
உலகெங்கும் போர்களுக்குப் பின்பான மக்கள் படும் சித்திரவதைகளை விசாரிக்கும் விசாரணை அமைப்பாக ‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு (ITJP)’ செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் ‘வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்கிற அறிக்கையை மார்ச் 2, 2025 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழீழ மக்கள் மீது ‘இந்திய அமைதிகாப்புப்படை(IPKF)’ நடத்திய படுகொலை வெறியாட்டங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைப் போர் நடந்த 2009-க்குப் பின்பாக, இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அதிகாரிகள் நடத்திய சித்திரவதைகளை குறித்த பல அறிக்கைகளை ITJP வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய ராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை இந்த அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இந்திய – இலங்கை நாடுகளுக்குடையே மேற்கொண்ட 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ‘இந்திய அமைதிகாப்புப் படையினர் (IPKF)’ 1987-ஜூலை மாதத்தில் தமிழீழப் பகுதிகளுக்குள் வந்திறங்கியது. ஆனால் அமைதி ஏற்படுத்துவதற்கு பதிலாக விடுதலைப் புலிகளின் மீது மோதல் போக்கினைத் தொடர்ந்தனர். அமைதி ஒப்பந்தங்களில் இருந்த சரத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வருவதை நிர்ப்பந்திக்க அமைதியான வழியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இந்திய அதிகாரிகளின் அலட்சியத்தால், சிங்கள இராணுவம் கைது செய்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் உட்பட்ட 17 பேர் நஞ்சுண்டு மாண்டனர். தமிழர்களின் கடும் சினத்தால் இந்தியப் படையின் முகாம்கள் தாக்கப்பட்டது. ஆனால் அன்றைய இந்திய ராஜீவ் காந்தி அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘ஆபரேசன் பவன்’ என்னும் நடவடிக்கைக்கு ஆணையிட்டது.

இந்திய அமைதி காப்புப் படையின் வெறியாட்டம் துவங்கியது. தமிழர்களின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் உள்ள அப்பாவி மக்களை வேட்டையாடியது. ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இப்படையின் நடவடிக்கைகளால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி இருக்கலாம் என ’அம்னெஸ்டி அமைப்பு’ கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரமாக, பிரான்சிஸ் ஹாரிசன் என்னும் சர்வதேச ஊடகவியலாளர், இந்திய அமைதிகாப்புப் படையால் 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை கொல்லப்பட்ட தமிழர்களில் 1787 பேரின் விவரங்களை வெளியிட்டார். அதைக் குறித்த மே 17 இயக்கக்குரல் கட்டுரை :
ITJP-ன் இந்த அறிக்கை, இந்திய அமைதி காப்புப்படை 1989-ல் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியான மூன்று நாட்கள் செய்த பச்சைப் படுகொலைகளைப் பற்றி விவரிக்கிறது. வல்வெட்டித்துறை ஊரைச் சுற்றி வளைத்து ஏழு இராணுவ முகாம்களை நிறுவி இந்திய படையினர் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறது. விடுதலைப் புலிகள் மறைந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழும் எந்த இடத்திலும் இருக்கும் சுற்றுவட்டார வீடுகளை எரிப்பதும், ஆண்களை இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி விசாரிப்பதும், எறிகணைகளை வீசுவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் என இந்தியப் படை செய்த கொடுமைகளை விவரிக்கிறது.

இந்திய அமைதி காப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டினாலும், வெறி கொண்ட தாக்குதலாலும் பல கொலைகள் நடந்த இடத்திலிருந்து, மோசமான காயம் பட்டு உயிர்தப்பியவர்கள் மூலமாக வாக்குமூலங்கள் பெற்று பள்ளித்தாளாளரும், ஆசிரியருமான நடராசா ஆனந்தராச் என்பவர் ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் ‘வல்வெட்டித் துறை மக்கள் குழு’வின் செயலராக இருந்திருக்கிறார். அவரின் ஆவணங்களே இந்த அறிக்கை வெளிவர முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. அதிலிருந்து மீட்கப்பட்ட சில ஆவணங்களே இந்த அறிக்கைக்கு சாட்சியமாகி இருக்கின்றன.
வல்வெட்டித்துறையில் IPKF -ன் முதல் தாக்குதல் :
- ஜனவரி 19, 1989 ல் பொலிகண்டி முகாமில் இருந்த 2 படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் கொலைக்கான காரணத்தை தேடாமல், கொலை செய்தவர்களையும் அறியாமல், அப்பாவி பொதுமக்கள் மீது தடிகள், உலக்கைகள், சங்கிலிகள் கொண்டு இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இத்தாக்குதலில், எலும்பு முறிவு உள்ளிட்ட மோசமான காயங்களடைந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் அடித்து சிறைவைக்கப்பட்டனர். ஒரு பெண் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
- பிப்ரவரி 15, 1989-ல் ஒரு ராணுவ முகாமுக்கு அருகிலேயே இருந்த பாதிரியார் குடும்பத்தில் இருந்த இரண்டு சகோதரிகளை சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் கர்ப்பிணி. மூன்று வயது சிறுவன் காலிலும் சுட்டுள்ளனர்.
முதல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பொலிகண்டியின் இருந்த இந்திய ராணுவ முகாமின் கேப்டன், விடுதலைப் புலிகளே இப்படுகொலைகளை செய்ததாக வாக்குமூலம் தரும்படி நிர்ப்பந்திக்க, பாதிரியார் மறுத்து விட்டு சிறுவனைக் காப்பாற்ற ஓடியிருக்கிறார். இவற்றையெல்லாம் பாதிரியார் எழுத்துப் பூர்வமான வாக்குமூலமாக தெரிவித்திருக்கிறார். தேவாலய திருச்சபைக்கு பதில் சொல்ல வேண்டி வருமென அவரை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர். சிறிது நாளில் அவர் வேறு திருச்சபைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இதன்பிறகு ‘வல்வெட்டித்துறை மக்கள் குழு’வின் முன்முயற்சியால் பேச்சுவார்த்தை நடந்து, இந்திய அமைதிப்படைக்கும் மக்களுக்கும் இடையே ‘கனவான் ஒப்பந்தம்’ கையொப்பமாகியது. இதனால் சில மாதங்கள் அமைதி நிலவினாலும், மீண்டும் இந்த ஒப்பந்தம் ஒழிக்கப்பட்டு அப்பாவிப் பொதுமக்கள் மீது பலத்த தாக்குதல்களை இந்திய படையினர் தொடங்கினர்.

இந்த ஒப்பந்தத்தை மீறுவதற்கு காரணமாக விடுதலைப் புலிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் பொதுமக்களின் வீடுகளின் உச்சியில் இருந்து குதித்து படைவீரர்களை தாக்கியதாகவும், இதனால் ஆறு பேர் மோசமாக இறந்ததாகவும் இந்தியாவின் முக்கியப் பத்திரிகைகளில் ஒன்றான ‘Financial Times’ -ல் செய்திகள் வெளிவந்தன. ஆனால் வல்வெட்டித்துறை மக்கள் இதை முழுமையாக மறுத்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ‘மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (UTHR)’ நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் தங்கியிருந்த மறைவிடத்தை கண்டறிந்து நடத்திய தாக்குதலின் காரணமாகவே இந்தியப் படை வீரர்கள் மரணிக்க நேர்ந்ததாகவும், மக்களின் வீடுகளில் மறைந்திருந்து விடுதலைப் புலிகள் தாக்கவில்லை எனவும் பொதுமக்களிடம் நடத்திய விசாரணை மூலம் தெரியவந்ததாக ஆதாரங்களுடன் கூறினர். ஆறு மாத காலம் அமைதியாய் இருந்ததற்கு காரணமான இந்த ஒப்பந்தத்தை முறிப்பதற்கு பொலிகண்டி பகுதி முகாமின் கேப்டனுடைய தவறான வழிநடத்தலே ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தனர்.
இந்திய அமைதி காப்புப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த இந்த சண்டையில் எவ்வகையிலும் சம்பந்தப்படாத, வல்வெட்டித்துறை மக்கள் மீது மோசமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. பல முகாம்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் வல்வெட்டித்துறை வீதிகளை முடக்கினர். 1989, ஆகஸ்ட் 2, 3, 4-ம் தேதிகளில் அம்மக்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி படுகொலைகளை நடத்திக் கொண்டே சென்றனர். உண்மை என்றாவது ஒரு நாள் வெடித்து வெளிவரும் என்பதற்கேற்ப, சாட்சியங்களற்று கொன்று குவித்த மக்களில் சிலர் பலத்த காயமடைந்தும், சடலம் போல நடித்து தப்பித்தும் சாட்சியங்களாகி இருக்கின்றனர். சடலங்களின் நடுவேயும், குத்துயிரும் குலையுயிருமாகக் கிடந்தவர்கள் மூலமாகவும், அச்சத்தில் விறைத்துப் போயிருந்த உறவுகளிடத்திலும் வாக்குமூலங்களைப் பெற்று ஆவணப்படுத்தியவர் நடராஜா ஆனந்த்ராச் அவர்கள். கிட்டத்தட்ட 200 பேரிடம் அவர் விசாரித்து பாதுகாத்த ஆவணங்களே இப்போது இந்த அறிக்கையாகி இருக்கிறது. அவரின் வீடும் இந்தியப் படையால் தீக்கிரையாக்கப்பட்டது. அதிலிருந்து மீதமுள்ளவையே கிடைத்தன.

இப்படுகொலையில் 60 பேருக்கும் மேல கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், மேலும் சாட்சியமாக்கப்படாத படுகொலைகள் பல இருக்கலாம் என்றும் நிஷோர் அறிக்கை (வடக்கு – கிழக்கு மனித உரிமை செயலகம்) சுட்டிக் காட்டியது. இருப்பினும் வல்வெட்டித்துறைப் படுகொலைகளின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை.
IPKF நடத்திய மூன்று நாள் நடந்த தாக்குதல்களில் சில :
முதலில் கடை வீதிகளில் தாக்குதலைத் தொடர்கின்றனர். கடைக்கு வந்த பெண்கள், கடை உரிமையாளர்களை கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். கடைகளை மூடி தப்பிக்க நினைத்த தந்தையின் கண் முன்னே பிள்ளையை சுட்டுக் கொல்கின்றனர். நகரசபைத் தலைவரை சுட்டதில் அவர் உயிர் ஊசலாடும் நிலையில் சுயநினைவுடன் சடலமாக நடிக்கிறார். வல்வெட்டித்துறை கிழக்குப் பகுதியில் இருந்த மீனவர்கள் தப்பியோட சுட்டதில் மூன்று இளைஞர்கள் சுருண்டு விழுந்து இறந்தனர். பிள்ளைகளை தந்தை வீட்டுக்கு அனுப்பி பின்னால் ஓடி வந்த பெண் சுடப்பட்டு இறந்தார்.
இப்படையினர் இழுத்துச் சென்ற மூன்று சிறுவர்கள் வீடு திரும்பவேயில்லை. தென்னியம்மன் வீதியில் வீடுகளைக் கொளுத்திக் கொண்டே சென்றனர். சிவபுர வீதியில் மட்டும் 23 வீடுகளைக் கொளுத்தியதாக சாட்சியங்கள் கூறுகின்றனர். இலங்கையின் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களாக இருந்ததால், இராணுவம் தங்களை ஒன்றும் செய்யாது என நம்பியிருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களின் வீடு எரிக்கப்பட்டதைக் கண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் இல்லை என கத்திய படி வெளிவந்த இருவர் சுடப்பட்டனர்.

சிவகணேசன் என்பவரது வீட்டில் தஞ்சமடைந்த 70 பேரில் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் துப்பாக்கி குண்டடி பட்டு இறந்தவர்கள் போல நாடகமாடி உயிர் பிழைத்தனர். சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டில் தஞ்சமடைந்த 50 பேரில் 9 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பாராது சுட்டதால், குண்டுகளால் துளைக்கப்பட்டும் இறந்தவர் போல நடித்தும் பலர் பிழைத்தனர். இராணுவம் பிடித்துச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களைப் பற்றி விசாரிக்க முகாமிற்கு உறவினர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இறுதி வரை அவர்களின் சொந்தங்கள் வீடு திரும்பவில்லை. இவ்வாறு வல்வெட்டித்துறை மக்களை படுகொலைகள் செய்த, படுகாயப்படுத்திய இந்தியப் படைகளால் எரிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 123. கடைகள் 45. படகுகள் 176 என ஆவணமாகியுள்ளன.
இந்தியப் படை வைத்த தடுப்புகளை தாண்டி செய்தியாளர்கள் மற்றும் வைத்தியர்கள் அனுமதிக்கப்படவில்லை என ‘தி கார்டியன்’ பத்திரிக்கையும், MSF (மருத்துவர்) பணியாளர்களும் உறுதிப்படுத்தினர். வீடு, உடை, உணவு என அனைத்தையும் எரித்து நிர்மூலமாக்கியதில் 3000 பேர் அகதிகளாகினர். 1000 பேர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றனர்.
இப்படுகொலைகளுக்கு அரசியல் மற்றும் ஊடக எதிர்வினைகளாக அப்பொழுதும் ‘இந்து’ பத்திரிக்கை வன்மத்தை கக்கியே எழுதியிருந்தது. ஆகஸ்ட் 2-ம் நாள் தனது செய்தியில், விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியதால் தற்செயலாக நடந்த கொலைகள் என்றும், இந்திய அமைதிப் படை மீது பழி போடுவதாகவும் எழுதியிருக்கிறது. ‘சண்டே டெலிகிராப்’ எனும் பத்திரிக்கை, இந்திய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல விடாமல் இராணுவத் தரப்பிடம் மட்டுமே செய்தி கேட்க சொன்னதாக அம்பலப்படுத்தியது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம், தங்களது தூதரக அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 14-ல் அனுப்பிய தொலை நகலில், இந்திய அமைதிப் படையைக் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலைக் கூறுமாறு அனுப்பியிருந்தது.

இரு வாரங்களுக்குப் பின்னர் சென்றிருந்த ‘பைனான்சியஸ் டைம்ஸ்’ பத்திரிக்கையின் நிருபர் டேவிட் ஹவுஸ்கோ என்பவர் மட்டும், ‘இப்பொழுதும் கருகிய நாற்றம் வல்வெட்டித்துறையை சூழ்ந்திருக்கிறது’ என்று மக்களின் நிலையை விரிவாகப் பதிவு செய்து, இந்திய அதிகாரிகள் விடுதலைப்புலிகள் மீது கட்டமைக்க நினைத்த பொய்யை அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறார். ஆசிய கண்காணிப்பகம் மற்றும் ‘ராய்ட்டர்ஸ்’ பத்திரிக்கையும் இந்திய அதிகாரிகளை கடிந்து எழுதின. மூன்று வாரங்களுக்குப் பின்னர் வந்த இந்தியர் எக்ஸ்பிரஸ் நிருபரும் வல்வெட்டித்துறை மக்களின் நிலையை வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையிலிருந்து ஆகஸ்ட் 21-ல் இந்திய படையால் அழைத்து வரப்பட்ட வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சரிடம் ‘வல்வெட்டித்துறை மக்கள் குழு’ வின் செல்வேந்திரனும், ஆனந்தராசும் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டைத் தாண்டியும் உரையாடினார்கள். அதற்குப் பழிவாங்கலாக, அமைச்சர் சென்றதும் இந்தியப் படையினர் ஒருவரின் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி, மேலும் முகாமிற்கு செல்லும் வழியில் 13 மக்களை இந்தியப் படை கொன்று குவித்தது.
இந்திய அமைதி காப்புப் படையின் வல்வெட்டித்துறை படுகொலைகளே இந்தியப் படையை வெளியேற்ற வேண்டும் என்கிற தீவிரமான கோரிக்கைக்கு வழிவகுத்தது. இந்தியப் படையின் ஆதரவு குழுக்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நடராசா ஆனந்தராச் அவர்கள், சேகரித்த வாக்குமூலங்களுடன் விடுதலைப் புலிகளின் உதவியால் இந்தியா வந்தார். ‘இந்தியாவின் மைலாய் (India’s Mylai – Valvettiturai Massacre)’ என்ற புத்தகத்தை எழுதி அதில் வல்வெட்டித்துறையில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் அனைத்தையும் ஆதாரங்களுடனும், புகைப்படங்களுடனும் தொகுத்தார்.

சுமார் 5000 குடும்பங்கள் வாழ்ந்த வல்வெட்டித்துறை, இந்திய அமைதி காப்புப் படை நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு சுமார் 3000 குடும்பத்தினரே தங்குமளவிற்கு மற்றவர்கள் வெளியேறியிருந்தனர். இலங்கையில் சுமார் 32 மாதங்கள் இருந்த இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு தமிழர்கள் ஆளாகினர். அதில் ஒன்றே வல்வெட்டித் துறை படுகொலையாக ஆவணமாகி இருக்கிறது.
வல்வெட்டித் துறை மக்கள் மீதான உடல் மற்றும் உள்ள ரீதியான சித்திரவதைகளுக்கு பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கோருவதுடன், உரிய இழப்பீடுகளை வழங்கி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசையும், சுயாதீனமான விசாரணைப் பொறிமுறை அமைத்து மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் எனவும் ITJP -ன் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
விடுதலைப் புலிகளை அழிக்கும் முயற்சியில் தோல்வியைப் பெற்றதால், இந்திய அமைதி காப்புப் படையினர் தங்கள் கோவம் முழுவதையும் பொதுமக்கள் மீது காட்டியதன் வெளிப்பாடே ‘வல்வெட்டித் துறை படுகொலை’ என்பதைத் தெளிவாக ITJP அறிக்கை விவரிக்கிறது. ‘இந்து’ போன்ற பார்ப்பன நாளிதழ்கள் இந்திய அதிகாரிகளின் ஊது குழலாக, இந்தியப் படை நடத்திய படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்தினார்கள் என்கிற பொய்யை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கும் கட்டமைப்பை இவ்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

இந்திய அமைதி காப்புப் படையின் அட்டூழியங்களால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் மீது தாக்குதலை நடத்தி விடுதலைப் புலிகளின் மேல் பழிகளைப் போட்டனர். போராளிகளின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாத கோழைகளாக மக்களைப் பலியாக்கினர். இந்தியப் படை மீது குற்றமே இல்லாத அளவிற்கு, விடுதலைப் புலிகளையும் மக்களையும் குற்றவாளிகள் போல இந்தியப் பார்ப்பனிய ஊடகங்கள் மூலம் பரப்பினர். பார்ப்பனீயம் நிறைந்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறையின் முடிவுகளால் தான் இந்திய அமைதிப் படை இலங்கையில் அமைதி தவழ வைக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறான நடவடிக்கைகள் அரங்கேறின. இந்திய அமைதிப்படை அங்கு சென்ற நோக்கமே வேறு என்பதை, அப்படையின் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரே சமீபத்தில் டிவிட்டர் (X) தளத்தில் அம்பலப்படுத்தினார்.
‘இவ்வளவு உயிரிழப்பையும் தாங்கும் அளவிற்கு இந்திய ராணுவம் இலங்கைக்கு செல்ல வேண்டியதன் அவசியமும், நோக்கமும் என்ன’ என்கிற கேள்வியை அமைதி காப்புப்படையில் இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் மேலதிகாரியாக இருந்த சுந்தர் ஜியிடம் கேட்டபோது, தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பமும், தமிழர்களுக்கென்று தனிநாடு அமையும் விருப்பமின்மையும் தான் காரணம் என சுந்தர் ஜி கூறியதாக அத்தளபதி அம்பலப்படுத்தினார். இவ்வகையில் டெல்லி அரசும், இந்தியா பார்ப்பனியையும் சேர்ந்து நடத்திய வல்வெட்டித்துறை படுகொலையை அம்பலப்படுத்தி இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.