
ஐரோப்பாவிற்கு தமிழீழம் பற்றிய செய்திகளை நேரடியாக வழங்க, தமிழீழ தேசிய தொலைக்காட்சி (National Television of Thamil Eelam – NTT) என்ற பெயரில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பினை விடுதலைப் புலிகள் 26 மார்ச் 2005 அன்று தொடங்கினர். புலிகளின் இந்த முன்னெடுப்புக்கான அடிப்படை காரணங்களை புரிந்து கொள்ள ஏதுவாக, பத்திரிக்கையாளர் தராகி சிவராம் அவர்கள் Daily Mirror பத்திரிக்கைக்காக 30 மார்ச் 2005 அன்று எழுதிய ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளோம். உலக அளவில் காட்சி ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ள சூழலில், அவை மக்கள் மீதும் அரசுகளின் மீதும் உருவாக்கிய தாக்கத்தினை ஆராயும் இந்த கட்டுரை இன்றைக்கும் பொருத்தமானதாக இருப்பதை நிச்சயம் உணரலாம்.
தொலைக்காட்சி படங்கள்: விடுதலைப் புலிகளின் அடுத்த மூலோபாய பரிமாணம்? – தாராகி சிவராம், டெய்லி மிரர், 30 மார்ச் 2005.
நவீன போர் என்பது படை, ஆயுதங்கள், தளபதிகள் மற்றும் போர்க்களங்களைப் பற்றியது மட்டுமல்ல – அது புலனுணர்வுகளைச் (Perceptions) சார்ந்தது. இன்று, ஒரு போரைப் பற்றி அரசும் அதன் மக்களும் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது அந்த போரின் மீதான மூலோபாய தாக்கத்தை (Strategic Impact) ஏற்படுத்தும். போர்க்கள காட்சிகளை நிகழ்நேரத்தில் (Real Time) உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும் போது, போர் பற்றிய மூலோபாய முடிவுகளையும், மூலோபாய கூட்டாளிகளின் (strategic allies) நிலைப்பாடுகளையும் அது வடிவமைக்கும்.
நவீன போர்களில் தவிர்க்கவே முடியாத ஊடகத்தின் பங்கு, “சிஎன்என் விளைவு” (CNN Effect) என்று கருத்துருவாக்கம் செய்து, இராணுவப் பத்திரிக்கைகள் மற்றும் கருத்தரங்குகளில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. புலிகளின் பத்திரிக்கைகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உடனான தலைவர் (பிரபாகரன்) அவர்களின் சமீபத்திய பேட்டிகளை பகுப்பாய்ந்தால், புலிகள் “சிஎன்என் விளைவு” குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதைத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதன் முடிவு தான், தமிழீழ தேசிய தொலைக்காட்சி NTT.
வன்னிக்காட்டில் புலிகள் செயற்கைக்கோள் சேனலை எவ்வாறு அமைத்தார்கள் என்பதைப் பற்றிய ருசீகரமான ரகசியங்களை குலை நடுங்க வைக்கும் விவரங்களுடன் கூறுவது, இந்த கட்டுரையின் நோக்கமல்ல. தமிழீழ தேசிய தொலைக்காட்சி உருவாவதற்குக் காரணமாக அமைந்திருக்கும் சிந்தனை போக்கினைச் சுருக்கமாக விவரிக்கவே நான் இங்கே விரும்புகிறேன்.

புலிகளின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி, இன வேற்றுமையுள்ள இலங்கைக்கு ஒரு புதிய மூலோபாய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில், புலிகள் தங்கள் தரப்பு நியாயங்களை நிகழ்நேரத்தில் கூறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. லண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகளும், வவுனியாவின் “புலிகளின் குரல்” பத்திரிக்கையிலிருந்து மொழிபெயர்க்கப்படும் செய்திகளும் எப்போதும் தாமதமாகவோ அல்லது சில பிரச்சினையைத் தவறவிட்டோ தான் வெளிஉலகிற்கு தெரிய வந்தன. ஆனால், இப்போது விடுதலைப் புலிகள் நிக்க நிகழ்நேரக் காணொளிகளை உலகிற்கு அனுப்பும் திறனைக் கொண்டுள்ளனர். இது புலிகளின் செய்தியைப் பரப்புவதற்கு மிகவும் பயனுள்ள விரைவான வழியாகும். மற்றொரு ஈழப் போரில், தமிழீழ தேசியத் தொலைக்காட்சி புதிய மூலோபாய பரிமாணமாக இருக்கும்.
எனவே, நவீன இராணுவ உரையாடலில் ஒரு மூலோபாய செயல்படுத்தியாக உள்ள ‘சிஎன்என் விளைவு’ பற்றிய கண்ணோட்டம், அதிகளவு ஆயுதங்கள், அதிக துருப்புக்கள் மற்றும் அதிக வெளிநாட்டு உதவி என்ற அடிப்படையில் மட்டுமே போரைப் பற்றி சிந்திக்கப் பழகிய தமது போர் தளபதிகளுக்காக, புலிகள் என்ன அற்புதத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையை வழங்கும்.
‘சிஎன்என் விளைவு’ பற்றிய US War College Journal Parameters கட்டுரையின் பின்வரும் பகுதி, அது இராணுவ சிந்தனையாளர்களிடையே எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்த புரிதலைத் தருகிறது.

“போரை நடத்துபவர்கள் தகவல்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, முடிவுகளை எடுத்து, தங்கள் பிரிவுகளை வழிநடத்தும் செயல்முறை, தொடக்கத்திலிருந்தே தளபதிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. வியட்நாம் போரில் தொடங்கி, அவர்கள் ஒரு புதிய சவாலை எதிர்கொண்டனர் – ஒரு தொலைக்காட்சி கேமராவுக்கு முன்பாக தங்கள் படைப் பிரிவுகளை வழிநடத்துவது. இன்று, போர் தளபதிகள், உலக அளவில் இருபத்து நான்கு மணி நேரமும், ஏழு நாட்களும் (24×7) செயல்படும் நேரடி தொலைக்காட்சி கேமராவின் முன் செயல்படும் சூழலை இருக்கிறது.”
“இந்த வகையான ஊடக ஒளிபரப்பின் தாக்கம் ‘சிஎன்என் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இது Cable News Networkஇன் 24 மணி நேர செய்தி ஒளிபரப்பினைக் குறிக்கின்றது. இந்த சொல்லாடலே சர்ச்சையில் உருவானதுதான். 1992ஆம் ஆண்டு, சோமாலியாவில் பட்டினியால் வாடும் உள்நாட்டு அகதிகள் பற்றிய ஊடகச் செய்திகளைப் பார்த்த பிறகு, சோமாலியாவில் (அமெரிக்க) துருப்புக்களை கொண்டு நிறுத்த ஜனாதிபதி புஷ் எடுத்த முடிவு கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அமெரிக்காவின் நலன்கள் உண்மையில் ஆபத்தில் இருந்தனவா? இராணுவம் அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்பதை CNN முடிவு செய்து கொண்டிருந்ததா?”

“அதன் பிறகு ஒரு வருடத்திற்குள், (சோமாலியாவின் தலைநகரான) மாகெடிஷுவின் தெருக்களில் இறந்த அமெரிக்கப் வீரர்களின் உடல்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பின்னர், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த ஜனாதிபதி கிளிண்டனின் முடிவு CNNஇன் வலிமையை உறுதிப்படுத்தியது. இன்று, 24×7 செய்தி நிறுவனங்களின் பெருக்கத்தால், CNNஇன் தாக்கம் மட்டும் குறைந்திருக்கலாம். ஆனால் 24மணி நேர செய்தி ஒளிபரப்பின் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது.
இந்தக் கட்டுரையில், ‘சிஎன்என் விளைவு’ என்ற சொல்லாடல் நிகழ்நேர செய்தி ஒளிபரப்பு சேனல்களின் ஒட்டு மொத்த தாக்கத்தை பொதுவாக குறிக்கப்பிடுகிறது. நிகழ்நேர செய்தி ஒளிபரப்பின் (Real Time Live Telecast) வருகை, மூலோபாய முடிவுகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், அதனை பகுப்பாய்வு செய்யவும் வழிவகுத்துள்ளது. இது மூலோபாய முடிவுகளை தீர்மானிக்கும் தலைவர்களுக்கும் போர் வீரர்களுக்கும் நன்மையா? தீமையா? (The CNN Effect: Strategic Enabler or Operational Risk? -by Margret H. Belknap, Parameters, Autumn 2002).
முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் ஷ்லேசிங்கர், பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில், “உந்துதல் மற்றும் பிம்பத்திற்கு” (Impulse and Image) ஏற்றவாறு அமெரிக்கா, தன் வெளியுறவுக் கொள்கையை உருவாக்கியுள்ளது என்கிறார். “இதில் பிம்பம் என்பது தொலைக்காட்சியைக் குறிக்கிறது. தொலைக்காட்சித் திரையில் காட்டப்படும் பிம்பங்கள் சனநாயக அரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைக் கட்டுப்படுத்துகின்றன” என்று அவர் கூறுகிறார்.
இதற்கு ஒரு உதாரணமாக, போஸ்னிய போரின் போது 1994இல் சரஜெவோ நகர சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 68 பேர் கொல்லப்பட்டபோது, அதற்கு எதிரான கிளிண்டன் நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கூறலாம். (கிளிண்டன் ராணுவ நடவடிக்கையில் இறங்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார்.)
இருப்பினும், ‘சிஎன்என் விளைவு’ இப்போது ஒரு பிரச்சினை அல்ல என்றும் சிலர் கூறுகின்றனர். உதாரணமாக, Foreign Affairs இதழின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹக் ஜூனியர், “பனிப்போர் முடிந்த சமயத்தில் ஒரு வகையான ‘சிஎன்என் விளைவு’ இருந்திருக்கலாம். ஆனால் அது இப்போது இல்லை அல்லது குறைந்தபட்சம் அதே அளவிற்கு இல்லை” என்று வாதிடுகிறார்.
உலகளவிலான நிகழ்நேர ஊடகங்களால் சாத்தியமான மற்றுமொரு விளைவு, அரசுகள் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான காலத்தைக் குறைந்திருக்கின்றன. முடிவுகள் அவசரமாக எடுக்கப்படுகின்றன; அவை சில நேரங்களில் ஆபத்தானவையாகக் கூட இருக்கின்றன. ஆலோசித்துத் தேர்வுகளைச் செய்யவும், ஒப்பந்தங்களை எட்டவும், பொதுமக்களின் புரிதலை வடிவமைக்கவும் போதுமான கால அவகாசம் இல்லாததைக் கொள்கை வகுப்பாளர்கள் கண்டிக்கின்றனர்.
“அன்றாட நிகழ்வுகள் உடனடியாக ஒளிபரப்பப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் அவை அரசின் உடனடி பகுப்பாய்வைக் கோரி நிற்கின்றன…” என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ் குறிப்பிடுகிறார். “எனது காலத்தில், உலகத்திற்கு அந்த பக்கம் ஏதோவொரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போது, நமது தூதரகத்திலிருந்து அது பற்றி விரிவான அறிக்கையைப் பெற்று, நமது வாய்ப்புகளை கவனமாகக் கருத்தில் கொள்வதற்கு முன்பு, சிஎன்என்-இன் வெளியுறவுத்துறை நிருபர் ஸ்டீவ் ஹர்ஸ்ட் என்னிடம் கருத்து கேட்கமாட்டார்”, என்கிறார் அவர்.

அமெரிக்காவிற்கு மூலோபாய நலன்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனைகளில் தலையிடுவதற்கு சாதகமான சூழலை உருவாக்க, ‘சிஎன்என் விளைவை’ அமெரிக்கா தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதாக ஒரு முக்கியமான வாதம் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, 1993இல், ஆப்பிரிக்க நாடான புருண்டியில் இரு தரப்பினருக்கு இடையிலான அரசியல் சண்டையில் சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டபோது, அதனை அமெரிக்க தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவில்லை. 1994 ஏப்ரலில் ஆப்பிரிக்காவில் பிராந்திய அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக, அந்த பிராந்தியத் தலைவர்கள் தான்சானியா நகரமான டார் எஸ் சலாமில் (Dar es Salaam) சந்தித்தபோது, அமெரிக்க ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை; சிஎன்என் மட்டும் அந்தக் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் நாடுகளில் ஐரோப்ப நாடான போஸ்னியாவை விட அதிகமான மக்கள் உயிர் ஆபத்தில் உள்ளனர். போஸ்னியாவிற்கு மட்டும் காட்சி ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக 12சதவீத நேரத்தை ஒதுக்கின. ஆனால் பத்து லட்சம் மக்கள் ஆபத்தில் இருக்கும் தஜிகிஸ்தான் குறித்து வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஊடக செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. வேறுவகையில் பார்த்தால், 1995 ஜனவரி முதல் 1996 மே வரையான காலகட்டத்தில் அமெரிக்க ஊடகங்கள் ஒளிபரப்பிய செய்திகளில், 3 கோடி மக்களை பாதித்த உலகின் 13 மோசமான மனிதாபிமான நெருக்கடியில் இருந்த போது, கிட்டத்தட்ட பாதி நேரம் போஸ்னியாவின் 37 லட்ச மக்களின் அவலங்களைப் பற்றிய செய்திகளுக்கே ஒதுக்கப்பட்டது.
அடிப்படையில் ‘சிஎன்என் விளைவு’, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா தனது மிகப்பெரிய இராணுவத் தளத்தை அமைப்பதற்கு அரசியல் ரீதியாக சாதகமான சர்வதேச சூழலை உருவாக்கியது. ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் உள்ள அமெரிக்க இராணுவ தளமான கேம்ப் பாண்ட்ஸ்டீல் (Camp Bondsteel) பற்றி மிகச் சிலரே அறிந்திருக்க முடியும். இது பல முக்கியமான குழாய் பாதைகளின் இடையே அமைந்துள்ளது.

மூலோபாய மற்றும் தந்திரோபாய எதிர்ப்பை (strategic and tactical deterrence) சாதிப்பதற்காகவும் ‘சிஎன்என் விளைவு’ பயனுள்ளதாக இருக்கிறது. உலகளவிலான ஊடகங்கள் அமெரிக்க இராணுவத்திற்கு மதிப்புமிக்க சொத்துக்களாகும். குறிப்பாக, கால அவகாசம் குறைவாகவும், சூழ்நிலை மிக மோசமாகவும் இருக்கும்போது அவை மிகவும் முக்கியமானவை. இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த ஊடகங்களை “படை பெருக்கிகள்” (force multiplier) என்கிறார், அமெரிக்க கடற்படையின் தலைமை தகவல் தளபதி அட்மிரல் கெண்டல் பீஸ். (1990இல்) ஆபரேசன் டெசர்ட் ஷீல்ட் (Operation Desert Shield)-இன் போது, ஈராக்கிய இலக்கு மீது குண்டுவீசுவதற்கான பயிற்சி ஓட்டத்திற்காக புறப்படும் அமெரிக்க போர் விமானங்களை படம்பிடிக்க சிஎன்என் குழுவினருக்கு போர் கப்பலில் ஏற்பாடு செய்ததாகவும், அதன் மூலம் ‘சதாம் உசேனுக்கு ஒரு செய்தியை அனுப்பியதாகவும்’ அவர் சொல்லியிருக்கிறார். அந்த காணொளிகள் ஈராக்கியர்களின் மன உறுதியைக் குலைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஈராக்கிய படை CNN-ஐக் கண்காணித்தார்கள் என்பதை அமெரிக்க கடற்படை உணர்ந்து அதனைச் செய்தது.
“இப்போது இங்கே அதேதான் நடக்கிறது” என்று தைவான் நாட்டைப் பற்றி அட்மிரல் பீஸ் கூறுகிறார். 1996 மார்ச்சில் தைவானில் நடந்த தேர்தலை சீனா எதிர்த்தது. தேவைப்பட்டால் இராணுவத்தைப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்தப்போவதாகவும் அச்சுறுத்தியது. அந்தத் தேர்தலுக்கு முன்னர் கிளிண்டன் நிர்வாகம் தைவான் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பி வைத்தது. அமெரிக்க போர் கப்பல்களுடன் வந்த தொலைக்காட்சி ஊடக குழுவினர் அதன் படங்களை சீனாவுக்கும் உலகிற்கும் காட்டினர்.
போர் படையுடன் சேர்த்து ஊடகத்தை “படை பெருக்கி”யாகப் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள், தங்கள் எதிராளியின் கொள்கைகளில் ‘சிஎன்என் விளைவினால்’ தாக்கத்தை உண்டாக்க முயற்சிக்கின்றனர். “உலகளவிலான, நிகழ்நேர ஊடகங்கள் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தடையாக மட்டும் இல்லை. அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொத்து” என்று அதனைப் பற்றிய ஆய்வு சொல்கிறது. (Clarifying the CNN Effect: An Examination of Media Effects According to Type of Military Intervention by Steven Livingston – https://tamilnation.org/media/CNNeffect.pdf)
இலங்கையில் வளர்ந்து வரும் மூலோபாய சமன்பாட்டில் ‘சிஎன்என் விளைவைப்’ போலவே ‘என்டீடீ விளைவின்’ (NTT Effect) எதிர்காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சுருக்கமான தத்துவார்த்த பின்னணியை இந்த கட்டுரை வழங்கியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
– தராகி சிவராம்