
“மனிதன் ஏதாவது ஒரு சாதியிலேதான் பிறக்க முடியும். சாதியை மாற்றிக் கொள்ளும் வல்லமை யாருக்கும் இல்லை. ஆனால், எல்லா சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றிட முடியும். அந்த உயர்ந்த சிந்தனையை மனதில் கொண்டு, வேறுபாடுகளை நாம் மறக்க வேண்டும்”
பாஜகவின் சார்பாக இந்திய ஒன்றியக் குடியரசு துணைத் தலைவராக முன்மொழியப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் சிந்தனை முத்துகள் தான் இவை.
சி.பி.ராதாகிருஷ்ணன் என்ன சொல்ல வருகிறார் என்பதை சற்று விரிவாக பார்ப்போமா?
முதலில் மனிதன் ஏதாவது ஒரு சாதியிலே தான் பிறக்க முடியும் என்று கூறுகிறார். இந்தியர்கள் என்று சொல்லவில்லை, இந்துக்கள் என்று சொல்லவில்லை. அப்படி என்றால் உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஒரு சாதிய அடையாளத்தை இவரால் காட்டி விட முடியுமா? அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா போன்ற தேசங்களில் பிறக்கின்ற மனிதர்களுக்கு சாதி உண்டா? முதன் முதலில் தோன்றிய மனிதன் தன்னை எந்த சாதிக்குள் வைத்துக் கொண்டான் என்பதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் உண்டா? எதுவும் இல்லை!
ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எல்லோரும் ஒரு சாதியில் அடங்கி விடுவது வசதியாக இருக்கும். ஏனென்றால் சாதி ஒரு ஒடுக்குமுறைக் கருவி. ஒருவன் சிரமப்பட்டு பணம் சேர்த்து, பதவிகள் பெற்று, அதிகாரத்திற்கு வந்து அதன் பிறகு மற்றொருவரை ஒடுக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விட சாதி என்ற கட்டமைப்பு உடனடி ஒடுக்குமுறை அதிகாரத்தை தருகிறது. ஒருவன் ஒரு சாதியில் பிறந்து விட்டாலே மற்றொருவனை ஒடுக்குவதற்கோ அல்லது அடங்கிப் போவதற்கோ இந்தக் கட்டமைப்பு வழிவகை செய்கிறது.

90 வயது முதியவராக இருந்தாலும் பட்டியல் சமூகத்து நபர் ஒருவர், 20 வயது இளைஞரான உயர் சாதி பெருமை பேசும் நபரிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்ற சனாதன அயோக்கியத்தனத்தைதான் சாதி என்ற கட்டமைப்பு உருவாக்கிக் கொடுக்கிறது. “இந்த சாதியில் பிறந்த நீ எனக்கு அடிமை” என்பது மட்டுமல்ல “உன் உழைப்பு மற்றும் அந்த உழைப்பால் கிடைக்கும் விலை பயன் அனைத்தும் என் சாதிக்கே சொந்தம். நான் பார்த்து எதைத் தருகிறேனோ அது மட்டுமே உனக்கு உரியது” என்ற பொருளாதார சுரண்டல், “உன் கல்வி, உன் வாழ்விடம், உன் வேலை வாய்ப்பு அனைத்தையும் நானே முடிவு செய்வேன்” என்ற சமூக சுரண்டல், “உன்னை உடல் ரீதியாக துன்புறுத்தும் உரிமை எனக்கு உள்ளது” என்ற பாலியல் சுரண்டல் ஆகிய அனைத்து வகையான சுரண்டல்களையும் சாதிய கட்டமைப்பு ஆதரிக்கிறது மற்றும் உருவாக்கித் தருகிறது. எனவேதான் தினக்கூலியாக இருந்தாலும் ஆண்ட பெருமை பேசிக் கொள்ளும் மனநோய் இங்கு தொற்றியுள்ளது.
இத்தகைய சாதிய கட்டமைப்பில் மட்டும்தான் ஒரு மனிதன் பிறக்க முடியும் என்று ஒருவர் நம்புவார் என்றால் அந்த நபரை மனிதர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? மனிதர் என்றே ஏற்றுக் கொள்ள முடியாத சி.பி.ராதாகிருஷ்ணன், “மனிதன் ஏதாவது ஒரு சாதியில் தான் பிறக்க முடியும்” என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
‘சாதியை மாற்றிக் கொள்ளும் வல்லமை யாருக்கும் இல்லை’ என்று அடுத்து சொல்லி இருக்கிறார். உண்மைதான். சாதியை யாராலும் மாற்ற இயலாது. ஏனென்றால் அது ஆரிய சனாதன பண்பாடு. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதற்கு கிடையாது. தமிழர்கள் ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ என நல்லதொரு மாற்றங்களை நயம்பட ஏற்றுக் கொள்ளும் நாகரீகத்தை உடையவர்கள். அது இல்லாத காரணத்தால்தான் இன்றும் நடுசாலையில் வெற்றுடம்போடு பூணூல் போட்டுக் கொண்டு உயர்வகை இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு செல்லும் முட்டாள்தனம் பார்ப்பன கும்பலிடம் இருக்கிறது.
சாதியை மாற்ற சனாதனம் அனுமதிப்பதில்லை. ஒருவர் எந்த சாதியில் இருக்கலாம் என்பதை அவர் பிறப்பு முடிவு செய்வது மட்டுமல்ல, எந்த சாதிக்காரன் எந்த சாதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதையும் அது முடிவு செய்கிறது.
இதற்கு இந்து சமூகக் கட்டமைப்பில் சாதியின் தோற்றத்திற்கு முன்னால் இருந்த வருணத் தோற்றத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். எப்படி சாதி மாறிக் கொள்ள முடியாதோ அதேபோல் வருணமும் மாறிக்கொள்ள முடியாது தான். ஆனால் வருணம் மாதிரி மற்றொரு வருணத்தில் திருமண உறவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் படிநிலை அடிப்படையிலேயே. எடுத்துக்காட்டாக பார்ப்பனர் ஒருவர் ஒரு சத்திரியப் பெண்ணையோ, வைசியப் பெண்ணையோ, சூத்திரப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு ஒரு சத்திரிய ஆண் வைசிய அல்லது சூத்திரப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை. அதேபோல் ஒரு வைசியர் சூத்திரப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் வருணமாக கருதப்படும் பார்ப்பன, சத்திரியப் பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இறுதியாக சூத்திரன் திருமணம் செய்து கொள்ளவே அனுமதி இல்லை என்பது மட்டுமல்லாமல் பிற வருணத்தில் திருமணம் செய்ய முயன்றால் அது மிகக் கடுமையானக் குற்றமாக கருதப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதை மநுதருமத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் 13 வது சூத்திரம் பின்கூறியவாறு தெரிவிக்கிறது.
“சூத்திரனுக்கு தன் சாதியிலும், வைசியனுக்கு தன் சாதியிலும் சூத்திர சாதியிலும், சத்திரியனுக்கு தன் சாதியிலும் வைசிய சூத்திர சாதிகளும், பிராமணனுக்கு தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாதம் செய்து கொள்ளலாம்”
இப்படிச் சொல்லும் அதே மனுதர்மம் அடுத்த 15 வது சூத்திரத்தில் இப்படி தாழ்ந்த சாதியில் மனப்பவர்கள் தன் குலத்தையும், சந்ததியையும் நான்காம் வருணத்தினர் என்று சொல்லக்கூடிய சூத்திர வருணத்தில் கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் இந்த வருண கலப்பு பற்றியும் இதன் மூலம் உருவாகும் சாதிய தோற்றத்தை பற்றியும் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவருடைய எழுத்துக்களில் ‘சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமணிய விளக்கம்’ என்ற கட்டுரையில் தந்தை தாய் இருவரும் வேறு வேறு வர்ணமாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் சந்ததியினர் எந்த மரணத்தை சேர்ந்தவராக இருப்பார் என்பதை பற்றியும் எந்த சாதிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் மிக விரிவாக தெரிவிக்கிறார். அதோடு நில்லாமல் இச்சந்ததியினர் மீண்டும் திருமணம் செய்யும்பொழுது ஏற்படுகின்ற வருண-சாதி கலப்பை வைத்து அடுத்த இரண்டாம் கட்ட சந்ததினருக்கு என்ன சாதிப் பெயர் கொடுக்கப்படும் என்பதையும் மிக ஆழமாக விளக்கியுள்ளார்.
(கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் எடுத்துக்காட்டான பட்டியலே ஆகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கட்டுரையில் மிக விரிவான பட்டியல் தரப்பட்டிருக்கிறது)

எனவே சாதியின் இத்தகைய தோற்றம் சாதியை பிறப்பு வழியில் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்ற சனாதன கருத்தை மீண்டும் மீண்டும் கட்டமைக்கிறது. இதனால்தான் சாதி என்பது மாற்றிக் கொள்ளக் கூடியது அல்ல என்று இந்து மதம் மார்தட்டிக் கொள்கிறது. ஒருவர் பிறக்கும் பொழுதே ‘இவர் இந்த சாதி’ என்று குறிப்பிடும் இந்தக் கட்டமைப்பு, அத்தோடு இல்லாமல் சாதியின் உள்ளே அச்சாதிக்குரிய தீட்டு-புனிதத்தையும் முடிவு செய்துவிடுகிறது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ளன. அவற்றில் எந்த இரண்டு சாதியும் சம அளவில் சமூக அதிகாரத்தை பெற்றவை அல்ல. இதைதான் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது சமமற்ற படிநிலைத் தன்மை (Graded Inequality) என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்றால் என்ன பொருள்? இந்தியாவில் எந்த சாதியை எடுத்தாலும், அதற்கு ஒரு புனிதத் தன்மையும், ஒரு தீட்டுத் தன்மையும் உண்டு. அதாவது அப்புனிதத் தன்மை வேறொரு சாதியினரை “நீ தீட்டு” என்று சொல்லி கீழ்மைப்படுத்துவதற்கும், “என்னை தொடாதே” என்று சொல்லி தீண்டாமையை நடைமுறைப்படுத்தவும் பயன்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் மீதான தீட்டுத்தன்மை மற்றொரு சாதியினருக்கு இதே அடக்குமுறையை செய்வதற்கான அனுமதியையும் கொடுக்கிறது. “பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவரை அடக்கி ஆளும் அதிகாரம் உனக்கு வேண்டுமென்றால், நீ இன்னொருவரிடம் அடங்கிப் போகவும் தயாராக இரு” என்பது தான் இந்து மத சாதிய கட்டமைப்பின் மறை பொருள்.

அப்படி என்றால் சாதிய கட்டமைப்பில் உச்சாணிக்கொம்பில் யாருமே இல்லை என்று பொருள் இல்லை. தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்ளும் பார்ப்பன சமூகத்தினர் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரமிடு போன்ற இந்த சாதி சமூக கட்டமைப்பின் முக்கோண உச்சியில் பார்ப்பனிய சமூகம் ஒட்டுமொத்தமும் தம்மை நிலை நிறுத்தி வைத்துள்ளது. இவர்களுக்குள்ளும் படிநிலை வேறுபாடுகள் உண்டு என்றாலும், 3% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்களுக்கு கீழே அடிமையாக 97% மக்கள் (தங்களை சத்திரியர்கள் என்றும், வைசியர்கள் என்றும் மார்தட்டிக் கொள்ளும் சாதி வெறியர்களையும் சேர்த்துதான்) இருக்கிறார்கள் என்ற மனநிறைவில் தங்கள் சொந்த வர்ணத்தினரே தங்கள் மீது அடக்குமுறை செலுத்துவதை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்றே கூறலாம்
எடுத்துக்காட்டாக சிதம்பரம் நடராசர் கோயிலில் இருக்கும் தீட்சித பார்ப்பன கும்பல் தமிழ்நாட்டில் இருக்கும் பிற பார்ப்பன சமூகத்தினரோடு உறவு கொள்வது இல்லை என்பது மட்டுமல்ல, நடராசர் கோயிலுக்குள் வேறு எந்த சமூக பார்ப்பனரும் (அர்ச்சகராகும் தகுதி உடையதாக தங்களை சொல்லிக் கொள்ளும் பிரிவு பார்ப்பனர்கள் உட்பட) அர்ச்சகர் பணிக்கு செல்ல முடியாது. இது மற்ற கோவில்களுக்கும் பொருந்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டர்கள் இதே போல் தங்கள் சாதிக்குதான் இந்த உரிமை என்று மார்தட்டிய காலம் உண்டு.
இந்த சிக்கலுக்குரிய பிறப்பின் அடிப்படையிலான சாதி கட்டமைப்புதான் சி.பி.ராதாகிருஷ்ணனை சாதி மாற்றிக் கொள்ளும் வல்லமை யாருக்கும் கிடையாது என்று பேச வைக்கிறது.
ஆனால் சாதியை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரவர் சாதியினர் உழைப்பில் மட்டும் அவர்கள் வாழ்ந்து விட முடியுமா? சாதி என்பதே ஒரு உழைப்பு சுரண்டலுக்கான வழிவகை தானே? இதை எப்படி நியாயப்படுத்துவது? இந்த இடத்தில்தான் சனாதன கும்பல் இந்தியா என்ற கட்டமைப்பை உள்ளே நுழைத்து விடும் சதிசெயலை செய்கிறது?
சி.பி.ராதாகிருஷ்ணன் சாதியை தூக்கிப் பிடிக்கும் அதே வேளையில் “எல்லா சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றிட முடியும்” என்று கூறுவதன் பொருள் இதுதான். “ஆயிரமுன்டிங்கு சாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்று பாரதி கேட்டதை சிலாகித்து பேசிய சமூகத்தில் திராவிட இயக்க தோழர்கள் “ஆயிரம் சாதிகளை வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு அன்னியர்கள் கேள்வி கேட்பதை எதிர்க்கும் அருகதை இருக்கிறதா?” என்று எதிர் கேள்வி எழுப்பியதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்லா சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து பங்காற்ற வேண்டும் என்று சிபி ராதாகிருஷ்ணன் கேட்பது சரியா?
இந்தியா என்பது என்ன? இந்தியா என்பது பார்ப்பன-பனியா நலனுக்காக உருவாக்கப்பட்ட தேசம். ஏனென்றால் அதற்கு முன்பு பார்ப்பன-பனியா கும்பலுக்கு என்று தனி தேசம் இல்லை என்பது மட்டுமல்ல இந்தியாவுக்கு இவர்கள் எந்த வகையிலும் தொடர்புடையவர்களும் கிடையாது. புரட்சியாளர் மார்க்ஸ் அவர்கள் இந்தியாவைப் பற்றி குறிப்பிடும் பொழுது “இந்தியாவிற்கு என்று தனி ஒரு வரலாறு கிடையாது. தொடர்ச்சியாக இந்தியாவின் மீது படையெடுத்து ஆண்டு வந்த வரலாறே இந்தியாவின் வரலாறாக இருக்கிறது” என்று கூறுகிறார். ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பு இந்தியா ஒற்றை நாடாக இருந்ததே இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியா என்ற ஒரு நாடே இருந்ததில்லை என்பதுதான் மிக முக்கியமானது. எனவேதான் தந்தை பெரியார் “இந்தியா ஒரு நேஷனா?” என்று கேள்வி எழுப்பினார். அண்ணல் அம்பேத்கரும் தன்னுடைய ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்’ என்ற கட்டுரையில் “பண்டைய இந்தியாவைப் பற்றிய வரலாற்றின் பெரும்பகுதி வரலாறை அல்ல எனலாம். இதனால் பண்டைய இந்தியாவிற்கென்று வரலாறு இல்லை என்று ஆகிவிடாது. பண்டைய இந்தியாவிற்கு நிறைய வரலாறு உண்டு. ஆனால் அது வரலாற்று தன்மை இழந்துவிட்டது. பெண்களையும் சிறுவர்களையும் மகிழ்விப்பதற்கென புனையப் பெற்ற புராணங்களை கொண்டதாக அது ஆகிவிட்டது. பிராமண நூலாசிரியர்கள் இவற்றை திட்டமிட்டு எழுதியுள்ளனர் எனத் தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

எது எப்படி இருப்பினும் பார்ப்பனர்களுக்கு இந்த நிலப்பரப்பில் எந்த வரலாற்று உரிமையும், மரபுரிமையும் இல்லை என்பது உறுதியாகிறது. எனவே பார்ப்பனர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த நிலப்பகுதியில் ஆங்கிலேய வருகைக்குப் பின் குறிப்பாக விடுதலை காலத்தில் முழுமையாக பார்ப்பனமயமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இந்தியா என்ற ஓர் கட்டமைப்பை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டு இருந்தது. இதற்காகவே பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அன்றைய இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள்தான் முதலில் பாகிஸ்தான் பிரிவினைக்கு குரல் எழுப்பினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்பிரிவினை நடந்தேறிய பின்பு இந்தியா என்பது (ஆங்கிலேயர்களுக்கு பார்ப்பனர்கள் வகுத்துக் கொடுத்த விளக்கத்தின் படி) இந்துக்கள் அதிகம் வாழும் தேசமாக உருவெடுத்தது. இந்துக்கள் என்ற அடையாளம் இந்து மதத்தோடும், இந்து மதம் என்பது பார்ப்பன தலைமையோடும் கட்டமைக்கப்பட்டு இருந்ததால் அம்பேத்கர் எச்சரித்த ‘சமமற்ற படிநிலை’ இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட சட்டமாக வழி வகுத்தது. இதன் காரணமாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் விரும்பிபடி ‘சாதியை சட்டவிரோதமாக அறிவிக்கும் முயற்சி’ பார்ப்பன சூழ்ச்சியால் தடுக்கப்பட்டது.
எனவே இன்று நாம் காணும் இந்திய ஒன்றியம் என்பது பார்ப்பன அரசியல் அதிகாரத்திற்கும், பனியா பொருளாதார சுரண்டலுக்கும் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பின் உயர்வுக்காகத்தான் ‘அவரவர் சாதிய அடையாளங்களோடு’ பங்காற்ற வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால் “பார்ப்பனரல்லாத அனைத்து சாதியினரும் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்” என்று விருப்பப்படுகிறார். இதை உயர்ந்த சிந்தனை என்றும் உச்சிமுகர்ந்து பெருமைபட்டு கொள்கிறார். இந்த உயர்ந்த சிந்தனைக்காக “நாம் வேறுபாடுகளை மறக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொள்கிறார்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் நோக்கம் சாதி வேறுபாடுகளை களைவது அல்ல. சாதிய கட்டுப்பாட்டுக்குள் நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொண்டு பார்ப்பன இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும், அந்த உயரிய நோக்கத்திற்காக “பார்ப்பனரல்லாத நாங்கள் ஏன் பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்ற வேறுபாடு சிந்தனைகளை மறக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
தாம் இருக்கும் பதவி குறித்தான பொறுப்புணர்வு, இந்தியாவில் பாஜகவின் ஆட்சிக்குப் பின் பட்டியல் சமூக மக்கள் மீது அதிகரித்து வரும் அடக்குமுறை குறித்தான குற்றவுணர்வு ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு துணை குடியரசுத் தலைவர் சாதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது இந்திய அரசியலில் ஒரு வெட்கக்கேடான செயல். இது போன்ற நபரை துணை குடியரசு தலைவர் ஆக்கி விட்டுத்தான் “நாங்கள் தமிழருக்கு பதவி கொடுத்து விட்டோம்” என்று பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர்கள் கூச்சலிடுகின்றனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் சமத்துவ தத்துவத்தை உணராத பாஜக கும்பலால் முன்மொழியப்பட்ட சிபி ராதாகிருஷ்ணனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? எனவே தமிழர்கள் இது போன்ற தமிழர் நாகரீகத்திற்கு எதிராக கருத்தாக்கங்களை மறுதலித்து வள்ளுவனின் சமத்துவம், பெரியார் மற்றும் அம்பேத்கரின் சாதி மறுப்பு ஆகிய தலைசிறந்த தத்துவ வழியில் தங்கள் வாழ்க்கைப் பாதையை வகுக்கவேண்டும். சாதி வேறுபாடுகளும், தீண்டாமை செயல்களும் தமிழர்களுக்கு தேவையற்ற கட்டமைப்பு என்று பறைசாற்ற வேண்டும்.
ஆரிய-சனாதன குப்பைகளை புறம் தள்ளுவோம். ஏற்றத்தாழ்வற்ற தமிழர் நாகரீகத்தை மீட்டட்டுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் செயல்திட்டத்தில் தமிழராய் ஒன்றிணைவோம்.