பிளாக் பாந்தர் கட்சி மீதான வெள்ளையின அரசின் துரோகத்தை தோலுரிக்கும் திரைப்படம்
“நீங்கள் ஒரு புரட்சியாளரைக் கொல்லலாம், ஆனால் உங்களால் ஒருபோதும் புரட்சியைக் கொல்ல முடியாது.“
இன்றும் அமெரிக்காவின் அதிகாரவர்க்கத்தை நடுங்கவைக்கும் கருப்பின விடுதலை போராளியான பிளாக் பாந்தர் கட்சியின் (Black Panther Party) துணைத் தலைவர் ஃபிரெட் ஹாம்ப்டன் (Fred Hampton) அவர்களின் முழக்கம் இது.
அமெரிக்காவின் முதலாளித்துவ அரசையும், ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி மற்றும் நிறவெறி அரசியலையும் எதிர்த்து சோசியலிச அரசை அமைத்திட மூர்க்கமாக சண்டையிட்ட ஒரு புரட்சிகர அமைப்பு தான் பிளாக் பாந்தர் கட்சி. அதன் துணைத் தலைவராக இருந்த ஃப்ரெட் ஹாம்ப்டன் அவர்கள், மற்றொரு கருப்பினத்தவரின் துரோகத்தால் அமெரிக்காவின் FBI-யிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த கறுப்பின வரலாற்று நாயகனை பற்றிய சுயசரிதை (Auto-biography) படம்தான் “யூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா (Judas and the Black Messiah)” என்ற இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் திரைப்படம்.
மதக்கதையாடலும் எதிர்வினை அரசியலும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பாலஸ்தீன நிலப்பரப்பு சமாரியர்கள், யூதர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற உள்ளூர் குழுக்களிடையேயான சண்டையில் உடைந்த நிலமாக இருந்தது. மேலும், ரோமானியப் பேரரசின் ஆக்கிரமிப்பு காரணமாக அந்த நிலப்பரப்பில் நிகழ்ந்த அரசியல் அமைதியின்மை, கிளர்ச்சி மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மையமாகவும் பாலஸ்தீனம் மாறியது. பல்வேறு அரசுகளின் மதம் மற்றும் இனவெறி அரசியலால் மக்கள் தொடர்ந்து துண்டாடப்பட்டு அந்த நிலப்பரப்பு மக்கள் வாழமுடியாத ஒரு கொந்தளிப்பான இடமாக மாறியது. குறிப்பாக, அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து சமத்துவத்தையும் அன்பையும் நிலைநிறுத்த முயன்று பலரின் கவனத்தை ஈர்த்த இயேசு கிறிஸ்து போன்ற ஒருவரை பின்பற்றும் எவருக்கும் அந்த நிலம் அச்சுறுத்தலாக இருந்தது.
மக்களை பிரித்தாளும் பேரரசுகளின் சூழ்ச்சியை அறிந்து, மக்களை ஒன்றிணைத்து போராடிய மெசியா (இயேசு கிறிஸ்து) ரோமப் பேரரசினால் தேடப்படும் குற்றவாளியாக்கப்படுகிறார். ஒற்றுமை அரசியலை முன்னிறுத்திய மெசியாவை (இயேசு) பின்தொடர்ந்த அவரது 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் (Judas), 30 வெள்ளி நாணயங்களுக்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார். நடு இரவில் இயேசு தோட்டத்தில் இருப்பதை உறுதிசெய்து, அரசு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை இயேசு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற யூதாஸ், அவர்களிடம், “நான் முத்தமிடும் அந்த மனிதன்தான்; அவனைக் கைது செய்.” (மத்தேயு 26:48) என்கிறார். பின்னர் அவர் இயேசுவை அணுகி அவரை முத்தமிட்டு வாழ்த்தி காட்டிக்கொடுக்கின்றார். அடையாளங்காணப்பட்ட இயேசு கைது செய்யப்படுகிறார்.
இயேசுவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை கண்ட யூதாஸ் “மனம்வருந்தி” (மத்தேயு 27:3), காட்டிக்கொடுத்ததற்காக பெறப்பட்ட 30 வெள்ளிக் காசுகளை தலைமை மதபோதகர்களிடம் திருப்பிக் கொடுக்க முயன்றார். அவர்கள் அவரை அலட்சியப்படுத்தியதால், அவர் பணத்தை கோவிலுக்குள் வீசி விட்டு, அங்கிருந்து வெளியேறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இப்படியாகத் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மெசியா (இயேசு கிறிஸ்து) யூதாஸினால் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதே போன்ற ஒரு துரோகச் செயலால் தான் 1969-இல் பிளாக் பாந்தர் கட்சியின் ஃப்ரெட் ஹாம்ப்டன் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI-யிடம் சகத் தோழனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இதனை ஒப்பீடாக கொண்டு தான் திரைப்படத்திற்கு யூதாஸ் மற்றும் கருப்பு மெசியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
1969-இல் அமெரிக்க வெள்ளை ஏகாதிபத்திய அரசின் நிறவெறி பயங்கரவாதத்திற்கு எதிராக பல இனமக்களை ஒன்றிணைத்து போராடிய பிளாக் பாந்தர் கட்சியின் ஃபிரெட் ஹாம்ப்டன், FBI-யின் ரகசிய உளவாளியான வில்லியம் ஓ’நீல் (William O’Neal) எனும் கறுப்பினத்தவரின் கைகளால் அமெரிக்கா அரசிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டார். இந்த துரோக அரசியலால் அனைத்து மக்களின் விடுதலைக்காக போராடிய ஃபிரெட் ஹாம்ப்டன் அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு நிறுவனமான FBI-யால் கொல்லப்படுகிறார். பின் வில்லியம் ஓ’நீல் அமெரிக்கா அரசால் பாதுகாக்கப்படுகிறார். பிளாக் பாந்தர் கட்சிக்கு துரோகமிழைத்த வில்லியம் ஓ’நீல் 1990-ல் தற்கொலை செய்துகொள்கிறார்.
கறுப்பின விடுதலை போராட்டத்தில் நடந்த இந்த உண்மை நிகழ்வு, பைபிளில் இயேசுவுக்கு நடந்த கதையும் ஒன்றுபோல பொருந்துகிறது. அதன் காரணமாக பைபிளில் வரும் இந்த கதையை இயக்குனர் ஷாக்கா கிங், வெள்ளை மேலாதிக்கம் கொண்ட அமெரிக்க நிறவெறி அரசிற்கு எதிராக கறுப்பின மக்களின் விடுதலைக்காக மூர்க்கமாக போராடும் ஃபிரெட் ஹாம்ப்டன் எனும் கறுப்பினப் போராளியை கருப்பு இயேசுவாக உருவகப்படுத்தும் எதிர் கலாச்சார அரசியலை படத்தின் கதையாடலுக்கு பயன்படுத்தி இருப்பது சிறப்பு.
400 ஆண்டுகால ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின அடிமைத்தனத்தின் அரசியல்
ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்கு போராடிய ஃபிரெட் ஹாம்ப்டன் குறித்தான இந்த படத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் கருப்பின மக்கள் எப்படி அடிமையாக்கப்பட்டனர் எனும் வரலாற்று அரசியல் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
2020-ல் ட்ரம்ப் ஆட்சியின் போது, ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) எனும் அப்பாவி கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரிகளால் பொதுவெளியில் கைது செய்யப்படும் போது கொலை செய்யப்படுகிறார். கறுப்பினத்தவர் என்பதாலேயே மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட காவல்துறையினர், அவரை மூச்சுவிட முடியாமல் நெருக்கி கொலை செய்கிறது. அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் மக்கள் நீதிகேட்டு போராடத் துவங்கினர். கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசின் கட்டமைக்கப்பட்ட இனவெறி வன்முறையை கண்டித்து #BlackLivesMatter எனும் முழக்கத்தை முன்வைத்து வெகுஜன மக்கள் அமெரிக்காவை போராட்டங்களால் முழ்கடித்தனர். 1960-களுக்கு பிறகு இனவெறிக்கு எதிராக அந்நாடு கண்ட மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இது வெடித்தது.
இந்த போராட்டம் ஏதோ ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை, 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து கறுப்பின மக்கள் விலங்குகளை போல வேட்டையாடப்பட்டு அடிமைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஐரோப்பிய வெள்ளை மேலாதிக்க முதலாளித்துவ அரசுகளால் இந்த ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி அமெரிக்காவில் இருக்கும் பருத்தி மற்றும் கரும்பு தோட்டங்களுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய இந்த அட்லாண்டிக் அடிமை வர்த்தகம், வணிகமயமாக்கப்பட்டது; இனமயமாக்கப்பட்டது; மற்றும் மரபார்ந்த அடிமை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் மனிதர்களாகப் பார்க்கப்படாமல், வாங்குவதற்கும் விற்பதற்கும் சுரண்டுவதற்குமான பொருட்களாகவே பார்க்கப்பட்டனர்.
முதலாளிகளின் எல்லையற்ற லாபத்திற்கு இந்த இனவெறி சுரண்டல்முறை கைகொடுத்ததால், வெள்ளை மேலாதிக்கம் கொண்ட சட்டவடிவத்துடன் அமெரிக்கா எனும் நாட்டை உருவாக்கினர் இந்த முதலாளித்துவவாதிகள்.
இதற்கு சான்றாக, நவம்பர் 1969, வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ஃபிரெட் ஹாம்ப்டன் ஆற்றிய உரையில்,
“1857-ஆம் ஆண்டு கறுப்பின அடிமையாக இருந்த டிரெட் ஸ்காட் (Dred Scott) எனும் நபர் அமெரிக்காவின் ரோஜர் டானி (Roger B Taney) எனும் நீதிபதியிடம் தன்னை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேட்கிறார். அதற்கு அடிமைமுறை ஆதரவாளரான வெள்ளை மேலாதிக்க டிரெட் ஸ்காட்டின் வெளிப்பாடு இதுதான்.
“கருப்பர்களே, அமெரிக்காவில் நீங்கள் ஒரு பொருட்டே இல்லை; நீங்கள் ஒரு சொத்து; நீங்கள் ஒரு அடிமை. இந்த அமைப்புகள், அதாவது சட்ட அமைப்பு, நீதி அமைப்பு போன்ற, இன்று அமெரிக்காவில் செயல்படும் அனைத்து வகையான அமைப்புகளும் நீங்கள் இங்கு வருவதற்கு முன்பே அமைக்கப்பட்டது, சகோதரனே. பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் உங்களை கொண்டு வந்தோம், எங்களுக்கு கிடைத்ததை வைத்துக் கொள்ளப்போகிறோம். பேராசை கொண்ட இந்த வணிகர்கள், எதை பெற்றிருக்கிறார்களோ அதை வைத்துக்கொள்ளப் போகிறார்கள். தொடரவும் போகிறார்கள்.” இப்படியாக 1857-ஆம் ஆண்டு அமெரிக்க நீதிபதி டானி என்பவரின் இனவெறியும், சுரண்டலும் அதிகாரப்பூர்வமாக சட்டத்தில் ஏற்றப்பட்டுவிட்டதன் வெளிப்பாடு இது.” என்கிறார்.
சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, உரிமைகளை காக்கவே நீதி சாசனங்கள், நீதி அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அந்த நீதி அமைப்புகளே உங்களை ஒரு மனிதனாக கருதாத நிலையில் கறுப்பின மக்களின் விடுதலையை தாங்களே முடிவு செய்கின்ற புரட்சிகர விடுதலை போராட்டத்தை துவங்குகிறார்கள். அந்த புரட்சிகர போராட்டத்தின் உச்சமே 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட “பிளாக் பாந்தர் கட்சி”.
“கருப்பு இயேசு” தோன்றுவதற்கு முன் என்ன நடந்தது?
18-19-ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டு அமெரிக்கா முதலாளித்துவ அரசால் தொடர் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான சமூக போராட்டத்தை 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்கள் தொடங்கினர்.
1955 டிசம்பரில், ரோசா பார்க்ஸ் (Rosa Parks) என்ற ஒரு கறுப்பின தையல்கார பெண்மணி, அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமெரி நகர அரசு பொதுப் பேருந்தில் வெள்ளைக்காரப் பயணிகளின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது, இருக்கையை விட்டுக்கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் வெள்ளையருக்கு பேருந்து இருக்கையை விட்டுக்கொடுக்க மறுத்ததற்காக அவர் ஜிம் க்ரோ (Jim Crow Laws) எனும் இனப்பிரிவினை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் உள்ள கறுப்பினத்தவர் மத்தியில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. இதை தொடர்ந்து சமூக போராட்ட ஆர்வலர்கள் மாண்ட்கோமெரி பேருந்துப் புறக்கணிப்பு போராட்டத்தை துவங்கினர்.
மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) இந்த போராட்டத்தின் தலைவராக உருவெடுத்தார், இதுவே சமூக உரிமை போராட்ட இயக்கத்தின் முதல் வெகுஜன மக்கள் போராட்டமாக அரசை எதிர்த்து நேரடியாக நடந்தது. இதனால், அமெரிக்க ஆளும் அதிகார வர்க்கம் பெரும் நெருக்கடிக்குள்ளானது.
சமூக உரிமை போராட்டங்கள் என்பது 1946 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் கறுப்பின ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு முழு அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பெற முயல்வதற்கு ஒரு வழியாக இருந்தது. ஆனால் ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் மீதான அரச பயங்கவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. கறுப்பினத்தவரின் மீது வெள்ளை மேலாதிக்கவாதிகள் மற்றும் நிறவெறி காவல்துறையினர் ஆயுதங்கள் கொண்டு நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்து கொன்டே இருந்தது.
இந்த வன்முறைகளை தடுக்க மால்கம் எக்ஸ் (Malcolm X), கறுப்பினத்தவரின் தன்னம்பிக்கை, கலாச்சார பெருமை மற்றும் இன வன்முறையை எதிர்கொள்ளும் தற்காப்பு போராட்டங்களை முன்னெடுத்தார். மால்கம் எக்ஸ் முன்னெடுத்த அணுகுமுறை “பிளாக் பவர்” என்று அறியப்பட்டது. “பிளாக் பவர்” எனும் “கறுப்பினத்தவரின் அதிகாரம்” போராட்ட முறை கறுப்பினத்தவரை ஒன்றிணைத்து அந்த மக்களின் விடுதலையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.
1960-களில் மால்கம் எக்ஸின் உக்கிரமான போராட்டமுறை மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. மேலும், வெள்ளை மேலாதிக்கத்தை காத்து வந்த கிறிஸ்துவத்தில் இருந்து வெளியேறி, சுயமரியாதைமிக்க கறுப்பின சமூகத்தை உருவாக்க, இஸ்லாமிய தேசத்தை அவர் கட்டியமைக்க முயன்றார். நேஷன் ஆஃப் இஸ்லாம் என்ற இந்த போராட்ட முறை கறுப்பினத்தவர்களின் சுய-அதிகாரம், தன்னம்பிக்கை, கலாச்சார மற்றும் இனப் பெருமையை ஆதரித்தது. மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரரான முகமது அலி (Muhammad Ali) மதம் மாறிய பிறகு தான் காசியஸ் க்ளே (Cassius Clay) என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டார். இந்த காலகட்டடத்தில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை மால்கம் எக்ஸ் பெற்றார்.
மேலும், அவர் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பை நிறுவினார், இது கறுப்பின சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு எடுத்து சென்றது மற்றும் கறுப்பினத்தவரின் சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி போராட்டங்களை தொடர்ந்தார். இது அமெரிக்க இனவெறி அரசிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.
இதைத் தொடர்ந்து 1965-இல் பல மாதங்களாக அவருக்கு கடிதங்கள் மூலம் மரண அச்சுறுத்தல் வந்துகொன்டே இருந்தது. அரசின் ஆயுத வன்முறைக்கு எதிராக அதன் வழியிலே பதில் அளித்து கறுப்பின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மால்கம் எக்ஸ் 1965-ல் கொல்லப்படுகிறார். பின்னர், ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களின் சமூக உரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1968-ல் கொல்லப்படுகிறார்.
முடிவுபெற்ற இந்த இரு கறுப்பின விடுதலை போராட்டக்காரர்களின் மத்தியில் தோன்றுகிறது புதிய விடுதலை போராட்ட ஒளி “ஃபிரெட் ஹாம்ப்டன்”.
பிரெட் ஹாம்ப்டன் “கருப்பு இயேசுவாக” உருவகப்படுத்தப்படும் இனவிடுதலை போராளி
“அனைத்து அதிகாரமும் மக்களுக்கே (All Power to the people)”, என்று 1966-ல் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் பலம் பொருந்திய விடுதலை குரலாக கறுப்பின மக்களின் “பிளாக் பாந்தர் கட்சி” ஒலித்தது. இந்த அமைப்பு 1966-இல் ஹியூ நியூட்டன் (Huey P. Newton) மற்றும் பாபி சீல் (Huey P. Newton) ஆகியோரால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நிறுவப்பட்டது, இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவை தளமாகக் கொண்டு பிளாக் பாந்தர் பார்ட்டியில் இயங்கியவர் ஃபிரெட் ஹாம்ப்டன்.
அமெரிக்காவில் உள்ள கறுப்பின சமூகத்தின் சுயநிர்ணய உரிமையை வென்று எடுப்பதின் மூலமே, இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடமுடியும் என்பது பிளாக் பாந்தர் கட்சியின் முதன்மையான நோக்கம்.
வியட்நாம், கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய இனப்போராட்டத்தை அமெரிக்க அரசுக்கு எதிரான கறுப்பினப் போராட்டத்துடன் இணைக்கும் பொதுவான இழையாக சுயநிர்ணய உரிமையை மால்கம் எக்ஸ் அங்கீகரித்ததை பிளாக் பாந்தர் பார்ட்டி பின்பற்றியது.
அமெரிக்காவில் சமத்துவத்தை நிலைநாட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் சுருக்கமான 10 புள்ளி திட்டத்தை பிளாக் பாந்தர் அமைப்பு வகுத்தது. அதில் 7-வது புள்ளி கூறுவது,
“கறுப்பின மக்கள் மீதான காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதல் மற்றும் கொலைகளுக்கு, நாங்கள் ஒரு உடனடி முடிவை விரும்புகிறோம். இனவெறி காவல்துறையின் அடக்குமுறை மற்றும் மிருகத்தனமான தாக்குதலில் இருந்து எங்கள் கறுப்பின சமூகத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கறுப்பின தற்காப்பு குழுக்களை ஒழுங்கமைப்பதன் மூலம் எங்கள் கறுப்பின சமூகத்தில் காவல்துறையின் மிருகத்தனத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவின் அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் ஆயுதம் தாங்குவதற்கான உரிமையை வழங்குகிறது. எனவே அனைத்து கறுப்பின மக்களும் தற்காப்புக்காக தங்களை ஆயுதபாணியாக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனபதாகும்.
தங்களை காவல்துறையின் வன்முறையில் இருந்து மட்டும் காத்து கொள்ளாமல், முதலாளித்துவ அமெரிக்காவில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலை அரசியலை முன்னெடுக்க துவங்கினர்.
உலகம் முழுவதும் உள்ள வளரும் நாடுகள் வேறு எந்த நாட்டையும் சுரண்டவில்லை என்பதால், தேசிய உரிமையை கோருவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. அவர்கள் பேசும் தேசியவாதம் என்பது சுயாட்சி, சுயநிர்ணய உரிமை மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு விடுதலை தளமாகும்.
பிளாக் பாந்தர் அமைப்பு வளரும் நாடுகளின் தேசிய உரிமையை ஆதரிக்கிறது மற்றும் புரட்சிகர தேசியவாதிகள் என்ற நிலையில் இருந்து வளரும் நாடுகளின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நாடு ஒரு தேசமாக இல்லாமல் பேரரசாக இருக்கும் போது நாங்கள் தேசியவாதிகளாக இருக்க முடியாது. ஆதலால், இந்த நாட்டின் கதவுகளைத் திறந்து, தொழில்நுட்ப அறிவையும் செல்வத்தையும் உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது என்று நாங்கள் வாதிடுகிறோம்.
அமெரிக்க முதலாளித்துவ அரசை எதிர்த்து தங்களின் சுயநிர்ணய உரிமை உறுதிசெய்திட தேசிய இனவிடுதலை போராட்டத்தை முன்னெடுத்த தெற்கு வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணிக்கு, 1970-ல் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸ் இந்த இரண்டு நபர்களின் படுகொலைகளுக்கு பிறகு, அமெரிக்க அரசியல் அமைப்பின் நிறுவன இனவெறிக்கு பிளாக் பாந்தர்ஸ் மிகவும் போர்க்குணமிக்க சவாலாக உருவெடுத்தது.
ஹாம்ப்டன், இனவாதம் மற்றும் முதலாளித்துவம் இரண்டும் பின்னிப்பிணைந்து இயங்குவதை நன்கு அறிந்து அதனை வீழ்த்தும் ஒரே சக்தியாக சோசலிசம் என்ற பெயரில் அமெரிக்க சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையம் ஒன்று திரட்டுவதை அறிந்து இருந்தார்.
இதன் காரணமாக ஹாம்ப்டன் பிளாக் பாந்தர்களின் “வானவில் கூட்டணியை (Rainbow Coalition)” உருவாக்குகிறார். போர்ட்டோ ரிகோ விடுதலைக்காக சிகாகோவில் இயங்கிய யங் லார்ட்ஸ் (Young Lords) பெரும்பாலும் லத்தின் அமெரிக்கர்களை கொண்டது; சித்தாந்தத்தில் பிளாக் பாந்தர் போன்றது. யங் பாட்ரியாட்ஸ் (Young Patriots) அமைப்பு, ஒரு இடதுசாரி, சிகாகோவில் உழைக்கும் வர்கத்தை சேர்ந்த வெள்ளையர்களை கொண்ட முதலாளித்துவ-எதிர்ப்பு அமைப்பு. மற்றும் சில கறுப்பின அமைப்புகள். இந்த மூன்று மக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டனர்: காவல்துறையின் வன்முறை, வறுமை, மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் இனஒடுக்குமுறை. இப்பிரச்னைகள் தீவிரமடைந்து மக்கள் சோர்வுற்று இருந்தனர்.
ஃபிரெட் ஹாம்ப்டனின் தலைமையின் கீழ், பிளாக் பாந்தர் அமைப்பு அவர்களை அரசியல்படுத்தி, போராட்டங்களை முன்னெடுத்து “சுயநிர்ணய உரிமை” என்பதை முன்னிறுத்தி மக்களை விடுதலை பாதையை நோக்கி உறுதியான நம்பிக்கையுடன் வளரச்செய்தது. இந்த பிளாக் பாந்தர் கட்சி பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து “புரட்சிகர ஒற்றுமைக்கான வானவில் கூட்டணி” என அறிவித்தது.
யூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா என்ற இந்த படத்தின் 40% காட்சிகள் பிளாக் பாந்தர் கட்சி இந்த அமைப்புகளை ஒன்றிணைப்பதை மையப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான காட்சி என்னவென்றால் பிளாக் பாந்தர்களுக்கும், உழைக்கும் வெள்ளைநிற மக்களை கொண்ட யங் பாட்ரியாட்ஸ்களும் சந்தித்துக்கொள்ளும் காட்சி.
மேடையில் இருக்கும் ஒரு பேச்சாளர், அவர்களின் கொடி (Confederate Flag) தென்னக பாரம்பரியத்தை நினைவூட்டுவதற்காக மட்டுமே என்று கூறுகிறார். பாந்தர்களின் உறுப்பினர் ஒருவர், அந்தக் கொடி தனது குடும்பம் அடித்துக் கொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்.
யங் பாட்ரியாட்ஸ் பேச்சாளர் கூறுகிறார், “எனது மக்கள் உங்கள் மக்களை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கினர்,” என்று கூறி முடிக்கையில், யங் பாட்ரியாட்ஸின் வெள்ளை பார்வையாளர்களில் ஒருவர் கோபத்துடன், “நாங்கள் யாரையும் ஒடுக்கவில்லை, எங்கள் மக்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் வெறும் பங்குதாரர்களாகவே இருந்தனர்” என்று கூறுகிறார்.
அங்கு நடைபெறும் பேச்சுவார்த்தை மோசமடைவதற்கு முன், ஹாம்ப்டன் பேச ஆரம்பித்து, அவர்களின் மோசமான சூழ்நிலை மற்றும் வறுமையை நினைவூட்டுகிறார். மேலும் ஹாம்ப்டன் ஏழ்மையை மட்டுமே சொத்தாக கொண்டு உள்ள உழைக்கும் வெள்ளையர்களிடம், “உங்கள் மீது மிருகத்தனமான வன்முறையை நடத்தும் காவல்துறையினருக்கு நீங்களும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது கேலிக்குரியதாக இல்லையா?” என்று அவர்களிடம் கேட்கிறார். சுருக்ககமாக சொல்ல வேண்டும் என்றால், ஹாம்ப்டன் அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் பதட்டங்களை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அரசின் ஒடுக்குமுறையை இரு இனத்தவரும் எதிர்கொள்கிறோம், அதனை எதிர்த்து அவர்கள் ஒன்றிணைந்து ஒரு பொது எதிரியுடன் (முதலாளித்துவம்) போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
திரைப்படத்தில் வரும் இந்த காட்சி என்பது வரலாற்றில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் தமிழினத்திற்கு மிக முக்கியமானதாகும். ஆரிய பார்ப்பனிய இந்திய அரசால் பல சாதிகளாக பிரிக்கப்பட்டு, சுரண்டப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் கிடப்பதை நாம் உணரவேண்டிய தேவையுள்ளது. முதலாளித்துவமும் அதிகாரவர்க்கமும் ஏற்படுத்தும் பல பிரித்தாளும் அரசியலை மக்கள் உணரவேண்டும் என்பதை விவரிக்கிறது. அமெரிக்காவில் நிறவெறியும், இனவெறியும் என்றால் இந்தியாவில் ஆரிய பார்ப்பனியத்தின் சாதிவெறியும், இனவெறியுமாகும்.
அவரது கொலைக்கு முந்தைய ஆண்டு, ஹாம்ப்டன் கூறியது:
“முதலாளித்துவம் முதலில் வந்தது அதன் பின் இனவாதம் வந்தது. அவர்கள் அடிமைகளை இங்கு அழைத்து வந்தது, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகத்தான். எனவே முதலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, பிறகு அந்த பணம் சம்பாதிக்க அடிமைகளை அழைத்து வந்தனர். அதாவது, வரலாற்று உண்மையின் மூலம், இனவாதம் முதலாளித்துவத்தில் இருந்து வர வேண்டும். அது முதலில் முதலாளித்துவமாக இருக்க வேண்டும் மற்றும் இனவாதம் அதன் ஒரு விளைபொருளாக இருந்தது.”
இந்த மேம்பட்ட வர்க்க உணர்வு அரசியலை புரிந்து கொண்ட ஃபிரெட் ஹாம்ப்டனை கண்டு அமெரிக்க அரசு நடுங்கியது. இதன் காரணமாக வெள்ளை மேலாதிக்க வெறிகொண்ட ஜே.எட்கர் ஹூவரின் (J. Edgar Hoover) FBI-ஆல் திட்டமிடப்பட்டு, அரச பயங்கரவாதத்தின் இரக்கமற்ற இயந்திரத்தின் இலக்காக ஆனார்.
FBI-யின் COINTELPRO திட்டமும் – துரோக அரசியலும்
“போர்க்குணமிக்க கறுப்பின தேசியவாத இயக்கத்தை ஒருங்கிணைத்து துடிப்புடன் வைத்து இருக்கக்கூடிய மேசியாவின் எழுச்சியைத் தடுக்கவேண்டும்” என்று 1967-ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான FBI காவல்துறைக்கு இந்த செய்தியை பரப்பியது.
1956-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே தனது உளவு அமைப்பான FBI-யை பயன்படுத்த துவங்கியது. மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு (கம்யூனிஸ்ட்களுக்கு) எதிராக 1956-ஆம் ஆண்டு FBI ஒரு இரகசியமான ஆனால் முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமான ஒரு பிரிவான COINTELPRO (Counter Intelligence Program என்பதன் சுருக்கம்) என அழைக்கப்படும் எதிர் உளவுத் திட்டத்தை முறையாகத் தொடங்கியது.
COINTELPRO திட்டம் என்பது அமெரிக்க மக்களின் அரசியல் அமைப்புகளைக் கண்காணிப்பது, அவர்கள் அமைப்பில் ஊடுருவுவது, அமைப்பின் மீது சாட்சியங்கள் இல்லாத அவதூறுகளை பரப்பி மதிப்பிழக்கச் செய்வது மற்றும் ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரிவு FBI-யால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
1967-இல், “கறுப்பின தேசியவாத குழுக்களை” குறிவைத்து ஒரு புதிய COINTELPRO-ஐ உருவாக்கியது. அதே நேரத்தில், FBI தனது உள்நாட்டு புலனாய்வுப் பிரிவிற்குள் “இனப் புலனாய்வு விசாரணைகள்” பிரிவையும் உருவாக்கியது. இது வெள்ளை இனவெறிகொண்ட அமெரிக்க அரசிற்கு எதிராக போராடுபவர்களை கண்காணிக்கவும், அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
மார்ச் 4, 1968 அன்று, FBI இந்த COINTELPRO-வின் புதிய இலக்குகளை வரையறுத்தது, அதில் “கறுப்பின தேசியவாத இயக்க போராளிகளை ஒருங்கிணைத்து துடிப்புடன் வைத்து இருக்கக்கூடிய ஒரு மெசியாவின் எழுச்சியைத் தடுப்பது” என்ற செய்தியை கொண்டு இருந்தது.
அமெரிக்கா அரசு, வெள்ளை இனவெறி கொண்ட ஜே.எட்கர் ஹூவர் என்பவரை FBI-யின் முதல் இயக்குனராக நியமித்தது. இந்த ஜே.எட்கர் ஹூவர் அவர்களே பிளாக் பாந்தர் கட்சியை “தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று அறிவித்தார். “கறுப்பின தேசியவாத” குழுக்களுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட 295 COINTELPRO நடவடிக்கைகளில், 233 நடவடிக்கைகள் பிளாக் பாந்தர் அமைப்பிற்கு எதிராக மேற்கொண்டனர்.
பிளாக் பாந்தர் அமைப்பிற்கு எதிராக FBI-யால் மேற்கொள்ளப்பட்ட COINTELPRO எனும் சதித்திட்டங்களே “யூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா” திரைப்படத்தின் மைய கருவாகும். அதனை திரைப்படத்தின் முக்கிய காட்சிகளாகவும் அமைத்து இருக்கிறார் இயக்குநர் ஷாகா கிங் (Shaka King).
முதலில் கறுப்பின மக்கள் அமைப்பில் ஊடுருவுதல் மற்றும் கண்காணித்தல்
கறுப்பினத்தவரை மிரட்டி அல்லது பண ஆசை காட்டி பிளாக் பாந்தர் அமைப்பிற்குள் ஒருவர் அல்லது பலரை ஊடுருவ செய்வது. பின் அவர்களை வைத்தே அந்த அமைப்பை உள் இருந்தபடி கண்காணிப்பது.
அமைப்பின் மீது சாட்சியங்கள் இல்லாத அவதூறுகளை பரப்பி மதிப்பிழக்கச் செய்வது
பிளாக் பாந்தர் அமைப்பு வெறுப்பு அரசியலையும், தீவிரவாதத்தையும் முன்னெடுப்பதாக மக்களிடமும், அமைப்பிற்குள் ஊடுருவ தயார்படுத்தப்படும் நபர்களிடம் (O’Neil) ஆதாரங்கள் இன்றி பொய்களை கூறி அவர்களை ஸ்லீப்பர் செல்லாக பயன்படுத்துவது போன்ற காரியங்களை FBI செய்தது.
பின், பிளாக் பாந்தர் அமைப்புடன் இயங்கிய பிற அரசியல் அமைப்புகளுடன் முரண்களை உண்டாக்கி குழப்பத்தையும், சண்டைகளையும் ஏற்படுத்தி அவர்களுக்குளேயே அடித்து கொள்ளும்படியான நகர்வுகளை மேற்கொண்டது FBI.
சக கறுப்பின அமைப்பான கிரவுன் அமைப்பிற்கு எதிராக பிளாக் பாந்தர்ஸ் துண்டறிக்கை அடித்து பிரச்சாரம் செய்தாக இரு அமைப்புகளுக்கு இடையே மோதலை உருவாக்கியது. பிளாக் பாந்தர் அமைப்பு தான் இந்த துண்டறிக்கையை எழுதி, பிரச்சாரம் செய்ததுபோல் நேர்த்தியாக இரு அமைப்புகளுக்குள் பகையை வளர்த்தது FBI.
ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைப்பது
அரசின் சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிராக மக்கள் ஒன்றிணைந்து விடுதலையை நோக்கி பயணிக்கும் போது, அரசு அச்சம் கொள்கிறது. அநீதிக்குள்ளான மக்கள் தங்களின் விடுதலையை சாத்தியப்படுத்தும் முதல் அடிப்படையாக கொள்வது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் பெயராலே மக்கள் ஒன்றிணைகிறார்கள். இதுவே விடுதலையின் பேராற்றலாகவும் அமைப்பாகவும் உருமாறுகிறது.
இந்த நம்பிக்கையை தான் அரசின் உளவு நிறுவங்கள் முதலில் அழித்தொழிக்கின்றன என்பதை இப்படம் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படம் உபதேசங்களை தவிர்த்துவிட்டு, FBI-இன் சில பொதுவான COINTELPRO தந்திரங்களை சித்தரிக்கும் ஒரு நல்ல வேலையை செய்து இருக்கிறது. குறிப்பாக “snitchjacketing” எனும் முறை.
“snitchjacketing” என்றால் அரசின் ஒற்றனாக அமைப்பிற்குள் ஊடுருவும் நபர், அமைப்பிற்குள் ஒரு நபரின் மீது அல்லது பலரின் மீது அவதூறுகளை கிளப்பி, சந்தேகத்தை உருவாக்குவது, பின் அமைப்பிற்குள் அவநம்பிக்கையை விதைத்து ஒட்டுமொத்தமாக அமைப்பை சீர்குலைப்பது.
FBI-யால் உருவாக்கப்பட்டு அமைப்புக்குள் நுழையும் நபர்கள் அமைப்பிற்குள் துரோக அரசியலை வளர்த்தெடுத்து விடுதலை அரசியலை அழிப்பார்கள். இன்றளவும் இந்த தந்திர முறை பல அரசு உளவு நிறுவங்களின் பிரபலாமான ஒன்றாகும்.
ஃபிரெட் ஹாம்ப்டன், மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கவர்ச்சியான பேச்சாளர் மட்டும் இன்றி மிக குறுகிய காலத்தில் ஒரு பெரும் மக்கள் அரசியல் அமைப்பை கட்டி எழுப்பிய ஒரு சிறந்த போராளியும் ஆவார். அமெரிக்காவின் வெள்ளை இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிராக, பல இனத் தொழிலாளர் வர்க்கக் கூட்டணியை ஒன்றிணைக்கக் கூடியவராக இருந்தார். இப்படிப்பட்ட நபரை கண்டு FBI பயந்தது என்பது உண்மையே. எனவே தான் அவர்கள் அவரை படுகொலை செய்ய தேர்வு செய்தனர்.
1968 ஜூலையில் ஐஸ்கிரீம் வண்டியை தாக்கி, திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக ஜாமீன் மறுக்கப்பட்டது, ஆகஸ்ட் 1969-இல் அவர் விடுவிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், அமெரிக்க காவல்துறைக்கும் பிளாக் பாந்தர்ஸ் அமைப்பிற்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்தது.
1969-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில், ஆயுதமேந்திய அதிகாரிகள் சிகாகோவில் உள்ள ஹாம்ப்டனின் குடியிருப்பில் நுழைந்து, அவரை படுக்கையில் சுட்டுக் கொன்றனர். அவரை கொல்லப்படுவதற்கு முன்பு, பிளாக் பாந்தர் அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த FBI உளவாளியான வில்லியம் ஓ’நீல் முந்தைய நாள் இரவு ஹாம்ப்டன் குடிக்கும் பானத்தில் தூக்க மாத்திரையை கலந்தது, சோதனை நடுக்கும்போது அவரால் எதிர்த்துப் போராட முடியாதபடி செய்தது.
கறுப்பின மக்களின் தேசிய விடுதலைக்கு போராடிய பிளாக் பாந்தர் அமைப்பின் ஃபிரெட் ஹாம்ப்டன் அவர்களை அமெரிக்க அரசு கொலை செய்ய தேர்ந்தெடுத்த ஆயுதம் என்பது வில்லியம் ஓ’நீல் எனும் கறுப்பினத்தவரையே துரோகியாக பயன்படுத்துவதாகும்.
இந்த திரைப்படம் ஏதோ அமெரிக்காவை சொர்க்கபூமியாகவும், வேற்று கிரகவாசிகளின் தாக்குதலில் இருந்து உலகத்தை காக்கும் நாடாகவும், உலக நாடுகளின் அமைதியை காப்பாற்ற போராடும் அமெரிக்க உளவாளியின் தேசப்பற்றை கூறும் மொக்கை தனமான ஹாலிவுட் வகை சினிமா கிடையாது. நூற்றாண்டுகளாக அமெரிக்க அரசால் சுரண்டப்பட்டு, கொல்லப்பட்டு வரும் கறுப்பின மக்களின் உண்மை நிலையை மிகக்காத்திரமாக வெளிப்படுத்தும் சினிமாவாகும்.
பொதுவாக அமெரிக்காவின் ஹாலிவுட் சினிமாவில் அங்கு வாழும் எளிய மக்களின் வாழக்கை பற்றியோ அவர்களின் இன்பம், துன்பம், ஆசை, வெறுப்பு, சமூக சிக்கல்கள், இனவெறி சிக்கல்கள், கலாச்சாரங்களை கூறும் சினிமாவாக இல்லாமல் வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்படும் ஒரு வணிகம் சார்ந்த சினிமாவாகவே இருந்து வருகிறது. மேலும் ஹாலிவுட் சினிமா உலகம் முழுவதும் ஒரு கருத்தியல் கட்டமைப்பு சினிமாவாகவும் இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் 90-களுக்கு பிறகு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கட்டமைக்கும் கருத்தியல் சினிமாக்களை உருவாக்கியது. உதாரணத்திற்கு “The Dictator” மற்றும் “American Snipper” படங்களை கூறலாம்.
மக்களுக்காக போராடுபவர்களை கொல்ல பயன்படுத்தப்படும் உளவு நிறுவனங்களை தேசப் புனிதர்களாக கட்டமைக்கும் கருத்தியல் சினிமாக்களை ஹாலிவுட் தயாரித்தது. இந்த வகையான சினிமாவே மக்களை உளவியல் ரீதியாக ஏமாற்ற பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய வகையாக (Genre) அது வைத்துள்ளது. உதாரணத்திற்கு “Mississippi Burning” மற்றும் “American Snipper” படங்களை கூறலாம். CIA மற்றும் FBI உளவு நிறுவனங்கள் அமெரிக்க மக்களை மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் தேசியவாதிகளாக இந்த படங்களில் காட்டப்படுகிறது.
தேசபக்தியை முன்னிறுத்தும் படங்களில் அந்த தேசம் யாருக்கானது, அந்த தேசத்தில் யாருக்கு அரசியல், சமூகம், கலாச்சரம் மற்றும் பொருளாதார முன்னுரிமை வழங்க படுகிறது என்பதை காட்டாமல் வெறும் மொன்னை தனமாக வெளிநாட்டு எதிரி என்று கூறி பார்ப்பவர்களை அறிவற்ற எதை காட்டினாலும் நம்பக்கூடிய ஒரு ஆட்டுக்குட்டி கூட்டமாக மாற்றிவிட்டுவிடுகிறது.
அந்த வகையில் “யூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா” எனும் இந்த திரைப்படம் உண்மையாக அரசின் உளவு நிறுவங்கள் மக்களை பாதுகாக்கிறதா? எந்த மக்களை அது பாதுகாக்கிறது? எந்த மக்களை அது கொலை செய்கிறது? எந்த மக்களை அரசியல் மற்றும் அதிகார தளங்களில் தக்கவைக்க விரும்புகிறது? அரசியல் உண்மைகளை தெரிந்து கொண்ட மக்களை எப்படி ஒடுக்குகிறது? உண்மையில் ஒரு தேசம் எந்த மக்களுக்கானது? என்ற கேள்விகளை மட்டும் முன்வைக்காமல் அமெரிக்க அரசின் உண்மையான நிறவெறி, இனவெறி அரசியலையும் அதை எதிர்த்து கறுப்பின மக்களின் தேசிய இனவிடுதலை போராட்டங்களையும், அந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்க அமெரிக்க அரசு எந்த எல்லை வரைக்கும் பயணிக்கும் எனும் உண்மையை உரக்க கூறி இருக்கிறது.
மீண்டும் உயிர்த்தெழும் “ஃபிரெட் ஹாம்ப்டன்” எனும் கறுப்பின போராளி
1969-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில், ஆயுதமேந்திய அதிகாரிகள் சிகாகோவில் உள்ள ஹாம்ப்டனின் குடியிருப்பில் நுழைந்து, அவரை படுக்கையில் சுட்டுக் கொன்றனர். “ஃபிரெட் ஹாம்ப்டன்” அவர்களை கொன்றுவிட்டால் கறுப்பின மக்கள் விடுதலையை கைவிட்டுவிடுவார்கள் என்று நம்பியது அமெரிக்க அரசு.
கடந்த ஆண்டு ஜார்ஜ் ஃபிலாய்டின் கழுத்தில் ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் தன் முழங்காலை வைத்து மூச்சிவிடாதபடி கழுத்தை நெருக்கி அவரை கொலை செய்த அமெரிக்க காவல் அதிகாரி டெரெக் சௌவின் வெறிசெயல் காணொளி மக்களை கொந்தளிக்க செய்தது. கறுப்பின மக்கள் தங்களை இனரீதியாக ஒடுக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டு அமெரிக்காவின் தெருக்களை போராட்டக்களமாக மாற்றி அரசை மண்டியிடச்செய்தனர்.
இப்பெருந்திரள் போராட்டம் இந்த ஒரு நபர் கொல்லப்பட்டதில் இருந்து துவங்கவில்லை. 2020-ஆம் ஆண்டில் மட்டும் 241 கறுப்பின மக்கள் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக கறுப்பின மக்கள் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்படுவதை கண்டு தங்களுக்கான உரிமையை மீட்டுடெடுக்கவும், காவல்துறையின் இனவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து #BlackLivesMatter (கறுப்பர்கள் உயிரும் முக்கியம்) என்ற முழக்கத்துடன் அமெரிக்க அரசை எதிர்த்து வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் பின் காவல் அதிகாரி டெரெக் சௌவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஒரு கறுப்பினத்தவரைக் கொன்றதற்காக காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்குவது அமெரிக்காவில் மிகவும் அரிதானது. இந்த #BlackLivesMatter போராட்டத்தில் கறுப்பின மக்களின் எழுச்சியின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டியது, மீண்டும் கறுப்பின மக்கள் தங்களுக்கான சுயமரியாதையையும், சுயநிர்ணய உரிமையையும் பெறுவதற்கான போராட்டங்களை துவங்குவதனை. 1960 மற்றும் 1970-களிலும் கறுப்பின மக்கள் இதே போராட்டத்தை தான் துவங்கினர். 50 வருடங்கள் கழித்தும் அவர்கள் மீதான அரசின் இனவெறி ஒடுக்குமுறை இன்றும் தொடர்ந்து வருகிறது, கறுப்பின மக்கள் மீண்டும் தங்களின் அரசியல் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இன ஒடுக்குமுறை மற்றும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக இது உருவெடுக்கும் என்பது வரலாற்றின் தேவையாக அமையும்.
இன்றைய சமூக ஆர்வலர்கள் இன ஒடுக்குமுறை மற்றும் வர்க்கச் சுரண்டலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுடன் போராடுகிறார்கள். ஆனால் ஃப்ரெட் ஹாம்ப்டனின் புரட்சிகர பார்வையானது, இன ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவ சுரண்டலை எவ்வாறு தனித்தனி பிரச்சனைகளாகக் கருதாமல், பின்னிப் பிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படவேண்டும் என்பது பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
பெரும் முதலாளிகளை காப்பாற்றும் வெள்ளை இனவெறி மேலாதிக்க அமெரிக்க அரசால் இன்றும் இன ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், கொல்லப்பட்டும் வரும் கறுப்பின மக்களின் மறக்கடிக்கப்பட்ட கடந்தகால கறுப்பின தேசிய விடுதலை அரசியல் எழுச்சியும், தூரோகத்தால் நடந்த வீழ்ச்சியையும் பேசும் “யூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா” திரைப்படம் கறுப்பின மக்களை விடுதலையை நோக்கி ஒன்றிணைக்கும் போர் ஆயுதமாக உள்ளது.
இப்படம் கருப்பின மக்கள் மட்டும் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல, முதலாளித்துவ அரசால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் அனைத்து இனமக்களும் கொண்டப்பட வேண்டிய படமாகும்.
இப்படத்தில் பிளாக் பாந்தர் அமைப்பின், புரட்சியாளர் ஃப்ரெட் ஹாம்ப்டன் கொல்லப்படுவதற்கு முன்னால் மக்களிடம் ஆற்றிய புரட்சிகர உரை நாம் அனைவரும் காலத்திற்கும் நினைவுகூர வேண்டியதாகும்.
“நீங்கள் ஒரு புரட்சியாளரைக் கொல்லலாம், ஆனால் ஒருபோதும் புரட்சியைக் கொல்ல முடியாது”
நான் ஒரு புரட்சியாளன் (I Am a Revolutionary)
நான் ஒரு புரட்சியாளன் (I Am a Revolutionary)
நான் ஒரு புரட்சியாளன் (I Am a Revolutionary)…”