தமிழினம் கொண்டாட வேண்டிய முப்பெரும் விழா

தமிழன் உலகம் முழுவதும் போர் புரிந்து வெற்றிவாகை சூடினான் என்ற வரலாற்றை நினைத்து இன்றும் பெருமை பேசி வருகிறோம். இதெல்லாம் எப்படி சாத்தியம் என நாம் நினைக்கும் இக்காலத்தில், நம் கண்முன்னே நாம் வாழும் இந்த சமகாலத்தில் புறநானூற்றுத் தமிழனின் வீரத்தை நம் கண் முன்பாக நமக்கு காட்டியவர்கள் ஈழத் தமிழர்கள். அந்த மாபெரும் தமிழ்க் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவீரன் தான் நம் புறநானூற்று வீரன் பிரபாகரன்!

பிரபாகரனை வெறும் ஆயுதப் போராளியாக மட்டுமே சித்தரித்த உலக வல்லரசுகளும் இந்திய பார்ப்பனியமும், அவர் தலைமையிலான தன்னாட்சி தமிழீழ அரசு (De Facto State) குறித்தும், அதன் மக்கள்நல செயல்பாடுகள் குறித்தும், அதனை அவர் செழுமைப்படுத்திய ஆற்றல் குறித்தும் நாம் அறியா வண்ணம் செய்தது. ஆனால் அதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றைய இந்துத்துவ பாசிச பாஜகவின் அரசியலில் மிகவும் அவசியம்.

புலிகள் முப்படைகள் மட்டுமல்லாது, தமிழீழ காவல்துறை, குற்றத்தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வு பிரிவு போன்றவற்றையும் திறம்பட நடத்தி வந்தனர். அங்கு தமிழீழ வைப்பகம், சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது.

அதோடு, அங்கு ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்காக ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘செஞ்சோலை இல்லம்’, உடல் நலிவுற்றோருக்கு ‘வெற்றிமனை காப்பகம்’ முதியவர்களுக்காக ‘அன்பு முதியோர் பேணலகம்’, மனநோயாளிகளுக்காக ‘சந்தோசம் உளவள மையம்’, பார்வை இழந்த போராளிகளுக்காக ‘நவம் அறிவுக்கூடம்’ மற்றும தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்தி கழகம் என பல ஆதரவு இல்லங்களையும் நடத்தி வந்தவர் தான் தாயுள்ளம் படைத்த தலைவர் பிரபாகரன்.

மேலும் தந்தை பெரியாரின் தீவிர பற்றாளரான பிரபாகரன் சாதி ஒழிப்பிற்கு முன்னுரிமை அளித்தார். வரதட்சணையை தடைசெய்தார். மத சமத்துவத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழீழ காவல்துறை மூலம் அங்கு சட்ட ஒழுங்கை அமல்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக சென்று, பெண்களின் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் உன்னத தலைவர் பிரபாகரன். பெண்களை வெறு‌ம் போக பொருளாக மட்டுமே பார்த்த நாடுகளிடையே, பெண்களும் வீரம் நிறைந்த பலசாலிகளே என உலகிற்கே எடுத்துரைக்கும் விதமாக அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளாக உருவாக்கினார். அவர்களையும் ஆண்களுக்கு இணையாக படையணிகளுக்கு தலைவராக்கி அவர்களின் அறிவாற்றலை உலகறிய செய்தார்.

சிங்கள ராணுவம், ஆயுதமேந்திப் போராடிய தமிழர்களையும், அப்பாவி மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்ற போதும், சிங்கள மக்களை கொல்லுங்கள் என்ற உத்தரவு பிரபாகரனிடம் இருந்து ஒருபோதும் வந்தது கிடையாது.

”சிங்கள ராணுவம் தமிழர்களைக் கண்மூடித்தனமாக அழிப்பது போல நாங்கள் சிங்கள மக்களை அழிக்க முடிவெடுத்தால், தினம் ஆயிரம்பேரைக் கொல்லமுடியும். எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து நடத்தப் பட்டதல்ல” என்றும், ”நாங்கள் எதிர்த்து நிற்பது எங்கள் மண்ணில் அதிகாரம் செலுத்தும் சிங்கள ராணுவத்தையே தவிர, அப்பாவி சிங்கள மக்களை அல்ல” என்றும் அறிவித்தவர் தலைவர் பிரபாகரன்.

தமிழீழம் கைகூடிவிட்டால் அது எத்தகைய நாடாக அமையுமென கேட்டதற்கு, ”தமிழீழம், ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். இதில், மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் உண்டு. எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும்.” என்றார்.

மேலும், “இந்த சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். இந்தியாவோடு நட்புறவு கொண்டு, அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்” என்று சொன்ன ஒரு மகத்தான மாமனிதன் தான் தலைவர் பிரபாகரன்.

தமிழின வரலாற்றில் இடம்பிடித்த இப்படியான ஒரு தலைவரை தமிழினம் காலந்தோறும் கொண்டாட வேண்டும். அந்த வகையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை (நவம்பர் 26) முன்னிட்டு, தமிழ்த்தேசியக் கூட்டணி தலைவர் பிரபாகரனது பிறந்த நாள் விழாவினை முன்னெடுக்கிறது.

அதேபோல், தமிழினத்திற்கு கிடைத்த மற்றொரு மகத்தான தலைவர் தந்தை பெரியார்.  ஆதிக்கமும், அதிகாரமும் எந்த வழியில் சுரண்ட வந்தாலும் அந்த இடத்தில் இன உணர்வை உந்தித் தள்ளும் எதிர்ப்புணர்வு உருவாக பிடிமானமாய் தமிழர்களுக்கு கிடைத்தவர் தான் நம் பெரியார். தமிழர்களின் சமூக அரசியல், பொருளாதாரம், பண்பாடு மீது பல வகைகளிலும் படையெடுப்பு நடத்திய வடவர் கூட்டத்தையும், இந்தியப் பார்ப்பனியத்தையும் நோக்கிய அவரின் சீற்றங்களும், வடவர் ஆதிக்கத்திற்கு எதிரான சாடல்களும் தமிழர்களை ஒவ்வொரு முறையும் கிளர்ந்தெழச் செய்தன.

வசதியான வாழ்வினைத் துறந்து பெரியாரின் பாதங்கள் பதியாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக அயராது மக்கள் மன்றத்தில் களம் கண்டவர் பெரியார். அரசியல் அரங்கத்தில்  சமூகநீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனீயம் மேற்கொண்ட சூழ்ச்சிகளை சமரசமின்றி எதிர்த்து நின்றவர் பெரியார். தமிழினம் சரிவை சந்தித்த வழிகளெங்கும் சென்று அதற்குக் காரணமான பார்ப்பனீயத்தைக் கண்டறிந்த பெரியார் அந்த வழிகளைச் செப்பனிட்டு தமிழினத்தை தலை நிமிரச் செய்ய தனது கொள்கைக் கரங்களில் விடாமல் ஏந்திக் கொண்ட கருவி தான் சமூகநீதி.

இந்தியாவின் சட்டத்தில் சாதியை பாதுகாக்கும் பிரிவு இணைக்கப்பட்டிருந்தது. இதை நீக்கவேண்டுமென பெரியார் முழக்கம் எழுப்பினார். இப்பிரிவுகளை அண்ணல் அம்பேத்காரின் விருப்பத்தையும் மீறி உயர்சாதி கூட்டம் இணைத்திருந்தது. ஆகவே இப்பிரிவுகளை நீக்கும் போராட்டத்தை தொடங்கினார் பெரியார். இந்த சட்டத்தில், பார்ப்பனர் உயர்வையும் பார்ப்பனரல்லாத மக்கள் இழிவுவையும் கொண்ட இந்து மதத்தை காப்பது, மத உரிமை என்ற வகையில் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டனர் என்றும், அதனை திருத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.

இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை, அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கும் இல்லை.” என்பதனால், சாதியை பாதுகாக்கும் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது பெரியாருக்கு வயதோ 79! ஆகும். 1957-ம் நவம்பர் 26 -ம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 4000க்கும் மேற்பட்டோர் கைதாகினர். 

பெரியார் தன் வாழ்நாளில் நடத்திய போராட்டங்களிலேயே மிகக் கடுமையானதும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள் தங்கள் குடும்பத்தைத் துறந்து ஆறு மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சிறைபட்டு சித்திரவதைப்பட்டதும், சிறையிலேயே சிலர் தங்கள் இன்னுயிரை இழந்ததும், விடுதலையான சில நாட்களிலேயே பல தோழர்கள் நோய்வாய்ப்பட்டு மாண்டதுமான மிகப் பெரிய இழப்புக்கு ஆளான ஒரு போராட்டம் தான் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். பெரியாரின் இந்த சட்ட எரிப்பு நாளான நவம்பர் 26 தமிழர்கள் வாழ்நாள் முழுதும் நினைவுகூர வேண்டிய ஒரு நாளாகும்.

அதே அரசமைப்புச் சட்டத்தில், சனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய பிரிவுகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான புகுத்தியவர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் போன்ற பல நற்குணங்களை கொண்டுள்ளது என்றால் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் தலையீடே காரணம். அதுமட்டுமல்லாமல், கொத்தடிமை தடுப்பு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு, பட்டியல் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல் போன்ற சட்டங்களால் குரலற்றவர்களின் குரலாகவே அம்பேத்கர் இருந்தார்.

சட்ட வரைவு குழுவில் அம்பேத்கருக்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட, இன்றும் சனாதன தர்மமான மநு தர்மத்தை பின்பற்ற விருப்பமுடைய 4 பேர் பார்ப்பனர்கள் இருந்தனர். இவர்களை மீறி தான் அம்பேத்கர் சில சீர்திருத்தங்களை புகுத்த முடிந்தது. அம்பேத்கர் இந்து பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து வழங்கும் உரிமை, தத்தெடுக்கும் உரிமை என இந்து கோட் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதற்கு ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மோசமாக இருந்தது. எந்தளவு என்றால் பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தால் இந்துச் சமூகம் உடைந்து சிதறி விடும் என்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சொல்லப்படும் வல்லபாய் படேல் அவர்களும் புதிய பிரதமரான நேரு அவர்களும் கூறும் அளவுக்கு இருந்தது.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அடுத்ததாக காஷ்மீரிகளுக்கு இந்தியா முழு உரிமை குடுக்க வேண்டும் எனவும் வாதிட்டார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த பார்ப்பன காங்கிரஸ் அரசு இவை அனைத்தையும் முற்றிலுமாக எதிர்த்தது. அதிருப்தி கொண்ட அம்பேத்கர், “இங்கு சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது, பாலின ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் சமப்படுத்துவதற்கு சட்டம் இயற்றாமல் மற்றவற்றிற்கு சட்டம் இயற்றினால், அது சாணிக் குவியல்களின் மீது கோட்டை கட்டுவதாகும்” என்று கூறி சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காக்கப்படுவதற்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வார்த்தைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றிருப்பதற்கும் ஒரே காரணம் அண்ணல் அம்பேத்கர். அதனால் தான் சனாதனவாதிகள் வெளியில் அம்பேத்கரை கொண்டாடுவது போல் ஏமாற்றிக்கொண்டும் உள்ளே அவர் எழுதிய இந்த சமத்துவ சட்டப் பிரிவுகளை மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். இந்த பாசிச பாஜக கூட்டத்தால் தான் இன்று நீட், புதிய கல்விக் கொள்கை திட்டம் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நசுக்கப்படுகிறது.

பாசிச கூட்டத்திடமிருந்து நம் நாம் பாதுகாத்துக்கொள்ள அரசமைப்பு சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் புகுத்திய சனநாயக உரிமைகளை பாதுகாப்பு அரணாக கைக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம். அரசமைப்பு சட்டத்தையே மாற்றிவிட துடிக்கும் இந்துத்துவ பாசிச கும்பலிடமிருந்து சனநாயகத்தையும் அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாத்திட முனைவோம். அதற்கு, அரசமைப்பு நாளாக கடைபிடிக்கப்படும் நவம்பர் 26 ம் தேதியை ஜனநாயகத்தை பாதுகாத்திடும் நாளாக முன்னெடுப்போம். 1949-ம் ஆண்டு, அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கர் அவர்களால் வழங்கப்பட்ட அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நம்பர் 26 சனநாயகத்தை விரும்பும் அனைவராலும் நினைவுகூர வேண்டிய நாளாகும்.

இப்படியாக, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை தந்தை பெரியார் எரித்த நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மக்களுக்கு பல உரிமைகளை உறுதிசெய்த அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நவம்பர் 26 தமிழர்களுக்கு மிக முக்கிய நாளாகும். இதனை மையப்படுத்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தலைவர் பிரபாகரன் ஆகியோரைக் கொண்டாடும் ‘முப்பெரும் விழா’ தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது.

வரும் நவம்பர் 24 ஞாயிறு மாலை 5 மணியளவில், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவிற்கு அனைத்து  தோழமைகளையும், ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »