ஒன்றிய அரசே, மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் அனைத்து மருத்துவ இடங்களுக்குமான கலந்தாய்வு நடத்த முயற்சிப்பதை கைவிடு!
இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை உடனடியாக திரும்பப் பெறு! – மே பதினேழு இயக்கம்.
சமூக நீதிக்கு எதிரான நீட் என்னும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை ஒழிக்க கோரி வரும் நிலையில், மருத்துவப் படிப்பில் மாநிலங்களின் பங்கை மேலும் நீக்கிடும் வகையில், நீட் தேர்வு அடிப்படையில் அனைத்து மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை ஒன்றிய அரசே நடத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் (NExT) என்ற புதிய தகுதி தேர்வையும் ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாநிலங்களின் மருத்துவ வளத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநிலங்களின் கல்வி உரிமையை, குறிப்பாக மருத்துவக் கல்வி உரிமையை பறிக்க தொடர் நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறது. பல இலட்சங்கள் செலவு செய்து ஒரு சில ஆண்டுகளை பயிற்சிக்காக செலவு செய்யும் உயர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியை பெறும் வகையில் நீட் என்ற நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது. அனிதா உள்ளிட்ட பல மாணவர்களின் உயிரிழப்புக்கும் நீட் தேர்வு காரணமாக அமைந்துள்ளது. ஏழை-எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கு தடைக்கல்லாக இருப்பதால், சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது.
இப்படியான சூழலில், நீட் தேர்வு மூலம் மாநிலங்களின் மருத்துவ கல்லூரிகளில் 15 விழுக்காடு இடங்களை பறித்துக்கொண்ட ஒன்றிய அரசு, தற்போது 100 விழுக்காடு இடங்களையும் பறித்துக்கொள்ளும் வகையில், இதுவரை மாநில அரசு நடத்திவந்த 85 விழுக்காடு இடங்களுக்கான கலந்தாய்வையும் ஒன்றிய அரசே நடத்திக்கொள்ள தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது மாநிலங்கள் உருவாக்கிய, குறிப்பாக தமிழ்நாட்டின் மருத்துவ வளங்களை ஒன்றிய பாஜக அரசு முழுவதுமாக கொள்ளையடிக்கும் முயற்சியாகும்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உயர்தர மருத்துவக் கல்வியை வழங்க தமிழர்களின் வரிப்பணத்தில் மருத்துவக் கல்விக்கான இடங்களையும் அதற்கான வளங்களையும் தமிழ்நாடு அரசு பல ஆண்டுகள் முயற்சித்து உருவாக்கியுள்ளது. இதனை முற்றிலும் அபகரிக்க அனைத்து மருத்துவ சேர்க்கைக்காக கலந்தாய்வையும் ஒன்றிய பாஜக அரசு நடத்திக்கொள்ள முயற்சிக்கிறது. இதன் மூலம் வேறு மாநில மாணவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். இது தமிழ்நாட்டு மாணவர்களின், குறிப்பாக ஏழை-எளிய, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை முற்றிலும் நசுக்கிவிடும்.
இதேபோல், ஏற்கனவே மருத்துவ படிப்பு படித்துவரும் இறுதியாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் என்ற தேர்வை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்துகிறது. இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுதி தேர்வானால் மட்டுமே மருத்துவப் பணியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. 5 ஆண்டுகள் இளநிலை மருத்துவக் கல்வி என்பது இனி தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் மருத்துவம் கற்கக் கூடியதாக மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது. இது ஏதோ ஒரு வகையில் மருத்துவம் கற்கக் கூடிய, சமூகத்தில் பின்தங்கிய, ஏழை-எளிய மாணவர்களை மேலும் பாதிக்க செய்யும். இப்படியான வாய்ப்பு கிடக்கக் கூடிய மாணவர்களும் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு, மருத்துவம் பயில மறுப்பார்கள். மேலும், இந்த நெக்ஸ்ட் தேர்வு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகவே அமையும்.
கிராமப்புறங்களில் மருத்துவப் பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு விதி வைத்திருக்கும் நிலையில், இந்த நெக்ஸ்ட் தேர்வு தலைசிறந்த தமிழ்நாட்டின் கிராமப்புற மருத்துவ சேவையை முற்றிலும் சிதைக்கும். மருத்துவம் என்பது பணக்காரர்களுக்கானது என்ற சூழலை மட்டுமே இது உருவாக்கும். நீட் தேர்வு பள்ளிக்கல்விக்கான முக்கியத்துவத்தை குறைத்தது போல, நெக்ஸ்ட் தேர்வு, மருத்துவக் கல்லூரியின் கல்வி மற்றும் பயிற்சியின் முக்கியத்தை குறைக்கும். அதேபோல, நீட் பயிற்சி நிலையங்கள் போல், நெக்ஸ்ட் தேர்வுகக்கான பயிற்சி நிலையங்களும் உருவாகும். இதனால் மருத்துவக் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த முயற்சிகள் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் அமைகின்றன. கல்வி உரிமை பொதுப்பாட்டியலில் இருக்கும் நிலையில், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் இது போன்ற முடிவுகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தமக்கான கல்வி முறையை முடிவு செய்துகொள்ளவும் ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது. இது ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தையே காட்டுகிறது.
மேலும், தமிழ்நாடு அரசு தனக்கான 85 விழுக்காக மருத்துவ இடங்களை நிரப்ப, இஸ்லாமியர்கள், அருந்ததியர்களின் உள் இட ஒதுக்கீடு உட்பட 69% இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றன. பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடும் தமிழ்நாட்டில் கிடையாது. அதேவேளை, ஒன்றிய அரசின் கீழ், 50% இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தபடாமல், ஏறக்குறைய 75 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களை உயர்சாதியினர் மற்றும் பணக்காரர்களை கொண்டு நிரப்பிவிடும். 10% EWS மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்று முதன்மையாக நிரப்பப்படுவார்கள். இது அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களை கொண்ட தமிழ்நாட்டை நிச்சயம் பாதிக்கும்.
மேலும், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அதோடு, அரசுக்கல்லூரி மட்டுமல்லாது, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அந்த 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வை ஓரளவு எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உருவாக்கி தந்த இத்தகைய வாய்ப்புகளை, தற்போதைய ஒன்றிய அரசின் இந்த முடிவுகள் சிதறடித்துவிடும். இவை, சமூக மேம்பாட்டு புள்ளிகளில் முதன்மையாக இருக்கும் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளிவிடும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவுகள் மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானவை. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைத்து தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளும் இந்த முயற்சிகளை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் தம் எதிர்ப்பை பதிவு செய்வதோடு, நீட் தேர்வும் நெக்ஸ்ட் தேர்வும் முற்றிலும் ஒழிக்கப்படவும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒருவன் தகுதியை வளர்த்துக்கொள்ள தான் படிக்கின்றான். படிப்பதற்கே தகுதி வேண்டும் என்ற சனாதன முறையை கடுமையாக எதிர்த்து சமூகநீதி காக்க முற்படுவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010