என்எல்சி ஏற்படுத்தும் சூழலியல் பேரழிவை தடுத்து தமிழர்கள் ஆரோக்கியத்தை காத்திட புதுப்பிக்கத்தக்க முறைகளுக்கு மாறலாமே.
தூத்துக்குடியில் 15 தமிழர்களை பலிகொடுத்து மூடப்பட்ட கொலைகார ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டனவோ, அதேபோன்று இன்னும் கூறுவதானால் அதைவிட பலமடங்கு அதிக பாதிப்புகள் நெய்வேலி என்எல்சியால் ஏற்பட்டு இருப்பது தற்போது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்ட ஒட்டு மொத்த மக்களும் இந்த என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
NLC வெளியேற்றும் கழிவுகள் குடிநீர் நிலைகளில் கலப்பது, எரிக்கப்படும் பழுப்பு நிலக்கரி சாம்பல் நீர்நிலைகளில் கலப்பது, அனல்மின் நிலையங்களின் புகை போக்கிகளிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை, சுரங்கங்களில் இருந்து வெளியாகும் கரித் துகள்கள் உள்ளிட்டவற்றையே இந்த பகுதி சுற்று சூழல் சீர்கேட்டிற்கும், மக்களின் நோய்களுக்குமான காரணம் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதோடு NLC சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீரிலும் நிலத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் NLCன் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பதும் தற்போதைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பாதரசம் மனித உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பூவுலகின் நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா ஆகிய அமைப்புகள் இணைந்து நெய்வேலி NLC (Neyveli Lignite Corporation India Ltd) மற்றும் பரங்கிப்பேட்டை ITPCL ( IL&FS Tamil Nadu Power Company Ltd) ஆகிய நிறுவனங்களின் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து அறிய வேண்டி நடத்திய ஆய்வின் மூலம் “மின்சாரத்தின் இருண்ட முகம்” எனும் ஆய்வறிக்கையை சென்னையில் 8.8.2023 அன்று வெளியிட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தான் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
1935ல் மா.ஜம்புலிங்கம் என்பவர் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் போது கிடைத்த கருமையான பொருளை அரசுக்கு அனுப்பி வைக்க, அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியதில், அது பழுப்பு நிலக்கரி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நெய்வேலியை சுற்றிலும் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது அரசு. பின்னர் நேரு தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசு 1956ல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க NLC என்ற நிறுவனத்தை அங்கு அமைத்தது.
அங்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், NLC நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு குடியிருப்புகள், அலுவலகங்கள் கட்டவும் என கிட்டத்தட்ட 23 கிராமங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்மக்களின் இடத்தைப் பெற்று, நிலக்கரி சுரங்கங்கள் தொடங்கி பல லட்சக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதித்த ஒன்றிய அரசு, 66 ஆண்டுகளை கடந்த நிலையிலும்கூட, அங்கு நிலக்கரி சுரங்கத்தால் மக்களுக்கும், சுற்று சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. NLCயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய மற்றும், மாநில அரசுகளே முன் வராத நிலையில், மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கும் பூவுலகு நண்பர்கள் போன்ற அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிகொண்டு வந்ததது பாராட்டுக்குரியது.
NLC சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அங்குள்ள மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென 2022, மே மாதம் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. அது ஆணையிட்டு 15 மாதங்கள் கடந்த நிலையிலும்கூட இன்று வரை எந்தவொரு ஆய்வும் அங்கு நடத்தப்படாமல் பொறுப்பற்று இருப்பது என்பது மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான செய்திகள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கவோ என ஐயம் எழுகிறது. மேலும் இவ்வாறு மூடி மறைப்பது, இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் சரிசெய்ய இயலாத பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதியான கசப்பான உண்மை.
இந்த ஆய்வின் முடிவில், மண் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 31 இடங்களில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிக கடுமையாகவும், 11 இடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதும், வடக்கு வெள்ளூர் என்ற ஊரில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு அதிக பாதரசம் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம், ”பாதரசம் மனித குலத்திற்கு மிகவும் நஞ்சானது, அதை உட்கொள்வது ஆபத்து, மற்றும் அது தோல் வழியாக உறிஞ்சப்பட்டால் கடும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இது நரம்பு மண்டலம், செரிமான மற்றும் சுவாச அமைப்புகள் மற்றும் சிறுநீரகங்களில் தீங்கு உண்டாகும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என்கிறது. ஆனாலும் இதுவரை ஒன்றிய அரசு இத்தகைய சீர்கேடு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருப்பதிலிருந்து தமிழர்களின் உடல்நலனில் ஒன்றிய அரசு அக்கறை செலுத்தாதது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.
அதோடு ஆய்வு நடத்தப்பட்ட 90 சதவீத வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் 66 வீடுகளில் இருப்போர் குடிநீரின் தரம் சீர்கெட்டுள்ளது எனவும், 59 வீடுகளில் வேளாண் பாசனத்திற்கு வரும் தண்ணீரின் தரம் மாசடைந்து இருக்கிறது எனவும், 53 பேர் இதற்குகெல்லாம் காரணம் NLCன் கழிவுகள்தான் எனவும் தெரிவித்து உள்ளனர்.
NLC சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திலிருந்து நேரடியாக கழிவுகள் வெளியேற்றப்படும் 5 இடங்களில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததின் மூலமாக, அங்கு மாசின் அளவு சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்ட வரம்புகளை மீறுவது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் சில பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாதரசம், செலினியம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் NLC கழிவுகளால் பாதிப்பு அடைந்த விளைநிலங்களின் மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் நிக்கல், ஜிங்க், காப்பர் உள்ளிட்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனால் பலரும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறியதும் அவர்களிடம் நடத்திய நேர்காணல் வழியாக தெரிய வந்ததுள்ளது. மேலும் விவசாய நிலங்களின் நீர் மாதிரியில் புளூரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான், கடினத்தன்மை, காரத்தன்மை, TDS, குளோரைடு போன்றவையும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ரசாயனங்களும், கன உலோகங்களும் தொடர்ந்து நீர்நிலைகளிலும், காற்றிலும் கலப்பதால் மக்களின் உடல் நலனும், சுற்றுச்சூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை ஆய்வுக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்த அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் இருண்ட நிறத்திலான, எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்ற கழிவுகளும், சாம்பல் குவிப்புகளும் பொது இடங்களில் கட்டுபடுத்த இயலாத மாசுபாட்டை ஏற்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான ஸ்ரீபத் தர்மாதிகாரி தெரிவித்து உள்ளார்.
அதேபோல பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு, நெய்வேலியில் தற்போதுள்ள 3640 மெகாவாட் அனல் மின் நிலையங்கள் மற்றும் மூன்று பெரிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களால் இப்பகுதி மக்களின் சுற்றுச் சூழல், வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், NLCயை விரிவுபடுத்தினால் நெய்வேலி பகுதியானது மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறும் என கூறியுள்ளார்.
NLC நிறுவனம் இத்தகைய சரி செய்ய இயலாத தீமைகளை மக்களுக்கும் இந்த மண்ணுக்கும் ஏற்படுத்தி வருகிறது என்பதை இந்த ஆய்வு உணர்த்தி உள்ளது. இந்த ஆய்வைத் தொடர்ந்து சென்னை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் சத்ய கோபல் சாய் அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரித்துள்ளது. இதில், NLC நிர்வாகம், ஒன்றிய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட இதற்கு பொறுப்பான அத்தனை அமைப்புகளும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்சார உற்பத்தியின் மாற்று முறைகள்
உலகளவில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடுகள் தான் காலநிலை மாற்றத்திற்கு முதன்மை காரணியாக இருக்கிறது என்று அறிவியல் சான்றுகள் நிரூபிக்கின்றன, இது உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கின்றது. இது உண்மை என தற்போது நெய்வேலியைச் சுற்றி அமைந்துள்ள அனல் மின் நிலையங்கள், சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்தான மேலே குறிப்பிட்ட ஆய்வு அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
அதேபோல உலகில் எரிசக்தி நிறுவனங்கள் தான் காலநிலை மாற்றத்திற்கு மிகமுக்கிய காரணமான கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயு வெளியேற்றத்தில் 80 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிப்பு மற்றும் விவசாயத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை அடுத்த காரணிகள். எனவே வரும்காலங்களில் அதிகரித்து வரும் உலக வெப்பநிலையை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் அதற்கான செயல்பாடுகளும் மிகவும் இன்றியமையாத தேவையாகும்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 2015, டிசம்பர் 12 அன்று 194 நாடுகள் இணைந்த ஐநா மாநாட்டில் “பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்” எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பூமியின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் முக்கிய இலக்கு.
மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளை படிப்படியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதன்மூலமாக 2050ம் ஆண்டுக்குள் உலகில் உமிழப்படும் பசுமை குடில் வாயுக்களின் அளவு நிகர பூஜ்யத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கையும் கொண்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு நாடும் தங்களது கார்பன் வெளியேற்ற இலக்கை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பரிசீலிக்க வேண்டும் எனவும் இந்த ஒப்பந்தம் கூறியுள்ளது.
இந்நிலையில், ஆசியாவில் இயங்கி வருகின்ற நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தான் புவி வெப்பமடைவதை தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளன என்று சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA-International Energy Agency) தலைவர் கூறியிருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
உலகளவில் அதிரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தின் அளவு, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய முயற்சிகள் எதுவும் போதுமானதாக இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது என்று IEA நிர்வாக இயக்குனர் Fatih Birol ஒரு அறிக்கையில் கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் நீண்ட கால வெப்பநிலை இலக்கை (long-term temperature goal) அடைய வேண்டுமெனில், உலகளவில் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவை குறைக்க வேண்டும். இதற்காக நிர்ணயிக்கப்பட்ட சராசரி வெப்பநிலையை அதிகரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 315 நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளை படிப்படியாக 2030ற்குள் மூடப்பட வேண்டும் என்று காலநிலை பகுப்பாய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் கார்பன்டை ஆக்சைடு வாயுவின் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது என்று IEA அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இதே IEA புள்ளி விவரங்கள் 2017ம் ஆண்டு நிலக்கரி மூலமாக உற்பத்தியான மின்சாரத்தின் அளவு சீனாவில் 4 சதவீதமும், இந்தியாவில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. இதன்மூலமாக இந்தியாவில் கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதை அறிய முடிகிறது.
பாரீஸ் ஒப்பந்தப்படி வெப்பநிலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து “மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி” (காற்று, சூரியஒளி, உயிரிக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்) பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பல நாடுகளில் அரசு நீண்ட காலமாக மாற்று வழிகளைத் தேடி தற்போது காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர்.
ஆனால் இந்தியா போன்று அறிவியலை ஏற்காது மூட நம்பிக்கையை போதிக்கும் மதத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் சில நாடுகளின் அரசுகள் மூர்க்கத்தனமாக, இன்னும்கூட நிலக்கரி எரிக்க மானியம் கொடுக்கின்றன. தற்போது சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி முலம் மின் உற்பத்தி என்பது தற்போது வழக்கமான ஆலைகளைகளுக்கு ஆகும் செலவைக் காட்டிலும் மலிவாகி விட்டது.
இந்தியாவில் நிலக்கரி பயன்பாடு சுற்றுச்சூழலை மிகக் கடுமையாக சேதப்படுத்துகிறது, மேலும் இது காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணமான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. இதன் விளைவாக பல இயற்கை பேரிடர்களை இந்தியா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆக இனியும் இத்தகைய சூழலியல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் NLC போன்ற நிறுவனங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை மிகவும் தவறான ஒன்று.
இதற்கு மாற்றாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட, வெப்பமண்டல நாடான இந்தியாவில் புவியியல் நிலையும், சூரிய ஆற்றலை உருவாக்குவதற்கும் சாதகமாக உள்ளபோது, சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாராளமாக மின்சாரத்தை தயாரிக்க முடியும். மேலும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சூரிய கதிர்வீச்சு கிடைக்கிறது. இது தோராயமாக 3,000 மணிநேர சூரிய ஒளியைக் கொண்டுள்ளது.
இது சுமார் 5,000 டிரில்லியன் kWhக்கு சமம். இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஒரு சதுர மீட்டருக்கு 4-7 kWh சூரிய ஆற்றல் கிடைக்கிறது, இது ஒவ்வொரு ஆண்டும் 2,300-3,200 மணிநேர சூரிய ஒளிக்கு சமம்.
மேலும் சூரிய ஆற்றல் வரம்பற்றது. இந்தியா போன்ற ஆற்றல் பற்றாக்குறை உள்ள நாட்டில், மின்சார உற்பத்தி விலை அதிகம் உள்ள நாடுகளில், சூரிய ஆற்றல் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்று வழி ஆகும். சூரிய சக்திக்கு மின்சாரம் அல்லது எரிவாயு கட்டடம் தேவையில்லை. சூரிய சக்தி அமைப்பு எந்த இடத்திலும் வைக்கப்படலாம். சோலார் தகடுகளை வீடுகளில் கூட நிறுவுவது எளிது. மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒப்பீட்டளவில் மிகவும் மலிவானது.
அதோடு மிகமுக்கியமாக சூரிய ஒளி சுற்றுச் சூழலை மாசு படுத்தாதது. இது செயல்படும் போது காற்றை மாசுபடுத்தும் CO2 அல்லது பிற மாசுபடுத்திகளை வெளியிடாது. உலகில் மிகவும் மாசடைந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு இந்த சூரிய ஒளி மின்சார திட்டம் மிகவும் சிறந்த ஒன்றாகும்.
இது போலவே காற்றாலையும் புதைபடிவ எரிபொருட்களைக் குறைக்க, நிலக்கரி இறக்குமதி, பசுமைக் குடில் வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. காற்று ஆற்றலின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், எரிபொருள் இலவசம், தண்ணீர் தேவைபடாது, மேலும் அது CO2 உமிழ்வை உருவாக்காது. அதோடு காற்றாலை பண்ணையில் விவசாயமும் செய்ய முடியும். எனவே காற்றாலை பண்ணையை விவசாயம் மற்றும் மின்சாரம் தயாரிக்க என இரண்டு விதமான பயன்படுத்தலாம். மற்ற வகை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஒப்பிடுகையில் இது செலவு குறைந்ததாகும். மிக முக்கியமாக காற்றாலை கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதன்மூலமாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.
ஆகவே இலவசமாகக் கிடைக்கப் பெறும் காற்று மற்றும் சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை இந்தியாவில் பல இடங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், நாட்டின்
தேவைக்கேற்ப அதை இன்னும் விரிவுபடுத்துவதே இந்தியா போன்ற மாசு நிறைந்த நாட்டிற்கு நல்லது. அதைவிடுத்து மக்களை மண்ணை சீரழிக்கும் நிலக்கரி பயன்பாட்டை அதிகரித்தால் நாடு பேரழிவைச் சந்திக்கும்.
உலகெங்கிலும் நிலக்கரி பயன்பாட்டினால் விளையும் ஆபத்தை உணர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்தியாவிலும் குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் நிலக்கரி அனல் மின் நிலையங்களை எதிர்த்து அவ்வபோது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு அதை கவனத்தில் கொள்ளாது மேலும் அனல் மின் நிலையங்களை விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறது. அப்படியாகத்தான் நெய்வேலி NLCஐ விரிவு படுத்த மக்களின் கடும் எதிர்ப்பை மீறி நிலங்களை கையகப்படுத்த ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதி 2020ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி, இப்பகுதியில் தற்போது நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு நிலங்களை கையகப்படுத்த முயல்வது என்பது சட்டத்திற்கு புறம்பானது, முரணானது. மேலும் காவிரி டெல்டாவில் மக்கள் அனைத்து பருவங்களிலும் நெல், கரும்பு போன்ற பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும். மேலும் பசுமை கொஞ்சும் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்.
ஆகவே ஆய்வு மேற்கொண்ட அமைப்புகளின் பரிந்துரையை ஏற்று உடனடியாக அரசு அதனை செயல்படுத்த முன்வர வேண்டும். அதாவது, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிவான சுகாதார ஆய்வுகளை நடத்த வேண்டும். உடனடியாக கடுமையாக பாதிப்படைந்த பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அனல்மின் நிலையங்கள், சுரங்கங்கள், விரிவாக்கங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதலை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை படிப்படியாக நிறுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.