
யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டறியப்பட்ட புதைகுழியின் மனதை உலுக்கும் காட்சி குறித்தும், இனப்படுகொலை குறித்தான இலங்கையின் உள்ளக விசாரணையின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய ஐநா மனித உரிமை ஆணையர் குறித்தும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில்சூன் 27, 2025 அன்று பதிவு செய்தவை.
செம்மணியில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்று புதைக்கப்பட்ட புதைகுழியில் ஆய்வுகள் நடந்து
அந்த மனித எலும்புக்கூட்டை அகழாய்வில் கண்டபோது அதிர்ந்து போகாமல் எப்படி இருக்க முடியும்? கையில் அனைத்தவாரு இருந்த எலும்புக்கூட்டின் கைகளுக்குள் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பதைக் கண்டு அதிராமல் இருக்க இயலுமா? எந்த சூழலில் அந்தத் தாய் தன் குழந்தையை நெஞ்சோடு இறுகப் பற்றியிருப்பார்? துப்பாக்கிக் குண்டுகள் உடலை பிளக்கும் போது தன் குழந்தை மீது படக்கூடாதென மறைத்து நிற்க முயற்சித்து மரணித்தாரா? அல்லது கொல்லப்பட போகிறோமென்பதை அறிந்து, அந்த கொடூரத்தை குழந்தை காணக்கூடாதென மார்போடு சேர்த்து அணைத்த போது பலியானாரா?
இதோ, செம்மணியில் புதைகுழிகளை தோண்டத் தோண்ட துயரக்கதைகள் உற்றெடுத்துக் கொண்டிருக்கின்றன. இவை எங்கு தொடங்கியது? கிருசாந்தி எனும் மாணவியை 6 சிங்களப்படையினர் யாழில் சீரழித்து படுகொலை செய்கின்றனர். காணமல் போன மகளைக் கண்டறிய தேடி வந்த தாய், மகன் அவரோடு உதவிக்கு வந்தவரையும் சித்தரவதை செய்து கொலை செய்கின்றனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் செம்மணி எனும் இடத்தில் 200-300 தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றவாளி ராணுவத்தினர் சொல்ல, செம்மணி பயங்கரம் வெளிவரத் தொடங்குகிறது. உலகளவில் அதிக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து சிங்களம் கைப்பற்றிய பின்னர் நடந்த நிகழ்வுகள் இவை.

செம்மணியில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்று புதைக்கப்பட்ட புதைகுழியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட இடம் செம்மணி. கிட்டதட்ட 25 ஆண்டுகளாக ஆய்வு இடையூறுகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஈழ தமிழர்களின் தொடர்போராட்டத்தாலேயே தற்போதைய புதைகுழி அகழாய்வு சாத்தியமாகின்றன.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டம் 10ம் ஆண்டை எட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அவையில், சர்வதேச விசாரணையில் இருந்து தப்பிக்க, 2015ல் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிப்பதாக இலங்கை உலகிற்கு உறுதியளித்தது. இந்த வாக்குறுதியின் பொழுதிலேயே ஐ.நாவிற்குள்ளாக மே17 இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இவை போலி வாக்குறுதிகள் என ஐ.நா மனித உரிமை அவையில் அம்பலப்படுத்தினோம் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் துணையோடு இந்த ஏமாற்றும் வாக்குறுதியை அளித்தார்கள். ராஜபக்சே, ரணில், மைத்ரிபால சிரிசேனா மட்டுமல்லாமல் இலங்கையின் போலி இடதுசாரி ஜெ.வி.பியின் அனுரா திசநாயக வரை இந்த வாக்குறுதிகள் நிறைவேறாமல் இன்றுவரை பார்த்துக் கொள்கின்றனர்.
சர்வதேச சுதந்திர விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். இதை ஐ.நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை, ஐ.நாவின் துணை செயலர் ஜான் எலியாசன், ஐ.நா தோல்வி குறித்து ஆய்வு செய்த சார்ல்ஸ் பெட்ரி, ஐ.நாவின் ஆய்வுக்குழு மார்சுகி, தருஸ்மென், யாஸ்மின் சூகா குழு ஆகியோர் கேட்டிருந்தனர்.
‘சர்வதேச விசாரணை’ என்பதை ‘பன்னாட்டு விசாரணை’ என மாற்றினர். பின்னர் காமன்வெல்த் நாடுகளின் விசாரணை என இங்கிலாந்து-இந்தியா சுருக்கியது. அதன் பின்னர் இலங்கையின் அழுத்தத்தால், அமெரிக்காவின் தலையீட்டாலும் உள்நாட்டு விசாரணை என மாற்றப்பட்டது. இதை எதிர்த்து கடுமையான விமர்சனத்தை ஐ.நா மனித உரிமை ஆணையரின் செயலர் குழுவிடத்தில் மே17 இயக்கத்தின் சார்பாக ஜெனீவாவில் நான் முன்வைத்தேன். இதனாலேயே ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மே17 இயக்கம் எதிர்த்தது. அந்த தீர்மானத்தை எரித்தது. இலங்கைக்கான தீர்மானம் போலியானதென மே17 இயக்கம் அன்று சொன்னது இன்று நிரூபணமாகியுள்ளது.

தீர்மானம் நிறைவேறி 10 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர், இலங்கை அரசு செய்த வன்முறைகளை ஆய்வு செய்யும் உள்நாட்டு விசாரணை மீது தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது மிக முக்கியமான அறிவிப்பென்றே மே17 இயக்கம் கருதுகிறது. இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை 10 ஆண்டுகளில் பதவிக்கு வந்த வலது சாரி, சனநாயக, இடதுசாரி என சொல்லப்படும் இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும், இடதுசாரி எனப்படும் ஜெ.வி.பி -என்.பி.பி அனுரா அரசும் தமிழர்களை வஞ்சித்துள்ளது. அனுரா அரசு ஒருபடி மேலே சென்று ஐ.நா அவையில் தமக்கான பொறுப்புகளை துறந்துள்ளது. இது ராஜபக்சே அரசுகளே எடுக்காத நிலைப்பாடு. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று மாய்மாலம் காட்டி ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தது. தமிழர்களே நிராகரித்த குறைந்தபட்ச இலங்கையின் பொறுப்புணர்வைக் கூட தேவையில்லை என்றது ஜெ.வி.பி. உண்மையில் சொல்லப்போனால் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை தமது நலனுக்காக அனைவரும் பயன்படுத்தினர். இந்நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
ஐ.நா மனித உரிமை தலைவரையும், காணமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கும் ஆதரவளிக்கிறோமென வந்த சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை வெகுமக்களே விரட்டியடித்தனர்.
தமிழர்கள் தொடர்ந்து போராடினால் சுதந்திரமான சர்வதேச விசாரணை இலங்கை மீது மேற்கொள்ளும் நிலை உருவாகலாம். அவ்வாறு நடந்தால் ராஜபக்சே, கோத்தபயா, மைத்ரி உட்பட இவர்களோடு கூட்டணி வைத்திருந்த இடதுசாரிகளும் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும். சிங்கள பேரினவாதிகளை அம்பலப்படுத்தும் போராட்டத்திற்கு தமிழினம் அணியமாக வேண்டும்.