இனப்படுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழர்கள்- திருமுருகன் காந்தி

இனப்படுக்கொலைக்கு எதிராக தமிழர்கள் குரல் எழுப்புவது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நவம்பர் 3, 2023 அன்று தனது முகநூல் கணக்கில் செய்த பதிவு.

2011-ல் லண்டன் நகரில் ஈழப்படுக்கொலை குறித்தான சந்திப்பிற்கு சென்ற பொழுது, இலங்கை அரசை சர்வதேச அளவில் வெகுமக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே முதன்மை வேலைத்திட்டமாக இருக்கவேண்டுமென முன்வைத்தோம். அதற்கு உதாரணமாக பாலஸ்தீனத்தின் மக்கள் முன்னெடுத்த பிரச்சார யுக்திகள், சந்திப்புகள், ஆவணப்படுத்தல், மக்கள் தீர்ப்பாயங்கள் ஆகியன அனைத்து பகுதியிலும் நடக்க வேண்டுமென வேலைதிட்டமாக முன்வைத்தோம். மக்கள் அரசியல் படுத்தப்பட்டால் மட்டுமே அரசுகள் அசையுமேயொழிய, அமைச்சர்கள், எம்.பிக்கள் அரசை திருப்ப மாட்டார்கள் என்றோம். மேற்குலகின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இலங்கைக்கு எதிராக நிற்கப்போவதில்லை என்பது எமது உறுதியான கருத்து என்றோம். புலிகளோடு நெருங்கி இயங்கியவர்களும் இந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

இக்குரல்களெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு ‘டிப்ளோமேடிக் லாபியிங்’ என்பதை முன்னிறுத்துபவர்கள் களத்தை ஆக்கிரமித்தத்தும், நிகழ்வுகள் முன்னெடுக்க ஆரம்பித்ததும் மக்கள் மைய அரசியலை பின்னுக்கு நகர்த்தின. ஆயினும் இயக்கத்தின் கட்டமைப்புகள் பிரச்சாரங்கள், மக்கள் திரள் நடவடிக்கையை இயன்ற அளவில் இன்றளவும் முன்னகர்த்துகின்றனர். இந்த இருபோக்குகளில், லாபியிஸ்டுகள் ஐ.நாவில் அமெரிக்க தீர்மானத்தை முன்னகர்த்தி தீர்வுக்கான முதல்படி என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கு ஏதுவாக என்.ஜி.ஓ.க்கள் இக்கருத்தை வலுப்படுத்தவும், இலங்கையோடு சமரசம் கண்ட இணக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவா ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானத்தை வைப்பதற்கு முன்பான, ஐ.நா. உயர் அதிகாரிகளின் தனி அமர்வில் தமிழ் அமைப்புகள், அம்னெஸ்டி, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்றவை அழைக்கப்பட்டிருந்தன. WTO, BTF, GTF போன்றவையும் பங்கேற்றிருந்தன. ஐ.நா. அதிகாரிகள் உள்ளக ஹைபிரிட் விசாரணை மூலமாக தீர்வு என்ற போது, மே 17 இயக்கம் மட்டுமே இந்த Hybrid mechanism அமுல்படுத்தப்பட்ட தேசங்களில், சுயநிர்ணய உரிமை அளிக்கப்பட்டு இந்த கூட்டு பொறியமர்வில் இணைக்கப்பட்டது. கிழக்கு திமோர்-இந்தோனிசியா வழக்குகள் இப்படியாகவே மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஈழத்திற்கு சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யாமல் ஹைபிரிட் மெக்கானிசம் ஏமாற்று என்று கடுமையாக எதிர்ப்பை முன்வைத்தேன். லாபியிஸ்ட் தமிழ் அமைப்புகள் வெறுப்புடனே என்னை பார்த்தது. ஐ.நா. அதிகாரிகள் எமது கருத்தை ஒதுக்கிவிட்டு முன்னகர இதுவே போதுமானதானது.

இதன் பின்னர் இந்த அறிக்கை மீது வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதி வாசித்து கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட போது தமிழர்களுக்கு பேச அனுமதி கொடுக்காமல் அமெரிக்கா-இங்கிலாந்து அதிகாரிகள் எதேச்சதிகார போக்குடன் நிராகரித்தனர். தமிழ்த் தரப்பின் பங்களிப்பில்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ‘லாபியிஸ்டுகள்’ வெற்றியடைந்த களிப்போடு இருக்கை திரும்பினர். கள அளவில் இயங்கிய எத்தோழரும் அன்று அரங்கினுள் இல்லை எனலாம். ஆயிரக்கணக்கில் வெளியே திரண்ட தமிழர்களுக்கு இச்செய்திகள் சொல்லப்படாமலேயே தீர்மானங்கள் நிறைவேறின.

இத்தீர்மானங்கள் இதுவரை எதையும் சாதிக்காத நிலையில் லாபியிஸ்டுகளின் அரசியல் காணாமல் போனது. ஏகாதிபத்தியங்கள் இனப்படுகொலைக்கான நீதியை மறுக்கும் வேலைத்திட்டத்தில் தீவிரமாக இயங்கி மக்களை மடைமாற்ற முயன்ற காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலில் ஊறித்திளைத்தவர்களில் பலர் புலிகள் மீதான ஆய்வுகளில் பிசியாக இருந்தார்கள். அவர்களது அரசியலைவிட அவரவர் தனிநபர் காழ்ப்புணர்விற்கு அரசியல் வடிவம் தருவது முக்கியமானதாக இருந்தது. தாம் யோக்கியமானவர்களாக இருந்தோம் என்பதை நிரூபிக்க புலிகளின் அழிப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

நடப்பு அரசியல் சிக்கலை எதிர்கொள்ள, ஏகாதிபத்திய நகர்வுகளை அம்பலப்படுத்த முன்வாருங்கள் என்ற போது அவர்களிடம் வெளிப்பட்டதெல்லாம் தமது கடந்தகால தவறுகளை நியாயப்படுத்திக்கொள்ளும் வாதப்புள்ளிகளே. தீராப்பகையோடு எழுதி குவித்தார்கள். ஒருபுறம் போலித் தமிழ்தேசியவாதிகளின் கூச்சல், மறுபுறம் சர்வதேச அரசியலை கையாளும் வழிகாட்டல் இல்லாத சூழலில் இயங்கிய கட்டமைப்புகள், முன்னனியில் லாபியிஸ்டுகள் என உள்ளுக்குள்ளாக நெருக்கடியாக்கப்பட்ட நிலையிலேயே 2010-2016 காலக்கட்டம் கடந்தது. இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் லாபியிஸ்டுகள், போலித் தமிழ்த்தேசியவாதிகள் கொட்டம் அம்பலமான பின்னர் ஈழத்தில் மக்கள் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்த 2015-2018 காலக்கட்டம் புத்துணர்வை விடுதலை உணர்விற்கு கொடுத்தது.

இன்று பாலஸ்தீனத்தின் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்கா முதல் சவுதி, ஜோர்டான் வரை நிற்கும் போது மக்கள் எழுச்சி அரசுகளை ஆட்டம் காண வைக்கிறது. இதற்கான காரணம் கடந்த 20-30 வருடங்களில் பாலஸ்தீன மக்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் இசுரேலை அம்பலப்படுத்தியது. சாமானியரை பாலஸ்தீன மக்களை நோக்கி திருப்பியது. அரசுகளின் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியது. ஊடகங்களை அம்பலப்படுத்தியது. இன்று ஊடகங்களின் செய்தி இல்லாமலும், அரசின் அடக்குமுறைக்கு நடுவிலும் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பாலஸ்தீனர்களுக்காக போராடுகிறார்கள். காசாவில் இருக்கு 23 லட்சம் பாலஸ்தீனர்கள் தனித்துவிடப்படவில்லை என முழங்குகிறார்கள். எகிப்து பம்முகிறது; சவுதியும், அமீரகமும் திணருகின்றன; துருக்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறது; ஜோர்டான் தனிமைப்பட்டிருக் கொண்டிருக்கிறது; ஈராக் எதிர்ப்பை சந்திக்கிறது. இதுதான் மக்கள் அரசியலின் வலிமை. நாங்கள் முஸ்லீம்கள், எங்கள் மக்களை காக்க வந்த தூதர்கள் என்பதாக காட்டிக்கொண்ட அரபு தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன.

அரசு வர்க்கம் எந்த மதமானாலும், இனமானாலும், சாதியானாலும் அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே இயங்கும். இசுலாமியரின் புனித தேசமெனும் சவுதி, இசுரேலை பாதுகாப்பேன் என்கிறது. அமீரகம் பாலஸ்தீனர்களை கைவிடுகிறது. ஒட்டோமான் பேரரசு-கலீபா என பாரம்பரியம் பேசிய துருக்கி பம்முகிறது. நாகரீக தொட்டிலெனப்பட்ட எகிப்து எல்லையில் காவல்போடுகிறது. இந்த அரசுகள் மதவாதிகள் தான், ஆயினும் கொல்லப்படும் ஏழை இசுலாமிய குழந்தைக்காக சுட்டுவிரலை உயர்த்தவில்லை.

இதே நிலையே இந்தியாவின் அதிகாரவர்க்கத்திலிருப்பவர்களின் கருணையினாலோ, மேற்குலக அதிகாரத்தின் கருணையிலோ நீதி நமக்கு கிடைக்காது என்பதை தலைவர் சொன்னார். உலகெங்குமுள்ள போராடும் சாமானிய மக்களிடத்தில் நம் இனத்திற்கு நடந்த அழிப்பை சொல்லும் போது மட்டுமே உலகம் நம் பின்னே நிற்கும். மற்றபடி யாழிற்கு வந்த இங்கிலாந்து பிரதமரோ, தமிழ்பிரதிநிதிகளை சந்திக்கும் அமெரிக்க அதிகாரிகளோ, டில்லிக்கு அழைக்கும் அதிகார புள்ளிகளோ தீர்வை தரவுமில்லை, தரப்போவதுமில்லை. பாலஸ்தீனம் ஒன்றை நிரூபித்திருக்கிறது.

நாம் பாலஸ்தீனர்களோடு நடப்போம், குர்துகளோடு நடப்போம், காசுமீரிகளோடு நடப்போம், ரொகிங்கியாக்களோடு நடப்போம்.

இன்று நடப்பது அரசுகளுக்கும், மக்களுக்குமான போர். அரசுகளின் மாளிகைகள் முற்றுகைக்குள்ளாகின்றன, பாலஸ்தீன வீடுகள் குண்டுகளால் அழிக்கப்படுகின்றன. புதையுண்ட பாலஸ்தீன குழந்தைகள், எரியுண்ட ஈழக்குழந்தைகள் கைகளை கோர்த்தபடி விடுதலைக் கொடிகளை உயர்த்தி ஆலமரங்களாய் விரியும்.

படம்: தோழர் கிருஷ்ணா சரவணமுத்து, கனடா, பாலஸ்தீன ஆதரவு கூட்டத்தில் உயர்த்திபிடிக்கப்பட்ட முழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »