காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்
“கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாப்பதற்காக, கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” – காமராசர் மீதான கொலை முயற்சி மேலும் தொடராதிருக்க பெரியார் தனது தொண்டர் படையிடம் இட்ட கட்டளை.
“இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்” – காந்தியார் கொலை நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்க பெரியார் இந்திய சமூகங்களின் முன் வைத்த வேண்டுகோள்.
காமராசர் மீதான கொலை முயற்சியும், காந்தியடிகள் உயிர் பறித்த நிகழ்வும் வேறு வேறான காரணங்களில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அடிப்படைவாதக் கும்பலின் வேரான சனாதனத்தை அசைத்துப் பார்த்ததால் மனுதர்மத்தை நிலைநிறுத்தத் துடித்த கும்பல் மேற்கொண்ட வெறியாட்டமே இவைகள். அதற்கு மேற்பூச்சுக் காரணமாக அமைந்தவையே பசுவதைத் தடுப்புச் சட்டப் போராட்டம் வழியே காமராசர் மீது ஏவப்பட்ட கொலை முயற்சியும், இந்தியப் பிரிவினைக்கு காந்தி வித்திட்டார் என்பதற்காக கொன்றதாக கோட்சே கூறிய சாட்சியும்.
காமராசர் மீதான கொலை முயற்சி:
அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிய சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் கொண்டேயிருந்தன. ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சாதியப்படிநிலையை நிலைநிறுத்தும் இந்து ராச்சியம் அமைக்கும் எண்ணத்திற்கு பாரதூரமான விளைவுகளை உருவாக்கக் கூடும் என்பதால் அவசரமான ஒரு வன்முறை அவர்களுக்குத் தேவைப்பட்டது. அது மட்டுமில்லாமல் பசுவதைத் தடுப்புச் சட்டம் குறித்து காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் விவாதம் நடந்த போது அதையும் எதிர்த்தார் காமராசர். கட்சிக்குள் அதற்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஏற்கப் போவதில்லை என அவர் காட்டமாகக் கூறியதும் இந்துத்துவக் கும்பலின் செவிகளில் விழுந்தது. அன்றே காமராசரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியது இந்துத்துவக் கும்பல்.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பசுமாட்டு பாதுகாப்புப் பிரிவாக தொடங்கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான் சமிதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான ஆர்.எஸ்.எஸ், சங்கரிபார், பாரதிய ஜன சங்கம் இந்துத்துவ மதவெறிக் கும்பல் “கோமாதா கி ஜே” என்கிற காட்டுக் கூச்சலுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டன. திரிசூலங்கள், ஈட்டிகள், தடிகள், கம்புகளுடன் வந்தவர்கள் சாதுக்கள் என்னும் நிர்வாண சாமியார்கள். அவர்களின் வெறியாட்டத்தில் தலைநகரே அலங்கோலமானது. கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நுழைந்த அந்த வெறிக் கும்பல் தலைநகரின் முக்கியப் பகுதிகளான அகில இந்திய வானொலி நிலையம், பத்திரிக்கையாளர் மன்றம், இர்வின் மருத்துவமனை, பொதுக் கட்டடங்கள், திரையரங்குகள், வாகனங்களை நொறுக்கியதோடு அருகிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகுந்து தீ வைத்தன. அதே கலவரச் சூட்டுடன் டில்லியில் ஜந்தர் மந்தரில் உள்ள வீட்டினில் தங்கியிருந்த காமராசரைக் கொலை செய்யவும் கிளம்பின.
காமராசர் வீடென நினைத்து ஒரு அமைச்சரின் வீட்டைத் தாக்கிய கும்பல் பின்பு காமராசரின் வீட்டை அறிந்து அங்கு சென்றது. கதவினை உடைத்து வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் நொறுக்கியது. காமராசரின் பாதுகாவலர், உதவியாளர் தடுத்தும் அவர்களை அடித்து முன்னேறிய கும்பல் பணியாளையும் தாக்கித் தீ வைக்க முனைந்தது. வீட்டின் அறைகளையும் கொளுத்தியது. கொலை வெறியுடன் காமராசர் தங்கியிருந்த அறையை நோக்கியும் சென்றது. அதற்குள் வீட்டிலிருந்து எழுந்த புகை பின்னாலிருந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு தெரிய வர அவர்கள் காவலர்களுக்கு தகவல் தந்தனர். காவலர்கள் விரைந்து வந்திருக்காவிடில் பெரும் தலைவரின் உயிர் ஆபத்தில் முடிந்திருக்கும் என கலவரங்களைப் படம் பிடித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.ரெங்கராஜன் எழுதினார்.
“நரகத்தின் வேட்டை நாய்கள் ” கட்டவிழ்த்து விடப்பட்டனவோ என்னும் வகையில் வன்முறைக் காட்சிகள் தெரிந்ததாக புகழ்பெற்ற “பிளிட்ஸ்” பத்திரிக்கை எழுதியது. பார்ப்பன ஃபாசிஸ்டுகளின் கோரக் கூத்து! என்று 13-11-1966 தேதியிட்ட லிங்க் படம் பிடித்துக் காட்டியது. இந்தியாவின் அனைத்துப் பத்திரிக்கைகளும் வன்மையான சொற்களால் கண்டித்து எழுதின.
இந்த அளவு வெறியுடன் காமராசரைக் கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவக் கும்பல்களுக்கு இது புதிதல்ல. தேசப்பிதாவாக மக்களால் போற்றப்பட்ட காந்தியையும் கொலை செய்த வரலாறு இவர்களுடையது. வர்ணாசிரமத்திற்கு கேடு வருமென தெரிந்தால் எவரையும் விட்டு வைக்காத வெறியர்கள் இந்த சனாதனப் பித்தர்கள்.
காந்தி கொலை:
சமூகம் விடுதலை பெறாமல் நாட்டின் விடுதலை என்பது உயர்சாதிப் பார்ப்பனீயக் கும்பலின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என காங்கிரசிலிருந்து வெளியே வந்தார் பெரியார். சமூக விடுதலை நோக்கி கவனத்தை செலுத்தாமல் சமூக நல்லிணக்கத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்தார் காந்தி. வர்ணாசிரம தர்மத்தின் மேல் அதீதப் பற்றுக் கொண்டிருந்தார்.. மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்டு சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்படச் செய்வது பாவனை பூசிய ஒன்றாகத் தானிருக்கும், விரைவில் கலைந்து விடும். உயர்சாதிப் பார்ப்பனீயம் இவற்றை உள்வாங்கி விடும் தன்மை உடையது என்பதை அம்பேத்கர், பெரியாரைப் போல ஆய்ந்தறிந்தவர் இல்லை காந்தி. வர்ணாசிரமப் படிநிலைகளை நிலைநிறுத்தும் இந்துத்துவ தர்மத்தில் இருந்து கொண்டே சீர்திருத்த வழிகளில் உள்நோக்கமின்றியே பயணித்தார்.
சனாதனிகள் காந்தியின் மேல் கொண்ட வெறுப்பு ஆழமாக பல காரணிகள் காரணமாய் அமைந்தன. 1932-ல் காந்தி தலித் மக்களுக்காக ஹரிஜன் சேவா சங்கத்தை துவங்கி தீண்டாமை ஒழிப்பை முன்னெடுத்த காலகட்டம். அப்பொழுதே சனாதனிகளின் எதிர்ப்பு துவங்கி விட்டது. புனேவிற்கு உரையாற்ற காந்தி வருகை புரிந்த போது சனாதனிகள் ஒன்று கூடி ‘ஆலயப் பிரவேச சட்டத்தை எதிர்ப்போம்’, ‘இந்து மத அழிப்பாளரான காந்திக்கு வரவேற்பு கொடுக்காதீர்’ என்றெல்லாம் பதாகைகள் ஏந்தி வெறுப்பை வெளிப்படுத்தினர். மேலும் காந்தி குழந்தைத் திருமணத்தை கண்டித்தார். கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார். பிராமணர்கள் மற்ற சாதிகளில் உள்ள கைம்பெண்ணை மறுமணம் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது என்றார். முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து தேவதாசி முறை எதிர்ப்பை கூட்டங்களில் பேசினார். இந்து மதம் எதிர்த்து பெரியார் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் இந்து மதத்தில் இருந்தே காந்தி மேற்கொண்டது சனாதனிகள் பொங்கி எழய் போதுமான காரணங்களாக அமைந்தது.
வெகு மக்கள் காந்தியின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு செவி சாய்த்தது தான் சனாதனிகளுக்கு அதிகப்படியான ஆத்திரத்தை மூட்டியது.காந்தியின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆலய நுழைவுப் போராட்டத்தை சில பார்ப்பனர்களே முன்னின்று நடத்தினர். தீண்டாமை ஒழிப்புக்கும் மக்களிடையே ஆதரவு எழும்பியது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை நீதிக் கட்சியின் தொடர் முயற்சியும், பெரியார் போன்ற சமூக விழிப்புணர்வாளர்களும் மக்களிடையே வெகுவாக ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் சனாதனிகளை அம்பலப்படுத்தியிருந்தனர். சமூக நீதியால் மட்டுமே சமத்துவம் பெற முடியும் என்கிற தெளிவான சமூக விடுதலைக் கொள்கையோடு முன்னகர்ந்தனர். ஆனால் சீர்திருத்தம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வட மாநிலங்களில் காந்தி மக்களிடையே ஏற்படுத்திய இந்த மாற்றங்களை சனாதனிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் சென்னை மாகாணத்தின் ஓமந்தூரார் போன்ற தலைமைகளிடம் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து அறிந்தார். இதை அநீதியென நாடி வந்த பார்ப்பனர்களிடமும் நீங்கள் கேட்பது வர்ணாசிரம தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறதா எனக் கேள்வியும் கேட்கத் துவங்கியிருந்தார் . இந்தியா மதச்சார்பற்ற நாடு என காந்தியடிகள் உறுதியாகக் கூறியதும் அவர்களின் எரிச்சலை அதிகமாக்கியது. காந்தியின் முடிவிற்கு அப்பொழுதே நாள் குறித்து விட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை பேச்சுவார்த்தை துவங்கும் முன்பே காந்தி மீதான கொலை முயற்சி துவங்கி விட்டது. 1932-ஆம் ஆண்டிலேயே ஹரிசன யாத்திரைக்கு கலந்து கொள்ள வந்த போது முதல் கொலை முயற்சி ஆரம்பித்தது. தொடர்ந்து ஆறு முறை காந்தியைக் கொலை செய்ய நடந்த முயற்சி ஆறாவது முறையில் நிறைவேறியது. நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் 1948 ஜனவரி 30 ம் நாள் காந்தியை சுட்டுக் கொன்றான்.
காந்தியைக் கொன்ற நாளில் ஆர்.எஸ் எஸ் இனிப்பு வழங்கி கொண்டாடியது. கொலை செய்தவனை ஏவியக் கூட்டமே காந்திக் கொலையிலும் ஆதாயம் தேடுவதற்காக ஒரு முஸ்லீம், காந்தியை கொலை செய்து விட்டதாக வதந்தியும் பரப்பியது. தனது நோக்கம் நிறைவேற எந்த வித அறமுமின்றி எல்லாவித இழிவு எல்லைக்கும் செல்லும் கும்பல் தான் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அடிப்படைவாத கும்பல். இந்து முஸ்லீம் சண்டையைத் தூண்டி அதன் மூலமும் குளிர் காயலாம் என்ற நச்சு சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்.
கோட்சே தனது வாக்குமூலத்தில் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், 55 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று இந்தியாவை நிர்பந்தித்ததற்காகவும் தான் காந்தியைக் கொன்றேன் என்றது நீதிமன்றத்தில் கோட்சே சொன்ன காரணம். ஆனால் வாக்குமூலத்தில் சொல்லாத காரணங்கள் மேற்கூறிய காந்தி முன்னெடுத்த நிகழ்வுகள் தான். சமத்துவம் மறுக்கும் வர்ணாசிரமக் கொள்கையால் ஆதிக்க அடித்தளம் தகர்வதாக உயர்சாதிப் பார்ப்பனர்கள் உணர்ந்தனர். சமத்துவம் வலியுறுத்தும் காந்தியைக் கொலை செய்யத் துடித்தனர். கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து விலகி விட்டதாக கூறிய பொய்யும் பல நிரூபணங்களால் அம்பலமானது. கோட்சேவின் குடும்ப உறுப்பினர்களே கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை” என்று எகனாமிக் டைம்ஸ் இதழிற்கு பேட்டியளித்தார்கள்.
சிறு வயதிலேயே சித்பவன் பிராமணன் என்ற உயர்ந்த குல மனோபாவத்தில் வளர்க்கப்பட்டு, சாதியப் படிநிலை வரையறுத்த சனாதனக் கருத்தியல்களால் உந்தப்பட்டு, சாவர்க்கர் எழுதிய இந்துத்துவ அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அகிம்சாவாதி காந்தியைக் கொன்ற ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி கோட்சே. ஆனால் அவர் இன்று பாஜக வினரால் தேசபக்தராகக் கொண்டாடப்படுகிறார். சனாதனப் பித்தர்களை தேசபக்தராகக் கொண்டாடினால் தானே இந்து ராச்சியம் அமைத்து அதற்கு மனுநீதியை சட்டமாகவும் கொண்டு வர முடியும். இந்த திரிபுவாதம் தொடரும் என்பதை தொலைநோக்காக பார்த்த பெரியார் அதற்காகவே காந்தியின் மீது விமர்சனம் கொண்டிருந்த போதும் இந்த நாட்டிற்கு காந்தி தேசம் எனப் பெயரிட வலியுறுத்தினார்.
சமதர்மம் பேசிய கர்ம வீரர் காமராசரும், சமத்துவம் நோக்கி நகர்ந்த தேசப்பிதா காந்தியடிகளும் சனாதனிகள் கொலை இலக்காக நிர்ணயித்ததன் காரணம் வர்ணாசிரமத்திற்கு கேடு வந்து விடும் என்பதற்காகத் தான். அந்த வர்ணாசிரமத்தை பாதுகாக்க மனுவாதிகள் கையில் கிடைத்த ஆயுதமே இந்து – முஸ்லீம் கலவரங்கள். ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியாவில் நிகழ்ந்த மதரீதியான வன்முறை வெறியாட்டங்களின் முதல் பொறி மனுக் கூட்டத்திடமிருந்து தான் புறப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்காக என்று அவர்கள் நிகழ்த்தும் செயல்கள் யாவிலும் வர்ணாசிரமவாதிகளின் ஆதிக்கத்திற்காக என்பதை அப்பாவி இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
“மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம்” எனக் காந்தியின் கொலை பற்றியும் “சமதர்மம் பேசிய காமராசரால் வர்ணாசிரமத்திற்கு கேடு வந்து விட்டது என்பதே இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம்” எனக் காமராசர் கொலை முயற்சி பற்றியும் பெரியார் எழுதியது முற்றிலும் உண்மையான நிகழ்வுகளே காந்திக் கொலையும், காமராசர் கொலை முயற்சியும்.
வரலாறு நெடுகிலும் பார்ப்பனீயம் செய்த கொலைகள் சொல்லி மாளாதவை. மன்னர்களின் மூளைகளை சலவை செய்து ஆயிரக்கணக்கான பெளத்த, சமணத் துறவிகளைக் கொன்றனர். மன்னரான ஆதித்த கரிகாலனையும் கொன்றனர். தீண்டப்படாத சாதியென கடவுளைக் காண ஆசைப்பட்ட நந்தனை எரித்தனர். மதமெனும் பேய் பிடியாதிருக்கவேண்டும் என்ற வள்ளலாரையும் கொளுத்தினர். சனாதன தர்மத்தை அழிப்பதாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்த ஆங்கில அதிகாரிகளை அழித்தனர். இன்று வரை இந்துத்துவ அடிப்படைவாதத்தை எதிர்த்த தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேசு போன்ற மக்களுக்கான எழுத்தாளர்களை வெறியுடன் சுட்டுக் கொன்றனர். ரகசியங்கள் காக்கப்பட வேண்டுமென நேர்மையுடன் பணியாற்றிய சங்கர மடத்தின் நிர்வாகி சங்கரராமனையே வெட்டி சாய்த்தனர். சனாதனம் காக்க வர்ணாசிரமம் ஆதிக்கம் செலுத்த இந்து என்ற பொதுத்தன்மையில் நுழைந்து கொண்டு முஸ்லீம்களை பொது எதிரியாக சித்தரித்து கலவரங்களை உருவாக்கி சனாதனிகள் நடத்திய கொலைகளோ கணக்கற்றவை. காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.