(இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரவிருக்கும் கட்டுரையின் முதல் பாகம்.)
தந்தை பெரியார் என்றொருவர் இல்லாவிட்டால் தமிழர்களின் தன்மானம் இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். அவரது ‘சுயமரியாதை இயக்கமும்’, ‘திராவிடர் கழகமும்’ முன்னெடுத்த சாதி ஒழிப்பு வேலைத்திட்டங்களின் வினைப்பயனையே நாம் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்டதொரு மாபெரும் சமூகநீதி போராட்டத்தின் அடுத்த அடையாளம் ‘பெரியாரின் பெருந்தொண்டர்’ ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’ நிறுவுனர் அய்யா திருச்சி வே.ஆனைமுத்து அவர்கள்.
அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாரோடு போராட்டக் களம் கண்டவர். பெரியாரின் சமகாலத்தில் அவரது வீரியமிக்க சொற்பொழிவுகளையும், தீவிர ‘பார்ப்பன – பனியா’ கும்பலின் அரசியல் – சமூக – பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக போர்க்குணத்தையும் கண்டு செழுமை பெற்றவர். பெரியாரின் அதிமுகாமையான கருத்தாக்கமான ‘பார்ப்பனிய இந்திய ஒன்றியம்’ என்ற கருத்தை முழுமையாக ஏற்று அத்தகைய ஒன்றியத்தை எதிர்த்தவர். இந்து மதம் மற்றும் அது சார்ந்த சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கும், பார்ப்பனரல்லாதோருக்கான வகுப்புவாரி விகிதாச்சார இட ஒதுக்கீடு உரிமைக்காகவும் தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தவர். புனிதங்களை உடைப்பதிலும், அதிகார மையங்களைக் கேள்வி கேட்பதிலும், பெரியாரிய – மார்க்சிய பார்வையிலான சமூகநீதி தீர்வுகளை முன்னெடுப்பதிலும் நம் நிகழ்கால திராவிட ஆசானாக விளங்கியவர்.
தமிழக அரசியல் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் பெரும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள். குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பெரும் மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருந்தவர். சிங்கள-பௌத்த பேரினவாத அரசு என்றைக்குமே ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தாது என்று அறுதியிட்டு தனது எழுத்துக்களில் பறைசாற்றியவர்.
பெரியாரின் எழுத்துக்களைத் தொகுக்கும் பெரும்பணி
அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் வாழ்நாளின் பெரும் பணியாக அவர் முன்னெடுத்தது தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நூல் தொகுப்பாகப் பதிவிட வேண்டும் என்று விரும்பியதே. அதைப் பற்றி அவரின் சொற்களிலேயே தெரிந்துகொள்வோம்.
“1970 முதல் தந்தை பெரியார் அவர்கள் சிந்தனையாளர் கழகச் சார்பில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து 500 பக்க அளவில் ஒரு நூல் வெளியிடுவதென்று 17-12-1971 அன்று நடைபெற்ற செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
இதனை ஒட்டி பெரியார் அவர்களின் சொற்பொழிவையும், எழுத்துக்களையும் தொகுக்கும் பணியினைச் சிந்தனையாளர் கழக்கத்தார் அன்புடன் என்பால் ஒப்புவித்தனர். இந்த ஏற்பாடுகள் அனைத்துக்கும் பெரியார் அவர்கள் மனமுவந்து 9-1-1972-இல் முழு ஒப்புதல் அளித்தார்கள்” (நூல்: ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 1’ – பதிப்பாசிரியர் முன்னுரை)
தொகுத்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்கத்தையும் பெரியாரிடம் படித்துக் காண்பித்து சொற்கள், வரிகள் மற்றும் பொருள் மாறாமல் இருப்பதை உறுதி செய்துள்ளனர் அய்யா ஆனைமுத்து அவர்களின் தலைமையிலான கழக குழுவினர். அப்பொழுது பெரியாரின் மன ஓட்டத்தை மிக அழகாக பதிவு செய்துள்ளார் அய்யா ஆனைமுத்து அவர்கள்.
“கையெழுத்துப் படியின் முதல் 2000 பக்கங்கள் தயாரான நிலையில் 06-09-1972-இல் தொடங்கி சமயம் நேர்ந்தபோதெல்லாம் தந்தை பெரியார் அவர்களிடம் அவற்றைத் தந்து படிக்கச் செய்தும், படித்துக் காட்டியும் கையொப்பம் பெற்றோம். கழகக் குழுவினர் இவ்வாறு 3222 பக்கங்களில் பல இடங்களில் அவர்தம் கையொப்பமும், கடைசிப் பக்கத்தில் அவரால் பதிப்புரிமை வழங்கப்பட்ட ஒப்புதல் கையொப்பமும் பெறலானோம்.
அவ்வாறு கையொப்பமிட்ட பல சமயங்களில் அன்னார் பழைய நினைவுகளைக் கூர்ந்து குறிப்பிட்ட பல தலைப்புகளை எங்களையே படித்துக் காண்பிக்கும்படி மிக ஆவலுடன் பணித்தார்கள். வருத்தம் பாராது பலநாட்கள் அப் பணியை மேற்கொண்ட அய்யா அவர்கள் நாளொன்றுக்குச் சுமார் 100 பக்கங்களைப் படிக்கக் கேட்டும் – படித்துப் பார்த்தும் ஒப்புதல் தந்தார்கள்.
அவ்வாறு படித்துக் காண்பிக்க நேர்ந்த பல தலைப்புகளுள் ‘மொழி’, ‘நாகம்மாள் மறைவு’, ‘ஈ.வெ.கி. மறைவு’ போன்ற தலைப்புகளைப் படித்துக் காண்பித்தபோது அவற்றில் 20, 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கையாண்டிருந்த சொற்களைத் தாமே நினைவுகூர்ந்து, நான் படிக்கும் முன்னரே முன்னோடியாக அச்சொற்களைக் குறிப்பிட்டுக் கூறி, சில வரிகளை அப்படியே நினைவு கூர்ந்து சொன்ன பாங்கு கழகக் குழுவினரை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது; எங்கள் நெஞ்சங்களில் பெரும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணியது.” (நூல்: ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 1’ – பதிப்பாசிரியர் முன்னுரை)
இவ்வாறு ஒரு பாரிய பொறுப்பை செம்மையான சிரத்தையோடு செய்து வந்தார் அய்யா ஆனைமுத்து அவர்கள். அதுமட்டுமல்லாமல் பெரியாரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்து அதன் ‘எழுத்து முறையை (Pattern)’ விவரித்துள்ளார். எடுதுக்காட்டாக தந்தை பெரியாரின் பேச்சுக்கள் தொடங்கும் முறை பற்றி உன்னிப்பாக கவனித்து பின்வருமாறு எழுத்துகிறார்.
“குடி அரசு’ துவக்கத்தில் ஒருவருடைய பெயரின் முன்னால் மரியாதை அடை மொழியாக ஸ்ரீமான் என்று சில ஆண்டுகள் குறிப்பிட்டு வந்தவர், 1927-க்குப் பிறகு திரு, திருமதி, செல்வி, தோழர் போன்ற சொற்களை அதிகமாகப் பயன்படுத்ததி தொடங்கினார். 20-11-1932-க்குப் பின் பெரிதும் தோழர், தோழியர் என்றே எழுதலானார்.
அவ்வாறே துவக்கத்தில் பார்ப்பனரைக் குறிக்க ‘பிராமணர்’ என்ற சொல்லைக் கையாண்ட அவர், 1928-க்குப் பின்னர் பெரிதும் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லையே கையாளலானார்.
அவர்தம் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கவனிப்போர் இன்னொரு உண்மையை அறியலாம். அவர் சொற்பொழிவு ஆற்றத் துவங்கும்போது நிகழ்ச்சித் தலைவரையும், அவையோரையும் நோக்கி, ‘அக்கிராசனர் அவர்களே!; அக்கிராசனாதிபதி அவர்களே!; சகோதரிகளே!; சகோதரர்களே!” என விளித்துப் பேசுவது என்பதே 1932 அக்டோபர் வரையில் அவர்தம் பழக்கமாயிருந்தது.
இத்தன்மையினை அடியோடு கைவிட்டு, இலங்கையில் அவர் சுற்றுப்பயணம் செய்த காலையில், 17-10-1932 முதல், ‘தலைவர் அவர்களே!; தோழர்களே!’ என விளித்துப் பேசத் தொடங்கினார்; இறுதி வரையில் அவ்வாறே கூறி வந்தார்.”
இதெல்லாம் அய்யா ஆனைமுத்து அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை தொகுக்கும் பணியினை எவ்வாறு சிரத்தையுடனும், பேரன்புடனும் முன்னெடுத்தார் என்பதற்கு சான்றுகளாகும். இத்தகைய அக்கறையே அவரை பெரியாரின் பெருந்தொண்டர் என்ற உயரிய இடத்திற்கு உயர்த்தியது எனலாம்.
(இக்கட்டுரை ஐயா வே.ஆனைமுத்து குறித்து தொடராக வரவிருக்கும் கட்டுரையின் முதல் பாகம்.)