ஈழ மண்ணை அபகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழர்களை அழித்த சிங்கள ஆதிக்க வெறியர்களை எதிர்த்த களத்தில் வீரச் சாவெய்தியவர்கள் மாவீரர்கள். ”கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை எம் மண்ணுக்காக நான் போராடுவேன்’ என்ற நேதாஜி சுபாசு சந்திர போசின் சொற்பொழிவுகளைக் கேட்டும், “தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால் கருத்துக்களைக் கொல்ல முடியாது” என்ற பகத்சிங்கின் தியாக வரலாற்றைப் படித்தும் இன விடுதலைக்காக ஆதிக்க வெறியர்களை துளியும் சமரசமின்றி எதிர்த்து நின்றவர் தமிழீழ தேசியத் தலைவர். அவரின் உறுதியுடன் அவர் பின்னால் அணிவகுத்து ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!‘ என்று உறுதியெடுத்து தங்கள் இன்னுயிரையும் ஈந்து தமிழீழ மண்ணில் விதையானவர்களே மாவீரர்கள்.
ஆதிக்கம் என்பது எள்ளளவும் மாவீரர்கள் மரணத்தில் கூட பதிந்து விடக் கூடாதென நினைத்தவரே தமிழீழ தேசியத் தலைவர். “எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதுகிறோம்…எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும், எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு செய்துள்ளோம்” – முதல் மாவீரர் நாளை 1989-ல் அனுசரிக்கத் துவங்கிய போது தேசியத் தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையின் சில துளிகள். சமத்துவம் என்பதை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்திலிருந்து கடைபிடித்தவர்களாய் விடுதலைப் புலிகள் வாழ்ந்தார்கள்.
ஒழுக்கமும், கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் கொண்ட புலிகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களின் முதல் களப்பலியான லெப். சத்தியசீலன் என்கிற சங்கரின் நினைவு தினமான நவம்பர் 27-ந் தேதியைத் தான் மாவீரர் நாளாக புலிகள் கொண்டாடினர். சிங்கள இராணுவத்தினால் சுடப்பட்டதால், தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வந்த சங்கருக்கு சிகிச்சை பலனின்றி போனது. தம்பியென அழைத்த தலைவன் மடியில் சங்கரின் உயிர் பிரிந்தது. சங்கரின் உடல் மதுரையில் உள்ள சுடுகாட்டில் எரிக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த புலிகள் அதன் பின்னர் தான் மரணித்தவர்களை புதைக்கும் முடிவை எடுத்தனர். அவைகள் கல்லறைகள் அல்ல; மாவீரர் துயிலும் இல்லங்கள் என அறிவித்தனர். தமிழீழக் கனவை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும் தியாக சின்னங்களாக போற்றிக் காத்தனர். 1989, நவம்பர் 27ல் தலைவர் பிரபாகரன் ஆற்றிய முதல் மாவீரர் உரையின் போது அதுவரை வீரச்சாவடைந்த 1207 போராளிகளுக்கு நினைவு கூறினார்.
ஆதிக்கம் செய்வோரின் தன்மையைப் பொறுத்து அழுத்தப்படும் மக்களின் கிளர்ச்சிகளும் எழும் என்பதே உலகத்தின் நடைபெறும் போராட்டங்களின் வரலாறு. தங்களுக்கான வரலாற்றுப் பூர்வமாக உரிமையான நிலங்களை, முன்னேறும் பிடியாக இருந்த கல்வியை, திறமைக்கு உரித்தான வேலைவாய்ப்புகளைப் பறித்ததோடு, உரிமைக்கு அமைதியாகப் போராடிய மக்களின் உயிரையும் குடித்த பேரினவாத சிங்கள அரசின் பயங்கரவாதத்திலிருந்து இனத்தின் இறையாண்மையைக் காக்க கிளர்ந்தெழுந்து வீரச்சாவினை தழுவிக் கொண்டவர்களே மாவீரர்கள்.
“ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது“– தேசிய ஆன்மாவின் இலக்கணத்தை தெளிவாகக் கணித்த தேசியத் தலைவரின் கூற்றுப்படியே அந்த இலட்சிய நெருப்பை அணைய விடாது மாவீரர் நாளின் தீபங்களாக இன்னமும் தமிழர்கள் அடைகாக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் 1974-ல் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தமிழர்களைக் கொன்ற காவலதிகாரியைக் கொல்ல முயற்சித்து தோற்றுப் போனதால், அவர்களிடம் பிடிபடாதிருக்க சயனைடு நஞ்சை அருந்தி மாண்டு போன தமிழீழத்தின் சிவகுமாரன் முதல் வல்லாதிக்க நாடுகளின் உதவியுடன் ஈழத் தமிழர்களை 2009-ல் கொன்று குவித்த இனப்படுகொலையை நிறுத்தக் கோரி தீக்குளித்த தமிழ்நாட்டின் முத்துக்குமார் வரை பரவிய அந்த வரலாற்றுத் தொடர் சக்தி தான் தேசியத் தலைவர் வரையறுத்த இனத்தின் இலட்சிய நெருப்பான தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பியதற்கு சான்றுகள்.
‘என்னைச் சுட்டு விட்டு துப்பாக்கி எடுத்துக் கொண்டு போ’ என்று சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட சீலன் என்ற மாவீரன் சக வீரனிடம் கட்டளையிட்டதில் உள்ள ஈகம், பிரபாகரன் நேரில் வந்து சண்டையிட்டால் கூட சமாளித்து விடுவேன், வந்திருப்பதோ பால்ராச் – என்று சிங்கள ராணுவத் தளபதி புலித் தளபதியைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கான வீரம், முதல் கரும்புலியாக ஆயுதம் நிரம்பிய வாகனத்தில் சென்று சிங்கள முகாமைத் தாக்கி நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று உடல் சிதறி இறந்த கேப்டன் மில்லரின் தியாகம், முதல் பெண்புலியாக வீரச்சாவடைந்த லெப். மாலதியின் தீரம் என இவர்களைப் போலவே ஆயிரக்கணக்கான புலி வீரர்கள், தளபதிகள், கரும்புலிகள், பெண்புலிகளாக அர்ப்பணித்த உயிர்களால் கட்டி எழுப்பப்பட்டது தமிழீழப் போராட்டம். தமிழர்களின் மரபு வழி குணங்களை மீட்சி பெற வைத்த மாபெரும் சக்திகளாக களம் கண்டவர்களே மாவீரர்கள்.
பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு. 3000-திற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ஈழப் போராட்டத்தில் களப்பலியாகி மாவீரர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆள்பலம், ஆயுத பலம், அதிகார பலம், நட்பு நாடுகளின் பலம் கொண்டு போரிட்ட சிங்கள அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட, இந்த பலங்களை மிகவும் குறைவாகவே பெற்ற புலிகள், இதனை ஈடுபட்ட ஒப்பற்ற தியாகத்தை வழங்கும் ஒரு வடிவமாக கரும்புலிகள் என்னும் பிரிவைக் கொண்டு வந்தனர். ‘உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்‘- என்றவர் தமிழீழ தேசியத் தலைவர். ஒவ்வொரு முறையும் கரும்புலியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாவீரர்களாக வேண்டுமெனவே ஒவ்வொரு புலி வீரரும் எதிர்பார்த்தனர். அந்த அளவிற்கு உயிரை விட இனத்தினை நேசித்தவர்கள் கரும்புலி மாவீரர்கள்.
புலிகளின் படைக் கட்டமைப்புகளான தரைப்படை, கடற்படை பிரிவுகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயர்களை படையணிகளுக்கு புலிகள் சூட்டினார்கள்.
” வா பகையே…வா..
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம்
உலுப்பிக் கொட்டு.
வேரைத் தறித்து வீழ்த்து.
ஆயினும் அடியணியோம் என்பதை
மட்டும் நினைவில் கொள்!”
– புதுவை கவிஞர். இரத்தினதுரையின் கவிதைக்கேற்ப படையணிகள் ஒவ்வொன்றும் சீறி எழுந்து களம் கண்டு சிங்கள ராணுவ முகாம்களை சிதைத்தது. சிங்கள இராணுத்தை அச்சப்பட வைத்து ஓட விட்டது. ஆயிரக்கணக்கான புலி வீரர்களின் வீரச்சாவுகளால் இனத்தின் வெற்றி நிறைவேறும் காலகட்டத்தில் தான் அமைதி பேச்சுவார்த்தை என்கிற முகமூடியிட்டுக் கொண்டு நரிகளாய் சில நாடுகள் உள்நுழைந்தன. இலங்கையின் அதிபர் சிங்களக் குடிமக்களை அடகு வைத்து உலக நாடுகளிடையே உதவிகள் வாங்கிக் குவித்த வேளையில், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் மீள்கட்டமைக்கும் வழிகளை புலிகள் மேற்கொண்டனர். 1983 – முதலே புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவமும், அமைதிப் படை என்ற பெயரில் உள்நுழைந்த இந்திய ராணுவமும் சேர்ந்து வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை வல்லாதிக்கப் பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து வீழ்த்தினர். அவர்களின் உதவியோடு ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்தது பயங்கரவாத சிங்களப் பேரினவாத அரசு.
மக்களை அடகு வைத்ததனால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி சீரழிந்த இலங்கை இன்று தமிழீழ நிலங்களை அடகு வைத்து மீள்கிறது. மக்களின் விவசாய நிலங்களைப் பறித்து ஈழ மக்களை நிராதரவாக்குகிறது. வடக்குப் பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு அபகரித்து இராணுவப் பகுதியாக மாற்றியிருக்கிறது. உயிர்களை அரணாக அமைத்து மாவீரர்கள் காத்த நிலம் இன்று கயவர்களின் பிடியில் சிக்கி விட்டது. விடுதலைப் புலிகளை அழிக்க துணை புரிந்த நாடுகளின் உள்ள பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட இந்த நிலங்கள் வளைக்கப்படுகிறது. தமிழர் கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் நிறுவப்படுகிறது. காணி நிலங்களை இழக்கும் தமிழர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்காமல் நீதியும் நகர்கிறது.
இவ்வளவு நெருக்கடியான சூழலில் தமிழீழ மக்கள் சிக்கி இருந்தாலும், தங்களுக்காக மாவீரர்களானவர்களை என்றுமே மறப்பதில்லை.
“சும்மா காற்றில்பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு – புதுவை இரத்தினதுரையின் உயிர்ப்பூட்டும் வரிகளுக்கிணங்க ஆண்டுகள் தவறாமல் உயிரூட்டிக் கொண்டேயிருப்பதை உலகத் தமிழினம் நிறுத்துவதில்லை.
ஈழ இனப்படுகொலை முடிந்து 15 வருடம் கடந்தும் நம்மிடம் இருக்கும் கேள்வி, இன்னும் எவ்வளவு காலத்திற்கு மாவீரர்களின் ஈகத்தை தமிழர்களின் உணர்ச்சி வளையத்திற்குள் அடைத்து விடப் போகிறோம் என்பதுதான். இன்று பாலஸ்தீனத்தின் இனப்படுகொலைக்கு கோடிக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து நிற்பதைப் போல், ஈழத் தமிழினத்தை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்ததைக் கண்டித்து வீதிக்கு வராமல் போனதற்கு, அவர்களிடம் விடுதலைப் புலிகளின் தார்மீக நியாயத்தை, மாவீரர்களின் ஈகையை பண்பாடாக, அரசியலாக சென்று சேர்க்கப்படாதது தானே காரணமாக இருக்க முடியும். அக்கடமையை உலகத் தமிழினம் மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களும் செய்திருக்க வேண்டும். ஆனால் மாவீரர்களின் ஈகத்தை தமிழர்களிடையே பண்பாடாக கடத்துவதில் விருப்பமின்றி நிராகரித்து விட்டன திராவிடப் பெருங்கட்சிகள். திராவிட பெயரில் இயங்கும் சில சமூக வலைதளப் பேர்வழிகளோ அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கட்டமைப்பை நிறுவி, வசவுகளை சுமத்திக் கொண்டிருக்கின்றன.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, ‘தமிழர்’ என்ற அடையாளத்துடன் வந்த கட்சியோ, தனது கட்சிக்கான மூலதனமாக மாவீரர்களின் ஈகத்தை மாற்றிக் கொண்டு, அவர்களின் நியாயமான போராட்ட அடிப்படைகளை உலக அரங்குகளிலோ, இந்திய மட்டங்களிலோ பேசவில்லை. இனப்படுகொலைப் போருக்கு காரணமான இந்தியப் பார்ப்பனியத்தை நோக்கி இங்கும் வலிமையான போராட்டங்களை கடந்த 15 வருடங்களாக கட்டி எழுப்பியது இல்லை. மாறாக பார்ப்பனிய இந்துத்துவத்தை சக நண்பனாக சொல்லும் அளவுக்கு சீரழிவு அரசியலில், மாவீரர்களின் தியாகத்தை உணர்ச்சி அளவில் மட்டுமே சுருக்கி விட்டது.
தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஜனநாயக அமைப்புகள் செதுக்கும் போராட்டங்களின் பலனை, இறுதியில் ‘தமிழர்’ என்ற ஒற்றை வார்த்தையை கட்சியின் பெயராகக் கொண்டு அபகரித்துச் செல்கிறது கட்சியாக அது இருக்கிறது. திராவிட கட்சிகளை எதிரியாக முன்னிறுத்தி முன்னேறிச் செல்லும் மலிவான அரசியல் செய்யும் அக்கட்சி, மாவீரர்களின் ஈகத்தைக் கண்டு நெஞ்சுருகும் தமிழ் மக்களை அதே ‘தமிழர்’ என்கிற வார்த்தையைக் கொண்டு கட்சி வளர்க்கும் சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறது. தமிழ் தேசிய ஓர்மையை சாத்தியப்படுத்தும் போராட்டங்களை கூர்மைப்படுத்த, அதற்கு தமிழர்களின் ஒற்றுமையை மேம்படுத்த தமிழ்நாட்டின் கூட்டமைப்புகளுடன் இணைந்து நின்றதில்லை அக்கட்சி. மாவீரர்களின் தியாகத்தை தமக்கான கட்சி வளர்ப்பு உணர்ச்சி நிகழ்வாக ஒரு கூண்டுக்குள் அடைக்கும் அதனைக் கடந்து, மாவீரர்களின் நோக்கத்தை பண்பாட்டு வழியாக, சர்வதேச நீதி அமைப்புகளில் முறையிடல் மூலமாக, பல இன அரசியல் கட்சிகளில் விவரித்தல் ஊடாக கடத்தும் அர்ப்பணிப்புள்ள தமிழர்களையும், அமைப்புகளையும் மாவீரர்கள் நாளில் போற்றி, தமிழினத்தின் ஆன்மா சொத்துக்களான மாவீரர்களுக்கு நினைவேந்துவோம்.
“மாவீரர்கள் காலத்தால் சாகாத சீரஞ்சீவிகள்; சுதந்திரச் சிற்பிகள்; மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்” – தேசியத் தலைவர். வீர மறவர்களை நினைவு கூர்வோம். சுதந்திரச் சிற்பிகளை வணங்குவோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”.