
பிள்ளைகளுக்காக வாழும் பெற்றோர்கள் உண்டு, ஆனால் அந்த பிள்ளைகள் மீது வைக்கும் பாசத்தை விட ‘சாதிய’ பாசம் அதிகமானதால் ஆணவப்படுகொலைக்குத் தூண்டும் பெற்றோரும் இங்குண்டு என்பதை மென்பொறியாளர் கவினின் படுகொலை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.
பெற்றவர்களின் சாதிய மனநிலையால் மகனே தனது சகோதரியின் காதலன் மீது மிளகாய்ப் பொடி தூவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட கவின் கொலை மூலம் ஆதிக்க சாதி வெறி வெளிப்பட்டது மட்டுமின்றி, கொலைக்குப் பின்னான அவர்களின் ஆணவப்போக்கு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை எழுப்பியிருக்கிறது.
இந்தப் படுகொலையைச் செய்தவன் 23 வயது இளைஞன் சுர்ஜித். அதுவும் தடகள விளையாட்டில் ஈடுபாடு உடையவன். படித்த இளைஞர்கள் மத்தியிலும் சாதிவெறி ஊறியிருப்பதன் சாட்சியாய், ஆதிக்க வெறியின் நகலாய் இருந்திருக்கிறான் சுர்ஜித்.
அன்பு மகன் கவினை இழந்த பெற்றோர் நிலையை எண்ணி தூக்கம் வராது தவிக்கும் பெற்றோர்களும் உண்டு. இந்த சம்பவத்திற்கு மூல காரணம் என்ன? சாதி.. சாதி.. சாதிவெறியே…
அதை ஒழிக்கவே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடுபட்டனர். இவர்கள் சாதி மறுப்பு திருமணங்கள் வேண்டும் என்று சொன்னதும், காதல் திருமணங்களை வரவேற்றதும் சாதி ஒழிப்பிற்கு முக்கிய முன்னெடுப்பாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் முன்பைவிட சாதிவெறி ஆணவக்கொலைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. சாதிபெருமையும், குடிபெருமையும் பேசிப் பேசி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து கொலை செய்யும் அளவிற்கு தூண்டிவிடுகிற கேவலமான சாதி சங்கத் தலைவர்களும், அரசியல்வாதிகளையும் தைரியமாக உலவவிட்டிருப்பது தான் காரணம்.

மேலும் தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவு பாதையில் பெண்கள் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆணவப்படுகொலை சுட்டிக்காட்டியிருக்கிறது. இன்னமும் சுயமரியாதை இல்லாமல் தாய் தந்தை சொல்லை கேட்டு சாதிவெறிக்கு அடங்கிப் போதல், அடங்கி வாழ்தல் என்பது பெண்களின் இழிநிலையாகவே தொடர்கிறது. பெண்கள் பகுத்தறிவு பாதையில் பயணித்தால் மட்டுமே இத்தகைய இக்கட்டான நிலையை சரி கட்ட இயலும்.
இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும் கூட, தான் விரும்பிய ஒரு ஆண் மகனை (எந்த மத/சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி) அவனை திருமணம் செய்து கொள்வேன் என்ற மன உறுதியோடு பெண்கள் நிற்க முடியவில்லை. காரணம் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பு, அவ்வாறு அவர்களை பணியச் செய்து விடுகிறது. இந்த கட்டமைப்பின் பங்குதாரர்களாய் இருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்கள் தங்கள் பேச்சை கேட்கவில்லையெனில், த்ற்கொலை செய்யப் போவதாக மிரட்டுவது, குடும்ப கவுரவம் என்று புலம்புவது போன்ற உணர்ச்சிரீதியான சுரண்டலை, பெற்ற பெண் பிள்ளைகளிடம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். இதனாலேயே பெண்களால் உணர்வுரீதியாக எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத மழுங்கிய நிலைக்கு ஆளாகிறார்கள். சாதிய கொடுமையில் தள்ளினால் கூட பெண்களால் எதிர்வினை ஆற்ற முடிவதில்லை.
சாதியமனநிலை கொண்ட பெற்றவர்களே பிள்ளைகளின் ஆசைகளையும் புறந்தள்ளி, அவர்கள் விரும்பாத வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள பணிய வைப்பதால் பெண்கள் தீர்க்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெற்றோர் சம்மத்துடன் ஒரே சமூகத்தை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்து கொண்ட போதும் வரதட்சனை மற்றும் குடும்ப வன்முறைகளில் தாங்க இயலாமல், தங்களை மாய்த்துக்கொள்கின்றன.

காதல் திருமணம் அல்லது சாதி மறுப்பு திருமணம் கூடாது என மறுக்கும் பெற்றோர்களும் சாதியவாதிகளும். பெண்களுக்கு எதிராக தினம் தினம் நடக்கும் வரதட்சனைக் கொடுமைகள் மற்றும் குடும்ப வன்முறைகளில் நிகழும் போது கள்ள மெளனமாக இருக்கின்றனர்.
பெற்றோர்கள் உட்பட்ட சாதியவாதிகள் பேசுவதைக் கடந்து அனைவரும் ஒரே சாதி என்னும் மனநிலையை கொண்டு வந்தால் ஒழிய, இத்தகைய நிலையிலிருந்து பெண்கள் வெளியேற இயலாது. பெண்கள் தானாக சிந்தித்து துணிந்து முடிவெடுக்க வேண்டும். அதற்கு பெண்களுக்கு போதிய கல்வியறிவோடு சுயமரியாதையும் வேண்டும். கல்வி அறிவு பெற்ற பெண்களால் சுதந்திரமாக வெளிவர இயலும். கூடவே பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற்ற பெண்களால் ஆதிக்க வெறியைத் தகர்த்தெறிய முடியும். ஆகவே ஆணாதிக்கமும் அடிமைத்தனமும் பழமைவாதமும் நீங்கி பெண்கள் தானாக தன்னெழுச்சி கொண்டவர்களாக வெளிவந்தால் ஒழிய, தன்னுடைய நிலையை மாற்ற இயலாது என்பதை பெண்களே உணர வேண்டும்.
தற்போது கவினைக் காதலித்த சுபாஷினியின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. சுபாஷினி பேசுவதைப் பார்க்கும் போது அவர் அச்சத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. பெற்றோர் இருவரும் காவல் துறை அதிகார மட்டத்தில் இருப்பதால் அவரைச் சுற்றி சாதிய சொந்தங்களும், அதிகாரிகளும் இருக்கலாம். அவர் பேசும் வார்த்தைகள்கூட தணிக்கை செய்யப்படலாம் எனும் இயல்பான சந்தேகங்களை தவிர்க்க முடியாது.
சுபாஷினி போன்ற பெண்கள் சுயமரியாதை/ பகுத்தறிவு பெற்றவராகவோ அல்லது முற்போக்கு சாதி மறுப்பு இயக்கங்களை கவனிப்பவராகவோ இருந்திருந்தால் ஓரளவு இதிலிருந்து வெளிவந்திருக்கக்கூடும். ஆனால் அவர் எத்தகைய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்பதை யாரும் அறிந்து கொள்ள இயலவில்லை. சுபாஷினி இது போன்ற சாதிய புழுக்கக் கட்டமைப்பில் இருந்து வெளியே வரவேண்டும், காதலிக்கத் துணிந்த பெண்ணுக்கு காதலன் கவின் பக்கம் நிற்கவிடாமல் தடுத்தது சாதி. சுபாஷினி கவினுக்கான நீதியை தட்டிக்கேட்க தயங்குகிறார். அவர் வார்த்தைகளை நூல் பிடித்தாற்போல் அளவெடுத்து பேசுவதில் இருந்தே அப்பெண்ணை சாதிவெறியர்கள் எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உள்ளத்தில் காதலை புதைத்து, காதல் கல்லறையின் மீது தினம் கண்ணீரைத் தெளிக்க தயாராகிவிட்டார் சுபாஷினி.
நாடக காதல், பத்து ரூபாய்க்கு மூணு கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேண்ட் செய்யும் காதல், பெண்களை ஏமாற்றும் காதல் என்று பேசிய சாதியக் கட்சிகளின் சாதி வெறிக்கு பலியானது இளவரசன்-திவ்யா காதல். திவ்யா அன்று காதலுக்காக சாதி ஆணவத்திற்கு எதிராக நின்றிருக்க வேண்டும். ஆனால் அவரின் பின்புலம் அப்படி இருக்கவிட்டதா? என்பது கேள்விகுறியே. அவரும் அன்று சுபாஷினி நிலையில்தான் இருந்திருப்பார். இளவரசன் கொலையை தற்கொலையாக்கிவிட்டு திவ்யாவை இன்றும் மனக்குமுறலிலேயே இருக்க செய்து விட்டார்கள் சாதியவாதிகள். இன்றும் சுவாரசியமில்லாமலே வாழ்கிறார் திவ்யா.

உடுமலை சங்கர் சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக தனது தந்தைக்கே தண்டனை வாங்கி கொடுத்த கௌசல்யா காதலின் பக்கம் நின்றார், நீதியின் பக்கம் நின்றார், ஆணவத்திற்கு எதிராக சாட்சியளித்தார், பெரியாரிய அம்பேத்கரிய, முற்போக்கு ஆற்றல்களின் வழிகாட்டுதலின் படி தொடர்ந்து போராடி தண்டனை பெற்றுக்கொடுத்தார். தனது வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையுடன் சொந்த காலில் நிற்கிறார். பெண்கள் சுயமரியாதை மிக்க ராணியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட பெரியாரின் பேத்தியாக மிளிர்கிறார். அது மட்டுமல்லாமல் பல பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையின் ஊடாக சாதிய சமூகம் செயல்படும் விதத்தை எடுத்துச் சொல்லி, ஒரு சமூகமே குற்றவாளியாக இருக்கும் போது பாதிக்கப்படும் தனிப்பட்ட பெண்களை குற்றவாளியாக்க பார்க்கக் கூடாது என அறிவுறுத்துகிறார். இந்த சாதிய சமூகத்தின் தன்மையை உணர்ந்து கொண்டு சுபாஷினியின் பக்கம் நின்றும் பிரச்சனைகளை பார்க்கும் தன்மை வேண்டும் என்கிறார்.
எல்லோரும் கௌசல்யா ஆகிவிட முடியாது என்கின்றனர், உண்மைதான். ஆனால் சாதிவெறியை அறுத்தெறியும் மனநிலை கொண்ட பெண்களை வளர்த்தெடுத்தால் இங்கு எல்லோரும் சுயமரியாதை மிக்க பெண்களே.
சுபாஷினி அனைத்தையும் பயப்படாமல் வெளிப்படையாக பேச வேண்டும் என்றால் முற்போக்கு சாதி மறுப்பு இயக்கங்களை நாடுவது ஒன்றே சிறந்தது.
சாதிவெறி ஆணவப்படுகொலைகள் இன்று மட்டும் நடக்கிறதா? திவ்யாக்கு மட்டும் நடக்கிறதா? சுபாஷினிக்கு மட்டும் நடக்கிறதா? என்று பார்த்தால் இல்லை. 2003இல் கண்ணகி-முருகேசன் அவர்களது காதலை சாதியத்தை சொல்லி காதலை முறித்தனர் சாதியவாதிகள். திருமணமாகி அன்பாக வாழ்ந்து வந்த இருவரையும் காது, மூக்கில் விஷத்தை ஊற்றி ஆணவப்படுகொலை செய்த சாதியவாதிகளுக்கு கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்திருக்கிறது. அப்படி என்றால் அடுத்தடுத்து நடந்த ஆணவப் படுகொலைகளுக்கு நீதி எங்கே எப்போது கிடைக்கும்? இன்னும் 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளாகுமா?

சாதி மறுப்பு திருமணம் என்றால் மட்டும் பொதுவெளிக்கு வந்து, உயர் சாதி- கீழ் சாதி என்று கலவரத்தை தூண்டி, காதலர்களை சட்டப்படி பிரிக்கும் சாதி கட்சிகள் அவர்களின் மனதை ஒருபோதும் பார்ப்பதே இல்லை. வள்ளிக்கும்மி ஆட்டத்தில் சத்தியம் வாங்கி தனது சொந்த சாதியிலேயே திருமணம் செய்வேன் என்று பெண்களை கட்டாயப்படுத்தி பயமுறுத்தும் சாதிய நிகழ்ச்சிகளை தமிழக அரசு தாராளமாக அனுமதிக்கிறது.
சனாதனத்தின் கோர முகமாகவே சாதியையும் பார்க்க வேண்டும். சாதி ஒழிந்தால் மட்டுமே இங்கே மக்கள் சுதந்திரமாக வாழ முடியும். மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான தனி சிறப்பு சட்டத்தை இயற்றி சாதியவாதிகளின் ஆணவத்தை ஒடுக்க வேண்டும்.
இத்தகைய ஆணவப்படுகொலைகளைத் தடுக்க எஸ்சி /எஸ்டி சட்டத்தின் மூலம் கடுமையான தீர்ப்பை வழங்க இயலாத போது தனிச்சட்டம் மூலமே சாதியவாதிகள் தண்டனை பெற முடியும். இல்லையென்றால் சட்டத்தையே எளிதாக உடைத்து கடக்கும் மனநிலையிலேயே சாதியவாதிகள் மீண்டும் சாதிவெறியில் திளைக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
தண்டனைகள் கடுமையானால் மட்டுமே இவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தண்டனை என்பது வெறும் அபராதப் பணத்தை கட்டுவதோ, 7 ஆண்டுகள் சிறை தண்டனையோ இல்லாமல் ஆணவப்படுகொலை செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யவேண்டும், அரசு வேலையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யவேண்டும், அப்போதுதான் தண்டனை கண்டு சாதிவெறியர்களுக்கு பயம் வரும். எனவேதான் இது போன்ற சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மே பதினேழு இயக்கம் மறியல் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது.

தமிழ்நாட்டில் ஒட்டு வங்கியைக் குறிவைக்கும் இன்றைய அரசியல்வாதிகளின் மனநிலையில் சாதிய வண்ணம் தலை தூக்கி உள்ளது. இதை வாய்ப்பாகக் கொண்டுதான் இந்துத்துவ பாசிசம் புகுந்து இங்கே பல குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக எப்படியும் தமிழ்நாட்டை கைப்பற்றும் எண்ணத்தில் கலவரங்களையும் கோவில் திருவிழாக்கள் என்ற பெயரில் அதிகமான சாதிய மோதல்களையும் உருவாக்க முயல்கிறது. இதனை ஆளும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும். முற்போக்கு இயக்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்றி சனாதனத்தின் வேரறுக்க வேண்டும்.