மே 17 இயக்கம் சார்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் 22-01-2026 அன்று நடைபெற்ற இராவணத் திருவிழா – ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
காஞ்சியில் ராவண கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? என்ற இந்த விளக்க பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தோழமைகளுக்கும், இந்த நிகழ்வில் அருமையான ஒரு விளக்க உரையை எளிமையான தமிழில் நல்கிய ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தினுடைய தலைவர் ஐயா தவத்திரு திருவடிக்குல் சுவாமிகள் அவர்களுக்கும், எனக்கு முன்பு ஒரு எழுச்சி உரை நல்கிய விடுதலை தமிழ்புலிகள் கட்சியினுடைய தோழர் தலைவர் குடந்தை அரசன் அவர்களுக்கும், தமிழ்நாடு எங்கும் போலி தமிழ் தேசியத்திற்கு எதிரான அரசியலை பேசி வருகின்ற தமிழர் விடியல் கட்சியினுடைய தலைவர் தோழர் இளமாரன் அவர்களுக்கும், போராட்ட களத்தில் சமரசம் என்று இயங்குகின்ற காஞ்சி மக்கள் மன்றத்தினுடைய தோழர் ஜெசி அவர்களுக்கும், தமிழ்நாட்டிலே சங்கிகளுக்கு மட்டுமல்ல தம்பிகளுக்கும் அவர்களது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துகின்ற இடதுசாரி செயல்பாட்டாளர் தோழர் சுந்தரவள்ளி அவர்களுக்கும், எழுச்சியான ஒரு விளக்க உரையை நல்கிய தமிழ் புலிகள் கட்சியினுடைய தோழர் பேரறிவாளன் அவர்களுக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினுடைய தோழர் குமரன் அவர்களுக்கும், மற்றும் இங்கே திரண்டி இருக்கக்கூடிய அனைத்து தோழமைகளுக்கும், நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
திடீரென்று காஞ்சிபுரத்தில் ராவண கோட்டத்தை கட்ட வேண்டும் ஏன்? இந்த கோரிக்கையின் தேவை என்ன? என்று அனைவருக்கும் தோன்றலாம்?
இராமன் பிறந்திருக்கிறான், அது அயோத்தியில் தான் இருக்கிறது என்று சொன்னால், ராமன் பிறந்த நாட்டிலே ராவணன் தான் பிறந்திருக்க வேண்டும் அல்லவா! ஆகவே ராவணன் பிறந்த இடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ராவணன் பிறந்த இடம் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்துக்கு கீழே அவரின் பிறந்த இடம் இருக்கிறது. ஆகவே அந்த இடத்தில்தான் எங்களுக்கு ராவணன் கோட்டத்தை எழுப்ப வேண்டும் என்று கேட்கிறோம். இதில் என்ன தவறு?
வட இந்தியாவில் இருக்கக்கூடிய இந்துக்களுக்கு மனசு புண்படுகிறது என சொல்லி பாபர் மசூதியை இடித்து ராமனுக்கு கோயில் எழுப்புனீர்களே, அது சரி அது நியாயமானது என்றால் தமிழர்களிடைய, திராவிட மக்களினுடைய அரசனாக இருக்கக்கூடிய ராவணனுக்கு நாங்கள் கோட்டம் எழுப்புவதில் என்ன தவறு இருக்க முடியும்? அதற்காகத்தான் இன்றைக்கு விளக்க கூட்டத்தை நடத்துகிறோம்.
அது ஏன் தோழர் ஜனவரி 22ஆம் தேதி அன்று ராவண கோட்டத்திற்காக கூட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று தோழர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் இந்த ஜனவரி 22 தான் அயோத்தியாவில் ராமன் கோவிலை திறந்தார்கள், அதை நாம் மறக்க கூடாது. எனவே தான் அந்த தேதியில் வைக்கலாம் என்றேன்.
ராவணனுக்கு கோயில் கட்டினால் ராவணனுக்கு கோட்டத்தை கட்டுவதற்கு இடம் வேண்டும். அது எங்கு இடம் இருக்கிறது என்றால், காஞ்சிபுரத்திலுள்ள சங்கர மடத்தை இடித்தால் அதற்கு கீழே ராவணன் பிறந்த இடம் இருக்கும். அதை கண்டுபிடித்து கோட்டத்தை எழுப்ப வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். இதில் என்ன தவறு?
இந்துக்களுக்கு மனது புண்படுகிறது மனது புண்படுகிறது என கூறும் நீங்கள் (பாஜக & ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா கும்பல்கள்), ராவணன் ஒரு சைவ நம்பிக்கை கொண்ட ஒரு கடவுள் பக்தனுக்கு கோட்டம் எழுப்புவதில் என்ன தவறு?
உண்மையை கூற வேண்டும் என்றால் சங்கராச்சாரி ஒழுங்கு மரியாதையாக சங்கரமட இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை ராவணனுக்கான கோட்டத்துக்கு கொடுக்க வேண்டும். ஏன் என்றால் காஞ்சி சங்கர மடம் என்பது ஒரு தெலுங்கு மடம். 150 வருடத்திற்கு முன்புதான் சங்கர மடம் காஞ்சிபுரத்திற்கு வந்தது. அதற்கு முன்பு அதன் கிளை கும்பகோணத்தில இருந்தது. அதன் தலைமை ஆந்திராவில் இருந்தது. தற்போது காஞ்சிபுரத்திற்கும் சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த இடத்தில் ராவணனுக்கான நினைவு இடம் அங்கே தான் இருந்தது என்று நாங்கள் கூறுகிறோம்.
இதை எப்படி நம்புவது என கேட்டால், நாங்கள் சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். நீங்கள்(பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள்) கூறினால் உச்சநீதிமன்றமே நம்புகிறது என எண்ணுகிறீர்களே!, அப்போது நாங்கள் கூறுவதையும் நம்ப வேண்டும். இல்லை என்றால் நாங்கள் வேண்டுமானால் ஐயா (திருவடிக்குல் சுவாமிகள்) எங்களுக்கு வேல் கொடுத்துள்ளார். அந்த வேல்-ஐ வைத்து நம்புகிறோம். அந்த சங்கரமடத்தை நகர்த்தி விட்டு அதற்கடியில் பார்த்தால் அங்கு ராவணன் பிறந்த இடம் இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா!
இராவணன் என ஒருவரை உருவகம் செய்து, அவருக்கு பத்து தலை இருந்தது, கலைகளின் தலைவனாக இருந்தான், வீணையை மிக சிறப்பாக வாசிப்பார், சைவ நம்பிக்கை கொண்ட ’சிவபக்தன்’ என்றெல்லாம் எழுதி வைக்கிறார்கள். இவ்வளவும் எழுதிவிட்டு, அவர் அடுத்தவர் மனைவியை கடத்தி தூக்கிட்டு சென்றார் என ஒரு கதையை எழுதியும் வைத்துள்ளனர். அது யாரை அசிங்கப்படுத்துகிறது? சைவ மதத்தை அசிங்கப்படுத்துவதற்க்கு தான் அந்த கதை எழுதி வைத்திருக்கிறார்.
இந்து மதம், சைவ மதம் எல்லாம் ஒன்று என ஆர்எஸ்எஸ் காரன் சொல்கிறான், பிஜேபி காரன் கூறுகிறான், எச் ராஜா கூறுகிறான் என்றால், சைவ பக்தனான சிவன் பக்தனை ஒரு பெண் பித்தனாக காட்டியது பைபிளா? குர்ஆனா? அல்லது உங்களுடைய நூலா?
இராவணனை இப்படி கூறியது இந்து மதத்தை சேர்ந்தவர் தானே? ஆக இந்து மதத்தை வேறு யாரும் இழிவுபடுத்த வேண்டாம். அவன் புராணமே இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது. அதாவது இவன் மனைவியை அவன் தூக்கிட்டு போனான், அவன் வீட்டுக்குள் இவன் போனான் என்கிற கதை எல்லாம் யார் எழுதி வைத்தது? வேறு மதத்துக்காரனா எழுதி வைத்தான்?. உன் மதத்துக்காரன் தான் எழுதி வைத்தான்.
நமக்கு என்ன பிரச்சனை என்றால், ஊர் முழுக்க வனாந்தரமாக வானர படைகளாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. எந்த வானர படைக்கு எப்ப கூண்டு கட்ட வேண்டுமோ அப்போது கூண்டு கட்டிவிடுவோம். இங்கே இரண்டு குரங்கு கூட்டம் இருக்கிறது. ஒன்று காவி கொடியை தூக்கிக் கொண்டு வரும் பிஜேபியின் குரங்கு கூட்டம். இன்னொன்று சீமான் அந்த குரங்கு கூட்டம். இந்த இரண்டு கூட்டமும் தமிழ்நாட்டிற்குள் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி கொண்டு இருக்கிறது.
இந்த இண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என கேட்கிறோம்? ஒருவன் என்ன சொல்கிறான்: திருப்பரங்குன்றத்தில் தீபத்தை தர்காவின் அருகில் தான் ஏற்ற வேண்டும் என… ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக முருகனுக்கு தீபம் பிள்ளையார் கோவிலில் ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டும் ஏற்றிவிட்டார்கள்.
முருகனுக்கு தீபம் ஏற்றுவதற்கு பிள்ளையார் கோயில் சரியான இடம் கிடையாதா? அல்லது பிள்ளையார் கோவில்ல தீபம் ஏற்றுவதற்கு முருகனுக்கு தகுதி கிடையாதா? அது ஏன் முஸ்லிம் கோவில் கிட்ட போய் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக, ஆர்எஸ்ஸ் சொல்கிறது?
அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள்? என்று கவனிக்க வேண்டும். அவன் முருகனை இழிவாக பார்க்கிறான். முருகனுக்கு பிள்ளையார் கோயில்ல தீபம் ஏற்றக்கூடாது அதற்கான தகுதி முருகனுக்கு கிடையாது என்கிறான். ஏனென்றால் முருகன் தமிழர் கடவுள். தமிழர் கடவுளுக்கு எதற்காக பிள்ளையார் கோவிலில் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் பிஜேபி சொல்கிறது. அதைத் தான் நீதிபதி சொல்லியிருக்கிறார் என்பதை நாநம் ஆட்களுக்கு புரிய வேண்டும்.
நமக்கு தெரிய வேண்டியது: 1. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எங்கு தீபம் ஏற்றினார்கள்? திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய பிள்ளையார் கோவிலில் ஏற்றினார்கள். 2. எவ்வளவு காலமா ஏற்றி கொண்டு இருக்கிறார்கள்? 100 ஆண்டுகளாக ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். 3. இந்த ஆண்டும் தீபம் ஏற்றினார்களா என்றால் ஏற்றினார்கள். 4. எங்கு ஏற்றினார்கள்? அதே பிள்ளையார் கோவிலில் ஏற்றினார்கள்.
இதில் பிஜேபிக்காரனுக்கு என்ன பிரச்சனை? நீதிபதிக்கு என்ன சிக்கல்? சுடுகாட்டுக்கு சென்றா ஏற்றினார்கள்? கோவிலில் தானே ஏற்றினார்கள். நீ (பாஜகவினர்) என்ன சொல்கிறாய்? தர்காவிற்கு சென்று ஏற்ற வேண்டும் என்கிறாய். தர்கா என்பது என்ன? இஸ்லாமிய மதத்தலைவருடைய நினைவிடம். அங்கு எதற்கு ஏற்ற சொல்கிறாய்? பிஜேபி என்ன சொல்கிறான் என்றால், முருகனுக்கு தீபத்தை அங்க புதைக்கக் கூடிய இடுகாட்டில் சென்று ஏற்று என்கிறான்.
உங்களுக்கு புரியவில்லையா? முருகனை அசிங்கப்படுத்துகிறான் பிஜேபிக்காரன். அவனுக்கு பக்தியாவது மண்ணானது. நான் கேட்கிறேன்: குஜராத்தில் முருகனுக்கு கோயில் இருக்கிறதா? உத்தர பிரதேசத்தில் முருகனுக்கு கோயில் இருக்கிறதா? மத்திய பிரதேசத்தில் முருகனுக்கு கோயில் இருக்கிறதா? எச்.ராஜா என்றைக்காவது முருகன் கோவிலில் வழிபட்டு இருக்கானா? அல்லது என்றைக்காவது அலகு குத்தியிருக்கானா? அல்லது என்றைக்காவது மொட்டையடித்து காவடி தூக்கி இருக்கிறானா? இவனுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
நாம் ஒரு விடயம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்குள் கலவரம் செய்ய இந்த கும்பல் (பாஜக) வந்திருக்கிறது. இரண்டு மாதமாக பார்க்கிறோம். நீதிபதி வருகிறார். மலை மேல் ஏறுகிறார். சோதனை செய்கிறார். பிஜேபி காரனிடம் முருகன் என்ன கனவில் வந்து சொன்னாரா?
இவர்களுக்கு பக்தி எனும் விளக்கண்ணை எல்லாம் கிடையாது. தமிழ்நாட்டுக்குள் கலவரம் கொண்டு வர வேண்டும். முருகனை அசிங்கப்படுத்த வேண்டும் என்றமே எண்ணமே உள்ளது. உண்மையான முருக பக்தர்கள் பிஜேபி காரனை கண்டால் வெளுத்து விரட்ட வேண்டும். உன் கட்சி தலைவன் எவனாவது என்றைக்காவது முருகன் கோவிலில் வந்து வழிபட்டு இருக்கின்றானா? அலகு குத்தியிருக்கின்றானா? காவடி தூக்கி இருக்கின்றானா? அல்லது நடந்து போயிருக்கின்றானா பழனி மலைக்கு? கிடையாது. அப்படி என்றால் தமிழ்நாட்டுக்குள் தேவை இல்லாமல் கலவரம் கொண்டு வர பார்க்கிறாயா? என்று முருக பக்தர்கள் கேட்க வேண்டும்
தமிழ்நாட்டில் எப்படி முருகனை வழிபட வேண்டும் என பிஜேபி கற்று கொடுக்கிறானா? அல்லது மோடிதான் கற்றுக் கொடுத்தாரா? எச்.ராஜா கற்றுக் கொடுத்தாரா? சொல்லுங்கள்.
நமக்கு வரலாற்றில் இருக்கிறது. காலம் காலமாக இந்த இறைவனை, இந்த கடவுளை, இந்த தெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்ற வழிமுறை நமக்கு இருக்கிறது. முருகனை எப்படி வணங்குவோம் என்று திருமுருகாற்று படையில் கூறப்பட்டுள்ளது. எந்த சமஸ்கிருத மந்திரத்திலும் சொல்லபடவில்லை.
திருமுருகாற்று படையில் எப்படி கூறுகிறார்கள் என்றால் “சாமி வழிப்படும் போது பக்தர்கள் வந்து ஆடுவார்கள் அல்லவா!, அதற்கு நம்முடைய இலக்கியஙக்ளில் ’வெறியாட்டம்’ என்ற பெயரில் கூறுகிறது. முருகனுக்கான வெறியாட்டத்தை பெண்கள் தான் ஆட வேண்டும். பெண்களுக்கு தான் முன்னுரிமை. அப்படி பெண்கள் வெறியாட்டம் ஆடுகின்ற அந்த சமயத்தில் முருகனுக்கு மலரை வைத்து அழகு செய்து அதற்கு பின் கூறுவது மிக முக்கியமானது, முருகனுக்கு ஆட்டை பலியிட்டு அந்த இரத்தத்தில் சோற்றை பிசைந்து முருகனுக்கு அதை படையலிட்டு வெளியாட்டத்தை பெண்கள் நடத்த வேண்டும் என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது.
முருகன் யார் என்றால் அசைவ உண்வை உண்ணுவது தான் வழக்கம். முருகன் சைவம் கிடையாது. முருகனுக்கு ஆட்டை, கோழியை பலியிட்டு அதன் குருதியில் சோற்றை பிசைந்து வைத்துதான் வணங்க வேண்டும் என்று நம்முடைய இலக்கியங்கள் சொல்கின்றன.
நம்முடைய இலக்கியம் கூறுவது: ஆடு கோழி பலியிட்டு தான் முருகனை வணங்க வேண்டும். முருகனுக்கு அசைவம் தான் படையலிடப்படுகின்ற உணவே ஒழிய, சக்கரை பொங்கல் கிடையாது. சக்கரை பொங்கலை சாப்பிட்டு முருகன் எப்படி தினம் பழனி மேல ஏறுவார்? எப்படி திருப்பூர் மேலே ஏறி இறங்கிட்டு இருப்பார்? (தினம் சர்க்கரை பொங்கலா வைத்து முருகனுக்கு நீரிழிவு நோய்தான் வந்துவிட்டது. முருகனுக்கு சர்க்கரை வியாதிக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். இப்படியே விட்டாலும் முருகனுக்கு கால் எடுக்க வேண்டி வரும். அப்படி என்றால் முருகன் எப்படி மலை ஏறுவார்? என சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி கேட்டுக்கொண்டார்)
முருகனுடைய இணையர் யார்? வள்ளி. அவர் யார்? அவர் ஒரு குறத்தி. குறத்தி என்பவள் விவசாயம் செய்து சக்கரை பொங்கலா வைப்பார்? வேட்டையாடி மாமிசம் தான் உணவாக படைப்பார். (உண்மையை சொல்லப் போனால் முருகனுக்கு ஆம்பூர் பிரியாணி வைக்க வேண்டும். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி வைக்க வேண்டும் என்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வேண்டுகோள் வைத்தார்) அந்த படையல் வைத்தால் முருகன் தெம்பாக நின்று தமிழ்நாட்டை காப்பாற்றுவார். அதை விட்டுட்டு சக்கரை பொங்கல் வைக்கிறேன், வெண்பொங்கல் வைக்கிறேன், வாழைப்பழம் வைக்கிறேன், தேங்காய் உடைக்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழ் கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்கின்ற முறையை கூட மறக்க வைக்க கூடிய வகையில் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. அதை நினைவுபடுத்துகின்ற விதமாகத்தான் ஐயா திருவடி குடிலை சேர்ந்த ஐயா நமக்கு சங்கர மடத்தை அப்புறப்படுத்துவதற்காக ஒரு வேல்-ஐ கொடுத்திருக்கார். அதுவும் குறிஞ்சி நிலத்தினுடைய தலைவன் மற்றும் நம்முடைய தோழர் முருகனுடைய-வேல் ஐ கொடுத்திருக்கிறார்.
எங்களுக்கு கடவுள் முருகன் தோழன்தான். திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய முருகன் எங்கள் தோழன், பழனி மலையில் இருக்கக்கூடிய முருகன் எங்களுக்கு தோழன். ஏனென்றால் முருகனுக்கு தமிழ் பிடிக்குமே தவிர சமஸ்கிருதம் பிடிக்காது. முருகனுக்கு இறைச்சி என்றால் பிடிக்குமே ஒழிய சர்க்கரை பொங்கல் பிடிக்காது. ஆக நம்முடைய மரபு ஒன்று இருக்கிறது. அந்த மரபை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவன்(பாஜக) என்ன சொல்கிறான்? திருப்பரங்குன்றத்தில் எங்கு பிரச்சனையை ஆரம்பித்தான்? சிக்கந்தர் தர்காவுக்கு இறைச்சியை கொண்டு சென்று உண்ணுகிறார்கள் என ஆரம்பித்தான். இப்போது முருகனுக்கே இறைச்சியை படைக்க வேண்டும். சிக்கந்தர் தர்காவுக்கு கொண்டு போகக்கூடிய இறைச்சியால் முருகனுக்கு என்ன பிரச்சனை? அசைவ உணவை சாப்பிடுவது எப்படி அசுத்தமானதாக இருக்கும்?
நம் வீட்டில் எல்லாம் வாரத்தில் ஏழு நாட்கள் இறைச்சி உணவுதான் நமக்கான உணவாக இருந்திருக்கிறது. இன்றைக்கு என்ன செய்துவிட்டார்கள் என்றால் திங்கட்கிழமை இந்த சாமிக்கு படையல் போடு, செவ்வாய்கிழமை அந்த சாமிக்கு போடு, புதன் கிழமை இவனுக்கு போடு, வியாழக்கிழமை சாய்பாபாக்கு போடு, வெள்ளிக்கிழமை இந்த சாமிக்கு போடு, சனிக்கிழமை பெருமாளுக்கு போடு, ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தை போடு என வந்து விட்டான்..
அசைவ உணவே இல்லை என்றால் எப்படி வேலை பார்ப்பது? எப்படி வைட்டமின் பீ12 கிடைக்கும்? எப்படி அமினோ ஆசிட் கிடைக்கும்? எப்படி புரோட்டீன் கிடைக்கும்? ஒன்றும் கிடைக்காது. குண்டான் குண்டானாக நெய்யை ஊற்றவா முடியும் வயிற்றுக்குள்? நம் உணவு முறை மாறி கொண்டு இருக்கிறது. நீ கறி சாப்பிடு தவறில்லை, உடம்புக்கு நல்லது. அசைவ உணவை எடுத்துக்கொள். அசைவ உணவு அசுத்தம் என்று சொல்லக் கூடியவனை விரட்டி அடி, அதுதான் மிக முக்கியமானது.
நம் ஆட்களின் அசைவ உணவு ஹோட்டலுக்கு என்ன பெயர்? என்ன கேட்போம்? முனியாண்டி விலாஸ் இருக்கின்றதா என கேட்போம். முனியாண்டி விலாஸ் என்பது என்ன முஸ்லிம் பெயரா? தமிழ் சாமியோட பெயர். அப்படி எனில் தமிழ் சாமி அசைவ உணவு இல்லாமல் இருக்காது. கடா வெட்டுவது, பிரியாணி செய்து ஊருக்கே பிரியாணி போடுவது, ஊருக்கே கரிசோறு போடுவது தான் நம் வழக்கம். அதையெல்லாம் விட்டு சைவமாக மாறி நம்முடைய மரபில் இருந்து வெளிய செல்லாதீர்கள்.
ஆக தோழர்களே, நமக்கான பிரச்சனை என்னவென்றால் நம்மை முருகன் காப்பாற்றுகிறாரோ இல்லையோ, முருகனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு வந்து விட்டது. அதை எப்படி ஆரம்பிப்பது? முதலில் இராவண கோட்டத்தை ஆரம்பிப்போம். இந்த கும்பலுக்கு எது தலைமையகம் இருக்கிறதோ, அந்த தலைமையகத்தை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் இராவணனுக்கான கோவில் வரட்டும்/ கோட்டம் வரட்டும் என்று கேட்கின்றோம்.
இந்த மண்ணில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என ஒரு பொய்யை கூறி, நடுராத்திரியில் உள்ள சுவரை தாண்டி குதித்து திருடன் மாதிரி உள்ளே சென்று அங்கு ராமன் சிலையை வைத்து, அதுதான் ராமர் பிறந்த இடம் என கூறி, அதற்காக ஆட்களை திரட்டி ஊர் முழுவதும் முஸ்லிம்களை கொலை செய்து இர(த்)த யாத்திரை நடத்தி, 500 ஆண்டு காலமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, இன்றைக்கு நீ (பாஜக) கோவில் கட்டி இருக்கக்கூடிய இந்த அராஜகம் நியாயம் என்று நினைக்கிறாய் என்றால், காஞ்சியில் இருக்கக்கூடிய சங்கர மடத்தை அப்புறப்படுத்திவிட்டு, எங்கள் மூதாதையரான இராவணனுக்கு கோட்டை எழுப்புவது எங்களுக்கு நியாயம்தான். நாங்கள் அதை செய்வோம். இந்த திருப்பணிக்கு வாருங்கள் என கேட்கிறோம். அனைவரையும் அழைக்கிறோம். எல்லாரும் உங்கள் வீட்டில் இருந்து வேல்-ஐ எடுத்து கொண்டு வாருங்கள். இந்துத்துவ கும்பல் பாபர் மசூதி இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து ஊரில் இருந்தும் செங்கல் எடுத்து கொண்டு வாருங்கள் என்றது. நாங்கள் கருங்கல் எடுத்து கொண்டு வா என அழைக்கிறோம்.
தமிழ்நாட்டில் (தமிழன்) கட்டிய அனைத்து கோவில்களிலும் ஐயர்களுக்கு, ஐயங்கார்களுக்கு எப்படி இடம் வந்தது? எப்படி பூஜை செய்யும் உரிமை எங்கிருந்து வந்தது? அது பண்டாரத்துக்கான& பூசாரிகளுக்கான உரிமை. பூசாரிகளையும் பண்டாரங்களையும் கோயிலை விட்டு வெளியே அனுப்பினார்கள்.
பண்டாரம் என்பவர் யார்? இந்த கோவிலில் பூஜை செய்யும் உரிமை படைத்தவர்கள் பண்டாரங்கள். இங்கு ஐயாவை(திருவடிக்குல் சுவாமி) பார்க்கிறோம். அவர் பூணூல் போட்டு இருக்கிறாரா? இல்லையே. அவர் கடவுளை வணங்கக்கூடியவர் இறைவனால் இறைநம்பிக்கை கொண்டவர். பூஜை செய்யக்கூடிய உரிமை படைத்தவர். பூசாரி வேலை செய்வதற்கான அனைத்து தகுதி படைத்தவர்கள், இவர்கள் பூநூல் போடுவதில்லை. ஆனால் பூநூல் போட்டவன் தமிழனுக்கான எந்த இறைப்பணியும் செய்வதற்கு தகுதி கிடையாதவன். தகுதியும் கிடையாது.
ஆக அன்பானவர்களே! நம்முடைய கோயிலுக்குள் நுழைந்து நம் கோயிலில் இருக்கக்கூடிய கடவுளையும், அந்த கடவுளுடைய சொத்தையும் கொள்ளை அடித்து வைத்திருப்பவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள். அதனால் தான் வெளியேற்ற வேண்டும் என சொல்கிறோம். கோயிலில் வெறுமன சாமி கும்பிடும் இடம் என எல்லாரும் நம்பி கொண்டு இருக்கிறோம்.
கோயில் என்பது என்னவென்றால்: அந்த காலத்தில் விளைந்த விளைச்சலை வெளியே கொண்டு போய் விற்று வந்த பொருளை, பொன்னை, பணத்தை சேமித்து வைக்கக் கூடிய வங்கி(Bank) தான் கோயில். அதான் வங்கி எனும் கோயிலில் அத்தனை நகை இருக்கிறது என்றால் அர்த்தம் என்ன? அந்த நகைகள், அந்த செல்வங்கள் என்பது அன்றைக்கு வங்கிகளை போல கோவிலில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டது.
ராஜராஜ சோழன் மாபெரும் மன்னன். இந்தியாவினுடைய கிழக்கு பகுதியை முழுவதும் ஆண்டவன் ராஜராஜ சோழன். தென்னிந்தியாவை ஆண்டவன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் பெயரீட்டிய அந்த ராஜராஜ சோழன் கட்டிய திருவுடையார் கோவிலை நாம் பார்க்கின்றோம். பெரிய கோவிலை பார்க்கிறோம். தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளாக நிற்கிறது. அப்போது பேரரசனுக்கான அரண்மனையும் அதே அளவுக்கு ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? ராஜராஜனுக்கான அரண்மனை எங்கே? ஏன் இல்லை? ஏன் இல்லை? ஏனென்றால் கோவில் தான் சொத்துக்களை சேகரித்து வைக்கக்கூடிய வங்கிகளாக அரசர் காலத்தில் இருந்தது. ஆனால் என்ன தவறு நடந்தது என்றால் அப்படிப்பட்ட வங்கிகளினுடைய, அந்த கோவிலுடைய சாவி யாரிடம் கொடுக்கப்பட்டது என்றால் பார்ப்பனர்கள் கையில் கொடுக்கப்பட்டது.
உழைத்து கொடுப்பதுதான் நம்முடைய வேலை, ஆனால் வைத்து வாழ்வது அவனுடைய கடமை, அவனுடைய தர்மம் என்று கூறி கோயிலை முழுவதும் கொள்ளை அடித்த கூட்டம்தான் இந்த பார்ப்பன கூட்டம். இதான் பார்ப்பன கூட்டம்.
அப்படி எனில் கோயிலை யார் ஆக்கிரமித்தார்கள்? பண்டாரங்களை யார் வெளியேற்றினார்கள்? பூசாரிகளை யார் விரட்டி அடித்தார்கள்? என்று நீங்கள் கேட்க வேண்டும். கோயிலுக்குள் இருக்கக்கூடிய சொத்துக்கள் யார் அனுபவிக்கிறார்கள்? என கேட்கிறோம். அவன் என்ன சொல்கிறான்? இந்துக்களின் கோவிலை இந்துக்களுக்கே கொடு என பாஜக ஆர்.எஸ்.எஸ் காரன் கேட்கிறான். (அர்ஜுன் சம்பத்து கேட்கிறான், எச் ராஜா கேட்கிறான், அண்ணாமலை கேட்கிறான், ஜக்கி வாசுதேவ் முதற்கொண்டு இந்துக்களின் கோவிலை இந்துக்களுக்கே கொடு என்று கேட்கிறார்கள்).
நாமும் அந்த கும்பலிடம் கேட்போம்: இந்துக்களின் கோவிலை பூசாரிகளுக்கு கொடு என்றால் ஏற்று கொள்வீர்களா? பண்டாரத்துக்கு கொடு என்றால் ஏற்று கொள்வீர்களா? மாட்டீர்கள். ஏனென்றால் பண்டாரமும், பூசாரியும் தமிழன். அங்க மணியாட்டுகின்ற பார்ப்பனர்கள் ஆரியன் வடநாட்டான். அவன் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்வேன் என சொல்லக்கூடியவன். அவன் தெளிவாக இருக்கிறான். இவனுக்கு கூலி வேலை பார்ப்பதற்கு நம் ஆட்கள் செல்கிறார்கள். இதில் எச்ராஜா, அண்ணாமலை, தமிழிசை போன்றோர் பின்னால் கொடியை தூக்கி கொண்டு போகிறான். இவர்களெல்லாம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என சத்தம் போட்டுக்கொண்டு அயோத்திக்கு போங்கள். உங்களுக்கு என்ன இங்கு வேலை?
தமிழ்நாட்டில் எங்கு இராமனுக்கு கோயில் இருக்கிறது? யார் ராமனை கும்பிடுகிறார்கள்? இராமனுக்கு உதவி செய்த அனுமாரை கும்பிவானே தவிர, ராமனை கும்பிட மாட்டான். இராமன் அப்படியே தென்னிந்தியா பக்கம் வந்தாராம். இங்கு ஒரே குரங்கு கூட்டமாக இருந்ததாம். அந்த குரங்கு கூட்டம் இவருக்கு பாலம் கட்டியதாம், எல்லா வேலை செய்ததாம், நெஞ்சை பிளந்து காட்டுதாம் என்னென்னெ சொல்றான் பாருங்கள்.
தமிழ்நாடு தென்னாடு பகுதி என்பது குரங்குகள் வாழ்கின்ற பகுதி என்று தமிழர்களை இழிவுபடுத்தியது தான் இராமாயணத்தின் வேலை. அவர்கள்(வடநாடு) எல்லாம் அழகாக (சுந்தரமூர்த்திகளாக) இருப்பார்களாம். தமிழன் எப்படி இருப்பான் என்றால் குரங்கு மாதிரி இருப்பான். அனுமார் மாதிரி இருப்பான் என்கிறார். ஏன் தமிழ்நாட்டில் இருப்பவன், தென் இந்தியாவில் இருப்பவனெல்லாம் மனிதர்களாக பார்க்க முடியாதா? பிஜேபி எம்பி தருண் விஜய் பல ஆண்டுகள் முன்னாடி சொன்னான். தென்னிந்தியாவில் இருப்பவரல்லாம் கருப்பாக அசிங்கமாக இருக்கிறான் என்று. அவன்தான் திருக்குறள் திருவள்ளுவரை திருடுவதற்காக வந்தவன். வட இந்தியாவில் இருந்து கிளம்பி வந்து திருவள்ளுவரை திருடிட்டு போகலாம் என வந்தான். நாம் இரண்டடி கழுத்திலே மிதித்து உட்கார வைத்து போடா வெளியே என்றோம்.
தருண்விஜய் வடநாட்டில் போய் விட்டு தமிழர்கள் எல்லாரும் கருப்பாக, அசிங்கமா இருக்கிறார்கள் என்று சொன்னான். அது எங்கே இருந்து வந்தது? இராமாயணத்தில் தமிழர்களை எல்லாம் அனுமார் என சொல்லி குரங்க கூட்டம் என்று சொன்னாலே அதிலிருந்து வந்தது.
தோழர்களே! இந்த ’இந்து மதம்’ என்று சொல்லக்கூடியதில் தமிழர்களுடைய கடவுளுக்கு இடமில்லை. இப்போது இந்து மதம் சொல்லக்கூடிய எந்த வேதத்திலும் முருகன் கிடையாது, அம்மன் கிடையாது, ஐயனார் கிடையாது, முனியப்பன் கிடையாது, எதுவுமே கிடையாது. பிறகு எப்படி அவன் மதமும் நம் மதமும் ஒன்று?
ஆதலால் நம்முடைய மத நம்பிக்கை என்ன? நம்முடைய சமய நம்பிக்கை என்பது வேறாக இருக்கிறது. அதை புரிந்து கொள்ள வேண்டும். நாமும் அவனும் ஒன்று கிடையாது. உன் சாமி வேறு என் சாமி வேறு. உன் சோறு வேறு என் சோறு வேறு. நீ உண்பதும் நான் உண்பதும் ஒன்றா? நீ சப்பாத்தி உண்ணுகிறாய். நாங்க சோறு உண்ணுகிறோம். தோசையை உண்கிறோம், இட்லியை உண்கிறோம். இரண்டும் வேறு வேறு. இதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எனவே தமிழர்கள் தங்களுடைய பூர்வீகம் என்ன? தங்கள் நம்பிக்கைகள் என்ன? என்று புரிந்து கொள்ளாமல் இந்த பிஜேபி சங்பரிவார கும்பலிடம் சென்று மாட்டி விடாதீர்கள் என்று தான் கேட்கின்றோம். தமிழர்கள் எந்த இடத்திலும் இந்த கலவர கும்பலிடம் சென்று மாட்டி விட கூடாது. அதில் மிக தெளிவாக இருக்க வேண்டும்.
இராவண கோட்டம் ஏன் கேட்கிறோம் என்றால் இராமாயணத்தை வைத்து தமிழர்களை இழிவுபடுத்துகின்ற வேலையை நீ(பாஜக) செய்கின்ற பொழுது, அதில் தமிழர்களை இழிவுபடுத்திய அந்த தலைவனை கொண்டாடுகின்றோம். நீ அயோத்தியில் இருந்து இனிமேல் இரயில் விட்டாய் என்றால், காஞ்சி இராவண கோட்டத்திற்கு வரட்டும். அங்கு வந்து இராவணன் காலில் விழுந்து கும்பிட்டு ’ஐயா மன்னித்து விடு’ என கூறி தான் இராமேஸ்வரத்திற்கு போகட்டும். அதற்கு பிறகு தான் அஸ்தியை கரைக்க போக வேண்டும் என்றும், உன் விருப்பத்திற்கு அங்கே சென்று ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைப்பதற்கு விட்டுவிட மாட்டோம் என்றும், இனி தமிழர்களை இழிவுபடுத்துவதே வேலையாக வைப்பதை தடுத்து நிறுத்துவோம்.
ஆக தோழர்களே இவை எல்லாம் விளையாட்டாக ஏதோ எதிர்வினை செய்ய வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை. நமக்கான ராவண கோட்டத்தை ஆரம்பித்து நடத்தி முடித்தால் தான், அது எங்கே நடத்த வேண்டும்? அது காஞ்சிபுரத்தில்தான் கட்ட வேண்டும். அதுவும் சங்கர மடத்தில் தான் கட்ட வேண்டும்.
நம்மவர்களை எல்லாம் நன்கு படித்து முன்னேறி ஐஏஸ் அதிகாரியாகவோ, டாக்டராகவோ, நீதிபதியாகவோ, அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ வா என்று சொல்கிறோம். ஆனால் ’சீமான்’ எல்லாம் குலதொழில் செய் என்கிறான். அவன்தான் பிராமண கடப்பாரை தூக்கிட்டு வருகிறேன் என்று சொல்றான். முதலில் சீமானின் குலத்தொழில் என்ன? அவன் பணமரத்தில் ஏறுவது தானே. அதை அவனால் செய்ய முடியுமா?
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்! உடல் உழைப்பிலிருந்து வெளியேறிய ஒற்றை சமூகம் ஒற்றை சாதி பார்ப்பனர்கள் மட்டும்தான். தமிழர்கள் உடல் உழைப்பை சார்ந்துதான் வாழ வேண்டும் என்று விதியை விதித்து, நம்முடைய உழைப்பில் வாழ்ந்தவன் அவன்.
பெரியார் என்ன கூறினார்? கல்வி கற்று உடல் உழைப்பிலிருந்து விடுதலை பெறுங்கள் என்றார்.
சீமான் என்ன சொல்றான்? கல்லூரிக்கு போகும் போதே கல்லு குடித்துவிட்டு போவேன் என்கிறான். அதுதான் ஒழுங்கா? அதையும் பெருமையாக பேசுகிறான். எதுவெல்லாம் சீரழிவோ அதையெல்லாம் இளைஞர்களுக்கு சொல்லக்கூடிய ஒருத்தனை எப்படி தலைவனாக பார்ப்பது? தருதலை எல்லாம் தலைவனாக முடியாது. உன்னை மாதிரி தருதலை எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக/ உதாரணமாக/ தலைவனாக வருவதற்கு ஒரு காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குலத்தொழில் செய் என்று சொல்லக்கூடிய ஒருவனை நாங்கள் ஒரு காலத்திலும் அனுமதிக்க மாட்டோம்.
தோழர்களே பெரியாரை பாராட்டுவதால் பெரியார் வளர்ந்ததில்லை. பெரியாரை விமர்சிப்பதன் மூலமாகத்தான் பெரியார் வளர்கின்றார். 2015, 2016 வரைக்கும் எச் ராஜா கூட்டம் பெரியாரை திட்டாத வரைக்கும் நாம் யாரும் பெரியாரை பற்றி கவலைப்பட்டது இல்லை. அவர் ஓரமான சிலையாக உட்கார வைத்திருப்பார்கள். நாமெல்லாம் பார்த்துக்கொண்டு கடந்து செல்வோம். இவர்கள் என்றைக்கு பெரியாரை திட்ட ஆரம்பித்தார்களோ, அதன்பின் பெரியாரை பற்றி நிறைய வாசிப்பு வந்தது. நிறைய பேர் பேச வந்தார்கள்.
இன்றைக்கு இளைஞர்கள் பெரியாரை பேசுவதற்கு காரணம் ஒரு வகையில் நாம் பிஜேபிக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில தான் சீமானுக்கு நன்றி சொல்கிறோம். சீமான் நிறைய பெரியாரை பற்றி பேசு, அப்போதுதான் பெரியாரினுடைய 65- 70 ஆண்டு கால உழைப்பை சிந்தனையை நாங்கள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அன்பானவர்களே! ராவண கோட்டத்தை நாம் அமைக்க வேண்டிய தேவை ஏன் இருக்கிறது என்றால், நம் வரலாற்றை கலங்கப்படுத்தி இருக்கிறார்கள். நமது முன்னோர்களை இழிவு செய்திருக்கிறார்கள். ஆக முன்னோருக்கு செய்த அந்த இழிவை போக்கின்ற வகையிலே, ராமன் எல்லாம் உனக்கு தலைவன் என்றால் ராவணன் எங்களுக்கு தலைவன். ராமனுக்கு கோயில் இருக்கும் என்றால் ராவணனுக்கும் கோயில் இருக்கும். அந்த கோவில் காஞ்சிபுரத்து சங்கர மடத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில ராவணனுக்கு பேர் எழுச்சியோடு கோட்டம் நிச்சயமாக தாங்கள் அமைப்போம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.