செறிவூட்டப்பட்ட அரிசியின் பின்னாலுள்ள பன்னாட்டு வர்த்தகம்

செறிவூட்டப்பட்ட அரிசி: உணவா, நஞ்சா? என்ற தலைப்பில் முன்பு வெளியான கட்டுரையின் தொடர்ச்சி.

உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு செயற்கையாக ஊட்டமேற்றும் முறைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ரசாயனங்களை உணவில் சேர்க்கும்போது அது அளவுக்கு அதிகமானால் அதுவே நஞ்சாக மாறிவிடும் என்று The American Journal of Clinical Nutrition எச்சரிக்கிறது. அதுபோல டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் உமேஷ் கபில்,  ”செறிவூட்டப்பட்ட உணவை எடுத்துக் கொள்வதால் சத்துக் குறைபாடு சரியாகும் என்று மெய்ப்பிக்க எந்த ஆய்வுகளும் இல்லை” என்று கூறுகிறார். அதேபோல குஜராத்தில் உள்ள மிகப்பெரிய அமுல் கூட்டுறவு நிறுவனமும் உணவுப் பொருட்களில் செயற்கையாக செறிவூட்டும் முறையை கடுமையாக எதிர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எளிய மக்களின் உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை கொள்வதாக ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி அதை வணிகமாக மாற்றும் பணியில் பல சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு வேலை செய்து வருகின்ற சூழலில், இந்தியாவில் கோதுமை, பால், உப்பு, சமையல் எண்ணை ஆகிய 4 பொருட்கள் செறிவூட்டப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாவதாக அரசியை செறிவூட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்மொழிந்து அதனை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு பல அத்தியாவசிய உணவு பொருட்களில் ஊட்டச் சத்துக்களை சேர்க்கிறோம் என்ற பெயரில் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கைகளில் நமது உணவை கொடுப்பது என்பது நமக்கு நாமே சவக் குழியைத் தோண்டிக் கொள்வதற்கு ஒப்பானது. இதைத் தான் மோடி அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் “தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” (Reporters-Collective) விசாரணையின் மூன்றாவது  பகுதி இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பில் குறைந்த பட்சம் ஆறு சர்வதேச பெருநிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது. எப்படி இந்த 6 நிறுவனங்களும் இந்திய அரசு நிறுவனத்திற்குள் நுழைந்து தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அதன் முடிவுகளில் தலையிட்டு, இந்தியச் சந்தையை, உலகளவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்க பயன்படுத்தும் நுண்ணூட்டச் சத்து கலவைகளை வழங்குபவர்களுக்கும், அதனை உற்பத்தி செய்பவர்களுக்கும் திறந்துவிட்டன என்பதை தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை வளரும் நாடுகளில் கொண்டுவர 2016-லிலேயே மெக்சிகோவின் கான்கண் (Cancun) நகரில் முடிவு செய்யப்பட்டதென தற்போதைய செய்திகள் வழியாக தெரிய வந்துள்ளது. அதாவது ராயல் DSM உடன் சில உலகளாவிய தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்தரங்கில், அரிசி செறிவூட்டலை வலுப்படுத்த ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை வழங்கும் ஒரு இயக்கத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதில் பேசிய பேச்சாளர்களில் ஒருவரான சர்வதேச ஊட்டச்சத்து (Nutrition International) என்ற லாப நோக்கற்ற குழுவின் தற்போதைய தலைவர் ஜோயல் ஸ்பைசர் கருத்தரங்கில், “அரிசி வலுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் கொள்கை வகுக்கும் பகுதியை காணவில்லை, ஆகையால் அரசுகளின் கொள்கை வகுப்பாளர்களுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும், அரிசி வலுவூட்டலுக்கு எவ்வளவு செலவாகும்? அதிலிருந்து அவர்கள் என்ன பெறுவார்கள்? அதற்கு யார் பணம் செலுத்தப் போகிறார்கள்? என்பதையும் நாம் இதில் கொண்டுவர வேண்டும்”  என்று முற்றிலும் வணிக நோக்கோடு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு நடந்த ஒரு மாதத்திலேயே, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) செறிவூட்டலுக்கென ஒரு தனி மையத்தை (FFRC) உருவாக்குகிறது எனில் இது தற்செயலான நிகழ்வாக இருக்க சாத்தியமில்லை. அதோடு முன்பு DSMக்கு சொந்தமான மற்றும் இன்றும் நிதியளிக்கப்படுகிற சர்வதேச ஊட்டச்சத்து (Nutrition International) மற்றும் பல சர்வதேச தன்னார்வு தொண்டு  நிறுவனங்கள் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட FFRCயோடு இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2017ல் FFRC வெளியிட்ட முதல் ஆவணத்தில், SIGHT and LIFE என்னும் இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை தனது பங்குதாரராக குறிப்பிட்டுள்ளது. SIGHT and LIFE ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் என்பதால் அதற்கு FRCCன் கொள்கைகளை முடிவு செய்யவும், செறிவூட்டப்படும் அரிசியின் தர நிலைகளை முடிவு செய்யவும் உரிமையை கொண்டுள்ளது. இந்த தன்னார்வ நிறுவனத்திற்கு ராயல் DSM அதிக நிதி பங்களிப்பு செய்திருப்பது மற்றும்  இந்நிறுவனத்தின் பாதி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் உள்ளிட்டவர்கள் ராயல் DSM நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

DSM தன்னார்வு தொண்டு நிறுவனங்களிலும் மற்றும் அரசாங்களிலும் தனது கூட்டாளிகளை வளர்த்து வருகிறது. இதனை தங்களது இணையதளங்களில் “அரசாங்கங்கள், தனியார்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான GAIN, DSM ஆகியவற்றுடன் இணைந்து, உலகளவில் பிரதான உணவு வலுவூட்டல் திட்டங்களை நிறுவுவதில் முன்னோடியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசால் இத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட சோதனை முயற்சிகள் தோல்வியடைந்த போது, இத்திட்டத்திற்கு சார்பான ஆதாரங்களை தேர்ந்தெடுத்தது, இந்த பட்டியலில் ஆதாரமாக மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றான SIGHT and LIFE மற்றும் DSM-ஐச் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவுகளைத் தான் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

ஒன்றிய அரசின் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் DSM நிறுவனத்தின் வருமான வளர்ச்சியுடன் ஒத்துப்போகிறது. 2019-20வதை விட 2020-21ல் 60.5% வளர்ச்சியும் 2021-22ல் அதன் கடந்த ஆண்டைவிட 30% வளர்ச்சியும் அடைந்துள்ளது. செப்டம்பர் 12, 2019ல் உணவு துறை குறிப்பில் இருந்து அதன் திட்ட நோக்கங்களில் ஒன்றாக ஒன்றிய அரசின் திட்டங்களை திறந்து வைப்பதின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியின் சந்தையை உறுதிப்படுத்தலாம் என்பதாகும். இது ஒன்றிய அரசின் வணிக நோக்கத்தை காட்டுகிறது.

FFRCக்கு குறைந்தது ஆறு பங்குதாரர் உள்ளதாக கூறபடுகிறது. இவை அனைத்தும் தன்னார்வு தொண்டு நிறுவங்களாகும். உணவு வலுவூட்டல் முயற்சி (Food Fortification Initiative) என்பது உலகளவில் ஊட்டசத்து குறைபாட்டை குறைக்கும் வழிமுறையை மேம்படுத்தும் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் தனித்து செயல்படுவதாக கூறினாலும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக DSM உள்ளதை கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

உலக உணவுத் திட்டம் (WFP) அதன் அரிசி வலுவூட்டல் திட்டத்தில் DSM உடன் உலகளாவிய பங்குதாரராக உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் அவர்கள் சேர்ந்து செயல்படுவதில்லை என்று கூறியுள்ளது. PATH எனும் தன்னார்வு நிறுவனம் வளரும் நாடுகளில் Ultra Rice எனும் தீவிர அரிசி செறிவூட்டலுக்கான தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளன. இந்நிறுவனத்தின் ஒரு பங்கு நிதியானது DSM ஊட்டச்சத்து தயாரிப்பு மூலமாக பங்களிக்கப்பட்டுள்ளது.

DSM  நிறுவனத்தின் மற்றுமொரு மறைமுக பங்குதாரர் ஊட்டச்சத்துக்கான குளோபல் அலையன்ஸ் (GAIN) எனப்படும் சர்வதேச கூட்டமைப்பு ஆகும். இதன் முதன்மை நிதி பங்களிப்பாளர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகும். DSM இன் குளோபல் ஊட்டச்சத்துக் கூட்டாண்மைகளின் தலைவர் மொரிசியோ அடேட் GAIN இன் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் உள்ளார். GAIN நிறுவனம், பெருநிறுவன நலன்களுக்காக பங்காற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 2013ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் GAINஐ ஒரு NGO ஆக அங்கீகரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது அரிசி செறிவூட்டலின் விதிமுறை மற்றும் தர கட்டுப்பாடுகள், இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI)  தயாரித்த ஆவணங்களில் இந்திய தலையீடு இல்லாததை காட்டுகிறது. ஆகஸ்ட் 2015ல் PATH மற்றும் GAIN இணைந்து எழுதிய ஆவணத்தின் சொற்களை மாற்றி அமைத்து 2019ல் இந்திய அரசின் ஆவணமாக பொதுவில் பகிர்ந்த போது Ultra rice என்னுமிடத்தில் Fortified Rice என மாற்றியதும் வரிக்கு வரி இந்தியா என்று சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல DownToEarth கட்டுரையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) இந்திய அரசுக்கு நுண்ணூட்டச் சத்துக்களை வழங்க 15 இந்திய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என கூறுகிறது.

மேலும் அதில், செறிவூட்டல் என்பது ஒரு இலாபகரமான வணிகமாகும், இது அரசு ஆதரவுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உறுதி செய்யப்பட்ட சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. உலகளவில், 5 பன்னாட்டு நிறுவனங்களான ஜெர்மனியின் BASF, பிரான்சின் அடிசியோ (Adisseo), சுவிட்சர்லாந்தின் லோன்சா (Lonza), மற்றும் நெதர்லாந்தின் ராயல் DSM மற்றும் ADM ஆகியன நுண்ணூட்டச் சத்துகளை உற்பத்தி செய்து, அனைத்து இந்திய நிறுவனங்களுக்கும் இறக்குமதி செய்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் உலகச் சந்தையை ஒரு வணிக கூட்டணி மூலம் ஆளுகின்றன” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த விவசாய வணிகம் மற்றும் வர்த்தக ஆய்வாளரான விஜய் சர்தானா. மேலும் அவர் இந்நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் தங்களுக்கு என சொந்த துணை நிறுவனங்களையும் உருவாக்கி உள்ளன என்கிறார்.

இந்த ஆறு நிறுவனங்களும், இந்தியா முழுவதும் நுண்ணூட்டச் சத்துக்களால் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கும் அரசின் திட்ட கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு செயலாற்றியுள்ளன. இந்த செறிவூட்டல் திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஆதாரங்களைச் சேகரித்து, அரசுடன் சில முன்னோடித் திட்டங்களை நடத்தி, தரநிலைகளை நிர்ணயித்து, நாடு தழுவிய வகையில் அதை பட்டியலிட்டுள்ளன. அதோடு இந்தியாவில் செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயமாக வழங்குவதை நியாயப்படுத்த வேண்டி இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட “தொழில்நுட்பத்தை ” ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான தேவையின்படி மொத்தமாக அரிசி, கோதுமை, பால் ஆகியவற்றை செறிவூட்ட 3000 கோடிக்கு மேல் செலவிட்டதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (MOCAFPD) தெரிவித்துள்ளது. இதில் செறிவூட்டப்பட்ட அரசியை உருவாக்கும் செயல்முறை மற்றவற்றை விட விலை அதிகம் என்பதால் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மட்டும் 1,700 கோடி ரூபாய்.

மோடியின் அறிவிப்பு வெளியான 18 மாதங்களுக்குள் ராயல் DSM ஹைதராபாத்தில் 3,600 டன் திறன் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் உள்ள அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரிசி ஆலைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

DSM நிறுவனம் ஏற்கனவே இந்திய நுண்ணூட்டச்சத்து கலவை தயாரிப்பு சந்தையில் 17% ஆக்கிரமித்து உள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் Giract கூறுகிறது. 2021ம் ஆண்டில் உள்நாட்டுச் சந்தையின் மதிப்பு ரூ.660 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டது. மேலும், அது விரைவில் ஆண்டுக்கு ரூ.1,800 கோடியாக மாறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு நுண்ணூட்டச்சத்துக்கள் அத்தியாவசியமாக இருந்தால், அவற்றின் விலைகள் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act, 1955) இன் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில், இந்த நுண்ணூட்டச் சத்து கலவைகளின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது என விஜய் சர்தானா கூறியுள்ளார்.

இவ்வாறு நுண்ணூட்டச் சத்துகளின் விலைகளை உயர்த்தியதற்காக 2001ல், ஐரோப்பிய ஒன்றியம் சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு €855.2 மில்லியன் (US $952 மில்லியன்) அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தின் Hoffmann-La Roche, BASF மற்றும் ஜெர்மனியின் மெர்க், பிரான்சின் Aventis SA, நெதர்லாந்தின் Solvay Pharmaceuticals மற்றும் Daiichi Pharmaceutical, Esai and Takeda Chemical Industries of Japan ஆகியவை. அப்போதிலிருந்து, இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பல புதிய பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் லாப நோக்கமற்று சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக காரணங்களைக் கூறிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் அனைவரும் செறிவூட்டப்பட்ட உணவை நோக்கியே தள்ளுகிறார்கள். மேலும், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அரசுகளை உணவு பொருட்களை செறிவூட்ட வற்புறுத்துகிறார்கள் என்று டெல்லியில் உள்ள அகில இந்திய உணவு பதப்படுத்தும் சங்கத்தை சேர்ந்த சுபோத் ஜிண்டால் கூறியுள்ளார். மேலும், அவர் இத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இந்தியாவின் செறிவூட்டும் அரிசி திட்டங்களை தயாரித்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளார்.

அவரை தொடர்ந்து RSS துணை அமைப்பான சுதேசி ஜாகரன் மஞ்ச் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஷ்வினி மகாஜன், இவை அனைத்தும் கந்து வட்டி குழுக்கள், இவற்றை பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆதரிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் அவர் இதிலுள்ள முரண்பாடுகளை விசாரிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசின் மோசமான இந்த திட்டத்தை RSS அமைப்பினரே ஏற்கவில்லை என இதன்மூலமாக அறியலாம்.

TATA அறக்கட்டளைகள், PATH, உலக உணவுத் திட்டம் மற்றும் உலக வங்கி போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக டெல்லியில் FSSAI உணவு வலுவூட்டல் வள மையத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல தான் கடந்த 11 ஆண்டுகளாக சட்டத்தின் மூலம் சாதாரண கல் உப்பை தடுத்து, உப்பு விற்பனையில் ஆண்டுக்கு ரூ.1,080 கோடி வரை சாதாரண உப்பளத் தொழிலாளர்களின் கைகளில் இருந்து பிடுங்கி பெருவணிக நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. இந்தியாவின் தேவையில் 60.5 லட்சம் டன்னில் 59.7 லட்சம் டன் உப்பில் அயோடின் சேர்த்து சந்தையில் விற்கப்பட்டு வருவதாக உப்பு ஆணைய நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றாடம் பயன்படுத்தும் கல் உப்பில் ஏறத்தாழ 99 விழுக்காடு  அயோடின் கலக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. ஆயினும்  இந்திய மாநிலங்களில்  அயோடின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கிய ஒரு மாநிலம் கூட இல்லை என்று தேசிய குடும்பநலக் கணக்கீடு தெரிவிக்கிறது.

மேலும் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் தைராய்டு நோய் தற்போது வீட்டில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. அதோடு வீதிக்கு வீதி இந்த நோயை குணப்படுத்த சிறியது முதல் பெரிய மருத்துவமனைகள் பெருகிவிட்டன. இதற்கான மருந்து விற்பனை மட்டும் கோடிக் கணக்கில் நடைபெறுகிறது. ஆக அயோடினை உப்பில் கலந்து இத்தனை ஆண்டுகளாக கொடுத்து அரசு சாதித்து ஒன்றுமில்லை. மாறாக பல புதிய உடல் நலப் பிரச்சினைகள் வந்தது தான் மிச்சம்!

ஆக மோடி அரசின் இந்த திட்டத்தால் சர்வதேச பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறப் போவது உறுதி. ஆனால், அல்லும் பகலும் உழைத்து, சத்தான மரபின பாரம்பரிய நெல்லை உருவாக்கும் ஏழை விவசாய மக்களுக்காக எந்தவித திட்டமும் அரசிடம் இல்லை. உண்மையில் இந்த செயற்கை அரிசிக்கு ஒதுக்கும் தொகையை மரபின பாரம்பரிய அரிசிகளுக்கு ஒதுக்கினால் நாட்டிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு பயன்கிட்டும், பாரம்பரிய நெல்லினங்களும் பாதுகாக்கப்படும், மக்களுக்கும் சத்தான அரிசி அவர்களின் ஊரிலேயே கிடைக்கப்பெறும்.

ஆனால், இதையெல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாத பாசிச மோடி அரசு சுதந்திரத்திற்கு முன்பு இந்திய ஒன்றியம் காலனி ஆதிக்கத்தில் இருந்தது போல இன்று ஒரு  டச் நிறுவனத்திடம் 3,000 கோடி மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்து இந்திய மக்களின் உடல்நலனில் விளையாடி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »