திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி திசம்பர் 24, 2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி சார்பில் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். பின்பு அங்குள்ள மணியம்மை அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய கருத்துரை:

தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய கூட்டணி ஒருங்கிணைக்கும் இந்த நினைவுநாள் கருத்தரங்கத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய, நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய துணை பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய தோழர் வன்னிய அரசு அவர்களுக்கும், வரலாற்று பின்னணியோடு சமகால அரசியலை பொருத்திப் பார்த்து எங்களது கடமை என்னவென்று உணர்த்தி இருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்களுக்கும், மக்கள் மொழியில் மாபெரும் கோட்பாடுகளை எளிமைப்படுத்தி மேடைகளிலே இளைஞர்களை அரசியல்படுத்துகின்ற தமிழர் ஆட்சி கழகத்தினுடைய தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களுக்கும், எங்களோடு களம் கண்டு தமிழ்த்தேசிய களத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்ட களத்தில் நிற்கும் தமிழர் விடியல் கட்சியினுடைய மரியாதைக்குரிய தோழர் இளமாறன் அவர்களுக்கும், தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து தமிழின போராட்ட வரலாற்றிலே சமரசம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினுடைய மரியாதைக்குரிய தோழர் வழக்கறிஞர் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், இந்த மண்ணில் எங்களுக்கு எப்படிப்பட்ட மரியாதையை தந்தை பெரியார் பெற்றுக் கொடுத்தார் என்று நமக்கெல்லாம் வகுப்பெடுத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தோழர் ராஜசேகர் அவர்களுக்கும் மற்றும் திரண்டிருக்கக்கூடிய அனைத்து தோழமைகளுக்கும், நான் சார்ந்திருக்கக்கூடிய மே17 இயக்கத்தின் சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர்களே! இன்றைக்கு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களினுடைய நினைவு நாள். அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எங்களுக்கு மனதுக்கு மிக நெருக்கமானவர். எங்கள் அரசியலுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். தந்தை பெரியாரினுடைய கருத்தியலை பண்பாட்டு தளத்தில் விளக்கியவர். பண்பாட்டு ரீதியாக எவ்வாறு பெரியாரியலை நாம் உள்வாங்க வேண்டும் என்று நமக்கு வகுப்பெடுத்தவர். மே 17 இயக்கத்தினுடைய அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்தவர். எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக, இந்த அமைப்பு தமிழ்த்தேசிய களத்தில் தமிழ் பண்பாட்டை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டு இயங்க வேண்டும் என்கின்ற ஒரு கருத்தியல் ஆயுதத்தை எங்களுக்கு கொடுத்தவர் ஐயா தொ.ப. அவர்கள். அவரோடு உரையாடிய அந்த நாட்கள், அவரது சிந்தனை சிதறல்கள் மறக்க இயலாதவை.

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆர்எஸ்எஸ் என்கின்ற ஆரிய பண்பாட்டு இயக்கத்திற்கு எதிராக ஒரு தமிழ் பண்பாட்டு இயக்கத்தை, திராவிட இயக்கத்தை சார்ந்த பெரியாரிய தோழர்கள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், எதையெல்லாம் கவனப்படுத்த வேண்டும் என்று ஆவணப்படுத்தி சென்றிருக்கின்றார். அது ஒரு மாபெரும் அறிவாயுதமாக இன்றைக்கு நமக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. எளிய மொழியில் தொ.ப. அவர்கள் ஒன்றை சொல்லுவார்- “பெரியார் அனைத்து விதமான ஆதிக்கத்திற்கும் எதிரானவர்” என்று சொல்லுவார். 2018ஆம் ஆண்டு கருஞ்சட்டை பேரணியை ஒருங்கிணைத்த பொழுது அந்த கூட்டத்திலே பங்கெடுத்தார். கடுமையான உடல்நிலை கோளாறு இருந்த பொழுதிலும் கூட நீண்ட பயணம் செய்து (அதுதான் அவரது உடல் ஒத்துழைக்க மறுத்ததற்கு பிறகு அவர் சென்ற ஒரே பயணம்) கருஞ்சட்டை பேரணி மேடையில் அவர் பேசிய உரையினை நீங்கள் அவசியம் என்றைக்கும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணமாக இருக்கிறது.

“பெரியார் அனைத்து விதமான ஆதிக்கத்திற்கும் எதிரானவர்” என்று அதில் சொல்லுகிறார். கோவில் ஒரு ஆதிக்கம் அதனால் அதற்கு எதிராக இருந்தார். மதம் ஒரு ஆதிக்கம் அதனால் அது அதிகார குவியலாக இருக்கிறது, ஆகவே அதற்கு எதிராக இருந்தார். கடவுள் ஒரு ஆதிக்க அதிகார மையமாக இருக்கிறது. ஆகவே அதற்கு எதிராக இருந்தார். எதெல்லாம் ஆதிக்க அரசியலாக, அதிகார மையமாக நிலவி மக்களை துன்புறுத்துகிறதோ மக்களை சுரண்டுகிறதோ, மக்களை ஒடுக்குகிறதோ, அவற்றிற்கெல்லாம் எதிராக இருந்தவர் தந்தை பெரியார் என்று எளிமைப்பட தொ.ப. எடுத்துச் சொன்னார். ஆகவே எது ஆதிக்கமாக இருக்கிறதோ, எது அதிகார மையமாக இருக்கிறதோ, எது மக்களை ஒடுக்குகிறதோ, அதற்கு எதிரான முதல் குரல் பெரியாரின் குரலாக இருந்திருக்கிறது. பெரியாரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த புள்ளியில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் பேசுகின்ற வார்த்தைகளிலே ஓரிரு சொற்களை மட்டும் இழுத்து வைத்துக்கொண்டு பெரியாரை வியாக்கியானப்படுத்துவது என்பது அறிவிலிகளினுடைய செயல். அதை அறிவார்ந்தவர்கள் ஒருபொழுதும் செய்வதில்லை. தொ.ப. அவர்களினுடைய சிந்தனை தெறிப்பு என்பது நமக்கு பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறது.

பண்பாட்டு தளத்தில் தமிழ் பண்பாட்டை எவ்வாறு நாம் அடையாளம் காண்பது, தமிழ் பண்பாட்டிற்குள்ளாக ஆரிய எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு எப்படி எல்லாம் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்து காட்டியவர் அறிஞர் தொ.ப.அவர்கள். அவைதான் நமக்கு இன்றைக்கு ஆயுதமாக இருக்கின்றன. ஏனென்றால் ஆர்எஸ்எஸ் கொண்டு வருவது பண்பாட்டு ஆதிக்க அரசியல், வேத பண்பாட்டு ஆதிக்க அரசியல், ஆரிய பண்பாட்டு ஆதிக்க அரசியல். அதற்கு எதிராக தமிழ் பண்பாட்டு அரசியலை பெரியாரிய கருத்தியலின் வழியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஒரு அடிப்படை நூலாக நமக்கு அமைவது தொ.பாவினுடைய சிந்தனை தெறிப்புகள்.

அதேபோல தமிழர்களினுடைய மெய்யியல் கோட்பாட்டை குறித்து அதே மேடையிலே பேசியவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் ‘தமிழர்களுக்கு ஒரு மெய்யியல் கோட்பாடு இருக்கிறது’ என்று அந்த மெய்யியலை ஆய்வு செய்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். இந்தியாவினுடைய மெய்யியல்/தத்துவ கோட்பாடுகள் என்றால், அது ஆரியவழி தத்துவ கோட்பாடுகள் மற்றும் வேதாந்த சித்தாந்தங்கள் என்றுதான் பேசி வந்திருக்கிறார்கள்.

வேதங்களை வைத்துக் கொண்டுதான் இந்தியாவிற்கு என்று ஒரு சிந்தனை மரபு இருக்கிறது என்று பேசுகின்ற இடத்தில், “தமிழனுக்கு என்று ஒரு தனித்த சிந்தனை மரபு இருக்கிறது. அது வேதாந்தத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அது உலகலாவிய அளவில் இருக்கிறது. அது ஒரு மெய்யியலாக இருக்கிறது. அது அனைத்தையும் வியாக்கியானப்படுத்துகிறது” என்று நமக்கு ஒரு மிகப்பெரும் கருத்தியல் ஆயுதத்தை எடுத்துச் சொன்னவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.

இப்படி சொல்ல வேண்டும் என்றால் எண்ணற்ற தலைவர்களை அறிஞர்களை சிந்தனையாளர்களை நாம் சொல்ல முடியும். பெரியாரியம் உருவாக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். பெரியாரியல் வழியாக வந்தவர்கள். பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களை நிராகரித்தோ பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் நிராகரித்தோ தமிழ்நாட்டில் தமிழ் அரசியலை எவனும் பேசிவிட முடியாது.

தமிழ்த்தேசிய அரசியல் என்றால் இந்த இருவரினுடைய (அறிஞர் தொ.ப, பேராசிரியர் நெடுஞ்செழியன்) ஆளுமை பண்பு, இவர்களுடைய சிந்தனை மரபு, இவர்கள் ஆய்ந்தறிந்து கொடுத்த அந்த ஆயுதம்தான் தமிழ்த்தேசிய அரசியல் இந்தியாவிற்குள்ளாக ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக நடத்துகின்ற சண்டைக்கான கருத்தாயுதமாக நமக்கு இருக்கிறது. இருவருமே பெரியாரிஸ்டுகள். இருவருமே திராவிடர் இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள்.

இன்றைக்கு பெரியாரை நிராகரிக்கக்கூடிய தமிழ்த்தேசியவாதிகள் நாங்கள் நெடுஞ்செழியன் அவர்களை நிராகரிக்கின்றோம், பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை நிராகரிக்கிறோம் என்று பேசிவிட முடியுமா? ஐயா ஆனைமுத்து அவர்களை நிராகரிக்கிறோம் என்று பேசிவிட முடியுமா? ஐயா ஆனைமுத்து அவர்கள் பெரியாரியலை மார்க்சியத்தோடு இணைத்து அதனுடைய அடுத்த கட்ட நீட்சியை எடுத்துரைத்தவர். அவருடைய சிந்தனை தெறிப்புகள் மூலம் மார்க்சியத்தினுடைய பார்வையில் பெரியாரியலை இணைத்து சிந்தித்து, அதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி நிறுவியவர்.

பெரியாரினுடைய காலத்திற்கு பின்பு இயங்கிய இந்த மூன்று ஆளுமைகள் தமிழ்நாட்டினுடைய அனைத்து பிரச்சனைகள் குறித்தும் சிந்தித்தவர்கள். நாம் தெளிவடையக்கூடிய வகையில் நமக்கு கருத்தியல் ஆயுதத்தைக் கொடுத்தவர்கள். இவர்கள் பெரியாரிஸ்டுகள். பெரியார் இயக்கத்தின் வழி வந்தவர்கள். தந்தை பெரியாரை போற்றியவர்கள். தொ.ப. அவர்களுடைய அறையில் இருக்கக்கூடிய ஒரே படம் என்னவென்றால் அவர் பெரியாரோடு இருக்கக்கூடிய படம்தான் அங்கு இருக்கும். நான் செல்லும் பொழுதெல்லாம் உரையாடி இருக்கின்றேன். ஆக பெரியாரை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் வார்த்தையில் இருந்து அல்ல, அவர் நோக்கத்தில் இருந்து, அவர் இலக்கில் இருந்துதான் பெரியாரை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவிலே இந்தியா என்கின்ற ஒரு கட்டமைப்பை பிரிட்டிஷ்காரன் உருவாக்கிய அந்த முறையை புரிந்து கொள்பவருக்கு பெரியார் எப்பேர்ப்பட்ட தலைவர் என்பதை உணர்ந்து கொண்டுவிட முடியும். இந்திய அரசு கட்டமைப்பு ஆங்கிலேயர் காலத்தில் உருவான சமயத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அந்த அடிப்படையில் தான் பெரியாரினுடைய முக்கியத்துவம் இருக்கிறது. வெள்ளையர்கள் இங்கே ஆட்சி அதிகாரத்தை உருவாக்க ஆரம்பித்த காலத்தில், இந்த நாட்டிலே எல்லாருக்குமான ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பொழுது, அவன் எடுத்த முயற்சியிலே சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களை கொண்டுதான் இங்கே சட்ட நூலை வடிவமைப்பதாக காலனியர் காலத்தில் (ஈஸ்ட் இந்தியா என்று  சொல்லப்படும் கிழக்கு இந்திய காலனிய காலத்தில்) அதாவது வெள்ளையர் ஆட்சி என்றால் ஒற்றை தன்மையில் பார்க்கக்கூடாது. கிழக்கிந்திய கம்பெனி 100 ஆண்டு காலம் ஆட்சி செய்திருக்கும். அதற்குப் பிறகு 90 ஆண்டு காலம் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்திருக்கும்.

கிழக்கிந்திய கம்பெனி எனும் பிரைவேட் கம்பெனி, ஒரு மல்டிநேஷனல் கம்பெனி ஒரு நாட்டையே ஆண்டது என்றால் அது இந்தியாவாகத்தான் இருக்க முடியும். பாளையக்காரர்களுடைய வரலாற்றில் ‘கும்பனியார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ‘கும்பனியார்கள்‘ என்றால் என்ன? கம்பெனியார்கள் தான் கும்பனியார்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தை. அன்றைக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆண்டது. இன்றைக்கு அம்பானி அதானி கம்பெனி இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தினுடைய நேரடி ஆட்சி வருவதற்கு முன்பு இந்த கம்பெனியாரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கான நீதியை வழங்குவதற்கான சட்டங்களை எழுதியபொழுது அவர்கள் மனுஸ்மிருதியை எடுக்கிறார்கள். மனுஸ்மிருதியை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்ப்பதற்காக 10-12 பார்ப்பனரை வேலைக்கு அமர்த்தி சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறார்கள்.

சமஸ்கிருதம் அறிவாய்ந்த மொழியாக எடுத்துக்கொண்டு, சமஸ்கிருதத்தின் மூலமாக இந்த பார்ப்பனர்கள் ‘ஆரிய இனத்தின் நீட்சி’ என்று வெள்ளையர்கள் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய விவாதமாக அன்றைக்கு ஐரோப்பாவில் மாறுகிறது. தங்களுடைய இனத்தினுடைய நீட்சியாக அவர்கள் பார்ப்பனர்களை பார்க்கக்கூடிய ஒரு விவாதம் அங்கே நடக்க ஆரம்பிக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு இனம் குறித்தான ஒரு புரிதல் வர ஆரம்பிக்கிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசியல் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை இந்த இடத்தில் தான் நாம் பார்க்க வேண்டும்.

ராஜாக்களை மையப்படுத்திய அரசியல் இருந்த காலத்தில் இனத்தை மையப்படுத்திய அரசியல் நுழைந்து, ஆரிய இனப்பெருமை ஐரோப்பியர்களையும் ஆக்கிரமித்திருந்த காலத்தில், அவர்கள் இந்தியாவில் இருந்த பார்ப்பனர்களை தங்கள் இனத்தினுடைய நீட்சியாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் சமஸ்கிருதம் கொண்டாடப்பட்டது. அப்படியாக வந்த மரபினால் காலனிய காலத்தில் பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் பார்ப்பனர்களுடைய எந்த நிலங்களுக்கும் வரி வாங்குவதில்லை, அவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு, சடங்குகளில் முன்னுரிமை, இந்த சமுதாயத்தில் முன்னுரிமை என்ற  ஒரு கட்டமைப்பை கம்பெனியார் ஆட்சி அமைக்கிறது.

கம்பெனியார் ஆட்சியிலே அதிகாரத்திற்கு நெருக்கமாக பார்ப்பனர் இருந்தனர். பூலித் தேவனில் தொடங்கி வெள்ளையரை எதிர்த்து சண்டை போட்டவர்களின் நீண்ட பட்டியலை எடுத்து கொண்டால், எந்த இடத்திலும் எந்த பார்ப்பனரும் வெள்ளையரை எதிர்த்து சண்டை போட்டதில்லை.

வெள்ளைக்காரர்கள் இந்த மண்ணிலே ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 160-170 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெள்ளையர்களிடத்தில் எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூற ஆரம்பித்தார்கள். எங்களுக்கு ‘டொமினிக்கன் நாடு கொடு’ என்று கேட்டார்கள். காங்கிரசினுடைய முதல் கோரிக்கை சுதந்திர இந்தியாவல்ல. சுதந்திர இந்தியா கோரிக்கையை 1920-25க்குப் பிறகே எழுப்பினார்கள். ’சுயராஜ்யம்’ குறித்து அப்போதுதான் பேச ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னாடி அவர்கள் கேட்டதெல்லாம் டொமினிக்கன் அந்தஸ்து. “நாங்களும் ஒரு மாநிலமாக இருந்துவிட்டு போகிறோம், எங்களையும் வாழ விடு, நாங்களும் அமைச்சர் /முதலமைச்சர் ஆகிறோம்” என்றுதான் கேட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு கோரிக்கை வருவதற்கே 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

தன்னுடைய இருத்தலுக்கு (existence) பிரச்சனை வரும்பொழுது வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டை போட ஆரம்பிக்கின்றான். கம்பெனியார் காலத்தில் சிப்பாய் கலகம் வந்ததற்கு பிறகு இங்கிலாந்து ராணியினுடைய ஆட்சி வருகிறது. இங்கிலாந்து ராணியின் ஆட்சியில் அவர்கள் முறையான நிர்வாகத்தை கொண்டு வந்து, அந்த நிர்வாகத்தில் இந்திய மக்களையும் வேலைக்கு எடுத்து அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கொடுத்து, அந்த நாட்டுக்கான ஆட்சியை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இவ்வாறாக அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை இவற்றை உருவாக்குகிறார்கள். இந்த மூன்றிலும் பிராமணர்கள் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர்கள் அதிகாரத்தில் அமருகிறார்கள். அவர்கள் அந்த அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் முதல் பள்ளிக்கூடம் (1817 என்று நினைக்கின்றேன்) ஆரம்பித்த பொழுது பார்ப்பனர்கள்தான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார்கள். பார்ப்பனர்களுக்குத் தான் கல்வி கொடுக்கப்பட்டது. பார்ப்பனர்கள் ஆங்கிலத்தை உடனடியாக கற்றுக்கொண்டார்கள். ஹிட்லர் இந்தியாவை பிடித்துக் கொள்வான் என்ற ஒரு நெருக்கடி வரும்பொழுது அவர்கள் ஜெர்மன் மொழியை கற்று கொள்வதற்கு தயாராக இருந்தார்கள். ஜப்பான்காாரன் தாக்குதல் நடத்த இருந்தால் பார்ப்பனர் ஜப்பான் மொழியும் கற்றிருப்பர். அவர்களுக்குத்  தேவை அதிகாரத்தோடு இணைந்து நிற்பது, எந்த அதிகாரம் வந்தாலும் அந்த அதிகாரத்தோடு கைகோர்த்து கொள்வது. இதை அவர்களது வழக்க முறையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியாக அவர்கள் ஆங்கிலத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரனோடு நெருக்கமாக இருக்கிறார்கள். வெள்ளையர் அரசாங்கத்தில் அனைத்து இடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இப்படியான சூழலில்தான் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன. பார்ப்பன நம்பிக்கை கொண்ட சடங்குகளை இந்தியாவில் சட்டங்களாக மாற்றுகிறார்கள்.

அதுவரைக்கும் பார்ப்பனியம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் தான் இருந்தது. பார்ப்பனர்கள் வாழ்கின்ற பகுதிக்குள்ளாக, டெல்டாக்களிலே அவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டில் தஞ்சை டெல்டா, தாமிரபரணி டெல்டா மற்றும் மதுரையின் பாசனப் பகுதிகளில் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எங்கே பாசனம் இருக்கிறதோ, எங்கெல்லாம் விவசாயம் தழைக்கிறதோ அந்த இடத்திலே பாசன நிலத்தை மானியமாக பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

மெட்ராஸ் பிரசிடென்சி என்று சொல்லப்படுகின்ற தென்மாநிலங்கள் இணைந்த வெள்ளையனுடைய மாகாணத்தில் 1860ல் ‘இனாம் நிலம்’ என்று கொடுக்கப்பட்ட பட்டயங்கள் 3 லட்சத்து 17ஆயிரம் என்கின்ற அளவில் இருந்திருக்கின்றன. இனாம் பட்டயங்கள் என்றால் பார்ப்பனர்களுக்கு மானியமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் அல்லது கோவில் சேவைக்காக மானியமாக கொடுக்கப்படுகின்ற நிலங்கள். இந்த இனாம் நிலங்களை மேய்க்கக்கூடிய மிராசுதாரர்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

மெட்ராஸ் பிரசிடென்சியில் இவ்வாறான இனாம் நிலம் மட்டும் 37 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. ஒன்றல்ல; இரண்டல்ல; 37 லட்சம் ஏக்கர் நிலம். அன்றைக்கு மூன்று போகம் விளையக்கூடிய நன்செய் நிலம் கோவிலுக்கு மானியமாக இருக்கும். அது பார்ப்பனர்களுக்கு தானம் அளிக்கப்பட்ட இனாம் நிலமாக இருக்கும். அப்படி இனாம் நிலமாக கொடுக்கப்பட்ட பட்டயங்கள் மட்டுமே 3 லட்சத்து 17 ஆயிரம் பட்டயங்கள் இருந்தன. 37 லட்சம் ஏக்கர் நிலம் இனாம் நிலமாக இருந்தது. அன்றைக்கு மேட்டூர் அணை கிடையாது. மேட்டூர் அணை வந்ததற்கு பிறகுதான் 15 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு வருகிறது.

இன்றைக்கு கொங்குமண்டலத்தில் இருக்கக்கூடிய வளம் அன்று இருக்கவில்லை. அன்றைக்கு ஈரோடு நகரம் உயரமாக இருக்கும். காவிரி ஆறு கீழே இருக்கும். தண்ணீரை மேலே இறைக்க முடியாது. மேட்டு நிலத்திற்கு எப்படி தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும்? பம்ப்பும் (pump) மின்சாரமும் அன்று இருந்தால்தானே விவசாயத்திற்கு நீரைக் கொண்டு செல்ல முடியும்? அன்றைக்கு மேட்டு நிலத்தில் விவசாயம் கிடையாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை கொங்கு மண்டல உணவிலே மிக முக்கியமான தானியம் என்றால் அது கொள்ளு போன்றவைதான். இவை நஞ்சை பயிர் அல்ல, புஞ்சை பயிர்.

பெரும்பாலான ஆறுகளில் அணை கட்டாத காலத்தில், விவசாய பாசனம் விரிவுபடுத்தப்படாத காலத்தில், 37 லட்சம் ஏக்கர் நிலம் இனாம் நிலமாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் நேரடியாக இருந்தது. பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின் கீழே விவசாய நிலம் இருந்தாலும் அவர்களது ஸ்மிருதியின் அடிப்படையில்/வேதத்தின் அடிப்படையில் அவர்கள் விவசாயம் செய்யக்கூடாது. அதையும் மீறி கடந்த நூற்றாண்டில் (1920 -1930 காலகட்டங்களிலே) கும்பகோணத்தில் இரண்டு பார்ப்பனர்கள் விவசாயம் செய்த காரணத்தினால் அவர்கள் சாதியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் சங்கராச்சாரியாரைப் பார்த்து முறையிட்ட பொழுது “நம்மளுடைய ஸ்மிருதியின் அடிப்படையில் பார்ப்பனர் விவசாயம் பண்ணக்கூடாது. ஆகவே உங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை சரி” என்று சொல்லி அவர்களை விலக்கி வைத்தார். இது வரலாறு.

37 லட்சம் ஏக்கர் நிலம் அவங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் பார்ப்பனர் எதையெல்லாம் கட்டுப்படுத்தி இருப்பார்கள்? அன்றைக்கு தொழிற்சாலை கிடையாது, சேவைத்தொழில் கிடையாது, நிதித்துறை கிடையாது. மேலும் குறிப்பிட்ட சமூகத்திற்குள் மட்டும்தான் வணிகம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஆதிக்க சூழலுக்குள்தான் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

அன்றைக்கு நடந்த பஞ்சங்கள்- பெரும்பஞ்ச காலமாக இருந்த 1850கள், தாதுவருட பஞ்சம் அல்லது 1960களில் வந்த பஞ்சம் என எந்த பஞ்சத்திலும் பார்ப்பனர்கள் பசியால் இறந்ததாக வரலாறு கிடையாது. பார்ப்பனர்கள் உடல் உழைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். அந்த ஒரு சமூகத்தைத் தவிர மற்ற அனைத்து சமூகமும் உடல் உழைப்பின் மூலமாகத்தான் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். பார்ப்பனர்களுக்கு உடல் உழைப்பு கிடையாது. உடல் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் அவர்களுக்கு கிடையாது. நாம் அவர்களை வெறுக்கவில்லை. அவர்களுக்கு அமைக்கப்பட்ட வாழ்வு, அவர்களை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு, அறிவுத்துறையில் அவர்கள் செலவு செய்யும் நேரத்தை அதிகரித்தது.

கல்வி கற்றால் நீங்கள் உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெறுவது என்பது பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டதாக, மதத்தினால் உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது. அவர்கள் வெள்ளைக்காரனுக்கு வேலை செய்பவர்களாக மாறுகின்றார்கள்.

1885ல் வெள்ளையர் மானிடவியல் ஆய்வு செய்கின்றனர். இந்தியாவில் மானிடவியல் ஆய்வை முதன்முதலாக வெள்ளையர் முன்னெடுத்தனர். ’வெஸ்லி’ என்பவர் வங்கத்தில் அந்த ஆய்வை எடுக்கிறார். மனிதர்களை எப்படி வகைப்படுத்துவது, இந்திய மக்களை எப்படி வகைப்படுத்துவது என்ற ஆய்வில் ‘சாதியின் அடிப்படையில் மக்கள் இங்கே வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சாதி என்பது இன அடிப்படையில் தான் உருவாகி இருக்கிறது’ என்று வெள்ளையர் முடிவு செய்தனர். அந்த அடிப்படையில் மனிதனுடைய மூக்கின் அளவை வைத்து இனத்தை வரையறுக்கிறான். நீளமான மூக்காக இருந்தால் அவன் உயர்சாதி என்றும் தட்டையான மூக்காக இருந்தால் அவன் தாழ்ந்த சாதி என்றும் வெள்ளைக்காரன் அளவுகோல் வைத்திருந்தான். மானுடவியல் ரீதியாக இந்த சமூகத்தில் சாதி எப்படி உருவாகி இருக்கிறது, இனம் எப்படி உருவாகி இருக்கிறது என்று வரையறை செய்வதில் உயர் இடத்தில் இருக்கக்கூடிய வகையில் ஒரு பார்ப்பன கட்டமைப்பை ஆங்கிலேய அரசிற்குள் உருவாக்குகிறார்கள்.

இவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளையர்களுக்கும் பார்ப்பனருக்குமான உறவு இயல்பான உறவாக மாற்றப்பட்டு, அந்த அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அனைத்து இடங்களையும் நிரப்பக்கூடிய இடத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலைபெறுகிறது. இது 1885 தாதுவருட பஞ்சம் நடந்தபோது (ஒரு கோடி தமிழர்கள் கொல்லப்பட்ட மெட்ராஸ் பஞ்சம் நடந்த காலகட்டத்தில்) இந்த ஆய்வு வங்கத்தில் நடத்தப்பட்டது. இப்படியாகத்தான் பார்ப்பனர்கள் ஆங்கிலேயரோடு இணைந்து ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறார்கள். அந்த காலகட்டத்தில்தான் காங்கிரஸ் கட்சி வருகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் அப்பொழுதுதான் உருவாகிறது. இந்திய தேசிய காங்கிரசினுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த உயர்சாதிகளுக்கு வெள்ளையர்களிடத்தில் பேரம் பேசி தங்களுக்கான வணிக உரிமையும் அதிகாரத்தில் பங்கேற்கின்ற உரிமையும் வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்கு. இந்தியா விடுதலை வாங்க வேண்டும் என்ற இலக்கெல்லாம் அப்பொழுது கிடையாது. காங்கிரஸ் கட்சி என்பது அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆங்கிலேய அரசிலே அவர்கள் பங்குபெறுவதற்காகத்தான் அந்த கட்சி உருவாக்கப்படுகிறது. 1885க்கு பிறகு காங்கிரஸ் கட்சியினுடைய மாநாடுகள் நடைபெற்ற காலத்தில் ஒரு பயணத்தை குறித்து குறிப்பிடுகிறார் தோழர் எஸ்விஆர் அவர்கள். சென்னையிலிருந்து பார்ப்பனர்கள் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு போகிறார்கள். அந்த காங்கிரசினுடைய பிரதிநிதிகள் செல்லும் அந்த கப்பலில் பார்ப்பன காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு மட்டும் ஒரு தளம் இருக்கின்றது. பார்ப்பனர் மட்டும் இருப்பதற்கான அந்த தளத்திலே பார்ப்பனர் அல்லாதவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கப்பலில் பயணம் செய்யக்கூடிய அனைத்து பயணிகள் உணவு உண்ணும் இடத்தில் பார்ப்பனர்களுக்கு உணவு பரிமாறப்படாது. பார்ப்பனர்களுக்குத் தனியாகத்தான் உணவு பரிமாறப்படும். பார்ப்பனர்களுக்கு என்று தனி சமையல்காரர். மற்றவர்களுக்கு தனி சமையல்காரர். இதில் சில பார்ப்பனர்கள் உணவை பிற பார்ப்பனர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடத்தில் சாப்பிடாமல் தங்கள் அறைக்கு எடுத்து சென்று சாப்பிடுவார்கள். இதில் ஒரு பார்ப்பனர் (மயிலாப்பூரில் இருந்து போன ஒரு பார்ப்பனர் என்று நினைக்கின்றேன்) அவர் அங்கே சாப்பிட்டாலே தீட்டு என்று சொல்லி வீட்டிலே காபி டிக்காசனை போட்டு எடுத்து கொண்டு சென்றார். அந்த கப்பலில் பயணம் செய்த மூன்று / நான்கு நாட்களில் ஒருவேளை உணவை கூட அவர் அங்கு சாப்பிடவில்லை. இப்படிப்பட்ட ஒரு தீண்டாமை சமூகத்திலேதான் அன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இந்த சம்பவம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிகழ்ந்தது. இதே போன்று பாம்பே காங்கிரஸ் மாநாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. “தென்னிந்தியாவில் இருந்து வரும் பார்ப்பனர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தங்குவதற்கு தனி வீடு கேட்கிறார்கள். தனி வீடு மட்டுமல்ல தனி வீடு கிணற்றோடு வேண்டும் என்று கேட்கிறார்கள். ஏனென்றால் குழாய் தண்ணீர் பிறர் கை பட்டு தீட்டாகி இருக்கும். ஆனால் கிணற்று நீரை பிறர் கைபடாமல் நாமே எடுத்து ஊற்றிக்கொள்ளலாம், தீட்டாகாது” என்று கூறுகிறார்கள் என்று அந்த மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அங்கலாய்த்தார். ஒவ்வொரு பிரதிநிதிக்கும் ஒவ்வொரு வீடும் கிணறும் ஏற்பாடு செய்வதற்கு நாங்கள் எங்கே போவது? ஒட்டுமொத்த பாம்பேவின் வீடுகளை காலி பண்ணி தரணுமா? என்று அவர் அங்கலாய்த்தார். இதுதான் நிலைமை. இந்த பார்ப்பனரிடமிருந்து கடப்பாரை வாங்கிக்கொண்டு திராவிடத்தை இடிப்பதற்கு ஒரு கோமாளி (சீமான்) வந்திருக்கிறார்.

பார்ப்பனர்களுடைய இந்த ஆதிக்க அரசியல் இவ்வாறு நிலைபெறுகிறது. பாரதியை குறித்த விமர்சனத்துக்குள் நான் செல்லவில்லை. ஆனால் பாரதியின் அரசியல் என்று நாம் சொல்ல வேண்டி இருக்கிறது. பாரதி ஒரு கவிஞன், தமிழ் மொழிப் புலமை படைத்த கவிஞர். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் இந்திய விடுதலை இயக்கத்தோடு சுதேசி இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைக்கு இந்திய சுதேசி இயக்கம் விடுதலை இயக்கத்தில் யார் இருந்தார்கள்? இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான விடுதலை போராட்டத்தை நடத்தியவர்கள் பழங்குடிகள்தான். பழங்குடிகள் தான் இந்தியாவில் விடுதலை போராட்டம் நடத்தினார்கள். நாகாலாந்தில் இருந்த பழங்குடிகள், அசாமில் இருந்த பழங்குடிகள், மணிப்பூரில் இருந்த பழங்குடிகள், சத்தீஸ்கரினுடைய பழங்குடிகள், தமிழ்நாட்டிலே குற்றப்பரம்பரை சட்டத்திலே வரையறுக்கப்பட்ட பழங்குடிகள் – இவர்கள்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக சண்டை போட்டார்கள். ராணுவத்திற்கு எதிராக சண்டை போட்டார்கள். பிர்சா முண்டா இதில் இறுதியாக வந்தவர். பழங்குடிகள் தொடங்கிய சண்டை 1740 – 50களில் தொடங்கியது. இன்றைக்கு வரை நடந்து கொண்டிருக்கிறது தோழர்களே!

தங்கள் நிலத்தை, மலையை, வளத்தை காத்துக் கொள்வதற்காக இன்றும் சண்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடிகள் சமவெளி பிரதேசத்தினுடைய ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. சமவெளி பிரதேசம் என்பது வேறு, மலைப்பிரதேசம் என்பது வேறு.  அவர்கள் தான் வெள்ளையர்களுக்கு எதிராக சண்டை போட்டார்கள். வெள்ளையர்களுக்கு எதிரான அந்த விடுதலை போராட்டத்தில் எந்த இடத்திலும் பார்ப்பனர்கள் தங்களை இணைத்து கொள்ளவில்லை. இனாம் நிலத்தில் வரி வாங்காமல் இருந்த இடத்தில் அதை மறுத்து அனைத்திற்கும் வரிவாங்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவெடுத்தபோதுதான் பார்ப்பனர்கள் ஆங்கிலேயருடன் முரண்படுகிறார்கள்.

பயன்படாமல் இருந்த இனாம் நிலங்களுக்கு ஆங்கிலேயர் வரி போட ஆரம்பித்த பிறகு, பார்ப்பனர்களின் ‘பிரிவிலேஜ்’ (முக்கியத்துவம்) குறைய ஆரம்பிக்கின்றது. அவர்களின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தபோது பிற சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்கின்ற குரல் எழ ஆரம்பிக்கிறது. பிற சாதிக்காரனுக்கும் பிரதித்துவத்தை பற்றி பேச ஆரம்பித்தவுடன் ஆரிய ஆதிக்கத்திற்கு நெருக்கடி வருவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அப்போதுதான் அவர்கள் வெள்ளையருக்கு எதிராக பேச ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி பேசும் பொழுது அந்நியர் வந்து நம்மை ஆக்கிரமித்து விட்டான் என்று அவர்கள் பேசவில்லை. அந்நியரின் வருகையால் சனாதனத்திற்கு பிரச்சனை என்றுதான் போராட ஆரம்பிக்கிறார்கள். அவனுடைய ஆதிக்கத்திற்கு பிரச்சனை என்றுதான் போராட ஆரம்பிக்கிறார்கள். ஆரியர்களுடைய/பார்ப்பனர்களுடைய கோட்பாடையும் அவர்களுடைய பிராக்டீஸ், ஸ்மிருதிகள் போன்றவற்றை பிரிட்டிஷ் கோட் ஆப் லா என்று உருவாக்குகிற சமயத்தில், இந்த முரண்பாடுகள் என்பது சாமானிய மக்களை உள்ளெடுக்க ஆரம்பித்ததால் தனக்கான இடமில்லாமல் போய்விடும் என்கின்ற காரணத்தினால் பார்ப்பனர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே சண்டை நடக்க ஆரம்பிக்கிறது.

இந்த சமயத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை கண்டு அதற்கு எதிரான சண்டை பிற சமூக மக்களிடத்தில் வர ஆரம்பிக்கிறது. இந்த சண்டை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்து மைசூர் சமஸ்தானத்தில் பெரும் கலகமாக வெடித்ததால் மைசூர் அரசர் இட ஒதுக்கீடு கொடுக்கிறார். இப்படி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதர் சண்டை ஆரம்பிக்கிறது. பெரியார் பிறந்த காலத்திற்கு முன்பாகவே இந்த சண்டை ஆரம்பிக்கிறது. இதனாலேயே அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ’திராவிட மகாசன சபை’ என்று பேசுகிறார். ஆரிய சமாஜ், பிரம்ம சமாஜ் என்று ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அமைப்புகள் வந்ததால் அதை எதிர்த்து திராவிட மகாசன சபை தோன்றியது.

ஒரு தேசிய விடுதலை போராட்டம் என்பது வலதுசாரியாகவும் இருக்கும், இடதுசாரியாகவும் இருக்கும். அது முற்போக்கானதாவும் இருக்கும், பிற்போக்கானதாவும் இருக்கும். ஒரு தேசிய விடுதலை கோரிக்கையை எப்பொழுது ஜனநாயக கோரிக்கையாக பார்ப்போமென்றால், சுரண்டப்படும் மக்கள் சண்டை போட்டால் அது ஜனநாயக கோரிக்கை. ஆதிக்கத்திலிருந்து ஆதிக்கத்தை இழந்தவன் சண்டை போட்டால் அது வலதுசாரி கோரிக்கை. இன்று ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமை இழந்த மக்கள், பாதிக்கப்படுகின்ற மக்கள் சண்டை நடத்துவது இடதுசாரி தமிழ்த்தேசியம். அவர்களுக்கு ஜாதி தேவையில்லை, ஏழை-பணக்காரன் வேறுபாடு தேவையில்லை, ஆண்-பெண் வேறுபாடு தேவையில்லை. எல்லாருக்குமான கல்வி, எல்லாருக்குமான கூலி, எல்லாருக்குமான வாழ்வாதார உத்தரவாதம் என்கின்ற முழக்கத்தை முன்வைத்து நடத்துவது முற்போக்கு இடதுசாரி தமிழ்த்தேசியம். சாதி வேண்டும், பெண்ணடிமைத்தனம் வேண்டும், சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது, இட ஒதுக்கீடு தேவையில்லை என்றெல்லாம் பேசக்கூடியது வலதுசாரி தமிழ்த்தேசியம்.

அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தது வலதுசாரி தேசியத்தன்மை. அந்த வலதுசாரி தேசியத்தன்மையில் பார்ப்பனர் உரிமை மையப்படுத்தப்பட்டது. பார்ப்பனரின் அதிகார நிலை மையப்படுத்தப்பட்டது. அதிலிருந்து வரக்கூடிய தலைவர்கள்தான் கோகலே, பட்டேல் போன்றவர்கள்.

கோகலேவில் தொடங்கி பட்டேல் முதலானோர் காங்கிரசில் வலதுசாரி தன்மையில் இருக்கின்றார்கள். கோகலே, திலகர் போன்றோர் வெள்ளையர்களுக்கு எதிராக பார்ப்பனிய மேலாதிக்க சார்பில் பேசுகிறவர்கள். அவர்கள் அயோத்திதாசரை போன்று ஏழை சாமானிய மக்களினுடைய கோரிக்கையில் இருந்து வெள்ளையரை எதிர்கொண்டவர்கள் அல்ல.

இவ்வாறு வேறு வேறு தளங்கள் இருக்கின்றன. பாரதியார் வந்த தளம் எதுவென்றால் சுதேசி இயக்கத்தில் கோபாலகிருஷ்ண கோகலேவோ அல்லது திலகரோ பேசுகின்ற இந்து சனாதன அரசியலின் கீழாக இருந்து வெள்ளையரை எதிர்க்கக்கூடிய குரல். அது பிற்காலத்திலே இந்துத்துவமாக மாறுகின்றது. அது தொடக்க காலத்தில் பார்ப்பனியமாக இருந்தது. அந்த அரசியலோடு இணைத்துக் கொண்டவர்தான் பாரதி. அதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்கும். ஆனால் அது ஒரு போலியான ஒற்றுமை போன்றது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் நமக்கு சாதிதான் நெருக்கடி என்று பேசுகிறார் அல்லவா, இது போலியான ஒற்றுமை. அவர்கள் பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சாதி ஒற்றுமை வேண்டும் என்று கேட்கிறார்கள். நாம் பார்ப்பன மேலாதிக்கம் ஒழிந்த ஜாதி ஒழிப்பை கேட்கின்றோம். இரண்டும் வேறு வேறு. ஆனால் பார்த்தால் ஒன்று போலவே தெரியும். பழங்குடியில் இருந்து ஒருவரை ஜனாதிபதி ஆக்கிவிட்டால் மோடி பழங்குடிக்கு சாதகமான நபரா? அந்த அரசியல் என்ன? பழங்குடியில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக ஆக்கிவிட்டு மொத்த பழங்குடிகளையும் ஒழிப்பதுதான் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) வழிமுறை.

அன்றைக்கு பாரதி தேர்ந்தெடுத்த அரசியல் என்பது சுதேசிய அரசியல். அந்த சுதேசிய அரசியலுடைய மையம் என்ன? அதுதான் விவாதப் புள்ளி. அந்த சுதேசிய அரசியல் வெள்ளையர்களை சுரண்டுபவர்களாக ஏகாதிபத்தியவாதிகளாக வரையறுக்கிறது. ஆனால் வெள்ளையரை எதிர்த்து யாருடைய தலைமை வரவேண்டும், அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்பதாக சுதேசி கூறும் அந்த புள்ளியைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அந்த புள்ளி சனாதனத்தை ஏற்றுக்கொண்ட புள்ளி. அதனால்தான் திலகர் வெள்ளையர்களுக்கு எதிராக இந்து மத உணர்வை தூண்டுகிறார். இதற்கு அடுத்த கட்ட இடத்தில் காந்தி வருகிறார். காந்தி சனாதனத்தை ஏற்று கொண்டவர். ஆனால் இந்து-முஸ்லிம் ஒற்றமை கேட்கின்றார். சாதிக்குள் சமரசம் வேண்டும் என்கின்றார். என்ன வகையான சமரசம்? ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்கின்ற சமரசம்.  இப்படியான ஒரு போக்கு/ வழிமுறை நடக்கும் பொழுதுதான், இந்த சமரசமும் வேண்டாம் என்று தீவிரவாத இந்துத்துவ நிலைப்பாடு கொண்ட அமைப்புகளாக 1924-இல் இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்-சும் உருவாகின்றன.

இந்து தேசம், அகண்ட பாரதம் என்கின்ற கோரிக்கை இதன் பின்னால் எழுகிறது. ஏனென்றால் அப்போது தனி நாடு கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. என்றைக்கு காங்கிரஸ் கட்சியில் சுயராஜ்ய கோரிக்கை உயர்கிறதோ அந்த சுயராஜ்ஜியம் பெற்ற இந்தியா என்பது இந்து நாடாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்படுகிறது.

தமிழ்த்தேசியம் என்பது சாதி ஒழிந்த தமிழ்த்தேசியமா அல்லது சாதி வேண்டும் என்கின்ற தமிழ்த்தேசியமா? சாதி ஒழிந்தால்தான் தமிழ்த்தேசியம் உருவாகும், அப்படிப்பட்ட தமிழ்த்தேசியம் தான் உண்மையான தமிழ்த்தேசியம் என்று நாம் (இடதுசாரி தமிழ்த்தேசியம்) பேசுகிறோம். ஆனால் சாதியின் மூலமாகத்தான் தமிழ்த்தேசியத்தை அடைய முடியும் என்று வலதுசாரி தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் சொல்கிறார்கள். பாரதியினுடைய அரசியல் கோட்பாடு இந்த புள்ளியில்தான் பயணம் செய்கிறது. எனவேதான் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. 

இந்த இடத்தில்தான் பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் இந்தியா முழுவதும் நடக்கின்றன. அது கூர்மை பெற்ற அரசியல் வடிவமாக மாறுகிறது. அயோத்திதாசரில் தொடங்கி, பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையாக வந்து நீதிக்கட்சியாக மாறுகிறது. பெரியாரினுடைய காலத்தில் அது சுயமரியாதை இயக்கமாக மாறுகிறது. பெரியாரை விமர்சிக்கக்கூடிய போலி தமிழ்த்தேசியவாதி சீமானோ அல்லது பிற கும்பலோ பெரியார் ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் என்று கேட்கிறார்கள்.

தந்தை பெரியார் அதற்கு முதலில் வைத்த பெயர் ‘சுயமரியாதை இயக்கம்’. ஒருவருடைய மரியாதையை முன்னிறுத்துகின்ற கொள்கையை முன்வைத்த இயக்கம் என்பதால் ‘சுயமரியாதை இயக்கம்’ என்று பெயர் வைத்தார் பெரியார். “காங்கிரஸ் கட்சி சுயராஜ்ஜியம் கேட்டது, ஆனால் பெரியார் சுயமரியாதையை கேட்டார்” என்று எஸ்விஆர் அவர்கள் ஒரு கட்டுரையில் அழகாக எழுதி இருப்பார்.

சுயமரியாதை இல்லாத சுயராஜ்ஜியம் எதற்கு? இன்றைக்கு சுயராஜ்ஜியம் இருக்கிறது, ஆனால் சுயமரியாதை இல்லை.

இந்தியா என்கின்ற கட்டமைப்பு சுயராஜ்ஜியம் கொண்ட கட்டமைப்பு, ஆனால் அந்த சுயராஜ்ஜியத்திற்குள் சுயமரியாதை இல்லை. சுயமரியாதை என்ற ஒன்றுக்காக போராடிய தலைவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவர்தான். இந்த இருவருக்கும் எதிராகத்தான் காங்கிரஸ் கட்சியும் இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்-சும் அன்றிலிருந்து இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் வரலாறு.

அதிகாரத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை கேள்வி எழுப்ப வேண்டும், தகர்க்க வேண்டும் என்கின்ற ஒரு இலக்குடன் வேலை செய்தது நீதிக்கட்சி. அவர்கள் அரசியல் அதிகாரப் பகிர்வுகளைப் பேசினார்கள். அரசியல் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றால் அனைத்து மக்களுக்கும் பிரதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என்று பேசினார்கள். அப்படித்தான் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்கள். இந்துக்களில்  இருக்கக்கூடிய பிறசாதிகளுக்கு  44%, பட்டியல் சமூக மக்களுக்கு 8%, கிறிஸ்தவர்களுக்கு 16%, இஸ்லாமியர்களுக்கு 16 %, பார்ப்பனர்களுக்கு 16% என நீதிக்கட்சி இடஒதுக்கீடு விகிதம் கொண்டுவந்தது. மக்கள்தொகையில் 3% இருந்த பார்ப்பனர்களுக்கு 16% இடம் கொடுத்தவுடன் 16% போதாது 100% கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தார்கள்.

நம் நிலத்திற்கு பட்டா தேவை எனும் நிலை எப்போது தோன்றியது? வெள்ளைக்காரன் காலத்தில் தோன்றியது. ஒரு நிலத்தின் உரிமையாளர் இன்னார்தான் என்று சொல்லி பட்டா எழுதுகின்ற உரிமை அன்று பார்ப்பனர் கையில் இருந்தது. இன்று நம் (ஒடுக்கப்பட்ட மக்களின்) வீடுகளை இடிப்பதற்கான மூலம் இதிலிருந்துதான் தோன்றியது. 100ஆண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனர்தான் வருவாய் அதிகாரி, பார்ப்பனர்தான் நீதிபதி, பார்ப்பனர்தான் வக்கீல், பார்ப்பனர்தான் போலீஸ் என்ற அதிகார கட்டமைப்பு அவர்கள் கையில் இருந்தது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தது என்ற தகுதிதான் இதற்குக் காரணம். இதைத்தான் பெரியார் குறிப்பிட்டார்.

பெரியார் பேச்சு வழக்கில் அதைக் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் இன்று நம் பேச்சு தமிழ் போல் அன்று இருக்கவில்லை. இப்போது இருப்பது போன்ற ‘பார்வையாளர்கள்’ பெரியார் காலத்தில் இல்லை. இன்று இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே (100% பேருமே) டிகிரி படித்த பட்டதாரிகள். எழுத படிக்கத் தெரிந்தவர்கள். சிந்திக்கவும் வாசிக்கவும் தெரிந்தவர்கள். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்களிடத்தில் எந்த மொழிநடையில் பேசினால் அவர்களுக்குப் புரியுமோ அந்த மொழிநடையில் பேசி அவர்களை யோசிக்க வைத்தார் பெரியார். அவர் அரங்கில் தனக்கு எதிராக இருக்கக்கூடிய ஒரு கூட்டத்தாரிடம் பேசுகின்ற பேச்சை நூறு ஆண்டுகள் கழித்து ஒருவன் ஆய்வு செய்கிறான் என்றால் அவன் ஒரு ஆய்வாளரா? அவர் யார் கிட்ட பேசுகிறார்? பெரியார் உரிமையோடு நீ இப்படி பண்ணாதயான்னு திட்டுகிறார். “சுயமரியாதை உணர்வை நீ வளர்த்துக்கொள்” என்று அவரிடத்தில் பேசுகிறார்.

மொழியைப் பற்றி மட்டுமல்ல பிற விடயங்களைப் பற்றி பேசும் பொழுதும் எதிர்மறை வார்த்தைகளோடு அதை அர்த்தப்படுத்துகிறார் பெரியார். அவர் மொழியை இழிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் பல கட்டுரைகள் எழுதிவிட்டு போயிருக்கலாம். அப்படி எதுவும் செய்யவில்லை பெரியார். அவர் மொழியை இழிவு செய்து எழுதின கட்டுரையை ஆதாரமாக சீமான் வைத்திருக்கிறாரா? ஆய்வுகளை ஆதாரமாக சீமான் வைத்திருக்கிறாரா? இல்லை. பார்ப்பன கடப்பாரை கும்பல் (சங்கராச்சாரி) தமிழை நீசமொழி என்று சொன்னது. அதற்கென்று ஒரு காரண காரியத்தை, வேத விளக்கத்தை முன் வைத்தது.  

தமிழ் மொழியை குறித்தான ஆய்வு, தமிழ் மொழிக்குள் இருந்த மெய்யியல் மரபு சிந்தனை இருந்தது 30 – 40 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் கூறித்தானே தெரிந்தது. தமிழனுடைய தொல்லியலை பற்றிய ஆய்வு 100 ஆண்டுகளுக்குள் தான்  வருகிறது. கீழடி ஆய்வு வெளி வந்திருக்கின்றது. இன்றைக்கு உனக்கு (சீமான்) சொல்லக்கூடிய தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெரியாரை பேச முடியாது. பெரியாரின் காலத்தில் பெரியார் எதிர்கொண்ட சிக்கலுக்கு பெரியார் எப்படி தீர்வு கண்டுபிடித்தாரா அந்த இடத்தில் இருந்துதான் பேச வேண்டும். பெரியார் தீர்வு கண்டுபிடிப்பதற்காகப் பேசினார். யாரையும் இழிவுபடுத்துவதற்காக பேசவில்லை.

அன்றைக்கு பார்ப்பனர் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருந்த நிலையில், “நீ மேல வா” என்று பேசுகிறார் பெரியார்.

நான் நன்றாக ஓவியம் வரைவேன். என் நண்பன் நன்றாக கால்பந்து விளையாடுவான். என் தந்தை “நீ டிராயிங் போட்டு என்ன செய்யப் போற?” என்று கூறினார். என் நண்பனின் தந்தை “இனிமே ஃபுட்பால் விளையாடினா கால உடைச்சிடுவேன்” என்று கூறினார். ஓவியம் வரைவது, கால்பந்து விளையாடுவது இரண்டையும் குறைத்து இருவரும் படிக்கத் தொடங்கி விட்டோம். இதற்காக எங்கள் பெற்றோரை நாங்கள் குறை சொல்ல முடியுமா? “நம் குடும்பத்தில் யாருமே பொறியியல் பட்டம் வாங்கவில்லை. நீயாவது படிச்சு வந்தனா குடும்பத்தில் இருக்கக்கூடிய தம்பி, தங்கைகள் உன்னைப் பார்த்து நன்கு படிப்பார்கள். நீ ஒரு நல்ல வேலைக்குப் போனால், அவர்களும் நல்ல வேலைக்கு செல்வார்கள்” என்று என் அப்பா கூறினார்.

என்னுடைய திறமையை அவர் குறை கூறவில்லை, என் திறமையை அவர் இழிவுபடுத்தவில்லை. நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பேசினார். “நாங்க மரம் ஏறினோம், ஆடு மாடு மேச்சோம். ஆனா நீ நல்ல படிச்சு டிகிரி வாங்கினால் குடும்பத்தில் எல்லாரும் மேல வருவாங்க” என்று நண்பனின் தந்தை பேசினார். இன்று இருப்பதுபோல் விளையாட்டுத்துறை அன்று வளராத காலத்தில் அவர்கள் அவ்வாறு பேசினார்கள். பெரியாரை புரிந்து கொள்வதற்கான வழிமுறை இதுதான். அவர்கள் (பெற்றோர்) பேசியதில் இருந்து இரண்டு வரிகளை மட்டும் எடுத்து அவர்கள் இழிவாக பேசிவிட்டார்கள் என்று யாரும் கூற முடியுமா? ஆனால் சீமான் அப்படித்தான் தந்தை பெரியார் குறித்து அவதூறு செய்கிறார்.

பதின் பருவத்தில் அப்பா அம்மா என்ன சொன்னாலும் நமக்குத் தப்பாகத் தோன்றும். அவர்கள் பேசினால் மறுத்துப் பேசத் தோன்றும். அவர்கள் நமக்கு சரியானவற்றை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பது நமக்கு முதிர்ச்சி வரும்போதுதான் புரியும். அந்த முதிர்ச்சி வரும்போது நம்மை கேள்வி கேட்கும் குழந்தைகள் பிறந்திருப்பார்கள். இதுதான் வாழ்க்கை ஓட்டம். அது போன்ற விடலைத்தனமான பசங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் சீமானுடைய அரசியல்.

அவருக்கு வேறு எந்த இலக்கும் கிடையாது. 15 – 16 வயது பதின்மருக்கு பெற்றோர் கூறும் கட்டுப்பாடுகள் கோபத்தை வரவைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டு “உங்க அப்பா கேவலமானவர், கெட்டவர், மோசமானவர்” என்று ஒருவர் அந்த சிறுவனை மூளைச்சலவை செய்தால் அவன் சொந்த அப்பா அம்மாவை எப்படி வெறுப்பானோ அது போன்ற அரசியலைத்தான் சீமான் செய்து கொண்டிருக்கிறார்.

பெரியாரை விளக்கி அதில் சரி தவறுகளை பேசுவது என்பது வேறு. அதை விவாதிப்பது என்பது வேறு. ஆனால் சீமான் செய்வது அதுவல்ல. தன் கட்சியினரை மேடையில் அவதூறாகப் பேச வைத்து, அவர் கூட்டத்தில் உட்கார்ந்து கைதட்டி அந்த அவதூறைக் கொண்டாடி ரசிக்கிறார்.

தமிழ் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் பெரியாரை ஏற்றுக்கொண்டார்கள். பெரியாரின் வழி சென்றார்கள். லட்சக்கணக்கில் பெரியார் பின்னால் திரண்டார்கள். காரணம் பெரியாரால் அவர்கள் விடுதலை பெற்றார்கள். நேரடியாக விடுதலையை அனுபவித்தார்கள். ஐயா மணியரசன் போன்றோ சீமான் மாதிரியோ மேடையில் மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை.

பெரியார் ஒரு இயக்கம். மேடையில் என்ன பேசினாரோ அதை களத்தில்  நடைமுறையில் செய்தார் பெரியார். அவர் மட்டுமல்ல, திராவிட கழகத்தில் இருந்த ஒவ்வொரு தொண்டனும் அவரவர் ஊரில் அவரவர் தெருவில் அவரவர் குடும்பத்தில் சண்டை போட்டார்கள். குடும்பத்தில்  பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் எனவும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் எனவும் சண்டை போட்டார்கள். சாதிக்கு எதிராகவும்  அனைத்து சாதியினரின் கோவில் நுழைவிற்காகவும் பெரியாரிஸ்டுகள்  சண்டை போட்டார்கள்.

நீடாமங்கலம் ஆய்வு புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நீடாமங்கலத்தில்  சமபந்தி போஜனத்தில் பட்டியல் சமூக மக்கள் சாப்பிட வந்ததற்காக  பார்ப்பனர்கள் அவர்களை எப்படி அடித்துத் துன்புறுத்தினார்கள், பண்ணையார்கள் அவர்களை எப்படி அடித்தார்கள், அதற்கு பெரியாரியவாதிகள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்று அந்த புத்தகத்தில் இருக்கின்றது.

இவர்கள் (சீமான், ஆர்.எஸ்.எஸ்.) பேசுவதைப் போல பெரியாரை வீழ்த்தி விட முடியாது. பெரியார் என்பவர் ஆல மரத்தைப் போல விழுதுகளோடும்  வேர்களோடும் ஊன்றி நிற்கக்கூடிய இடம். ஒவ்வொரு ஊரிலும் அடக்குமுறைக்கு எதிராக ஒரு பெரியாரிஸ்ட் சண்டை செய்திருக்கிறார். ஆனால் இந்தப் போராட்டங்கள் அனைத்துமே பதிவாகியதா? என்று  சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தில் இருந்த தாத்தா 1940களில் பெரியாரோடு இணைந்து வேலை செய்தவர். ஆனால் குடும்பத்தில் இதைப்பற்றி எதையும் சொன்னது இல்லை. அவரைப் பற்றி எந்த விடயமும் எங்களுக்குத் தெரியாது. 92 ஆம் வயதில் அவர் மறைவுக்குப் பிறகு, கொங்கு மண்டலத்தில் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது அவரைப் பற்றி பிறர் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தற்போது ஐயா செந்தலை கௌதமன் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களுடைய பிறந்தநாள் விழா செய்தியில் “ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பரப்புரை பயணம் செய்த காலத்தில், ஆசிரியர் வீரமணி அவர்களை இணைத்துக் கொண்டு அந்த சுற்றுப்பயணத்திற்குப் பொறுப்பேற்று அழைத்துச் சென்ற புலவர் ஆறுமுகனார் தோழர் திருமுருகன் காந்தியினுடைய தாத்தா” என்று எழுதி இருக்கிறார். அப்படித்தான் எனக்குத் தெரியும். பெரியாரிஸ்டுகள் இப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். பல தலைமுறைகளாக எங்களுடைய குடும்பத்திலே சுயமரியாத திருமணம் நடந்திருக்கின்றது. பார்ப்பனர் அல்லாத முறையில் திருமணம் செய்யக்கூடிய வழிமுறையை குடும்பத்திற்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர்தான் வலியுறுத்தினார். எங்கள் பாட்டிக்கு தமிழ்ப்பெயரை சூட்டிய தமிழ் ஆசிரியர் அவர். 

இதுவரை 1920 காலகட்டம் வரை பெரியாருடைய முக்கியத்துவத்தை குறித்துப் பேசினோம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பிறகு என்னவெல்லாம் நடந்தது என்று நாம் இனி பேச வேண்டும். அன்றைக்கு இந்தியாவிற்குள் இருந்த மூன்று மிக முக்கியமான முழக்கங்கள்-சுயராஜ்ஜியம், சமதர்மம், சுய மரியாதை. சுயராஜ்ஜியம்-நாடு விடுதலையாக வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் பேசியது. நாட்டுக்குள் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் பேசவில்லை. சமதர்மத்தை குறித்து கம்யூனிஸ்ட்கள் பேசினார்கள். சமதர்மம் உருவாக வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள். ஆனால் ஒரு மதம் மனிதன் மீது திணித்த இழிவை நீக்க வேண்டும் என்று போராடியது சுயமரியாதை இயக்கம். இந்த மூன்று போக்குகள் முக்கியமான போக்குகள். இந்த மூன்று போக்குகளுக்கு அப்பால், மூன்று போக்குகளுக்கும் எதிராக இருந்ததுதான் இந்துத்துவ அமைப்பு.

சீமான் சொல்கிறார்- “நான் பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்” என்று பேசுகிறார். திராவிட கோட்டை தமிழர்களால் கட்டப்பட்டது. பிராமண கடப்பாரை ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த பிராமணன் என்கின்ற வார்த்தை வருணத்தைக் குறிக்கிறது. ஐயர்-ஐயங்காரிடம் அவர்கள் சாதியைக் கேட்டால் “நான் பிராமணன்” என்று சொல்லுவார்கள். சாதியை விட வர்ணப்பெயரைக் கூறுவார்கள். ஐயர் என்றால் சைவ வழிமுறையில் இருக்கிறவர். ஐயங்கார் என்றால் வைணவ முறையில் (வடகலையாகவோ தென்கலையாகவோ) இருக்கிறவர்.

ஒருவரது வேலை, தொழில், இடம், ஊர் இவற்றில் ஏதாவது ஒன்றை சாதி என்பது குறிக்கும். ஆனால் பிராமணன் என்பது வர்ணம். வர்ணம் தான் எந்த சாதி மேல் எந்த சாதி கீழ் என்று நிர்ணயம் செய்வது. ஒரு சாதி எந்த வர்ணத்தை சார்ந்தது என்பதுதான் ஏற்றத்தாழ்வை நிர்ணயிக்கும்.

‘பிரம்மாவின் தலையிலிருந்து வந்தவன்’ என்பதுதான் பிராமணன் என்ற வார்த்தைக்கு அர்த்தம். சீமான் பிராமண கடப்பாரையைத் தூக்குவதாக பேசியிருப்பது அவர் பிரம்மாவின் காலிலிருந்து வந்தார் என்று கூறுவதற்கு சமம். பிராமண கடப்பாரையை ஒரு சூத்திரன் தூக்குகிறார். எதற்காக? தமிழனுடைய அரசியலை இடிக்க வேண்டும் என்பதற்காக. பிராமண எதிர்ப்பு என்பது வர்ண எதிர்ப்பு. ஏற்றத்தாழ்வை வரையறை செய்யக்கூடிய கோட்பாட்டை நாம் எதிர்க்கிறோம். தனி மனிதனைப் பற்றியல்ல.

பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் என்ற பெருமையோடு “I am a proud brahmin” என்று அவன் பேசினால் நாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவர்கள் (சூத்திரன்) என்று பொருள்படும். ஆரியர்கள் மட்டும்தான் பிராமணன் சத்திரியன் வைசியன் என்ற மூன்று அடுக்குகளை ஏற்றுக்கொண்டவர்கள். இங்கே (தமிழ்நாட்டில்) சிலர் ஷத்ரியன், வைசியன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களை பிராமணர்களுடைய வேதங்கள் அவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களை சத்திரியர்கள் என்றோ வைசியன் என்றோ வேதத்திலோ ஸ்மிருதியிலயோ சுருதியிலயோ ஆரண்யங்களிலோ புராணங்களிலோ எங்கேயும் இல்லை. வேத சனாதன கட்டுமானத்தில் தமிழர்களில் எந்த சாதியும் வைசியனும் அல்ல சத்திரியனும் அல்ல. அவனுடைய வேத முறைப்பிடி பூணூல் போட்டவர்கள் இருபிறப்பாளர்கள். ‘தாயின் வயிற்றிலிருந்து குருதியிலிருந்து பிறப்பதால் தீட்டாக பிறக்கிறாய், அதை கழுவி புனிதப்படுத்தி வேத மந்திரத்தை சொல்லி உன்னை புனிதமான இன்னொரு பிறவியாக நான் மாற்றுகிறேன்’ என்கின்ற வழிமுறைதான் பூணூல் போடுவது.

பூணூல் போடாவிட்டால் அதே தீட்டுடன் இருப்பதாக அவர்கள் அர்த்தப்படுத்துகின்றார்கள். ஆனால் பிராமண பெண்களுக்கு இந்த பூணூல் போடும் முறை கிடையாது. அவர்கள் நிரந்தரமாக தீட்டுப்பட்டவர்கள் என்று பார்ப்பனியம் கூறுகிறது. “மந்திரம் சொல்லி தீட்டு கழித்து முப்பிரி நூலை (பூணூலை) பெண்களுக்கு போடுவார்களா?” என்று பிஜேபிக்கு ஆதரவாகப் பேசும் நடிகர் கஸ்தூரி போன்ற பெண்களைப் பார்த்துக் கேட்கின்றேன்.

பெண்களை இழிவுபடுத்துகின்ற சாஸ்திர சம்பிரதாயங்களை நிராகரித்து, இவர்கள் மனுஷிகள் என்று சொன்னவர் தந்தை பெரியார். அந்த காலகட்டத்தில் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்கள் சுய மரியாதை மிக்கவர்கள், சுய மரியாதை உணர்வுள்ளவர்கள் என்று சொன்ன ஒரு பார்ப்பன தலைவனை சுட்டிக்காட்ட முடியுமா? நான் வெளிப்படையாக சவால் விடுகின்றேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரினுடைய சமகாலத்தில் பெண்களை சமமாக பாவித்த ஒரு பார்ப்பன தலைவரைக் கூற முடியுமா? பெண்களுக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்று உங்களால் (நடிகர் கஸ்தூரியால்) கூற முடியுமா?

இந்தியா முழுவதும் ஆரியர்கள் வருவதற்கு முன்பு இருந்தவர்கள் திராவிடர்கள். அதில் மூத்த இனம், மூத்த குடி, வளர்ந்த குடி, நாகரிகம் அடைந்த குடி என்று சொல்லப்படுகின்ற தேசிய இனமாக தமிழ் இனம் இருக்கிறது. அதுதான் முக்கியம். தமிழ் இனம் என்கின்ற அந்த இனம் நாகரிகம் அடைந்து பொருளாதார வளர்ச்சியில், சமுதாய வளர்ச்சியில், அரசியல் வளர்ச்சியில் உயர்வடைந்த ஒரு இனம்.

தெலுங்கு மொழி 1700-1800 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்றால் அதற்கு முன்பு அவன் தமிழனாக இருந்தான். சீமானுக்குப் புரியும் வகையிலே ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் ஒரு கோடாரிக் காம்பு. இந்த கோடாரிக் காம்பு வெட்டுபவனுடைய கையைப் பாதுகாக்கிறது. நீங்கள் பிராமண கடப்பாரையைக் கொண்டு வந்தால் நாங்கள் திராவிட புல்டோசரை எடுத்து வருகின்றோம்.

எங்களுக்கு (மே17 இயக்கம்) ஓட்டு வாங்குவதைப் பற்றி கவலை இல்லை.  சீமான் அவர்களே குறித்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலில் சீமான் கட்சி எங்கெல்லாம் போட்டி போடுகிறதோ அத்தனை இடங்களிலும் அவர்களுக்கு எதிராக மே17 இயக்கம் வேலை செய்யும்.

“துரோகிகளை ஒழி!” என்று மேதகு பிரபாகரன் சொன்னார். நாங்கள் பிரபாகரன் வழியில் வந்தவர்கள்.

சீமான் பிஜேபியின் பி டீம் அல்ல, அவர்தான் பிஜேபி. ஆர்எஸ்எஸ் என்றைக்குமே நேரடியாக எந்த வேலையும் செய்ததில்லை. அதற்குப் பல பிரிவுகள் இருக்கின்றன. அதன் தமிழ்த்தேசிய பிரிவுதான் சீமான். எங்களுக்கு ஆர்எஸ்எஸ் என்பது எதிரி. அதை வேரறுக்காமல் நாங்கள் விட மாட்டோம். ஆர்எஸ்எஸ்-சின் தமிழ்த்தேசியப் பிரிவாக இருக்கக்கூடிய நாம் தமிழர் கட்சியை  வேரெறுப்பதுதான் தேர்தலிலே எங்களது தலையாயப் பணி.

எங்களுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சண்டை நடக்கும்போது குறுக்கே வந்தால் அதற்கான எதிர்வினை நடக்கும். எங்களுக்கு பதவி, சொகுசு எதுவும் தேவையில்லை. நாங்கள் மேடை ஏறி வீர வசனம் மட்டும் பேசும் நபர்கள் கிடையாது. ஏற்கனவே சீமான் கட்சியில் ஒருவர் கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள். நான் சீமான் கட்சியினரிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இந்த நபரை நம்பி செல்லாதீர்கள். இந்த நபருக்கு ஜெயிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் கிடையாது. வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான வேலைத்திட்டம் வேறு.

மேலும் தன் கட்சியிலேயே அவர் யாரையும் ஜெயிக்க விட மாட்டார். அப்படி வெற்றி பெரும் உயரத்துக்கு யார் செல்கிறார்களோ அவர்களை வெளியே அனுப்பி விடுவார். அவர்களுக்கு அவர் வைத்திருக்கின்ற பெயர் ‘பிசிறு’. அந்தக் கட்சியில் காளியம்மாள் அவர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் பிறருக்கும் நடக்கும். எனவே இந்த நபரினுடைய வியாபாரத்துக்கு பலி ஆகிவிடாதீர்கள்.

தமிழ் உணர்வோடு வருபவர்களுக்கு அதற்குரிய வாசிப்பு இருக்க வேண்டும். தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், பெருஞ்சித்திரனார்-இவர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டும். 

சீமான் பேரம் பேசி தன் கட்சியை வைத்து வியாபாரம் செய்வதற்கு நாம் தமிழர் கட்சியினர் இணங்காதீர்கள். அவர் எல்லா கட்சிகளோடும் பேரம் பேசுவார். ஜெயலலிதா அம்மையார் முன் கை கட்டி நின்றவர். அம்மையாருக்கு நன்றி ஊர்வலம் நடத்தினார். அந்த அம்மையார் “போதும்டா உன் ஜால்ராவை நிறுத்து” என்று சொல்லி அவரை அங்கேயே கைது செய்தார். இதன் பின்பு எடப்பாடி ஆட்சி நடந்தபோது (ஸ்டெர்லைட் படுகொலை நடந்தபோது) அவரின் ஆட்சி சிறப்பாக இருப்பதாகக் கூறியவர். திமுகவை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு தன் மீது வழக்கு வரும்போதெல்லாம் திமுகவின் தலைவரைச் சென்று சந்தித்து விடுவார். இத்தகைய அரசியல் வியாபாரி அவர்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுகவை எதிர்த்து ஒரு போராட்டம் கூட செய்யாதவர் சீமான். இந்த நான்கரை ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நடத்திய போராட்டங்களின் பட்டியல் பெரிது. அந்த பட்டியலில் கால் சதவீதம் அல்ல 10% கூட திமுக அரசை கேள்வி கேட்டு சீமான் போராடியது கிடையாது.

தற்போது திமுக விஜய்யை எதிர்க்கிறது. சீமானும் விஜய்க்கு எதிராக பேசுகிறார். ஆனால் அவர் இதற்காக என்ன பேரம் பேசினார் என்பது யாருக்கும் தெரியாது. சீமான் நம்பிக்கைக்குரிய நபர் அல்ல. 16 ஆண்டுகளாக மக்களின் உணர்வைக்கொண்டு வியாபாரம் பண்ணக்கூடிய ஒரு வியாபாரி அவர். அந்த வியாபாரியை முதலில் இந்த  அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஏனென்றால் அவருக்கு தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு திராவிடமும் தெரியாது, மார்க்சியமும் தெரியாது. அந்தக் கட்சியில் உள்ள இளைஞர்கள் தயவு செய்து அந்தக் கட்சியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.

இங்கே தோழர் இளமாறன் இருக்கின்றார். அவர் பெரும் போராட்டத்துக்கு சொந்தக்காரர். தமிழ் உணர்வாளரான அவர் தந்தை அவருக்கு சூட்டிய பெயர் ஜெகன். ஈழத்திலே குட்டிமணி ஜெகன் தங்கதுரை வெளிக்கடை சிறையிலே ஈழப் போராளிகளாக சிறைபட்டு, அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த ஜெகனின் நினைவாகத்தான் இவருக்கு ஜெகன் என்று பெயர் வைத்தார். நாம் தமிழர் கட்சியை மிகப்பெரிய அளவுக்கு போராட்ட சக்தியாக மாற்ற வேண்டும் என்று போராடியவர் தோழர் இளமாறன். மேதகு பிரபாகரன் அவர்களுடைய மகன் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்ட உடனே ஒன்றிய அரசை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி சிறை சென்றவர். ஆனால் அவரிடம் “நீ எதுக்கு போராடுன?” என்று கேட்ட ஒரு கோழைதான் சீமான்.

அந்த கட்சியை வளர்த்தெடுப்பதற்காக தன்னுடைய சொத்துக்களை விற்று பெரிய மாநாட்டை நடத்தினார். இளைஞர் எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும் என்று எந்தவித சுயநலமும் இல்லாமல் இதை செய்தார். இப்படி தன்னலம் இல்லாமல் உழைத்துப் போராடிய நூற்றுக்கணக்கான பேரை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கியவர் சீமான். இவ்வாறு  வெளியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இனத்தின் மீது பற்று கொண்டு உழைத்தவர்கள்.

செய்யாத குற்றத்திற்காக என்னோடு நான்கு மாதம் சிறையில் இருந்தார் தோழர் இளமாறன். இவர்களுடைய உழைப்பைச் சுரண்டும் அட்டையாகத்தான் சீமான் இருக்கிறார். ஆகவே இளைஞர்களே! தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்! இந்த நபரை (சீமானை) விட்டு வெளியேறுங்கள். இந்த நபருக்கு எதிராக நாங்கள் திரளாக வீதியில் இறங்குவோம். கடந்த 16  ஆண்டுகளாக ஈழத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் சீமான் செய்த துரோகங்களை பட்டியல் போட்டு சொல்லுவோம்.

எங்கள் மீதான வழக்குகளை நாங்கள் தனித்து நின்று எதிர்கொள்கிறோம். சீமான் போல் பாலியல் வழக்குக்காக காவல் நிலையத்தில் ஆயிரம் பேரை திரட்டி நாங்கள் நின்றதில்லை.

அவர் மீது பொதுவெளியில் குற்றம் சாட்டிய பெண்ணை இழிவுபடுத்தும் வேலையை செய்தவர் சீமான். இதை ஈழத்தில் அனுமதித்து இருப்பார்களா? ஒரு சிங்கள போர்வீரன் விடுதலை புலிகளிடம் கைதியாக இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக அவர் மனைவி வருகிறார். திரும்பி செல்லுவதற்கான நேரம் கடந்துவிடுகிறது. தங்குவதற்கு அவர் இடம் கேட்டபோது “அவர் கணவனோடு தங்க வையுங்கள்” என்று தேசியத்தலைவர் கூறினார். இதில் அந்த பெண் கருவுறுகிறார். ஊருக்கு சென்ற பிறகு அந்தப் பெண் எப்படி கருவுற்றார் என்று கேள்வி கேட்பார்கள் என்பதால் அந்தப் பெண் தேசியத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “நான் போர்க் கைதியாக இருந்த என் கணவனோடு இருந்தேன் என்று என்னுடைய ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இன்று கருவுற்று இருக்கின்றேன். என்னால் அவமானத்தை சுமக்க முடியாது” என்று கடிதம் எழுதிய பொழுது, அந்த சிங்கள வீரனை உடனடியாக விடுதலை செய்து அந்த மகளோடு சேர்த்து வையுங்கள் என்று சொன்னவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.

பாலியல் குற்றச்சாட்டைக் கூறிய ஒரு பெண்ணை சித்திரவதை செய்பவன் மனிதனே கிடையாது. வயது வந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு குறித்து நாங்கள் பேச விரும்பியதே இல்லை. ஆனால் பொதுவெளியில் அந்தப் பெண்ணை இழிவுபடுத்திய சீமான் எப்படி மேதகு பிராபகரனைப் பற்றி பேச முடியும்?

தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய கேடு சீமான். அந்த நபருடைய தேர்தல் அரசியலை ஒழித்துக் கட்டுவதை ஒரு வேலைத் திட்டமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி! வணக்கம்!

https://youtu.be/rH1WQ2UjcpY?si=AfdTwtGqCZlVZYuN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »