பெரும்பாக்கத்தில் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த சாரங்கத்தின் குடும்பத்தினர், தற்போது அரசு நிலத்தை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவ்வீட்டு பெண்கள், தங்கள் நிலத்தை மீட்டுதர வேண்டும் என ஆய்வுக்கு வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதனர். இதனையொட்டி அரசு நிலம் என்பது மக்களின் நிலம், அதை ஏழைகளுக்கு பிரித்தளியுங்கள் என்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில் ஜூலை 20, 2024 அன்று பதிவு செய்தது.
அரசு அதிகாரம் என்பது அனைத்து நிலமற்ற மக்களுக்கும் நிலத்தை பங்கீட்டு தரும் பொறுப்பு கொண்டது. அரசு என்பது மக்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பல்ல. இந்தியாவில் சாமானிய ஏழையாக இருப்பவர்கள் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தாம். இவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டவர்கள். இந்துமத சனாதனத்தினால் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமையை இழந்தவர்கள்.
இந்தியா விடுதலையடைந்து அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்தபின்னர், இந்தியாவின் நிலப்பரப்பு என்பது மக்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வருகிறது. குடியரசு என்பது நாட்டின் வளங்களும், வளர்ச்சியும் அனைத்து மக்களுக்கும் சமமாக பங்கீடப்படும் ஆட்சிமுறை. இந்தியா விடுதலையடைந்தும் 2000 வருடமாக நிலத்தின் மீது உரிமை மறுக்கப்பட்ட BC/MBC/SC/ST மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதே போல கிராம நிலத்தை நிர்வகிக்கும் கர்ணம் போன்ற அதிகார பொறுப்புகள் பரம்பரையாக குறிப்பிட்ட சில சமூக/சாதி/குடும்பங்களுக்குள்ளாக இருந்ததை வெகுநாட்கள் கழித்தே நிறுத்தி அனைவரும் கிராம அலுவலர் அல்லது கர்ணம் செய்த பொறுப்புகளில் பணியாற்ற முடியும் எனும் நிலை வந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் இது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பாக கிராம நிர்வாகம் எனப்படும் பதவி குறிப்பிட்ட சில சாதிகளுக்குள்ளாக பரம்பரையாக இருந்து வந்தது. அதில் பெரும்பான்மையான சாதிகள் பங்கேற்க இயலாத நிலை இந்தியா விடுதலையடைந்தும் 33 ஆண்டுகளாக இருந்தது. அன்று எந்த நிலம் வருவாய்க்கு உட்பட்டது என்பதில் ஆரம்பித்து நிலப்பிரிவினைகள், ஆவணங்கள், பயன்பாடுகள் என்பன சாமானிய ஏழை சனங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்தவர்கள் இந்த கிராம பொறுப்பாளர்களிடத்தில் விவரம் கேட்டுப்பெறக்கூடிய நிலையில் நம் சாதி கட்டமைப்பு இல்லை. அதேபோல நிலத்தை பதிவு செய்வது போன்ற விவரங்கள், வழிமுறைகளை இவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. எனவே யாரும் பயன்படுத்தாத நிலங்களை தம் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தினார்கள். ஆற்றின் ஓரம், கிராமத்தின் ஒதுக்குபுறங்கள், பயன்பாட்டில் இல்லாத புறம்போக்கு நிலங்கள் என ஆதிக்க சமூகங்களின் கரங்களுக்கு அப்பாற்பட்டு கிடந்த நிலங்களில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.
குடியரசாக நாம் மாறும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இவ்வாறான மக்களுக்கு இந்நிலங்களை சொந்தமாக்கி கொடுத்து சட்டபாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை. எந்த ஏழை மக்களும் அரசு கட்டிடத்திற்குள்ளாகவோ, வேலியிட்ட நிலங்களுக்குள்ளாகவோ ஆக்கிரமித்து கொள்வதில்லை. இதை செய்வது சாஸ்த்ரா பல்கலைக்கழகம், ஜக்கி வாசுதேவ் போன்ற கும்பல்கள்தான். யாருக்கும் பயன்படாத நிலத்தில் தம்மை நிலைநிறுத்தி வாழும் மக்களின் சொத்துகளை அரசின் சொத்துக்கள் என வலிந்து பிடுங்கிக்கொள்வது அராஜகவாத ஆட்சிமுறை. நிலம் மக்களுக்கு சொந்தமானது. அதை முறைப்படி ஏழை மக்களுக்கு உரிமையாக்கி கொடுப்பது அரசு, அதிகாரிகளின் கடமை.
ஆனால் ஏழைகளை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றிவிடும் அராஜக அதிகாரிகளுக்கு ‘சமூகநீதி’ என்றால் என்னவென்றே தெரியாத சுயநல பிராணிகளாக வளர்ந்தவர்கள். இந்நிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட கலெக்டர்கள் மக்களை சந்தித்து குறையறிந்து தீர்க்காமல் கடவுள்களைப் போல மனுக்களை உண்டியலில் பெற்றுக்கொண்டு நகர்ந்துவிடுகிறார்கள்.
நிலத்தின் முதன்மை சொந்தக்காரர்கள் ஏழை எளிய மக்கள். அவர்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் நிலத்தை அவர்களுக்கே பிரித்துகொடுக்கும் பணியை அதிகாரிகளை செய்ய வைப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. இது கொள்கை சார்ந்த முடிவுகள். இதுவே சமூகநீதி. இதை நடைமுறை செய்யவே எம்.எல்.ஏக்கள் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் இதுபோன்ற ஆக்கிரமிப்பு அகற்றுதல்களில் பெரும்பாலும் எம்.எல்.ஏக்கள் காணமல் போவது வழக்கம். நிலங்களிலிருந்து ஏழை மக்களை அப்புறப்படுத்திவிட்டு எந்த மக்களுக்கு வாழ்வழிக்கப்போகிறார்கள் அதிகாரிகள்?
திமுக, அதிமுக என அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கட்சியின் பெரும்பான்மை பொறுப்பாளர்கள் இப்பணிகளை மேற்கொள்வதில்லை. சமூகநீதி குறித்து வகுப்பெடுப்பவர்கள், அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்து நீதியை நிலைநாட்டவேண்டும். அரசு என்பது மக்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அரசு நிலம் என்பது மக்களின் நிலம்.
நிலம் மக்களுடையது. அதை ஏழைகளுக்கு பிரித்தளியுங்கள். அதிகாரிகள் அரசர்கள் அல்ல, ஆட்சியாளர்கள் கடவுளுமல்ல, மக்கள் குற்றவாளிகளுமல்லர்.
https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthirumurgangandhimay17%2Fvideos%2F1185713572524510%2F&show_text=true&width=560&t=0