ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை

தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை ஆகஸ்ட் 8, 2025 அன்று வெளியிட்டுள்ளது. பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை ஏற்க மாட்டோமென மறுத்து தமிழ்நாடு அரசு தனித்துவமாக உருவாக்கப் போவதாக

2022-ல் அறிவித்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில், வழமையான கல்வி நடைமுறையே பின்பற்றப்பட்டிருப்பதாகவும், சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லை எனவும், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையின் சாரமே இருப்பதாகவும் கல்வியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான திரு. முருகேசன் தலைமையில், 2022ம் ஆண்டு 14 பேர் கொண்ட குழுவை மாநில கல்விக் கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு நியமித்தது. இக்குழு கல்விப்புலம் சார்ந்தவர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகக் கூறி, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1 அன்று தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இதனையே தமிழ்நாட்டின் முதல்வர் இப்போது வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைக்கும், பாஜகவின் புதிய கல்விக் கொள்கைக்கும் இடையே ஒற்றுமையே அதிகம் இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடப்பட்டது.

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, இரு மொழிக் கொள்கை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மதிப்பீட்டுப் பயற்சி, ஆசிரியர் திறன் மேம்பாடு போன்றவையே இருக்கின்றன. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு என்கிற நிலை மட்டும் மாறி நீக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் வகையில்,

தமிழ்நாடு அமைத்த கல்விக் குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைவேந்தர் திரு. ஜவகர் நேசன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் தமிழ்நாடு அரசு வகுத்து வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையில் சமூக மாற்றம் குறித்த கொள்கைகள், அதை செயல்படுத்தும் நடைமுறைகள் போன்ற பல தனித்துவத் தன்மைகள் இல்லாதிருப்பதைக் குறிப்பிட்டு அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள்:

  1. கல்வி என்பது பொதுக் கொள்கையாகும். கல்வி குறித்தான வரையறைகள் பொதுமக்களின் முன் வைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் பொதுக் கொள்கைக்கான நியதி. ஆனால் இந்தக் கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையின்றி வைக்கப்பட்டிருக்கிறது.
  2. இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள், சவால்கள், சூழல்கள், மாற்றங்கள் குறித்தான தீர்வுகள் அதில் காணப்படவில்லை. 
  3. அனுபவத்தன்மை கொண்ட கல்வி, பன்முகத்தன்மை பயிற்சி, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், உயர் சிந்தனை, கலை நுட்பம் போன்றவை எல்லாம் இந்த கல்விக் கொள்கையை கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அதைப்போல தொலைநோக்கு அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவ கல்வி, எதிர்காலத்திற்கான மாணவர்களை தயார் படுத்தும் கல்வி போன்றவை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இவைகளை எல்லாம் அடையக்கூடிய கல்வித் தீர்வுகளும், முறைமைகளும், தொழில்நுட்ப பரிந்துரைகளும் இல்லாமல் வெற்று முழக்கங்களாக வைக்கப்பட்டுள்ளது.
  4. கலைத்திட்டத்தின் பன்மிய பயிற்சிக்கு ஒரு அமைப்பு அமைக்கப்பட்டு அது பேசி முடிவு செய்யும் என்கிறார்கள். ஆனால் அதற்கான தீர்வு என்ன என்பது இல்லை. அதுபோல 21ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் திறன்களை நோக்கி மாணவர்களை தயார் படுத்துவதாக கூறுகிறார்கள். இல்லம் தேடிக் கல்வி, கல்வி டி.வி, மணற்கேணி, தமிழ்நாடு திறன் ஊக்குவிப்பு நிகழ்வு (Tamilnadu Smart Program), எமிஸ் (Education Management information System-EMIS) என இவைகளைக் கொண்டு டிஜிட்டல் திறன்களை வளரக்கப் போவதாக கூறுகிறார்கள். இது தத்துவார்த்தமான தீர்வு அல்ல. கல்விக்கென்று வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும். அதற்குள் இதனையெல்லாம் செய்வோம் என்று கூறலாம். ஆனால் வெறும் செயலிகளை வைத்துக்கொண்டு உயர்தர திறன் சிந்தனையை கொண்டு வர முடியாது என்பது அனைவரும் அறிந்தது.
  5. அறிவியல், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என இதற்கெல்லாம் வானவில் மன்றம் தீர்வாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களை தயார்படுத்துவதற்கான  தத்துவார்த்தமான பயிற்சி முறைகள் இல்லை. பயிற்சிப் பார்வை செயலி, எமிஸ் போன்றவை மூலமாக செய்யப்படும் என்கிறார்கள் ஆனால் இத்திட்டம் மூலமான கல்வித் தீர்வு பற்றி இதில் எதுவும் இல்லை.
  6. அனைத்தையும் உள்ளடக்கிய பள்ளி என்று கூட்டுறவு மனப்பான்மை, ஒற்றுமை வட்டம்,வகை மன்றம் கலைத் திருவிழா, மகிழ் முற்றம் அமைக்கப்படும் என்கிறார்கள். ஆனால் மாணவர்களிடையே சமத்துவம் உருவாக்குவதற்கான இதையெல்லாம் குறித்த தத்துவார்த்தமான புரிதலும், தீர்வும் இதில் இல்லை.
  7. எண்ணும் எழுத்தும் செயல்திட்டம் என்பது ஆசிரியர் மாணவர் இடையே உள்ளார்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய பயிற்சி முறையாக இல்லை. செயலி (App) மூலமாக பள்ளிக்கல்வித் துறையே கேள்விகளையும் கொடுத்து, ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டிய வழியையும் கொடுத்து, அதன் மூலமாக தேர்வும் நடத்தப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு தினமும் சமர்ப்பிக்க வேண்டும். இப்படியான செயலி நடைமுறைகள் மாணவர்களின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு உதவாது.
  8. மாதிரிப் பள்ளிகள், வெற்றிப் பள்ளிகள் அமைப்போம் என்று கூறுகிறார்கள். இவை எல்லாம் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு இணையானது. மேல் தட்டு, கீழ்தட்டு என ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் இவை சமத்துவம் நோக்கும் பள்ளிகளுக்கு எதிரானது.
  9. பள்ளிக்கான நிதி ஆதாரம் போதாமை கொண்டதாக உள்ளது. புதுப் பள்ளிகளோ புது பொறியியல் கல்லூரிகளோ ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளும், தனியார் பொறுயியல் கல்லூரிகளும் நிறைய உருவாகின்றன. இந்த தனியார் மயமாக்கலைத் தடுப்பதற்கு இந்த கல்விக் கொள்கையில் ஒரு இடத்தில் கூட தீர்வு இல்லை.

இவ்வாறு ஏற்கனவே இருந்த கல்விக் கொள்கையில் சில இடைச் செருகல்களை மட்டும் வைத்திருக்கிறார்களே தவிர, இதில் தனித்தன்மைக்கான கல்விக் கொள்கை எங்கும் இல்லை எனக் கூறுகிறார் ஜவகர் நேசன். மேலும் அவர் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இருந்த போது 258 பக்கங்களில் கல்விப் பரிமாணங்களில் உள்ள தனித் தன்மைக்கான அம்சங்களை ஆய்வுப் பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாக குறிப்பிடுகிறார். தனித்தன்மைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கூறும் சில வரையறைகள் :

  1. கல்வி சமூக ஏற்றத்தாழ்வுகளை, பாலின ஏற்றத்தாழ்வுகளை செய்து வருகிறது. பள்ளிகளில் சக மாணவனை தாக்கும் அளவுக்கான சாதிய உணர்வு, கல்வி கற்று வெளி வரும் இளைஞனுக்கும் ஏற்படும் ஆணவக் கொலை செய்யும் உணர்வு போன்ற ஊனங்களுக்கு 75 ஆண்டு காலமாக கல்விக் கொள்கையில் சரி செய்யும் நடைமுறை இல்லை. இதற்கான தீர்வு கல்விக் கொள்கையில் வேண்டும்.
  2. இந்திய இளைஞர்கள் எதிர்காலத்தில் படித்திருந்தாலும் குலத்தொழிலையே பின்பற்றும் சூழல் வரும் என உலக வங்கி அறிக்கையும், ஜெர்மனியின் ஆய்வறிக்கை ஒன்றும் கூறுகின்றன. இங்குள்ள தொழிற் கட்டமைப்பு,  தனியார் நிறுவனக் கட்டமைப்புகள் இதை நோக்கிய கல்விமுறைக்கு தான் அழைத்துச் செல்கிறது என சொல்கின்றன. இதை அகற்றுவதற்கான கல்வி முறை தமிழ்நாட்டிற்கு வேண்டும்.
  3. சமூகக் கட்டமைப்புக்கும், அறிவுக்கான கற்றலுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. புத்தர் காலத்தில் இருந்து இன்று வரை அனைத்து நிபுணர்களும், தத்துவ அறிஞர்களும் கூறியது என்னவென்றால், கல்வியின் வழியாகப் பெறும் அறிதல், அறிவு ஈட்டுதல், அறிவை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் சமூக நற்பண்புகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சமத்துவம் சகிப்புத்தன்மை, கூட்டு வாழ்வியல் முறை, ஏற்றத்தாழ்வற்ற நிலை போன்றவற்றின் மூலமாக தான் மாணவர்கள் அறிவை கற்றலில் ஈட்டி, அந்த அறிவை வெளிப்படுத்த முடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாக இருக்கிறது. இவையெல்லாம் இந்த கல்விக் கொள்கையில் இருக்கிறதா?
  4. SC/ST மாணவர்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பள்ளிகளில் அடையும் தாழ்வு மனப்பான்மை உணர்வை அடைவதால், கல்வியை சரியாக உள்வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிறுபான்மை இன மாணவர்களும் இந்த நிலையை அனுபவிக்கிறார்கள். ஒரு மாணவன் சமூக ஊனத்துடன் பொருளாதார ஊனத்துடன் வருகிறான் என்றால் அவனுக்கு உரிய செயல் திட்டங்களை கொண்டு கல்வியை அளிக்க வேண்டும். அதற்கான தீர்வுகள், நடைமுறைகள் இந்தக் கல்விக் கொள்கையில் இருக்கிறதா?
  5. ஒரு ஆசிரியர் அவர் சார்ந்த சாதிய உணர்வுடன் தான் பள்ளிக்கு வருகிறார் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியான சாதிய உணர்வுடன் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை அளிப்பதில்லை எனவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களின் சாதிய மனோபாவம் தீர்க்கும் வழி வகைகள் செய்ய வேண்டும். மாணவர்களின் அறிவை தூண்டக்கூடிய ஒரு விடுதலையாளராக இருந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். பிரதிபலிப்பு (Reflection) போன்ற பயிற்சி முறைகள் அயல்நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. அதைப் போன்ற செயல்திட்டங்கள் இங்கே இருக்கிறதா?
  6. இங்கு தனியார் பள்ளிகளை நோக்கியே பல மாணவர்கள் செல்லும் சூழல் இருக்கிறது. அரசு பள்ளிகள் பல காலியாகின்றன. கல்வி பொதுநலம் (common hood) சார்ந்ததாக இருக்க வேண்டும் எனும் போது அவர்களை அரசுப் பள்ளியை நோக்கித் திருப்புவதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும். தனியார் மயமான பள்ளிகளால் பொதுநலம் ஏற்படாது. அதற்கு தனியார் மயம், வணிக மயத்தை ஒழிக்க வேண்டும். அதற்கான தீர்வாக ஒரு கருத்தாவது இந்தக் கல்விக் கொள்கையில் இருக்கிறதா?
  7. பாடத்திட்டங்கள், கற்றல் பொருள்கள் போன்றவை தமிழ்நாட்டிற்கான தனித்துவமான நிலவளம், நீர் வளம், சுற்றுப்புற சூழல், இயற்கை வளம், கனிம வளம். தாவரங்கள், விலங்குகள் குறித்தான அறிவுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தனித்துவமான கல்வி என்றால் இவை இருக்க வேண்டும், இருக்கிறதா? 
  8. நம் பண்பாடு, மொழி வளத்தின் விழுமியங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவற்றில் உள்ள நல்லவைகளை எடுத்துக்கொண்டு 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு எடுத்துச் செல்லும் செயல்பாடுகள் வேண்டும். 
  9. 21ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல், குவாண்டம் பொறியியல் போன்ற நவீன அறிவியல் மனித வாழ்வியலை மனித சிந்தனையை மாற்றி வருகிறது. அதை நோக்கிய புதிய அறிவு, புதிய சிந்தனை, திறன் போன்றவை வளர்க்கப்பட்டாலே உலகளாவிய மாணவனாக இருக்க முடியும். அதற்கு ஏதாவது இதில் பரிந்துரைகள் இருக்கிறதா?
  10. சமூக நீதி பேசும் அரசு என்பது, ஒரு மாணவனை மனதளவில் தயார் செய்ய வேண்டுமே ஒழிய, இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்வதனால் மாறுதல் ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்கைகளை வகுக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தும் கல்வியின் உள்ளடக்கம், கற்றல் முறைகள் ஊடான பயிற்சி முறைகள் இருக்க வேண்டும். இந்த கல்விக் கொள்கையில் இவை இருக்கிறதா?

தேசிய கல்விக் கொள்கையில் மையப்படுத்தல் (Centralisation), தனியார் மயம் (Privatisation)  வணிக மயம் (Commercialisation) போன்றவையே மையமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் இந்தக் கல்விக் கொள்கையிலும் அதற்கான சாராம்சமே இருக்கிறது. மாணவனை சிந்திக்க வைக்கும் கல்விக் கொள்கை என்பது வேறு, திறன் சார்ந்த கல்விக் கொள்கை என்பது வேறு எனும் போது, புதிய கல்விக் கொள்கையில் இருந்து இதில் பெருமளவான மாறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை என ஜவகர் நேசன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.  

இன்று தென் மாவட்டங்களில் உள்ள  பள்ளிகளில் சாதியம் வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது. பள்ளிப் பருவத்திலேயே சாதிய மோதல்களில் மாணவர்கள் ஈடுபடும் செய்திகள் அதிகரிக்கின்றன. நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர் சின்னச்சாமியை சக மாணவர்கள் சாதியைக் காரணமாகக் காட்டி வெட்டிய சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சாதிக் கயிறுகளை அணிந்து பள்ளிக்கு வரும் அளவிற்கு சாதியம் மாணவர்களிடையே தூண்டப்படுகிறது. படித்து  பட்டம் பெற்றிருந்தாலும் சாதிய வெறி ஊறிய உள்ளத்தில் இருந்து வெளிவர முடியாதவர்களாக மாற்றப்படுகிறார்கள். பட்டியலின இளைஞனான கவினை இடைநிலை சாதியைச் சேர்ந்த சுர்ஜித் ஆணவப் படுகொலை செய்திருக்கிறான். இதைப் போல சாதிய ஆணவ படுகொலைகள் எண்ணற்றவை.

மாணவர்களிடம் மட்டுமல்ல, ஆசிரியர்களிடமும் சாதிய உணர்வு மேலோங்கும் தன்மையும் இதற்கு ஒரு காரணம். சமூகத்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், வரதட்சணை மரணங்கள் எனப் பலவும் நிகழ்வதற்கு பாலின சமத்துவம் குறித்தான கல்வியின் போதாமையே காரணம். இந்த நிலையில் கல்வியில் வளர்ந்து வரும் விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வியுடன், சமூக வரலாறு குறித்த இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்ற பாடங்களையும் கற்பித்தாலொழிய, உள்ளார்ந்த சிந்தனை முறை மாறாது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிற கல்விக் கொள்கை என்பது தமிழக இளைஞர்களை அந்நிய நிறுவனங்களுக்கு கூலி வேலை செய்யும் ஆட்களை உருவாக்கும் கல்வி முறையாக இருக்கிறதே ஒழிய, தமிழ்நாட்டு இளைஞர்களை சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கவோ அல்லது மாறிவரும் உலகத்தில் தமிழக இளைஞர்கள் தனித்து போட்டி போடக்கூடிய சூழலை உருவாக்கும் கல்வியாக இல்லை. திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் 1 ட்ரில்லியன் பொருளாதாரம் எனும் திட்டத்திற்காக அனைத்து நாடுகளுக்கும் சென்று கார்ப்பரேட் கம்பெனிகளை அழைத்து வருகிறார். அதற்கு கூலி வேலை செய்ய ஆட்களை உருவாக்கும் கல்வியாக கல்வி நிலையங்களை மாற்றுவதற்கான வேலைதான் இந்த கல்விக் கொள்கையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மோடி அரசு மாநிலத்திற்கு கல்விக்காக ஒதுக்கக் கூடிய நிதியை தராமல் இருக்கும் பொழுது, அதனைப் பெறுவதற்காக ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை வேறு பெயரில் மாநில கல்விக் கொள்ளையாக வெளியிட்டு அந்த நிதியை பெறுவதற்கான மறைமுக வேலையாக இது இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

உலகத்தோடு போட்டி போட நவீன தொழில்நுட்பக் கல்வியும், சமூகத்தோடு இணக்கமாய் வாழ உளவியலாக மாற்றம் பெற வைக்கக்கூடிய செயல்திட்டங்களைக் கொண்ட கல்வி முறைமையும், இளைஞர்களை அந்திய நிறுவனங்களுக்கு கூலியாக்காமல் தற்சார்பான பொருளாதாரம் நோக்கிய அறிவை வளர்க்கக்கூடிய கல்வி முறைமையுமே தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »