மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், மூத்த மார்க்சியத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான தோழர் சங்கரய்யா அவர்கள் வயது மூப்பின் காரணமாக தனது 102 அகவையில் இன்று மறைந்தார். தோழரின் மறைவை அறிந்து மே பதினேழு இயக்கம் மிகவும் வருந்துகிறது.
தோழர் சங்கரய்யா மிக இளம் வயதிலேயே சமூகத்திற்காக போராடத் துவங்கியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே ஏகாதிபத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர். இதனால் தனது கல்லூரி இறுதித் தேர்வை எழுத முடியாமல் போனது. ஆங்கிலேயருக்கு எதிரான தனது தீவிரப் போராட்டத்தினால் 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தவர். கட்சி தடை செய்யப்பட்ட போது 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்க மத்திய காங்கிரஸ் முயற்சி மேற்கொண்ட போது, 16 மாத சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையானார். இந்திய-சீன மோதலின்போது ஆறு மாத காலம் சிறைவாசம் சென்றவர்.
தோழர் சங்கரய்யா அவர்கள் 1967-ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்தும் 1977, 80 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றம் சென்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஒன்றிய அரசை எதிர்க்கும் மாற்றுப்பாதை, குடிநீர், பிரச்சனை, ரேசன் வினியோகம், பொருளாதாரக் கொள்கைகள், மாநில சுயாட்சி, விவசாயம், கைத்தறி, கிராமப்புற வறுமை, நில விநியோகம், காடுகள், தொழிற்சாலைகள், திட்டங்கள், நுழைவு வரி, மோட்டார் வாகன வரி என எழுப்பிய பிரச்சனைகள் ஏராளம்.
தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்திட, தீண்டாமை கொடுமையை ஒழித்திட போராட்டம் நடத்தியதுடன், மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற மிக முக்கிய பங்கு தோழர் உண்டு. நிலச்சீர்திருத்தம் செய்வதன் மூலமாக தீண்டாமை முற்றாக ஒழிக்கும் என எடுத்துரைத்ததோடு, அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்ற கோரிக்கையை அமலாக்க வலியுறுத்தினார். தீண்டாமைக் கொடுமை, சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மதவாத, பழமைவாத சக்திகளை எதிர்த்தும், காவல் நிலைய கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு பயிற்சியும், மறு பயிற்சியும் அளிக்க வேண்டும் என்றும் முயற்சிகளை தோழர் சங்கரய்யா அவர்கள் மேற்கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் மீது பற்று கொண்ட அவர், தந்தை பெரியாரின் மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தவர். தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றியவர்.
தோழர் சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்வுப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை அளித்தது. அதன் பரிசுத்தொகையினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்தவர். மதுரை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்த போது இந்துத்துவ பாசிசத்தின் முகவராக செயல்படும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காதது, பாசிசத்திற்கு எதிரான அவரது போராட்டம் எத்தகையது என்பதை காட்டுகிறது.
மிக நீண்ட புரட்சிகர வரலாற்றை கொண்ட தோழர் சங்கரய்யா அவர்களது வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் பாடமாக அமைகிறது. அன்னாரது மறைவு பொதுச் சமூகத்திற்கு, குறிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கு, அதிலும் ஏழை-எளிய-தொழிலாளர் மக்களுக்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
தோழரை இழந்து வாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மே பதினேழு இயக்கம் சார்பாக இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சங்கரய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்!
மே பதினேழு இயக்கம்
9884864010
15/11/2023