
தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் இந்தித் திணிப்பு எழுத்துக்களை அழித்தது குறித்தும், மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் ஈகம் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், சவுத் பீட் ஊடகத்திற்கு மார்ச் 17, 2026 அன்று வழங்கிய நேர்காணல்:
சவுத் பீட் அன்பு உறவுகளுக்கு வணக்கம். நான் பிலிக்ஸ் இன்பவொளி. இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம்.
நிருபரின் கேள்வி: சமீபத்தில் நீங்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் நிலையங்களில் இருக்கின்ற இந்தி எழுத்துக்களை கருப்பு மைப்பூசி அழித்தீர்கள். இப்போது திடீரென ஏன்? தமிழ்நாடு இந்தி திணிப்பதை பல காலமாக எதிர்க்கிறது. மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம் செலுத்துகிறோம். ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்கள் காலம் காலமாக இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தற்போது அதில் தார்பூசி அழிக்கிறோம் என்ற போராட்டம் கவனத்தை ஈர்க்கவா? மற்றொரு கேள்வி…உங்கள் இயக்கத்தின் தோழர் சிவா திலீபன் ஓடும் ரயிலில் பாய்ந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இருக்கிறார். இந்த போராட்டத்தின் பின்னணி என்ன?
தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: ’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ என்பதை மே பதினேழு இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வேலைத் திட்டமாக எடுத்தோம். அதன் அடிப்படை காரணம் என்னவெனில் இங்கு வட இந்திய தொழிலாளர்கள் வருகிறார்கள், நமக்கு தொழில் வேலைகள் (அரசாங்க) எல்லாம் பறிபோகிறது என்ற ஒரு பெரிய விவாதம் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில், நாங்கள் கவனித்த விடயம் ஒன்றிய அரசினுடைய நிறுவனங்களில் வங்கிகள், எல்ஐசி, பெல், என்எல்சி, ஓஎசி, வருமான வரித்துறை, சுங்கவரித்துறை, ஐசிஎஃப், எச்.வி.எஃப், ரயில்வே போன்ற பெரும் துறைகள் இருக்கின்றன. இந்த துறைகளிலுள்ள பெரும்பாலான பணியிடங்கள் தமிழர் அல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதுவும் மிக குறிப்பாக இந்தி பேசக்கூடியவர்கள்தான் அந்த வேலைக்கு வருகிறார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இந்தியை தாய்மொழியாக வைத்திருக்கக்கூடிய மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் அந்த வேலைக்கு வருகிறார்கள்.
இங்கு கடலூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பள்ளி பேருந்து மேல் ரயில் இடித்து குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. அங்கு பணிபுரியும் வாயில் காவலாளி (Gate keeper) தமிழ் தெரியாதவராக இருந்ததால் அந்த ரயில் சிக்கலானது குறித்து நமக்குத் தெரியும். இது மாதிரியான பல சம்பவங்களைப் பார்க்கிறோம். இதில் கவனக்குறைவு என்பதைத் தாண்டி மொழிசிக்கல் என்பதும் காரணமாக வருகிறது. இது மாதிரி ஒன்றிய அரசினுடைய பணியிடங்களில் இந்தி மாநிலத்தை சார்ந்தவர்கள் பல மடங்கு திணிக்கப்படுகிறார்கள். இங்கு இந்தியை முன்னிலைப்படுத்தக்கூடிய வேலையை ஒன்றிய அரசு நிறுவனங்கள் செய்கிறது.
மே பதினேழு இயக்கம் அதற்கு எதிரான போராட்டத்தை 2025ல் அறிவர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி, இந்தி எதிர்ப்பு பாடல்களை வெளியிட்டு, அதற்கடுத்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். 2026-லும் இதனைத் தொடர்ந்தோம். பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள் அன்றைக்கு மோடி வருகையின் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிப்பது என்கின்ற போராட்டத்தை முடிவு செய்தோம்.
ஒன்றிய அரசு நிறுவனப் பணியிடங்களில் தமிழர்கள் நிராகரிக்கப்படுவதற்கு எதிராக செய்யக்கூடிய பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்த சமயத்தில்தான், ரயில் நிலையங்களில் இருக்கக்கூடிய பெயர் பலகையில் தமிழ் பெயர்தான் நடுவில் இருக்கும். அதையெல்லாம் எடுத்துவிட்டு இந்தி பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். இச்செய்தி ஒரு பெரிய திருப்பு முனையாகவும், இதனை எதிர்த்து சண்டை போட்டேயாக வேண்டும் என்கின்ற இடத்திற்குத் தள்ளியது.

அதேபோல பிப்ரவரி 21, 2026 அன்று உலக தாய்மொழி நாள் அன்றைக்கு மோடி வருகையின் போது எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டோம். அந்த முற்றுகையின் போதே ’ரயில் நிலையத்தில முதலில் எப்படி தமிழ்ப்பெயர் முன்னிலையில் இருந்ததோ, அதேபோன்று இப்போதும் இருக்க வேண்டும். முன்னிலையில் உள்ள இந்திப்பெயரை மாற்று, தமிழை முதலில் வை’ என கோரிக்கை வைத்தோம். அதாவது ‘தமிழ்நாட்டுக்குள் தமிழுக்கு முதல் இடத்தை கொடு’ என சொன்னோம். அது நடக்கவில்லை. எனினும் அதன்பின் மார்ச் 1, 2026 அன்று சிதம்பரத்தில் மற்றும் கோயம்புத்தூர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம். இதையெல்லாம் அறிவித்துவிட்டுதான் இந்தி பெயரை அழித்தோம்.
கேள்வி: நிறைய ரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில்தான் மாற்றுகிறார்களா?
பதில்: ரயில் நிலையத்தில் இருக்கும் வெள்ளை பலகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்தியை ஆதிக்க உணர்வாக கொண்ட ஆட்கள் இருக்கக்கூடிய இடத்தில் மிக திமிராக திணிக்க ஆரம்பிக்கிறார்கள். அதை பார்த்துவிட்டுதான் பிப்ரவரி 21 மற்றும் 28ம் தேதி போராட்டத்தை நடத்தினோம். அதற்கு பிறகு மார்ச் 11, 1938-ல் முதல் மொழிப்போரில் ஈகம் செய்த தாளமுத்து நினைவு நாளில், அதே தேதியில் (மார்ச் 11, 2026) அன்றைக்கு மோடியும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அதே நாளில் இந்தி எழுத்தை அழிக்கின்ற போராட்டத்தை நேரடியாக இறங்கி செய்தோம். சென்னை ’பார்க்’ நிலையத்தில் பெயர் பலகையில் எல்லாம் இந்தியை முன்னிலைப்படுத்தி மாற்றி வைத்திருந்தார்கள். அதையெல்லாம் அழிக்கின்ற போராட்டத்தை ஆரம்பித்து அழிக்க ஆரம்பித்தோம். இந்த போராட்டத்தை திடீர்ரென மே பதினேழு இயக்கம் நடத்தவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இதற்கான பரப்புரையை மேற்கொண்டு, இன்றைக்கு ஒரு களப்போராட்டமாக அது மாறியிருக்கிறது. 2017-ல் சாஸ்திரி பவனிலுள்ள இந்தி எழுத்துக்களை அழிப்பது என்கின்ற போராட்டத்தை நடத்தினோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோடியின் மூன்றாவது கட்ட ஆட்சியில் இந்தியை தீவிரப்படுத்தல் என்பது மிக மோசமானதாக நடந்தது.

கேள்வி: எந்த வகையில் இதை நினைக்கறீர்கள்?
பதில்: எல்லா திட்டங்களும் இந்தி அல்லது சமஸ்கிருதமாக இருப்பது. இதன் மூலமாக என்ன நடக்கிறது எனில், எல்லா இடங்களிலும் இந்தி பேசக்கூடிய நபர்கள் தான் அல்லது இந்தி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் வேலை பெறுகிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், இப்போது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய தேர்வில் தேர்ச்சி பெற்றுதான் உள்ளே வருகிறார்கள் என பிஜேபிகாரர்கள் எல்லாம் பேசுகிறார்கள்.
நாம் என்ன கேட்கின்றோம் எனில்: தமிழ்நாட்டில்தான் மும்மொழி கொள்கை கிடையாது. கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா, பெங்கால், அசாம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாய மொழி. இப்போது அங்கே இந்தி படித்தவர்கள் தானே, அவர்கள் ஒன்றிய அரசு வேலைகளில் வேலை வாங்கி இருக்க வேண்டும் அல்லவா?
தமிழ்நாட்டில் ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதனையாளர் (TTR) , நிலைய அதிகாரி (station master), வாயில் காவாலாளி (Gatekeeper), பயணச்சீட்டு வழங்கும் நிலையம் (Ticket counter), பொறியியல் துறை (Engg. Dept) போன்று பல்வேறு துறை சார்ந்த எல்லா இடத்திலும் இந்தி பேசக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாராவது சீக்கியரையோ, மகாராஷ்டிரனையோ, கன்னடனையோ, மலையாளியையோ, பெங்காலியையோ (சாட்டர்ஜி, பேனர்ஜி பேர் வைத்து இருப்பார்களே) பார்த்து உள்ளீர்களா? இவர்கள் இந்தியை கட்டாய பாடமாக படித்தவர்கள். இங்கு வருபவர்களெல்லாம் பீகார்காரனோ, உத்தரப்பிரதேசகாரனோ, மத்தியப்பிரதேஷ்காரனோ, அல்லது ஹரியானாவோ இருக்கிறான். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருந்து மட்டும்தான் ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு வைக்கிறார்கள். அப்போது நீங்கள் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது பொய். இதைத்தான் மே 17 இயக்கம் கண்டறிந்து முதன் முதலில் வெளியே சொல்கிறது.
இந்தித் திணிப்பு நடந்துகொண்டே இருக்கிறது. நான் (திரு) ஒரு மாதத்துக்கு 10 முதல் 15 ஊருக்கு போகிறேன். எந்த இடத்திலும் ஒரு பஞ்சாப்காரன், ஒரு காஷ்மீர்காரன், ஒரு பெங்காலிக்காரன் பார்த்தில்லை. நீங்கள் திருச்செந்தூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் நிலையத்துக்கு போனால் எத்தனை இந்தி பேசக்கூடிய ஆட்கள் இருப்பார்கள் தெரியுமா? அவனவன் மாநிலத்தில் இருக்கக்கூடிய ரயில்வே துறையில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலையை எடுத்து செய்யட்டும். அங்கு தமிழரை கூட விட வேண்டாம். ஆனால் என் மாநில அரசாங்க வேலையை இங்குள்ள இளைஞர்களுக்கு (தமிழனுக்கு) கேட்பதும் கொடுப்பதும் என்ன தவறு?
வங்கிகள் முழுக்க இந்தி படிவங்கள் இருக்கின்றன. திருவாரூரில் கனரா வங்கி படிவத்தை எடுத்தால் முழுக்க இந்தியில் இருக்கிறது. இதே தனியார் வங்கிகளில் (எச்.டி.எஃப்.சி & ஐசிஐசிஐ) இந்தியில் படிவங்கள் இல்லை. ஆனால் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொது வங்கிகளில் எல்லாம் எதற்கு இந்தியில் படிவத்தை வைக்கிறான்?
கேள்வி: தமிழ்நாட்டுக்குள் இந்தியில் மட்டும் இருக்கிறதா?
பதில்: இந்தியையும் சேர்த்து ஏன் போட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இந்த மாதிரியான வடிவங்களை திணிப்பது எதற்கு? தற்போது நான் என்ன கேட்கிறேன் எனில் இந்தி படிவத்தை எழுதி கொடுத்தால், அதை படிக்க தெரிந்த ஆட்கள் உள்ளே இருக்க வேண்டுமே, அப்போது அதற்கும் ஆள் வைத்துள்ளார்கள் அல்லவா?
கேள்வி: ஒன்றிய அரசின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி எப்பவுமே இருக்கிறதுதானே, ரயில்வே துறை ஒன்றிய அரசின் கீழ் வருகிறது. அதனால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்பதை வைத்திருப்பார்கள் அல்லவா? அவர்கள் மாநிலத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் இந்தியை திணிக்கிறார்களா?
பதில்: அது மாநில அரசு சம்பந்தப்பட்ட விடயங்கள். எந்த மாநிலமும் இந்தியை முதன்மைப்படுத்தவில்லை. இண்டாவது கட்டம் நமக்கு பேசப்பட்டது என்னவெனில், கல்வியில் இந்தியை கொண்டு வருவது, அரசு வேலைகளில் இந்தியை கொண்டு வருவது, மூன்றாவது கட்டம் அரசு பணிகளில் இந்தி பேசக்கூடிய மாநிலத்தில் இருந்தவனை கொண்டு வந்து உட்கார வைப்பது. இந்த மூன்றாவதைத்தான் மே பதினேழு இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
கேள்வி: இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் சோழவரம், ஸ்ரீபெரும்பத்தூர் போன்ற இடங்களில் லட்சக்கணக்கான இந்தி பேசுகின்ற இளைஞர்கள் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இதில் மிகப்பெரிய உழைப்பு சுரண்டல் அவர்கள் மீது நடத்தப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் அல்லவா?
பதில்: பேசி இருக்கோம் தோழர். வட இந்தியாவிலிருந்து வரக்கூடிய தொழிலாளர்களை நாம் எதிரிகளாக பார்க்கவில்லை. பொருளாதார உற்பத்தி வரும் பொழுது அதற்கான உடல் உழைப்பு தேவைப்படுகிறது.
கேள்வி: வடமாநில தொழிலாளர்கள் உழைப்பு மட்டும் வேண்டும் என நினைக்கிறீர்களா?
பதில்: அது வேறு, இது வேறு. நாம் சொல்வது அரசு வேலை. அரசு வேலையில் தமிழக ஆட்களுக்கு பங்கு என்ன? இங்கு ரயில்வே நிலைய அதிகாரி (station master) பணியில் இருப்பதற்கு தமிழனுக்கு தகுதி இல்லையா? வங்கி அதிகாரியாக வேலை பார்ப்பதற்கு தமிழனுக்கு தகுதி கிடையாதா? வருமான வரித்துறையில் வேலை பார்க்க தகுதி இல்லையா? அமலாக்கத்துறையில் வேலை பார்ப்பதற்கு தகுதி இல்லையா?

நாங்கள் இந்தி எழுத்தை அழிக்கும் போது தடுத்த ரயில்வே காவல்படை காவல் அதிகாரி யாருக்கும் தமிழ் தெரியாது. அவர்கள் சட்டை பெயர் அட்டையில் (badge) கூட இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கிறது. எந்த தமிழன் இதை படித்து பார்த்து பெயரை தெரிந்துகொள்வான். இங்கு எதற்கு இந்திக்காரனை ஆர்பிஎஃப்-பில் போட்டு இருக்கிறார்கள்? இதுதான் பிரச்சனை.
தனியார் துறைக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளர்களாக வருபவர்கள் விடயம் வேறு. அவர்கள் வாழ்க்கை பிழைப்புக்காக வரக்கூடியவர்கள். நாங்கள் சொல்வது அரசு வேலை. இரண்டும் வேறு வேறு. இதில் அனைவரும் போட்டியிட்டு தான் வருகிறார்கள். இப்படி தேர்வு எழுதி போட்டியிட்டு வரக்கூடியத்தில் தமிழர்களுக்கு இடம் இல்லாமல் போகிறது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஐசிஎஃப்(ICF), எச்.இ.பி.எஃப் (துப்பாக்கி தொழிற்சாலை), பெல்(BHEL), என்எல்சி(NLC) போன்ற ஒன்றிய அரசின் எல்லா இடங்களில் இந்தி பேசுகின்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதுவும் நிரந்தரமான வேலையில் இருக்கிறவர்கள் யார்? வட இந்திக்காரர்தான் இருக்கிறார்கள். இந்த நிரந்தர வேலையில் ஓய்வூதியம் இருக்கிறது, அதிக அரசாங்க வருமானம் இருக்கிறது. இது தமிழனுக்கு கிடைக்கவில்லையே!
நம் தமிழ்நாட்டு இளைஞன் சுவிகி(swiggy) ஓட்டுகிறான், ஜொமட்டோ(zomoto) ஓட்டுகிறான். அவனை கூப்பிட்டு கேட்டால், அவன் எம்பிஏ படித்துள்ளேன், பி.இ படித்துள்ளேன், எம்.ஏ படித்துள்ளேன், பி.ஹச்.டி படித்துள்ளேன் என்கிறான். இவனுக்கு ஏன் வேலை இல்லை? ஒரு வருடத்துக்கு ஒன்றிய அரசினுடைய வேலைகள் ஒரு மாநிலத்துக்கு குறைந்தபட்சம் 10,000 – 15,000 வேலைகள் இருக்கிறது எனில் (அதுவும் உயர்மட்ட வேலைகள்) அந்த வேலைகளில் ஏன் தமிழர்களுக்கு இடம் இல்லை? 5000 ஐ.சி.எப் தொழிலாளர்களுக்கு (பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு) வேலை இல்லை. ஒன்பது வருடத்துக்கு முன்னால், ஒரு ஐசிஎப் தொழிலாளர் தீ குளித்து இறந்து போனார். இதற்காக போராட்டம் நடத்தி இருந்தோம்.
இப்படி எல்லா இடங்களிலும் தமிழ் இளைஞனுடைய வேலை போயிருக்கிறது. அதற்குத்தான் நாம் பேசுகிறோம். இது தொழிலாளர்களுக்கு எதிரானதல்ல, தமிழ்மொழியே தெரியாமல் அரசு பணியிடங்களில் அதிகாரிகளாக உட்கார்ந்து கொண்டு இங்குள்ளவர்களை சட்டமாக பேசுவது, உதாரணமாக ரயில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்திலும், வங்கி இடத்திலும் பிரச்சனை செய்கிறான். எப்படி அவர்களிடம் கடன் (Loan) வாங்குவீர்கள்? இவர்களிடம் எப்படி வருமான வரி அலுவலகத்தில் உங்களுடைய பிரச்சனையை விளக்குவீர்கள்? எப்படி சுங்கத்துறையில் உங்களுக்கான நீதி கிடைக்கும்?

இப்படி எல்லா இடத்திலுமே இந்தி பேசக்கூடிய மாநிலத்திலிருந்துதான் வந்து உட்கார்ந்து இருக்கிறான் எனில், அதே மாதிரி தமிழ்நாட்டில் இருக்கிறவர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் வேலை கொடுக்கிறானா? அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா! வேலை விகிதம் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? இந்தியா முழுக்க ரயில்வேயில் ஒரு 10,000 பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் எனில், தமிழ்நாட்டுக்கு எத்தனை பங்கு? அதை சொல்ல வேண்டும் அல்லவா? அதற்கு பதிலில்லை.
தேர்வு எழுதுகிறவனுக்கு எல்லாம் வேலை கொடுக்கிறோம் என சொன்னால் எங்களுக்கு பங்கு என்ன இருக்கிறது? நமக்கு எவ்வளவு கிடைக்கிறது? என்பதற்கு விடையில்லை. இந்த இடத்தில்தான் இந்தியை திணிக்கிறது என்பதாக வந்து நிற்கிறது. அதனால்தான் இப்போது அதைக் கவனம் செலுத்தக்கூடிய விடயமாக இந்தியை அழிக்கக்கூடிய வேலையை செய்கிறோம்.
கேள்வி: தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள் எல்லாம் அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறார்கள். யாருக்கு எத்தனை சீட்டு என்கின்ற விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. முன்பு தேர்தலில் பரப்புரை செய்துள்ளீர்கள். இந்த சூழலில் தேர்தலுக்கான மையப் புள்ளியாக மே 17 இயக்கம் எப்படி செயல்பட வேண்டும் என்கின்ற அந்த புள்ளியை நோக்கி நகராமல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள், அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
பதில்: இது எங்களுடைய நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் இப்போது நடந்துள்ளது. இதற்கு முன்பு மாஞ்சோலைக்கு போராட்டம் நடத்தியுள்ளோம். அது பெரிய செய்தி ஆகவில்லை, ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமான போராட்டங்களில் பங்கெடுத்துள்ளோம். அது செய்தி ஆகவில்லை. கவின் படுகொலைக்கு போராட்டம் நடத்தி இருக்கிறோம். இப்படியாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திகொண்டுதான் வந்திருக்கிறோம். ஆனால் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்தியாகி இருக்கிறது. இதுதான் இதில் இருக்கக்கூடிய வேறுபாடு.
இதை நாம் இப்படி அணுக முடியுமே ஒழிய, நாம் செய்தி ஆக வேண்டும் என்பதற்காக ஒரு போராட்டத்தை செய்யவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்திக்கொண்டே வருகிறோம். அதில் சில செய்தியாகி உள்ளது. பலவேறு காரணங்களால் இப்போராட்டம் கூர்மை பெற்றுள்ளது.
இந்த போராட்டம் நடத்தும் பொழுது, சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கும் பொழுது, பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எங்களுடைய பேனரை வாங்கி பிடித்துக்கொண்டு பொதுமக்களே முழக்கம் போட்டார்கள். கைதட்டினார்கள். நீங்கள் சொல்வது சரி என சொன்னார்கள். பெரிய அளவுக்கு பொதுமக்கள் ஆதரவு எங்களுக்கு வந்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் (சென்னை ஒட்டியுள்ள ரயில் நிலையங்கள்) எல்லா இடத்திலும் இந்தி எழுத்துகளை அழிக்கின்றோம். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அழிக்கின்றோம். இந்த எட்டு நாட்களாக தமிழ்நாட்டினுடைய பல்வேறு நகரங்களில்-கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருத்துரைப்பூண்டி, நாகப்பட்டினம், வேலூர், காட்பாடி என அனைத்து இடங்களிலும் அழித்துக்கொண்டே இருக்கிறோம்.

இதை நிறுத்தப் போவதில்லை. மக்களுக்கு செய்தி போய் சேர வேண்டும். ஏன் அழிக்கின்றோம்? எதற்கு அழிக்கின்றோம்? மறுபடியும் அந்த பள்ளியில் இந்தி இருக்கிறதே, இந்த பள்ளியில் இந்தி இருக்கிறதே என சொல்வார்கள். அதையும் எதிர்க்க வேண்டிய இடத்தில்தான் நிற்கிறோம். ஆனால் முதலில் விழிப்புணர்வு எங்கே வர வேண்டும்? இன்றைக்கு நம் இளைஞர்கள் வாழ்வாதாரம் போகிறது, வேலை வாய்ப்புகள் போகிறது, இது கல்வியில் பிரச்சனையாக வந்து நிற்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு வர வேண்டும்.
ஒன்றிய அரசின் தேர்வு கேள்வித்தாள்களில் இந்தியிலும் & ஆங்கிலத்திலும் இருக்கிறது. இந்தியை தாய் மொழியாக வைத்திருப்பவன் மிக எளிமையாக எழுதிவிட்டு போகிறான், மற்றவர்களுக்கு இரண்டுமே (இந்தியோ, ஆங்கிலமோ) தாய்மொழி கிடையாது. இதில் தமிழனோ, மலையாளியோ, பஞ்சாபியோ, பெங்காலியோ இந்த இரண்டு மொழியையும் படித்து தான் தேர்ச்சி பெற முடியும். இப்போது ஒரு ஜெர்மன்காரனும் நாமும் ஜெர்மன் மொழியில் போட்டி போட வேண்டும் என்றால் யார் வெல்வார்? கண்டிப்பாக ஜெர்மன்காரன்தான் வெல்வான். ஜெர்மன்காரனை விட சிறப்பாக நாம் ஜெர்மன் மொழியில் பேசிவிட முடியுமா? தேர்வு எழுத முடியுமா? அவன் கொடுக்கக்கூடிய கேள்வியை புரிந்து நம்மால் எழுதிவிட முடியுமா? அல்லது ஆங்கிலத்தில் புரிந்து எழுத முடியுமா? அதேபோலத்தானே நமக்கு இந்தியும்….. அதனால் தமிழ் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.
இந்தி திணிப்பு என்பது அவனுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்வதிலும் எல்லா வேலைகளில் அவர்கள் நுழைவதிலும் நடக்கிறது. இந்த சமயத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியே வர இருக்கிறார்கள், வேலைகளுக்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. இதுகுறித்து நாம் பேச வேண்டி இருக்கிறது.
தேர்தல் வருவதையோட்டி மே 17 இயக்கம் திடீரென பேசுகிறது என பல கட்சிகள் கேட்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்காரனும் எழுதுகிறான். அதற்கு ‘தமிழ்த்தேசியம் பேசும் நீ, கடந்த 5 வருடமாக என்ன செய்தாய்? இந்தித் திணிப்பு குறித்து நீ ஏன் கேட்கவில்லை? எதிர்த்து போராடவில்லை ஏன்?’ என்று கேட்கிறோம். நாங்கள் போராடுகிறோம், இந்த போராட்டத்தினால் தேர்தலில் நிற்கப் போகிறோமா? எங்களுக்கு ஓட்டு போட போகிறார்களா? இல்லை. எங்களுக்கு தேர்தல் கணக்கு எல்லாம் ஒன்றுமே கிடையாது. மக்களுடைய நலன் முக்கியம். அதனால் தொடர்ச்சியாக போராடிக் கொண்டு இருக்கிறோம்.
சிவா திலீபன் என்கிற மூத்த தோழர், நான் சிறைக்கு போன பொழுது அவரே வந்து கைதாகி என்னோடு 21 நாள் சிறையில் இருந்த தோழர். எல்லா போராட்டத்திலும் முன்னால் நிற்கக்கூடியவர். அறிவார்ந்த சிந்திக்கக்கூடிய தோழர். போராட்டம் குறித்து மக்களிடம் இதற்கான விழிப்புணர்வே இல்லையே, எழுச்சியே இல்லையே என்கின்ற மனக்கசப்பு இருந்தது. எப்படியாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் இளைஞர்களுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என ’சென்னை பார்க்’ நிலையத்தில் போராட்டம் நடத்தினோம். நாங்கள் இந்தி எழுத்தை எல்லாம் அழித்துவிட்டு முழக்கம் போட்டுவிட்டு கிளம்புகிறோம். காவல்துறையிடம் ’கைது பண்ணுங்க’ என சொல்கிறோம், ஆனால் கைது பண்ணவில்லை. அதனால் கிளம்ப ஆரம்பித்தோம். கிளம்பும் சமயத்தில் ரயில் வருகிறது. அதன் முன்பு ”தமிழ் வாழ்க” என முழக்கமிட்டு குதித்துவிட்டார்.
இச்சம்பவத்திற்கு முன் இரண்டு மூன்று நாட்களாக அவர் (சிவா திலீபன்) குறித்து வீட்டில் கேட்கும் பொழுது, தமிழ் குறித்து பேசிக்கொண்டே இருந்துள்ளார். அவரது முகநூல் பார்த்தபோது ”உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!!” என்று எழுதி இருக்கிறார். மேலும் பாரதிதாசன் பாடலை எடுத்து ”தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும்” என்று எழுதி இருந்தார். இப்படி உணர்வின் அடிப்படையில் இந்த பிரச்சனையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், தான் உயிரைக் கொடுத்தாவது இந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்களா? என்ற முடிவு எடுத்து வந்திருக்கிறார். எங்களுக்கு அது தெரியவில்லை. உயிர் ஈகம் செய்வதை எதிர்த்தவர். கிட்டத்தட்ட 57 வயது. அவர் “தமிழ்நாட்டில் ஒன்றரை வருடமாக இந்தித் திணிப்பு குறித்து பேசியுள்ளோம். ஆனால் ஒரு எழுச்சி வரவில்லையே” என வெதும்பி இருக்கிறார்.

நம் உயிரை கொடுத்தாவது (தாளமுத்துவின் நினைவு நாளில்) உயிரை கொடுத்தாவது, இந்த இனத்தை உயிர்ப்பிக்கலாம் என நினைத்து இப்படி செய்துள்ளார். அவருக்கு தலையில் கடுமையான காயம். அவருக்கு நுரையிரல் எலும்பு உடைந்து குத்தி இருக்கிறது, கிட்னி அடி வாங்கி இருக்கிறது, கால் சிதைந்துள்ளது, முகத்தில் எலும்புகள் எல்லாம் சிதைந்துள்ளது. அப்படியே ரத்த சகதியாக தூக்கி வந்து மருத்துவமனைக்கு சேர்த்தோம். அப்போதும் ’தமிழ் தமிழ்’ என பேசினார். தன் உயிரை கொடுத்தாவது இந்த பிரச்சனை குறித்து பார்ப்பார்களா? என்ற ஆதங்கம். ஆனால் எங்களுக்கு உயிரை மாய்ப்பது குறித்து எந்த உடன்பாடுமே கிடையாது. நாங்கள் இதை ஆதரிப்பது கிடையாது. அவருமே அப்படிப்பட்ட தோழர்தான். அவர் குடும்பத்தையே அரசியல் அமைப்பாக மாற்றியவர். ஒட்டுமொத்த குடும்பமும் போராட்ட களத்தில் மிக துணிச்சலாக நிற்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு முடிவு (ஈகம்) அவர் எடுத்தது, எங்களுக்கு ஒரு பெரிய துயரமாக இருக்கிறது. மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது திடீரென நடத்தவில்லை, தேர்தலை பார்த்தெல்லாம் நடத்தவில்லை. வெகு நாட்களாக பேசி வந்தது, அதற்கான அடையாள போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். இரண்டு மூன்று நாட்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவோம், மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்க விரும்பினோம். சிவா திலீபன் தன் உயிரை கொடுத்தாவது செய்ய வேண்டும் என்ற இடத்திற்கு வந்தபிறகு, இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். அதனால் இந்த போராட்டம் தொடர்கிறது. தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க இந்தித்திணிப்பை அழித்துக்கொண்டு இருக்கிறோம்.
இப்போராட்டத்தின் நோக்கம்: அரசு பணிகள் எல்லாமே நம் தமிழக இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை. எல்லா கடைகளிலும் இந்திக்காரன் வந்துவிட்டான் என பேசுகிறோம், அவன் பாவம். அவன் அடிமாட்டு வேலைக்கு சென்று, நம் பொருளாதாரத்துக்காக பங்களிக்கிறான். ஆனால் அதிகாரியாக வருபவன் என்னவாக இருக்கிறான்? அவனைப் பாருங்கள். அவன்தான் பெருந்தொகையை வாங்கிக்கொண்டு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முடிவு பண்ணுகிறான். எந்த ரயில் ஓட வேண்டும், எந்த ரயில் எங்கே நிற்க வேண்டும் என்பதிலிருந்து வடநாட்டு அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். அவன்தான் வருமான வரி மற்றும் அமலாகாத்துறை யாருக்கு அறிவிப்பு தரவேண்டும் என முடிவு செய்கிறான். அவர்கள் யாரும் நமக்காக உதவி செய்வதில்லை.
இங்கு தி.நகரில் இருக்கக்கூடிய கடைகளுக்கும், தமிழர்கள் நடத்தக்கூடிய தொழிற்சாலைகளுக்கும் வரிச்சோதனை வருகிறதே, சவுகார்ப்பேட்டைக்கு போகிறானா? மார்வாடி நிறுவனத்தை பார்க்கிறானா? போவதில்லையே…ஏனெனில் எல்லாம் அவன் ஆளாக இருக்கிறான். நம்மவர்களைத்தான் எல்லாவற்றுக்கும் நீ வரி கட்டினாயா? அதை கட்டினாயா? இதை கட்டினாயா? உட்கார்ந்தாயா? எழுந்தாயா? என கேள்வி மேல் கேள்விகளால் அடிக்கிறான். இதெல்லாம் எப்படி நடக்கிறது?
மார்வாடி/பனியா கும்பல்கள் வணிகம் செய்யும் குஜராத்திலிருந்தோ, உத்திரப்பிரதேசத்திலிருந்தோ, மத்தியப்பிரதேசத்திலிருந்தோ வரக்கூடிய சரக்குகளுக்கு எல்லாம் முறையான ரசீது கிடையாது. ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் தமிழ்நாட்டிற்கு பொருட்கள்/சரக்குகள் வருகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து உரிய ரசீது இல்லாமல் ஒரு பொருள் வெளியே போக முடியாது. ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊர் கூட போக முடியாது. தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு கொண்டு போக முடியாது. நமக்கு அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் அந்த வட இந்திய அதிகாரிகளை நோக்கி கேள்வி கேட்பதில்லை. ஏனெனில் அந்த அதிகாரிகள் எல்லாம் மார்வாடி ஆட்கள். இதுதான் பிரச்சனை. அவர்களிடம் போய் நம் நியாயத்தை பேச முடிகிறதா?
ரயில் பயணச்சீட்டு பரிசோதனையாளர் எதற்கு இந்திக்காரராக இருக்க வேண்டும்? அவர் ஊரில் போய் வேலை பார்க்கட்டும், நம் ஊரில் எதற்கு? இதே ஒரு தமிழராக இருந்தாரெனில், ஒரு அவசர உதவிக்கோ, மருத்துவ உதவிக்கோ, வேறு ஏதேனும் உதவிக்கோ பேசி உதவ இயலும். இதை தமிழ் தெரியாத இந்திக்காரனிடம் பேச முடியுமா? இந்த மாதிரியான புரிதல் இல்லாத ஒரு இடத்தில் எப்படி வேலை பார்க்க முடியும்? வங்கிக்கு சென்று அவசரமாக மருத்துவ உதவிக்கு பணம் வாங்க வேண்டும் அல்லது தொழிலுக்கு தேவைப்படுகிறது அல்லது விவசாயம், ஆடு, மாடு வாங்க வேண்டும் என்றால் அதற்கு கடன் வாங்க, இந்திக்காரனிடம் எப்படி பேச இயலும்? எப்படி பேசி புரிய வைப்பீர்கள்? எப்படி நிறுவனத்தை நடத்துவீர்கள்? அதேதான் வரி/பணம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கும், கேள்வி பதில்களுக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைகளில் உங்களுக்காக பேசக்கூடிய ஆள் இருக்கிறார்களா? இந்த இடத்தில் தான் இந்திக்காரன் ஆதிக்கம் இருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் இந்தி மொழி திணிப்பு. இதற்கு எதிராகத்தான் சிவா திலீபன் உயிரை கொடுக்க நினைத்தார். அவருக்கு இந்த பிரச்சனை புரிந்துள்ளது. உயிரை கொடுத்தாவது இந்த இனத்தை காப்பாற்றுவதற்கு நின்றார்.

இதற்காக ‘நாம் தமிழர்’ கட்சியினர் ஒருவர் கூட இன்றைக்கு வரைக்கும் பேசவில்லை. மாறாக இழிவுபடுத்தியும் அசிங்கப்படுத்தியும் பேசுகிறார்கள். இவன் எல்லாம் எப்படி தமிழ் தேசியவாதி? இந்தி மொழியை அழித்தால் இவனுக்கு (நாதக கும்பலுக்கு) ஏன் கோபம் வருகிறது? நாங்கள் என்ன திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டோமா? இல்லையே. இந்தி திணித்து தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று சொல்கிறோம். சீமான் ’தமிழன் தமிழன்’ என வாய்கிழிய பேசி, பணம் சம்பாதித்து நன்றாக பிழைப்பு நடத்துகிறாரே, அவரும் அவர் கட்சியினரும் வந்து நின்று இருக்க வேண்டும் அல்லவா? வரவில்லை. ஆனால் வாயிலே பேசுகிறார் சீமான். இந்த 16 வருடத்தில் ஒரு போராட்டம் செய்வதற்கு எந்த துணிவும் இல்லாத முதுகெலும்பு இல்லாத கோழை சீமான். அவர் செய்த ஒரு போராட்டம் சொல்லுங்கள் பார்ப்போம்.
இதுவரைக்கும் மாஞ்சோலை மக்களுக்காக ஒரு அறிக்கை கூட சீமான் விடவில்லை. மே 17 இயக்கம் மாஞ்சோலை மக்களுக்காக மூன்று வருடமாக போராட்டம் செய்துள்ளோம். திமுகவை எதிர்த்துதான் கேள்வி கேட்டு போராட்டம் நடத்தினோம். மாஞ்சோலை மக்கள் பெரும்பாலானவர்கள் பட்டியலின மக்கள். அவர்கள் தேவேந்திர சமூகத்தை சேர்ந்த மக்கள். பட்டியல் வெளியேற்றத்திற்காக மாநாடு நடத்துகின்ற சீமான், மாஞ்சோலை மக்களுக்கு என்றாவது பேசினாரா? திமுகவை எதிர்த்து பேச துணிச்சல் இருந்ததா? இவன் பிஜேபி உடன் சேர்ந்துகொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலையைப் பார்க்கிறான். நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
நான் சீமானை எச்சரிக்கிறேன். சீமான் இவ்வளவு நாள் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி ஊரை ஏமாற்றியது எல்லாம் மற்றவன் நம்புவான், மே 17 இயக்கம் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்காது. எங்கள் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை. நாங்கள் தேர்தலில் நிற்கப் போவதில்லை, ஓட்டு கேட்கப் போவதில்லை, எங்களுக்கு பிரச்சனையும் இல்லை. கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்கின்ற கவலையும் இல்லை, யார் எந்த வேட்பாளர் பிரச்சனையும் இல்லை, எங்களுக்கு சிறை மற்றும் வழக்கு பற்றியும் கவலையுமில்லை. தமிழர், தமிழர்களுக்கான உரிமைக்காக போராடக்கூடிய இயக்கமாக மே 17 இயக்கம் இயங்குகிறது.
நன்றி தோழர்! வணக்கம்!!