிறகு டமாஸ்கஸில் 2008-ல் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில், லிபியாவின் அப்போதைய தலைவரான முயம்மர் கடாபி, சிரியாவின் அதிபர் பஷர் அல்-ஆசாத் உட்பட தனது சக அரபுத் தலைவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அரசியல் வீழ்ச்சி குறித்து கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆசாத் அன்று சிரிப்புடன் கடந்து சென்று விட்டார். இருப்பினும் சமீபத்திய நிகழ்வுகள் அதன் உண்மைத்தன்மையை புலப்படுத்துகிறது.
அமெரிக்கா 2003 காலகட்டத்தில் இருந்தே சிரிய அரசாங்கத்தை கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்க, இன்று இஸ்ரேல் மற்றும் தான் வளர்த்தெடுத்த குழுக்களுடன் அந்த வெற்றியை அடைந்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் ஹமாஸ், லெபனானில் ஹெசபோல்லா மற்றும் யேமெனின் ஹௌதிஸ் என்று ஈரான் ஆதரவாளர்களைக் குறி வைத்து ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. மற்றொரு வழியில் ஈரானின் தலைவர்களை சிரியாவில், லெபனானில் கொன்றும் நெருக்கடி கொடுத்தது. ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனிற்கு ஆயுதம் வழங்கியும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது. சிரியாவிற்கு பக்கபலமாய் இருந்த இரு அரசுகளையும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சோர்வடைந்த நிலையில் சிரியாவின் மீது நடந்த தாக்குதல் வெறும் 11 நாட்களிலேயே ஆசாத்தின் ஆட்சி கவிழ காரணமாய் இருந்தது.
தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ள HTS ன் முகம்மது அல் ஜோலானி அல் கொய்தா வில் இருந்து பிரிந்து வந்தாலும் தன்னை ஜிஹாதியாகவோ அல்லது இஸ்லாமிய அரசாகவோ அடையாளப்படுத்திக்க விரும்பவில்லை. சிரியாவின் மக்கள் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடும் வேலையில் பல கிளர்ச்சி குழுக்களை கொண்டுள்ள சிரியா எந்த அரசியல் கொள்கையையும் இன்று வரை அறிவிக்காத HTSன் அரசியல் ஒருபுறம். மறுபுறம் இந்த அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை நோக்கி நகர்ந்து வரும் இஸ்ரேல்.சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் அது கிளர்ச்சியாளர்களிடமோ இல்லை தீவிரவாதிகளின் கையிலோ கிடைத்து விடக்கூடாது என்பதே அதன் நோக்கம் என்று கூறினாலும் சிரியாவின் அரசியல் ஆதரவு அதன் கொள்கைகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே சிரியாவின் முடிவாக அமையும்.
சிரிய அரசியல் சூழலை தமிழ்நாட்டில், மெரினா கடற்கரையில் விவேகானந்தா இல்லத்தின் எதிரே நடந்த ஜல்லிக்கட்டு போராட்ட வடிவத்துடன் ஒப்பிட்டு சொல்லலாம். சிறு போராட்ட குழுவுடன் ஆரம்பித்த போராட்டம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி பல குழுக்கள் இதில் பங்கேற்கும் அளவு விரிவடைந்தது. ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தொடங்கிய இந்த போராட்டம் பல்வேறு குழுக்கள் உப்புகுந்ததால் வெவ்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் மே 17 இயக்கம் போராட்டத்தில் மக்களோடு கலந்து மக்களுக்கான உண்மையான தேவையை எடுத்துரைத்தது. போராட்டத்தை நெறிப்படுத்தியது தடைக்குப் பின் உள்ள அரசியலை வெளிப்படுத்தி கொள்கைகளை தெளிவாக்கியது. அதுவே ஜல்லிக்கட்டு தடை திரும்ப பெற வழிவகுத்தது. எண்ணற்ற குழுக்கள் பெருகினாலும், கொள்கைத் தெளிவுள்ள குழுவே, ஆயுதப் போராட்டமானாலும் சரி, ஜனநாயக வழிப் போராட்டமானாலும் வழிநடத்த முடியும் என்பதே ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி.
இன்று, மேற்குலகிற்கு எதிரான கொள்கை கொண்ட சிரிய அதிபர் வெளியேறிய நிலையில் தற்போது சிரியாவை ஆக்கிரமித்திருக்கும் மதவாத இனவாத குழுக்கள் எந்த அரசியலை தேர்ந்தெடுக்கும் என்று உலகம் கூர்ந்து நோக்கிய வண்ணம் உள்ளது. மதவாதிகளால் ஒருபொழுதும் சரியான அரசியலை செய்துவிட இயலாது.
ஓட்டோமான் பேரரசு கனவுடன் துருக்கியும், ஜியோனிச பேராசைக் கனவுடன் இசுரேலும் மேற்குலக ஆதிக்கத்தின் கீழாகவே இயங்க இயலும். இன்று வரை ஈரானின் தடுப்பு சுவராக இருந்த சிரியா, லெபனான், பாலஸ்தீனம் ஆகிய அனைத்தும் வீழ்ந்துள்ள நிலையில் ஈரான் இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. எவர் யாருடைய கைப்பாவையென மக்கள் கண்டறிய முடியாதவாறு அன்றாட திருப்பங்களோடு வரலாறு இருளை நோக்கி வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. பலவீனமான இடதுசாரிகளும், புரட்சிகர உணர்வில்லாத சிந்தனையாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பில்லா அரசியலும், தேசிய இன விடுதலையை அங்கீகரிக்காத முற்போக்காளர்களும், தொலைநோக்கில்லா நட்புகளும், அரசியலோடு பிணைக்கப்பட்ட தீவிரமதவாதமும், தாராளவாத முதலாளிய ஆட்சியாளர்களும் இருக்கின்ற பிராந்தியம் மேற்காசியாவைப் போல சரிந்துவிழும்