தூக்கு  தண்டனையை தூக்கிலிட்ட செங்கொடி

அநீதி கண்டு கொதித்தெழுந்தால் நீயும் என் தோழனே என்றார் சேகுவேரா.

ஆம், அநீதி நடக்கும்போது அதைக் கண்டும் காணாது அமைதியாய் இருப்பதை விடக் கொடுமை வேறெதுவும் இல்லை. அநீதி நடக்கும் போது தன்னால் எந்த அளவிற்கு போராடமுடியுமோ அந்த அளவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். நமக்குள் எல்லைகள் வகுத்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. எதற்காகப்  போராடத் துணிகிறோமோ அதிலிருந்து துளி அளவும் பின் வாங்கக் கூடாது. போராளியின் மன வலிமைதான் போராட்டத்தை தீவிரப்படுத்தி வெற்றியைப் பெற்று தரும்.

இத்தகைய வலிமைமிகு போராட்டக்களத்திற்கு அணியமாவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த பல இளம் போராளிகள் இந்தத் தமிழ்மண்ணில் உண்டு. அவ்வாறுதான்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட ஏழு நிரபராதி தமிழர்களுக்காக 21 வயதில் உயிர் ஈகை  செய்தவர் செங்கொடி. ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தீவிரமாகப் போராடி,  இறுதியில் தன்னையே தீக்கிரையாக்கியவர். தன் உயிர் ஈகையால் தமிழர்களின் கண்களை மட்டுமல்ல மனதையும் சிவக்க செய்த  வீர இளம்தளிர்தான் செங்கொடி. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் இம்மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி 2011ல் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்ததை அறிந்து தமிழ்நாடே குமுறி அழுதது. இம்மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று  தமிழ்நாட்டில்  சில அரசியல் கட்சிகளும், பல தமிழுணர்வு இயக்கங்களும் போராட்டத்தில் குதித்தன.

போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில்  உண்ணாநிலை போராட்டம்  துவங்கப்பட்டது. எப்படியாவது இவர்களின் தூக்கு தண்டணையை ரத்து செய்து விட வேண்டும் என்ற ஏக்கமும் கோபமும் போராளிகளிடமிருந்து வெளிப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 26.8.2011 வெள்ளிக்கிழமை அன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில் 21  வயதான செங்கொடியும் தனது சித்தப்பா அவர்களுடன் பங்கேற்றார். அந்த போராட்டத்தின்போது அவர் பேசியவை:

“எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

என்று தனது சிந்தனையை  ஆழ்ந்த கோணத்தில் சொல்லி இருக்கிறார் செங்கொடி. அவரின் பேச்சில் இருந்த போராட்ட உணர்வு, அடுத்த சில நாட்களுக்குளாகவே (ஆகஸ்ட் 28ம் தேதி) உயிர் ஈகையாக வெளிப்பட்டது.

ஆக்ஸ்ட் 28, 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். உடல் வெந்து அவரது இளம் மேனியின் தோலும், உயிரும் உருகி தரையில் சரியும் போதும் நிரபராதித் தமிழருக்காக குரல் கொடுத்தார் செங்கொடி. மரணத்தைக் கண்டு அஞ்சாமல் அவர்  கூறிய  வார்த்தை “அப்பாவி நிரபராதிகளை விடுதலை செய்” என்பதுதான்.

யார் இந்த செங்கொடி?

காஞ்சிபுரத்தில் உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தில் வாழ்ந்த பரசுராமன் என்பவரின் மகள்தான் இந்த செங்கொடி. குழந்தைப் பருவத்திலேயே  தாயை இழந்த  செங்கொடிக்கு தங்கையும், தம்பியும் உண்டு. மதுகுடிக்கும் பழக்கம் கொண்ட பரசுராமன் ‘குழந்தைகளை வளர்ப்பதற்காக’ என்ற காரணத்தைக்கூறி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சித்தியின் அன்பு அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர் செங்கொடியும் அவரது  தங்கையும். ஆனால் தந்தையின் மதுபழக்கத்தால் அவரது சித்தி இறக்க நேரிடுகிறது. தாயாக நேசித்த தனது சித்தியின் மரணம் தன் கண்ணெதிரே நடந்ததை செங்கொடியால்  தாங்கிக் கொள்ள இயலவில்லை. தனது சித்தியின் மரணத்திற்கு நீதி கேட்டு தனது தந்தையையே சிறைக்கு அனுப்பி இருக்கிறார் செங்கொடி. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும்   என்பதை சிறு வயதிலேயே செயலால் செய்து காட்டியிருக்கிறார் இந்த படிக்காத செங்கொடி.

இதன்பிறகு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றம் எனும் அமைப்பில் சேர்ந்து போராட்டக்களத்தில் நுழைந்தார் செங்கொடி. தமிழின உரிமைகளுக்காக குரல் கொடுப்பது,  பரப்புரைக்குச்   செல்வது, போராட்டங்களில் கலந்து கொள்வது என சமூகப் பணிகளில் தன்னை இணைத்து கொண்டார். அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவரது இன்றியமையாத பணியாக இருந்திருக்கிறது. 

பாடல்கள் பாடுவதிலும் பறையிசைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்  செங்கொடி.

“நான் மக்களைப் படிக்கிறேன். இதுதான் உயர்ந்த படிப்பு. இதைவிட எந்த பட்டப்படிப்பும் உயர்வாகத் தோன்றவில்லை.  இந்தப் படிப்பே எனக்குப் போதுமானது” 

இவ்வாறு ஏட்டுக்கல்வியை விட  மக்களையும், மனித நேயத்தையும் தான் அதிகம் விரும்பியதை உணர்த்தி இருக்கிறார் செங்கொடி.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை பார்த்து மனம் சோர்ந்த செங்கொடி,  அதற்குப் பிறகு  ஈழம் பற்றியும் தமிழர் அரசியல் பற்றியும் அதிகம் படிக்க துவங்கி இருக்கிறார். அப்போது தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட  செய்தி வருகிறது. இந்த அநீதியைக்  கேட்டு,  தமிழின உணர்வால் உந்தப்பட்டு  பல  போராட்டங்களிலும் பேரணிகளிலும்  பங்கேற்றார்  செங்கொடி.

 குறிப்பாக நளினி-முருகன் அவர்களின் மகள் சிறையில் சென்று தனது பெற்றோரை  சந்தித்துப் பேசியதை தொலைகாட்சியில் கண்ட செங்கொடி அதைப் பற்றியே நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அந்த உரையாடல்  அவரது   மனதை மிகவும் பாதித்தது. எப்படியாவது இவர்களது தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றியது.

  மறுநாள் மாலை தன் உயிரை ஈந்தாவது தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்க்க  முடிவு செய்துதிருக்கிறார். எப்படி முத்துக்குமார் தன்னை அழித்து கொண்டு தன் உடலை ஆயுதமாக்கி போராட்டத்தை முன்னெடுங்கள் என்று சொன்னாரோ, அதுபோல் தானும் தன் உயிர்ஈகம் செய்தால் போராட்டம் வலுப்பெறும்,  தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்று எண்ணினார் செங்கொடி. துணிந்து தன் மரணத்தின் மூலம் மூவரின் தண்டணையை மாற்றினார் இந்தக் கன்னித்தாய். ஆம், மூன்று பிள்ளைகளுக்கு உயிர்கொடுத்து மடிந்த கன்னித்தாய் தான் செங்கொடி எனலாம். 

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் 21-வயது என்பது இளமை துவங்கும் பருவம். ஆயிரம் ஆசைகளும் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சி போல் பறக்கவேண்டிய  இளம் பெண்ணை இப்படி தீயில் கருகவிட்ட கொடுமைக்கு  யார் காரணம்?

இது போன்ற உயிர் ஈகங்களை யாரும் வரவேற்கவில்லை. ஆனால் இந்த உண்மைப் போராளியை மரணிக்க தூண்டியது யாருடைய தீர்ப்பு? இன்றும்  அறப்போராட்டங்களின் வாயிலாக தீர்ப்புகள் மாறுவதில்லை. ஆனால் மக்கள் திரள் போராட்டங்கள் இன்னும் வலுவானதாக இருந்திருந்தால்,  ஆண்ட அரசை அசைத்திருந்தால், வெறும் 21-வயதே ஆன செங்கொடியை மரணிக்க விட்டிருப்போமா? சிந்திப்போம் தோழர்களே. போராட்ட முழக்கங்களையும், பதாகைகளையும் நெஞ்சில் ஏந்துவோம். செங்கொடிக்கு செம்மார்ந்த வீர வணக்கத்தை செலுத்துவோம்!

One thought on “தூக்கு  தண்டனையை தூக்கிலிட்ட செங்கொடி

  1. தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம் 🙏

    போராட்டங்கள் மூலம் தான் நாம் நம் உரிமையை பெறமுடியும் என்ற நிலையில் தான் நாம் பல காலமாக வாழ்ந்து கொண்டுவருகிறோம், போராட்ட உணர்வு நம்மூல் மேலோங்க இவர்களை போன்ற தோழர்களின் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதும் கட்டாயமும் கூட!

    தோழர் செங்கொடியின் போராட்டத்தை எம்மை போன்ற பலருக்கும் தெரியபடுத்தி மீண்டும் நியாபகபடுத்த வழிவகை செய்யத மே பதினேழு இயக்க தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »