தமிழ்நாட்டின் வரி வருவாயில் கைவைத்த ஒன்றிய பாஜக அரசு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1, 2026 அன்று ஒன்றிய பட்ஜெட்டுடன் தாக்கல் செய்த 16வது நிதி ஆணைய அறிக்கை தமிழ்நாட்டிற்கான வரி வருவாயைக் குறைப்பதோடு நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இருக்கின்றது. மாநில பொருளாதாரத்தை நசுக்கி டில்லிக்கு அடிபணிய வைக்கும் நோக்கமே பட்ஜெட்டிலும் நிதி ஆணைய அறிக்கையிலும் வெளிப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வரி வருவாய் (வருமான வரி உள்ளிட்ட முக்கிய வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய்) எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்கும் நிதி ஆணையம், 2026 முதல் 2031 வரை ஐந்து ஆண்டுகளுக்கான தனது அறிக்கையை கடந்த நவம்பர் 17, 2025 அன்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்திருந்தது. இதுவரை மாநிலங்களுக்கு 41% வரி வருவாயும் ஒன்றிய அரசிற்கு 59 % வருவாயும் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் 22க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்களுக்கான வரி பங்கீட்டை 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிதி ஆணையத்திடம் முன்வைத்தன. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள நிதி ஆணையம் தற்போதும் ஒன்றிய அரசிற்கே அதிக பங்கு வரும் வகையில் வரி வருவாயை பிரிக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை மேற்கோள்காட்டி, ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் மாநிலங்களின் மக்கள் தொகை, பரப்பளவு போன்றவற்றை அளவுகோலாக எடுத்துக்கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) எனும் அளவுகோலை நிதி ஆணையம் குறைத்துள்ளது. இதனால் மக்கள்தொகை அதிகமாக உள்ள பிற மாநிலங்கள் அதிக நிதி பெறுவதும் GDP-இல் அதிகம் பங்களித்தாலும் தமிழ்நாடு குறைவாக நிதி பெறுவதும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு (2026-2031) தொடரப் போகிறது.

தற்போது வரை உத்திரப் பிரதேசம் வரி வருவாயில் ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாயும் பீகார் மூன்று ரூபாயும் திரும்பப் பெறுகிறது. ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9% வரை எட்டும் தமிழ்நாடு, இன்னும் 45 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. இத்தகைய சூழலில் உத்திர பிரதேசத்திற்கு 17% பங்கு, தமிழ்நாட்டிற்கு 4% பங்கு என்ற அநீதியான பாகுபாட்டை ஒன்றியத்தின் நிதி ஆணையம் அறிவித்திருக்கிறது.

16வது நிதி ஆணையத்தின்படி மாநிலங்கள் பெறப்போகும் பங்கு %

இந்தியாவில் தொழில்துறையில் முன்னேறிய முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் நேரடி வரிகளில்  (கார்ப்பரேட் மற்றும் வருமான வரிகளில்) 2/3க்கும் அதிகமான பங்கை வழங்கும் மாநிலங்களிலும் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. மேலும் 2024இல், மத்திய ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட 3.75 லட்சம் கோடி ரூபாயில் தமிழ்நாட்டின் பங்கு இருக்கின்றது. இத்தனை வரிகளை ஒன்றியத்திற்கு செலுத்திய பின்னும் உத்திர பிரதேசத்திற்கு 17% நிதியை  ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிற்கு 4% மட்டும் ஒதுக்கீடு செய்கிறது பாஜக மோடி அரசு.

ஒன்றிய அரசின் இந்த வஞ்சகத்தால் மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் வரி வருவாய் ஒரு பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். மக்கள் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக செலவினங்களுக்காக வரி வருவாயில் ஒரு பெரிய பகுதியை மாநிலங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஒன்றிய அரசு வரி வருவாயில் கை வைத்திருக்கிறது. வரி வருவாயைக் குறைத்தால் மாநிலங்களின் கடன்சுமை அதிகரிக்கும், நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கும்.

இவ்வாறு மாநில பொருளாதாரத்தையே சிக்கலுக்குளாக்கிவிட்டு, ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டை புறக்கணித்திருக்கிறது பாஜக அரசு. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால் கல்விக்கு ₹3,548 கோடி அறிவிக்காதது, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான ₹3,112 கோடியை அறிவிக்காதது, PM internship  திட்டத்திற்கான நிதியை குறைத்தது, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது, கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது என தமிழ்நாட்டை சுழியம் (0) மட்டுமல்ல அதற்கும் கீழே இந்த பட்ஜெட் இழுத்துச் சென்றிருக்கிறது.

மேலும் எந்த வித மக்கள் நல திட்டங்களையும் அறிவிக்காமல் தமிழ்நாட்டின் கனிம வளத்தை மட்டும் சொந்தமாகிக் கொள்ள நினைக்கிறது பாஜக அரசு. ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய-மண் வழித்தடங்களை (rare earth corridors) உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பேட்டரி உற்பத்திக்கான முக்கியமான கனிமங்களுக்காகவே இத்தகைய திட்டங்கள் முன்மொழியப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் இயற்கை வளம் மொத்தமாக ஒன்றியத்தின் கைப்பிடிக்குள் செல்லும் ஆபத்து இருக்கின்றது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோவும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமும் கொண்டுவர முடியாமல் போனதால், இப்போது தமிழ்நாட்டின் அரிய வகை கனிமங்களை சுரண்டப் பார்க்கிறது டில்லி ஏகாதிபத்தியம்.

வருமான வரி, ஜிஎஸ்டி வரி, நேரடி வரி, மறைமுக வரி என்று வரி மேல் வரி விதித்து, மக்களை கசக்கி பிழிந்து வாங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், திருப்பி ஏதோ ஒரு வகையில் நலத்திட்டமாக வந்தடையும் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ‘ஆதிக்கத்தை ஏற்காத தமிழர்’ என்ற ஒற்றை காரணத்திற்காக நம் மாநில பொருளாதாரத்தை பாஜக மோடி அரசு நசுக்கிக் கொண்டிருக்கின்றது. பாசிச பாஜகவின் இந்த அராஜகத்தைத் தடுக்க அணியமாவோம். ஒன்றிணைந்து எதிர்ப்புக்குரல் எழுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »