மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய மே 17 இயக்கம்

தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக-மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே பதினேழு இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கனவை பறித்தல், வக்பு சட்டம், குடியுரிமை சட்டம், SIR கொண்டு வருதல், கீழடி அறிக்கையை தடுத்தல், மீனவர் கொலை, இந்தித்திணிப்பு, மேக்கேதாட்டு அணை, இடஒதுக்கீடு மறுப்பு, ஆளுநர் அராஜகம், மார்வாடிகள் ஆதிக்கம், தலித்துகளுக்கான கல்விநிதி மறுப்பு, மதக்கலவரத்தை தூண்டுதல், வெறுப்புப்பேச்சு, தமிழர் வரலற்றை மறுத்தல் என பல்வேறு வழிகளில் டில்லி எதேச்சதிகார அரசியலை நடத்தும் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் மே 17 இயக்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

அந்த வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஒன்றிய பாஜக-மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்தும் சனவரி 23, 2026 அன்று சென்னை தியாகராயர் நகரில் பெரியார் சிலையருகே மே பதினேழு இயக்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டத்தில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மெலட்டுர் கார்த்திக் மற்றும் பல தோழமைகள் பங்கெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியாளர்களுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:

“தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை மோடி அரசு தடுத்து வைத்திருக்கிறது. பட்டியல் சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தடுத்து வைத்திருக்கிறது. மேலும் மோடி அரசு கீழடியினுடைய அறிக்கையை வெளியிட மாறுகிறது. தமிழர் நாகரிகத்தினுடைய தொட்டிலாக, அதனுடைய பழமையை வெளிப்படுத்தும் விதமாக கிடைத்த கீழடி எனும் சிறப்பம்சத்தை மோடி அரசு தடுத்து வைத்திருக்கிறது.

கீழடி அறிக்கையை வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன பிரச்சனை? கல்வி நிதி கொடுப்பதில் என்ன பிரச்சனை? மீனவனை காப்பாற்றுவதில் என்ன பிரச்சனை? என்று நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம். இலங்கை அரசை நட்பு அரசு என்று சொல்கிறார்கள். இலங்கை அரசோடு இராணுவ உறவு வைத்துள்ளார்கள். ஆனாலும் மீனவர்கள் இன்றைக்கும் வரைக்கும் இலங்கை அரசினால் கைது மற்றும் கொலை செய்யப்படுகிறார்கள். பாஜக மோடி அரசாங்கத்தினால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. இதைவிட மோசமாக தமிழ்நாட்டுக்குள் மதக்கலவரத்தை கொண்டு வருவதற்கு எல்லா வேலைகளும் செய்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தை எடுத்துக்கொண்டோம் எனில், முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளாக அங்குதான் தீபம் ஏற்றுகிறார்கள். இந்த ஆண்டும் அங்கேதான் தீபம் ஏற்றி இருக்கிறார்கள். ஆனால் தர்கா பக்கத்தில் (இசுலாமிய மத குருமார்களை புதைக்கும் இடம்) அதாவது சமாதி அருகே தீபம் ஏற்ற வேண்டும் என்று, முருகனை அவமதிக்கின்ற வேலையை பிஜேபி செய்கிறது. பிள்ளையார் கோவிலில் முருகனுக்கு தீபம் ஏற்றினால் பிள்ளையாருக்கு தீட்டு ஆகிவிடுமா? அல்லது முருகனுக்கு தகுதி கிடையாதா?

இந்த இந்துத்துவ கும்பல் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, ‘திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றாதே! அருகே இருக்கும் இஸ்லாமியருடைய சமாதியாக இருக்கக்கூடிய தர்காவில் சென்று ஏற்று’ என்கிறார்கள். இது போல் எந்த ஊரிலாவது, எந்த சாமிக்காவது ஒரு சமாதி அருகில் தீபம் ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்று, இதுவரைக்கும் பிஜேபி கேட்டுள்ளதா? அதுபோல அவன் ராமனுக்கு செய்வானா? ராமனுக்கு செய்ய தெம்பு இருக்கிறதா? அங்கு ‘சமாதியில் ஏற்று, புதைக்கின்ற இடத்தில் ஏற்று, எரிக்கின்ற இடத்தில் ஏற்று’ என்று இதுவரைக்கும் பிஜேபி சொல்லியிருக்கிறதா? ஏன் முருகனுக்கு மட்டும் சொல்கிறது?

ஏன் முருகனுக்கு மட்டும் ஒரு சமாதிக்கு அருகில் தீபம் ஏற்று என்று பிஜேபிக்காரன் சொல்கிறான்? நீதிபதியும் சொல்கிறார்? ஏன் பிள்ளையார் கோவிலில் ஏற்றினால் என்ன தகுதி குறைந்து விடுமா? முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் ஏற்றக் கூடாதா? சமாதிக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் எனும் கோரிக்கையை யாருமே கேட்கவில்லை. எந்த மக்களும் (திருப்பரங்குன்ற மக்களும்) கேட்கவில்லை. முருகனை வைத்து கலவரம் செய்யும் நோக்கில் பிஜேபிகாரன் கிளப்பி விட்ட பிரச்சனை இது.

தற்போது தமிழ்நாட்டுக்குள் மத கலவரம், சாதி கலவரம் உருவாக்குவது, இங்கு இருக்கக்கூடிய மக்களினுடைய உரிமைகளை மறுப்பது, எங்களுடைய நிதியை நிறுத்துவது – இப்படி தொடர்ச்சியாக தமிழருக்கு விரோதமான வேலையை மோடி அரசு செய்துகொண்டே இருக்கிறது. மோடி 2014-ல் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்த சமயத்தில் கூட மே பதினேழு இயக்கம் கருப்புக்கொடி தூக்கியது. அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மோடி எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் மோடிக்கு எதிராக மே பதினேழு இயக்கம் கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

ஏனென்றால் மோடி தமிழ்நாட்டிற்கு எதிரானவர். பாரதிய ஜனதா கட்சி தமிழின விரோத கட்சியாக இருக்கிறது. ஆக இவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக வேலை செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இந்தியை திணிக்கிறார்கள். மோடி வருவதற்கு முன்பு வரை, நம் அலைபேசியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மட்டும்தான் தகவல்கள் வரும். நமக்கு தானியங்கி குரல் (Automated Voice) வரும். ஆனால் இன்றைக்கு இதில் (தானியங்கி குரலில்) இந்தியை திணிக்கிற வேலையை மோடி சர்க்கார் திட்டமிட்டு செய்கிறது. அவன் மொழியை நம் ஊரில் திணிக்கிறான். தமிழ் மொழியை கொண்டாடுகிறேன் என்று ஊர் முழுக்க பேசும் மோடி உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மொழியை கொண்டு வர முடியுமா? டெல்லியில் கொண்டு வர முடியுமா? டெல்லியில் பல தமிழர்கள் இருக்கிறார்களே, அங்கு கொண்டு வர முடியுமா? குஜராத்தில் கொண்டு வந்து விடுவாயா? நான் கேட்கிறேன்… உத்தர பிரதேசத்திலேயோ, அரியானாவிலேயோ, குஜராத்திலேயோ மொபைல் போனில் தமிழில் தகவல் வருகிறதா? தமிழில் தானியங்கி குரல் ஒலிக்கிறதா? இல்லையே!

தமிழ்நாட்டில் பயணிக்கும் விமானங்களில், சென்னையிலிருந்து இருந்து மதுரைக்கு, அல்லது கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு, தூத்துக்குடிக்கு போகும் விமானங்கள் எல்லாற்றிலுமே இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் செய்தி சொல்லுவார்களா? இதில் எல்லாம் தமிழுக்கு இடம் கிடையாது. தமிழன் தானே சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு போகிறான், மதுரைக்கு போகிறான், திருச்சிக்கு போகிறான், கோயம்புத்தூருக்கு போகிறான். ஏன் இந்த மோடி சர்க்கார் விமானத் துறையில் தமிழை கொண்டு வர முடியவில்லை? (தமிழ் மொழியை ஒழுங்காக பேசத் தெரியாத நபர் மோடி, ஆனால் உலகம் முழுக்க தமிழைப் பேசுகிறேன் என சொல்கிறார்).

இவ்வாறு தமிழர்களுக்கு எதிராகவே எல்லா வேலையும் செய்யக்கூடிய மோடி சர்க்காருக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் தொடர்ச்சியாக கருப்புக்கொடி பிடிப்போம். மோடி அரசோடு கூட்டணி வைக்கக்கூடிய எந்த கட்சியையும் நாங்கள் எதிர்த்து நிற்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். அதே வேளையில் மோடியை ஆதரிக்கக்கூடிய எவரையும் நாங்கள் ஆதரிக்க முடியாது என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.”

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தோழர் திருமுருகன் காந்தி.

பத்திரிக்கையாளர் கேள்வி: 2026–ல் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்படும் என பியூஸ் கோயல் சொல்லியிருக்கிறார், அதைப் பற்றி?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: புதியமாற்றம் என்னவாகும் எனில், நம் பள்ளிக்கூடம் எல்லாம் மூடுவார்கள். இங்கு நம் மீனவர்கள் இன்னும் இறப்பார்கள், விவசாயிகளுக்கு எந்த உதவியும் இருக்காது. அதுவுமில்லாமல் ”நீ ஏன் படிக்கப் போற, சீமான் சொல்ற மாதிரி எல்லாம் மாடு மேய்க்கப் போ, ஆடு மேய்க்கப் போ” என்று அடித்து விரட்டுவார்கள். நம் பிள்ளைகள் சாணியை பொறுக்கிக்கொண்டு இருக்கும். பால் கரந்துகொண்டு இருக்கும், பால் விற்றுக்கொண்டு இருக்கும். இந்த வேலைதான் நாம் செய்வோம் என்கிறார்கள். இதைத்தான் புதிய மாற்றமாக அவர் (பியூஸ் கோயல்) சொல்கிறார். இன்றைக்கு நம் பிள்ளைகள் நன்கு கௌரவமாக படித்து வேலைக்கு போவதை விட்டுவிட்டு, உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைப் போல, நாம் தமிழ்நாட்டிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு கூலிக்கு வேலைக்கு போகக்கூடிய நிலைமை உருவாகும். இதைத்தான் பிஜேபி சொல்கிறது.

கேள்வி: பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். பாமக போயிள்ளது, அமமுக போயுள்ளது….இது குறித்து?

பதில்: அதிமுக தமிழ்நாட்டில 30% – 35% வாக்குகளை வைத்திருக்கக்கூடிய ஒரு பெரிய கட்சி. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி. ஆனால் ஒரு சதவீதம் வாக்கு பெறாத, ஒரு கவுன்சிலர் பதவியை கூட தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாத பிஜேபி உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கின்ற அவசியம் அதிமுகவிற்கு எங்கிருந்து வருகிறது? அதிமுக தொண்டர்களின் விருப்பமா அது? அந்த தொண்டர்கள் மோடியுடன் கூட்டணி வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது ஜெயலலிதா அம்மையார் சொன்னார்களா?

ஜெயலலிதா அம்மையார் ”மோடியா லேடியா” என கேட்டவர். ஜெயலலிதா அம்மையாரை சிறைக்கு அனுப்புவதற்கு காரணமாக இருந்தது மோடி சர்க்கார். அந்த அம்மையார் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தது அவருடைய சிறைவாசம். இத்தனையும் ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக செய்துவிட்டு, இன்றைக்கு அதிமுக மோடியோடு கூட்டணி வைக்கிறது.

நாங்கள் என்ன சொல்கிறோம் எனில், அதிமுக தனித்து நிற்கட்டும். அல்லது தமிழ்நாட்டு மாநில கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு நிற்கட்டும். அப்போது தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள். திமுகவிற்கு மாற்றாக அதிமுக வர வேண்டுமெனில், இந்த மோடியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நின்றால் பெருமளவுக்கு ஆதரவு கிடைக்கும். சுய மரியாதை கிடைக்கும். ஆக அதிமுக தொண்டர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தினகரன் அவர்கள் பாஜக கூட்டணிக்கு போயிருக்கிறார். அவரை வழக்கு விசாரணை என்று சொல்லி அலைக்களித்தது யார்? அடைத்து வைத்தது யார்? இதே மோடி சர்க்கார்தான். அதிமுக கட்சியை உடைத்தது யார்? இதே பாரதிய ஜனதா கட்சிதான். அவர்களே உடைப்பார்களாம், அவர்களே ஒன்றாக சேர்ப்பார்களாம், இது என்ன கூத்து? பாஜக கட்சியினால் பாமக உடைந்துள்ளது, சிவசேனை உடைந்துள்ளது, சரத் பவார் கட்சி உடைந்துள்ளது. நிதீஷ் பவாருடைய கட்சி உடைந்துள்ளது. ஆக இதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாடு அனுமதிப்பது என்பதை தவறானதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டுக்கு எதிரானதாகத்தான் அது இருக்கும் என்று நம்புகிறோம்.

கேள்வி: பராசக்தி படம் வந்துவிட்டது, ஆனால் விஜய் படம் ஜனநாயகன் வரவில்லை. அதைப் பற்றி?

பதில்: விஜயின் படம் தற்போது சென்சாரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்சாரை கட்டுப்படுத்துவது பாரத ஜனதா கட்சி அரசுதான். நீதிபதியிலிருந்து சென்சார் வரைக்கும் எல்லாத்தையும் கட்டுப்படுத்துவது பிஜேபி தான். சென்சார் தனித்த ஒரு அமைப்பு கிடையாது. அது பிஜேபிக்கு கூலி வேலை பார்க்கும் ஒரு அமைப்பாக மாறி இருக்கிறது. விஜய் கட்சி அல்லது விஜய் வெளிப்படையாக பாரதி ஜனதா கட்சியை எதிர்த்து நின்று பேச வேண்டும். அதற்கு துணிவு வேண்டும். உங்கள் (விஜய்) படம் தானே முடங்கி கிடக்கிறது. இப்போதே விஜய் பேசவில்லையெனில், ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் எப்படி பேசுவீர்கள்? அதை நாங்கள் எப்படி நம்புவது? பாரதி ஜனதா கட்சியை எதிரிக் கட்சி என்றும், கொள்கை எதிரி என்றும் விஜய் சொல்கிறார். அவர்கள் உங்கள் திரைப்படத்தை முடக்கி இருக்கிறார்கள். இதனால் விஜய் மட்டும் நட்டமாகவில்லை. அதில் முதலீடு போட்டவர்களும், படத்திற்காக வேலை செய்தவர்கள் என அத்தனை பேருக்கும் நட்டமாகத்தான் இருக்கிறது. அதை எதிர்த்து இன்றைக்கே விஜய் அவர்கள் பேசவில்லையெனில், நாளைக்கு நீங்கள்(விஜய்) ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் எப்படி பிஜேபியை எதிர்த்து பேசுவீர்கள்? என்ற கேள்வி கேட்கிறோம்.

விஜய் கட்சியை அவர்கள்(பாஜக) அராஜகமாக தன் கட்டுப்பாட்டுக்குள்/பிடிக்குள் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விஜய்க்கு முறையாக ஆலோசனை சொல்பவர்கள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. அரசியலுக்கு வந்தபின் நீங்கள் எந்த கொள்கை எடுத்திருக்கிறீர்களோ, அந்த கொள்கையில் துணிவாக நின்று நீங்கள் போராட வேண்டும், பேச வேண்டும். அப்படியான ஒன்று இதுவரைக்கும் வரவில்லை.

ஜனநாயகன் என்ற திரைப்படத்திற்கு பாஜக கொடுக்கும் நெருக்கடியை  எதிர்த்து வெளிப்படையாக விஜய் பேசினார் என்றால், தமிழ்நாட்டில் எல்லாரும் பேசுவார்கள். எல்லாரும் அதை ஆதரிப்பார்கள். ஏனெனில்  விஜயின் ரசிகர்கள், விஜய்க்கு ஓட்டு போடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஓட்டு போடாதவர்களும் இருக்கிறார்கள். விஜயின் திரைப்படம் பார்க்க வேண்டும் என பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அதையெல்லாம் தடுத்து வைத்திருப்பது பிஜேபி அரசு. அதை எதிர்த்து அந்த கட்சித் தலைவர் ஏன் பேசவில்லை? என்ன பிரச்சனை? பேசுங்கள் விஜய். உங்களை எது தடுக்கிறது? இன்னும் அவர் கட்சி சார்பாக ஒரு எம்எல்ஏ கூட வரவில்லை, இப்போதே நீங்கள் எதிர்த்து பேச மாட்டீர்களானால், நாளைக்கு எப்படி ஆட்சிக்கு வந்தபின் பேசுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கொள்கை எதிரி என்று சொல்லும் நீங்கள் எந்த கொள்கை உங்களுக்கு எதிராக இருக்கிறது என்று பேச வேண்டும். அதுகுறித்து அவர்(விஜய்) பேசவில்லை, பேசினால்தான் அவருக்கு ஆதரவு கிடைக்கும். அப்படி இல்லையெனில், அவர் பாரதி ஜனதா கட்சியை எதிர்க்கிறார் என்று நாங்கள் எப்படி நம்புவது?” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

தொடர்ந்து மோடிக்கு எதிராக தோழர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலை வரை காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »