வரலாற்று சாசனமான தமிழரசனின் தமிழ்த்தேசியப் பிரகடனம்

May be an image of 5 people and text that says "செப்டம்பர் 1 தமிழ்தேசிய போராளிகளின் நினைவுநாள் தோழர்.தர்மலிங்கம் தோழர். தோழர்.அன்பழகன் தோழர்.பழனிவேல் தோழர். தோழர்.செகநாதன் தமிழ்தேசியத்தலைவர் தோழர்.தமிழரசன் தோழர்."
இந்தி(ய) அதிகார வர்க்கமே தமிழினத்தின் முதன்மை எதிரி என்று அடையாளப்படுத்தி, தமிழ்த்தேசிய பிரகடனத்தை முன்வைத்த தோழர் தமிழரசனின் நினைவு நாளில் தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் செப்டம்பர் 1,2025 செய்த பதிவு

தோழர் தமிழரசன் கூர்மையான ஆய்வுகளுடன் தமிழ்த்தேசிய பிரகடனத்தை முன்வைத்தவர். இதுவரை மறுக்க இயலாத தெளிவுடன் நிற்கும் வரலாற்று சாசனமாக அவரது பிரகடனங்கள் உள்ளன. இந்தியாவிற்கும், தமிழ்தேசிய மக்களுக்குமான முரண்களை தெளிவுபட விளக்கியவர். தமிழ்த்தேசிய மக்களாக இந்த மண்ணின் உழைக்கும் ஏழை பாட்டாளிகளை அடையாளப்படுத்தியது அவரது பிரகடனம்

தேசிய இனத்திற்கும், இனவாத அரசியலுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள அவரது அறிக்கைகளே முதன்மையானவை. ஏழை தமிழ்மக்களின் மீதான சுரண்டல்களை நடத்துபவர்களை அடையாளம் காட்டியவர். ஏகாதிபத்திய- இந்திய முதலாளிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்குள்ளாக சுரண்டும் முதலாளிய ஆற்றல்களையும் எதிரிகளென அடையாளப்படுத்தியவர். தமிழ்த்தேசிய எழுச்சிக்கு தடையாக இருக்கும் முதன்மை சக்தியாக சாதியை சுட்டி, சாதிய சுரண்டலின் அடித்தளத்தை ஆய்வுப்பூர்வமாக அணுகியவர். சாதி ஒழிப்பு அரசியலின் வரலாற்று பாத்திரத்தை குறிப்பிட்டு, அதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்தார் தமிழரசன்.

இந்திய- தமிழக அளவில் வரலாற்று நெடுகிலும் நடந்த சாதி ஒழிப்பு முயற்சிகளை பட்டியலிட்டு, அதன் சாதக-பாதக அம்சங்களை ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், அவற்றின் தோல்விக்கான காரணத்தையும் விளக்கியவர். இந்த முறைகளிலிருந்து தமிழ்த்தேசிய அரசியல் எங்ஙனம் மாறுபட்ட சாதி ஒழிப்பு பணிகளை நடத்த வேண்டுமென தெளிவுபடுத்தியவர்.

திராவிடம், பெரியார் மீதான அவரது மதிப்பீடுகளும், ஆய்வுகளும் காழ்ப்புணர்வின் மீது கட்டியெழுப்பப்பட்டவையல்ல. இவற்றின் போதாமையையும், பொருள்முதல்வாத போக்கிலான ஆய்வின் அடிப்படையிலும் இந்த இயக்கத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்தவர். சாதியொழிப்பின் மூலவேர்களை அறிவியல்பூர்வமாக விளக்கிய அவரது அறிக்கைகள் மிகத்தெளிவானவை. தமிழ்த்தேசிய மக்கள் யார், இவர்களின் பிரதான எதிரிகள் எவர், இவர்களின் முரண் ஆற்றல்களை துல்லியமாக வரையறை செய்து, அவற்றின் மீது தாக்குதலை நடத்தியவர் தமிழரசன்.

தமிழ்த்தேசிய மக்கள் மீது ஒடுக்குமுறைகள், சுரண்டல்களை நடத்தும் கட்டமைப்புகளை அவர் கடுமையாக தாக்கினார். இதனாலேயே தமிழ்த்தேசிய பாட்டாளிகளைக் கொண்ட வலிமையான மக்கள் படையை உருவாக்க இயன்றது. சாதி கடந்து தமிழ்த்தேச விடுதலையை இலக்காக ஏற்றுக்கொண்டு தோழர்கள் அவருடன் கைகோர்த்ததன் காரணம், தமிழரசனின் வரலாற்று நோக்கிலான பார்வையும், ஆழமான அரசியல் உணர்வும், சமரசமற்ற போர்க்குணமும் முக்கியமானது. ஏழை பாட்டாளிகள் நேரடியாக எதிர்கொண்ட சுரண்டல்களிலிருந்து விடுதலைதையும், அம்மக்களை அடக்கி வன்முறை ஏவிய அரச பயங்கரவாதத்திலிருந்து விடுதலையையும் அவரால் பெற்றுத்தர இயன்றதே பெருவாரியான குடியான மக்கள் அவரது அமைப்பின் மீது கொண்ட அன்பிற்கும், அரவணைப்பிற்கும் காரணியாக அமைந்தது. ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்குரிய எவ்வித வாய்ப்புமற்ற நிலப்பரப்பில், மக்கள் ஆதரவில்லாமல் அவரது படையால் இயங்கியிருக்க இயலாது என்பதே பேருண்மை.

தோழர் தமிழரசன் அவர்கள் தமிழினத்தின் வரலாற்றை மாமன்னர்களின் பெருமிதங்களில் இருந்து தேடவில்லை, தமிழர்களின் பெருமையை சாதிய-குடிதேசிய வாதத்தில் காணவில்லை, முதலாளிகளை புரவலர்களாக அரவணைக்கவில்லை. தமிழ் நிலத்திற்குள்ளாக வாழக்கூடிய அனைத்து பாட்டாளிகளையும் தமிழ்த்தேசிய இன மக்களாகவே அவர் அடையாளப்படுத்தினார். அவரது மார்க்சிய-லெனினிய அணுகுமுறை நேர்மையானது, ஆழமானது பாசாங்கற்றது. இதனாலேயே அவரது கொள்கைப் பிரகடனங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. அவரது போராட்ட அணுகுமுறைகளை விமர்சனப்பூர்வமாக அணுகினாலும் கூட, அவரது தமிழ்த்தேசிய ஆய்வுகளை, இந்தியத்தின் மீதான மதிப்பீடுகளை எவராலும் புறந்தள்ள இயலாது.

தோழர் தமிழரசனை தற்போது ஒருசிலர் தமது சாதியின் அடையாளமாகவும், திராவிட எதிர்ப்பாளராகவும், அல்லது தனது அடையாள அரசியலுக்கான முகப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர். இவற்றிற்கு நேரதிரானவர் தோழர் தமிழரசன்.

தமிழ்த்தேசியம் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய பேரியக்கம் உள்ளிட்டவர்களின் போலியான, உள்ளீடற்ற திரிபுவாதங்களை புரிந்து கொள்ள தோழர் தமிழரசனின் மூன்று மாநாட்டு பிரகடனங்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் வாசிப்பது அவசியம். தமிழ்த்தேசியத்திற்கு நேரெதிரான சமரச அரசியலையும், கோழைத்தனமான பிரிவுவாதத்தையும் இந்த அமைப்புகள் மேற்கொள்கின்றன என்பதை தமிழரசனின் ஆய்வுகள் எளிதில் விளக்கும். தோழர் தமிழரசன் விமர்சிக்கும் இந்திய ஆளும்வர்க்க நலன்களோடு சமரசம் செய்துகொண்ட திராவிட கட்சி ஆட்சியாளர்களின் இடத்திற்கு போட்டிபோடுபவர்களே தமிழ்த்தேசிய முகமூடியோடு இயங்குவதை நாம் அடையாளம் காண இயலும். திராவிட கட்சிகள், திராவிட இயக்க கோட்பாடுகளின் போதாமையை தோழர் தமிழரசன் தன்னுடைய ஆய்வுகளில் சுட்டிக்காட்டி அதனை நிறைவுபடுத்தும் தீர்வுகளை கண்டடைகிறார். மாறாக திராவிடத்தின் மீதும், பெரியாரின் மீதும் சீமான், அய்யா மணியரசன் போன்றோருக்கு இருக்கும் ஒவ்வாமை, பொய்யான ஆய்வுகளை முன்வைக்கும் காழ்ப்புணர்வு அரசியலை தோழர் தமிழரசன் கட்டியெழுப்பவில்லை. இந்தியத்துடனான திராவிடர் இயக்கத்தின் முரண்பாடுகள், போராட்டங்கள், சாதியெதிர்ப்பு போராட்டங்களின் போதாமையை சுட்டிக்காட்டுவது, தமது போராட்டத்தினை வலிமைப்படுத்தும் அல்லது கூர்மைப்படுத்தும் முயற்சியாகவே தோழர் தமிழரசன் மேற்கொள்கிறார். சீமான், அய்யா மணியரசன் போன்று இந்து-இந்தி-இந்திய கட்டமைப்பிற்குள்ளாக தீர்வுகளை, சமரசங்களை கண்டடையவில்லை. தமிழ்த்தேசிய விடுதலைக்கு நேரெதிரான தீர்வுகளை முன்வைக்கக்கூடியவர்களே இந்த திராவிட-பெரியார் ஒவ்வாமை கொண்டவர்கள். திமுக-அதிமுக போன்ற கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்க தமிழ்த்தேசியத்திற்கு உருவாக்கும் பின்னடைவு அரசியலையே சீமான், அய்யா மணியரசன் போன்ற திராவிட எதிர்ப்பு அரசியலாளர்களும் மேற்கொள்கிறார்கள் என்பதை தோழர் தமிழரசனின் பிரகடனங்கள் நமக்கு விளங்க வைக்கிறது. தோழர் தமிழரசனின் ‘சாதி ஒழிப்பும், தமிழக விடுதலையும் ‘ என நூல் தமிழ்த்தேசியத்திற்கான அடிப்படை கோட்பாடு நூலாகவே கருதவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்களை உழவர் விடுதலை, தமிழக விடுதலைப் போராட்டங்களோடு இணைக்க வேண்டுமென்றார் தமிழரசன்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களது ஆய்வுகளை மேற்கோள் காட்டி தமது ஆய்வுகளை முன்வைப்பதும், அண்ணலிடமிருந்து தாம் வேறுபடுகின்ற இடங்களை சுட்டிக்காட்டவும் செய்கின்றார் தோழர் தமிழரசன். அண்ணலும், பெரியாரும் முன்னெடுத்த சாதியொழிப்பு போராட்டத்தின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டும் தமிழரசன், சீமான்-மணியரசன் போன்று இந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி நிராகரிக்கும் காழ்புணர்வு அரசியலை செய்யவில்லை. திராவிடர்கள் யார் என்பதை மணியரசன்-சீமான் போன்று அணுகாமல், தொல்லியல் ஆய்வுகளின் வழியே ஏற்கும் தமிழரசன், சாதிகளின் உற்பத்தியையும், சனாதன போக்குகளையும் மார்க்சிய-லெனினிய பார்வையில் ஆய்கிறார். சாதியமைப்பை அழிக்கக்கூடிய முன்னணி சக்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான பட்டியலினத்தவர்களாகவே இருக்க இயலுமென உறுதிபட கூறியவர் தமிழரசன். இந்த கொள்கைகளை முற்றிலும் நிராகரித்தவர்களே சீமானும்-மணியரசன் அவர்களும். நந்தனாரையும், வள்ளலாரையும் கொன்றழித்தவர்களே அண்ணல் அம்பேத்காரையும் கொலை செய்ய முயன்றவர்கள் என துயருருகிறார் தமிழரசன். அண்ணலை நிராகத்தவர்களே இன்று தமிழ்தேசியவாதிகளாக தம்மை பாவித்துக் கொள்கின்றனர்.

சாதிய எதிர்ப்பு போராட்டத்தை நிராகரிப்பது, சாதியவாதத்தை குடிபெருமை என மீளுருவாக்கம் செய்வது, ஏகாதிபத்திய-இந்திய ஆளும்வர்க்க ஆதிக்கங்களை புறக்கணித்து சிறுபாண்மை மக்களை எதிரிகளாக சித்தரிப்பது என இந்த திரிபாளர்களை தமிழரசனின் ஆய்வுகள் விளங்க வைக்கும். தமிழ்த்தேசிய பாட்டாளிகளை சாதியரீதியாக பிளவுபடுத்தி, இந்திய ஆதிக்க வர்க்கத்திற்கு சேவை செய்யும் போக்குகளைக் கொண்டவைகளே இந்த அமைப்புகள் என்பதை விளங்கிக்கொள்ள தோழர் தமிழரசனை ஆழ வாசிப்பது அவசியம். ஒரு தேசிய இனம் அதனது உழைப்பாள வர்க்கத்திலிருந்து எழுகிறது என்பதை விளங்க வைப்பவர் தோழர் தமிழரசன். இந்த வரலாற்று உண்மையை நிராகரித்து சீமான், அய்யா மணியரசன் போன்றோர் சாதியரீதியாக இனவாதத்தை முன்வைப்பதை தோழர் தமிழரசன் ஒருபோதும் ஏற்றவரல்ல. அவரது கோட்பாடுகள் அறிவியல்பூர்வமான மார்க்சிய-லெனினிய தன்மைக் கொண்டவை. வர்க்க விடுதலைதினூடாக, சாதியொழிப்பின் ஊடாக தேசிய இனவிடுதலையை கோரியவர்.

1947ம் காலனிய காலத்திற்கு பின்பான காலகட்டத்தில் தமிழரசன் முன்வைத்த தேசிய இனவிடுதலை மற்றும் தமிழ்த்தேசிய இனத்திற்கும் இந்திய ஆளும்வர்க்கத்திற்கான முரண்பாடு பற்றிய ஆய்வுகளையும் வாசிப்பவர்களால் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலை முழுமையாக உள்வாங்கிட இயலும். இவ்வகையில் தமிழினத்தின் ஒப்பில்லா சிந்தனையாளனாகவும், கோட்பாட்டாளனாகவும், செயல்வீரனாகவும் மரியாதை செய்யப்படக்கூடியவர் தோழர் தமிழரசன்.

சுரண்டல், ஆதிக்கம், அடக்குமுறை, இனவாதம், சாதியம் ஆகியவற்றிலிருந்து தமிழ்த்தேசிய இனம் தமக்கான இறையாண்மை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை தெளிவுபட முன்வைத்து மக்களை அரசியல்படுத்தி திரட்டி போராடிய ஆளுமைகள் தந்தை பெரியார், தோழர் தமிழரசன், மேதகு பிரபாகரன் ஆகிய மூவர். இவர்கள் அனைவரும் சாதியொழிப்பை வேலைத்திட்டமாகவும், முன் நிபந்தனையாகவும் ஏற்றவர்கள். தமிழர்களை ஒடுக்குபவர்களாக, சக சாமானிய மக்களை- பிற தேசிய இனங்களை அடையாளப்படுத்தாதவர்கள். அரசு, அதிகாரவர்க், முதலாளியம், மதவாதம் ஆகியவற்றை எதிரிகளாக சுட்டியவர்கள்.

ஆரியம், ஆதிக்க வர்க்கம், பேரினவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிரிகளையும், தோழமைகளையும் அடையாளம் கண்டவர்கள். தமிழின எதிரிகளோடு நேரடியான மோதல் போக்கை கொண்டவர்கள்.

தோழர் தமிழரசனின் இழப்பு ஈடுசெய்ய இயலாத வரலாற்று பின்னடைவு. அவரது ஆயுதப்போராட்டம், தமிழ்நாடு விடுதலைப்படை ஆகிய வழிமுறைகள் மீதான விமர்சனங்களைக் கடந்து நம் நேசத்திற்குரியவர்கள். தமிழ்த்தேசிய பாட்டாளிகளை உளமாற நேசித்து தமது இன்னுயிரை ஈந்த முனைமழுங்கா மாவீரன் தோழர் தமிழரசன். அவரோடு களத்தில் நின்று போராடி தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்கொடுத்த போராளிகள் மறக்க இயலாதவர்கள்.

தமிழ்த்தேசிய இனத்தின் எழுச்சிகர நாயகன் தோழர் தமிழரசனுக்கும், அவரோடு களத்தில் போராடி உயிர்நீத்த தோழர்கள் தருமலிங்கம், செகநாதன், அன்பழகன், பழனிவேல் உள்ளிட்டோருக்கும் மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »