போற்றவேண்டிய உயிரீகத்தை தூற்றுபவர் தமிழின துரோகிகளே!

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக கட்டாய இந்தியை திணிக்கும் செயலை கண்டித்து, மொழிப்போர் ஈகியர் தாலமுத்து அவர்களின் நினைவுநாளான கடந்த மார்ச் 11 அன்று சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தியில் எழுதப்பட்ட பெயர்களை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கம் முன்னெடுத்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் மூத்த தோழர் சிவா திலீபன் என்கிற தோழர் சிவக்குமார் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தொடர்வண்டியின் குறுக்கே “தமிழ் வாழ்க, இந்தி வீழ்க” என்று முழக்கமிட்டபடி பாய்ந்தார்.

தொடர்வண்டியில் அடிபட்டு படுகாயமடைந்த தோழர் சிவாதிலீபனை பொதுமக்களும், இயக்கத் தோழர்களும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையான இராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தோம். தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்த தோழர் சிவா திலீபன் கடந்த மார்ச் 18, 2026 அன்று இரவு ஈகியரானர். அவரது ஈக உடல் வில்லிவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்கு நூற்றுக்கணக்கான தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் ஊர்வலமாக உடன் வர எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ம.தி.மு.க நிறுவன தலைவர் ஐயா வைகோ உள்ளிட்ட தலைவர்களின் வீரவணக்க உரைக்குப் பின் மே 17 இயக்கப் பெண் தோழர்கள் ஈக உடலை சுமந்து செல்ல, மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபனின் உயிரீகம் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்தின் ஆபத்தை மீண்டும் தமிழர்களுக்கு நினைவூட்டியுள்ளது. அதேநேரம் உயிரை கொடுத்தேனும் இந்தித் திணிப்பை தடுக்கும் உணர்வேந்தல்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற அச்சத்தையும் தமிழின துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் உணர்த்தியுள்ளது. இந்த அச்சத்தை மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபனின் ஈகத்தை மடைமாற்றியும், கொச்சைப்படுத்தியும் அவர்கள் பேசி வருவதன் மூலம் முகத்திரை கிழிந்து அம்பலப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபனின் ஈகத்தை ‘தவறான முடிவு’, ‘தற்கொலை’, ‘உணர்ச்சிவசப்பட்ட முடிவு’ என்றெல்லாம் பதிவிடுவதன் மூலம் ஒரு தமிழ்த்தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமின்றி, மொழிப்போர் ஈகி சிவா திலீபனுக்கு முன்னரே தம்முயிரை கொடுத்து தமிழுக்கும், தமிழினத்திற்கும் தொண்டாற்றியவர்களை  அவமதிக்கும் செயலுமே ஆகும்.

தமிழ்ச் சமூகத்தில் ஈகத்திற்கு என்றும் பேரிடம் உண்டு. வரலாறு நெடுதலிலும் உயிரீக பதிவுகள் விரிந்து கிடக்கின்றன. வடக்கிலிருந்து உயிர் நீத்த கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் முதல் தமிழீழத்தில் சிங்கள இனவெறியை சிதறடித்த கரும்புலிகள் உள்ளிட்ட ஈகப்பெருவாழ்வுகள் அனைத்தும் போற்றத்தக்கதே.

வீரத்தாய் வேலுநாச்சியார் வரலாறை பேசும் எவரும் அவரது தளபதி குயிலியை பேசாமல் கடக்க முடியாது. ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கை அழிக்க மேனியில் எண்ணையை ஊற்றிக்கொண்டு தன்னைத் தானே எரித்துக் கொண்டு வெடிமருந்துக் கிடங்கை தகர்த்த மாவீரர் அவர். அது தற்கொலை அல்ல, உயிர்க்கொடை.

தமிழீழத்தில் புலிகளின் முதல் பெண் கடற்கரும்புலி மாவீரர் அங்கயற்கண்ணி கடலில் 45 அடி ஆழப்பகுதியில் நின்று கொண்டிருந்த 6300 டன் எடைகொண்ட இலங்கையின் கட்டளைக் கப்பலை தகற்கும் அளவுக்கு வெடி மருந்தையும் சுமந்தப்படி நீந்திச் சென்று சிதறடித்த மாவீரர் அவர். அது தற்கொலை அல்ல, உயிர்க்கொடை.

எனவேதான் “எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிரமூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.” என்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 1990 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் கூறினார்.

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறே தமிழர்களின் உயிரீக வரலாறேதான். நடராசன், தாலமுத்து, கீழப்பழுர் சின்னசாமி, ஈகியர் இராசேந்திரன், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், புதுக்கோட்டை முத்து, கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், மாணவர் இராசேந்திரன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் 1932 முதல் 1967 வரையிலான நீண்ட நெடிய இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போரில் ஈகியர் ஆனவர்கள். கடந்த 2022 ம் ஆண்டு தாழையூரை சேர்ந்த ஐயா தங்கவேல் தீக்குளித்து ஈகியானர். அதுபோலவே தற்போது மே 17 இயக்கத்தின் தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகியாக தன்னை தந்துள்ளார்.

அவரது ஈகம் தமிழர்களுக்கு இன உணர்வை ஏற்ப்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு காவிக்கும்பல் வஞ்சக திட்டமாக சமூக வலைதளத்தில் மொழிப்போர் ஈகி சிவா திலீபன் ஈகத்தை கண்டு பரிவு கொள்வது போலவே, தனது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறது. குறிப்பாக தோழர் சிவாதிலீபனின் ஈகத்தை மட்டுப்படுத்தும் தன்மையில் “ஒரு உயிரை இழந்து விட்டோமே, இதற்காகத்தான் போராட்டம் எல்லாம் வேண்டாம் என்று சொன்னோம்” என்ற தொனியிலும், “உயிரின் மதிப்பு தெரியுமா? போன உயிர் வருமா?” என்று தொனியிலும் பேசுகின்றனர்.  இதன் மூலம் சராசரி மக்களிடம் ‘தமிழுக்காக உயிர் நீத்த போராளி’ என்ற எண்ணத்தை மாதிரி ‘அடடா, யாரோ ஒருவர் இறந்து விட்டாராம்” என்பதான என்ன ஓட்டத்தை உருவாக்க முயல்கின்றனர்.

2009 ம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கக் கோரி உயிரீகம் செய்த மாவீரர் முத்துக்குமார், ஈகியர் முருகதாசன், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், வண்ணாரப்பேட்டை அமரேசன், கடலூர் ஜோதி (எ) தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம், அய்யம்பட்டி கோகுலகிருஷ்ணன், வள்ளிப்பட்டு சீனிவாசன், ஓட்டேரி சதாசிவம் சிறீதர், அன்னவள்ளி நாகலிங்கம் ஆனந்த், காட்டுநாகலேரி இராசசேகர், புதுக்கோட்டை கொத்தமங்களம் பாலசுந்தரம், சிவகாசி காமராஜர்புரம் மாரிமுத்து, கரூர் சிவானந்தன், பண்ருட்டி சுப்பிரமணி, சீகம்பட்டி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தமிழர்கள் ‘யாரோ ஒருவரல்லர்’. இவர்கள் தமிழினத்தின் தடை நீக்கிகள்.  போராடாமல் சோர்ந்திருந்த தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியவர்கள்.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரானா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் உள்ளிருப்பு உத்தரவுகள் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டன. அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் முடங்கி கிடந்தபோது தூய்மைப் பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் மட்டும் களப்பணியாற்றினார்கள். அந்த நேரத்தில்  கொரானாவில் மக்களை காப்பாற்ற போராடி கொரானா தொற்று வந்து இறந்து போனவர்கள் உண்டு. இவர்கள் யாரும் ‘யாரோ ஒருவரல்லர்’. மக்கள் தொண்டாற்றிய ஈகியர்களே ஆவார். இன்று  மொழிப்போர் ஈகி சிவா திலீபனின் ஈகத்தை பேச மறுத்து “ஒரு உயிர் அல்லவா!” என்று ‘போலி ஜீவகாருண்யம்’ பேசும் எவரும் கொரானா பெருந்தொற்று காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய தமிழர்களை பார்த்து “உங்கள் உயிரை பணயம் வைக்காதீராகள், எங்கள் குப்பைகளை நாங்களே சுத்தம் செய்து கொள்கிறோம்” என்று சொல்லவில்லை. அவர்களது தொண்டு அப்பொழுது இந்தப் போலிகளுக்கு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தேவைப்பட்டது. அதே முன்களப்பணியாளர்ளான செவிலியர்களும், தூய்மைப் பணியாளர்களும் தங்கள் வாழ்வாதாரதை காப்பாற்ற வேலை நிரந்தரம் வேண்டிப் போராடியபோது இந்தப் போலிகளில் ஒருவர்கூட போராட்டக்களத்திற்கு வரவில்லை. வந்தது யார்?  இன்று மொழிப்போர் ஈகியாகி இருக்கும் தோழர் சிவா திலீபனின் குடும்பம்தான்.

ஒரு சமூகத்தின் அவலத்தை உலகுக்கு அம்பலப்படுத்த நினைக்கும் எவரும் தன் உயிருக்கு அஞ்சிய வரலாறு இல்லை. பாலஸ்தீன போரில் உண்மையை உலகுக்கு அறிவிக்க சென்று போரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதற்கு சாட்சியம்.

பொது நோக்குக்காக தாமே முன் வந்து உயிரீகம் செய்யும் தமிழர்கள் பற்றி தமிழ்ச் சமூகத்தில் நடுகல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும். ஊருக்காக தன் உயிரை தந்தவர்களுக்கு நடுகல் வைக்கப்பதுவதும், அந்த நடுகல் மரபே பிற்பாடு எல்லைச்சாமியாக, குலச்சாமியாக மாறியதும் தமிழர்களின் நாட்டார் வாழக்காற்றியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும். அவர்கள் பலர் ஊருக்காக போரில் வீரமரணம் அடைந்தவர்கள், காட்டு விலங்குகளை கொல்ல போராடி மாண்டவர்கள், ஆற்றில் மாட்டியவர்களை காப்பாற்ற போய் இறந்து போனவர்கள். தன் குடும்பம், தன் உயிர் என்று பாராமல் அத்தமிழர்கள் செய்த வீரச்செயல்களின் தொடர்ச்சியே மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களின் உயிரீகமும்.

ஒரு போர்வீரனின் மனவலியையும், இன உணர்வையும் ஏட்டுச்சுரைக்காய்களால் புரிந்து கொள்ள இயலாது. அது இனமான உணர்ச்சியும், எத்தகைய ஈகம் புரிந்தேனும் விடுதலை பெறவேண்டும் என்ற போர்க் குணமும் கொண்ட உரமிக்க உள்ளங்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்கள் அத்தகைய இன உணர்வும், விடுதலை வேட்கையும் கொண்ட தமிழ்த்தேசியப் போராளி என்பதை தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துள்ளது.

இறுதியாக மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்கள் போன்ற ஈகியர் யார் என்பதை தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வரிகளால் புரிந்து கொள்ள முடியும்.

“உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »