ஒடுக்கப்பட்ட பெண்களின் முந்தைய நிலையும், இடதுசாரித் தத்துவம் ஏற்ற நாயகியின் மன விடுதலையும் பெற்ற திரைப்படம் விடுதலை இரண்டாம் பாகம்
தமிழ்த்தேசிய வரலாறு குறித்தான கலைப் படைப்பிற்கு எடுத்துக்காட்டாக விடுதலை இரண்டாம் பாகத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள். தத்துவமே தலைமை என்பதை அழுத்தமாக பதிய வைத்திருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் தமிழ்த்தேசியத்தின் இடதுசாரிக் கூறுகளை அரசியல் பாடங்களாக கற்க வைத்திருக்கிறார்.
இப்படத்தின் கதையோட்டம் கருப்பன் – மாரி படுகொலைக் காட்சியிலிருந்து நகர்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த கருப்பன் தன் மனைவி மாரியைக் கடத்தி வந்து பாலியல் துன்புறுத்தல் செய்த பண்ணை முதலாளியை வெட்ட வரும் போது, ‘…இது என்ன புதுப் பழக்கமா, உங்க ஆத்தாளும், பாட்டியும், அக்காவும் எங்க கட்டிலுக்கு வழிவழியாக வரும் வழக்கம் தானே..’ என பண்ணை முதலாளி இயல்பாக சொல்வது போல ஒரு காட்சி, ‘…பண்ணையில கட்டுற மாடுலயிருந்து இவனுங்க கட்டிக்கிட்டு வர்ற பொண்ணு வரைக்கும் எங்க உடைமை இல்லையா…’ என்று கோவத்துடன் காவல் அதிகாரியிடம் பண்ணை முதலாளியின் மகன் கூறுவதான காட்சிகள் எல்லாம் இந்த நூற்றாண்டு வரை ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது தொடர்ந்தவையே. சாதிய கட்டமைப்பை உருவாக்கிய ஆரிய சனாதனத்தை பின்பற்றிய நிலவுடைமை சமூகம் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளின் காட்சியங்கள் இவை.
சனாதனம் உருவாக்கிய சாதி அமைப்பு முறையே குறிப்பிட்ட சமூகப் பெண்களை தேவதாசியாக்கியது. மார்பக வரி விதித்து ஆதிக்க உயர்சாதிக் கூட்டம் பெண்களை சீரழிக்கக் காரணமானது. இந்த கொடுமைகள் எல்லாம் ஆணாதிக்க ஆதிக்கசாதி வெறியர்கள் இருக்கும் இந்திய சமூகங்களில் நடந்தேறியவை என்பதற்கு வரலாறே சாட்சியமாக இருக்கிறது. பண்ணை அடிமைத்தனம் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகளும் அதில் ஒன்றாக இருந்தது. இவற்றை எல்லாம் அந்தந்த சமூகத்தின் தலைவிதி என மக்களை நம்ப வைத்து பாலியல் அடிமைப்படுத்தலை நியாயப்படுத்திய காலகட்டத்தில்தான், இது தலைவிதி அல்ல, பணம் படைத்த முதலாளிகளின் சதி, மக்களை சாதிப் பிரிவினை செய்து பிரித்த ஆரியத்தின் சூழ்ச்சி என பரப்புரை மேற்கொண்டவர்கள் பெரியாரிய, இடதுசாரி, தமிழ்த்தேசியத் தோழர்கள்.
நிலவுடைமை காலத்தில் நடந்த இக்கொடுமைகள், அதற்குப் பின்பாக அதிகார மட்டத்திலும் குறையவில்லை. அதற்கு சாட்சியமாக இப்படத்தில் காவலர் முகாமில் ஆடையின்றி ஒரு பெண்ணை கட்டி வைத்திருந்த காட்சியை சொல்லலாம். குற்றம் சுமத்தப்படும் ஆண்கள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வீட்டுப் பெண்களைப் பிடித்துச் சென்று காவல் துறையினர் நடத்திய வன்புணர்வுகள் கடந்த காலங்களில் நடந்தவையே. நூற்றுக்கணக்கான காவலர்களால் 18-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் மீது வாச்சாத்தியில் நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வு, 1992-ல் சிதம்பரம் காவல் நிலையத்தில் காவலர்களால் பத்மினி என்கிற பெண்ணின் கணவரைக் கொல்லப்பட்டும், அந்தப் பெண் மீதும் நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு, 2023-ல் கிருஷ்ணகிரியில் செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட பழங்குடியினரின் மனைவிகளை ஆந்திரக் காவலர்கள் பிடித்துச் சென்று பிறப்புறுப்பில் மிளகாய் பொடி, கம்பிகளை செலுத்தி வன்புணர்வு என ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களின் ஒரு குறியீடாக காவலர் முகாமில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் முகம் இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது நிலவுடைமையாளர்கள் நிகழ்த்திய பாலியல் ஒடுக்குமுறையை ஓரிரு வசனங்களும், காவல் துறை அதிகாரம் நடத்திய கொடூரத்தை ஒரே காட்சியிலும் எடுத்துச் சொல்லியது இப்படம். ஆனால் படம் முழுக்க பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்திய காட்சியமைப்புகளும், தனக்கு இணையராகும் பெண் மீது இடதுசாரிக் கொள்கை ஏற்ற ஆண் காட்டும் அன்பும் பரவிக் கிடக்கின்றன. கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட பெண்ணாக மகாலட்சுமி என்கிற கதாபாத்தில் மஞ்சு வாரியார் வருகிறார். லட்சுமி சர்க்கரை ஆலை அதிபரின் மகள். ஆனால் வேட்டி சட்டை, கிராப் முடி சகிதம் மிதிவண்டியிலும், ஸ்கூட்டரிலும் பயணிக்கிறார். தொழிலாளர்களுடன் சேர்ந்து சங்கம் அமைக்க போராடுகிறார். பெருமாளாக வரும் விஜய் சேதுபதி தன்னைப் பிடித்துச் செல்லும் காவலர்களிடம் காட்டுப்பாதையில் சொல்லும் தன் கதையில், மகாலட்சுமி உடனான சந்திப்பைப் பற்றி பேசும் போது, ‘… சமூகத்தில் நாம் பார்க்க விரும்பும் மாற்றமாக, வாழ்ந்து காட்டுறதுக்கு எவ்வளவு தைரியம் வேணும் என்பதை உணர்த்தியவர்…’ எனக் கூறுவார். அந்த அளவிற்கு வலிமையான கதாபாத்திரமாக அந்த மகாலட்சுமி பாத்திரப் படைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
மகாலட்சுமி தனது பணக்கார குடும்பத்தை எதிர்த்து தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறார். கிராப் முடி வெட்டிக் கொண்டதற்கு, அவர் கூறும் விளக்கம் திரைத்துறைக்கு புதியது. பெருமாள் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதியிடம் பேசும் ஒரு காட்சியில், தன் கணவன் முடியைப் பிடித்து அடிக்கும் போது பலகீனமாக நேரமாக உணர்ந்ததையும், அவனின் பலகீனமான இடத்தில் தாக்கி விட்டு விவாகரத்தாகி விலகி வந்த பின்பு, அந்த பலகீனப்படுத்திய ஒன்று வேண்டாமென நினைத்து முடியை வெட்டியதாகவும் கூறுவார். பெண்கள் ஆண்களைப் போன்றே தலைமுடி, ஆடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் எனப் பெரியார் கூறிய வரிகளுக்கு உயிர்ப்பூட்டிய காட்சி அது.
மகாலட்சுமி கதாபாத்திரத்தை கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மணலூர் மணியம்மையைக் கொண்டு உருவாக்கியதாக இடதுசாரித் தோழர்கள் கூறுகின்றனர். பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, கைம்பெண்ணாகி, குடும்ப கொடுமை தாளாமல் வெளியேறி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார் மணியம்மை. அரைக்கை சட்டை, வேட்டி, கிராப் முடி, ஒரு குச்சி சகிதம் மிதிவண்டியில் பயணித்திருக்கிறார். முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் பின்பு கம்யூனிஸ்டாக மாறியிருக்கிறார். சாதி ஒழிப்பு, கூலி உயர்வு, பெண்களுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றிருக்கிறார். இவரது தோற்றத்தையும், பணியையும் உள்வாங்கியே இயக்குனர் மகாலட்சுமி கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக சொல்கிறார் எழுத்தாளர் தோழர். ராஜசங்கீதன் அவர்கள்.
1970-களில் உருவான நக்சல்பாரி தாக்கம் கொண்ட இளைஞர் படை, மக்களை கொடுமைப்படுத்தும் பணக்காரர்களை அழித்தொழிக்க ‘அழித்தொழிப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டது. இப்படத்திலும் அந்த வரலாற்றின் காட்சி சித்தரிப்புகள் உள்ளது. அழித்தொழிப்பு நடவடிக்கையில பெருமாள் (விஜய்சேதுபதி ஈடுபடும் போது லட்சுமி ஆலை அதிபரான மகாலட்சுமியின் (மஞ்சு வாரியார்) தந்தை கொல்லப்படுகிறார். தந்தை கொல்லப்பட்டது தெரிந்ததும், ‘மகனை விட்டுவிட்டால் அவன் திரும்ப வந்து கொல்ல மாட்டானா’ என்று அண்ணனையும் கொலை செய்யத் தூண்டும் காட்சி ஒன்று வருகிறது. குடும்பத்தின் மீது கொண்ட பாசத்திற்காக, ஊருக்கு கொடுமைகள் செய்யும் குடும்பத்தினரை பெண்கள் சகித்து வாழும்படி தயாரிக்கப்படும் படங்களில் இருந்து இப்படம் வேறுபட்டு நிற்பதை இந்த காட்சியே சொல்லி விடுகிறது. மக்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் ஆதிக்க சாதியவாதிகளாக தன் குடும்பமாக இருந்தாலும் சகித்துக் கொள்ள முடியாது என மக்களின் நலனுக்காக சிந்திக்கும் இடதுசாரிப் பெண்களின் குண உறுதியை இப்படம் விளக்கி விடுகிறது.
‘நமக்கு போராட்டமே வாழ்க்கை எனும் போது குடும்ப வாழ்வு தேவையா’ என கேட்கும் பெருமாளிடம், கம்யூனிஸ்ட் தலைவரான கே.கே என்று அழைக்கப்படும் மூத்த தோழர் சொல்லும்படியான ஒரு காட்சி, ‘ …போராட்டத்திற்கு வரும் மக்கள் நாம் குடும்ப வாழ்க்கையில் இருந்தால்தான் நம்முடன் போராட வருவார்கள். இல்லையென்றால் உங்களுக்கு குடும்பம் இல்லை. எங்களுக்கு குடும்பம் இல்லையா, என்ன என்று கேட்பார்கள்… அன்பு, பாசம், காதல் எல்லாம் மனித இயல்பு. ஒரு பெண்ணை பெருங்காதல் கொண்டு கல்யாணம் செய்தால் தான் தடுமாற்றங்களைத் தடுக்க முடியும்’ என்பதான ஒரு காட்சி. இந்த காட்சி விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் கையாண்ட நிலைப்பாட்டினை நினைவூட்டும் வகையில் இருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆரம்ப காலகட்டத்தில், இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாட்டினைக் கடைபிடித்தார்கள். அதன் பின்னர், சில பெரியோர்களால் ‘இயற்கை தான் முதலில், அதற்குப் பின்னர் தான் இயக்கம்’ என்பதாக அறிவுரை சொன்னதைக் கேட்டதும்தான் அவர்கள் மாற்றியமைத்துக் கொண்டதான நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்கள். இப்படத்தில் மூத்த இடதுசாரித் தோழரான கே.கே. , இளையவரான பெருமாளுக்கு அறிவுரை சொல்லும் காட்சி விடுதலைப் புலிகள் நிலைப்பாட்டின் சாயல் கொண்டது.
இப்படத்தின் அனைத்து காட்சிகளும் சிறப்பு என்றாலும், அதற்கும் மேலாக ஒரு காட்சி இருக்கிறது. சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து, கணவனின் கொடுமை தாங்காமல் விவாகரத்தான மகாலட்சுமி பெருமாளை கரம் பிடிக்கும் காட்சி. நெருப்பும், புகையும், உற்றாரும் சூழ, பிரம்மாண்டமான நடக்கும் திருமணங்களில் ‘மணப்பெண் என்பவள் பலருக்கு அடிமையாக இருந்து இன்று முதல் மணமகனாகிய உனக்கு அடிமையாகிறாள்’ என்னும் பார்ப்பன சமஸ்கிருத மந்திரம் ஓதப்படும். அத்தகைய எதுவும் இல்லாமல், திருமணப் பகட்டுகள் இல்லாமல் தோழர்கள் முன்னிலையில் நடக்கும் திருமணமாக பெருமாள் (விஜய் சேதுபதி), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்) இருவருக்குமான உறுதிமொழி வாசிப்பின் படி திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை நல ஏற்பு விழா என்றே இம்முறை இன்றளவும் பெரியாரிய, கம்யூனிச திருமணங்களில் கடைபிடிப்பதாகும். மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமத்துவத்துடனும், உரிமையுடனும், தோழமை உணர்வுடன் இணையராக வாழ்வோம் என்கிற உறுதிமொழியேற்று திருமண வாழ்க்கையில் இணைவார்கள். இந்த திருமணமுறை இந்து திருமண சட்டத்தின்படி செல்லாது என இருந்த காலகட்டத்தில்தான், இனி இவ்வகையிலான சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என அண்ணா சட்டம் போட்டார். இந்த காட்சி அவரை நினைவுறுத்தியது.
பெருமாள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நிர்வகிக்கும் தத்துவ உறுதி வாய்த்தவராக மகாலட்சுமி பாத்திரப் படைப்பை அமைத்திருக்கிறார் இயக்குனர். மேசையில் இறைந்து கிடக்கும் எண்ணற்ற இடதுசாரிப் புத்தகங்களில் இருந்து லெனினின் ‘தேசிய இன சிக்கல்கள்’ குறித்த மொழிபெயர்ப்பு புத்தகத்தை எழுதி முடித்து வெளியிடும் காட்சி, பெண்களிடம் பேசி அரசியல்படுத்தும் காட்சிகள் யாவும் ஒரு பாடலின் ஊடாக காட்டி விடுகின்றனர். இறுதியில் மகாலட்சுமி, பெருமாளிடம், ‘உன்னால் புரிந்து கொள்ள முடியாத வலியுடன் இதற்கு சம்மதிக்கிறேன்’ என்று கூறும் இடம் காதலின் உன்னதம்.
வாழ்க்கையில் பிரம்மாண்டமான திருமணங்கள் செய்தாலும் எண்ணற்ற மன நெருக்கடிகளுடன் வாழும் பெண்கள் இங்கு பலர் உள்ளனர். ‘உன்னிடம் நான் பலகீனமாக உணரவில்லை, அதனால் முடி வளர்க்கிறேன்’ என பெருமாளிடம் மகாலட்சுமி வைக்கும் நம்பிக்கைத் தன்மையைப் போல இங்கு பெரும்பாலானோரின் திருமண வாழ்க்கை இல்லை. மகாலட்சுமியிடம் இருந்த மன விடுதலை அவரது இடதுசாரிக் கொள்கைப் பற்றும், அக்கொள்கையை ஏற்ற கணவனும் வாய்க்கும் போது கிடைக்கிறது. அதனால் வறுமையிலும் மகிழ்ச்சியாக கணவனின் இன்மையிலும் உறுதியுடன் வாழும் முடிவெடுக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் இத்தகைய இடதுசாரிப் பெண்ணியம் குறித்தான படைப்புகள் சொற்ப அளவில் கூட இல்லை என்னும் போது, படத்தின் கதையமைப்பின் ஊடாக அதனைக் குறித்து பேசுகிறார் இயக்குனர். படத்தின் கதைப்போக்கு பெருமாள் என்கிற கதாபாத்திரத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை எப்படத்திலும் சொல்லாத இடதுசாரித் தத்துவம் ஏற்ற பெண்ணின் தன்மைகளைக் காட்சிப்படுத்தியிருப்பதற்கு பாராட்டுக்களை சொல்ல வேண்டும்.
இன்றிலிருந்து 80 வருடம் முன்பாக நடந்த வரலாறுகள் மூலம் அரசு, அதிகாரமட்டம், நிலவுடைமை சமூகம், பண்ணை அடிமைத்தனம், தொழிலாளி அடிமைத் தனம், சங்கம் அமைப்பதன் முக்கியத்துவம், போராட்டம், அன்பு, காதல், வாழ்க்கை இணையேற்பு எனப் பலவற்றையும் இன்றைக்கும் பொருத்திப் பார்க்கும் தன்மையிலான இப்படம் ‘தத்துவமே தலைமை’ என்பதை அழுத்திக் கூறுகிறது. மக்களை அரசியல் படுத்தும் வலிமைக்கு தத்துவமும், கோட்பாடும் தேவை என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இவை குறித்தான காட்சியமைப்புகளின் ஊடாக பெண்ணியத் தத்துவத்தையும், இடதுசாரிகள் கைக்கொள்ளும் காதலின் வலிமையையும், தியாகத்தையும் விளக்கிச் செல்கிறது.
தமிழ்த்தேசிய இன விடுதலையை இடதுசாரி வர்க்கப் புரட்சியுடன் இணைத்துப் போரிட்ட போராளிகளின் வரலாற்றை சித்தரிக்கும் போக்குடன், அரசு, மேல்மட்ட அதிகாரம், காவல் துறை அதிகாரம், கீழ்மட்ட அதிகாரங்களின் இயங்கியலை வெளிப்படுத்திய இப்படம் குறித்து பல கோணங்களில் அலசும் பார்வைகளை அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்…
கருத்துரிமை பறிக்கப்படும் தேசத்தில் ‘..அதிகம் பேசுவது, அதிலும் அரசியல் பேசுவதே..’ பாசிசத்திற்கெதிரான கலகத்தின் தொடக்கம். அதை செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் அது முறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.