பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் மூன்று வாரங்களைத் கடந்து நீள்கிறது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு முடக்கப்பட்ட காசா பகுதிக்குள் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சராசரியாக 42 வான்வழி தாக்குதல் நடைபெறுகிறது; அதில் 42 கட்டிடங்கள் அழிந்து போகின்றன; 6 குழந்தைகள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்; 35 பேர் படுகாயம் அடைகின்றனர்; முதல் மூன்று வாரத்திற்குள் 9000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள்.
இதனை கண்டித்து தமிழ்நாடு தழுவிய தொடர் கூட்டங்களை மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அப்பாவி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேல் அரசைக் கண்டித்தும், இனப்படுகொலையை தடுத்து நிறுத்த கோரியும், பாசிச இசுரேலை ஆதரிக்கும் இந்திய அரசை கண்டித்தும் மே17 இயக்கம் ஒருங்கினைத்த பேரணி அக்டேபர் 29, 2023 அன்று மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. இனப்படுகொலையைக் கண்டித்தும் பாலஸ்தீன தேசிய இன போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தும் உலகின் பல இடங்களில் ஆர்பாட்டங்கள், பேரணிகள் நடக்கின்றன. இருப்பினும் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் ஆதரவுப் பேரணி மே பதினேழு இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு தொடங்கி லாங்க்ஸ் தோட்ட சாலை வழியாக சென்று சிந்தாதிரிப்பேட்டை பாலம் சந்திப்பில் முடிவடைந்தது இப்பேரணி. ஏறத்தாழ 2 கி.மீ வரை நடந்த இந்த பேரணியில் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள், வெளிநாட்டினர், பல்வேறு கட்சியை, அமைப்பை சார்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் என பல தரப்பு மக்கள் குடும்பம் குடும்பமாக எந்தவித பாகுபாடுமின்றி நூற்றுக்கணக்கில் திரண்டு பாலஸ்தீன மக்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
3 மணிக்கு அறிவிக்கப்பட்ட பேரணி, மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில் தாமதமாகவே துவங்கப்பட்டது. எனினும் எவ்வித சலிப்பும் இல்லாமல் வந்திருந்த அத்துனை பேரும் பாலஸ்தீன மக்களுக்காக நின்றனர். மக்கள் திரள காத்துக் கொண்டிருந்த நேரத்தில், மே17 இயக்கம் ஆரம்பிக்க காரணமாக இருந்த, ஈழ தமிழர்கள் இனப்படுகொலையான வரலாற்றை கேட்டு தெரிந்துகொண்டனர். பின்னர், மே 17 இயக்க கொடியை நாங்கள் பிடிக்கலாமா என கொடியை கேட்டு வாங்கி கம்பீரமாக பிடித்து நின்றனர்.
ஈழத்துக்காக இசுலாமியர்கள் வர மாட்டார்கள், தமிழ்த்தேசியத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்ற பொய் பின்பத்தையெல்லம் உடைத்தெறியும் விதத்தில் அன்று இடதுசாரி தமிழ்த்தேசிய அமைப்பான மே 17 இயக்கம் விடுத்த அழைப்பை ஏற்று இயக்கத்தை நம்பி அத்தனை இசுலாமிய தோழர்கள் திரண்டிருந்தனர்.
பாலஸ்தீன இனப்படுகொலையை உடனே நிறுத்து! பாலஸ்தீன தேசத்தை அங்கீகரி, தமிழர்கள் நாங்கள் பாலஸ்தீன மக்களோடு நிற்கின்றோம்! என்ற முழக்கத்தை தாங்கிய பதாகையை ஏந்தி பறை இசை முழங்க பேரணி ஆரம்பித்தது.
“அப்பாவி பாலஸ்தீன மக்களையும், குழந்தைகளையும் இனப்படுகொலை செய்யும் இசுரேல் அரசை கண்டிக்கின்றோம்”
“பாலஸ்தீன மக்களுக்காக
தமிழர்கள் நாங்கள் துணைநிற்கின்றோம்”
“பாலஸ்தீன பூர்வீக நிலம்
பாலஸ்தீன மக்களுக்கே”
“பாசிச மோடி அரசே அதானியின் நலனுக்காக இசுரேலை ஆதரிக்காதே”
“ஐநா மன்றமே ஈழத்தில் இருந்ததை போல
இப்போதும் மௌனம் காக்காதே”
“சுதந்திர பாலஸ்தீனமே ஒரே தீர்வு”
போன்ற வான் அதிரும் முழக்கங்களுடன் பேரணி நடந்துக் கொண்டிருந்தது. பேரணியில் கலந்துக் கொண்ட வெளிநாட்டினர் மற்றும் தமிழ் அல்லாத மொழி பேசுவோர் பாலஸ்தீன ஆதரவு முழக்கத்தினை ஆங்கிலத்தில் எழுப்பினர். பல தோழர்கள் தங்கள் வீட்டிலிருந்தே தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், ஜுஸ் என கொண்டு வந்திருந்ததை பேரணியின் போது தோழர்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர். தாமாகவே முன்வந்து பேரணியின் போது வாகனங்களுக்கு வழி செய்து கொடுத்து , தோழர்களின் பாதுகாப்பையும் உறுதி படுத்திக் கொண்டிருந்தனர்.
கொஞ்ச தூரம் அதிகம் நடந்தாலே “அம்மா தூக்கிக்கோ” என்று அழுது அடம்பிடிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் “Free Free Palestine” என்று பேரணி முடியும் வரை முழங்கி கொண்டே இருந்தனர். பேரணி தொடங்கியது முதல் இறுதி வரை அனைவரும் தங்கள் முழக்கத்தை தெளிவாகவும் தீர்க்கமாகவும் முன்வைத்தனர்.
தேசிய இன விடுதலையையும், சுயநிர்ணய உரிமையையும் பேசிய ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசையும், இனப்படுகொலைக்குத் துணை போன ஏகாதிபத்திய நாடுகளின் அரசியலையும், இந்தியாவின் துரோகத்தையும் கண்முன்னே பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழீழத்திலும் பிஞ்சு குழந்தைகள் மீது தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் வீசப்பட்டது. மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், No fire zone போன்ற இடங்களில் எல்லாம் குண்டு மழைகளை வீசி அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர். தமிழீழ மக்களுக்காக களமாடிய விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து எப்படி ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்களே அதே போல் இன்று ஹமாஸ் என்கின்ற இயக்கத்தை காரணம் காட்டி அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது இசுரேல் அரசு.
மிருகத்தனமான செயல் என்று கூட சொல்ல முடியாது, ஏனெனில் ஏந்த ஒரு மிருகமும் தன் இனம்தான் ஆள வேண்டும் என்ற காரணத்துக்காக சக மிருகத்தை கொலை செய்தது கிடையாது. ஆனால் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அத்துணை ஆயுதங்களையும் பயன்படுத்தி, இசுரேல் இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐ.நா மன்றம் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்காமல் நடுநிலை என்ற பெயரில் அதானியின் நலனுக்காக மொளனமாக இசுரேலை ஆதரிக்கிறது.
ஆனால் “அது இந்தியாவின் நிலைப்பாடு, தமிழர்கள் என்றும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் தான் நிற்போம்” என்ற அரசியல் நிலைப்பாட்டோடு, உணர்வுபூர்வமாக மனிதநேயத்தின் அடிப்படையில் மட்டுமில்லாமல் அரசியலாகவும் எதை முன்னிறுத்த வேண்டும் என்பதில் தெளிவாக நடைபெற்ற பேரணி அது. மக்களும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டும், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடந்த பேரணி முடிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கும் நேரம் மழை பெய்ய தொடங்கி விட்டது. ஆனால் ஒருவர் முகத்தில் கூட மழைக்கு ஒதுங்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் தெரியவில்லை. கொட்டும் மழையிலும் தங்களின் கோரிக்கைக்காக உறுதியோடு இருக்கையில் அமர்ந்தனர். மழையை பொருட் படுத்தாமல் தோழர்களும் உரையாற்ற துவங்கினர்.
இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல்சாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் தோழர் ஐ.முகமது முனீர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை செயலாளர் தோழர் ஜி.செல்வா, வெல்ஃபேர் கட்சியின் மாநில தலைவர் K.S.அப்துல் ரகுமான், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, மனித உரிமை செயல்பாட்டாளர் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இறுதியாக தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஐயா சா.காந்தி அவர்களின் சிறப்புரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
கடைசி வரை அத்துணை தோழர்களின் உரையை கேட்டு கூட்டம் முடிந்த பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர். ஏதும் செய்ய இயலாத நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக வந்து ஆதரவையாவது தெரிவிக்க உதவிய இக்கூட்டத்தை ஒருங்கிணைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.
மே 17 இயக்கத்தின் மீது அவதூறுகளை வீசி, மக்களிடம் அவர்களை நெருங்க விடக்கூடாது என பல வேலைகளை பார்த்தாலும் மே17 இயக்கம் மக்களுக்காக நிற்கிறது; மக்கள் மே17 இயக்கத்தோடு நிற்கிறார்கள். இத்தனை நாட்களாக மே 17 இயக்கத்தினை திட்டமிட்டு புறக்கணித்த அத்துணை ஊடகங்களும் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் அப்பேரணியை பதிவு செய்தனர்.
சென்னை மட்டுமின்றி, சேலம், கோயம்புத்தூர் என தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பாலஸ்தீன மக்களுக்காக மே17 இயக்க தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு பயணிக்கும் மே17 இயக்கம், தமிழர்களுக்காக மட்டும் இல்லை ஒடுக்கப்படும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக களத்தில் நிற்கும் என்பதை இந்த பேரணி நிரூபித்துவிட்டது.
மேலும் புகைப்படங்களுக்கு: