தமிழக கடற்கரைப் பகுதிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க திட்டமிடும் மோடி அரசு!
ஒன்றிய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைபடத்தில் தமிழ்நாட்டில் 512 மீனவ கிராமங்களில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகச் சந்திப்பு 18-08-2023 வெள்ளிக்கிழமை காலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் மற்றும் தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் தோழர் பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம் நடத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்ட ஊடக செய்தி குறிப்பு:
சமீபத்தில் ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்ட வரைபடத்தில், தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள 512 மீனவ கிராமங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியுறும் செய்தி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக இந்த மீனவ கிராமங்கள் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் இந்த முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நாட்டின் கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 1986-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, உயர் அலை கோட்டிலிருந்து 500 மீட்டர் கடற்கரை பகுதியிலுள்ள மீன்பிடி பகுதிகள், மக்கள் வாழ்விடங்கள், நீர்நிலைகள், ஓடைகள், ஆற்றின் முகத்துவாரங்கள், மணல்திட்டுகள், வனங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள், விலங்குகளின் வாழ்விடங்கள் உள்ளிட்டவைகளை வரைபடங்களில் குறியிட்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை அறிவிப்பாணையாக வெளியிடும். அப்படியாக தற்போது வெளியாகியுள்ள வரைபடத்தில் தான் மீனவ மக்கள் பாரம்பரியமாக வாழும் கிராமங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை சேர்ந்த மீனவ மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களில் 29 கிராமங்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை. மீதமுள்ள 15 கிராமங்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் எல்லைகள் தவறாக உள்ளன. பழமைவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற மாமல்லபுரம் பெயர் வரைபடத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அதேவேளை மாமல்லபுரம் கடற்கரை கோவில் மட்டும் குறிக்கப்பட்டது. அதேபோல் மாமல்லபுரம் மீனவ கிராமத்தை குடியேற்றப் பகுதி என்று வரையறுத்துள்ளனர்.
நாகப்பட்டினத்தின் மிகப்பெரிய மற்றும் பழமைவாய்ந்த ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், காமேஷ்வரம், புஷ்பவனம், விழுந்தமாவடி வடக்கு மற்றும் தெற்கு மீனவர் காலனி வெள்ளபள்ளம், வானவன் மஹாதேவி, ஆற்காட்டுதுறை போன்ற மீனவ கிராமங்கள் காணாமல் போயுள்ளன. இதில் விழுந்தமாவடியின் 8 கிமீ வெறும் மணற்பரப்பு என்று குறிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையின் வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் உட்பட வெள்ளகோயில், புதுக்குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், கீழையூர், சின்ன கொட்டாய்மேடு, கொட்டாய்மேடு, மடவாய்மேடு, பழையார் போன்ற மீனவ கிராமங்களும் காணாமல் போயுள்ளன. புதுச்சேரியில் எந்த மீனவர் கிராமத்தின் பெயரும் இல்லை. காரைக்கால் மாவட்டத்திலும் எந்த ஊரும் இல்லை. காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, அக்கம்பேட்டை, கோட்டை சேரி, மண்டபத்தூர் இவை அனைத்தும் மிகப் பெரிய மீனவர் கிராமங்கள். இவை அனைத்தையும் நீக்கியுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் உவரி, அண்ணா நகர் கிராமங்களின் எல்லைகள் குறிப்பிடப்படவில்லை. கரைச்சுற்று உவரியின் தூண்டில்வளைவு தடுப்புச்சுவர்கள் காணவில்லை. திருச்செந்தூர் அருகிலுள்ள தொல்லியியல் இடமும், மணப்பாடு தவிர்த்து பிற கிராமங்கள் காணாமல் போயுள்ளன. உப்பளங்களும், படகுத்துறைகளும் கூட குறிப்பிடப்படவில்லை. காயல்பட்டினம் பகுதியிலும் இதே நிலை தான். ரோச்மாநகர், வைப்பார், பட்டணமருதூர், முத்தையாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் குறியிடப்படவில்லை. மீன்பிடி பகுதிகள், மீன்வளப் பெருக்கம் பகுதிகள், உப்பளங்கள், நீண்டகால வீட்டுவசதி திட்டங்கள், மீனவர்களின் பொது இடங்கள், கட்டிடங்கள் என எதுவும் முறையாக வரையறை செய்யப்படவில்லை.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்கும் முக்கியமான மீனவ கிராமமான தூத்தூர் மீனவ கிராமம் வரைபடத்திலிருந்து மாயமாகியுள்ளது. தூத்தூர் மீனவ கிராமம் என்பது நீரோடி முதல் இரையுமன்துறை வரை உள்ள 8 ஊர்களின் தலைமையிடமாக உள்ளது. ஒக்கி புயலின் போது கடுமையாக பாதிப்புக்குள்ளானவர்கள் தூத்தூரை சேர்ந்த ஆழ்கடல் மீனவர்களே. கல்லூரி, மருத்துவமனை, வங்கி, தபால் நிலையம் என சிறந்த கட்டமைப்புடன் கூடிய தூத்தூர் திட்டமிட்டு வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கருதுகின்றனர். மேலும், நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிப்புத்தன்துறை, சின்னத்துறை, பூத்துறை, இரையுமன்துறை போன்ற மீனவ கிராமங்கள் காணாமல் போயுள்ளன.
தமிழ்நாட்டின் மீனவ கிராமங்கள் அனைத்தையும் கடற்கரை மார்க்கமாக இணைக்கும் வகையில் கடற்கரை சாலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும், அதற்காக பொதுப்பணித்துறை வெளியிட்ட திட்ட வரைபடத்திலும் இதே மீனவ கிராமங்கள் விடுபட்டு போயிருந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட மீனவ தொழில்களில் பெருநிறுவனங்கள் ஈடுபடவும், கடற்கரை பகுதிகளை சுற்றுலாவிற்கு உகந்ததாக மாற்றவும் சாகர்மாலா திட்டம் வழிவகை செய்கிறது. இதனடிப்படையிலேயே, மீனவ கிராமங்களை கடற்கரையிலிருந்து அகற்றும் நோக்கில் ஒன்றிய அரசு வரைபடங்களில் இருந்து மீனவ கிராமங்களை நீக்கியுள்ளது.
நாட்டின் வளர்ச்சி, கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியை கையளிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல், மீனவ கிராம பிரதிநிகள், மீன்பிடி தொழிலாளர் சங்கங்களை கலந்தாலோசிக்காமல், அதிகாரிகள் எதேச்சாதிகாரத்துடன் செயல்பட்டு வரைபடத்திலிருந்து மீனவ கிராமங்களை நீக்கியுள்ளனர்.
ஒன்றிய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை-2019-ன்படி தயாரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டமும் (CZMP) வரைபடமும் பல்வேறு குறைபாடுகளுடனும் குளறுபடிகளுடனும் கடற்கரை மக்களுக்கு எதிரானதாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒரு திட்டத்தை அறிவித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ஆகஸ்டு 18 முதல் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திலும் அதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடத்திலும் பல கடற்கரை கிராமங்கள் விடுபட்டுள்ளது. பாரம்பரிய மீனவர்களின் குடியிருப்புகள் குறிக்கப்படவே இல்லை. மேலும், சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள், மணல்தேரிகள் சதுப்புநிலப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்கள், கடற்பூங்காக்கள், உப்பளங்கள், கடல் ஆமைகளின் உறைவிடங்கள், நண்டுகள் வாழ்விடங்கள் கடற்புல் பரப்புகள், பறவைகள் சரணாலயங்கள், தொல்லியல் மற்றும் மரபுசார் பெருமைக்குரிய இடங்கள், அலையாத்திக் காடுகள், கனிம வளம் நிறைந்த பகுதிகள், மீனவர்களின் வலைவிரிப்புக் காணிகள், மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில்வளைவு தடுப்புச்சுவர்கள், மீன்பிடி இறங்குதளங்கள், அலைதடுப்புச் சுவர்கள், அரசு உள்கட்டமைப்புகள், ஆலயங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவு கட்டடங்கள், மீனவர் ஓய்வறை, வலைபின்னும் கூடம், சுகாதார கட்டமைப்புகள், மீனவர்களின் வீடுகள் குறிக்கப்படாமல் பெருமளவு விடுபட்டுள்ளது.
கடற்கரை மண்ணுக்கும் மீனவ மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கும் இத்திட்டம் மீனவ மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இவ்வாறு குறைபாடுகளும் திட்டமிட்ட சதிவேலைகளும் மீனவர்களுக்கு எதிரான சரத்துகளையும் உள்ளடக்கிவரும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டமும் வரைபடமும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கடற்கரை கிராமத்திலும் மீனவ மக்களை உள்ளடக்கி முழுமையான திட்டமும் வரைபடமும் உருவாக்கப்பட வேண்டும். அதன்பிறகே மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். மீனவர்களுக்கு எதிரான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக கைவிடும் அறிவிப்பை 18-ம் தேதி இராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.