
மாவீரர் சுப. தமிழ்ச்செல்வனின் மதி நுட்பத்திறன், தலைமைத்துவம், இந்திய ராஜதந்திரிகளுக்கு அதிர்ச்சிக்குரியதாக இருந்த புலிகளின் சமரசமற்ற போக்கு, அமைதிப் பேச்சுவார்த்தையை முறிக்க நடத்தப்பட்ட சுப. தமிழ்ச்செல்வன் படுகொலை, ஜே.வி.பி-யின் முற்போக்கு முகமூடி, பார்ப்பன அதிகார மையவாதிகளின் கருத்துருவாக்க கட்டமைப்பு, பார்ப்பன – பின்நவீனத்துவ இடதுசாரிகளின் சூழ்ச்சி, தமிழ்ப் போராளிகள் ஈகத்தின் பின்னாலிருக்கும் பெரும் அரசியல் போன்றவை குறித்தெல்லாம் விரிவாக, ஆழமாக தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் சமூகவலைதளத்தில் நவம்பர் 2, 2025 அன்று பதிவு செய்தது.
அனுராதபுர விமான தாக்குதலை புலிகள் நடத்திய வாரத்திற்குள்ளாக புலிகளின் அமைதிச் செயலகத்தின் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 5 போராளிகள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.
தமிழீழ விடுதலை போராட்டத்தின் கருப்புநாள். அமைதிப்பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு தயாரானதை சிங்களம் அறிவித்தது. மாவீரர் தமிழ்ச்செல்வனின் மதிநுட்பமிக்க வாதத்திறமையும், சமரசமற்ற போக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்தது. தமிழீழ அரசியல் தலைமைத்துவத்தின் முகமாக அவர் மாறியிருந்தார். மேதகு தேசியத்தலைவரின் நிலைப்பாடுகளை உடன்படுக்கைகளாக மாற்றும் வல்லமை அவருக்கிருந்தது.
இந்திய பார்ப்பனிய அதிகாரிகளிடத்தில் நாம் காணும் கோழைத்தனமான சந்தர்ப்பவாதத்தை ராஜதந்திரமெனும் இந்திய ஊடகங்களால் தமிழ்செல்வனின் அரசியல் முன்னகர்வுகளையும், ஈட்டிய மரியாதையும் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாததாய் இருந்தது. அவர் புன்னகை தவழும் முகத்தோடு எதிர்கொள்பவர் என்பதைக் கடந்து ஆழமான ஊடகச் செய்திகளை விவரித்து எழுதிட இயலவில்லை. கராறாக பேச்சுவார்த்தையை நடத்திடும் புலிகளின் போக்கு இந்திய ராஜதந்திரிகளுக்கு புதியது. சமரசம் பேசி சந்தர்ப்பவாத கோரிக்கைகளை வெல்வதை மட்டுமே கண்ட இந்திய ஆளும்வர்க்கத்திற்கு இந்த போக்கு புதியதாய், அதிர்ச்சிக்குரியதாய் இருந்ததில் ஆச்சரியமில்லை. இந்த போக்கை இந்தியாவின் ராஜீவ் நேரில் கண்டவர். அமைதி ஒப்பந்தத்தை தமிழர்களின் தொண்டையில் திணித்துவிட முயன்றதை தடுத்த புலிகளின் மரபை கண்டவர்கள் இந்திய ஆளும்வர்க்கத்தினர். கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த போக்கை மேற்குலகம் எதிர்க்கொண்டது.
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் ஐரோப்பிய காலனிய ஏகாதிபத்தியத்தை, தம் மக்களின் சுயமரியாதைக்கு இழுக்கு நேராமல் எதிர்த்துப் பேசிய பாளையக்கார புரட்சியாளர்களுக்கு பின்னர் புலிகளை ஐரோப்பியர்கள் கண்டனர்.

தன்னாட்சி பிரதேச அரசை தமிழீழத்தில் பேச்சுவார்த்தையில் சாதித்தனர். அவர்கள் கடுமையான எதிர்களை போர்க்களத்தில் கண்டதைவிட, பேச்சுவார்த்தை மேடையிலேயே எதிர்கொண்டார்கள். போர்க்களத்தைப் போல, பேச்சுவார்த்தை களத்தையும் லாவகமாக கையாண்டதில் சுப.தமிழ்ச்செல்வன் ஈடு இணையற்ற செயல்வீரர்.
காலஞ்சென்ற சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர் விராஜ் மெண்டிசிடம் இதுகுறித்துப் பேசிய தருணத்தில், ‘பாலஸ்தீனத்தின் யாசர் அராபத்தின் கையை முறுக்கி அமெரிக்கா உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ள வைத்தது. ஆனால் பிரபாகரன் மறுகையால் அமெரிக்காவின் கண்ணத்தில் அறைந்தார்’ என குர்து போராளிகள் சொன்னதாக தெரிவித்தார். அத்தகைய உறுதிமிக்க பேச்சுவார்த்தை நிகழ்வை முறியடித்து போருக்குள்ளாக தமிழர்களை கொண்டு செல்ல மேற்குலகமும், அமைதிப்படை தோல்வியினால் தனது காயத்தை தடவிக்கொண்டிருந்த இந்தியாவும் விரும்பியது.
புலிகளுடன் நேரடி போருக்கு தள்ளும் போரை தள்ளிய பணியை தொடங்கி வைத்தவர் இந்தியாவின் முன்னாள் இராணுவ தளபதி சதீஸ் நம்பியார். இந்த விருப்பத்தை நிறைவேற்ற அமைதிப்பேச்சுவார்த்தையை முறிக்க வேண்டும் என்பதால் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார். இசுரேலின் க்ஃபீர் விமானம், இந்தியா கையளித்த மிக்27 விமானம் கொண்டு அதிகாலை வேளையில் உறங்கிக்கொண்டிருந்த சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை படுகொலை செய்தனர். ட்ரோன் மூலமாக இவர்களது இடத்தை கண்டறிந்த்தாக செய்தி வெகு நாட்களுக்குப் பின் வெளியானது.
அமைதிப்பேச்சுவார்த்தையை முறித்த இந்த படுகொலையை இலங்கை ஆளும்வர்க்க முதலாளிய கட்சிகள் மட்டுமல்ல சிங்கள இனவெறி இடதுசாரிகளான ஜே.வி.பி பாராளுமன்றத்தில் கொண்டாடியது. இதைக் கண்டித்து புகழ்பெற்ற சிங்கள அறிவுஜீவியான ப்ரையன் செனவரத்னா அறிக்கை வெளியிட்டார். ‘..புலிகளுடனான போருக்கு ராஜபக்சேக்களின் மகன்கள் செல்லப்போவதில்லை, மாறாக சிங்களப் பாட்டாளிகளின் மகன்களே பலியிடப்பட போகிறார்கள்’, என ஜெ.வி.பியை கண்டித்தார். இத்தகைய ஜே.வி.பி இன்று முற்போக்கு முகமூடி அணிந்து ‘அனுரா குமார திசநாயக்க’ எனும் நபரின் வழியே தனது சிங்கள பேரினவாத அரசியலை முன்னகர்த்துகிறது.
பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் கொல்லப்பட்டு அடுத்த ஒருவாரத்திற்குள்ளாக அதிநவீன ராடார்களையும், கப்பற்படை தளவாடங்களையும் அமெரிக்காவின் பிராந்திய பிரதிநிதி ராபர்ட் ப்ளேக் சிங்கள இராணுவத்திற்கு திருகோணமலையில் வழங்கினார். முன்னதாக திருகோணமலையை தனது இராணுவ கேந்திரமாக பயன்படுத்தும் ‘அக்சா’ ஒப்பந்தத்தை இலங்கையுடன் அமெரிக்கா கைசாத்திட்டது. இந்திரா அம்மையார் காலத்தில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த இந்திய அரசு, மன்மோகன் காலத்திலும், இந்திய பாராளுமன்றத்தில் அதிக அளவில் இந்திய இடதுசாரிகள் இருந்த காலத்திலும் எவ்வித எதிர்ப்புமின்றி 5-மார்ச்-2007ல் ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்காகவே முந்தைய ஆண்டில் கருணா புலிகளிடமிருந்து வெளிக்கொண்டு வரப்பட்டார்.
இந்த ஒப்பந்தம் நடந்த 7 மாதத்தில் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார். இது நடந்த பின்னர் கருணாவை தனது பாதுகாப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற்றியது. இதன்மூலம் தமிழர்களுக்குள் சண்டை மூட்டும் சூழலை உருவாக்கியது. இச்சமயத்தில் தான் இந்தியா-தமிழ்நாட்டிற்குள்ளாக ‘கருணா’வை சனநாயக காப்பாளனாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் ஆபத்பாந்தவனாகவும் காட்டும் முயற்சியை பின் நவீனத்துவ இடதுசாரிகளும் பார்ப்பன இடதுசாரிகளும் கட்டவிழ்த்தனர். (இவர்களது பெயர் பட்டியல் வெளியாவது முக்கியமானது, ஏனெனில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு முற்போக்கு முலாம் பூசியவர்கள் ஆபத்தானவர்கள்)
இன்றுவரை தமது மதிப்பீடுகளின் தவறுகள் மீது சுயவிமர்சனம் ஏற்கவுமில்லை.
புலி எதிர்ப்பு அரசியல் என்பது கோழைத்தனமான, சந்தர்ப்பவாத பார்ப்பனிய-வெள்ளாளிய உயர்சாதி அரசியல் வெளிப்பாடு. இந்த கருத்துருவாக்க அடியாட்கள் இன்றளவும் தமிழர் போராட்ட பண்பாட்டை சிதைக்கும் முயற்சியை கைவிட்டதில்லை. தமிழ்த்தேசிய போராட்டத்தின் புரட்சிகர தன்மையையும், தமிழ்செல்வனின் இழப்பின் நெருக்கடியையும் ப்ரையன் செனவரத்தினா, விராஜ்மெண்டிஸ் போன்றோர் ஆழமாக எடுத்துரைக்க மறுபுறம் பாக்கியசோதி சரவணமுத்து போன்ற அதிகார மையவாதிகள், இந்திய விரிவாதிக்க ஊடகவியலாளர்களுடனும், நியூயார்க்-டைம்ஸ் முதற்கொண்டு ‘தி இந்து’ வரை ஆளும்வர்க்க கருத்துகளை பதிந்து கொண்டிருந்தனர். புலிகளின் இறுக்கமான பேச்சுவார்த்தை மரபை முறியடிக்கும் விதமாக திருகோணமலை மாவட்டத்தில் ‘மாவிலாறு’ மதகுகளை காரணமாக்கி போரை தமிழ்செல்வன் படுகொலைக்கு முன்பாக சிங்களம் தொடங்கி இருந்தது.
கருணா, மாவிலாறு, அக்சா ஒப்பந்தம் என நகர்ந்து தமிழ்செல்வன் படுகொலையில் பேச்சுவார்த்தையை முறித்தார்கள். இந்த படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பை பற்றி அச்சமயத்தில் வெளிப்படையாக அம்பலப்படுத்தியவர் அய்யா வைகோ. இந்தியாவின் உதவியுடன் போர் எவ்வாறு நடத்தப்படுகிறதென புத்தகமாக இதற்கு அடுத்த ஆண்டில் வெளியிட்டார். இந்த புத்தகமே இன்றளவும் இந்தியாவின் பங்களிப்பு குறித்த ஆவணமாக இருக்கிறது. இந்த நூலிற்காக ஓராண்டு சிறைத்தண்டனையும், தேசத்துரோக வழக்கையும் பெற்றார். இந்தியப்பெருங்கடல் பகுதிக்குள்ளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ நகர்வுகளை அம்பலப்படுத்த அன்றய இந்தியதேசிய பார்ப்பனிய இடதுசாரிகள் எதிர்த்திருந்தால், தமிழர் இனப்படுகொலை மட்டுமல்ல, இன்று சென்னையின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் வந்துபோகும் ஒப்பந்தத்தையும் தடுத்திருப்பார்கள்.

இசுரேலுடனான இங்கிலாந்தின் இராணுவ உறவை கேள்வி எழுப்பி நீதிவிசாரணைக்கு உத்திரவிட இங்கிலாந்தின் இடதுசாரி தலைவர் ஜெர்மி கோர்பைன் ஆதரவு திரட்டி தீர்மானத்தை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டுவந்ததை போல இந்தியாவின் மீது விசாரணை கோரி தீர்மானமோ, குறைந்தபட்ச தீர்மானமோ கொண்டுவர இந்தியதேசியவாத பார்ப்பன இடதுசாரிகள் முயலவேயில்லை. திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவ ஒப்பந்தம் இந்திய நலனுக்கு எதிரானதெனக் கூட சொல்ல இயலாதவர்களாக இந்திய தேசியவாதிகள் வலது-நடுநிலை-இடதுசாரிகள் இருந்தது, இறுதியில் தமிழின புரட்சிக்கு எதிரான இந்தப் போக்கு தமிழர் இனப்படுகொலையில் முடிந்தது. இதன் தொடக்கப்புள்ளியே தமிழ்செல்வன் படுகொலை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துயரத்தின் 18ம் ஆண்டு நாள் இன்று.
தமிழ் போராளிகள் ஒவ்வொருவரின் ஈகத்தின் பின்னால் பெரும் அரசியல் வரலாறு புதைந்துள்ளது. அவர்களின் மரணம் எத்தகைய போராட்டத்தின் காரணத்தால் உருவானதென்பதை எடுத்துரைப்பதே இன்றய காலத்தின் தேவை. மேற்குலகின் வன்முறை அரசியலும், இந்திய பார்ப்பனியத்தின் துரோகமும் ஒருசேர விளையாடிய களத்தில் தம்மை பலியிட்டு மக்களை காத்தவர்கள் போராளிகள். இந்த வரலாறை 2009க்கு பின் இளைஞர்களிடம் கொண்டு செல்லாமல், ஆமைக்கறி, அரசிக்கப்பல் என கீழ்த்தரமான கதையாடல்களும், சினிமாத்தனமான ரசனையோடு இளையோரின் தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சியையும் ஆர்வத்தையும் குழிதோண்டி புதைத்த கயவர்களின் கூடாரத்தில் சிறைப்பட்டது. தமிழ்த்தேசிய எழுச்சி முடக்கப்பட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல் வளர்க்கப்பட்டு சிதைக்கப்பட்டது. இந்த சதியை இந்திய பார்ப்பனியம் வெற்றிகரமாக செயல்படுத்தியும் விட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக தமிழர் போராட்டத்தின் அரசியல் நுணுக்கங்களை, வரலாற்று தேவைகளை, கைக்கொள்ள வேன்டிய நிலைப்பாடுகளை மே பதினேழு இயக்கம், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமில்லாமல் போராட்ட குணத்தோடு எடுத்துரைக்கிறது. இவ்வரலாற்றின் மாணவர்களான எமக்கு ப்ரிகேடியர் தமிழ்செல்வனின் இழப்பு எத்தகைய வரலாற்று பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை உணர இயலும். தமிழினம் ஆயிரமாண்டுகளானாலும் நினைவில் வைக்கும் ஆளுமைகள் இவர்கள்.
மாவீரர்களாக இதேதினத்தில் விதைக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்செல்வன் உட்பட ஐந்து போராளிகளுக்கும் மே17 இயக்கத்தின் வீரவணக்கம்.