‘முஜிப்-ஒரு தேசத்தின் உருவாக்கம்’ – புகழ்பெற்ற ஷ்யாம் பெனகலின் இயக்கத்தில் உருவான வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் திரைப்படமாக இன்று வெளியாவது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 13, 2023 அன்று தனது முகநூல் கணக்கில் செய்த பதிவு.
வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் ஷ்யாம் பெனகலின் இயக்கத்தில் திரைப்படமாவது ஆர்வத்தை கொடுக்கிறது. 1970-களில் இந்திய அரசின் அனுசரணையுடன் வங்கதேச போராளிகள் பாகிஸ்தானை வென்று தேசிய இனவிடுதலையை வென்றார்கள். பாகிஸ்தானின் இனவெறி, மொழிவெறி என்பது மட்டுமல்லாமல் வங்கதேசத்தின் இடதுசாரி எழுச்சிக்கு எதிரான போராக பாகிஸ்தான் தனது படைகளை கட்டவிழ்த்தது. வங்கதேசத்தின் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பேராசிரியர்கள், மாணவர்களை படுகொலை செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முஜிபூர் ரகுமானை கைது செய்து பாகிஸ்தான் கொண்டு சென்றனர். இதற்கு எதிராக இந்தியா எழுந்தது. இந்தியாவின் அனைத்து தேசிய/கம்யூனஸ்ட் கட்சிகள் அச்சமயத்தில் ஆதரவாக நின்றதற்கு காரணம், பாகிஸ்தானை எதிரி நாடாக வரையறை செய்ததும் முக்கிய காரணம். குறிப்பாக இடதுசாரிகளின் பிரச்சாரமும், ஆதரவும், மக்களை திரட்டிய பாங்கும் வங்கதேசத்தின் போராட்டத்திற்கு ஆதரவான அலையை இந்தியாவில் உருவாக்கியது.
பாகிஸ்தான் பாட்டாளிகளும்-பங்களாதேச பாட்டாளிகளும் ஒன்றாக நின்று தேசத்தை உடைக்கக்கூடாது என பாகிஸ்தான் இறைமைக்கு ஆதரவாவோ, பாட்டாளிவர்க்க அரசியல் எனும் பெயரில் பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தின் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமலோ இந்திய இடதுசாரிகள் கடந்துவிடவில்லை. வங்கதேசத்தின் பாட்டாளிகளை பாதுகாக்காமல், பாகிஸ்தானின் பாட்டாளிகளையும் காக்க இயலாது என்பதை வரலாறு சொன்னது. பாகிஸ்தான்-இந்தியாவின் சனநாயக முற்போக்கு ஆற்றல்களால் பாகிஸ்தானின் ஆளும்வர்க்கம் தனிமைப்படுத்தப்பட்டது. இதுவே வங்கத்தின் தேசிய இனமக்கள் பாதுகாக்கப்படவும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும் காரணமானது. இந்தியாவின் ஆளும் வர்க்கம் தனது பாகிஸ்தானிய எதிர்ப்பு அரசியலை வங்கதேச மக்களின் விடுதலைக்கு பயன்படுத்தியது.
இந்தியாவின் ஆளும் பார்ப்பனிய வர்க்கம் இசுலாமிய-மொழி-இனவெறி பிடித்த பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக வங்கத்தின் போராளிகளை எதிரெதிர் அணிகளாக, சகோதர சண்டைகளை உருவாக்கும் சதிகளை செய்தது. வங்கதேசத்தின் இடதுசாரிகள் படைகளை ஒழித்து கட்டுவதற்கு முஜிப்வாகினி படையை தயார் செய்தது. அப்படைகள் இடதுசாரிகளுக்கு எதிராக போரிட்டன. வங்கதேச போராட்டத்தின் முகமாக முஜிபூர் ரகுமான் எனும் லிபரல் அரசியல்வாதியை தயார் செய்தது. முஜிபூர் ஆட்சியை கைப்பற்றியதும் வங்கதேசத்தின் புகழ்பெற்ற இடதுசாரி தலைவருமான சிராஜ்சிக்தாரை படுகொலை செய்தார். அவருடைய தோழர்களையும் கைது செய்து சுட்டுப் படுகொலை செய்தனர். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு ராணுவத்தை வெல்லும் வலிமையை உருவாக்கியது.
இந்திய அரசு வங்கதேசத்து விடுதலை அமைப்பை உருவாக்கி பயிற்சியளித்தது. இந்த படையை இரண்டாக பிரித்தது. முக்தி பவுஜ், முஜிப் பாகினி எனும் இருகுழுக்களாக்கி அனுப்பியது. இவ்வாறு கிட்டதட்ட 80,000 வங்காளிகளை படைபயிற்சியளித்தது. இதில் 50,000 பேர் இந்திய ராணுவத்தோடு இணைக்கப்பட்டு போரிட அனுப்பப்பட்டனர். 10,000 வங்காளிகளை வைத்து பங்களாதேஷ் லிபரேசன் ஃபோர்ஸ் எனும் பெயரில் ரகசியமாக இயக்கியது. இக்குழுக்களில் அவாமி லீக் எனும் வங்கதேச லிபரல்களை-பிற்போக்கு அமைப்பினரை ஈடுபடுத்தியது. வங்கதேசத்தின் சுதேச விடுதலை இயக்கத்தினரை நசுக்க இந்த படையினரை பயன்படுத்தியது. பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி பின்னுக்கு நகர்த்தி வலிமையாக இருந்த இந்த சுதேசி இடதுசாரி படைகளை அழித்து தனது ஆதிக்கத்திற்குள்ளாக கொண்டுவந்தது. இவையனைத்திற்கும் முஜிபூர் ரகுமான் ஆதரவாகவே இருந்தார்.
இதே நிலைதான் 1987ல் ஈழத்தில் போராளிகள் கை ஓங்கிய சமயத்தில் இந்தியாவின் படை இறக்கப்படுகிறது, போராளிகள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு ஆயுதம்-களைதல் புலிகளுக்கு மட்டும் நிகழ்கிறது. இதை அமைதிப்படையின் தலைமை தளபதி ஹர்கிராத்சிங் தனது ரீடிப்.காம் பேட்டியில் பகிரங்கமாக அறிவித்தார். புலி எதிர்ப்பு போராளிக்குழுக்களுக்கு உளவு நிறுவனமான ‘ரா’ ஆயுதங்களை எங்களுக்கு தெரியாமல் கொடுத்தார்கள் என்றார். இடதுசாரிகள், போராளிகள் என்று அழைத்துக்கொண்ட பத்மநாபாவும், உமாமகேஸ்வரனும் இன்னபிறரும் ஏன் பார்ப்பனிய-முதலாளிய-கம்யூனிச விரோத இந்திய ஆதிக்கத்திற்கு அடிபணிந்தார்கள் என்பது ஆய்விற்குரியது. இதுபற்றிய ஆழமான ஆய்வு தமிழர்களுக்கு பயனளிக்கக்கூடியது.
வங்கதேசத்தில் ஒருபுறம் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு படைகள், வங்கதேச முக்திபாகினி ஒட்டுக்குழுக்கள், இந்திய ராணுவம் ஆகியவற்றிற்கு எதிராக போராடி தீரமிகு இடதுசாரிகள் வரலாறு நமக்கு சொல்லப்படவில்லை. வங்கதேச விடுதலைக்குப்பின்னர் இவர்களை கொத்துகொத்தாக முஜிபூர் ரகுமான் அழித்தார். இப்படியாக ஒரு தலைமையை இந்தியாவும், அமெரிக்காவும் உருவாக்கியது. ‘…வங்கதேசம் கம்யூனிஸ்டுகள் கையில் செல்வதை தடுக்கக்கூடிய ஒரே தலைமையான என்னை ஏன் பாகிஸ்தான் கைது செய்கிறது?..’ என்றார் முஜிபூர் ரகுமான். ‘தான் மார்க்சிஸ்டு அல்ல’ என்பதை பகிரங்கப்படுத்தினார். இதை அமெரிக்க தூதருக்கும் தெரிவித்தார். இருந்தபோதிலும், கம்யூனிஸ்டுகளை ஒடுக்கிய பின்னர், அமெரிக்க சார்பு ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்.
இந்த பின்னனி இருந்த போதிலும் வங்க தேசிய இனவிடுதலை போருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டுகள் நின்றார்கள். முக்திவாகினி மற்றும் முஜிபூர் ரகுமான் மீதான விமர்சன அரசியலை, அவர் மார்க்சிய-சோசலிச அரசியலை முன்னெடுப்பாரா எனும் கவலைகளை/விமர்சனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல் வங்கதேச மக்களை பாதுகாக்கும் அரசியலை முன்னெடுத்தது வரலாறு. இடதுசாரிகளை கொன்றழித்த முக்திபாகினி படைகளுக்கு இந்திய தேர்தல் அரசியல் சார்ந்த இடதுசாரிகளின் விமர்சனங்கள், எதிர்ப்புகள் கடுமையானதாக, தனிமைப்படுத்துவதாக இல்லை. மாறாக வங்கதேச அரசியலை சனநாயகப்படுத்த உதவினார்கள். இதே காலகட்டங்களில் பத்து ஆண்டுகள் முன்பின்னாக நடந்த இலங்கை சூழலையும் நம்மால் பொறுத்தி பார்க்க இயலும். டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த படுகொலைகளை போல, யாழ்ப்பாண பல்கலைக்கழக அழிப்புகள் தமிழர்களை கூர்மைப்படுத்தியது.
வங்கதேச போராட்டத்தில் ஈடுபட்ட பூர்சுவா முதல் புரட்சிகர அமைப்புகள் வரை அனைவருக்குமான சனநாயக அரசியல் வெளி இந்தியாவில் இடதுசாரிகளால், லிபரல்களால் உருவாக்கப்பட்டது. இதே போன்ற சனநாயக ஆதரவை ஈழ போராட்டத்திற்கு வழங்கியிருந்தால் சிங்கள பாசிசம் முறியடிக்கப்பட்டிருக்கும். மாறாக இந்திய ஆளும்வர்க்கத்தின் தொங்குசதைகளாக டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் , ப்ளாட் போன்ற அமைப்புகள் மாற்றப்பட்டதை இன்றளவும் ஆய்வுக்கு/விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் இவைகளின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. மிகத்தீவிரமாக புலிகளை உட்படுத்தும் விமர்சன ஆய்வுகள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரத்தின் பகுதிகளாகவே அமைந்துவிட்டன என்பது தான் பெரும் துயரம்.
ஈழத்திற்கான முஜிபூர் ரகுமானாக வரதராஜ பெருமாள் அல்லது அமிர்தலிங்கம் அல்லது உமாமகேஸ்வரன் உள்ளிட்ட யாரையாவது தலையில் கட்டவேண்டுமென இந்தியாவின் திட்டம் நடைபெறாமல் போனதாலேயே, தமிழர் போராட்டம் தொடர்ந்து முன்னகர்ந்தது. இந்த முஜிபூர் ரகுமான்கள் கொல்லப்பட்ட பின்னர், இந்த இடைவெளியை நிரப்ப இந்தியாவிற்கு எவரும் கிடைக்கவில்லை.
முஜிபூர் ரகுமானின் சந்தர்ப்பவாத, இடது எதிர்ப்பு அரசியலை கடந்து வங்கதேச விடுதலையை இந்தியாவின் அனைத்து இடதுசாரிகளும், சனநாயகவாதிகளும் ஆதரித்தனர். உண்மையில் சொல்ல வேண்டுமெனில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் எழுந்த தொழிலாளர்-மாணவர் புரட்சிக்கு ஆதரவாக கிழக்கு பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் எழுந்த கம்யூனிஸ்டுகளின் குரல் பாகிஸ்தானின் அதிபர் யாகியாகான் கிழக்குப்பகுதிக்கு படைகளை அனுப்ப காரணமானது. அது பின்னர் அங்கே கனன்று கொண்டிருந்த தேசிய இனவிடுதலைக்கு வாய்ப்பான சூழலை அமைத்த போது இடதுசாரிகள் தேசிய இனவிடுதலை போரில் ஈடுபட்டனர்.
இந்திராகாந்தி அரசு வங்கதேசத்தின் விடுதலையை அங்கீகரிக்க தயங்கியபோது சி.பி.எம் கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானமும் அழுத்தமும் கொண்டுவந்தது. திரிபுரா-மேற்கு வங்கத்தில் மக்கள் திரள் எழுச்சியை கட்டமைத்த வரலாறை சி.பி.எம்மின் தோழர்.பிமான்போஷ் வங்கதேச இடதுசாரி மாநாட்டில் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் 1970களில் எழுந்த நக்சல்பாரி எழுச்சி வங்கதேசத்தின் இடதுசாரிகளின் எழுச்சிக்கு ஆதர்சனமாக அமைந்தது. இப்பகுதியில் வெள்ளையர் காலத்தில் சிட்டகாங் பள்ளத்தாக்கில் எழுந்த இடதுசாரி தீவிர போராட்டம் 1980கள் வரை தீவிரமான நிலையில் தீர்மானகரமான சக்தியாக இருந்தது. இதை பலவீனப்படுத்தியவர் முஜிபூர் ரகுமானும் அவரை அடுத்து அதிகாரத்திற்கு வந்தவர்களும். இந்த இடதுசாரி எழுச்சியை அடக்கவே இந்திரா காந்தி தனது படைகளை பயன்படுத்தினார். அவர் வங்கதேச மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க தயங்கியபோது, அதை நிர்பந்தம் செய்தவர்கள் சி.பி.எம் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள்.
இதே காலகட்டத்தில் இலங்கையின் சிங்களப்பகுதியில் எழுந்த இடதுசாரி போராட்டமும் இந்திய உதவியுடன் அடக்கப்பட்டது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய படையை புலிகள் எதிர்த்து போராடிய போது, தெற்கு இலங்கையில் ஜெவிபி எனும் சிங்கள இனவாத இடதுசாரி குழுவை அழிக்கும் போரை சிங்களம் நடத்தியது. இந்த ஜேவிபி, மலையக-ஈழ தமிழர்களை இந்தியாவின் விரிவாக்க ஏஜெண்டுகளாக பார்த்தனர். தம்முடன் கைகோர்த்து இலங்கை-இந்திய அதிகாரவர்க்கத்தை அகற்றலாமெனவும், அதற்கு பதிலீடாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஜெவிபி அங்கீகரிக்கவேண்டுமெனும் புலிகளின் நிலைப்பாட்டை ஜெவிபி நிராகரித்தது. சிங்கள-தமிழ்ப் பாட்டாளி ஒருமைப்பாடு உருவாகும் வாய்ப்பை இந்த போலி இடதுசாரி சாகசவாத குழு அழித்தது. பின்வரும் காலத்தில் சிங்கள பேரினவாதத்தில் கரைந்து போனது.
சிங்கள பாசிசத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் ஒரு சனநாயக கருத்தியலை, கூட்டவையை இந்திய இடது-சனநாயகவாதிகள் ஏற்படுத்தாமல் போராளிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து ஈழ மக்களை தனிமைப்படுத்தி இனப்படுகொலை சூழலுக்குள் தள்ளினர் என்பது மிகையல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தீவிர மா-லே இயக்கங்களும் இந்த அரசியல் வெளியை உருவாக்க போராடினாலும் அது மேலெழும்பாமல் பார்ப்பனிய-இடதுசாரிகளால் தடுக்கப்பட்டது.
அதேபோல வங்கதேசத்தின் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் பாகிஸ்தான் படைகளால் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக துடித்த இந்திய மனம், இலங்கையில் கொல்லப்பட்டபோது இந்திய அளவில் எழாமல் போனது. தற்போதைய பாஜகவின் தாய் அமைப்பான ஜன்சங் பெருமளவில் பாகிஸ்தானிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள வங்கதேச ‘இந்து’ படுகொலை காரணமானதை போல, இலங்கையால் கொல்லப்பட்ட தமிழர்களை ‘இந்துக்களாக’ இன்றளவும் பார்க்கவில்லை.
தனது படைகளை பெருக்கி சிங்களம் இனப்படுகொலை போர்களை தொடர்ந்து நடத்திய சமயங்களில் ஈழ மக்களை பாதுகாக்கும் ஒற்றை அமைப்பாக புலிகள் மட்டுமே நின்ற பொழுது, அப்போராளிகளை பார்ப்பனியத்தோடு சேர்ந்து, தனிமைப்படுத்தியவர்கள் இந்தியாவின் லிபரல் சனநாயகவாதிகள், இவர்களில் சிலர் ‘தி இந்து’ பார்ப்பனிய, திராவிடர் எதிர்ப்பு இதழால் வசீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் என்பது துயரம். இந்தியாவின் சி.பி.ஐ மற்றும் சில மா-லெ அமைப்புகள் மட்டுமே ஈழ நியாயத்தை தொடர்ந்து பேசி வந்தன. போராளிகளின் மீதான விமர்சனங்களைக் கடந்து சிங்களப் பேரினவாதிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துபவர்களும் இவர்களே.
தற்போது பாலஸ்தீன படுகொலைக்கு எதிராக உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள் அனைத்துமே யூத ஜியோனிசத்தை தனிமைப்படுத்தும் போராட்டங்களே, அவற்றை நடத்துபவர்கள், ஹமாசின் அரசியல் மீது விமர்சனம் கொள்ளாதவர்கள் அல்ல. இவ்விமர்சனங்களைக் கடந்து ஜியோனிசம் வீழவேண்டுமென மக்களை திரட்டி வீதிக்கு வருகிறார்கள். இப்போராட்டங்களில் பங்கேற்பவர்கள் ஹமாசின் அழைப்பிற்காக காத்திருக்கும் மக்கள் அல்ல. மாறாக ஜியோனிச பாசிச இசுரேலை வீழ்த்தும் அரசியலின் அற உணர்வை தன்னகத்தே பெற்றவர்கள். போராளி அமைப்பின் மீதான விமர்சனத்தை முன்வைக்கும் ‘தகுதி’ என்பது, ஜியோனிச-சிங்கள பாசிச கட்டமைப்பை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தும் பணிகளின் ஊடாகவே வருகிறது. புலிகள் அழிக்கப்பட்டு, கடந்துபோன 14 ஆண்டுகளில் இதுவரை புலி விமர்சகர்கள்/எதிர்ப்பாளர்கள் சிங்கள பாசிசத்திற்கு-இந்திய பார்ப்பனியத்திற்கு-ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எவ்வித மக்கள்திரள் சனநாயக கட்டமைப்பையும் உருவாக்கவில்லை.
தமிழர்கள் அன்றாடம் இலங்கை சிங்கள இனவெறி ராணுவத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அடக்குமுறைக்குள்ளாகும் இக்காலத்தில் கூட புலிகளுக்கு எதிராகவே ஆய்வுகளை நடத்துவதை குற்ற உணர்வின்றி செய்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர், ஆக்குரமிப்பு இராணுவம், களவாடப்பட்ட நிலம் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டுமென்ற ஐநாவின் குறைந்த பட்ச தீர்மானத்தைக் கூட புலி எதிர்ப்பாளர்கள் பேசியதில்லை. இவர்களது அறமற்ற இந்த செயலாலேயே மே பதினேழு இயக்கம் பிறந்தது.
எமது மாணவர் காலத்தில் எம்மை வசீகரீத்தவர்களின் வன்ம அரசியலே மே பதினேழு இயக்கத்தை முன்னகர வைத்தது. அந்த உழைப்பிலேயே இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐ.சி.ஜி போன்ற சர்வதேச அடியாட்கள், ‘தி இந்து’ போன்ற பாசிச பரப்புரையாளர்கள், சிங்களத்தோடு கைகோர்த்த ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கத்தின் கொள்கைகள், ஐ.நாவின் ஒத்துழைப்பு என எண்ணற்ற ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல், வீதியில் இறங்கி போராடி மக்களை அரசியல்படுத்தினோம், திரட்டினோம், சிறை சென்றோம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க-இங்கிலாந்து பிராந்திய நலனுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அம்பலப்படுத்தி மக்களை திரட்டி அந்த தீர்மானத்தை எரித்த அமைப்பு மே பதினேழு இயக்கம். இலங்கையில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய தலையீடுகளை தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக அம்பலப்படுத்தி போராடி வருகிறோம்.
பாலஸ்தீனம்-வங்கதேசம்-ஈ.ழம் ஆகியவை கற்றுத்தரும் அரசியல் பாடத்தின் மிக முக்கியமான பகுதி என்பது போலிசனநாயக-முற்போக்கு வேடம் தரித்தவர்களை அடையாளம் கண்டடைவது. உலகில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக நிற்போம். அவர்களின் போராட்ட அமைப்புகளின் மீதான விமர்சனங்களை பொறுப்புணர்வுடன் அணுகி போராட்டத்தை சனநாயகப்படுத்த பங்களிப்போம், மக்கள் விரோதிகளை, பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவோம்.
இசுரேலிய யூத ஜியோனிஸ்டு பாசிஸ்டுகள், பாகிஸ்தானிய அடக்குமுறை இனவெறி அரசு ஆகியன அம்பலப்படுத்தப்பட்டதைப் போல சிங்கள பவுத்த பேரினவாத பாசிசம் அம்பலப்படவில்லை. இதை செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு. குறிப்பாக இப்பாசிசத்தை பாதுகாக்கும் இந்திய பார்ப்பனியத்தை எதிர்க்கும் நமக்கு முக்கிய கடமை. இப்பணியை செய்து முடித்தால் மட்டுமே வங்கதேச மக்களைப் போல சுயமரியாதையுடன் தமிழர்கள் வாழ முடியும், என்பது மட்டுமல்ல சிங்களப் பாட்டாளிகள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் பிடி தளர்ந்து போகும். தமிழ்ப் பாட்டாளிகள் தமக்கான அரசியலை உருவாக்கிக்கொள்ளும் உரிமையும், சுதந்திரமும் கிடைக்கும். அதுவரை சிங்களப் பேரினவாத அரசிற்குள்ளாக இரண்டாம் தர குடிமக்களாக வாழும் தமிழரிடத்தில் இருக்கும் பிற்போக்கு சாதிய-மதவாத-பெண்ணடிமை அரசியலை வீழ்த்தும் வாய்ப்புகள் கிட்டாது. ஏனெனில் இந்த முரண்களை, பிற்போக்கு பிளவுகளை பாதுகாத்தால் மட்டுமே சிங்களப் பேரினவாதம் தமிழர்களை பிரித்தாள இயலும். வடக்கு-கிழக்கு-மலையகம்-இசுலாமியர்-சாதி என பிரித்து இவர்களுக்கான தனித்தனி அரசியல், தனித்தனி உரிமைப் போராட்டத்தை கட்டமைத்து தமிழர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் சிங்கள அரசியலுக்கு உதவி புரியும் தமிழ்நாட்டு-இந்திய பார்ப்பனிய ஆற்றல்களை அடையாளப்படுத்தும் வரலாற்று கடமை நமக்குண்டு. சிங்களப் பேரினவாதத்தை விரிவாக விவாதிப்போம், உலகளவில் அம்பலப்படுத்துவோம். இந்தப் புரிதலோடு இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க உறுதியேற்போம்.